Monday, June 30, 2008

இந்தியப் படைகளின் வருகையின் பின்னணியில் சில காரணங்கள்

சரித்திரம் தலைகீழாகத் திரும்புகின்றது என்ப தையே நிகழ்வுகள் காட்டுகின்றன.
1980 களின் கடைசியில் ஆட்சிப்பீடம் ஏறிய ஜனாதி பதி பிரேமதாஸா, அவ்வேளையில் "சார்க்' உச்சி மாநாட்டை இலங்கையில் நடந்த வேண்டியவரானார்.
இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்தியத் துருப்புகள் "அமைதி காக்கும் படை' என்ற பெயரில் ஆக்கிரமித்து நின்றமையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பெரும் யுத்தம் ஒன்றையும் மேற்கொண் டிருந்தன.

""ஓர் ஆக்கிரமிப்புப்படை(இந்தியப்படை) இலங் கையில் பலவந்தமாக நிலை கொண்டிருக்கும்போது, "சார்க்' மாநாடு போன்ற ஒரு மாநாட்டை இங்கு நடத்த முடியாது. ஆக்கிரமிப்பு இராணுவத்தினால் இலங் கையின் இறைமைக்குத் தீங்கிழைக்கப்பட்டிருக் கையில் எந்த முகத்துடன் இந்த "சார்க்'கை நடத்துவது? ஆகவே நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில் எனது உத்தரவுக்குக் கட்டுப்பட்டு ஆக்கிரமிப்புப் படைகள் இங்கிருந்து வெளியேறிய பின்னர்தான் "சார்க்' மாநாட்டை இலங்கையில் நடத்த முடியும்.'' என்று அப்போது அறிவித்தார் அன்றைய ஜனாதிபதி பிரேமதாஸா.

இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளை இங்கிருந்து வெளியேற்றுவதற்கான தனது தந்திர முயற்சிக்கு "சார்க்' மாநாட்டை அன்று பயன் படுத்தினார் அவர். அதில் அவர் வெற்றியும் கண்டார்.

"இந்திய (ஆக்கிரமிப்பு) இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய' சூழ்நிலையில் "இறைமை உறுதிப்படுத்தப்பட்ட இலங்கையில்' சார்க் மாநாட்டை நடத்திக்காட்டினார் பிரேமதாஸா.

அன்று இந்தியப் படையை வெளியேற்ற "சார்க்' மாநாட்டை இலங்கை ஜனாதிபதி வசமாகப் பயன்ப டுத்தினார் என்றால்
இன்றோ, "சார்க்' மாநாட்டை இன்றைய இலங்கை ஜனாதிபதி நடத்துவதற்கு நிபந்தனை போட்டு, அந்த நிபந்தனை மூலம் தனது இந்தியப் படைகளைக் கொழும்புக்குள் இறக்குவதில் வெற்றி காணும் நிலையில் இந்தியத்தரப்பு வந்திருக்கின்றது.
"சார்க்' உச்சி மாநாடு ஒன்று நடத்தப்பட வேண்டு மானால் அதில் அங்கம் வகிக்கும் சகல நாடுகளின் தலைவர்களும் அதில் பிரசன்னமாகி இருக்கவேண்டும். ஒரு தலைவர் சமுகம் தராத நிலையில் கூட "சார்க்' மாநாட்டை நடத்த முடியாது என்பதுதான் வழமையான ஏற்பாடு.

எனவே "சார்க்'கின் முக்கிய உறுப்பு நாடான இந்தி யாவை விட்டு விட்டு அந்த மாநாட்டை இலங்கை நடத்திவிட முடியாது என்பது இந்தியாவுக்கு நன்கு தெரியும். ஆகவே, 1989 இல் பிரேமதாஸா அரசு "இந்தி யப் படையை வெளியேற்றினால்தான் இலங்கையில் சார்க் மாநாடு' என்று விதித்த நிபந்தனைக்கு மாற்றாக "இந்தியப் படைகளை இலங்கைக்குள் அனுமதித்தால் தான் இங்கு சார்க் மாநாடு' என்ற கட்டாயத்தை இலங் கைக்கு இப்போது ஏற்படுத்தி அதில் வெற்றியும் காணும் நிலையை எட்டியிருக்கின்றது இந்தியா.
இலங்கைக்கு இந்தியப் பிரதமர் விஜயம் செய்வதா யின் இந்தியாவே அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடு களையும் படைகளையும் இலங்கையில் நிறுத்த வேண் டும் என்று இந்தியா போட்ட நிபந்தனைக்கு இலங்கை மண்டியிட்டிருக்கின்றது.

இத்தகைய நிபந்தனையை விதித்து, அதற்குக் கொழும்புத் தலைமையை இணங்கச் செய்ததன் மூலம் இலங்கை தொடர்பான ஓர் உண்மையை இந்தியா சர்வதேச ரீதியில் பிரசித்தம் செய்திருக்கின்றது என்ப தும் நாம் கவனிக்கத்தக்கது.

அதாவது முக்கிய உலகத் தலைவர் ஒருவர் கொழும் புக்கு விஜயம் செய்வதற்கான பாதுகாப்பு நிலை மையோ, அல்லது அவருக்கு இலங்கை அரசு தகுந்த பாதுகாப்புக் கொடுக்கும் என்ற உறுதிப்பாடோ இலங் கையில் இல்லை என்பதுதான் அது. அத்தகைய நாடு களின் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதானால் தங்களுக்குரிய பாதுகாப்பையும், ஏனைய ஏற்பாடுகளையும், பாதுகாப்புக்கான காவலர்களையும் கூட தத்தமது நாடு மூலமே இலங்கையில் செய்துகொள்ள வேண்டும் என்பதே இந்தியாவின் தற்போதைய நடவ டிக்கை மூலம் துலாம்பரப்படுத்தப்பட்டிருக்கின்றது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போராட்டத்துக் கான உதவி என்ற பெயரில் இந்தப் பிராந்தியத்தில் இந் தியாவுக்குச் சவாலாக இருக்கக்கூடிய நாடுகளையும் சக்திகளையும் இலங்கைக்குள் அதிகம் இழுத்து வந்து ஈடுபடுத்தியிருக்கின்றது கொழும்பு அரசு.
இந்தப் பின்புலத்தில், இந்தியத் தலைவர்கள் இலங் கைக்கு விஜயம் செய்யும்போது அந்த இந்திய எதிர்ப்பு சக்திகள், "விடுதலைப் புலிகளின் பெயரில்' தாங்களே சில மோசமான விளைவுகளைத் தரக்கூடிய காரியங் களை செயல்களை ஒப்பேற்றி விட்டு, இலகுவாகப் பொறுப் பைப் புலிகளின் தலையில் சுமத்திவிட்டுத் தப்பிக் கொள்ள முயலலாம் என்ற சந்தேகமும் புதுடில்லிக்கு உண்டு.

இத்தகைய வீண் விபரீதங்களுக்கு எள்ளளவும் இடம் கொடுக்காமல், கொழும்புக்கு வரும் இந்தியப் பிரத மரின் பாதுகாப்பைத் தானே நேரடியாகத் தலையிட்டு நூறுவீதம் உறுதிப்படுத்தவும், இலங்கை தொடர்பான உண்மை நிலைவரத்தை சர்வதேச சமூகத்துக்குப் பகி ரங்கப்படுத்திக் காட்டவுமே, இத்தகைய சொந்தப் பாது காப்பு நடவடிக்கைத் திட்டம் என்ற இந்தக் காய்நகர்த் தலை இந்தியா முன்னெடுத்திருக்கின்றது என்பது திண்ணம்.

நன்றி:- உதயன்

Sunday, June 29, 2008

இலங்கை அரசை அரவணைத்து தமிழரைப் புறந்தள்ளும் பாரதம்

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் தமிழர் தரப் பின் பிரதிநிதியான தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு தீண்டத்தகாத தரப்பினர் போல நமது அயல் பாரத தேசம் கருதுகின்றது. ஈழத்தமிழர்களின் மனதைப் பெரிதும் புண் படுத்தும் விடயம் இது.

ராஜீவ்காந்தி படுகொலைச் சம்பவத்தைக் காட்டி புலி களையும் தமிழர்களையும் விரோதிகள் போலத் தள்ளி வைத்து நடக்கும் இந்திய தேசத்திற்கு உறைப்பாகக் கொடுத்திருக்கின்றார் தமிழ்த்தேசியக் கூட் டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா. சம்பந்தன்.

கொழும்புக்கு வந்திருந்த இந்திய உயர்மட்ட இராஜந் திரிகள் குழுவினரைத் தாம் ஒருவராக தனியாக சந்தித்து, ஈழத்தமிழர்களுக்காக வாதாடிய சமயமே இது விடயத்தில் இந்நியத் தரப்புக்கு சில விடயங்களையும் காட்டமாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றார் அவர் என்று அறிய வந்திருக்கின்றது.

ராஜீவ்காந்தியை புலிகளே கொன்றனர் என்று குற்றம் சுமத்தும் இந்தியா, அதனால் புலிகளுடன் தான் எந்தத் தொடர்பாடலையும் வைத்திருக்க மாட்டாது என்று கூறு கின்றது.
ராஜீவ்காந்தி படுகொலைச் சம்பவத்தை தனி ஒரு கொலைச் சம்பவமாகப் பார்க்கக் கூடாது. அந்தக் காலகட் டத்தில் தமிழர் தாயகத்தில் கட்டவிழ்ந்த இந்திய அமைதிப் படைகளின் இராணுவ நடவடிக்கை உட் பட்ட போரியல் போக்கினதும் அரசியல், இராஜதந்திரக் காய் நகர்த்தலின் பின்புலத்திலும் வைத்து, ஒட்டு மொத்த சூழ் நிலைக்கு அமையவே, அச்சம்பவத்தை நோக்க வேண் டும் கருத்தில் எடுக்கவேண்டும் என்பதை விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அமரர் அன்ரன் பாலசிங்கம் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளமை இங்கு, கவனிக்கத்தக்கது.

ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட சமயம் அவர் இந்தியப் பிரதமராக பதவி வகிக்கவில்லை. அடுத்த இந்தியப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு அவ ருக்கு அதிகம் இருந்தது அவ்வளவே.

ஆனால், ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோதே இந்தி யாவின் அரசுத் தலைவராக பொறுப்பு வகித்த சமயமே படு கொலை முயற்சிக்கு உள்ளானார் அதுவும் பட்டப் பகலில் பலரும் பார்த்திருக்க அந்த முயற்சி நடந்தது.

அதுவும் வேறெங்கும் அல்ல. இலங்கையின் தலை நகர் கொழும்பில்தான் இந்திய அரசின் தலைவராக இலங் கைக்கு விஜயம் செய்து, இலங்கைத் தரப்பின் வர வேற்பை படையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்ற சமயமே, இலங்கையின் அரசுத் தலைவரான ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் கண்முன்னாலேயே அந்தக் கொலை முயற்சி நடந்தது. நல்ல வேளையாக முன் னெச்சரிக்கையாக அணி வகுப்பு மரியாதையில் பங்கு பற்றி, அணி வகுப்பில் ஈடுபட்ட இலங்கைப் படையினரின் துப் பாக்கிகளுக்கு உயிர்ப்பான ரவைகள் கொடுக்கப்பட்டிருக் கவில்லை. அதனால் ராஜீவ் தப்பிப்பிழைத்தார்.
அணிவகுப்பில் கலந்துகொண்ட பேரினவாத சிங் களச் சிப்பாய் ஒருவர் தனது துப்பாக்கியில் ரவைகளோ சன்னங்களோ இல்லாத நிலையில் வேறு வழியின்றி தனது துப்பாக்கியால் தாக்கி ராஜீவ்காந்தியை கொல்ல முயன்றார். அதிவேக பிரதிபலிப்பு எதிர் விளைவைக் காட் டும் உசார் நிலையில் பிரதமர் ராஜீவ் காந்தி இருந் தமை யால் அவர் சடார் என விலகித் தப்பிக்கொண்டார். துப்பாக்கி மடலின் அடி அவரின் தோள் மூட்டில் விழுந்ததால் அவர் தப்பினார். வலுவேகமாக கணப்பொழுதில் ராஜீவ் விலகி இருக்காவிட்டால் துப்பாக்கியின் கனமான பிடி ராஜீவ்காந் தியின் நடு மண்டையில் இறங்கி இருக்கும். அவர் அந்த இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் கிடந்திருப்பார்.

சரி இலங்கை அரசின் படைச் சிப்பாயாக இருந்து அயல் தேசத்தின் அரசுத் தலைவரை இலங்கை வர வேற்று உபசரித்த ஒரு நிகழ்வில் வைத்து, அவரைப் படு கொலை செய்ய முயன்ற அந்த நபர் என்னவானார்?

நீதிமன்றத்தில் குற்றவாளியாக காணப்பட்ட அவ ருக்கு இலங்கை நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்தது. ஆனால், இலங்கை அரசும் அதன் ஜனாதிபதி யும் என்ன செய்தார்கள்?

தமது நாட்டுக்கு விஜயம் செய்த இந்தியப் பிரதமரை பலர் பார்த்திருக்க பகிரங்கமாக படுகொலை செய்ய முயன்ற நபருக்கு நீதிமன்றம் கொடுத்த சிறைத் தண் டனையை ரத்துச்செய்து, அவருக்கு மன்னிப்பு அளித்து விடுவித்தமையும் மாத்திரம் அல்லாமல், அவரை ஒரு தேசிய வீரராக தேசப்பற்றுள்ள ஹீரோவாக காட்டப் பெற்று, அரசியல் உரிமைகளை வழங்கி, தேர்தலிலும் போட்டியிட்டு செல்வாக்குப் பெறுவதற்கு இலங்கை அரசுத் தலைமை வழியும் செய்து கொடுத்திருக்கின்றது.

பிரதமராக இருந்த ராஜீவை, கொழும்புக்கு அழைத்து அங்குவைத்து படுகொலை செய்ய அதுவும் பலரும் நேரில் பார்த்திருக்கப் படுகொலை செய்ய முயன்ற வருக்கு அவரின் சிறைத்தண்டனையை ரத்துச் செய்து, அவரை தேசிய ஹீரோவாகக் கொண்டுபோய் நிறுத்தியது இலங்கை அரசு.

அத்தகைய இலங்கை அரசுடன் வேற்றுமை பாராட் டாது ஒரு தரப்பினராக அதை ஏற்று கௌரவம் வழங்கிப் பேசும் இந்தியா
இந்தியப் படைகள் மூலம் ஈழத்தமிழ் மண்ணை ஆக் கிரமித்துப் பெரும் கொடூரங்களை அளவு கணக்கின்றி ஈழத்தமிழருக்கு புரிந்த இந்தியாவை ஈழத்தமிழர்கள் அந்தக் கசப்புக்களை மறந்து மன்னித்துவிட்டு, அரவணைக்க முயலும்போது அவர்களை உதாசீனம் செய்து அவர்களது நட்புக் கரங்களை நிராகரித்து விட்டு
தென்னிலங்கைத் தரப்போடு போய் பௌத்த சிங்கள பேரினவாதத்தோடு கொஞ்சிக் குலாவுவது அபத்தத்தி லும் அபத்தம்.
இதை கொழும்பு வந்திருந்த இந்திய உயர்குழுவிடம் காட்டமாக எடுத்துரைத்து உறைப்பாக கொடுத்தார் சம்பந்தர்.
அது இந்தியத் தரப்புக்கு புரிந்ததோ என்னவோ...!


நன்றி :- உதயன்

Saturday, June 28, 2008

தனது விரலால் தனது கண்ணையே குத்திக் கொள்கின்றதா இந்தியா?

சிங்கள ஆட்சியாளர் தமது பிரதான பாரம்பரிய எதிரியாக கருதுவது இந்தியாவையே.

இந்த வகையில் சிங்கள அரசியல்வாதிகள் ஈழத்தமிழரை இந்திய விரிவாக்கத்திற்கான கருவியாகக்கண்டு அச்சமடைகிறார்கள்.

ஆதலால் ஈழத்தமிழரை தோற்கடிப்பதிலிருந்தே இந்தியாவிற்கு எதிரான தமது போரை சிங்கள ஆட்சியாளர் ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த விடயத்தில் இந்திய மத்திய அரசு ஈழத்தமிழரை ஒடுக்குவதற்கு சிறிலங்கா அரசுக்கு உதவுவதன் மூலம் அது தனக்கு எதிராகத் தானே போர் புரியும் நிலைக்குப் போய்விட்டது எனலாம்.

இதனை சற்று விரிவாக நோக்குவோம்.

ஈழத்தமிழரை தமிழகத்தின் நீட்டமாகவே சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள பௌத்த மகா சங்கத்தினரும் பார்க்கின்றனர்.

இது அவர்களின் மனதில் இருக்கும் ஒரு வரலாற்றுப் பதிவு.

பாலர் வகுப்பிலிருந்து பல்கலைக்கழகம் வரை இதுதான் சிங்கள மாணவர்களுக்கும் கற்பிக்கப்படுகின்றது.

அதாவது, ஈழத்தமிழர் இந்தியாவின் கைக்கூலிகள் எனவும், இந்திய விரிவாக்க வாதத்தின் கருவியாக அவர்கள் செயற்படுகின்றனர் எனவும், போதித்தே அவர்களை சிங்கள அரசு கொன்றொழித்து வருகின்றது.

அந்த வகையில் இந்தியா மீதான அச்சத்தின் பெயரால்தான் ஈழத்தமிழரை சிங்கள அரசு தொடர்ச்சியாக கொன்றொழித்து வருகின்றது என்ற அடிப்படை அரசியல் உண்மையை நாம் புரிந்து கொள்ளலாம்.

இதனை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் அறிவுபூர்வமாய் கருத்தில் எடுக்க மறுத்து வருகின்றார்கள்.

அனைத்து முன்னணி சிங்கள கட்சிகளிடமும் இந்திய எதிர்ப்பு வாதம் உண்டு.

இதில் ஜே.வி.பி. கட்சியினர் மிகவும் வெளிப்படையாகவே இந்திய எதிர்ப்பு வாதத்தை முன்வைப்பவர்கள்.

1971 ஆம் ஆண்டு ஜே.வி.பியினர் கிளர்ச்சியில் ஈடுபட்ட காலத்தில் அவர்கள் முன்வைத்த 5 கொள்கைகளுள் 'இந்திய விரிவாக்க வாதம்" என்ற கொள்கையே முதலாவதாகும்.

இந்தக் கொள்கையின் படி இந்திய விரிவாக்க வாதத்தின் கருவிகள் ஈழத்தமிழர் என தெரிவித்தனர்.

இன்றும் இந்தக் கொள்கையையே அவர்கள் பின்பற்றி தமிழீழ மக்களை இராணுவ ரீதியில் அழித்தொழிக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர்.

1977 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அன்றிலிருந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கம் 10 ஆண்டுகளுக்கும் மேலாய் இந்திய எதிர்ப்புக் கொள்கையையே அனைத்துலக அரங்கில் தெளிவாய் பின்பற்றி வந்தது.

அன்று இந்தியாவிற்கு எதிராக இருந்த நாடுகளுடன் கூட்டுச்சேர்ந்து ஜே.ஆர். ஈழத்தமிழரை இராணுவ ரீதியில் கொன்று குவித்து வந்தார்.

அப்போது இந்திய அரசு, இராணுவ ரீதியில் தலையிடும் நிலை தோன்றிய போது ஜே.ஆர். தந்திரோபாயமாக இந்திய அரசுடன் கூட்டுச்சேர்ந்து ஈழத்தமிழரை கொன்றொழிக்கும் இராஜதந்திர திட்டத்தை தீட்டினார்.

இந்தத் திட்டத்தின் பிரகாரம் 1987 ஆம் ஆண்டு ஜே.ஆர். இந்திய அரசுடன் கபடத்தனமான ஒரு ஒப்பந்ததை செய்து கொண்டார்.

இந்த ஒப்பந்தத்தை அவர் செய்தபோது சிங்கள தீவிரவாதிகள் இதனை முதலில் எதிர்த்தனர்.

அப்போது ஜே.ஆர். பின்வருமாறு கூறினார்: 'என்னை சில நாட்களுக்கு நீங்கள் எதிர்ப்பீர்கள். ஆனால் பின்பு காலம் எல்லாம் என்னைப் பாராட்டுவீர்கள்"

இவ்வாறு கூறிய ஜே.ஆர். இந்தியாவையும் ஈழத்தமிழரையும் தந்திரமாக மோதவிட்டார்.

இது ஈழத்தமிழருக்கும் இந்தியாவிற்கும் இடையே ஆழமான பகைமையை உருவாக்கியது.

தனது அரசியற் சாணக்கியத்தில் ஜே.ஆர். வெற்றி பெற்றார்.

மேற்படி இந்தியாவிற்கும் - ஈழத் தமிழருக்கும் இடையே மூட்டப்பட்ட அரசியல் பகைமையானது இரு தரப்பினருக்கும் பேரிழப்புக்களை உருவாக்கியதுடன் விரும்பத்தகாத துயரங்களுக்கும் வழிவகுத்தது.

இது விடயத்தில் வீழ்ந்தது இந்தியாவும் ஈழத் தமிழரும்தான்.
ஆனால் வாழ்ந்ததோ சிங்கள இனவாதம் ஆகும்.

கடந்த காலம் இருதரப்பினருக்கும் துயரத்தில் முடிந்து விட்டது.

சிறிலங்காவின் முதலாவது பிரதமராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கா ஒருமுறை ஒரு ஆங்கில இராஜதந்திரியுடன் பேசிக்கொண்டிருந்த போது 'வடக்கு-கிழக்கில் வாழும் தமிழர் ஒருகாலம் இந்தியாவுடன் தம்மை ஒரு மாநிலமாய் இணைத்துக்கொள்வர் என்ற அச்சம் தனக்கு உண்டு" என்றாராம்.

அதற்கு அந்த ஆங்கில அதிகாரி 'கிழக்கு மாகாணம் இல்லாத வட மாகாணம் இந்தியாவுக்கு தேவைப்படாது. ஆகவே, கேக்கை வெட்டிச் சாப்பிடுவது போல கிழக்கு மாகாணத்தைத் துண்டு துண்டாய் வெட்டி சிங்களமயமாக்கி விட்டால் மேற்படி அச்சம் அர்த்தமற்றதாகி விடும்" என்றாராம்.

