Sunday, September 14, 2008

இறுதி யுத்தமும் இந்தியாவும்

கடந்த 09.09.2008 அதிகாலையில் விடுதலைப்புலிகள் வவுனியா இராணுவ கூட்டுத் தலைமையகத்தின் மீது மேற்கொண்ட இருபடைத்தாக்குதல் (தரைப்படை, விமானப்படை) இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நான் இங்கு இந்திய அதிர்ச்சி என்று அழுத்திச் சொல்லுவதற்கு காரணமுண்டு. வழமையாக விடுதலைப்புலிகளின் அதிர்ச்சித் தாக்குதல்களால் கொழும்பு மட்டுமே அதிர்ச்சியடைவதுண்டு.

ஆனால் இம்முறை வழமைக்கு மாறாக கொழும்பின் அதிர்ச்சிக்கு அப்பால் இந்தியாவையும் மேற்படி தாக்குதல் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தியாவின் அதிர்ச்சிக்கு காரணம், இத்தாக்குதலில் இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின் கீழ் இயங்கிவரும் பாரத் நிறுவனத்தைச் சேர்ந்த இரு பொறியியலாளர்களும் காயப்பட்டுள்ளதுதான்.

இந்தியா, சிறிலங்கா அரசிற்கு இலகுரக விமானங்களை கண்காணிக்கும் ராடர்களை வழங்கியிருப்பது இரகசியமான ஒன்றல்ல ஆனால் அதனை பராமரிப்பதற்கும், புலிகளின் விமான நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும் தனது இராணுவ வல்லுநர்களை பயன்படுத்தி வருவது தற்போது அம்பலமாகியுள்ளது.

இவ்வாறான இராணுவ ஒத்துழைப்பானது வெறுமனே சிறிலங்கா இராணுவத்திற்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவது என்பதற்கு அப்பால் புலிகளின் நகர்வுகளை கண்காணித்து அழிக்கும் இரகசிய நடவடிக்கைகளிலும் இந்தியா திரைமறைவில் இயங்கிவருகிறது என்பது இப்போது வெளிப்பட்டுள்ளது.

ஆரம்பத்திலேயே இந்திய புலனாய்வுத் துறை விடுதலைப்புலிகளிடம் விமானங்கள் இருப்பது பற்றி எச்சரித்திருந்தது. ஆனால் புலிகள் விமானத் தாக்குதல்களை மேற்கொள்ளும் வரை சிறிலங்கா அரசு அதைப் பெரிதாக கருத்தில் எடுக்காதது போன்றே காட்டிக்கொண்டது. பட்டம் கூட அங்கு பிறக்கவில்லை என்றே கூறிக்கொண்டிருந்தது.

கடந்த ஆண்டின் ஆரம்பப் பகுதியில் தமது முதல் விமானத் தாக்குதலை மேற்கொண்ட புலிகள், இது வரை ஏழு தடவைகள் வெற்றிகரமாக தாக்குதல்களை மேற்கொண்டு பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளனர். இந்தியா 2005இல் இலகுரக விமானங்களை கண்காணிப்பதற்கான ராடர்களை சிறிலங்கா அரசிற்கு வளங்கியிருந்தது. புலிகள் கட்டுநாயக்கா விமானநிலையத்தை தாக்கியதைத் தொடர்ந்து, விமானத் தாக்குதல்களை கவனிப்பதற்கான கூடுதல் ஆலோசனைகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கத் தொடங்கியது.

அதன் பின்னரும் விடுதலைப்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டு பாதுகாப்பாக திரும்பியுள்ளனர். இந்த நிலையில்தான் தற்போதைய இராணுவ தலைமையகத்தின் மீதான தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முன்னைய தாக்குதலுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடு தற்போதைய தாக்குதல் இலக்கே ராடர் நிலையமாக இருந்ததுதான்.

அநுராதபுர அதிர்ச்சித் தாக்குதல்களுக்கு பின்னர் விடுதலைப்புலிகள் மேற்கொண்டிருக்கும் பாரிய தாக்குதல் சம்பவம் இதுவாகும். எதிர்வரும் மாதங்களில் புலிகள் தமது இதுவரைகால நகர்வுகளில் மாற்றங்களை காட்டலாம். இது சிறிலங்கா இராணுவமும் அறியாத ஒன்றல்ல ஆனால் அவ்வாறான மாற்றங்கள் எவ்வாறு அமையப்போகின்றது என்பதில்தான்; தற்போது கொழும்பு பதற்றமடைந்துள்ளது. புலிகளின் குகைக்குள் அகப்பட்டது போன்றதொரு போர்ப் பொறிக்குள்ளே இராணுவம் அகப்பட்டிருக்கிறது.

இந்த பொறியை சிங்களத்தின் படைக்கட்டமைப்பை சிதைக்கும் அழிவுப் பொறியாக மாற்றும் வகையில் புலிகள் தமது தந்திரோபாயத்தை வகுக்கக் கூடும். ஆனால் சிங்களத்திற்குள்ள பிரச்சனை புலிகள் முப்படைத் தாக்குதல்களை பிரயோகிப்பார்கள் என்பதுதான்.

அவ்வாறு புலிகள் முப்படைத் தாக்குதல்களை பயன்படுத்தினால் இராணுவம் பாரிய இழப்புகளை சந்திக்க வேண்டிவரும். இதனைக் கருத்தில் கொண்டுதான் புலிகளின் விமானத் தாக்குதல்களை மட்டுப்படுத்தும் வகையில் சிறிலங்காவிற்கு இந்தியா உதவிவருகிறது.

இந்தியா, மகிந்த நிர்வாகத்தினரால் புலிகளுக்கு எதிராக புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு ஆதரவளித்துவருவது வெள்ளிடைமலையாகியுள்ள நிலையில், இந்தியா தற்போதைய யுத்தத்தை தனக்கான ஒரு இறுதிச் சந்தர்ப்பமாக கருதுகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

சிறிலங்கா அரசைப் பொறுத்தவரையில், அது புலிகளுக்கு எதிரான தமது யுத்தத்தை ஒரு இறுதி யுத்தமாகவே கருதுகிறது. இதில் புலிகளை தோற்கடித்து பூண்டோடு அழித்தொழித்துவிட முடியுமென்று மகிந்த தலைமையிலான சிங்கள ஆளும் வர்க்கம் கருதுகிறது. இந்தியாவின் வெளித்தெரியும், வெளித்தெரியாத அனைத்து நிகழ்ச்சி நிரல்களினதும் அடிப்படை, விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்த வேண்டும் குறிப்பாக பிரபாகரன் தலைமையை இல்லாதொழிக்க வேண்டுமென்பதுதான்.

இந்தியாவின் கடந்தகால அணுகுமுறைகளின் போது இது தெளிவாக நிரூபணமான உண்மையும் கூட. அப்படியொரு நிகழ்ச்சிநிரலுடன்தான் தற்போது இந்தியா சிறிலங்கா அரசிற்கு முண்டு கொடுத்து வருகிறதா என்ற கேள்வி பலரிடம் எழலாம்.

தற்போதைய நிலைமைகளில் இந்த கேள்வி நியாயமான ஒன்றும் கூட. ஆரம்பத்தில் இந்தியா இலங்கையில் ஒரு இராணுவவலுச் சமநிலை நிலவுவதை ஆதரிப்பது போன்றே காட்டிக்கொண்டது. அதே வேளை தனது அண்டைய நாடுகளில் ஒரு முரண் தணிப்பு நிலைமை நிலவுவது தனது பிராந்திய நலனுக்கு உகந்தது என்ற அடிப்படையில் தனது ஆதரவு நிலைமையை வெளிப்படுத்தி வந்தது.

இவ்வாறானதொரு நிலையில் இந்தியா தன்னை காட்டிக் கொண்ட போதும், மகிந்த நிர்வாகம் இந்தியாவின் மேற்படி எதிர்பார்ப்புகளை சீர்குலைக்கும் வகையில் யுத்தவாத அரசியலை மீள் ஒழுங்கமைப்பற்கு கொண்டுவந்தபோது , இந்தியா அதனை கட்டுப்படுத்த முயலவில்லை. மாறாக இது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்ற தோரணையில் வெறும் அவதானிப்பாளராகவே தன்னைக் காட்டிக் கொள்ள முற்பட்டது. ஆனால் அதே இந்தியா விடுதலைப்புலிகளின் முன்னோக்கிய நகர்வுகளின் போதெல்லாம் அது குறித்து சிங்களத்தை எச்சரிக்கும் ஆலோசனைகளை வழங்கும் பாத்திரத்தை ஆற்றத் தயங்கவில்லை.

