Thursday, July 23, 2009
கறுப்பு ஜூலை கடுகு அளவுதான்! கடல் அளவு ஈழத் தமிழன் சோகத்தில்
Posted by tamil at 6:28 PM 0 comments Links to this post
Tuesday, July 7, 2009
அமெரிக்காவின் தாளத்துக்கு ஆடுமா இலங்கை அரசு?
இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப் பாடு என்ன என்ற கேள்வி இப்போது கொழும்பு அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் ஆதரவுப் பின்னணியில், புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற இலங்கை அரசாங்கத்தால் அமெரிக்காவைத் திருப்திப்படுத்தும் எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ள முடியாதிருக்கிறது.
இதன்காரணமாக, போருக்குப் பிந்திய அபிவிருத்தி விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. விடுதலைப் புலிகள் விடயத்தை அமெரிக்காவும் கூட ஒரு தலைப்பட்சமாகவே பார்த்தது.புலிகள் அமைப்புக்குத் தடைவிதித்தது. புலிகள் இயக்கம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்த பின்னரும், அதன் மீதான தடையை அமெரிக்கா நீடித்தது. இலங்கை அரசாங்கத்துக்கு இது திருப்தியாக அமைந்த போதும், அமெரிக்கா விடுத்திருக்கின்ற பயண எச்சரிக்கை பெரும் அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. புலிகள் இயக்கம் அழிந்து விட்டது என்று கூறி, புலிகள் இயக்கம் மீதான தடையை அமெரிக்கா நீக்கவில்லை. எந்தக் காரணத்தைக் காட்டி புலிகள் மீதான தடையை அமெரிக்கா நீடித்ததோ அதே காரணத்தைக் காட்டியே இலங்கைக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று தமது நாட்டுப் பிரஜைகளுக்குப் பயண எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறது. அமெரிக்காவின் நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால் அந்தநாடு இந்த விடயத்தில் இரட்டைப் போக்கைக் கடைப்பிடிக்கவில்லை என்பது வெளித் தோன்றும். ஆனால், இலங்கை அரசாங்கத்துக்கு இது அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. அதேநேரம் புலிகள் இயக்கம் முற்றாக அழிந்து விட்டது என்று கூறி அதன் மீதான தடையை நீக்குமாறு யோசனை தெரிவிக்கவும் இலங்கை துணியவில்லை. இலங்கை அரசாங்கத்திடம் இருந்து அமெரிக்கா இப்போது எதிர்பார்ப்பது தமிழர் இனச்சிக்கலுக்கான ஓர் அரசியல் தீர்வைத்தான். 13 ஆவது திருத்தத்தின்படியோ அல்லது வேறெந்த வழிகளினூடாகவோ இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு.
ஆனால், இலங்கை அரசு இந்த விடயத்தில் நழுவல் போக்கையே கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இது அமெரிக்காவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாகவே மீண்டும் பயண எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இலங்கை அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வரும் ஒரு முயற்சியாக இந்த அறிக்கை வெளியிடப்பட் டிருக்கலாம். கடந்த வாரம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் "இலங்கைக்குப் பயணம் செய்யும் அமெரிக்க குடிமக்கள் மற்றும் இலங்கையில் வசிக்கும் அமெரிக்க குடிமக்களுக்கு அங்கு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளமை உட்பட, உறுதியற்ற நிலை அங்கு தொடர்வதையிட்டு எச்சரிக்கை விடுக்கின்றது. இதனால் இலங்கைக்கு பயணம் செய்வதில் உள்ள ஆபத்தை கவனமாகப் பரிசீலனை செய்யுமாறு அங்கு செல்ல விரும்பும் அமெரிக்கக் குடிமக்களை இராஜாங்கத் திணைக்களம் கேட்டுக் கொள்கின்றது.' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் புலிகள் இயக்கம் மீள் எழுச்சி கொள்ளலாம் என்ற எச்சரிக்கை மட்டுமன்றி, கிழக்கில் ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகள், வீதித் தடைகள், போக்குவரத்துக் கட்டுப்பாடுகள், நடமாடும் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பது என்று இலங்கை அரசாங்கத்தின் செயற்பõடுகள் மீது அழுத்தம் கொடுக்கும் வாக்கியங்களும் இடம்பெற்றிருக் கின்றன.