இந்த வகையில் கிழக்கு மாகாணத்தை அரசியல்-இராணுவ அர்த்தத்திலும் புவியியல் அர்த்தத்திலும் கபளீகரம் செய்வதில் இன்றைய சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பெரிதும் அக்கறை காட்டி வருகின்றார்.

இந்த வகையில் கிழக்கு மாகாணம் சிங்கள இனவாதத்தால் கபளீகரம் செய்யப்படுவது என்பது கூடவே இந்தியாவும் ஈழத்தமிழரும் தோற்கடிக்கப்படுகின்றனர் என்பதுதான்.

சிங்கள ஆட்சியாளர் எவரும் இந்தியாவுக்கு நண்பரல்ல.
அவர்கள் 'பயங்கரவாதம்" என்ற பூச்சாண்டியை காட்டி இந்திய அரசை தம்பக்கம் அணைத்து ஈழத்தமிழரை ஒடுக்குவதற்காக இந்தியாவுடன் பாசாங்கான உறவைக் கொள்கின்றனர். அவ்வாறு ஈழத்தமிழர் ஒடுக்கப்பட்டதும் அவர்கள் இந்தியாவின் எதிர்நாடுகளுடன் பின்பு கூட்டுச்சேர்ந்து விடுவர்.

இதில் இந்திய இராஜதந்திரம் மோசம் போகப்போகின்றதா?

ஈழத்தமிழர் இல்லையேல் இலங்கையில் இந்தியாவுக்கு எதுவம் இல்லை.

இலங்கைத் தீவில் இந்தியாவுக்கு எதுவுமில்லையேல் தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தியா எதிரிகளின் கையில் கைதியாகிவிடும்.

அதேவேளை இந்தியா இல்லையேல் ஈழத்தமிழருக்கும் எதுவுமில்லை என்ற உண்மையையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது அவசியம்.

இலங்கைத்தீவு இந்தியாவுக்கு எதிரான அந்நிய நாடுகளின் கைக்குள் சிக்குண்ணுமானால் அதன் விளைவாக முதலில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியது தமிழகம்தான்.

ஆதலால் தமிழகத்தின் பாதுகாப்பு என்பது ஈழத்தமிழர்களின் பாதுகாப்பிலேயே உள்ளது.

மொத்தத்தில் இந்தியாவினதும் தமிழகத்தினதும் பாதுகாப்பானது ஈழத்தமிழரின் பாதுகாப்பில்தான் தங்கி உள்ளது. ஆதலால் வெள்ளம் வரும் முன்னே அணைகட்ட வேண்டும்.

பனிப்போரின் பின்னான காலத்திலும் பனிப்போரின் பின் பின்னான காலத்திலும் என தேசிய இனங்கள் பிரிந்து சென்ற தேசிய அரசுகள் உருவான வரலாறு சர்வதேச அரசியலில் அரங்கேறியுள்ளது.

இவ்வாறு 1990 ஆம் ஆண்டின் பின்பு இன்றுவரை 23 தேசிய இனங்கள் பிரிந்து சென்று தேசிய அரசுகளை உருவாக்கியுள்ள்மை சர்வதேச அரசியலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட யதார்த்தமாய் உள்ளது.

பெரிய இனங்களின் ஒடுக்குமுறைக்கு எதிரானவே மேற்படி தேசிய இனங்கள் பிரிந்து சென்று தேசிய அரசுகளை உருவாக்கின.

இத்தகைய நியதியும் நியாயமும் தமிழீழ மக்களுக்கும் முற்றிலும் பொருந்தும்.

அவர்களும் தேசிய உரிமையினதும், அதன் மிக அடிப்படையான ஜனநாயக உரிமையின் நிமித்தமும், அனைத்து வகை மனித உரிமைகளின் நிமித்தமும், சிங்கள இன ஒடுக்குமுறை ஆட்சியிலிருந்து பிரிந்து சென்று தனியரசை அமைக்க வேண்டியது ஒரு வரலாற்று நிர்ப்பந்தமாய் உள்ளது.

தமிழீழ மக்கள் ஏமாற்றப்பட்டவர்களாய், துரோகமிழைக்கப்பட்டவர்களாய், நீதியின் முன் கைவிடப்பட்டவர்களாய் பாதுகாப்பற்றவர்களாய், துயரப்படுபவர்களாய், தமது வாழ்வுரிமைகள் அனைத்தையும் இழந்தவர்களாய், ஐனநாயக வாழ்வை அடியோடு இழந்தவர்களாய், குரலற்றவர்களாய், வாழ்விடங்களை இழந்தவர்களாய், பிள்ளைகளை, சகோதரர்களை, உறவினர்களை, நண்பர்களை, காதலர்களை இழந்தவர்களாய், அங்கவீனம் உற்றவர்களாய், சொத்துக்களை இழந்தவர்களாய், சுகத்தை இழந்தவர்களாய், அடுத்து என்ன? அடுத்த நிமிடம் நடக்கபோவது என்ன? என்ற கேள்விகளுக்கு பதிலற்றவர்களாய், தொழில்துறைகளை இழந்தவர்களாய், மிகச்சாதாரண மிருகங்கள், பிராணிகள் என்பவற்றிற்கு இருக்கக்கூடிய உரிமைகள் கூட அற்றவர்களாய் அவதியுறுகின்றனர்.

இத்தகைய அவலங்களும் துயரங்களும் ஏன் ஏற்பட்டன? யாருக்காக துயருறுகிறார்கள்? ஏன் இத்துயரத்தை அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் தீர்க்கவோ கடக்கவோ முடியவில்லை?

மேற்படி தமிழீழ மக்களின் துயரத்திற்கான காரணங்களும் அத்துயரங்கள் நீண்டு செல்வதற்கான காரணங்களும் வெறும் மன வேகங்களுக்கு வெளியே அறிவுபூர்வமாகக் கண்டறிந்து யதார்த்தபூர்வமாக தீர்வுகாண வேண்டியது அவசியமானதாகும்.

அறிஞர்களே, ஆய்வாளர்களே, நீதிமான்களே உங்கள் புயங்களை விடவும் புருவங்களை உயர்த்தி நுண்மான் நுழை புலத்தால் கூர்ந்து பாருங்கள் இதயம் உள்ளவர்களே தமிழீழக் குழந்தைகளை, பருவப் பிள்ளைகளை, காதல் கனியத் துடிக்கும் இளம் உள்ளங்களை ஒருகணம் உங்கள் இதயங்களால் உரசிப்பாருங்கள். தமிழீழ மண்ணில் அவதியுறும் மக்களின் துயரங்களை அளர்ந்து பார்க்க பூமியின் அளவுமானி எதுவுமில்லை.

தமிழக மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் தெரியாத ஓர் உண்மை இருக்கிறது. கொள்கை வகுப்பாளர்களும், தீர்மானம் எடுப்போரும், தெரிய விரும்பாத, புரியமறுக்கின்ற ஒரு பக்கம் இருக்கின்றது.

அதாவது, சிங்கள ஆட்சியாளர்களால் தமிழீழ மக்கள் ஒடுக்கப்படுவதும் கொன்றொழிக்கப்படுவதும் இந்தியாவின் பெயரால்தான். தமிழீழ மக்கள் இரத்தம் சிந்துவதும், செத்து மடிவதும், துயரப்படுவதும் இந்தியாவிற்காகக்தான். இது ஒரு புரியப்படாத உண்மை. இனிமேலாவது புரிந்தேயாக வேண்டிய உண்மை அது.

நன்றி -தாயகத்திலிருந்து மு.திரு-

Friday, June 27, 2008

பௌத்த தேசியத்துக்குள் பலியாகப்போகும் இந்தியாவின் வல்லரசு கனவு

ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா கடைப்பிடித்து வரும் பிடிவாதமான முரண்போக்கு குறித்து தமிழீழத்திலும் சரி தமிழ்நாட்டிலும் சரி எப்படி எடுத்துக்கூறினாலும் காதில் வாங்காத இந்திய மத்திய அரசு, அண்மையில் கொழும்புக்கு அனுப்பிய அதன் உயர்மட்டக்குழுவின் நடவடிக்கைகளின் மூலம் தான் இன்னும் திருந்தவில்லை என்ற செய்தியை ஈழத்தமிழர்களுக்கு மறைமுகமாக சொல்லியிருக்கின்றது.

தனது பிராந்திய நலனை உத்தரவாதம் செய்வதற்கு ஈழத்தமிழர் விடயம் உட்பட எந்த விவகாரத்தையும் தனது அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காயாக பயன்படுத்த தயார் என்ற தனது நிலைப்பாட்டை நிரூபிக்கும் வகையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு தான் சகல உதவியையும் வழங்குவதாகுவும் எக்காரணம் கொண்டும் சீனா, பாகிஸ்தான் என தனக்கெதிரான கூட்டணியின் பக்கம் சாய்ந்துவிட வேண்டாம் என்றும் மகிந்த அரசுக்கு இந்தியா மந்திரம் ஓதிச்சென்றிருக்கிறது.

ஈழத்தமிழரின் நம்பிக்கையில் வேல் பாய்ச்சி சென்றிருக்கும் இந்தியாவின் இந்த அறிவிப்புக்கள் சிறிலங்காவின் தென்பகுதியில் எவ்வாறான எதிர்வினைகளை உண்டாக்கியிருக்கின்றன என்பதை நோக்குவது அவசியமாகிறது.

அந்த வகையில், அண்மையில் 'டெய்லி மிரர்" பத்திரிகையில் இந்தியா உயரதிகாரிகளின் அண்மைய சிறிலங்காப் பயணம் தொடர்பாக எழுதப்பட்ட பத்தியிலிருந்து சில விடயங்களை நோக்குவது இங்கு பொருத்தமானதாக இருக்கும்.

அந்தப்பத்தியின் சுருக்கம்:

இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு சாத்தியமற்றது. ஐக்கிய இலங்கைக்குள் சகல இன மக்களும் ஏற்றுக்கௌ;ளக்கூடிய தீர்வே சாத்தியமானது என்று அண்மையில் சிறிலங்காவுக்கு வந்து சென்ற இந்திய உயர்மட்டக்குழுவினர் கூறியுள்ளனர்.

அன்று விடுதலைப் புலிகளுக்கு தனது நாட்டில் வைத்து ஆயுதப்பயிற்சி அளித்து அவர்களை பயன்படுத்தி எமது சிறிலங்காப் படையினரை கொலை செய்வதற்கு சதிசெய்த இந்தியா இன்று சிறிலங்கா அரசுக்கே வந்து இப்படியோரு ஆலோசனையை வழங்கியிருக்கிறது.

'ஒப்பரேஷன் லிபரேஷன்" படை நடவடிக்கையின் போது இந்தியா தலையிட்டிராவிட்டால் 21 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு, ஜே.வி.பி. கிளர்ச்சி எப்படி அடக்கி ஒடுக்கப்பட்டதோ அதேபோன்று இந்தப் போராட்டமும் அடியோடு அழித்தொழிக்கப்பட்டிருக்கும்.

எழுபதுகளில் ஜே.வி.பியின் கிளர்ச்சி இடம்பெற்றபோது அக்கட்சியினரை அழித்தொழிக்கும்படி சிறிலங்கா அரசுக்கு ஆலோசனை வழங்கிய இந்தியா, இன்று புலிகளுடனான யுத்தத்துக்கு மட்டும் அரசியல் ரீதியான தீர்வு காணுமாறு வக்காலத்து வாங்குகின்றது.

ஏனெனில் இந்தியாவிலுள்ள தமிழர்களின் வாக்குகளை வெல்வதற்காகவே ஆகும்.

தற்போதைக்கு இந்தியாவுக்கு உரிய பணி புலிகளுக்கு எதிரான சிறிலங்கா அரசின் யுத்தத்துக்கு இராணுவ ரீதியிலும் சகல வழியிலும் உதவியளிப்பதே தவிர இப்படியான மடத்தனமான ஆலோசனைகளை வழங்குவதல்ல.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு அநியாயத்துக்கு இந்தியாவை வெளுத்து வாங்கியிருக்கிறார் பத்தி எழுத்தாளர்.

இந்தப் பத்தியை எழுதியவர் யாருமல்லர். பௌத்த தேசியத்தை தன் மூச்சாகக்கொண்ட எஸ்.எல்.குணசேகர என்பவர்.

இலங்கை என்பது பௌத்த நாடு என்றும் இங்கும் ஏனைய இனங்கள் சிங்களவர்களுக்கு அடங்கி வாழ வேண்டும் என்றும் மூச்சுக்கு மூச்சு சிங்கள ஆங்கில ஊடகங்களில் பிரசாரம் செய்து வருபவர் எஸ்.எல்.குணசேகர.

இவர் சிங்கள இனவெறி பிடித்த - பௌத்த தேசியத்தை உதிரத்தில் பாய்ச்சிய - ஹெல உறுமய எனப்படும் முன்னாள் சிஹல உறுமய கட்சியினை உருவாக்கியவர்களில் ஒருவர்.

இக்;கட்சி ஆரம்பித்தபோது அதன் தலைவராகப் பதவி வகித்து, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் மற்றும் பௌத்த தேசியவாதிகளை தனது கட்சியில் இணைப்பதற்காக நாடு நாடாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டவர்.

பௌத்த தேசியத்தை காப்பதற்காகவே இக்கட்சி என்று சிங்கள இளைஞர்கள் மத்தியில் முழுவீச்சான பிரசாரங்களில் ஈடுபட்டதுடன் அதனை வலியுறுத்தி தொடர் பத்திகள் உட்பட புத்தகங்களையும் எழுதியவர்.

தமிழின உணர்வாளர்களுடன் நேருக்கு நேர்வாதம் புரிந்து வரும் இவர், படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் குமார் பொன்னம்பலத்துடன் ஒன்றாக சட்டம் பயின்றவர்.

தமிழ் ஆயுதக்குழுக்களுடன் முன்னர் தொடர்பு வைத்திருந்தவர் என்ற காரணத்துக்காக தனது கட்சி செயலாளர் திலக் கருணாரட்ணவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படக்கூடாது என்று கட்சிக்குள் பிளவை உண்டு பண்ணியளவுக்கு தமிழினம் என்ற சொல் மருந்துக்கும் ஆகாத மனிதர் இவர்.

அன்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியுடன் அரசியலில் கயிறு பிடித்து ஏறிய இவரது கட்சி இன்று புத்த பிக்குகளின் முழு ஆக்கிரமிப்புடன் தென்பகுதியில் மிகப்பெரிய ஆதரவு பெற்ற கட்சியாக வளர்ச்சி பெற்றுள்ளது.

அதாவது, பௌத்த தேசியத்தை வலியுறுத்திய இவர்களின் பிரசாரத்தால் மூன்று பிரதான சிங்கள கட்சிகளின் வாக்குகளை உடைத்து ஒன்பது நாடாளுமன்ற ஆசனங்களை பெறுமளவுக்கு இதன் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

மொத்தத்தில் இக்கட்சி பௌத்த தேசியத்தை பிரதிபலிக்கும் ஓர் ஆதிக்க சக்தி என்று கூறலாம்.

இக்கட்சியின் முன்னாள் தலைவர் எஸ்.எல்.குணசேகர, இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பாக கூறியுள்ள கருத்தை அவரது தனிப்பட்ட கருத்தாக எடுத்துவிட முடியாது. சிங்கள மக்களின் மனோபாவத்தை மொழிபெயர்க்கும் ஒரு கருவியாகவே இவரை கருதவேண்டியுள்ளது.

இதன் பின்னணியில் துலாம்பரமாக தெளிவாகும் விடயம் என்ன?

அதாவது, சிங்கள மக்களும் அவர்களின் அரசும் என்றுமே இந்தியாவை பகையாளியாகவே பார்த்து வருகிறது. அன்று முதல் இன்றுவரை இதில் எந்த மாற்றமும் இல்லை.

அரசியல் இராணுவ விடயங்களுக்கு அப்பால் சாதாரண சிங்கள மக்களின் பார்வையில் இந்தியா எப்போதுமே சிங்கள தேசத்துக்கு ஒரு எதிரியாகவே வர்ணிக்கப்பட்டு வந்துள்ளது. அது அன்று இந்தியப் பொருட்களை வாங்குவோருக்கு எதிராக ஜே.வி.பி. நடத்திய படுபயங்கரமான போராட்டம் முதலே சிங்கள மக்களின் மனங்களில் ஆழமாக எழுதப்பட்ட ஒன்று.

தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் கொடூரப்போரினால் சிங்கள தேசத்தின் இந்திய எதிர்ப்போக்குவெளியில் தெரிவதில்லையே தவிர சிங்கள மக்களின் மனங்களில் ஆழ விதைக்கப்பட்ட இந்திய விரோதப்போக்கு சந்தர்ப்பம் ஏற்படும் போதெல்லாம் வெளிப்படத்தவறியதில்லை.

அத்துடன் இலங்கையில் சிறுபான்மை இனமாக தமிழ் பேசும் மக்கள் கருதப்பட்டாலும் சிங்கள மக்களை பொறுத்தவரை அவர்கள் இந்தியாவையும் ஈழத்தமிழர்களையும் ஒரு சக்தியாக இணைத்துப்பார்த்து தங்களைத்தான் சிறுபான்மை இனமாக கருதுகிறார்கள். அவர்களை பொறுத்தவரை என்றுமே இந்தியாவும் ஈழத்தமிழரும் ஒன்றுபட்ட சக்தியே என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அது அவர்களது இரத்தத்தில் ஊறிவிட்ட ஒன்று.

இந்த மாதிரியான நிலையில், இந்தியா வலியப்போய் சிறிலங்காவுடன் இணைந்து கொள்ளும் கட்டங்களிலெல்லாம் அவர்கள் இந்தியாவை ஈழத்தமிழர்களுக்கு எதிரான ஒரு கருவியாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இராணுவ ரீதியில் சரி அரசியல் ரீதியில் சரி இந்தியாவின் சகல சக்திகளையும் உள்வாங்கி அவற்றை தமிழருக்கு எதிராக திருப்பி விடுவது என்பதில் அவர்கள் காலகாலமாக உறுதியாக உள்ளனர்.

உண்மையிலேயே இந்தியாவை நேச சக்தியாக சிறிலங்கா பார்க்குமானால் இந்திய மீனவர்களை சிறிலங்கா கடற்படை கடலிலே சுட்டுப்படுகொலை செய்வது உட்பட எத்தனையோ விடயங்களில் சிங்கள தேசம் - இந்தியாவிடம் தமது ஆழ்மன விசுவாசத்தை காண்பிக்கக்கூடிய சந்தர்ப்பங்களில் - தக்க நடவடிக்கைகள் எடுத்திருக்கும். அது நடந்ததா என்ற கேள்வியின் விடையில்தான் சிங்கள தேசத்தின் தேசநலன் தங்கியிருக்கிறது.

எஸ்.எல்.குணசேகர கூறியதைப்போல, தான் என்னதான் செய்தாலும் அதற்கு ஆமா போடும் பங்காளியாக இந்தியா இருக்கவேண்டும் என்று சிறிலங்கா எதிர்பார்க்கிறதே தவிர எதிர்த்து கேள்வி கேட்கும் வகையில் இந்தியா இருக்கக்கூடாது. அப்படி கேட்க இந்தியாவுக்கு உரிமையும் இல்லை என்ற ஒரு மனோபாவத்தில்தான் சிங்கள தேசம் இந்தியாவை பார்க்கிறது.

(இந்தியத் தலையீடு இல்லாவிட்டால் 21 வருடங்களுக்கு முன்னரே விடுதலைப் புலிகளை அழித்திருக்க முடியும் என்று கூறும் எஸ்.எல்.குணசேகர, கடந்த 21 வருடங்களாக இந்தியாவின் உதவியை பெற்றும் சிறிலங்காவால் ஏன் விடுதலைப் புலிகளை அழிக்கமுடியாமல் உள்ளது என்ற பெரிய ஓட்டையை தனது பத்தியில் விட்டுச்சென்றுள்ளமை வேறு விடயம்.)

ஆனால், இந்த யதார்த்தத்தை இந்தியா புரிந்து கொண்டுள்ளதா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.

சிங்கள தேசம் என்றுமே இந்தியாவின் நட்புச்சக்தியாக இருக்கப்போவதில்லை. தமிழர்களின் போராட்டம் நோக்கியதும் தமிழ்த் தேசியம் நோக்கியதுமான சிங்கள தேசத்தின் அச்சம் இந்தியாவையும் உள்ளடக்கியதாகவே இருக்கிறது.

இதனை இந்தியா புரிந்து கொள்ளாதவரை தெரிந்தோ தெரியாமலோ அது இலங்கையின் மறைமுக வேலைக்காரனாக செயற்படுவதை தவிர்க்க முடியாது.

தனது முதலீடுகளுக்கான வளமான நிலமாக இலங்கையை சுவைத்து வரலாம் என்ற இந்தியாவின் கனவெல்லாம் சிங்கள தேசத்தின் திருவிளையாடல்களுக்கு அரோகரா சொல்லும் வரைதான்.

இந்தியாவின் இந்த சுருதியில் சின்னப்பிசகு ஏற்பட்டாலும் சிங்கள தேசத்தின் சீனக்காதல் கொடி கட்டிப்பறக்கும். அடியில் நின்று வேடிக்கை பார்க்கக்கூட இந்தியாவுக்கு இடம் கிடைக்காது.

இந்நிலையில், இந்தியா தனது உறுதியான உறவுப்பாலத்தை அமைக்க வேண்டிய இடம் ஈழத்தமிழர் பக்கமே.

இன்று தனது அயலில் உள்ள எவரையும் நம்ப இந்தியா தயாரில்லை. இந்தியா நம்பினாலும் இந்தியாவை நம்ப அவர்கள் தயாரில்லை.

இந்நிலையில், எத்தனை ஆண்டுகளாக - இன்னமும் - இந்தியாவுக்கு ஈழத்தமிழர்கள் தமது நேசக்கரங்களை நீட்டி நிற்கிறார்கள்?