இந்த பின்புலத்தில்தான் விடுதலைப்புலிகளின் விமானப்படை கட்டமைப்பை சீர் குலைக்கும் முயற்சியில் இந்தியா தீவிரம் காட்டிவருகிறது. ஏலவே புலிகளின் கடல்வழி விநியோகங்களை கட்டுப்படுத்தும் சிங்களத்தின் முயற்சிகளுக்கு போதுமான ஒத்துழைப்புகளை வழங்கியது. தற்போது விமானப்படையை இலக்கு வைத்து சிங்களத்தை வழிநடத்த இந்தியா முற்படுகிறது.

புலிகளின் கடற்படை மற்றும் விமானப்படை வளர்ச்சியை அழித்தொழிக்க வேண்டுமென்ற இரகசிய நிகழ்சி நிரலொன்றை இந்தியா நீண்டகாலமாகவே கைக்கொண்டிருக்கிறது என்பதையும் இந்த இடத்தில் குறித்துக் கொள்வோம்.

கடந்த 2006இல் மகிந்த நிர்வாகத்தால் யுத்தம் புதுப்பிக்கப்பட்டபோது அது ஒரு உள்நாட்டு விவகாரம் என்றவாறான கருத்துக்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்த இந்தியா, கிழக்கின் இராணுவ வலுவில் ஏற்பட்ட மாற்றங்கள், வடபகுதியில் சிங்களத்தின் சில தூர வெற்றிகள் எல்லாவற்றையும் கொண்டு இதனை தனக்கான ஒரு சந்தர்ப்பமாக கைக்கொள்ள முற்படுவது போல் தெரிகிறது. இந்தியாவிற்கு ஏலவே புலிகள் விடயத்தில் தவறான கணிப்புக்களை மேற்கொண்டு தோல்வியடைந்த அனுபவம் உண்டு. தற்போது இந்தியா என்னவகையான மதிப்பீட்டினைக் கொண்டிருக்கிறது என்பது நமக்கு தெரியாவிட்டாலும், களநிலைமைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இந்தியா முற்படுகிறது என்பது மட்டும் தெளிவாகவே தெரிகிறது. ஆனால் இதில் இந்தியாவிற்கு ஒரு சிக்கலுமுண்டு.

விரைவில் ஒரு தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையிலுள்ள மன்மோகன் அரசு தமது ஆதரவுத்தளங்களில் ஒன்றான தமிழகத்தை இது விடயத்தில் சமநிலைப்படுத்த வேண்டிய பொறுப்பை தாண்டிச் செல்லமுடியாதுள்ளது.

எனவே ஒரு விதமான சமநிலைப்படுத்தும் தந்திரோபாயத்தையே இந்தியா இலங்கை விடயத்தில் கைக்கொண்டு வந்தது. எனினும் தற்போதைய சம்பவம் இந்தியாவின் சமநிலைப்படுத்தும் தந்திரோபாயத்தில் சில நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடும். தொடர்ந்து தமிழகம் எவ்வாறு இது விடயத்தில் எதிர்வினையாற்றப் போகிறது என்று பார்ப்போம்.

நன்றி -
தாரகா
தினக்குரல்

Friday, September 12, 2008

உண்மையில் புதுடில்லி தூங்குகின்றதா? அல்லது பாசாங்கு பண்ணுகின்றதா?

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறுகின்றமை போல வவுனியாவில் பாதுகாப்புப் படையினரின் தலைமையகம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல், இலங்கை விவகாரத்தில் புதுடில்லித் தரப்பின் இரட்டை வேடத்தை குட்டை ஒரேயடியாக அம்பலப்படுத்திவிட்டது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் இலங்கை அரசுப் படைகளுக்கு இந்தியா வெறும் ஆயுதத் தளபாட மற்றும் தகவல் வசதிகளை மட்டும் வழங்கி உதவவில்லை, நேரடியாக ஆளணி உதவிகளையும் வழங்குகின்றது என்ற விடயத்தை அத்தாக்குதலில் இந்திய விமானப்படையின் சார்ஜன்ட் தரத் தொழில்நுட்பவியலாளர்கள் இருவர் காயமடைந்தமை நிரூபித்துவிட்டது.
ஏற்கனவே, ஆழ்கடலில் விடுதலைப் புலிகளின் கப்பல் நகர்வுகள் பற்றிய தகவல்களை மிகத் துல்லியமாக இலங்கைக்கு வழங்கி, புலிகளின் கப்பல்களைத் தாக்கி அழிப்பதற்கு இலங்கைக் கடற்படைக்குப் பெரிதும் உதவி வந்த இந்தியா, வான் பரப்பிலும் புலிகளின் விமானப் பறப்புகள் பற்றிய தகவல்களை இலங்கைத் தரப்புக்குக் கனகச்சிதமாக வழங்கி உதவுவதில் அளப்பரிய பங்குபணி ஆற்றி வருகின்றது என்பது இப்போது தெளிவாகியிருக்கின்றது.
இத்தகைய பணியில் இந்தியாவின் சுமார் 250 தொழில்நுட்பவியலாளர்கள் இலங்கைப் பாதுகாப்புத் தரப்புடன் சேர்ந்து இயங்குகின்றார்கள் என்று சில செய்தி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டாலும் கூட, இந்த எண்ணிக்கை நூறுக்கும் சற்றுக் குறைவு என்கின்றன வேறு தகவல்கள்.
இந்தியா வழங்கிய ராடர்களைப் பராமரிப்பதற்கு அவ்வப்போது ஒருசில தொழில்நுட்பவியலாளர்கள் இந்தியாவிலிருந்து வந்து போவதுடன் இந்தியாவின் பங்குபற்றுதல் இதில் முடிந்து விடுகிறது, அதற்கு அப்பால் எதுவும் இல்லை என்று இந்தியத் தரப்பில் சில சமாதானங்கள் இப்போது கூறப்பட்டாலும், இவ்விடயத்தில் இந்தியாவின் ஆழமான பங்களிப்பை வெறும் "ராடர் பராமரிப்புடன்' அடங்கி விட்டதாகக் கருதிவிட முடியாது என்பதுதான் உள்வீட்டுக் கணிப்பாகும்.
சரி. இப்படி நேரடியாக இங்கு விடயங்களில் ஈடுபடும் இந்தியர்களின் எண்ணிக்கை எப்படியாயினும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் இத்தகைய தந்திரோபாய உதவிகளைக் கொழும்புக்கு வழங்குவதில் புதுடில்லிக்கு என்ன நியாயம் காரணம் உண்டு என்பதே ஈழத் தமிழர்கள் தரப்பில் எழுப்பப்படும் ஒரே கேள்வியாகும்.
"இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இராணுவத் தீர்வு சாத்தியமேயல்ல, பேச்சு மூலமான அமைதித் தீர்வு காண்பதே ஒரே வழி. அதைச் செய்யுங்கள்!' என்று கொழும்பைப் பார்த்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிலிருந்து கொழும்புக்கான இந்தியத் தூதுவர் வரை, இந்தியத் தரப்பின் ஒவ்வொரு அதிகார பீடமும் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றன.
அந்தக் கருத்து உண்மையானது. யதார்த்தமானது. அதில் தவறு இல்லை.
ஆனாலும் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை செவிமடுக்காமல்
அல்லது உதாசீனப்படுத்தி, புறந்தள்ளி, நிராகரித்து விட்டு
தன்பாட்டில், தமிழர் தாயகம் மீது கொடூர யுத்தத்தைத் திணித்து, போர் வெறி சந்நதம் கொண்டு, அட்டகாசம் பண்ணுகின்றது கொழும்பு.
கடலில் புலிகளின் கப்பல்களின் நகர்வுகள் பற்றிய உளவுத் தகவல்களில் இருந்து வான் புலிகளின் பறப்புகள் பற்றிய முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வரையான சகல விடயங்களையும் நேரடியாகத் தனது ஆளணிகளை வைத்து இலங்கைப் படைகளுக்கு வழங்கும் அளவுக்கு இந்த யுத்தத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு, அதன் அரசியல் தலைமை கூறுவதுபோல இந்த யுத்த நடவடிக்கைத் திட்டத்தைக் கைவிட்டு, தீர்வுக்கு சாத்தியமான ஒரே வழியான பேச்சு முயற்சிக்கு இலங்கை அரசுத் தலைமையைத் திருப்ப முடியாமல் இருக்கின்றது என்ற நிலைமை நம்பமுடியாததாக உள்ளது.
ஒன்றில் இவ்வளவு உதவிகளையும் கொழும்புக்குச் செய்தும் கூட, அதனடிப்படையில் கூட, கொழும்பை நல்வழிப்படுத்த முடியாத அளவுக்கு, இந்தப் பிராந்திய வல்லாதிக்க சக்தியான இந்தியாவின் இராஜதந்திரம் தோற்றுப்போய்விட்டது.
அல்லது வெளியில் அமைதித் தீர்வே ஒரேவழி என்ற வாய்ப்பேச்சை, ஒரு "பம்மாத்து' நடிப்பாக புதுடில்லி வெளிப்படுத்திக்கொண்டு, மறுபுறத்தில் கொழும்போடு சேர்ந்து புலிகளை அழித்தொழிக்கும் ஓர் இரகசியத் திட்டச் செயற்பாட்டை இலங்கையுடன் சேர்ந்து புதுடில்லி முண்டுகொடுத்து முன்னெடுப்பதாக இருக்கவேண்டும்.
இந்த இரண்டில் ஒன்று அரங்கேறுவதாகவே ஈழத் தமிழர்கள் தரப்புக் கருத வேண்டிய நிலைமை உள்ளது.
இராணுவ ரீதியில் இந்தளவுக்கு கொழும்பு அரசுக்கு உதவி செய்து, அதில் நேரடியாகச் சம்பந்தப்படும் புதுடில்லி, இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதிப்பேச்சு மூலமான தீர்வே ஒரே மார்க்கம் என்று வெளிப்படையாகக் கூறிக்கொண்டு, அந்தச் செயன்முறைப் பாதைக்குக் கொழும்பைத் திருப்ப முடியாமல் கையாலாகாத்தனத்தோடு இருப்பதுபோல் காட்டிக் கொள்வதை நோக்கும்போது அப்படித்தான் சந்தேகம் தோன்றுகின்றது.
இலங்கை விடயத்தில் புதுடில்லி தூங்குகின்றதா? அல்லது தூங்குவது போலப் பாசாங்கு பண்ணுகின்றதா? புரியவில்லை.