இந்தியாவின் நலனை தமது நலனாக பார்க்கும் ஈழத்தமிழர்களும் அவர்களின் அரசான விடுதலைப் புலிகளும்தான் இந்தியாவின் நிரந்தர உறவாக இருக்க முடியும் என்பது மறுக்கமுடியாத உண்மை. இது இந்தியாவை தவிர அனைத்துத்தரப்பினருக்கும் தெளிவாகப் புரிந்த விடயம்.

ஆனால், இந்தியா செய்து கொண்டிருப்பது என்ன?

இலங்கையில் சீனா புற்றெடுத்து விடக்கூடாது என்பதற்காக மகிந்தவுக்கு எதைக்கொடுத்தால் மடக்கலாம் என்று நாடி பிடித்துப்பார்த்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு ஆயுதம் தரலாம் என்று பேரம் பேசி தனது முயற்சியில் வெற்றி கண்டுவிட்டதாக திருப்தியடைந்திருக்கிறது.

வல்லரசாக வரத்துடிக்கும் ஒரு நாட்டின் வெளியுறவுக்கொள்கையின் ஓட்டையை விமர்சிக்க இதைவிட ஒரு சந்தர்ப்பம் தேவையில்லை.

தனது சுற்றாடலில் எதிரிகளை வளர்ப்பதற்கென்றே வெளியுறவுக்கொள்கைகளை வகுக்கும் ஒரேயொரு நாடு உலகிலேயே இந்தியாவாக மட்டுமே இருக்கமுடியும் என்பதையே இது படம் பிடித்துக்காட்டுகிறது.

இன்று ஈழத்தமிழர் விடயத்தை மையமாக வைத்து தமது நலன்களை வளர்த்துக்கொள்வதற்கு எத்தனையோ சக்திகள் சதிராடிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், தமிழர் விவகாரத்தில் தலையிட்டு இதய சுத்தியுடன் அவர்களது அபிலாசைகளை தீர்த்து வைத்தால், அது சீனாவுக்கு எதிராக மட்டுமல்ல தெற்காசியாவில் எந்தச் சக்திக்கும் எதிரான இந்தியாவின் மிகப்பெரும் வியூகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

அதனை விடுத்து, ஈழத்தமிழர் விவகாரத்தை கொழும்பின் ஊடாக நகர்த்தி விளையாடும் பகடைக்காயாக கருதி சிறிலங்காவை இந்தியா தொடர்ந்தும் நம்பிக்கொண்டிருந்தால் அதன் வல்லரசுக்கனவு பௌத்த தேசியத்துக்குள் பலியாவது தவிர்க்க முடியாததாகும்.

நன்றி :- -ப.தெய்வீகன்-

Thursday, June 26, 2008

தோல்வியடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இடம்

தோல்வியுற்ற நாடுகளின் வரிசையில் மீண்டும் இலங்கைக்கு "உயரிய' இடம் உலகளாவிய ரீதியில் கிடைத்திருக்கின்றது.

"சமாதானத்துக்கான வெளிநாட்டுக் கொள்கை மற்றும் நிதி' என்ற சர்வதேச அமைப்பு வருடா வருடம் வெளியிடும் தோல்வியுற்ற நாடுகளின் வரிசையிலேயே இம்முறையும் இலங்கை தனது ஸ்தானத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
மொத்தம் அறுபது நாடுகள் தோல்வியுறும் தேசங்களின் வரிசையில் இருக்கின்றன என அந்த சர்வதேச அமைப்பு பட்டியலிட்டிருக்கின்றது.

அந்தப் பட்டியலில் முதலாவது இடம் சோமாலிய நாட்டுக்கு.
இருபதாவது இடத்தை இலங்கை பெற்றுக்கொண்டு தனது "பெருமையை'(?) வெளிப்படுத்தியிருக்கின்றது.

இந்த நாட்டில் இடம்பெறும் ஆட்சி முறையின் சீத்துவத்தையும், அராஜகங்களின் அத்துமீறலையும், ஊழல், துஷ்பிரயோகம், மோசமான பொருளாதாரக் கொள்கை, தனது நாட்டு மக்கள் எனத் தான் உரிமை கோரும் ஒரு சிறுபான்மை இனக்குழுமத்தின் மீதே அரசு வெளிப்படுத்தி வரும் போர் வெறிப் போக்கு போன்றவற்றையும் நோக்கும் போது அடுத்து வரும் வருடங்களில் இந்தப் பட்டியலில் இருபதாவது இடத்திலிருந்து மேலும் பல படிகள் இலங்கை முன்னேறி தோல்வி வரிசையில் முன்னுரிமை நிலை பெறும் என்பது திண்ணம்.
இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து வெளியாகும் புள்ளி விவரங்கள் இந்தத் திசையை நோக்கித்தான் இலங்கைத் தேசம் சென்று கொண்டிருக்கின்றது என்பதை நமக்குத் துலாம்பரமாக வெளிப்படுத்தி நிற்கின்றன.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதை விட இவ்வருடத்தில் மிக மோசமானதாக இருக்கப்போகின்றது என்ற அதிர்ச்சித் தகவலைப் பொருளாதார நிபுணர்கள் இப்போது வெளியிட்டிருக்கின்றார்கள்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பின்னடைவுகள் ஆகியவற்றுக்கு மத்தியிலும் இந்த வருடத்தில் குறைந்த பட்சம் ஏழு வீதமாவது பொருளாதார வளர்ச்சி வீதம் இருக்கும் என இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை மத்திய வங்கி அறிவித்திருந்தது.
பணவீக்கம் எகிறிக் கொண்டிருந்தாலும் இறுக்கமான நாணய நிதிக் கொள்கையைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்தப் பொருளாதார வளர்ச்சி வீதத்தை எட்டமுடியும் என்றும் மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டிருந்தது.

ஆனால் அது சாத்தியப்படாது என்பது இப்போது தெளிவாகிவிட்டது. கடந்த நான்கு வருட காலத்தில் ஆகக் குறைந்த பொருளாதார வளர்ச்சி வீதத்தை இந்த ஆண்டு இலங்கை காட்டப் போகிறது. இந்த வருடத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ஆக 5.8 வீதமாகவே அமையும் என்று பொருளாதார விவகாரங்களைத் தர நிர்ணயம் செய்யும் மலேசிய நிறுவனத்தின் சிரேஷ்ட பொருளாதார நிபுணர் குறிப்பிட்டிருக்கின்றார்.
2007 இல் 7.5 வீத பொருளாதார வளர்ச்சி வீதத்தை எட்டமுடியும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் ஆக 6.8 வீத வளர்ச்சியே அப்போது எட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அது இப்போது மேலும் "கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைபோல' 5.8 வீதத்துக்குப் படுத்துவிட்டது.

இதேசமயம், இலங்கையில் பணவீக்கமும், விலைவாசி உயர்வும், மோசமாக உயர்ந்துள்ளன. இந்தப் பிராந்தியத்தில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இலங்கையில் பணவீக்கம் முப்பது வீதத்தைத் தொட்டு நிற்கின்றது.
எரிபொருள் உட்பட சகல அத்தியாவசியப் பொருட்களினதும் விலைகள் அதிகரித்து, வானத்தைத் தொட்டுள்ளன.

இந்தப் பொருளாதார நெருக்கடிகளுக்கும், மோசமான விலைவாசி உயர்வுக்கும், பண வீக்கப் பிரச்சினைக்கும் உலக சந்தையில் பொருட்களின் விலை உயர்வே முக்கிய காரணம் என்று கூறி இலங்கை அரசு தனது தவறை வேறு தரப்புகள் மீது சுமத்தித் தப்பிழைக்கப் பார்க்கின்றது.
உலக நாடுகளில் எரிபொருள் உட்படப் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன என்பது உண்மைதான்.

ஆனால் அதற்காக இந்தப் பிரதேசத்தின் ஏனைய நாடுகள் எல்லாம் உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப தமது நாட்டிலும் எரிபொருளின் விலையில் உயர்வை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை. அதுபோலவே ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் அவை கூட்டவும் இல்லை.

அவை எல்லாம் ஏதோ ஒரு வகையில் சர்வதேசப் பிரச்சினைக்கு ஏற்றவகையில் தமது பொருளாதார நிலைப்பாடுகளை மாற்றியமைத்து, சர்வதேச மட்டத்திலான விலை உயர்வு தமது மக்களையும் எட்டிப் பாதிப்பை ஏற்படுத்த விடாமல் பார்த்துக் கொள்கின்றன.
ஆனால் இலங்கையில் மட்டும்தான் லாயக்கற்ற ஓர் அரசு இருந்துகொண்டு, சர்வதேச விலை உயர்வைக் காட்டி தனது நாட்டு மக்களின் தலையில் மிளகாய் அரைக்க முயற்சிக்கின்றது.
இந்த அரசுத் தலைமையின் பொறுப்பற்ற போக்குக்காக இலங்கைத் தீவு முழுவதுமே பொருளாதார நிலையில் பின்தங்கி, பெரும் விலை கொடுக்க வேண்டிய கட்டாய இக்கட்டை எதிர்கொள்ளும் கட்டத்துக்கு வந்திருக்கின்றது.

thanks uthayan

Tuesday, June 24, 2008

யுத்தத்தைத் தொடர்வதற்காக கடன்வாங்கிக் குவிக்கும் அரசு

"கடன் வாங்கிக் கல்யாணம்' என்பார்கள். ஆனால் இலங்கைத் தீவில் "கடன் வாங்கி யுத்தம்' என்ற புதிய கொள்கை கடைப்பிடிக்கப்படுகின்றது.

தீவிர யுத்த முனைப்பில் இருக்கும் அரசு, நாட்டின் பொருளாதார வலு நிலைமையைத் தாண்டி யுத்தத்துக் குக் கொட்டிக் கொடுக்கிறது. இதற்காகக் கடன் வாங்கும் படலம் கட்டுமட்டின்றித் தொடர்கின்றது.

கடன் வாங்கிக் காரியங்களை நடத்தும் இலங்கை அரசின் செயற்போக்கால் நாட்டின் பொருளாதாரம் பெரும் விபரீதத்தை நோக்கிச் சென்று கொண்டிருக் கின்றது என சர்வதேச பொருளாதாரக் குறியீடுகளை அள வீடு செய்யும் முகவர் அமைப்புகள் தொடர்ந்தும் அபாய எச்சரிக்கை எழுப்பி வருகின்றன. தர நிலையில் இலங் கையின் பொருளாதாரத்தை மிகக் கீழ் மட்டத்துக்கு அவை கணிப்பிட்டு அறிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
சர்வதேச உதவிகளாக சொற்ப வட்டிக்கு நீண்ட காலக் கடன்களைப் பல்வேறு நாடுகளிலிருந்தும் பெற்றுக் கொள்ளும் நிலைமை மாறி, அறா வட்டிக்கு சர்வதேச வர்த்தக வங்கிகளிடம் கடன் வாங்கிக் குவிக்கும் பெரும் இழுக்கு நிலைக்கு நாடு போய்விட்டது.
"ஸ்டாண்டட் சார்ட்டட் வங்கி' யிடமிருந்து சுமார் ஆயிரத்து அறுநூறு கோடி ரூபாவை ஏப்ரல் முதல் வாரத்தில் கடனாகப் பெற்றுக் கொண்ட இலங்கை, அந்தக் கையோடே பிணை முறித் திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்களிடமிருந்து மேலும் சுமார் இரண்டாயிரத்து இருநூறு கோடி ரூபாவை அறவிடவும் கடனாகப் பெறவும் முயற்சி எடுத்திருக்கின்றது.
யுத்த தீவிரத்தில் குறியாக இருக்கும் அரசு, இந்த ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவினமாக 16 ஆயிரத்து அறுநூறு கோடி ரூபாவை (அதாவது சராசரியாகத் தினசரி ஐம்பது கோடி ரூபாவை) ஒதுக்கீடு செய்திருந்தது. ஆனால் பாதுகாப்புச் செலவினம் போகின்ற போக் கைப் பார்த்தால் இவ்வாண்டுக்கான பாதுகாப்புத்துறைச் செலவு 20 ஆயிரம் கோடி ரூபாவைத் தாண்டும் எனக் கணக்கிடப்படுகின்றது.

இப்படி அதிகரித்துச் செல்லும் பாதுகாப்புச் செலவினம் ஆட்சி முறையில் இடம்பெறும் ஊழல், மோசடிகளால் விரயமாகும் நிதி நல்லாட்சி தவறிய போக்கினால் ஏற்படும் இழப்புகள் மற்றும் மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்படும் பின்னடைவுகள் என்று எல்லாப் பக்கங்களாலும் ஏற்படும் நட்டங்களை ஈடுகட்டுவதற்குக் கடன் வாங்கிக் குவிப்பதையும், புதிதாகப் பண நோட்டுக்களை அச்சிட்டுத் தள்ளுவதை யும் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் அந்தப் "பொருளாதாரத் தற்கொலை' மார்க்கத்தில் குதித்திருக்கின் றது அரசு.
சர்வதேச நாடுகளிடமிருந்து ஒன்றரை வீதத்துக்கும் குறைவான வட்டியுடன் 25 முதல் 30 வருட நீண்ட காலக் கடன்களை அதுவும் ஆரம்பத்தில் பத்து வருட காலத்துக்குத் திருப்பிச் செலுத்தும் கடப்பாடு இல்லாத சொகுசு கடன்களைப்பெற்று நாட்டின் காரியங்களை ஆற்றி வந்த இலங்கை அரசு, இப்போது ஐந்து வருட காலத்தில் முழுதாகத் திருப்பிச் செலுத்தும் கடப்பாட்டுடன் சுமார் ஆறாயிரம் கோடி ரூபாவை உயர் வட்டியில் வர்த்தக வங்கிகளிடம் வாங்கித் தள்ளி, நாட் டைப் பெரும் கடனாளியாக்கி வருகின்றது.

இதற்கிடையில், நாட்டில் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக் கும் இடையிலான இடைவெளி என்றுமில்லாதவாறு கூடியிருப்பதும் நாட்டின் பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் வீழ்த்தப் போவதற்கான ஆரம்ப சமிக்ஞை யாக குறியீடாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்த வருடத்தின் முதல் நான்கு மாத காலத்தில் நாட்டின் ஏற்றுமதியை விட இறக்குமதியின் பெறுமதி இருபதாயிரம் கோடி ரூபா அதிகம் என்று புள்ளி விவரங் கள் தெரிவிக்கின்றன.
ஒருபுறம் ஏற்றுமதிகள் குறைய மறுபுறத்தில் இறக்குமதிக்காகச் செலவிடும் தொகை வேகமாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

இந்தப் பிராந்தியத்தில் எந்த நாட்டிலும் முன்னெப் போதும் இல்லாதவாறு பண வீக்கம் மிக மோசமாக உயரும் நாடு என்ற பெருமையையும் இலங்கை இந்த ஆட்சியின் கீழ் பெற்றுக்கொண்டு விட்டது.

பணவீக்கம் 30 வீதத்தை எட்டிய நிலையில் பொருள் களின் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் எகிறிவிட்டன.

அது மாத்திரமல்ல. மூலதனக் கட்டமைப்புகளுக்கா கவோ அல்லது சமூகக் கட்டுமானங்களுக்காகவோ அல்லது அதுபோன்ற பிற அபிவிருத்தித் திட்டங்களுக் காகவோ அரசு கடன் வாங்குமானால் அதையாவது ஓரளவு நியாயம் எனச் சகித்துக்கொள்ள முடியும். அத் தகைய சமூகக் கட்டுமானங்கள் மூலம் அல்லது அபி விருத்தி மூலம் நாட்டில் வளர்ச்சியும், விருத்தியும் ஏற்படும், கடன் சுமையை எதிர்கொள்ளும் வலுவை அத் தகைய விருத்தித் திட்டங்கள் தரும் என்று நம்பி இருக்கலாம். ஆனால் இந்த அரசோ மீள் எழுந்துவரும் செலவினங்களையும், சம்பளங்களையும், ஏற்கனவே வாங்கிய கடன்களுக்கான கொடுப்பனவுகளைச் செலுத் தவும் கடன் வாங்கிக் குவிக்கின்றது. இத்தகைய போக்கு பொருளாதார ரீதியில் ஆக்கபூர்வமானதல்ல.

இப்படியே இந்த நாடு இன்னும் சில காலத்துக்குப் போகு மானால் "தோல்வியடைந்த நாடு'கள் என்ற வரிசையில் இலங்கை சேர்க்கப்படுவதற்கு நீண்ட காலம் எடுக்காது.

நன்றி உதயன்

Sunday, June 22, 2008

சர்வதேச அரசுகளும் தமிழர் பிரச்சினையும்

சர்வதேசம் அதாவது, அமெரிக்க மற்றும் ஜரோப்பிய ஒன்றிய அரசுகள் சிறிலங்கா அரசின் சமீபகால அணுகுமுறைகள் குறித்து, குறிப்பாக சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் குறித்து அதிருப்பி அடைந்து வருவதாகவும், அதன் விளைவாக எதிர்காலத்தில் சிறிலங்கா மீது மேற்கு அரசுகள் பாரிய அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடும் என்றும் பலவாறான அபிப்பிராயங்கள் நம் மத்தியில் உண்டு.

சமீப காலமாக மேற்கு அரசுகள் குறிப்பாக அமெரிக்க மற்றும் ஜரோப்பிய அரசுகள் வெளிப்படுத்தி வரும் கருத்துக்களினதும், சில நடவடிக்கைகளினதும் பின்புலத்தில் நோக்கினால் மேற்போன்ற அபிப்பிராயங்களை நோக்கி ஒருவர் செல்வதற்கான நியாயம் இல்லாமலில்லை.

இவ்வாறான அபிப்பிராயங்கள் ஈழத் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்ததும் உண்மை.

புலம்பெயர் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மேற்கு அரசுகள் சிங்களத்திற்கு எதிரான நடவடிக்கைகள் சிலவற்றை மேற்கொண்டதன் பின்னணியில் தங்களது அரசியல் நடவடிக்கைகளுக்கும் ஒரு முக்கிய பங்குண்டு என்று கருதுகின்றனர்.

தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பின்தளமாக, புலம்பெயர் தமிழர்களின் வாழ்விடங்கள் தொழிற்பட்டுவரும் சூழலில் புலம்பெயர் மக்கள் அவ்வாறு நம்புவதிலும் நியாயமுண்டு.

ஆனால் இவ்வாறான அபிப்பிராயங்கள், மகிழ்ச்சிகள் அனைத்திலும் பலமான அடி விழுந்தது போன்ற சில சம்பவங்கள் தற்போது இடம்பெற்றுள்ளன.

தற்போது கனடாவில் இயங்கி வந்த உலகத் தமிழர் இயக்கம், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நிதி சேகரிப்பதான குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட்டுள்ளதுடன், இத்தாலியில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என்ற பேரில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப்பொழுது நாம் மீண்டும் சர்வதேச சமூகம் குறித்த எங்களது முன்னைய பரிசீலனைகளையே மீளவும் உரையாடல் பரப்பிற்கு கொண்டு வரப் போகின்றோமா அல்லது சர்வதேசம் இன்னும் எங்களது போராட்டத்தை விளங்கிக் கொள்ளவில்லையே என்று ஏக்கப்பெருமூச்சு விடப் போகின்றோமா?

பொதுவாக எங்களது சர்வதேச சமூகம் குறித்த அபிப்பிராயங்கள், நம்பிக்கைகள் எல்லாம் மேற்கு அரசுகளின் நடவடிக்கைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு அமைவாக இருப்பதை பார்க்கலாம்.

மேற்கு அரசுகள் சிங்களத்திற்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுக்கும் போது அதனால் மகிழ்ச்சி அடைபவர்களாகவும், பின்னர் அதே அரசுகள் புலிகளுக்கு எதிராக சில நடவடிக்கைளை எடுக்கும் போது அதனால் அதிர்ச்சி அடைபவர்களாகவும் நமது மக்கள் இருக்கின்றனர்.

எனவே சர்வதேச சமூகம் குறித்து நம்மிடம் ஒரு தெளிவான பார்வை இருப்பது அவசியம் என்றே நான் கருதுகிறேன்.

முதலில் சர்வதேச அரசுகளுக்கும் நமது பிரச்சினைக்கும் உள்ள உறவு மற்றும் முரண்பாடுகளை கணித்துக்கொள்வோம்.

ஆரம்பத்தில் எல்லா விடுதலைப் போராட்டங்களையும் போன்றே ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டமும் முற்றிலும் இலங்கை விடயமாகவே இருந்தது.

ஆனால் அது இந்தியாவின் கரிசனைக்குரிய ஒன்றாகப் பார்க்கப்பட்ட போது முதன்முதலாக ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு தெற்காசிய முகம் கிடைத்தது.

இந்தியாவின் தலையீட்டுக்காலத்தில் ஒருவேளை ஈழப் பிரச்சினை தீர்க்கப்பட்டிருந்தால், அது இந்தியாவிற்கான சர்வதேச நன்மதிப்பை கூட்டும் ஒரு விடயமாக மட்டுமே மட்டுப்பட்டிருக்கும்.

ஆனால் இந்தியா விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக எதிர்கொண்டு பெரும் வரலாற்று தோல்விக்கு ஆளானதைத் தொடர்ந்தே விடுதலைப் புலிகளும், தமிழர் விடுதலைப் போராட்டமும் ஒரு தெற்காசிய முக்கியத்துவத்தை பெற முடிந்தது.

இது சர்வதேச அரசியலும் தமிழர் போராட்டமும் என்ற கணிப்பில் முதலாவது கட்டமாகும். இந்த போக்கின் இரண்டாவது கட்டம்தான் தமிழர் விடுதலைப் போராட்டமானது மேற்கு அரசுகளுடன் நேரடியாக தொடர்புபடும் கால கட்டமாகும். தமிழர் விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வரையில் தெற்காசியாவில் அது பின்தளமைக்கக்கூடிய ஒரேயொரு இடம் இந்தியாவாகவே இருந்தது.