thanks´- Uthayan

Thursday, September 11, 2008

செப்டெம்பர் 11 அனர்த்தத்தின் ஏழாம் ஆண்டு நினைவு தினம்

இன்று செப்டெம்பர் 11 ஆம் திகதி. "11/ 09' என்று உலகெங்கும் குறிப்பிடப்படும் முக்கிய அனர்த்த நாள்.
உலகப் பெரும் வல்லரசான அமெரிக்காவின் இதயம் என்று கருதப்படும் நியூயோர்க்கின் நடு மையத்தில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டைமாடிக் கோபுரங்கள் அச்சமயம் கடத்தப்பட்டிருந்த இரு விமானங்களால் மோதித் தகர்க்கப்பட்டதில் மூவாயிரத்துக்கும் அதிகமான அப்பாவிகளின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. அத்தினத்தின் ஏழாம் ஆண்டுப் பூர்த்தியில் நாம் இன்று நிற்கின்றோம்.
சர்வதேச சமாதானத்தை நிலைநாட்டும் தனியுரிமை தனக்கே உரியது என்று கருதி அதனைத் தன்பாட்டில் சுவீகரித்து, "சர்வதேச பொலிஸ்காரனாக'த் தன்னை உலகின் முன் நிறுத்திக்கொண்ட அமெரிக்காவின் சுகந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு மையமான "பென்டகன்' மீதும் கடத்தல் விமானத்தினால் தாக்குதல் நடத்திப் பேரழிவை ஏற்படுத்திய நாளின் நினைவுதினமும் இன்றுதான்.
இந்த அனர்த்தங்கள் நிகழ்ந்த பின்னர் இந்த ஏழு ஆண்டுகளில் பல விடயங்கள் கட்டவிழ்ந்துவிட்டன.
இந்தத் தாக்குதல்களை அடுத்து "பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச போர்' என்ற பெயரில் "பிரபஞ்ச யுத்தப் பிரகடனம்' ஒன்றையும் செய்து, உலக நாடுகளின் மீது தனது வல்லாதிக்கத்தைத் திணித்து, பெரும் களேபரங்களை ஏற்படுத்திய அமெரிக்காவின் புஷ் நிர்வாகம், தனது ஏழாண்டு அதிகாரத் திமிர்ப்போக்கின் விளைவாக உலகெங்கும் போர் அனர்த்தங்களை உருவாக்கி, தீர்வு ஏதும் காணாமல் அதிகாரத்தை விட்டு வெளியேறப் போகின்றது.
"பயங்கரவாதம்' நிலைகொண்ட பகுதிகள் என்று தான் குறிவைத்த தேசங்களுக்கு எல்லாம் "லேபிள்' ஒட்டி, அவற்றின் மீது பாய்ச்சல் நடத்திய அமெரிக்கா, அந்த நாடுகளில் தனது துருப்புக்களைத் தொடர்ந்து நிலை கொள்ளவும் வைக்கமுடியாமல், வாபஸ் பெறவும் முடியாமல் இரண்டும் கெட்டான் நிலையில் இன்று அந்தரிக்கின்றமை வெளிப்படையானது.
உலக நாடுகள் பலவற்றின் மீதும் தமது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்துப் பெரும் அட்டகாசம் புரிந்த புஷ் நிர்வாகம், வரலாற்றில் பெருமளவில் மக்களால் வெறுக்கப்பட்ட தோல்விகண்ட அமெரிக்க ஜனாதிபதியின் ஆட்சி என்ற அவப் பெயரோடு வெளியேறுகின்றது.
செப்டெம்பர் 11 தாக்குதல்களை அடுத்து, சந்நதம் கொண்டு ஆடிய இந்த ஆட்சி, "பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேசப் போர்' என்ற தனது திட்டத்தின் கீழ் கடைசியாக என்னத்தைச் சாதித்துவிட்டுப் போகிறது? பெரும் சர்வதேசக் குழப்பங்களை ஏற்படுத்தியமையைத் தவிர.
செப்டெம்பர் 11 தாக்குதல்களை நடத்திய "அல்குவைதா' தீவிரவாதிகளின் தொட்டில் என்று தெரிவித்து, ஆப்கான் மீது பெரும் யுத்தத்தைத் தொடுத்த அமெரிக்கா இன்று அந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்தியதா? இரத்தக்களரியையும் கொடூர யுத்தத்தையும் பேரழிவு நாசங்களையும் தொடர்ந்து ஏற்படுத்தும் ஒரு சூழலை அங்கு உருவாக்கியமையைத் தவிர, வேறெதையும் அமெரிக்க நிர்வாகத்தால் அங்கு சாதித்துக்காட்ட முடியவில்லை.
அதன்பின்னர், மனித குலத்துக்கு எதிரான பேரழிவு ஆயுதங்களை ஈராக்கின் சதாமின் நிர்வாகம் தயார் செய்து வைத்திருப்பதான அபாண்டக் குற்றச்சாட்டு ஒன்றைத் தன்பாட்டில் சிருஷ்டித்து, சுமத்தியபடி ஐ.நா.வின் அனுமதியைக் கூடக் கோராமல் சர்வதேசக் கருத்தை உதாசீனம் செய்தபடி தன்னோடு அணி சேர்ந்த நாடுகளையும் கூட்டுச் சேர்த்துக்கொண்டு, ஈராக் மீது ஆக்கிரமிப்பை மேற்கொண்டது புஷ் ஆட்சி.
இன்று அங்கும் அதே களேபர கலவர நிலைதான். சட்டம் ஒழுங்கு குழம்பிவிட்டது. தினசரி சாவு, சண்டை, தாக்குதல், மனிதப் பேரழிவு, பெரு நாசம் இப்படி கோரத் தாண்டவத்தில் ஈராக்கும் சிக்கித் திண்டாடுகிறது.
பயங்கரவாதத்தை அடக்கப் போவதாகக் கூறி கிளர்ந்தெழுந்த புஷ்ஷின் ஆட்சி, "சும்மா கிடந்த இங்கை ஊதிக் கெடுத்த ஆண்டி போல' சர்வதேச ரீதியில் அமெரிக்க எதிர்ப்பு சக்திகளை ஊதிப் பெருப்பித்து, தூண்டிவிட்டு, அதனை விஸ்வரூபம் எடுக்கவைத்த பின்னர் அதனைக் கட்டுப்படுத்த எதுவும் செய்யமுடியாமல் கைவிட்டு, வெறும் கையோடு ஆட்சியை விட்டு வெளியேறுகின்றது.
சர்வதேச ரீதியில் புஷ்ஷின் ஆட்சி புரிந்த பெரும் தவறு என்ற குற்றத்திலிருந்து அமெரிக்காவை மீட்கும் பொறுப்பு, புஷ்ஷின் இடத்திற்குப் புதிதாக வரப்போகும் ஒபாமாவின் அல்லது கெய்னின் மீது வீழ்ந்திருக்கிறது.
ஒடுக்கப்பட்ட இனங்களின், அடக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சியையும், எழுச்சியையும் சரியாக அடையாளம் காணாமல், வெறுமனே எடுத்த எடுப்பில் அதற்கு "பயங்கரவாத' சாயம் பூசி, தனது வல்லாதிக்கத்தால் அதனை மேலும் அடக்க முற்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியம், அதனால் இன்று உலகின் முன்னால் தலைகுனிந்து நிற்கின்றது.
செப்டெம்பர் 11 தாக்குதலின் பின்னர், உலக நிலைமையை தவறாகக் கையாண்டதன் விளைவாக அமெரிக்காவும், அமெரிக்க சமூகமும் இன்று "சர்வதேச குழப்பங்களுக்கு வித்திட்ட தரப்புகள்' என்ற அவப்பெயரைச் சுமந்து பெயர் கெட்டு நிற்கின்றன.
சர்வதேச ரீதியில் இடம்பெறும் அடக்குமுறைகள் குறித்தும், அடக்கப்பட்ட மக்களின் மனக் கிளர்ச்சி மற்றும் எழுச்சி குறித்தும் அமெரிக்க ஆட்சி அதிகாரம் தனது வல்லாதிக்கச் சிந்தனையிலிருந்து வெளியே வந்து தாராளப் போக்கோடு சிந்திக்காதவரை அந்த ஏகாதிபத்தியம் திருந்துவதற்கு இடமில்லை.

thanks:- Uthayan

Wednesday, September 10, 2008

மனித நேயப் பணிகளுக்கும் ஆப்பு வைக்கும் அராஜகம்!

"பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த மாதிரி' வன்னி மக்களைத் துவைத்தெடுக்கத் தயாராகிவிட்டது போலும் மஹிந்த அரசு.
வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வசிக்கும மக்களை அங்கிருந்து உடன் வெளியேறி விடவேண்டும் என்று அறிவித்ததன் மூலம் அண்மையில் அவர்களுக்கு "அச்சுறுத்தல் வைத்தியம்' செய்ய முயன்றது அரசுத் தரப்பு.
அந்த எத்தனம் அதிகம் எடுபடவில்லை. அந்த மக்கள் தங்களது தாயக மண்ணை விட்டு வெளியேற முன்வரவில்லை. அரசு எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு வெளியேறவில்லை.
இதனால் ஆட்சிப்பீடம் ஆத்திரமடைந்திருக்கின்றது போலும். அதனால்தான் "அச்சுறுத்தல் வைத்தியம்' சரிவராத நிலையில் அடுத்து "அதிர்ச்சி வைத்தியம்' என்ற காயை அது கையில் எடுத்திருக்கின்றது.
வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து சகல உள்நாட்டு, வெளிநாட்டுத் தொண்டர் அமைப்புகளையும், அவற்றின் பிரதிநிதிகளையும் உடன் வெளியேறி விடுமாறு அரசு விடுத்திருக்கும் அறிவிப்பே இந்த "அதிர்ச்சி வைத்திய' முயற்சிதான்.
தமிழரின் வன்னித் தாயகம் மீது கொழும்பு அரசு தொடுத்திருக்கும் கொடூரப் போர் காரணமாக அங்கு மிகப் பாரிய மனிதப் பேரவலம் நிகழ்ந்திருக்கின்றது. சுமார் இரண்டு லட்சம் மக்கள் தத்தமது வீடு வாசல்கள், நிலபுலன்கள், சொத்துகள், உடைமைகள், கால்நடைகள் போன்றவற்றை இழந்து கையில் அகப்பட்ட பொருட்களோடு ஏதிலிகளாக அலையும் துர்ப்பாக்கியம் நேர்ந்திருக்கிறது. மழைக்கும், வெயிலுக்கும் ஒதுங்க இடமின்றி, காடுகளிலும், மர நிழல்களிலும், தற்காலிகக் கொட்டகைகளிலும் படுத்துறங்கும் பேரவலம் அவர்களுக்கு நேர்ந்திருக்கின்றது.
தொடர்ந்து இலங்கை அரசு மூர்க்கமாக முன்னெடுத்து வரும் படை நடவடிக்கைகள் காரணமாக மேலும் புதிதாக ஏதிலிகள் பட்டியலில் ஆயிரக்கணக்கானோர் தினசரி சேர்ந்துவரும் நிலையிலேயே
அதனால் நேர்ந்துள்ள மனிதப் பேரவல நிலையை ஓரளவேனும் சமாளித்து, அந்த அகதிகளின் அவசர அவசிய தேவைகளை விரைந்து கவனிக்கும் மனிதநேயப் பணியாளர்களின் சேவைக்கும் நிரந்தர வேட்டு வைத்திருக்கின்றது கொழும்பு அதிகார வர்க்கம்.
வன்னியில் அல்லலுறும் மக்களுக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற தொண்டுப் பணியாளர்களின் உதவி உச்சமாகத் தேவைப்படும் சமயத்திலேயே அச் சேவையை முற்றாகத் தடைசெய்யும் கொடூர செயற்பாட்டை முன்னெடுத்திருக்கின்றது கொழும்பு.
யுத்தத்தின் இடையில் சிக்கும் மக்களுக்கு உரிய மனிதாபிமான உதவிகள் கிட்டுவதை உறுதிப்படுத்துவது யுத்தத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகளின் பொறுப்பாகும். அந்த மனிதாபிமான உதவிகள் அந்த மக்களுக்குக் கிடைக்க விடாமல் தடுப்பது அடிப்படை மனித உரிமைகளையும் சர்வதேச யுத்த விதிகளையும் மீறும் செயற்பாடாகும்.
அதுவும், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஒன்பதாவது அமர்வு நேற்றுமுன்தினம் ஆரம்பமாகியிருக்கும் சமயத்தில், இவ்வாறு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான முக்கிய மனிதாபிமானப் பணியைத் தடுத்து நிறுத்தும் அத்துமீறலை அப்பட்டமாகவும் வெளிப்படையாகவும் கொழும்பு நிர்வாகம் முன்னெடுத்திருக்கின்றமை அதிர்ச்சி தருவதாகும்.
ஒருவகையில் பார்த்தால் இந்த "செருக்குப் போக்கு' ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் செயற்பாட்டிற்கே சவால்விடும் நடவடிக்கை என்பதும் கவனிக்கத்தக்கது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை முற்றாகக் கைப்பற்றும் போர்வெறித் தீவிரத்தில் இருக்கும் கொழும்பு, அந்த இலக்கை அடைவதற்காகத் தனது படை நடவடிக்கைகளை மூர்க்கத்தனமாக ஆரம்பித்திருக்கின்றது. ஷெல், பீரங்கி, மோட்டார் தாக்குதல்களும், விமானக்குண்டு வீச்சுகளும் கண்மூடித்தனமாக நடக்கின்றன. குடிமனைகள் இலக்கு வைக்கப்படுகின்றன. அரசுப் படைகளின் யுத்த சந்நதம் இன்னும் தீவிரமடையும்போது இந்தக் கண்மூடித்தனமான தாக்குதல்கள் கேட்டுக் கேள்வியற்ற அளவில் பரந்து விசாலமாக மூர்க்கத்தனமாக முன்னெடுக்கப்படலாம் என்ற பீதி தமிழர்கள் தரப்பில் உண்டு.
இந்தப் பின்புலத்திலேயே
அப்பிரதேசங்களில் இருக்கும் உள்ளூர், வெளிநாட்டுத் தொண்டர் அமைப்புகளையும் அவர்களது பிரதிநிதிகளையும் அத்தரப்பினருக்கு உரிய பாதுகாப்பைத் தங்களால் உறுதிப்படுத்த முடியாது என்று கையை விரித்து, அதன் காரணமாக அத்தரப்புகளை அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறுமாறு அரசுத் தரப்பு உத்தரவிட்டிருக்கின்றது.
சர்வதேசத்துடன் நம்பகரமான தொடர்பாடல்கள் மற்றும் தகவல் பரிமாற்றங்களைக் கொண்ட தொண்டர் நிறுவனங்களை வன்னிப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றுவது, யுத்தத்தின் பெயரால் அப்பிரதேசம் மீது கட்டவிழப்போகும் கண்மூடித்தனமான இலக்கற்ற பேரழிவு நாசத் தாக்குதல்கள் பற்றிய விவரங்கள் வெளிப்பட இடமளிக்காமல் மூடிமறைக்கும் முஸ்தீபாகவும் இருக்கலாம் என்ற அச்சம் தமிழர்களுக்கு உண்டு.
வன்னியில் உள்ள அப்பாவி மக்களின் நலனிலும் பாதுகாப்பிலும் கூடத் தனக்குத் தார்மீகப் பொறுப்பும், கடமையும் உண்டு என சர்வதேசம் கருதுமானால், அதை நிறைவு செய்வதற்கான முக்கிய மான தருணம் இப்போது அதற்கு வந்துவிட்டது என்பதே நிலைமை.
தற்சமயம் வன்னியைப் பேரழிவுக்குள்ளாக்கி, ரணகளமாக்கத் திட்டமிட்டு செயற்படும் கொழும்பை, அந்தக் கொடூரத்தை தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்க விடாமல் தடுப்பதன்மூலம் தனது கடமையை சரிவர ஆற்ற சர்வதேசம் முன்வரவேண்டும்.