இதற்கு, தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் உள்ள வரலாற்று ரீதியான நெருக்கம் மற்றும் கலாசார ரீதியான தொடர்புகள் போன்ற காரணங்கள் உண்டு.

ஆனால் விடுதலைப் புலிகளை தனது மேலாதிக்க நலன்களுக்கு பயன்படுத்துவதில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 89-களின் இறுதியில் விடுதலைப் புலிகளை அங்கு செயற்பட முடியாத ஒரு இயக்கமாக இந்தியா தடை செய்தது.

இந்தியாவின் மேற்படி தடையைத் தொடர்ந்து விடுதலைப் போராட்டத்திற்கான பின்தளம் மேற்கு நாடுகளை நோக்கி நகர்ந்தது.

ஆரம்பத்தில் தமிழ் மக்கள் அதிகமாக செல்லக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருந்த கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளை நோக்கி நகர்ந்த விடுதலைப் போராட்டத்தின் ஆதரவுத்தளம், பின்னர் படிப்படியாக ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தையும் இணைத்துக்கொண்டது.

இவ்வாறான சூழல் உருவாவதற்கு மேற்கின் குடிவரவு கொள்கையும், அந்த நாடுகளில் உள்ளக அளவில் பலமாக இருக்கும் ஜனநாயக நடைமுறைகளும் முக்கிய பங்காற்றின எனலாம்.

நாம் மேலே பார்த்த இரண்டாவது கட்டம்தான் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் இராணுவ மற்றும் தகவல் பரிவர்தனை வளர்ச்சியில் பெரியளவில் பங்காற்றிய காலகட்டமாகும்.

முதலாவது கட்டத்தைப் பார்ப்போமானால், அதன்போது இந்தியாவை இராணுவ ரீதியாக எதிர்கொண்டதன் பின்னணியில் உள்ளக மட்டத்தில் விடுதலைப் புலிகள் மிகவும் வலுவான இயக்கமாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டனர் தவிர எத்தகையதொரு சந்தர்ப்பத்திலும் ஆக்கிரமிப்புச் சக்திகளுக்கு தலைசாய்க்காது போராடக்கூடிய ஒரோயொரு இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே என்பதை இந்தக்கால கட்டத்தில் புலிகள் நிரூபித்தனர்.

மேலும் இந்தக் காலகட்டம் விடுதலைப் புலிகளின் ஆட்பலத்தை அதிகரித்ததுடன், தமிழ் மக்களின் ஒரேயொரு தலைமை என்ற அந்தஸ்தையும் அவர்களுக்கு பெற்றுக்கொடுத்தது.

இதனை இன்னும் சற்று மேலே சென்று போரியல் வளர்ச்சி நோக்கில் பார்ப்போமானால், இந்திய தலையீட்டு காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கமானது தெற்காசிய மட்டத்தில் ஒரு வலுவான கெரில்லா இயக்கமாக இருந்தது என்றால், போராட்ட பின்தளம் மேற்கிற்கு மாறியதைத் தொடர்ந்து அது ஒரு மரபுவழி விடுதலை இராணுவமாக பரிணமித்தது எனலாம்.

இந்தப் பின்னணிகளை கருத்தில் கொண்டுதான் மேற்கு அரசுகள், இலங்கை அரசியல் குறித்த தமது காய்களை நகர்த்தி வருகின்றன.

முன்னர் இந்தியாவின் காய்நகர்த்தல்களுக்கு பின்னால் விடுதலை இயக்கங்களுக்கு பின்தள வசதிகளை வழங்குதல், பயிற்சியளித்தல் மற்றும் ஆயுத உதவிகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகள் காரணங்களாக இருந்தன என்றால், இன்று மேற்கின் தலையீடுகளுக்கு பின்னால் இருப்பது மேற்கில் தமிழர் உள்நுழைவதற்கான குடிவரவு சட்டங்களாகும்.

இது குறித்து திரு.பிரபாகரன் அவர்கள் கடந்த மாவீரர் தின உரையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்ததும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

நான் மேலே குறிப்பிட்ட இரண்டாவது கட்டத்தின் ஒரு முக்கிய பகுதிதான் நோர்வேயின் தலைமையில் விடுதலைப் புலிகளும் அரசுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை.

இதன்போது நோர்வே என்பது உண்மையில் நோர்வே அல்ல அது மேற்கு அரசுகளின் குறியீடு. உண்மையில் இந்தக் கால கட்டம் தமிழர் விடுதலைப் போராட்டத்தினைப் பொறுத்த வரையில் அதனை அதுவரை இல்லாதளவிற்கு சர்வதேச மயப்படுத்தியது என்றே நான் சொல்வேன்.

அதுவரைக்கும் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கான சர்வதேச முகமானது புலம்பெயர் மக்களின் அவ்வப்போதைய நடவடிக்கைளிலேயே தங்கியிருந்தது. ஆனால் நோர்வேயின் தலையீட்டில் ஒரு தீர்வு முயற்சி மேற்கொள்ளப்பட்டதும் அது தோல்வில் முடிவடைந்ததும் ஈழத் தமிழர் பிரச்சினையை முதன் முதலாக சர்வதேச அரசு மயப்படுத்தியது.

இங்கு சர்வதேச அரசுமயப்படுத்தல் என்பதும் சர்வதேச சமூக மயப்படுத்தல் என்பதற்கும் இடையில் இருக்கும் பிரிவை நாம் துல்லியமாக மதிப்பிட்டுக்கொள்வது அவசியமாகும். இதிலுள்ள சுவாரசியம் என்னவென்றால் இரண்டு காலகட்டங்களின் போதும் காலமும், பங்குபற்றுநர்களிலும் மாற்றங்கள் இருந்ததே ஒழிய விடயம் என்னவோ ஒன்றாகவே இருப்பதுதான்.

அதாவது, தமிழர் பிரச்சினை இலங்கை எல்லையை தாண்டிய இரண்டு முக்கிய சந்தர்ப்பங்களின் போதும், அதன் கருப்பொருள் இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வை காண்பதாகவே இருந்தது. ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களும் தோல்வியிலேயே முடிவடைந்தது.

முதலாவது தோல்வி ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை மேற்கு நோக்கி தள்ளியது. இரண்டாவது தோல்வி தற்போது எதை நோக்கி தள்ளப் போகின்றது என்பதே பிரச்சினை.

இந்த இரண்டு தலையீடுகளின் போதும் தலையிட்டவர்களின் எதிர்பார்ப்பு முதன்மைப்படுத்தப்படதே அன்றி, தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்கள் முதன்மைப்படுத்தப்படவில்லை. இந்த பின்புலத்தில்தான் நாம் நமது பிரச்சினையில் தலையீடு செய்ய முயலும் அன்னிய சக்திகள் குறித்து சிந்திக்க வேண்டும்.

எந்தவொரு அன்னிய அரசும் இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடுவதானது அந்த நாட்டின் சொந்த நலன்களை கருத்தில் கொண்டதாகவே அமைந்திருக்கும். இது இராஜதந்திர அரசியலின் அரிச்சுவடியாகும்.

அந்த வகையில் பார்ப்போமானால் இலங்கை அரசியலில் தலையீடு செய்து வரும் அன்னிய சக்திகள் ஒவ்வொன்றுக்கும் அதன் அளவில் நலன்கள் உண்டு. ஆனால் இந்தியாவிற்கு இருந்தது போன்ற மிகக்குறுகிய நலன்கள் மேற்கு அரசுகளுக்கு இல்லை. மேற்கு அரசுகளின் நலன்கள் எப்போதுமே நீண்டகால நோக்கம் கொண்டதாகவே இருக்கும். இதன் காரணமாகவே சிறிலங்கா அரசு மேற்கின் சில எதிர்பார்ப்புக்களை மீறி செயற்பட்ட போதும் மேற்கு முழுமையாக அதனை செயலிழக்க செய்ய முயலவில்லை.

இன்றைய சூழலில் சிங்களத்தை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் அமெரிக்காவிற்கு உண்டு. ஆனால் அமெரிக்கா அவ்வாறு நடந்து கொள்ளுமென்று எவரேனும் நினைத்தால் அது அவர்களின் அரசியல் அசட்டுத்தனமாகவே இருக்க முடியும்.

ஒருபோதும் மேற்கு அரசுகள் அவ்வாறு நடந்து கொள்ள மாட்டாது. இதனை நாம் அரசுகள் பிற அரசுகளுடன் வைத்திருக்கும் உறவுகள் வழியாகவே புரிந்துகொள்ள வேண்டும். இதனை தமிழர் விடுதலைப் போராட்டம் சந்தித்த இரண்டு வெளிநாட்டுத் தலையீடுகளின் போதும் நாம் தெளிவாக பார்க்கலாம்.

முதலாவது சந்தர்ப்பத்தில் தனது முயற்சியில் தோல்வியடைந்த இந்தியா அதனைப் பரிசீலனை செய்யாமல் உடனடியாகவே சிங்களத்தை பலப்படுத்துவதன் ஊடாக தனது எதிர்பார்ப்பை நிறைவுசெய்ய முயற்சித்தது. இன்றுவரை அதில் இந்தியா ஓய்வொழிச்சல் இல்லாமல் முயன்று வருகிறது.

இரண்டாவது மேற்கின் தலையீட்டின் போதும் தமிழ் மக்களிற்கு ஒரு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுப்பதில் தோல்வியடைந்த மேற்கு, அந்த சந்தர்ப்பத்திலும் அரசின் மீது வலுவான அழுத்தத்தை கொடுக்க முன்வரவில்லை.

இதில் தெளிவாக அடிக்கோடிட வேண்டிய விடயம், நோர்வே தலைமையிலா பேச்சுவார்தைக்கு அடிப்படையாக இருந்த, விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையில் நிலவிய இராணுவ வலுச்சமநிலையாகும். ஆனால் சிங்களம் ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் போதே அதனை சீர்குலைத்தது.

புலிகள் வசமிருந்த சில நிலப்பகுதிகளை கைப்பற்றியது. தனது கண்ணுக்கு முன்னாலேயே ஒப்பந்தத்தின் அடிப்படை கேள்விக்குள்ளாகிய போதும் அதனை சீர்செய்யும் நடவடிக்கைளை மேற்கு செய்யவில்லை.

எனவே மேற்படி இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்கள் இரண்டாம் பட்சமாக்கப்பட்டிருப்பதானது வெள்ளிடை மலையாகிறது.

எனவே இந்த இடத்தில் நாம் ஒரு கேள்வியை கேட்டுக்கொள்வோம். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை இரண்டாம் பட்சமாக்காதவர்கள் யாரோ அவர்களே ஈழத் தமிழர்களின் ஆதரவாளர்கள் அவ்வாறான யாராவது இருக்கின்றனரா? இந்த கேள்வியிலிருந்துதான் தமிழர் போராட்டத்திற்கும் சர்வதேச அரசுகளுக்கும் உள்ள உறவு மற்றும் முரணை நாம் கணிக்க வேண்டும்.

அமெரிக்க மற்றும் ஜரோப்பிய அரசுகளைப் பொறுத்த வரையில் தெற்காசிய அரசியல் நோக்கிய நகர்வுகளின் போதே இலங்கை விடயம் அவைகளுக்கு முக்கியத்துவம் பெறுகின்றன. மற்றும்படி எந்த வகையான நியாயம் சார்ந்த ஈடுபாடுகளும் அவைகளுக்கு இல்லை.

ஆனால் இதில் ஒரு விடயத்தை நாம் பார்க்கலாம் சர்வதேச அரசுகளை ஓரளவிற்கு கட்டுப்படுத்தக் கூடிய, கட்டுப்படுத்தா விட்டாலும் சமநிலைப்படுத்தக்கூடிய ஆற்றல் சர்வதேச சமூகத்திற்குண்டு. இதுதான் நான் மேலே குறிப்பிட்ட சர்வதேச அரசு மயப்படுத்தலுக்கும், சர்வதேச சமூகமயப்படுத்தலுக்கும் உள்ள வித்தியாசம்.

இதில் ஈடுபடக்கூடிய ஆற்றல் புலம்பெயர் ஈழத் தமிழ் மக்களுக்கு மடடுமே உண்டு. ஏனெனில் போராட்டம் அல்லது விடுதலை நோக்கிய பயணம் என்பது வெறுமனே இராணுவ ரீதியானது மட்டுமல்ல.

இது விடயத்தில் புலிகளிடம் தெளிவான பார்வை உண்டு. இங்கு நானும் புலிகளுக்கு கருத்துக்கூறுவதற்காக இதனை எழுதவுமில்லை.

எதையும் கடந்த கால வரலாற்று அனுபவங்களின் ஊடாக அளவிட்டு அதற்கு ஏற்ப காய்களை நகர்த்தி வருபவர்கள் என்ற வகையில் புலிகளுக்கு நாம் யாரும் புதிதாக எதையும் சொல்லிவிடப் போவதில்லை.

இங்கு பிரச்சினை பேராட்டத்திற்கு வெளியில் இருக்கும் தமிழ் தேசிய சக்திகள் மற்றும் புலம்பெயர் மக்கள் மத்தியிலே சர்வதேச அரசுகள் குறித்த தெளிவான நிலைப்பாடு இருப்பது அவசியமாகும்.

அது மேற்கு அரசுகளின் நடவடிக்கைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு அமைவாக இல்லாமல்;, அதன் பொதுப்போக்கை துல்லியமாக மத்திப்பீடுவதன் மூலம் பெறும் தெளிவாக இருக்க வேண்டும்.

நன்றி: தினக்குரல்
-தாரகா-

Thursday, June 19, 2008

உருப்படியாகச் செய்ய, உருகுமா இந்தியா?

'இந்தியா தனது அரசியல் சிக்கலைiயும் அது சார்ந்த நலன்களையும் விடுத்து, ஈழத்தமிழர் பிரச்சினையை ஒரு அறிவுபூர்வமான சிக்கலாக உணர்ந்து, எமது மன உணர்வுகளை என்றைக்கு ஏற்றுக்கொள்ள முன்வருகிறதோ, அன்றுதான் ஈழத்தமிழர் விடயத்தில் ஒரு தெளிவான வெளியுறவுக் கொள்கையை அதனால் வகுத்துக் கொள்ளமுடியும்.

'தனது அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப- ஒரு சடுகுடு அரசியல் ஆட்டத்தில் இருக்கின்ற ஒரு பகடையாக- தமிழர்களின் போராட்டத்தையும் இந்தியா பயன்படுத்தி வருகின்றதனைப் பார்க்கும்போது நாம் மிகுந்த வேதனையடைகின்றோம்."

இவ்வாறு அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார் விடுதலைப் புலிகளின் பிரமுகர் க.வே.பாலகுமாரன்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஈழத்தமிழர் விடயத்தில் அதன் உண்மையான பிரச்சினை என்ன என்பது காலகாலமாக மர்மமாகவே இருந்து வருகிறது.

இந்தியாவின் வெளியுறவு நிலைப்பாட்டைப் பொறுத்தவரை அதன்சுற்று வட்டாரத்தில் உள்ள எந்த நாட்டுடனுமே அதற்குச் சுமூகமான உறவுநிலை இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியும். பாகிஸ்தான் மட்டுமே அதன் பரம வைரியாக விளம்பரப் படுத்தப்படினும் நேபாளம், பூட்டான், பங்களாதேஷ், பர்மா முதல் சீனா வரை ஒருவித கசப்பான உறவுடனேயே அது இருந்து வருகிறது.

ஆசியாவின் தீர்மானிக்கும் சக்தியாகவும் அடுத்த வல்லரசாகவும் வரத்துடிக்கும் ஒரு நாடு இந்தப் பாதையில் சென்றால் வேலைக்காகாது எனப் புரிந்துகொண்ட மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, தான் ஆட்சிபீடம் ஏறிய கையோடு தனது பழைய பொத்தல்களைச் சரிபார்க்கும் வேலையில் கொஞ்சமாவது மும்முரமாக இறங்கியது.

முதலில் தனது பிராந்தியம் பிரச்சினையற்ற வலயமாகப் பேணப்பட வேண்டும் என்பதை இந்த வேலைத்திட்டத்தின் முன்னிலை அம்சமாக காங்கிரஸ் அரசு புரிந்துகொண்டது. இதற்கு அப்பால் ஏனைய நாடுகளுடன் சுமூகமான உறவுகளைப் புதுப்பிக்கும் படிமுறையைப் பின்பற்றியது.

இந்த வகையில், தனது பிராந்தியத்தில் பிரச்சினைக்குரிய சக்தியாக அது கருதும் விடுதலைப் புலிகள் விடயத்தில் வித்தியாசமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தது.

அதாவது, ராஜீவ் கொலை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள புலிகளினால் இந்தியாவுக்கு தற்போதைக்கு பாதுகாப்பு ரீதியில் எந்தப் பங்கமும் ஏற்படாது என்பதில் இந்தியா ஆரம்பம் முதலே நம்பிக்கை கொண்டிருந்தது.

ஆனால், இந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் அவர்களுக்கு நேசக்கரம் நீட்டினால் தமிழ்நாட்டில் அவர்கள் மீண்டும் தமது இருப்புக்கு அத்திவாரம் போட்டு விடுவார்கள், இன, மொழி ரீதியாக ஒன்றுபட்டுள்ள தமிழ்நாட்டு - தமிழீழ மக்களின் உறவுநிலை பரிணமித்து, அதுவே தமிழ்நாட்டு மக்களின் அரசியல் ரீதியான சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி விடும், அது காலப்போக்கில் தென்கோடியிலும் இன்னொரு காஷ்மீரை உருவாக்கிவிடும் என்ற அச்சம் இந்தியாவுக்கு இருந்து வந்தது.

இதேவேளை, தாமாகச் சென்று புலிகளை நேரடியாகச் சீண்டாத வரை அவர்கள் தம்முடன் வலிந்து வம்புக்கு வரப்போவதில்லை என்ற உண்மை நிலையையும் இந்தியா உணர்ந்து வைத்திருந்தது.

2000 ஆம் ஆண்டு மே மாதம் புலிகளின் கையில் ஆனையிறவு படைத்தளம் வீழ்ந்த கையோடு யாழ். குடாநாட்டில் சிறைப்பட்ட 40 ஆயிரம் சிங்களப் படையினரைக் காப்பாற்றித் தரும்படி இந்தியாவின் கால்களில் போய் சிறிலங்கா வீழ்ந்த போதும், குடாநாட்டுக்கரையிலிருந்து தமது கப்பல் வரை வந்தால் படையினரை ஏற்றிவந்து காப்பாற்றலாமே தவிர, ஈழமண்ணில் காலடி வைக்கமாட்டோம் என்று உறுதியாகக் கூறிவிட்டது.

அதாவது, கொழும்பு அதிகார பீடத்துக்கு வாக்காலத்து வாங்கப்போய்க் கூட, புலிகளுடன் வம்பில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதில் இந்தியா அளந்து செயற்பட்டது.

அந்த வகையில், புலிகளும் தம்முடன் அத்தகைய உறவைத் தொடர்வார்கள் என்ற நம்பிக்கை டில்லிக்கு இன்று வரை இருந்து வருகிறது.

விடுதலைப் புலிகளினால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து,
இறைமைக்கு அச்சுறுத்தல் போன்ற கொழும்பு அதிகாரப்பீடத்தின் அறைகூவலுக்கு இந்தியா செவிசாய்த்திருக்குமேயானால் - விடுதலைப் புலிகளிடம் பலமான கடற்படை உள்ளது என்பதைத் தெரிந்துகொண்டும் - தமிழ்நாட்டின் திருநெல்வேலி - கூழாங்குளம் பகுதியில் 30 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் பாரிய அணு மின் நிலைய கட்டுமானப் பணிகளை ஆரம்பித்திருக்காது.

தனது கடற்படைக்குத் தேவையான 27 யுத்தப் படகுகளை உற்பத்திச் செய்ய சுமார் 17 பில்லியன் செலவில் தமிழ்நாடு திருவள்ளுவர் மாவட்டம் எண்ணூருக்கு அருகில் பாரிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு தமிழ்நாட்டு நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்ய பாதுகாப்பு நிலைபற்றி பரிசீலித்து அனுமதி வழங்கியிருக்கிறதே, அதைச் செய்திருக்காது.

விடுதலைப் புலிகளால் தமக்கு பாதுகாப்பு ரீதியான எந்தப் பங்கமும் ஏற்படாது என இந்தியா அசையாத நம்பிக்கை கொண்டுள்ளது.

அத்துடன் விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டை தனிநாடாக பிரகடனப்படுத்தக்கூடிய புரட்சி வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு தனக்கு சிக்கல் நிலையை ஏற்படுத்தாத வரை, அதேவேளை, சிறிலங்காவில் ஊடுருவும் அந்நிய நாட்டுச்சக்திகளிடம் விடுதலைப் புலிகள் விலைபோய், அதுவே தனது வல்லரசுக் கனவுக்கு எதிரான சதிவலையாக மாறாத வரை, சிறிலங்கா விவகாரத்தில் நேரடியாக தலையிடுவதில்லை.

ஆனால், கொழும்பு அரசியலில் காய்களை நகர்த்துவதன் மூலம், தான் இல்லாத இந்த வெற்றிடத்தைப் பயன்படுத்தி சிறிலங்காவுக்குள் நுழையும் சக்திகளைக் கலைத்து விட்டு, தனது நலன்சார்ந்த திட்டங்களை, முக்கியாமாகப் பொருண்மிய முதலீட்டுகளை, முன்னெடுக்க சிறிலங்காவை தொடர்ந்தும் தளமாக பயன்படுத்துவது.

ராஜீவ் கொலை சம்பவத்திலிருந்து இருந்து இன்று வரை இந்த மாதிரியான நிலைப்பாட்டையே பேணிவரும் இந்தியா, சிறிலங்கா தொடர்பான தனது அரசியல் நிகழ்ச்சி நிரலில் கடந்த 15 ஆண்டுகளில் பாரிய மாற்றம் எதனையும் செய்யவில்லை.

கொழும்பு குறித்த அதன் கொள்கை இந்தியாவைப் பொறுத்த வரை சரியாக இருக்கலாம். தனது நலன் சாரந்து அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் சர்வதேச சூழலில் இந்தியா ஒன்றும் விதிவிலக்கில்லை எனலாம்.