thanks:-Uthayan

Monday, September 8, 2008

புதைகுழியாகும் பூநகரிப் பாதை

வன்னி மக்களின் உள்ளக இடப்பெயர்விற்கு மத்தியில் இராணுவத்தின் பெருமெடுப்பிலான படை நகர்வுகளும் தொடர்கின்றன.

கிளிநொச்சி, முல்லைத்தீவில் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைககள் பூர்வீக வாழ்விடங்களிலிருந்து இலட்சக்கணக்கான தமிழ் மக்களை இடம்பெயர வைத்துள்ளன.
துண்டுப் பிரசுரங்களுக்கூடாக வவுனியாவை நோக்கி நகருமாறு அம்மக்களுக்கு அன்பான வேண்டுகோளும் விடுக்கப்படுகிறது. ஆயினும் அரசாங்கத்தின் பிரசுரப் பொறிக்குள் அகப்படாமல், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் நோக்கியே மக்கள் நகர்கின்றனர்.
எறிகணைகளால் அடித்துப் பணிய வைக்கும் தாக்குதல்களால் மக்கள் சோர்வடையவில்லை.
பொருளாதாரத் தடை என்கிற பேரினவாத மேலாண்மை அழுத்தங்களும் இடம்பெயர்ந்த மக்களிடம் நுண்ணிய அசைவைக் கூட ஏற்படுத்த முடியாமல் போயுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8.10 மணியளவில் கிளிநொச்சி நகரிற்கு தென் மேற்குத் திசையிலுள்ள யூனியன் குளம் மற்றும் ஒட்டுப்புலம் நோக்கி அரச படைகளால் எறிகணைகள் ஏவப்பட்டன. இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிமாகத் தங்கியிருந்த இடைத்தங்கல் குடியிருப்புகளுக்கு அண்மையில் இவ்வெறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.
இதேவேளை 30.08.2008 ஆம் திகதி சனிக்கிழமையன்று கிளிநொச்சியிலிருந்து 7கி.மீ தூரத்திலுள்ள புது முறிப்பு கிராமம் மீதும் இராணுவத்தினரால் நீண்ட தூர எறிகணைகள் ஏவப்பட்டன. இந்த ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதலில் ஒரு மாதக் குழந்தை மற்றும் இரண்டு வயது குழந்தை உட்பட ஐவர் மிகப் பரிதாபகரமாக கொல்லப்பட்டனர்.
உடல் சிதறி உயிரிழந்த இம் மழலைகளின் உயிரற்ற வெற்று உடல்களை ஐ.நா சபையின் சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் தமிழ் நெற் இணையத்தளத்தில் பார்வையிட்டிருப்பார்கள்.
தமிழ் மக்களின் மனங்களை வெல்ல வேண்டுமெனச் சிங்கள தேசத்திற்கு அரசியல் பாடம் நடாத்திய இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனும் பார்த்திருப்பார்.
வன்னியில் ஜனநாயகத்தை நிலை நாட்டத் துடித்துக் கொண்டிருக்கும் பேரினவாதத்திற்கு ஆலோசனை வழங்கும் துணைப்படைத் தலைவர்களும் சொந்த மக்கள் சாதல் கண்டு சிந்தை இரங்காமல் நாணிக் கோணியிருப்பர்.படை நகர்வுகள் எவ்வாறு இருந்தாலும், தமிழ் மக்கள் மரங்களின் கீழ் ஏதிலியாக வாழ்ந்தாலும், உலக மகா ஜனநாயகத்தை காப்பாற்ற, தேர்தலை நடத்துங்களென்பதே அமெரிக்க, இந்திய வேண்டுதல்.

வடக்கை முழுமையாக கைப்பற்றுவதற்கு ஒரு வருடம் தேவையெனக் கூறியவாறு, யாழ் குடாவில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடாத்தப்போவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
யுத்தமும், தேர்தலும் சமாந்தரமாகப் பயணிக்கும் உத்தியை தற்போது பிரயோகிக்கும் இன்றைய அரசாங்கம் வல்லரசுகளின் மீது மனித உரிமை சங்கங்கள் செலுத்தும் அழுத்தங்களை திசை திருப்புமென எடை போடுகிறது.
தேர்தல் திருவிழாக்கள் தொடர்ச்சியாக நடைபெற்றால் இலங்கையில் ஜனநாயக விழுமியங்கள் இன்னமும் அழியவில்லையென்று உலகம் நம்புமென சிங்கள தேசம் சிந்திக்கின்றது. கடன் பெறுவதற்கு பயன்படும் தேர்தல்கள், மக்களின் அவலங்களை மூடி மறைக்கவும் உபயோகிக்கப்படுகிறதென கூறிக்கொள்ளலாம்.விடுதலைப் போராட்டமும் இன அழிப்பு நிலையும், இருபெரும் முரண் அடையாளங்களாக இலங்கையில் இனங்காணப்படுகின்றன.
இவை தவிர குடாநாட்டிற்குரிய இராணுவ விநியோகப் பாதையை, அது தரை வழிப்பாதையாக இருந்தாலென்ன அல்லது கடல்வழிப்பாதையாக இருந்தாலென்ன தடையரண்கள் அற்ற நிலையை பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு உண்டு.
ஏற்கனவே திருமலை கடற்படைத் தளம் மீதான வான் புலிகளின் தாக்குதல் கடல் பாதையை கேள்விக்குறியாக்கியுள்ளது.மிஞ்சியுள்ள ஒற்றைப் பாதையாக பூநகரி சங்குப்பிட்டியை தெரிவு செய்வது தவிர்க்க முடியாத போர் உத்தியாக அரசாங்கத்துக்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளது.
ஆகவே, வடக்கு மக்களை விடுவிப்பதற்காக என்றுகூறி, இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் இடம்பெயர வைக்கப்பட்டுள்ளனர்.இடப்பெயர்விற்குள்ளான தமிழ் மக்களின் அடிப்படை சுகாதார வசதிகளற்ற இந்த அவல நிலை, அதனை உருவாக்கியோர் சர்வதேச போர் குற்றம் சுமத்தப்படும் ஏது நிலையினை உருவாக்கும்.

அதேவேளை விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவரின் சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடிக்கச் சுத்தியலை தூக்கப்போவதாக சொன்னவர்களும் 12 கி.மீ தூரத்தில் நிற்பதாக அக்கராயன் கனவில் மிதந்தவர்களும், நாச்சிக்குடா இழப்புக்களை மூடி மறைக்க முடியாமல் திணறுகின்றனர்.

விடுதலைப் புலிகள் வெளியிட்ட அறிக்கையில் கடந்த திங்களன்று நிகழ்ந்த நாச்சிக்குடா முறியடிப்புச் சமரில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 51 பேர் படுகாயமடைந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அடுத்த செவ்வாயன்று நடைபெற்ற பாரிய சமரில் 30 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 50 பேர் காயமுற்றதாக தெரிவிக்கப்பட்டது.அக்கராயனிற்கும் வன்னேரிக்குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியிலேயே இத்தாக்குதல் நடைபெற்றது.

உருக்குலையாத இராணுவத்தின் 19 சடலங்கள் புதன்கிழமையன்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக (ஐ.சி.சி.ஆர்.சி.) ஓமந்தைக்கு அனுப்பப்பட்டன. வியாழனன்று மேலும் 11 சடலங்கள் ஐ.சி.ஆர்.சியிடம் கையளிக்கப்பட்டன.

அரச படைகள் மேற்கொண்ட இப்பூநகரி நோக்கிய நகர்வில் பல்குழல் எறிகணைகள், எம்.ஐ.24 ரக யுத்த உலங்கு வானூர்திகள், ஆட்டிலெறிகள், மிகையொலி குண்டு வீச்சு விமானங்கள் யாவும் பங்கு கொண்டது குறிப்பிடத்தக்கது. புலிகளின் தற்காப்பு நிலையானது முறியடிப்பு பரிமாணத்தை எட்டி ஊடறுக்கும் நிலைக்குரிய காலத்தையும் களத்தையும் நோக்கி அசைகிறது.
மாற்றீட்டுப் பாதையென்பது புதை குழிகள் நிறைந்த மரணப்பாதையென்பதை பூநகரி நகர்வில் தெரிய வரலாம்.

இதேவேளை, கிழக்கிலும் அதிர்வுகள் ஆரம்பமாகியுள்ளன. அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்ட எல்லைப் புறத்திலமைந்த உகந்தைக்கு அருகாமையிலுள்ள சன்னாசி மலையடியில், விடுதலைப் புலிகள் மேற்கொண்ட வழிமறிப்புத் தாக்குதலில் 4 அதிரடிப்படையினர் கொல்லப்பட்டு இருவர் காயமுற்றுள்ளனர்.

அங்கு கிளைமோர் தாக்குதல்கள் தினச் செய்தி ஆகிவிட்டன. வடக்கோடும் கிழக்கு வெளிக்கும் காலமும் இணைந்து வருவது போல் தெரிகிறது.
[நன்றி- சி.இதயச்சந்திரன் வீரகேசரி]

Friday, September 5, 2008

மேற்கு வன்னியில் இன்னொரு 'முகமாலை"

வன்னிப் பெருநிலப்பரப்பின் ஊடாக குடாநாட்டுக்கு தரைவழிப்பாதையை திறப்பதற்கு சிறிலங்கா படைகள் மேற்கொண்ட பெருமெடுப்பிலான 'ஜெயசிக்குறு" நடவடிக்கை மண்கவ்விய நிலையில் தற்போது வன்னிப்பிரதேசத்தின் மேற்கு கரையோரமாக ஏ-32 பாதை வழியாக - பூநகரி ஊடாக - குடாநாட்டுக்கு பாதை திறக்கும் ஒரு இமாலய முயற்சியில் சிறிலங்கா படைகள் மூழ்கிப்போயுள்ளன.

தமது இந்த முயற்சிக்கு எவ்வளவு விலையையும் கொடுக்க துணிந்துள்ள மகிந்த அரசுக்கு களநிலைமை ஒத்துழைக்கிறதா என்பதில்தான் தற்போது பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளன.

கிழக்கை மீட்டுவிட்டதாக கூக்குரலிட்டவாறு வடக்கில் 'ஜனநாயகத்தை" நாட்ட புறப்பட்ட அரசு படைகள் எத்தனையோ நடவடிக்கைகளை வன்னியில் மேற்கொண்ட போதும் அவற்றின் நிகழ்ச்சி நிரல்களை தீர்மானிப்பவர்கள் ஆரம்பம் முதலே விடுதலைப் புலிகளாகவே இருந்து வந்துள்ளார்கள்.

புலிகளை முடிப்பதற்கு நாள் குறித்தார்கள். பிரபாகரனை பிடிப்பதற்கு நாள் குறித்தார்கள். வன்னியை வளைத்துப்போடுவதற்கு நாள் குறித்தார்கள்.

ஆனால், இவை எல்லாமே எந்தக்கட்டத்தில் தற்போது உள்ளது என்று கடந்த முதலாம் திகதி நடைபெற்ற தாக்குதலின் பின்னர் அரசை கேட்டால் அதற்கான விடையும் புலிகளிடம்தான் உள்ளது.

வன்னிப் பெருநிலப்பரப்பை முற்றுமுழுதாக வல்வளைத்து வித்தியாசமான முற்றுகைக்குள் கொண்டுவரும் நோக்குடன் மன்னார் பகுதியூடாக பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொண்ட அரச படைகள், வன்னியின் மேற்குப் பிரதேசத்தை இரண்டு துண்டுகளாக தமக்குள் பங்கு போட்டுக்கொண்டன.

இதன்படி, அரச படைகளின் 57 ஆவது டிவிசன் அணிகள் வன்னியின் மேற்குப் பகுதியின் நடுப்பிரதேசங்களில் தாக்குதல் நடத்த, 58 ஆவது டிவிசன் படையணி வன்னியின் மேற்கு கடற்கரையோரமாக பூநகரி நோக்கிய ஏ-32 நெடும்பாதையில் முன்னேறிச்சென்றது.



இந்த இரண்டு அணிகளில் 58 ஆவது டிவிசன் அணி அடம்பனில் ஆரம்பித்து கரையோரப்பகுதியாக விடத்தல்தீவு, இலுப்பைக்கடவை, வெள்ளாங்குளம் வரை சென்று முழங்காவில் வரை சென்றது.

அதேவேளை, 57 ஆவது டிவிசன் அணிகள் மேற்கு பிரதேசத்தின் வயிற்றுப்பகுதியில் மடு, பாலம்பிட்டி, மூன்றுமுறிப்பு, பெரியமடு, நட்டாங்கண்டல், கல்விளான், துணுக்காய் சென்று மல்லாவி வரை சென்று அதன் ஒரு அணி அக்கராயனிலும் போய்நின்று கொண்டது.

இந்நிலையில், கைப்பற்றிய பிரதேசங்களை தக்கவைப்பதற்கு சிறிலங்காவின் தென்பகுதியிலிருந்த சகல படைகளையும் துடைத்து எடுத்துக்கொண்டு வந்து வன்னியின் மேற்கு பகுதியில் தூவிவிட்டுள்ள அரச படைகள், கடந்த முதலாம் திகதி பூநகரியை கைப்பற்றுவதற்காக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாச்சிக்குடாவை பிடிப்பதற்கு இருபெரும் திட்டங்களுடன் ஆயத்தமாகின.

அதாவது, முழங்காவில் வரை சென்ற 57 ஆவது டிவிசனுக்கும் துணுக்காய் பகுதியை வல்வளைப்பதற்காக முன்னரே அக்கராயன் வரை சென்ற 58 ஆவது டிவிசன் படையணிக்கும் கடந்த சில வாரங்களாக வவுனியா சென்ற இராணுவ தளபதி சரத் பொன்சேகா அளித்த விசேட திட்டம் இது.

அதாவது, 57, 58 ஆகிய டிவிசன் அணிகள் தாக்கவேண்டிய புலிகளின் முன்னணி காவலரண்கள் மேற்கில் கடற்கரையிலிருந்து நாச்சிக்குடா, முழங்காவில், நாகபடுவான், வன்னேரி, அக்கராயன் என்று ஏ-9 வீதியை நோக்கி கிழக்கு நோக்கி நீண்டிருந்தது.

புலிகளின் இந்த அரணை எப்படியாவது உடைப்பதன் மூலம் நாச்சிக்குடாவை கைப்பற்றுவது அல்லது நாச்சிக்குடாவை தக்கவைத்திருக்கும் புலிகளின் தொடர் அணியை இரண்டாக பிரிப்பது, அதனைத் தொடர்ந்து பூநகரியை தாக்கி பிடிப்பது என்பதுதான் இராணுவத்தின் திட்டம்.

இதுவரை இதற்காக நான்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் எதுவும் பலனளிக்காத நிலையில், தற்போது தெளிவான - விரிவான - திட்டமிடலுடன் தாக்குதல் வியூகம் வகுக்கப்பட்டது.