ஆனால், ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவின் நிலை என்ன என்பதுதான் புரியாத புதிர்.

தமிழ்நாட்டைப் புலிகள் தனிநாடாக்கி விடுவார்கள் என்ற கனவுநிலை அச்சத்தில்தான் இந்தியா இன்றும் இருந்து வருகிறதா?

அடக்கப்பட்ட தமது மக்களின் உரிமைக்காகவும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அவர்களது தாயகத்துக்காகவும், பறிக்கப்பட்ட அவர்களின் அரசியல் அபிலாஷைகளுக்காகவும் நிரந்தரத் தீர்வொன்றை பெற்றுக்கொள்ளும் இலக்குடன் அவர்களது ஏகப்பிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் தனியரசு கோரி நடத்துவதுதான் ஈழப்போராட்டம் எனப்படுவது.

தமிழர்கள் கடந்த போராட்டப் பாதையை எட்டிப் பார்க்கும் சின்னக் குழந்தைக்கும் புரியக்கூடிய உண்மையே இது.

தமிழீழத்துக்கான இந்தப் போராட்டம் எந்த வகையில் தமிழ்நாட்டில் கொந்தளிப்பை உண்டு பண்ணும்? அல்லது புலிகள் ஏன் தமிழ்நாட்டில் புரட்சி செய்யப் போகின்றார்கள்? யுத்தத்தின் வலியைத் தினம் தினம் அனுபவித்து வரும் ஈழத் தமிழ்மக்கள் அதனைத் தனது தொப்புள்கொடி உறவான தமிழ்நாட்டு மக்களிடம் கைமாற்றுவர் என்று இந்தியா ஏன் இவ்வளவு கொடூரமாகக் கனவு கண்டு வருகிறது?

ஈழத் தமிழர்கள் தமக்கு ஆதரவளிக்கும்படி இவ்வளவு காலமாக நேசக்கரம் நீட்டியும் அதற்கு ஒரு சாதகமான சமிக்ஞையைக் காண்பிக்காத மர்மம் என்ன?

சிறி லங்காவின் ஆழமான அரசியலைப் புரிந்து கொண்டும் இறங்கி வந்து தலையிட்டு, நீதியான ஒரு முகத்தைக் காட்டுவதற்கு இந்தியாவால் இன்னமும் முடியாமல் இருப்பது ஏன்?

தமது ஆதரவாலோ எதிர்ப்பாலோ ஈழப் போராட்டம் நின்று விடப் போவதில்லை என்பதை தெளிவாக புரிந்து வைத்துக் கொண்டும், எவ்வளவு காலமாவது இந்த யுத்தம் இழுபட்டு மக்கள் வதைபடட்டும் என்ற இந்தியாவின் நியாயமே இல்லாத மௌனத்தின் மர்மம் என்ன?

தனது நாட்டிலுள்ள ஆறு கோடி மக்களின் இனத்தாலும் மதத்தாலும் மொழியாலும் ஒன்றுபட்டுள்ள ஈழத்தமிழரை இந்தியா எவ்வளவு காலம்தான் பிரித்துப் பார்க்க போகிறது?

இந்தியாவின் மத்திய அரசுக் கொள்கை வகுப்பாளர்கள் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். கட்டப்பஞ்சாயத்து ரீதியில் வைத்து ஒரு இனத்தின் விடுதலைக்கான விலையை எடைபோட முடியாது.

கடந்த 25 ஆண்டு காலமாக தமிழினம் தனது விடுதலைக்காகச் செய்துகொண்ட அர்ப்பணிப்புகளும் அதற்கு இன்னமும் தயாராகவுள்ள அதன் தாயகத்தாகமும் இந்தியாவுக்குத் தெரியாத விடயங்கள் அல்ல.

ஈழப் பிரச்சினையில் தலையிட்டு 'உருப்படியான பங்களிப்பு" நல்கக்கூடிய எத்தனையோ சந்தர்ப்பங்கள் இருந்தும் கூட, எல்லாவற்றையும் தன்நேச நலன் சார்ந்து பார்க்கும் மேற்குலப் பாணியில் கையாண்டு இந்தியா கையைச் சுட்டு விட்டு அணில் ஏற விட்ட நாயின் கதையாக இன்று திக்கற்றுப் போயுள்ளது.

கடந்த காலங்களில் இந்தியா புரிந்த இராஜதந்திரத் திருவிளையாடல்களையும், இராணுவக் கொடுமைகளையும் தமிழினம் மன்னித்து மறந்து இன்று நேசக்கரம் நீட்டி நிற்கும் இந்த வேளையில் இந்தியா இன்னமும் முரண்டு பிடிப்பது சிறுபிள்ளைத்தனமானது.

இன்றைய சர்வதேச சூழலில், இந்தியா ஈழப் பிரச்சினையில் தலையிட்டு காத்திரமான பணிகளை மேற்கொண்டால் அதுவே இந்தியாவின் வல்லரசுக் கனவுக்கு பாரிய படிக்கல்லாக அமையும். தெற்காசியாவின் பிடிமானம் என்பது தமிழீழத்தின் தலைவிதியை மையமாகக் கொண்ட சக்கரமே என்பதை இந்தியா புரிந்து கொள்ளவேண்டும்.

அதைவிடுத்து, சம்பூரில் அனல்மின் நிலையம் என்றும், மன்னாரில் எண்ணை அகழ்வு என்றும் தனது நலன்களை முன்னிலைப்படுத்தி தமிழர் மண்ணை அபிவிருத்தி என்ற பெயரில் மறைமுகமாக ஆக்கிரமித்து தமிழர்களின் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் நோக்கில் இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தன் தலையில் தானே மண்ணைப் போடும் வேலையாக அமையப்போவது மட்டுமல்லாமல் பொல்லைக்கொடுத்து அடிவாங்கும் கதையாகவே முடியும்.

நன்றி: நிலவரம் (13.06.08)

சர்வதேசத்தின் காதில் பூச்சுற்றும் தந்திரோபாயம் தொடர்கின்றது

"சர்வதேசப் பிரசாரப் போரில் தோற்றுவிட்டோம்.''
அண்மையில் லண்டனுக்கு விஜயம் செய்திருந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இலங்கையில் தமது அரசும் படைகளும் ஏதோ நல்ல காரியங்களை ஆற்றுவன போலவும், ஆனால் சர்வதேச மட்டத்தில் தமிழர்களின் பிரசாரப் பீரங்கிகள் தமது அரசின் நல்ல செயற்பாடுகளை எல்லாம் மூடிமறைத்துத் துவம்சம் செய்து விட்டன என்பது போலவும் அர்த்தப்படுத்தும் விதத்தில் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டிருக்கலாம்.
ஆனால், களத்தில் கேடு பண்ணிக்கொண்டு, வெறும் பிரசாரத்தை மட்டும் வைத்துக்கொண்டு சர்வதேசத்தையும் ஏமாற்றி நல்ல பெயர் சம்பாதிக்கலாம் என்ற தென்னிலங்கையின் எதிர்பார்ப்பில் இப்போது இடிவிழுந்திருப்பதைப் பிரதிபலிப்பதே அவரது இந்தக் கருத்து என்பதுதான் உள்ளார்ந்தம்.

தமது அரசின் அராஜகங்களுக்கு எதிராக சர்வதேசத்திலும், உள்ளூர் மட்டங்களிலும் கருத்து நிலைப்பாடு வலுவாக ஏற்படும்போது அதனைச் சமாளிப்பதற்குத் தாம் அவ்வப்போது மேற்கொள்ளும் வெறும் தந்திரோபாய நடிப்பு நகர்வுகளும், எத்தனங்களும், அவற்றுக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் உள்நோக்கங்களின் கருத்தும் சர்வதேசத்துக்கும் வெட்ட வெளிச்சமாகி வருவதால் சர்வதேச அதிருப்தியையும், விசனத்தையும், எரிச்சலையும் சம்பாதித்து வருகிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

அந்தப் பின்னடைவுகளை "சர்வதேசப் பிரசாரத் தோல்வி' என்ற காரணத்தின்கீழ் மூடிமறைக்க அல்லது அந்தக் காரணத்தைக் காட்டி சமாளிக்க விழைகிறார் அவர்.
அரசினதும், அதன் படைகளினதும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் அராஜகச் செயற்பாடுகள், அதிகாரத் துஷ்பிரயோகங்கள் எல்லை மீறி வரும் இச்சந்தர்ப்பத்தில் அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்குக் காத்திரமான பயனுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை வெளிப்படையாக எடுத்து, நல்லதோர் ஆட்சியாகத் தமது அரசுக் கட்டமைப்பைக் காட்டுவதை விடுத்து
அவற்றை மூடி மறைத்து, சமாளித்து, சர்வதேசத்துக்கும் "அல்வா' கொடுக்கும் செயற்பாட்டை ஆட்சித் தலைமை தொடருமானால் எவ்வளவு காலத்துக்குத்தான் சர்வதேச சமூகம் ஏமாளியாகப் பார்த்து ஏமாந்து கொண்டிருக்கும்?

அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் நூற்றுக் கணக்கான ஆட்கள் கடத்தப்படுகின்றார்கள். இப்படிக் கடத்தப்படுவோர் நகரில் பரவலாக நெருக்கமாக அமைக்கப்பட்டிருக்கும் படையினரின் தடை நிலைகள், சோதனைச் சாவடிகள், காவல் நிலையங்கள் போன்றவற்றை எல்லாம் தாண்டிக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் நிரந்தரமாகவே காணாமற் போய்விடுகின்றார்கள். கடத்தப்படும் பலர் பணயமாக வைக்கப்பட்டு பெரும் தொகை கப்பமாக வசூலிக்கப்படுகின்றது. சட்டத்துக்கு முரணான மரணதண்டனை விதிப்புகளும், ஆட்கொலைகளும் சாதாரணமாகி விட்டன.

இவற்றுக்கு மூலகாரணமான இடம் எது என்பது இலங்கை ஜனாதிபதிக்குத் தெரியாததல்ல. இப்பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண்பதற்கு எங்கு விரைந்து திருத்தம் செய்யப்படவேண்டும் என்பதும் அவர் அறியாததல்ல.

ஆனால், அதைவிடுத்து, ஆட்கள் கடத்துப்படுவது, காணாமற் போவது பற்றிய விடயங்களைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கான அமைப்பு என்ற பெயரில் அமைச்சர்கள் மட்டக்குழு ஒன்றை பயனற்ற கட்டமைப்பு ஒன்றை உருவாக்கிச் சர்வதேசத்தின் காதில் பூச்சுற்றினார் ஜனாதிபதி.

இப்போது ஊடகங்களுக்கும் ஊடகவியலாளருக்கும் எதிராக அரச அடக்குமுறை கட்டவிழ்த்திருக்கின்றது. சர்வதேசத்தின் அதிக கவனத்தையும், சிரத்தையையும் அது இப்போது ஈர்த்துள்ளது.

இந்த அடக்குமுறையின் மூலம் எது, சிருஷ்டி கர்த்தா யார் என்பவை எல்லாம் இந்த நாட்டின் சிறுபிள்ளைக்கும் கூடத் தெரியும். அது இந்த ஜனாதிபதிக்குத் தெரியாததல்ல. அங்கு விடயத்தைக் கையாண்டு சீர் செய்ய விரும்பாத அத்தகைய சீர்கேட்டுக்கு தாமே தூண்டுதலாளி என்ற காரணத்தினாலோ என்னவோ இது விடயத்திலும் சர்வதேசத்திற்கு காது குத்த முயல்கிறார் அவர்.

ஊடக சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள விவகாரத்தைக் கையாண்டு நிலைமையைச் சமாளிப்பதற்காக இதற்கும் அமைச்சர்கள் கொண்ட உப குழு ஒன்றை நியமித்திருக்கின்றார் அவர்.

தனக்கு நெருக்கமான இடத்திலிருந்து உருவாகும் அராஜகங்களை ஜனநாயக அத்துமீறல்களை ஆட்சி அதிகார அட்டகாசங்களை தடுத்து நிறுத்த வக்கில்லாத, துப்பில்லாத, விருப்பில்லா ஆட்சித் தலைமை, அமைச்சரவை உபகுழுக்களை நியமித்து சர்வதேச கருத்து நிலைப்பாட்டைத் தொடர்ந்து சமாளிக்கலாம் என்று கருதினால் அதில் ஏமாறவேண்டித்தான் இருக்கும். "சர்வதேசப் பிரசாரத்தில் தோற்றுவிட்டோம்!' என்று புலம்பும் நிலைமையைத் தான் அது ஏற்படுத்தும்.

குற்றச்செயல்களின் சட்டப் பொறுப்பிலிருந்து விலக்களிக்கும் விசேட சிறப்புரிமைக் கலாசாரத்தை படைத்தரப்புக்கு வழங்கி, பெரும் அராஜகங்களும், மனித உரிமை மீறல் துஷ்பிரயோகங்களும் அரங்கேற வாய்ப்பளித்துள்ள ஆட்சித் தலைமை, படைத்தரப்பின் கொடூரங்களுக்கு யாரையும் பொறுப்பாக்கவில்லை, குற்றவாளிகளைச் சட்டத்தின்முன் நிறுத்தித் தண்டிக்க முயற்சிக்கவே இல்லை, இத்தகைய குற்றங்களினால் பாதிக்கப்பட்டோரையும், அவைபற்றிய முக்கிய சாட்சிகளையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்றெல்லாம் சர்வதேச மட்டத்திலிருந்து குற்றச்சாட்டுக் கணைகள் குவிந்து வருகின்றன.

இவற்றைச் சமாளித்து ஏமாற்றுவதற்காக இவ்வளவு காலம் கழித்து ஆறுதலாக இப்போது சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை அரசு கொண்டு வந்திருக்கின்றது.
ஆனால் அப்படி சாட்சிகள் உட்பட முக்கிய தரப்பினரைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் அச்சட்டத்தின் கீழ் சுதந்திரமாக இயங்கும் தரப்புகளிடம் ஒப்படைக்கப்படவேயில்லை என்றும், இது ஒரு பயனற்ற ஏமாற்று எத்தனம் என்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் தெரிவித்திருக்கின்றது.

யாழ். மாவட்ட எம்.பியான என்.ஸ்ரீகாந்த சுட்டிக்காட்டியமை போன்று, இதுவும் கூட சர்வதேச சமூகத்தை ஏமாற்றுகின்ற மற்றொரு எத்தனம்தான்.
எத்தனை காலத்துக்குத்தான் ஏமாற்றுவர் இப்படி......?

நன்றி - உதயன்

Wednesday, June 18, 2008

அரசியல் சமாளிப்புகளுக்கும் கைகொடுத்து உதவும் யுத்தம்

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஐயாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்பது உட்பட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து 366 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அடுத்த மாதம் 10 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒரு நாள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித் துள்ளன.
இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் சமாதான முறையில் பேச்சு மூலமாக தீர்வு காண்பதில் உடன்பாடற்ற இலங்கை அரசுத் தலைமை, தமிழரை இராணுவ ரீதியில் அடக்கி, ஒடுக்கி, அவர்களின் பேரம் பேசும் வலுவைச் சிதறடித்த பின்னர், தான் விரும்பிய முடிவை அவர்கள் மீது தீர்வாகத் திணிக் கும் ஒரே இலக்கில் செயற்படுகின்றது.

அதனால் போர்த் தீவிர முனைப்பில் அது வெறி கொண்டு நிற்கிறது என்பது ஏலவே பல தடவைகள் இப்பத்தியில் சுட்டிக்காட்டியாகி விட்டது.

இத்தகைய போர்த் தீவிரப் போக்கினால் முழு நாடுமே யுத்தப் பேரழிவுக்குள் சிக்கிச் சின்னாபின்ன மாகும் ஏதுநிலை ஏற்பட்டுள்ளது.

யுத்தத் தீவிரப் போக்கினாலும், தீர்க்க தரிசனமற்ற பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றுவதா லும், சீர்கெட்ட ஆட்சி முறையாலும், ஊழல், முறை கேடு கள், அதிகாரத் துஷ்பிரயோகங்கள், வீண், விர யம் போன்றவற்றாலும் நாட்டின் பொருளாதாரம் அதல பாதா ளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. விலைவாசி எகிறுகிறது. பணவீக்கம் மோசமாகப் பெருகுகிறது.

அன்றாட வயிற்றுப்பாட்டுக்கு அல்லாடும் மக்கள் வீதிக்கு இறங்கிப் போராடும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றார்கள்.

அடுத்த மாதம் பத்தாம் திகதி நாடளாவிய ரீதியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் பொது வேலை நிறுத்தம் பொதுமக்கள் மத்தியில் தீவிரமாக வளர்ந்து வரும் அதிருப்தி, கசப்புணர்வு, இயலாமை, எரிச்சல், சீற்றம் ஆகியவற்றுக்கான கட்டியமாகவே கொள்ளப்பட வேண்டும்.
அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஈடுகொடுக்க முடியாமல் அல்லாடுகின்ற அப்பாவிப் பொதுமக்க ளுக்கு நிவாரணம் அளிக்கவும், மானியம் வழங்கவும் முடியாது எனக் கைவிரிக்கும் அரசு, மாகாண சபை களைக் கலைத்து அநாவசியத் தேர்தல்களுக்குப் பல கோடி ரூபாவை வீண் விரயம் செய்கிறது; நூறுக்கும் அதிகமாக அமைச்சர்களைப் பட்டாளமாக நியமித்து, அரச கஜானாவைக் காலியாக்கி, கண்மூடித்தனமாகச் செலவிட்டுக் காசைக் கரியாக்குகின்றது.

அரச வருமானத்தை இப்படி அரசியல் குளறுபடி களுக்காக வீணாக்குவதன் மூலம் ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறது அது.
இதுபற்றியெல்லாம் கேட்டால், "செல்லும் செல் லாததற்கெல்லாம் செட்டியார் பொறுப்பு' என்பது போல, எல்லாப் பின்னடைவுகளுக்குமான பொறுப் புகளும் யுத்தம் மீதே போடப்படுகின்றன.

""நாட்டைப் பிரிக்க முயலும் புலிகளை இராணுவ ரீதியில் அழித்தொழிக்காவிட்டால் நாட்டைக் காப் பாற்ற முடியாது. புலிகளை அழிப்பதாயின் யுத்தம் புரியவேண்டும். யுத்தம் புரிவதற்கு நிதி செலவாகும். இப்போது மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரக் கஷ்டங்களுக்கு, யுத்தத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதே முக்கிய காரணம். எனவே புலிகளை அழித் தொழிக்கும் அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பதற்காக இந்தச் சுமைகளை எல்லாம் பொதுமக்கள் சுமந்துதா னாக வேண்டும்.'' என்று கொழும்பு அரசு விடும் கயிறைத் தென்னிலங்கை மக்கள் விழுங்கிக் களைத்துப்போய் விட்டார்கள்.

இப்போது இந்தத் தேவையற்ற மாகாணசபைக் கலைப்புக்கும், அதற்காக முற்கூட்டியே நடத்தப் படும் தேர்தலுக்காக விரயமாகப் போகும் நிதிக்கும் சமாளிப்புக் காரணம் கூறக்கூட இந்த யுத்தமும் இனப்பிரச்சினையும்தான் கையாலாகாத இந்த அரசுக்குக் கைகொடுக்கின்றன.
""இந்த யுத்தத்தில் புலிகளுடன் போராடி வெல் வதாயின் அரசுக்கு ஸ்திரமான அரசியல் பலம் இருக்க வேண்டும். அரசின் ஸ்திரத்தை அரசியல் ரீதி யாக உறுதி செய்தால்தான் பிரிவினைவாதப் புலிகளுடன் திடமான உறுதியான போர் ஒன்றை நடத்த முடியும். அப்படி அரசின் ஸ்திரத்தை உறுதிப் படுத்துவதற்காகவே அரசின் அரசியல் பலத்தை வலுப்படுத்துவதற்காகவே இப்படி முற்கூட்டித் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இத்தகைய தேர்தல் கள் மூலம் மக்கள் பலத்தை வரித்துக்கொண்டு, அதன் வலிமையில் புலிகளுடன் தீவிர யுத்தத்தைத் தொடர அரசு எத்தனிக்கின்றது.'' என இப்போது அரசுத் தரப்பில் புது விளக்கம் கூறப்படுகின்றது.

ஆக, எதற்கெடுத்தாலும் யுத்தத்தை ஒரு சாக்காகக் காட்டி, தென்னிலங்கை மக்களின் தலையில் மிளகாய் அரைக்க முடியும் என இந்த அரசுத் தலைமை நம்புகின்றது போலும்.
எத்தனை நாட்களுக்கு இத்தகைய அரசியல் உத்தி அரசுக்குப் பயன்தரும் என்பதற்கான பதிலை காலம் விரைவில் தந்துவிடும் என எதிர்பார்க்கலாம். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.
thanks - uthayan

Tuesday, June 17, 2008

சாத்வீகப் பாதையில் சந்தி பிரித்தவன்

'சாத்வீகப் பாதையில்
சந்தி பிரித்தாய்
கால வெளியில்
சுவடுகள் பதித்தாய்
காலக் கரைவிலும்
உந்தன் சுவடுகள்..."

பொன். சிவகுமாரனின் 15 ஆவது ஆண்டு நினைவின் போது 1989 ஆம் ஆண்டில் என்னால் எழுதப்பட்ட கவிதையின் சில வரிகள் இவை.

34 ஆண்டுகள் காலத்துள் கரைந்து சென்றாலும் அவனது சுவடுகள் இன்னமும் ஒளிர்ந்த வண்ணமேயே உள்ளன. அவனுடனான நினைவுகளும் என்னுள் கிளர்ந்த வண்ணமேயே உள்ளன.

1974 ஜனவரி 10 ஆம் நாளில் இருந்து அவனது இறுதி நாளான 1974 ஆம் ஆண்டு ஜுன் 5 ஆம் நாள் வரையில் நான் அவன் கூடவே இருந்தேன். அந்த ஐந்து மாதங்களும் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் எழுச்சிக்கான ஒரு காலகட்டமெனவும் குறிப்பிடலாம்.