இதற்காக 58 ஆவது டிவிசனின் உயர்வலு கொண்ட கொமாண்டோ படையணிகளான சிறப்பு தாக்குதல் அணி - 1, சிறப்பு தாக்குதல் அணி - 2 ஆகியவை தாக்குதலுக்கு தயார்படுத்தப்பட்டன.



கடற்கரையிலிருந்து நாகபடுவான் வரையிலான பத்து கிலோமீற்றர் தூரம் கொண்ட புலிகளின் முன்னரங்கை எந்த இடத்திலாவது உடைத்து உட்புகுந்து கொள்ளும் இந்த அணிகள் அங்குள்ள புலிகளின் அணிகளை எப்படியாவது முற்றுகைக்குள் கொண்டுவந்து தாக்குவது என்றும் -

அந்தவேளையில், ஏனைய படையணிகள் முன்னேறி நாச்சிக்குடாவை கைப்பற்றுவது என்பதும்தான் படையினரின் முதற்கட்ட திட்டமாக இருந்தது.

இதற்காக முழங்காவில் மாதா கோவில் முன்பாக உள்ள படையினரின் காவலரண்களிலிருந்து தாக்குதலை ஆரம்பிப்பது என்று வகுக்கப்பட்ட திட்டத்தின்படி நடவடிக்கை ஆரம்பமானது.

மதியம் தாண்டி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமானது சமர். வான் வழியாக அரச படைகளின் கிபிர் மற்றும் எம்.ஐ.- 24 ஆகியவை தாக்குதல் ஆதரவை வழங்க, விசேட பயிற்சி பெற்ற கொமாண்டோ தாக்குதல் அணிகள் புலிகளின் முன்னரங் நிலைகள் மீது சரமாரியான தாக்குதல்களை தொடங்கின.

அப்போதுதான் புலிகளின் எதிர்ச்சமர் ஆரம்பித்தது. ஐந்தாவது தடவையும் புலிகள் தம்முடன் சரிக்கு சரி நின்று மோத மாட்டார்கள் என்றும் தாம் கைப்பற்றிய ஏனைய பிரதேசங்களில் போல இந்த காவலரணையும் புலிகள் பின்வாங்கி சென்றுவிடுவார்கள் என்ற மன உறுதியுடனும் அரச படைகள் கடும்சமர் புரிந்தன.

இரவில் தாக்குதலை ஆரம்பித்தால் வான்படையின் உதவி நேர்த்தியாக கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைவு என்பதால் பகலில் இந்த வலிந்த தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது.

மணிக்கணக்கில் நடைபெற்ற சண்டையில் புலிகளின் காவலரண்கள் இந்தா விழுந்து விடும் இந்தா விழுந்து விடும் என்ற நம்பிக்கை படையினருக்கு தொடர்ந்து இருந்து வந்தது. தாம் முன்னர் கைப்பற்றிய பிரதேச வெற்றிகள் அவர்களுக்கு இந்த நம்பிக்கையை கொடுத்திருந்தன. ஆனால், நேரம் செல்ல செல்ல அரச படையினரின் சடலங்கள்தான் கொத்துக் கொத்தாக விழ ஆரம்பித்தன.

புலிகளின் சரமாரியான எதிர்த்தாக்குதல் படையினரை நிலைகுலைய வைத்தது. ஒரு கட்டத்துக்கு மேல் தமது திட்டத்தை கைவிடத்தீர்மானித்த படையினர் தமது சகாக்களின் உடலங்கள் புலிகளின் கைகளில் வீழ்ந்துவிடக்கூடாது என்று முடிவெடுத்தனர்.

58 ஆவது டிவிசன் படையணி தளபதி பிரிகேடியர் சவீந்திர டி சில்வாவின் நெறிப்படுத்தலுக்கமைய களமுனை தளபதிகள் தமது படையினரின் உடலங்கள் எக்காரணம் கொண்டும் புலிகளின் கைகளில் சிக்கவிடக்கூடாது என்று உத்தரவிட்டனர்.

அன்று இரவு முழுவதும் படையினரின் உடலங்களை எப்படியாவது தமது பகுதிக்குள் எடுத்துவிடவேண்டும் என்ற நோக்கில் படையினர் கடுமையாக போராடினர். இயலுமான வரையில் தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு, அதிகாலை 2 மணியளவில் பெரும் இழப்புக்களுடன் தாக்குதலை நிறுத்திக்கொண்டனர் படையினர்.
தாக்குதல் தொடர்பாக பேசவல்ல ஒருவர் தெரிவிக்கையில் - 'உடலங்களை தூர இருந்து முட்கம்பிகளை போட்டு இழுத்தாவது தமது பகுதிக்குள் எடுத்துவிடவேண்டும் என்று ஓர்மத்துடன் அரச படைகளின் கடைசி மணி நேர சண்டை நடைபெற்றது" - என்றார்.

புலிகள் மேற்கொண்ட முறிடிப்புத்தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்தனர். படையினரின் ஏழு உடலங்களும் பெருந்தொகையான ஆயுதங்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

இந்த தாக்குதல் படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, முன்னரே ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்த அடுத்த திட்டத்தை செயற்படுத்த இராணுவ தலைமைப்பீடத்திலிருந்து உடனடியாக கட்டளை பறந்தது.

எனவே, அக்கராயன் பிரதேசத்தில் நிலை கொண்டிருந்த 58 ஆவது டிவிசன் படையணி புலிகளின் அடுத்த தொடர் முன்னணி காவலரணை தாக்கி உள் நுழைவதற்கு ஆயத்தமானது.



முன்னாள் இராணுவ தளபதி ஜானக பெரேராவின் விசுவாசியான இந்த டிவிசன் தளபதி ஜகத் டயசுக்கும் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கும் இடையில் ஒருவித முறுகல்நிலை இருந்துவருகின்றபோதும், துணுக்காய், மல்லாவி என படைத்தரப்பால் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக கருதப்படும் பிரதேசங்களை கைப்பற்றியதால், இவர் தலைமையிலான படையணி மீது படைத் தலைமைக்கு எப்போதும் எதையும் சாதிக்கும் என்ற நம்பிக்கை அண்மைக்காலமாக நிறையவே இருந்தது.

இந்த படையணியின் முக்கிய கொமாண்டோ அணிகள் அடுத்த தாக்குதலுக்கு தயாராகின. வன்னேரிக்கும் அக்கராயனுக்கும் இடையிலான சுமார் நான்கு மைல்கள் நீளமான புலிகளின் முன்னணி அரணை உடைத்து புலிகளை முற்றுகைக்குள் கொண்டு வரும் திட்டத்துடன், அதிகாலை 5 மணிக்கு சமர் ஆரம்பமானது.

இந்த தாக்குதலில் எப்படியாவது வெற்றியடைவது என்ற திட்டத்துடன் படையினரின் அணிகள் கடும் சமரை ஆரம்பித்தன. ஆர்.பி.ஜி., லோ உட்பட கனரக ஆயுதங்கள் சகிதம் முன்னேறிய படையினரின் இந்த தாக்குதலில் ஒரு விடயத்தை முக்கியமாக குறிப்பிடவேண்டும்.

அதாவது, யுத்த களத்தில் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளாக இவ்வளவு காலமும் பயன்படுத்தப்பட்டு வந்த 'லோவுக்கு" மேலதிகமாக இந்த சமரில் முதல் முறையாக 'பக்தார் ஷிக்ஹான்" எனப்படும் பாகிஸ்தான் தயாரிப்பிலான புதிய ரக டாங்கி எதிர்ப்பு ஏவுகணை இந்த சமரில் அரச படைகளினால் முதன்முறையாக வலிந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது.

எதிரி மீதான தாக்குதலுக்கு இலக்கை வகுத்து அதனை தாக்குபவரின் திறன் மூலம் செயற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணையையே இதுவரை காலமும் அரச படைகள் பயன்படுத்தி வந்தன. ~லோ" எனப்படும் இலகுரக டாங்கி எதிர்ப்பு ஏவுகணை உட்பட மூன்றாவது தலைமுறை ஆயுதங்கள் சகலதும் இந்த பட்டியலில் அடங்கும்.

ஆனால், இந்த ஆண்டின் முற்பகுதியில் பாகிஸ்தானிடமிருந்து கொள்வனவு செய்த 'பக்தார் ஷிக்ஹான்" எனப்படும் இந்த புதிய ரக டாங்கி எதிர்ப்பு ஏவுகணைக்கு இலக்கிற்கான கட்டளைகளை இலத்திரனியல் முறை மூலம் வழங்கிவிட்டு இயக்கினால் அது தவறாமல் எதிரியின் இலக்கை தாக்கி துவம்சம் செய்யக்கூடியது. இதற்கு தாக்குபவரின் திறன் அவசியமற்றது.

இந்த ஏவுகணை பாரிய பதுங்குகுழிகள் மற்றும் வலிமையான காவலரண்கள் ஆகியவற்றை இலக்கு பிசகாது அழித்து ஒழிக்கக்கூடியது. தோளில் வைத்தும் தாக்கக்கூடிய வசதிகொண்ட இந்த ஏவுகணை, உலங்குவானூர்தியில் பொருத்தி தாக்குவதற்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணையை கடந்த ஏப்ரல் மாதம் சிறிலங்கா படை மன்னார் பகுதியில் முதன்முறையாக பரிசோதித்திருந்தது. ஆனால், கடந்த இரண்டாம் திகதி வன்னேரியில் இடம்பெற்ற தாக்குதலில்தான் முதன்முறையாக தமது வலிந்த தாக்குதலுக்கு பயன்படுத்தியிருந்தது

இதனுடன் இன்னொரு உயர்வலுக்கொண்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணையான சீனத்தயாரிப்பு 'ஹொங் ஜியான்" எனப்படும் சுடுகலன் மற்றும் கனரக ஆயுதங்களுடன் அரச படைகள் முன்னேறின.

நாச்சிக்குடாவில் தமது தாக்குதலில் முறியடிக்கப்பட்டதால் புலிகளின் விசேட அணிகள் அங்குதான் நிலை கொண்டிருப்பதாக கருதிய படையினர், வன்னேரி - அக்கராயனில் உள்ள புலிகளின் முன்னரணை இலகுவில் உடைத்துவிடலாம் என்று எண்ணியது.

ஆனால், நேரம் செல்ல செல்ல விடயம் விளங்கிவிட்டது. நாச்சிக்குடாவிலும் பார்க்க பாரிய இழப்புக்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளே அதிகம் தெரிய ஆரம்பித்தது. புலிகளின் எதிர்த்தாக்குதலில் முன்சென்ற படைகள் மண்கவ்வ தொடங்கின. அடுத்தடுத்து அனுப்பிய அணிகளால், புலிகளின் இலக்கு தவறாத ஏறிகணை தாக்குதலில் எதிர்த்து நின்று சமராட முடியவில்லை.

திடீர் திடீர் என ஒவ்வொரு பகுதிகளினால் எதிர்த்தாக்குதல்களை ஆரம்பித்து, வலிந்த தாக்குதல் மேற்கொண்ட படையினரையே வலையில் விழுத்த ஆரம்பித்த புலிகளின் தொடர் தாக்குதல்களால் படைத்தலைமை நடவடிக்கையை நிறுத்த தீர்மானித்தது.

புலிகளின் பகுதிகளுக்குள் சென்று பலியான படையினரின் உடலங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. ஆனால், நாச்சிக்குடாவில் படையினரின் உடலங்களை கைப்பற்றப்போய் மேலதிக படையினரை இழந்ததால், இந்த தாக்குதலில் உடலங்கள் புலிகளிடம் போனாலும் பரவாயில்லை, இழப்புக்களை குறைத்துக்கொண்டு மீண்டும் தளம் திரும்பலாம் என்ற முடிவுடன், மாலை ஆறு மணியளவில் படை நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் பலியான சுமார் 30 படையினரில் 22 பேரின் உடலங்களை புலிகள் மீட்டனர். அத்துடன் பெருந்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. முன்சென்ற படையினர் எப்படியாவது புலிகளின் தாக்குதலுக்கு தாக்குப்பிடித்து அவர்களது அரணை உடைப்பது என்ற முடிவுடன் போனதால் அவர்கள் கனரக ஆயுதங்களுடன் முன்னேறியிருந்தனர்.

தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட கொண்டு சென்ற பெருந்தொகையான ஆயுதங்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

பெரும் இழப்புக்களுடன் படையினரின் இரண்டு திட்டங்களும் கைவிடப்பட்டுள்ளபோதும், இதனை படையினரின் நிரந்தர ஓய்வுநிலையாக கருதிவிடமுடியாது.

ஏ-9 பாதையை தொடாமல் வன்னியில் தொடர்ந்து ஒரு படை நடவடிக்கையை செய்து அதில் வெற்றிகாண வேண்டுமானால், அதற்கு படையினரிடம் உள்ள ஒரே இலக்கு பூநகரி மட்டும்தான். அதனை கைப்பற்றி குடாநாட்டுக்கான புலிகளின் அச்சுறுத்தலை முற்றாக இல்லாமல் செய்துவிடுவதே படையினரின் தற்போதைய பாரிய திட்டமாக உள்ளது. அந்த முயற்சியிலிருந்து அரச படைகள் இலகுவில் பின்வாங்கிவிடப்போவதில்லை.

ஆனையிறவை நோக்கிய இலக்குடன் எத்தனை நடவடிக்கையை மேற்கொண்டு முகமாலையில் பெரும் இழப்புக்களை சந்தித்தாலும் அந்த முயற்சியை மேற்கொள்வதில் படையினர் இன்னமும் எவ்வளவு உறுதியாக உள்ளனரோ அது போன்ற ஒரு ஓர்மநிலை தற்போது வன்னியின் மேற்கில் தோன்றியுள்ளது. இதற்கு புலிகளின் தளம்பாத கள உத்திகள் தக்க பாடம் சொல்லிக்கொண்டிருக்கின்றன.

வலிந்த தாக்குதல் என்பது எதேச்;சையாக எங்கும் ஆரம்பிக்க கூடிய ஒன்று. அதற்கு படை பலமும் ஆயுதபலமும் இருந்தால் போதும். ஆனால், தற்காப்பு தாக்குதலின் வெற்றி எனப்படுவது, சமச்சீரற்ற படைநகர்த்தல், கள உத்திகள் மற்றும் நேர்த்தியான தாக்குதல் எதிர்வுகூறல்கள் ஆகியனவற்றின் அடிப்படையிலானது.

இந்த வகையில் புலிகளின் படைக்குவிப்பும் அவர்களது எதிர்ப்பு வலுவும் எங்கு குவியப்படுத்தப்பட்டிருக்கி��
�து என்ற விடயத்தில் படையினர் தற்போது திக்குமுக்காடிப்போயுள்ளது என்பதே உண்மை.

பாலமோட்டையில் ஒரு வலிந்த தாக்குதல் மேற்ககொண்டால் அங்கு புலிகளின் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. நாச்சிக்குடாவில் ஒரு வலிந்த தாக்குதல் ஆரம்பித்தால் அங்கும் புலிகளின் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. வன்னேரியில் ஒரு வலிந்த தாக்குதலை ஆரம்பித்தால் அங்கும் புலிகளின் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. முகமாலையில் ஒரு வலிந்த தாக்குதலை ஆரம்பித்தால் அங்கும் அதே நிலை.

படைத்தளபதியின் கூற்றுப்படி ஆயிரக்கணக்கில் புலிகள் கொன்றொழிக்கப்பட்டால் இந்த பரந்துபட்ட எதிர்த்தாக்குதல்களுக்கான புலிகள் எங்கிருந்து புதிதாக வருகிறார்கள் என்பது அடுத்த ஊடகவியலாளர் மாநாட்டில் கேலிய ரம்புக்வலவிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி.

இது இவ்வாறு இருக்க, வன்னேரி - அக்கராயனில் படையினர் பயன்படுத்திய புதிய டாங்கி எதிர்ப்பு ஏவுகணை பற்றி களத்திலிருந்து பேசவல்ல ஒருவரிடம் கேட்டபோது -

'புலிகளிடம் உள்ள டாங்கி எதிர்ப்பு ஏவுகணையில் புதிதாக ஒன்று சேர்ந்திருக்கிறது. அவ்வளவுதான்" - என்றார்.

'அப்படியானால், கடந்த இரண்டாம் திகதி சமரில் பாகிஸ்தான் தயாரிப்பான பக்தார் ஷிக்ஹான் எனப்படும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணையும் கைப்பற்றப்பட்டளதா" - என்று கேட்க அதற்கிடையில் அழைப்பு அறுந்துவிட்டது

நன்றி - தமிழ்நாதம்