திரவியம் என வீட்டாராலும் நெருக்கமானவர்களாலும் அழைக்கப்பட்ட உரும்பிராய் கிராமத்தைச் சேர்ந்த பொன். சிவகுமாரன் தனது மரணத்தின் மூலம் ஈழப் போராட்டத்திற்கு சயனைட்டை அறிமுகம் செய்து புதிய வரலாற்றைத் தொடக்கி வைத்தான். முதல் களப் போராளியாகி ஈழப்போராட்டத்தை முன்நகர்த்தினான். தன் சாவின் மூலம் தமிழ்ச் சமூகத்தை, குறிப்பாக அன்றைய இளந்தலைமுறையை ஒரு உலுக்கு உலுக்கினான்.

அவன் தனது மாணவப் பருவத்தில் ஒரு சமூகப் போராளியாகவே அரசியலுக்குள் நுழைந்தான்.

1960-களின் பிற்கூறு இலங்கைத்தீவின் இன்றைய நிலைமைக்கான பல முகிழ்ப்புகளைக் கொண்டிருந்தது என்றால் மிகையில்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டில் முன்னெடுக்கப்பட்ட சாதிய தீண்டாமைக்கு எதிரான வெகுஐன இயக்கப் போராட்டங்கள், சீனக் கலாச்சாரப் புரட்சி, பிரான்சில் எழுந்து உலகெங்கும் பரவிய மாணவர் கிளர்ச்சிகள், தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட, தமிழரசுக் கட்சியின் மூளையென வர்ணிக்கப்பட்ட நவரெத்தினம் அமைத்த சுயாட்சிக் கழகத்தின் தோற்றம், இரசியாவில் லுமும்பா பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்ட ரோஹண விஐயவீர இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் பின்னர் தனியான கட்சியை அமைத்தும் இளம் கிளர்ச்சிக்காராக தோற்றம் பெற்றமை போன்ற இன்னோரன்ன நிகழ்வுகளை உள்ளடக்கிய காலகட்டம் அது.

இவை யாழ். இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சிவகுமாரனைப் பாதித்தது ஆச்சரியம்தான். சிவகுமாரன் கம்யூனிசக் கருத்துக்கள் கொண்ட நண்பர்களுடன் உறவுகளைப் பேணுவதிலும் சமூக நீதிக்கான செயல்பாடுகளை முன்னெடுப்பதிலும் ஈடுபாடு கொண்டவனாக இருந்தான். யாழ்ப்பாணக் குடநாட்டில் எழுச்சிபெற்ற சாதிய எதிர்ப்புப் போராட்டத்தால் சிவகுமாரன் ஈர்க்கப்பட்டான். ஆர்வத்துடன் அதில் பங்கேற்றான்.

இவ்வேளையில்தான் 1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றிபெற்ற ஐக்கிய முன்னணி அரசமைத்தது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியைத் தலைமையாகக் கொண்ட ஐக்கிய முன்னணியில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஐக் கட்சியும் இணைந்திருந்தன. ஐக்கிய முன்னணி அரசில் கல்வியமைச்சராக பதவியேற்ற பதியுதீன் முகமது அவர்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு புள்ளிகள் அடிப்படையிலான தரப்படுத்தல் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனை எதிர்க்கும் வகையில் மாணவர் பேரவை அமைக்கப்பட்டது. அந்த மாணவர் அமைப்பில் சிவகுமாரனும் முக்கிய பங்கெடுத்தான்.

இந்த ஐக்கிய முன்னணி அரசில் இணைந்திருந்த லங்கா சமசமாஐக் கட்சியின் மூத்த தலைவரான கொல்வின் ஆர் டி சில்வாவினால் வரையப்பட்ட புதிய அரசியல் யாப்பின்படிதான் 1972 மே 22 ல் இலங்கைத்தீவு சிறிலங்கா பொளத்த குடியரசாக பிரகடனம் செய்யப்பட்டது.

1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தரப்படுத்தலுக்கு எதிரான கண்டன ஊர்வலத்தை மாணவர் பேரவை யாழ்ப்பாணத்தில் நடாத்தியது. பின்னர் திருகோணமலை, மட்டக்களப்பு நகரங்களிலும் நடாத்தப்பட்டது. இந்நடவடிக்கைகளில் பற்கேற்ற சிவகுமாரன் சாத்வீக நடவடிக்கைளில் திருப்தியுறாமல் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டத் தொடங்கினான்.

ஆதலால் பத்திரிகைச் செய்திகளில் அவனது பெயர் அடிபடத் தொடங்கி இருந்தது. யாழ்ப்பாண பிரதான வீதிக்கு அருகே அப்போதைய யாழ்பாண மேயர் துரையப்பாவின் காருக்குக் குண்டு வைத்தது, அப்போதைய ஐக்கிய முன்னணி அரசின் அமைச்சராக இருந்த சோமவீர சந்திரசிறியின் காருக்கு உரும்பிராயில் வைத்துக் குண்டெறிந்தது என்பன போன்ற சம்பவங்களில் அவனது பெயர் பரபரப்பாகப் பேசப்பட்டது. இவற்றிற்காக அவன் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண விளக்கமறியலில் வைக்கப்பட்டான்.

சிறைக்குள்ளும் அவன் கலகக்காரனாகவே இருந்ததனால் அவன் அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தான். அவனது வழக்குகளுக்கான ஒவ்வொரு தவணையின் போதும் யாழ்ப்பாணம் கொண்டுவரப்படுவான். அவனது வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படாமல் தவணைகளாக இழுத்தடிக்கப்பட்டதால் யாழ்ப்பாணத்திற்கும் அநுராதபுரத்திற்கும் இடையே அலைக்கழிக்கப்பட்டான். அப்படியாக யாழ்ப்பாணச் சிறைக்கு கொண்டு வந்த ஓரு பொழுதினில்தான், 1972 மே மாதத்தில் நான் சிவகுமாரனை முதலில் சந்தித்தேன். நான் அப்போது மே 22 ஆம் நாள் குடியரசுப் பிரகடனத்தை எதிர்த்து இடம்பெற்ற கிளர்ச்சியில் கைதானவர்களில் ஒருவனாக யாழ்ப்பாணம் சிறையில் இருந்தேன்.

1973 இன் பிற்பகுதியில் மலையக மக்களுடன் உறவைப் பேணவேண்டும் என்ற வேலைத்திட்டம் முன்வைக்கப்பட்டபோது அதில் சிவகுமாரன் ஆர்வத்துடன் பங்கேற்று எங்களுடன் மலையகம் வந்திருந்தான்.

மலையகத்தில் இருந்து நாங்கள் யாழ்ப்பாணம் திரும்பியபோது நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டிற்கான தயாரிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. (மாநாட்டை கொழும்பில்தான் நடத்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் நெருக்குதல்களை மீறி அமைப்பாளர்கள் யாழ்பாணத்தில் நடத்த முடிவெடுத்திருந்தனர.;) ஆனால், எங்களைப் போன்ற இளம் சமூக ஆர்வலர்கள் ஒதுக்கப்பட்டவர்களாகவே கணிக்கப்பட்டிருந்தோம். இது எங்களுக்குச் சினத்தை மூட்டியது.

சிவகுமாரன் தலைமையில் யாழ்ப்பாண பிரதான வீதியில் அமைந்திருந்த நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டின் செயலகத்திற்குச் சென்றோம். மாநாட்டுப் பொறுப்பாளர்களைச் சந்தித்து நாங்களும் பங்களிக்கும் வகையில் செயல் திட்டத்தை வகுக்கும்படி கோரினோம்.

முதலில் அவர்கள் மறுத்தார்கள். அப்படியானால் எங்கள் பங்களிப்பு இல்லாமல் மாநாடு நடைபெற முடியாது என சிவகுமாரன் எச்சரித்தான். அதன் பின் தொண்டர் அமைப்பில் எங்களையும் இணைப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. சிவகுமாரன் பொறுப்பாளர்களில் ஒருவனாக அறிவிக்கப்பட்டான். நானும் வேறு பல நண்பர்களும் தொண்டாராகப் பணியேற்றோம்.

எங்கள் பணிகள் சுமுகமாகவே நடைபெற்றன. ஆனால், இருபாலைச் சந்தியில் இருந்து புறப்பட்ட இறுதி நாள் காண்பிய ஊர்திகள் பங்கேற்ற ஊர்வலத்தில் பண்டாரவன்னியன் பற்றிய காண்பிய ஊர்தி கலந்து கொள்வதற்கு மாநாட்டு அமைப்பாளர் அனுமதி மறுத்திருந்தனர்.

அரச நெருக்கடியை சமாளிக்க அமைப்பாளர்கள் எண்ணியிருக்கக்கூடும். சிவகுமாரன் தலைமையிலான தொண்டர்களாகிய நாங்கள் ஊர்வலத்தை ஒழுங்குபடுத்துபவர்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்தோம். இந்தத் தகவல் எங்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதும் ஊர்வலம் நகராதபடி தெருவை மறித்தபடி நாங்கள் மறியல் செய்தோம். மாநாட்டு அமைப்பாளர்கள் எத்தனையோ விளக்கங்கள் அளித்து கெஞ்சினர். ஆனால் சிவகுமாரன் எதற்கும் மசியவுமில்லை விட்டுக்கொடுக்கவும் இல்லை. கடைசியாக பண்டாரவன்னியன் காண்பிய ஊர்தியுடன் ஊர்வலம் நடைபெற்றது.

1974 யூன் 10 இறுதிநாள் நிகழ்வாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மாநாட்டுப் பேராளர்கள் உரையாற்றும் பொதுக்கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டிருநது. இந்த மாநாடு திட்டமிடப்பட்டபோது இத்தனை எழுச்சியாக மக்கள் ஆதரவு இதற்குக் கிடைக்கும் என்று அமைப்பாளர்கள் எதிர்பாத்திருக்கவில்லை.

ஆதலால் சில நூற்றுக்கணக்கானவர் கலந்து கொள்ளக்கூடிய வீரசிங்கம் மண்டபத்தைப் பொதுக்கூட்டத்திற்கு ஒழுங்குபடுத்தியிருந்தனர். ஆனால் மாநாடு நடைபெறுவது தொடர்பாக இலங்கை அரசு மேற்கொண்ட எதிர் நடவடிக்கைகள் தமிழ் பேசும் மக்களிடையே எழுச்சியைத் தோற்றுவித்து விட்டது. ஆதலால், யாரும் எதிர்பாராத வகையில் இறுதிநாள் நிகழ்ச்சிக்கு பல்லாயிரக் கணக்கில் மக்கள் வீரசிங்கம் மண்டபத்தை முற்றுகையிடத் தொடங்கி விட்டனர்.

மண்டப ஒழுங்கைக் கவனித்துக் கொண்டிருந்த தொண்டர்களாகிய எங்களுக்கு நிலமையின் தீவிரம் தெரியத் தொடங்கி விட்டது. உடனடியாக சிவகுமாரன் எங்களை அழைத்து மாற்று வழிகளை யோசிக்கும்படி கோரினான். அப்போதுதான் நாங்கள் கூட்டத்தை எல்லாப் பொதுமக்களும் பார்க்கவும் கேட்கவும் வசதியாக மண்டபத்திற்கு வெளியே நடத்தக் கோருவதென்று தீர்மானித்தோம்.

எங்கள் அழுத்தம் காரணமாக அமைப்பாளர்கள் வெளியே கூட்டம் நடாத்தச் சம்மதித்தனர். நாங்கள் வெளியே கட்டப்பட்டிருந்த சிகரத்திற்குக் கீழே வாங்குகளை அடுக்கி தற்காலிக மேடை அமைத்தோம்.

வீரசிங்க மண்டபக் கட்டடிடத்தின் சிறு முற்றம் அதற்கும் எதிரே கோட்டைச் சுவரில் இருந்து சரிவாக அமைந்த புல்வெளி. இதனைப் பிரித்தபடி தார்ச்சாலை. நாங்கள் மேடைக்கு அருகே இருந்தோம். தார்ச்சாலை புல்வெளி எங்கும் மக்கள் தலைகளே தெரிந்தன.

திருச்சி போராசிரியர் நயினார் முகமது பேசத் தொடங்கினார். நாங்கள் பேச்சை இரசிக்க தொடங்கியிருந்தோம். அப்போதுதான் அந்த நாமெல்லாரும் அறிந்த துயரம் நிகழ்ந்தது. மேடையின் இடது பக்கத்தே அதாவது புல்லுக்குளம் பக்கத்தே சலசலப்பு ஏற்பட்டது.

பொலிசார், அமர்ந்திருந்த மக்களை கலைக்க முயற்சித்தித்து கொண்டிருந்தனர். சலசலப்பு உடனேயே அல்லோலகல்லோலமாக மாறத்தொடங்கியது. மக்கள் நெருக்கியடித்தபடி நகரத் தொடங்கினர். மேடையில் இருந்தவர்கள் மக்களை அமைதியாக இருக்கும்படியும் பொலிசாரை விலகிச் செல்லும்படியும் வேண்டுகோள் விடுத்தனர். அப்போது துப்பாக்கி வேட்டுச்சத்தம் கேட்டது. மக்கள் மிரண்டு ஓடத்தொடங்கினர்.

அவ்வேளையில்தான் அது நடந்தது. தொண்டர்கள் என்ற நிலையில் மேடையின் அருகே இருந்தோம் என்பதால் எல்லாவற்றையும் எங்களால் தெளிவாகவே பார்க்க முடிந்தது. அந்த மேடை அமைக்கப்ட்டிருந்த சிறு முற்றத்தையும் தார்த்தெருவையும் பிரித்த மறிப்புக் கம்பியை தாண்டுவதற்காக ஒருவர் தொட்டபோது எங்களைப் பார்த்து அலறியபடி வீழ்ந்தார்.

பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டினால் அறுந்து விழுந்த மின்சாரக் கம்பியில் இருந்து மின் ஒழுக்கு அந்த மறிப்புக் கம்பியிலும் பரவியிருப்பதை அப்போதுதான் நாங்கள் உணர்ந்தோம். ஆதலால் அதனைத் தொடவேண்டாம் என்று நாங்கள் கத்தித் தடுத்துக் கொண்டிருந்த போதும் அதைத் தொட்டவர்கள் அலறியபடி செத்து வீழ்ந்தார்கள்.

எல்லாம் அடங்கிய இறுதி நேரம் வரையில் நானும் சிவகுமாரனும் அங்கிருந்தோம். இதற்குப் பழிக்குப் பழி வாங்குவதென்று நாங்கள் இருவரும் சபதம் செய்து கொண்டோம்.

காலையில் சந்திப்பதற்கான இடத்தையும் தீர்மானித்துக் கொண்டோம். ஆனால் விடிவதற்கு முன்பாகவே நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர் வீட்டிற்குக் காவலாக நின்ற பொலிசார் மீது சிவகுமாரன் வெடிகுண்டை வீசி விட்டான். பொலிசார் காயமடைந்தார்கள்;. சிவகுமாரன் தேடப்படுபனாக மாறிவிட்டான். இது அவனது குண இயல்பை விளக்கப் போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

1974-01-10 ஆம் திகதியில் இருந்து 1974-06-05 ஆம் திகதி வரையில் நான் அவனுடன் கூடவே இருந்தேன். அந்த ஐந்து மாத எல்லாச் செயல்பாடுகளிலும் பங்கேற்றேன். வெடிமருந்துகள,; ஆயுதங்கள் தேடி சாதிய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு அவனுடன் கூடவே சென்றிருக்கிறேன். நானும் சாவகச்சேரியை சேர்ந்த ஜீவராசாவும் மருத்துவர் ஒருவரின் உதவியுடன் சயனட்டைத் தேடிப் பெற்று வந்ததும், இது எனக்கு மட்டும்தான் உங்களுக்குத் தேவையில்லை என்று சிவகுமாரன் கட்டளையிட்டதும் ஓரு முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னான நிகழ்வு.

இனி ஒரு தடவை பொலிசின் கையில் தான் பிடிபடுவதில்லை என்பதில் சிவகுமாரன் உறுதியாகவே இருந்தான். எங்களைப் பொலிசார் பிடித்தால் எல்லாப் பொறுப்பையும் தனது தலையில் சுமத்தி விடும்படியும் கூறியிருந்தான். இந்த ஐந்து மாத காலமும் ஒரு காவியத்திற்கான சம்பவங்கள் நிறைந்து கிடக்கின்றன, எல்லாவற்றையும் இப்போது கூறுவதும் தேவையற்றதாகும்.

தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் துயர நிகழ்வுகளுக்குப் பொறுப்பாக இருந்த உதவி பொலிஸ் அதிபர் சந்திரசேகராவை பழிவாங்குவதே எங்களின் நோக்கமாக இருந்தது. மிகச் சரியான அந்தத் திகதி எனக்கு நினைவில் இல்லை. கைலாசப் பிள்ளையார் கோவிலுக்கு முன்னால் சந்திரசேகராவை மறித்துக் கொலை செய்வது என்பது எங்கள் திட்டமாக ஏற்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த முயற்சி எங்களுக்குப் பாரிய தோல்வியையே தேடித்தந்தது. சந்திரசேகரா உயிர் தப்பிவிட்டான். சிவகுமாரன் மிக உயர் தேடலுக்கு உரியவனாக அறிவிக்கப்பட்டான். அவனது தலைக்கு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

1974 ஆம் ஆண்டில் அவனது ஊரான உரும்பராய்க் கிராமம் எழுநூறு பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் வேட்டைக்கு உள்ளானாது.

இன்றைக்கு போராட்டம் முதிர்ந்த நிலையில் இவையெல்லாம் சாதாரணமாக இருக்ககூடும். இந்நிலையில் சிவகுமாரனை இந்தியாவுக்கு அனுப்ப முடிவெடுத்தோம். இரகசிய கடல் வழிப் பயணத்திற்குத் தேவையான பணம் எம்மிடம் இருக்கவில்லை. தெரிந்தவர்களிடம் பணம் கேட்டுச் சேகரிப்பது எனது பணியாயிற்று. அப்போது புகழ்மிக்க பெண்மணி ஒருவர் 'என்னிடம் தாலிக்கொடி மட்டும்தான் இருக்கின்றது" என்ற பொன்மொழியை உதிர்த்தார். எல்லோரும் கைவிரித்து விட்டார்கள். இந்நிலையில்தான் பணம் தேடும் வேறு முயற்சிகளை ஆராயத் தொடங்கினோம். கோப்பாய் கிராமிய வங்கி எங்கள் கவனத்திற்கு வந்தது.

1974 ஆம் ஆண்டு ஜுன் 5 ஆம் திகதி காலை பத்து மணியளவில் மருதனார்மடத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட வாடகை வண்டியில் உரும்பிராயில் இருந்து நாங்கள் நால்வர் (சிவகுமாரன், மகேந்திரன், ஜீவராசா, நான்) கோப்பாய் நோக்கிப் பயணித்தோம். எங்கள் திட்டம் சொல்லளவில் மிகச் சிறந்ததாகவே இருந்தது. ஆனால் நடைமுறையில் இறங்கியபோது கட்டுத் தோட்டாக்கள் கொண்ட எங்கள் ஆயுதங்கள் எதுவும் ஒத்துழைக்கவில்லை. ஒன்று பிழைக்க மற்றவையெல்லாம் குழப்பமாகிவிட்டன. கார்ச்சாரதி திறப்புடன் ஓடிவிட்டான். திறப்பில்லாமல் காரை இயங்கச் செய்ய யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஊர்மக்கள் கூடிவிட்டார்கள். எங்கள் கால்களை நம்பி குடிமனைகளுக்கு ஊடாக ஓடத்தொடங்கினோம். கொள்ளைக்காரர் என்றபடி மக்கள் எங்களைத் துரத்தத் தொடங்கினர். கற்காளால் எறியத் தொடங்கினர்.

ஊர்மனை தாண்டி தோட்டப்பகுதிக்கு வந்துவிட்டோம்;. வெடிக்காத கட்டுத் தோட்டாக்கள் கொண்ட துப்பாக்கியைக் காட்டி துரத்தி வருபவர்களைத் தடுத்து நிறுத்தினோம். நாம் யார், எதற்கு வந்தோம் என்பதை விளங்கப்படுத்தினோம். சிவகுமார் தன்னை அறிமுகப்படுத்தியதும் சிலருக்கு அவனைத் தெரிந்திருந்தது. நாங்கள் மெதுவாக ஆசுவாசப்படுத்தியபடி நீர்வேலி நோக்கி தோட்ட வரப்புகள் வழியே நடக்கத் தொடங்கினோம். ஊர்மக்கள் பின்னே எங்களைப் பார்த்தபடி நின்றிருந்தனர். நேரம் நண்பகலை நெருங்கிக் கொண்டிருந்தது.

சற்று நேரத்தில் எதிரே மண்பாதையில் விரைந்து வந்த பொலிஸ் வாகனங்கள் எங்களை வழிமறித்தன. பின்னால் திரும்பிய போது அங்கேயும் பொலிசார் எங்களை நோக்கி வருவது தெரிந்தது. நாங்கள் முற்றுகைக்குள் அகப்பட்டோம். இப்போது எல்லோரது கைகளிலும் இருந்த குண்டுகள் இல்லாத ஆயுதங்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டன. நால்வரும் ஓன்றாகப் பிடிபடாமல் நான்கு திசையில் பிரிந்து செல்வதுபோல் போக்கு காட்டுவதென்றும் தீர்மானித்துக் கொண்டோம். இதனால் சிவகுமாரன் உட்பட எல்லோரும் தப்ப முடியுமென்று நம்பினோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக சிவகுமாரனே பொலிசாரால் சுற்றி வளைக்கப்பட்டான்.

ஏறத்தாழ நண்பகல் நேரம். உச்சி வெயிலை உயர்த்திப் பிடித்தபடி சூரியன். மரவள்ளித் தோட்டத்து செம்மண்ணில் அவன் வீழ்ந்து கிடந்தான். அவனது குதிக்காலில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. துப்பாக்கியால் குறிபார்த்தபடி காக்கிச் சட்டைக் காவலர்கள் சூழ்ந்து நின்றனர். இனித் தப்ப வழியில்லை என்னும் நிலையில் தன் சட்டைப்பையில் இருந்த சிறிய வெற்று வாசனைத் திரவிய குப்பிக்குள் பத்திரப்படுத்தியிருந்த சயனைட்டை அவன் அருந்தினான்.

ஈழப் போராட்டத்தின் முதல் வித்தாய், முன்னறிவித்தவனாய், மாணவர் எழுச்சியின் குறியீடாய் மாறிப்போனான் சிவகுமாரன்.

'நண்பா
உந்தன் இளவயதில்
உயிரை வெறுக்கவும்
சயனைட் குப்பியை
உயிரெனக் கொள்ளவும்
செய் அல்லது செத்துமடியென
பிரகடனம் செய்யவும்
எவை உன்னை உந்தியதோ
இன்னமும் அவை
அப்படியே உள்ளன
உந்தன்
ஒளிரும் சுவடுகளும்
எம்மெதிரே விரிகின்றன..."

நன்றி: நிலவரம் (13.06.08)

Monday, June 16, 2008

தென்பகுதியின் அச்சம் தணிய புலிகளிடம் மண்டியிட வேண்டிய நிலையில் உள்ள சிங்கள அரசு

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் வெடிகுண்டுத் தாக்குதல்களை நிறுத்த முடியாமலும் அவற்றைத் தடுக்கும் வழிறைகள் தெரியாமலும் சிங்கள அரசு திண்டாடுகின்றது.

இதன் விளைவாக செய்வதறியாத அரசு அப்பாவித் தமிழ் மக்களைப் படுகொலை செய்து தனது கோபத்தைத் தணிக்க முயற்சிக்கிறது.

அதன் வெளிப்பாடாக வன்னிப் பெருநிலப்பரப்பெங்கும் கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்களை நடத்துவதுடன் ஆழ ஊடுருவும் அணியினரைப் பயன்படுத்தி கிளைமோர் தாக்குதல்களையும் நடத்தியும் வருகிறது.

தலைநகரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள தாக்குதல்கள் விடுதலைப் புலிகளாலேயே நடாத்தப்படுகின்றன என்ற அடிப்படையில் வைத்து நோக்கினால், வன்னிப்பகுதியில் நடைபெறும் தாக்குதல்களுக்கான பதிலடியாகவே அவை மேற்கொள்ளப்படுகின்றன எனக் கொள்ளலாம்.

விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் நடைபெறும் கிளைமோர்த் தாக்குதல்களுக்குத் தாம் காரணமல்ல என அரசு கூறிவரும் அதேவேளை தென்பகுதியில் நடைபெற்று வரும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளவத்தையில் கடந்த மாதம் 31 ஆம் திகதி, இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டு, 18 பேர் காயமடைந்தனர்.

இம் மாதம் 3 ஆம் திகதி, முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துடன் நால்வர் படுகாயமடைந்தனர்.

நான்காம் திகதி, தெஹிவளையில் ரயிலை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 18 பேர் காயமடைந்தனர்.

ஐந்தாம் திகதி, முல்லைத்தீவு மாந்தையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் பொதுமக்கள் இருவர் உயிரிழந்தனர்.

ஆறாம் திகதி, மொறட்டுவவில் பயணிகள் பேருந்து மீது நடாத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 20 பொதுமக்கள் உயிரிழந்தனர். 80 பேர் காயமடைந்தனர். அன்று மாலை கண்டியில் பேருந்தினுள் குண்டொன்று வெடித்ததில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டு 20 பேர் காயமடைந்தனர்.

அந்த வகையில் கடந்த ஏழு நாட்களில் மட்டும் 38 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 140 பேர் காயமடைந்துள்ளனர். இது தவிர கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் பலர் கடத்தப்பட்டும் உள்ளனர்.

போர்க் களங்களிற்கு வெளியே பொதுமக்கள் இலக்கு வைக்கப்படும் சம்பவங்கள் குறித்து பல்வேறு தரப்புகளும் சுட்டிக்காட்டிய போதும் அத்தகைய சம்பவங்கள் நின்றபாடில்லை. அத்தகைய சம்பவங்கள் சங்கிலித் தொடராக நீண்டு செல்கின்றன.

பொதுமக்களை இலக்கு வைத்து நடாத்தப்படும் தாக்குதல்களின் பின்னால் எத்தத் தரப்பு இருந்தாலும் அத்தகைய தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியவையே. ஆனால், தனக்கொரு பாதிப்பு வரும்போது அதனை எதிர்க்கும் உரிமை யாவருக்கும் பொதுவானது.

இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவநாதன் கிசோர், அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, 'வடக்கில் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படா விட்டால் விளைவுகள் பாரதூரானதாக இருக்கும்" என்ற வகையில் பேசியிருந்தார்.

ஒரு மாதத்துக்கும் மேலாக விவாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் விளங்கிய நாடாளுமன்றம் தமிழர்களை அடக்குவதற்கும் கொடுமைப்படுத்துவதற்கும் என்று ஏற்படுத்தப்பட்ட அவசரகால சட்டப் நீடிப்பிற்காக கடந்த 5 ஆம் திகதி மீண்டும் கூட்டப்பட்டது. இவ்விவாதத்தில் பேசுகையிலேயே சிவநாதன் கிசோர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், 'வடக்கில் இடம்பெறும் தாக்குதல்களின் மாற்றீடாகவே தென்பகுதியில் நடைபெறும் தாக்குதல்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. அரசாங்கம் வன்னி மீது கடந்த இரண்டரை வருடங்களாக விமானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. விமானத் தாக்குதல்கள் மூலம் புலிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதாக இருந்தால் வன்னியிலுள்ள அனைத்து மக்களும் அவர்களுடன் சேர்ந்து, சிங்கள மக்களில் அரைவாசிப் பேரும் இதுவரை இறந்திருக்க வேண்டும். தெற்கில் நடைபெறும் தாக்குதல்களை நாம் கண்டிக்கிறோம். அதே போல் வன்னியி;ல் பொதுமக்கள் கொல்லப் படுவதையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

வன்னியைப் பொறுத்தவரை, நெடுங்கேணி பகுதியே ஆழ ஊடுருவும் படையினருக்கு இலகுவான தாக்குதல் பிரதேசமாக இருக்கிறது. அங்கேயே அநேகமான தாக்குதல்களை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

ஆனால், தென்பகுதித் தாக்குதல்கள் யாருமே எதிர்பார்க்க முடியாத, முழுக்க முழுக்க சிங்கள மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் நடாத்தப் படுகின்றன. அவற்றின் முக்கியத்துவம் என்னவெனில் பாதிக்கப்படுபவர்கள் அனைவரும் சிங்களவர்களாக இருப்பதே.

கடந்த வெள்ளிக்கிழமை காலையில் மொறட்டுவை கட்டுபெத்தவில் நடைபெற்ற பயணிகள் பஸ் மீதான தாக்குதலைத் தொடர்ந்து சிங்கள் மக்கள் பெரும் பீதியடைந்தனர்.

இந்தப் பீதியும் அதனால் உருவான பதற்றமும் மீண்டும் ஒரு 83 யூலையைக் கொண்டு வந்து விடுமோ என்ற பயத்தைப் பலரிடையே ஏற்படுத்தியது.

இதனை யாராவது மறுக்க முனைந்தால் அதற்கான பதில் சனிக்கிழமை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள தேசிய படை வீரர்களின் நினைவுத் தூபிக்கு அருகில் இடம்பெற்ற தேசிய படை வீரர்கள் தின நிகழ்வில் பேசிய சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் 'மீண்டும் ஒரு யூலைக் கலவரம் ஏற்பட நாம் இடமளிக்கப் போவதில்லை" என்ற உரையில் கிடைத்தது.

தென்பகுதியின் கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் நடைபெற்று வரும் தாக்குதல்களை இராணுவ இலக்கு, அரசியல் இலக்கு, பொருளாதார இலக்கு மற்றும் பதிலடி இலக்கு என நான்கு வகையான தாக்குதல் திட்டங்களுடன் செயற்படுத்தும் புலிகள், தென்பகுதியில் நினைத்த நேரத்தில் தாக்குதல்களை நடத்தக்கூடிய பலத்துடன் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்து வருகின்றார்கள்.

இப்போதைய நிலையில் வன்னிப் பகுதியில் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டு மறுநாளோ அல்லது அதற்கு மறுநாளோ தாக்குதல் ஒன்று கொழும்பில் நடைபெறும் என்ற அச்சமும் எதிர்பார்ப்பும் தோன்றிவிட்டது. தாக்குதல்களில் எதிர்பார்ப்பை வைத்துக் கொண்டே தாக்குதல் மேற்கொள்வது புலிகளைப் பொறுத்தவரை மிகவும் பிடித்தமானது.

சிறிலங்காவின் படைத்துறையினருக்கு இராணுவ, அரசியல், பொருளாதார இலக்குகளைப் பாதுகாப்பது அவ்வளவு கடினமானதல்ல. ஆனால், இப்போது நடைபெற்றுவரும் பதிலடித் தாக்குதல்களில் பொதுமக்கள் மீதான பாதிப்புக்களைத் தடுப்பதே முக்கியமான பிரச்சினையாக உள்ளது.

கிழக்குத் தேர்தல் முடிவடைந்து பிள்ளையான் முதலமைச்சாராகப் பதியேற்கவிருந்த தினத்தில் ஜனாதிபதிச் செயலகம் அருகே பொலிஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல், முகமாலை மோதலில் பெருந்தொகையான படையினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்த பிலியந்தல பஸ் குண்டு வெடிப்பு, தெஹிவளை தொடருந்து நிலையக் குண்டு வெடிப்பு, தெகிவளைக்கும் வெள்ளவத்தைக்கும் இடையில் தொடருந்துப் பாதையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு, மொறட்டுவ கிளைமோர் தாக்குதல், வெள்ளவத்தை கைக்குண்டுத் தாக்குதல் என கடந்த சில வாரங்களுக்குள் கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இது தவிர, தேடுதல்கள் மற்றும் சோதனைகள் மூலம் வீடுகள், காட்டுப் பகுதிகள், குடியிருப்புகள், வாகனங்கள் என்பவற்றிருந்து மீட்கப்பட்டு வரும் குண்டுகளின் தொகைகளும் அதிகம் என்றே சொல்ல வேண்டும்.

கிழக்கை மீட்டு அதனைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருப்பதாகவும் வன்னியில் பெரும் வெற்றிகள் தமது படைகளுக்குக் கிடைத்து வருவதாகவும் பிரச்சாரம் செய்வதன் ஊடக சிங்கள மக்களைப் போருக்கு ஆதரவாக வைத்துக் கொள்ள நினைக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு தென்பகுதியின் தற்போதைய நிலை உவப்பானதாக இல்லை.

கொழும்பு நகரைப் பாதுகாக்கவென பொலிஸாருடன் இராணுவம், கடற்படை, விமானப்படை என்பவற்றுடன் பொதுமக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு படையினரும் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன��
�். அதைவிட பொலிஸ் புலனாய்வுப் பிரிவு, இராணுவப் புலனாய்வுப் பிரிவு, கடற்படை மற்றும் விமானப்படையின் புலனாய்வுப் பிரிவுகள் என்பனவும் நடவடிக்கைளல் ஈடுபட்டிருக்கின்றன.

எனினும், இவற்றை எல்லாம் மேவியதாக கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

வலுவான புலனாய்வுப் பிரிவினரைக் கொண்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் தாக்குதல் திட்டங்கள் நன்கு திட்டமிடப் பட்டதாகவும், நோக்கத்திலிருந்து விலகாதாகவும் அமைந்திருக்கும் நிலையில் சிறிலங்கா அரசின் கூலிப்படைகளால் என்ன செய்து விட முடியும் என்பதற்கு தென்பகுதித் தாக்குதல்களே உதாரணங்களாகும்.

இவ் வருடம் ஜனவரி மாதத்தில் மன்னார் பள்ளமடு பிரதேசத்தில் ஆழ ஊடுருவும் அணியினரின் தாக்குதலுக்கு இலக்காகி வீரச்சாவடைந்த விடுதலைப் புலிகளின் இராணுவப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரான - தென்பகுதி நடவடிக்கைகளை கையாண்டு வந்த - கேணல் சாள்ஸின் மரணத்துடன் தெற்கில் புலிகளின் நடவடிக்கைகள் கணிசமாகக் குறைந்து விடும் என்ற சிறிலங்கா படைத்துறையின் எதிர்பார்ப்பு அண்மையத் தாக்குதல்களால் தவிடு பொடியாகி இருக்கிறது.

குறிப்பிட்ட இலக்குகளை வேவு பார்த்து தகவல்களை ஒருங்கிணைத்தல், வெடிமருந்து மற்றும் விநியோகங்களைச் செய்தல், தாக்குதலை நடத்துதல் என்ற மூன்று கட்டங்களைக் கொண்ட புலிகளின் தாக்குதல் திட்டத்தில் ஒரு சிலரை அழித்து விடுவதன் மூலம் எதனையும் அடைந்து விட முடியாது என்பதற்கு கேணல் சாள்ஸின் மறைவின் பின்பும் தாக்குதல்கள் தொடர்வது ஒரு சிறந்த உதாரணமாகும்.

கடந்த பெப்ரவரிக்குப் பின்னர் தென்பகுதியில் தொடருந்துகளை இலக்கு வைத்து மூன்று குண்டுத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. அதைவிட பஸ்களிலும் பேருந்து தரிப்பு நிலையங்களிலும் பல குண்டு வெடிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. மிக அதிகமான அழிவை ஏற்படுத்திய பேருந்து மீதான தாக்குதலாக பிலியந்தல தாக்குதலைக் குறிப்பிடலாம். அதே போன்றதொரு தாக்குதலே கடந்த வாரத்தில் இடம்பெற்ற மொறட்டுவ தாக்குதலாகும்.

கொழும்பில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைக் கட்டப்படுத்த உள்ளே வரும் மற்றும் வெளிச்செல்லும் வாகனங்களையும் தொடருந்துகளையும் சோதனைக்கு உட்படுத்தினால் போதும் என படைத்தரப்பு நினைக்கிறது. ஆனால் அதற்கான போதுமான ஆளணி அவர்களிடம் இல்லை.

அண்மைய கணக்கெடுப்புக்களின் படி கொழும்பு நகருக்குள் நாளொன்றுக்கு வந்து செல்லும் மக்களின் தொகை சுமார் 9 லட்சம் ஆகும். வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் 4 லட்சத்துக்கும் அதிகம்.

சாதாரணமாக, வீதி விபத்துக்களைத் தடுப்பதற்குத் தேவையான ஆளணி வளத்தைக் கூட கொண்டிருக்காத நிலையில், வெளி இடங்களில் இருந்து உள்ளே வரும் வாகனங்களை, மக்களைச் சோதனையிடுவதற்கே முடியாத நிலை இருக்கையில் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறத்திலும் சேவையில் ஈடுபட்டிருக்கின்ற பேருந்துகள் மற்றும் தொடருந்துகளுக்குப் பாதுகாப்பு வழங்குவது எவ்வாறு எனத் தெரியாமல் சிறிலங்கா அரசு விழிபிதுங்கி நிற்கிறது.

தரைப்படை, விமானப்படை, கடற்படை, பொலிஸ் படை என அனைத்துத் தரப்பினரையும் கொண்டு கொழும்பை மாத்திரம் பாதுகாத்துக் கொள்வதானால் மேலதிக படைகளை அழைத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இது முடியாத காரியம்.

இதற்காகச் சிவில் பாதுகாப்புப் படை என்ற பெயரில் புதுப் படை ஒன்றை அண்மையில் ஓய்வு பெற்றுச் செல்லவுள்ள பொலிஸ் மா அதிபர் விக்ரர் பெரேரா உருவாக்கி இருக்கின்றார். அதனை விடவும் மக்கள் பிரதி நிதிகளைக் கொண்ட ஒரு அணியும் உருவாக்கப் பட்டிருக்கிறது.

நான்கு இலட்சம் வாகனங்களை தினமும் முழுமையாகச் சோதனையிடுவதோ அனைத்து மார்க்கங்களிலும் பயணிக்கின்ற 9 லட்சம் பேரையும் பரிசோதிப்பதோ சாத்தியமற்ற விடயம்.

எனவேதான் முதலில் கொழும்பின் அனைத்துப் பகுதிகளிலும் தங்கியுள்ள தமிழ் மக்களை அச்ச நிலைக்குள் தள்ளிவிட படைத்தரப்பு முனைகிறது. இதன் மூலம் கணிசமானோரைத் தமது சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்பி வைக்கலாம் அல்லது ஆகக் குறைந்தது விடுதலைப் புலிகளுக்கு அவர்கள் வழங்கும் ஆதரவைத் தடுத்து விடலாம் எனப் படைத்தரப்பு மனப்பால் குடிக்கின்றது. இதன் மூலம் புலிகளின் தாக்குதல்களைக் குறைத்து விடலாம் என்பது ஒரு பக்க நோக்கமாக இருந்தாலும் முக்கியமாக விடுதலைப் புலிகளின் இருப்பை குலைத்து விடுவதே குறிக்கோளாகும்.

வன்னியில் இடம்பெறும் வான் தாக்குதலின் போதும், கிளைமோர் தாக்குதல்களின் போதும் பொதுமக்கள் குறி வைக்கப்படுவதால்தான் தலைநகர் கொழும்பில் மக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளதாக பலரும் விசனம் தெரிவிக்கும் நிலை உருவாகியுள்ளது.

தமிழர் தாயகப் பகுதியான வடக்கு - கிழக்கில் நடைபெற்று வரும் தாக்குதல்கள் தற்போது நாட்டின் முழுப் பகுதிக்கும் யுத்தத்தைக் கொண்டு வந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பத் தொடங்கி விட்டன.

இதேவேளை, கொழும்பில் இடம்பெற்று வரும் குண்டு வெடிப்புக்கள் காரணமாக பரவி வரும் வதந்திகளும் சிங்கள மக்கள் மத்தியில் பாரிய குழப்பத்தையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளன.

சிங்களப் பகுதிகளிலே இயல்பு வாழ்க்கை முற்றாகச் சீர்குலைந்து உள்ளதோடு தென்னிலங்கை மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற அஞ்சும் நிலையும் உருவாகி இருக்கிறது.

'தென்னிலங்கையில் அதிலும் குறிப்பாக கொழும்பு நகரையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளையும் முழுமையான பாதுகாப்பு நடைமுறை ஒழுங்கிற்குள் கொண்டுவந்து விட்டதாகவும் இனிமேல் கொழும்பிலே குண்டுகள் எதுவும் வெடிக்க மாட்டாது" என்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வெறும் அறிக்கைகளை மாத்திரம் விட்டுக் கொள்கிறார். தனக்கு இலக்கு வைக்கப்பட்ட குண்டிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியிருந்த அவரின் கூற்றைத் தற்போது தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் தாக்குதல்கள் பொய்யாக்கியுள்ளன.

படையினரின் தொகை அதிகரிக்கப்பட்டு இராணுவ முகாம் போன்று இப்போதே காட்சியளிக்கும் கொழும்பு மற்றும் தென்பகுதி நகரங்கள் பாதுகாப்பற்றதாக இருக்கின்றன என்று வைத்துக் கொண்டால் படைத்தரப்பு இப்பகுதிகளின் பாதுகாப்பில் மேலும் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயமாகின்றது. அவ்வாறு இல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டே உள்ளது என்று வைத்துக் கொண்டால் புலிகளின் பலம் தென்பகுதித் தாக்குதல்களால் வெளிப்படுகிறது என்று ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

தற்போது சிங்களப் படைகளும் மகிந்த அரசும் சகல பக்கங்களிலும் இழுபடும் நிலைக்கு வந்துவிட்டன. வடக்கில் புலிகள் நடத்திவரும் தாக்குதல்கள், தென்னிலங்கையிலே நடத்தும் தாக்குதல்கள் அனைத்தையும் மறைத்து, சாதாரண இராணுவ நடவடிக்கைகளைப் போரின் வெற்றிகளாக வைத்துச் சூதாட்டம் ஆடும் மகிந்த, அரசினை பாரிய இக்கட்டுக்குள்ளும் நெருக்கடிக்குள்ளும் தள்ளிவிட்டுள்ளார்.

இவ்வாறான இக்கட்டான நிலைமையில் சிறிலங்கா இருப்பது தமிழர்களுக்கு பயன்படக் கூடியதொரு விடயமே. இராணுவ, அரசியல், பொருளாதார இலக்குகளை மாத்திரம் இலக்கு வைத்து இதுவரை தாக்குதல்களில் ஈடுபட்டு வந்த விடுதலைப் புலிகளுக்கு பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடத்த வேண்டிய தேவையை ஏற்படுத்திய சிங்கள தேசம், தான் ஆரம்பித்து வைத்த ஆட்டத்தைத் தானேயே முடித்து வைக்க வேண்டிய பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது. 'வினை விதைத்தவர் வினை அறுப்பார்" என்பது எத்துணை தூரம் உண்மை.

நன்றி: நிலவரம் (13.06.08)

Friday, June 13, 2008

ஆப்பிழுக்கத் தயாராகும் பொன்சேகா

எல்லோரும் ஏறிவிழுந்த கழுதையில் சக்கடத்தாரும் எறி சறுக்கி விழுந்தாராம் என்ற நக்கல் மொழி ஒன்று எம் மக்களிடையே வழக்கத்தில் உள்ளது.

பிரபாகரனை பிடிக்கப்போகிறோம் என்று கூறிக்கொண்டு வடக்கில், மேல்வெடி வைத்துக்கொண்டிருக்கும் சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் அண்மைக்கால அறிக்கைகளைப் பார்த்தால் இவர் இராணுவத்தளபதிகள் வரிசையில் அடுத்த சக்கடத்தார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

சிங்கள தேசமும் அதன் படைகளும் எதனை எல்லாம் புரிந்து வைத்திருக்கின்றன என்பதனை நோக்குவதை விட எவற்றை எல்லாம் இன்னமும் புரியாமல் இருக்கிறது என்பதனை பார்க்கும்போது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.

தற்போது விடுதலைப் புலிகளின் பெருங்கோட்டையாக விளங்குவது வன்னி. இதனை முற்றாகப் பிடித்துவிட்டால் புலிகளும் அவர்களின் தலைவர் பிரபாகரனும் அவ்வளவுதான்.

இதில் எந்த ஐயமும் இல்லை. இதனை கொழும்பில் இருந்துகொண்டு அரசின் ஊடகப்பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல போன்று பேசலாம் அல்லது காகிதத்தில் எழுதி வைத்து அழகு பார்க்கலாமே தவிர. யதார்த்தத்தில் இது நடக்கக்கூடியதா? சாத்தியமானதா என்று பார்த்தால்தான் உண்மை நிலை புரியும்.

கடந்த சில மாதங்களாக மன்னாரில் நின்று பூச்சாண்டி காட்டிய கதை போன்று வன்னிக்கதையையும் தமது ஊடகங்களில் அளந்து தள்ளி சிங்கள மக்களின் காதுகளில் பூச்சுற்றுவதற்கே பொன்சேகா தலைமையிலான அரச படைகள் பெரும் பிரயத்தனம் செய்கின்றன.

உண்மையில் வடபோர் முனையில் புலிகளின் தந்திரோபாயங்கள் என்ன என்று சற்று ஆராய்ந்தால்தான் சிறிலங்கா இராணுவத்தளபதியின் எதிர்பார்ப்புக்களும் அதில் உள்ள பாரிய சிக்கல்களும் புரியும்.

மன்னார் எனப்படுவது இராணுவ ரீதியில் பார்க்கப்போனால், புலிகளுக்கு தமது கடற்பலத்தை உறுதி செய்தற்கான இடமாகவே ஆரம்பம் முதல் கருதப்பட்டு வந்த ஒன்று.

தமிழீழ கடற்பரப்பு என்று பார்க்கையில் கிழக்கு முதல் வடக்கு ஊடாக சுற்றிவந்து மேற்கு வரை பெரும்பாங்கான கடலை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது எந்தப் பெரிய போருக்கும் பெரும் பக்கபலமாக அமையும் என்பதில் புலிகள் என்றுமே அசையாத நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஆனையிறவு யாருக்குச் சொந்தமோ அவர்களுக்குத்தான் யாழ்ப்பாணம் சொந்தம் என்று தளபதி பிரிகேடியர் பால்ராஜ் கூறியது எவ்வளவு உண்மையோ தமிழீழத்தின் கடற்பரப்பு யாருக்கு சொந்தமோ அவர்களுக்குத்தான் தமிழீழம் சொந்தமானது என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

அந்த வகையில் மன்னார் கடல் எனப்படுவது கடந்த காலங்களில் புலிகளின் சிறிலங்காவின் தென்பகுதி நோக்கிய நகர்வுக்கு நீர்கொழும்பு, புத்தளம் பகுதிவரை தடையின்றி பயன்படுத்தப்பட்டு வந்தமை அரச படைகள் ஒன்றும் அறியாதது அல்ல. இருந்தும், அவர்களின் கண்ணில் மண்தூவி விட்டு கனகச்சிதமாக தமது காரியங்களை புலிகள் அரங்கேற்றி வந்தனர்.

இராணுவம் கைப்பற்றி விட்டதாக அறிவித்துவிட்ட பின்னரும் மன்னார் எருக்கலம்பிட்டி பிரதேசத்திற்கு கடல் வழியாக சென்று தாக்குதல் நடத்தி முகாமை இரண்டு மணிநேரம் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து விட்டு அங்கிருந்து ஆயுதங்களையும் அள்ளி வந்துள்ளனர் என்றால் அது மன்னார் கடலில் புலிகளின் கை எவ்வளவு ஓங்கியுள்ளது என்பதற்கு சரியான சாட்சி.

மன்னாரில் கடந்த காலங்களில் 90-கள் முதல் புலிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் மற்றும் முறியடிப்பு எல்லாமே படையினருக்கு பாரிய இழப்பை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டவையே தவிர, அங்கு தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டவை அல்ல.

அவ்வளவுக்கு மன்னார் இராணுவ ரீதியில் புலிகளுக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகவோ, பல்லாயிரக்கணக்கான போராளிகளை நிறுத்தி வைத்து அவசியம் தக்க வைத்திருக்க வேண்டிய பிரதேசமாகவோ இருக்கவில்லை.

இது கடந்த கால படை நடவடிக்கைகளிலேயே தெளிவான விடயம்.

புலிகள் தமது படையணிகளை இப்பகுதிகளில் நிறுத்துவதும் பின்னர், பிரதான படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் போது அங்கிருந்து அப்புறப்படுத்தி வடக்கு களமுனைகளுக்கு அனுப்புவதும் காலகாலமாக நடந்து வந்த ஒன்று.

அந்த வகையில், இன்று புலிகள் மன்னார் விடயத்தில் பேணிவரும் இராணுவ உபாயமும் அதுவே.

நாளையே, தாம் கைப்பற்றிய பகுதிகள் என்று இராணுவம் மார் தட்டிக்கொண்டிருக்கும் மன்னார் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களை நோக்கி புலிகள் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டாலோ அல்லது மன்னார் இராணுவத்துக்கான பிரதான வழங்கல் பாதையாக இருந்து வரும் வவுனியா - மன்னார் வீதியை ஊடறுத்து ஒரு தாக்குதலை மேற்கொண்டாலோ நாளை மறுநாள், இராணுவம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் எங்கு நின்றதோ அங்கு போய் சரணாகதி அடைந்துவிடும்.

இராணுவத்தைப் பொறுத்த வரை ஒரு பற்றாலியன் பின்வாங்கி ஓடினால், அடுத்தடுத்த பற்றாலியன்கள், முதல் பின்வாங்கிய பற்றாலியனுக்கு முன்னரே இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்து விடும்.

இந்த விடயம் இராணுவத்துக்கும் தெரியும். அதனால்தான் ஜெயசிக்குறு காலத்தில் தாம் விட்ட பிழையை மன்னார் விடயத்தில் விட்டு விடக்கூடாது என்ற அச்சத்துடன், தாம் கைப்பற்றிய பிரதேசங்களை தக்க வைத்துக்கொள்ளவும் அதன் பாதுகாப்பை முடிந்தளவு உறுதி செய்து கொள்ளவும் புதிய புதிய படைகளை களம் இறக்கியுள்ளது.

செயலணிப்படை 2 என்றும் 61 ஆவது படையணி என்றும் தப்பியோடிய இராணுவத்தினரை அழைத்து வந்து ஒருங்கிணைத்து புதிய படையணிகளாக்கி அவற்றை, தாம் கைப்பற்றிய இடங்களில் நிறுத்தி வைத்திருக்கிறது.

ஆனால், இங்கு படைகளை குவிக்குமளவுக்கு புலிகள் அங்கு எந்த அசுமாத்தமும் காட்டவில்லை.

ஏனெனில், படையினருக்கு பாரிய இழப்பை கொடுக்கும் அளவுக்கு அங்கு சிறிலங்காவின் முக்கிய படைகளின் செறிவு இல்லை. மன்னாரை நோக்கி அரசு தனது முக்கிய படையணிகளை நகர்த்தி அங்கு தனது முழுக்கவனைத்தையும் திசை திருப்பினால் புலிகளின் பதில் வேறு மாதிரி அமையலாம்.

புலிகளின் இந்த உபாயத்தின் பின்னணியில் இன்னொரு காரணமும் உண்டு.

அதாவது, இராணுவத்தின் மன்னார் நடவடிக்கை என்பது, பெயரளவில் இராணுவ நடவடிக்கை என்று கூறப்படுகின்ற போதும், அது தெற்கில் அரசியல் நடத்துபவர்களின் வாய்களுக்கு பொரி கடலையாக நடத்தப்படும் ஒரு அரசியல் நடவடிக்கை ஆகும்.

ஆட்கள் இல்லாத குடாநாட்டை கைப்பற்றிவிட்டு, யாழ். செயலகத்தில் தனது மாமனார் கொடியேற்ற, கொழும்பில் இருந்து எப்படி சந்திரிகா அம்மையார் புளகாங்கிதம் அடைந்தாரோ அதேபோன்று, புனித தலமாக மடுவை கைப்பற்றி விட்டு அதனை தெற்கில் காட்டி அரசியல் நடத்த வேண்டும் என்பது மகிந்தவின் நீண்டநாள் ஆசை.

மகிந்தவின் மடு ஆசை இன்று நேற்று வந்தது அல்ல அது அவர் ஆட்சிக்கு வரும்போது கூடவே வந்தது. (மகிந்த முன்னர் மடுவுக்கு போக புலிகளிடம் அனுமதி கேட்டதும் அதற்கு தமது பகுதிக்குள் வந்தால் அவருக்கு தமது பாதுகாப்பே அளிக்கப்படும். அரச படைகளின் பாதுகாப்போடு வரமுடியாது என்று புலிகள் அறிவித்தவுடன் தனது மடுப் பயண கனவை மகிந்த மூட்டை கட்டி வைத்ததும் பழைய கதைகள்)

ஆகவே, தென்னிலங்கையில் இவ்வாறு அரசியல் நடத்துவதற்காக நடத்தப்படும் இந்த இராணுவ நடவடிக்கைகளை எல்லாம் எதிர்த்து சமரிட்டு, முக்கியத்துவம் இல்லாத மன்னாருக்காக தமது போராளிகளை பலி கொடுக்க புலிகள் தயார் இல்லை. அதில் புலிகள் நூற்றுக்கு இரு சதவீதம் உறுதியாகவே உள்ளனர்.

ஆனால், இதே போன்றதொரு கள மௌனத்தை மணலாற்றிலோ முகமாலையிலோ வவுனியாவிலோ புலிகள் பேணுகிறார்களா என்பதனைப் பார்த்தால் புலிகளின் சமச்சீரற்ற இராணுவ அணுகுமுறையும் அதனுள் இராணுவத்தினருக்கு விரித்துள்ள வலையும் தெளிவாகப் புரியும்.

மன்னார் போன்றுதான் கடந்த மாதம் முகமாலையில் இருந்து இராணுவத்தினர் பெரும் எடுப்பில்; முன்னேறினர். நடந்தது என்ன?

அடிக்கடி மணலாற்றிலும் வவுனியா குஞ்சுக்குளம் பகுதியாலும் இராணுவம் இவ்வாறான நடவடிக்கைகளில்தான் முனைப்படைந்து போய் உள்ளது.

நடப்பது என்ன?

முகமாலையில் ஒரே நாளில் நடந்தது, மணலாற்றிலும் வவுனியாவிலும் தவணை முறையில் நடக்கிறது. அவ்வளவுதான் வித்தியாசம். படையினரின் உடலங்கள் தெற்கிற்கு அனுப்பப்பட்ட வண்ணமே உள்ளன.

ஆனையிறவை மீண்டும் கையகப்படுத்தும் இராணுவத்தின் நப்பாசை அக்கினிச்சுவாலையில் தொடங்கி இன்று வரை தொடர்ந்து கொண்டே உள்ளது. அதற்கு அகரம் எழுதும் வகையில் முகமாலையால் அடம்பிடித்துக்கொண்டிருக்கும் படையினருக்கு புலிகள் வைத்திருக்கும் மருந்து மன்னாருக்கு ஏன் தேவையற்றது என்பது தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு புரிய வாய்ப்பில்லைதான்.

அதே போன்றுதான் மணலாறும். மணலாற்றால் முன்னேறி முல்லைத்தீவுக்குள் கால் பதித்து விடலாம் என்பது படையினரின் அடுத்த திட்டம்.

புலிகள் மணலாற்றிலிருந்து திருப்பி ஒரு தாக்குதல் தொடுத்தால், அங்கு குடியமர்த்தப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்களின் கதி என்ன என்பதை எல்லாம் கணக்கெடுக்காமலேயே இராணுவம் அங்கு நின்று அடம்பிடித்துக்கொண்டுள்ளது.

மணலாற்றுக்குள் கால் வைத்த இந்தியப் படைகள் உட்பட எல்லாப் படைகளும் புலிகளிடம் நல்ல பாடம் கற்று திரும்பியதே வரலாறு.

மணலாறு காட்டுக்குள் விதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளினால் தாம் பட்டபாடு குறித்தும் புலிகளின் காடு சார்ந்த இராணுவ உபாயங்களுக்குள் எப்படி அகப்பட்டோம் என்பது பற்றியும், பிரபாகரனை பிடிப்போம் என்று புறப்பட்டு வந்த பல முன்னாள் இந்திய இராணுவத் தளபதிகள் இன்றும் புத்தகம் எழுதிக்கொண்டிருக்கின்றனர்.
இராணுவம் கூறுவதனைப் போன்று வன்னிக்குள் வந்து விடுவது அவ்வளவு சுலபம் என்றால் ஜெயசிக்குறு நடவடிக்கை ஏன் இரண்டு வருடங்கள் நடந்தது என்பதை பொன்சேகா அன் கொம்பனி கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆனையிறவை கையில் வைத்துக்கொண்டே வன்னிக்குள் வர இரண்டு வருடங்களாக தவில் அடித்தவர்கள் கடைசியில் புலிகளின் பதிலடியில் ஒரு வாரத்தில் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் போய் நின்றார்கள்.

இன்று எந்தக்கேந்திர முக்கியத்துவமும் இல்லாத மன்னாரை பின்னணியாக வைத்துக்கொண்டு முல்லைத்தீவை பிடித்து புலிகளின் தலைவரை பிடிக்கப்போவதாக அறிக்கை விடுகின்றனர்.

ஆகவே, புலிகளின் இராணுவ தந்திரோபாயம் என்பது ஆளணி ரீதியான இழப்பை கூடியளவுக்கு குறைத்துக்கொள்வதை அடிப்படையாக கொண்டதே தவிர, எந்த திட்டமிடலும் இன்றி தென்னிலங்கை அரசியல்வாதிகள் நடத்தும் போருக்கு எல்லாம் பதில் சொல்லும் நிலையில் இல்லை.

இந்த வகையில், மகிந்த சகோதரர்களின் கைப்பொம்மையாக களத்தில் நின்றுகொண்டு மன்னார் பற்றியும் மணலாறு பற்றியும் நகைச்சுவை அறிக்கைகளை அள்ளிவீசும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவால் தென்னிலங்கை அரசியல்வாதிகள் மகிழ்ச்சியடையலாம். மகிந்த வீட்டில் பாற்சோறு பொங்கலாம்.

ஆனால், வன்னிக்குள் கால்லைத்த படைகள் ஆப்பிழுத்த குரங்காக அடிவாங்கும் போதும் காலி வீதியில் இரத்மலானைக்கும் கொழும்பு மருத்துவமனைக்கும் இடையில் அம்புலன்ஸ் வாகனங்கள் ஓடும் போதுதான் விடயங்கள் அம்பலத்துக்கு வரும். சிங்கள தேசத்துக்கு உண்மைகள் புரியும்.

-ப.தெய்வீகன்-

ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள நிபந்தனைகள் நிறைவு செய்யப்படுமா?

நாட்டில் மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு இடமளித்து, அதர்ம ஆட்சிக்கு வழி செய்து நிற்கும் இந்த அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நாசூக்கான வார்த்தைகளில் சில விடயங்களைச் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

*அரசுத் தரப்புடன் சேர்ந்து இயங்கும் துணைப் படைக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும்.
* நாட்டில் மனித உரிமைகளைப் பேணுவதற்கு நியாயமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதற்காக அரசு தனது தற்போதைய செயற்போக்கை அடியோடு மாற்றுவதுடன், அதனை வெளிப்படையாக வெளிப்படுத்திக்காட்டவும் வேண்டும்.
* செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு, ஐ.நா. தொண்டர் அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் போன்றவை தமது மனித நேயப் பணிகளை ஆற்றுவதற்கான மார்க்கங்களைத் தடை விதிக்காமல் அரசு திறந்துவிட வேண்டும்.
இதுபோன்ற நியாயமான அர்த்த பூர்வமான விவகாரங்களைத் தனது கோரிக்கையாகவும், அதேசமயம் ஒரு புறத்தில் நிபந்தனை போன்றும் முன்வைத்திருக்கின்றது ஐரோப்பிய ஒன்றியம்.

போர் வெறித் தீவிரத்தில் மூர்க்கமாக நிற்கும் ஜனாதிபதி மஹிந்தரின் அரசு இந்தக் கோரிக்கைகளை ஏற்குமா, அவற்றை நிறைவு செய்யுமா என்பது கேள்விக்குறியே.
ஆனால் இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்க்காமல், "தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்' என்பது போல, போர் மோகத்தில் அரசு விடாப்பிடியாக நிற்குமானால் ஐரோப்பிய ஒன்றியத்தின் வற்புறுத்தல்கள் "செவிடன் காதில் ஊதிய சங்காக' நிராகரிக்கப்படுமானால் இலங் கைத் தீவு மோசமானதும் விபரீதமானதுமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருப்பது தவிர்க்க முடியாததாகும் என்பது தெளிவு.

இலங்கையைப் பொறுத்தவரை பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்தான் இலங்கையின் மிகப் பெரிய பொருளாதார சகா. இலங்கையின் உற்பத்தி ஏற்றுமதியில் 37.5 சதவீதம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கானது என்பதால், இலங்கை போன்ற அபிவிருத்தியை எதிர்நோக்கும் மூன்றாம் மண்டல நாடு ஒன்று தனது பொருளாதார நிலையை ஸ்திரமாகப் பேணுவதற்கு இத்தகைய வலுக் கூடிய சர்வதேசத் தரப்புகளைத் தாஜா செய்து சமாளித்துச் செல்வது மிக முக்கியமாகும்.

அதேவேளை, இலங்கையின் ஆடை உற்பத்திகளை இறக்குமதி செய்வது உட்படப் பல்வேறு விடயங்களுக்குத் தான் வழங்கி வந்த "ஜி.எஸ்.பி. பிளஸ்' என்ற இறக்குமதி வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் நீடித்து இலங்கைக்கு வழங்குவதா என்று மறுபரிசீலனை செய்யும் இந்தச் சமயத்தில் மேற்படி நிபந்தனைகளை அது முன்வைத்திருக்கின்றது.

இலங்கைக்கான இந்த இறக்குமதி வரிச்சலுகை நீடிப்புத் தீர்மானிப்பு விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் நியாயமாக நடந்து கொள்ளும் என்று இப்போதும் கூறப்பட்டு வந்தாலும்
இலங்கையில் மனித உரிமைகளை மதித்துப் பேணி நிலைநிறுத்துவதில் இலங்கை அரசு ஆக்கபூர்வமான செயற்போக்கை வெளிப்படுத்தாத வரை அந்த வசதியை சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நீடிப்பதற்கான சாத்தியங்கள் மிக மிகக் குறைவு என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.

இந்தச் சலுகை நீடிப்பை ஐரோப்பிய ஒன்றியம் வெட்டுமானால் இலங்கையில் ஆடை உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சுமார் மூன்றரை லட்சம் பேர் அவர்களில் பெரும்பாலானோர் இளம் யுவதிகள் வேலையிழந்து வீதிக்கு வருவார்கள். பல நூற்றுக்கணக்கான ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகள் இழுத்து மூடப்படும். வருடாந்தம் பல்லாயிரம் கோடி ரூபா ஏற்றுமதி வருமான இழப்பை இலங்கை ஒரேயடியாகச் சந்திக்கும்.
சுருங்கக் கூறுவதானால் இலங்கையின் பொருளாதாரமே மரம் போல சாய்ந்து படுத்து விடும்.
ஏற்கனவே விலைவாசி ஏற்றம், பணவீக்கம், வாழ்க்கைச் செலவு உயர்வு என்று எகிறும் பொருளாதார நெருக்கடி களினால் துவண்டு போய்க் கிடக்கும் இலங்கைத் தீவை, இத்தகைய "ஜி.எஸ்.பி. பிளஸ்' சலுகை இழப்பும் சேர்ந்து நிரந்தரமாக மீளமுடியாத அதல பாதாளத்தில் வீழ்த்திவிடும்.

இதுதான் இன்றைய யதார்த்தப் புறநிலைமையாகும். கள நிலைவரமாகும்.
ஆனாலும் வானமே இடிந்து வீழ்ந்தாலும் போர்த் தீவிரத்திலிருந்து விலகோம் என்று ஒரே பிடிவாதமாக நிற்கும் இலங்கை ஆட்சியாளர்கள் குறிப்பாக "ராஜபக்ஷ அண்ட் பிறதர்ஸ் கம்பனி' அந்தப் போர்த் தீவிரப் போக்கின் பிரிக்க முடியாத அங்கமாகியிருக்கும் மோசமான மனித உரிமை மீறல் செயற்போக்கை விட்டுக் கொடுத்து மாறப் போவதில்லை என்பதும் தெளிவே.

ஆட்சிச் சகோதரர்களின் முழு அரசியலே இந்தப் போர்த் தீவிரப் போக்கில்தான் தங்கியிருக்கின்றது. அதிலிருந்து மீண்டால் அவர்களுக்கு தென்னிலங்கை அரசியலில் இடமேயில்லை என்றளவுக்கு நிலைமையை அவர்களே வளர்த்துக்கொண்டு விட்டார்கள்.
வெள்ளத்தில் கறுப்புத் திறணையாக மிதந்து வந்த கரடி யைத் தெரியாமல் கட்டிப்பிடித்தவன், பின்னர் "நான் விட்டா லும் அது விடுவதாக இல்லை' என்று கத்துவது போல
இன்று போர்த் தீவிரப் போக்கை வரித்துக்கொண்ட இந்த அரசுத் தலைமை, இப்போது அதிலிருந்து விலக முயன்றாலும், அதை விட முடியாத நிலையில் அது விடுவதாக இல்லை என்ற சூழலில் அத்தீவிரத்தைத் தொடர்ந்து பேண வேண்டியதாகச் சிக்கிக் கொண்டுள்ளது.
அந்தப் பின்புலத்தில் ஐரோப்பிய ஒன்றியம் இப்போது விடுத்துள்ள நிபந்தனைகளை இலங்கைத் தரப்பு நிறைவு செய்வது என்பது துர்லபமே.


thanks - uthayan