அமெரிக்காவின் இந்த அறிக்கையினால் குழப்பமடைந்தது இலங்கை அரசாங்கம். காரணம், இந்த ஆண்டிலும் அடுத்த ஆண்டிலும் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்த்து வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் திட்டத்தை வகுத்துக் கொண்டிருந்தது இலங்கை அரசாங்கம். இதில் மண் அள்ளிப்போடும் வகையில் தான் அமெரிக்காவின் அறிக்கை அமைந்திருந்தது. இதையடுத்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன இலங்கை அரசின் ஆழ்ந்த வருத்தத்தத்தையும் அதிர்ச்சியை யும் வெளிப்படுத்தும் கருத்துகளை வெளியிட்டிருக்கிறார். "விடுதலைப் புலிகள் முழுமை யாகத் தோற்கடிக்கப்பட்டிருக் கின்றனர். இந்தக் கள நிலைவ ரத்தை புரிந்துகொள்ளாமல் அமெரிக்கா இந்தப் பயண எச்சரிக்கையை வெளியிட்டி ருக்கிறது.
"இவ்வாறான ஓர் அறிவுறுத்தலை அமெரிக்கா வெளியிட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்துகின்றது. கடந்த காலங்களில் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பு படையினரால் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறலாம் எனத் தெரிவித்திருப்பது கள நிலைமைகளைப் போதுமான அளவுக்குப் புரிந்துகொள்ளாத தன்மையைத் தான் வெளிப்படுத்துகின்றது எனவும் அவர் கூறியிருந்தார்.
போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, களமுனை நிலைவரங்களை செய்மதி மூலம் படம் பிடித்து அவ்வப்போது எச்சரிக்கைகளை வழங்கிக் கொண்டிருந்த அமெரிக்காவை களநிலையை அமெரிக்கா போதியளவில் புரிந்து கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறது இலங்கை அரசு. இதற்கிடையே, சர்வதேச நாயண நிதியத்திடம் இருந்து கிடைக்க வேண்டிய கடன் இதுவரையில் கிடைக்காத நிலைக்கும் ஒருவகையில் அமெரிக்காவே காரணமாக இருக்கிறது. நிதி உதவிகள் வழங்குவதில் சர்வதேச நாணய நிதியம் அரசியலைப் புகுத்தியுள்ளது. அதனால் தான் இலங்கைக்குக் கிடைக்க வேண்டிய 1.9 பில்லியன் டொலர் நிதியுதவி தாமதமடைந்து வருவதாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் விசனம் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. "முன்னர் எப்போதும் சர்வதேச நாணய நிதியம் நிதியுதவி வழங்குவதற்கு அரசியல் காரணிகளை கருத்தில் கொண்டதில்லை. ஆனால் தற்போது அது முதல் தடவையாக அதனை மேற்கொண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் கடனைப் பெறுவதற்கான உடன்பாடு கடந்த ஏப்ரல் மாதம் நிறைவு செய்யப்பட்டிருந்த போதும் இன்றுவரை அது கருத்தில் எடுக்கப்படவில்லை.' என்று அவர் கூறியிருந்தார். சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி வழங்கப்படுவதை இறுதியாக தீர்மானிக்கும் அதிகாரம் அமெரிக்காவிடமே உள்ளது. போர்நிறுத்தம், இடம்பெயர்ந்த மக்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவதுடன் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அமெரிக்கா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது.
அத்துடன், போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாகவும் அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது. ஆனால் இவை கருத்தில் எடுக்கப்படாத நிலையில் சர்வதேச நாயண நிதியத்தின் நிதியுதவிகளை அமெரிக்கவே தடுத்து வைத்திருப்பதான கருத்தும் நிலவுகிறது. இதற்கிடையே போர் முடிந்த பின்னரும் இலங்கை இராணுவத்திற்கு மேலும் 50 ஆயிரம் பேரை சேர்ப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவு இந்த நிதியுதவிகளை மேலும் தாமதப்படுத்தும் என்ற எச்சரிக்கையும் வெளியாகியுள்ளது. போர்க்காலத்தில் இந்தியாவினதும் சீனாவினதும் தாளத்துக்கு ஆடிய இலங்கை அரசாங்கத்தால் இப்போது அவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டுச் செயற்பட முடியாததொரு நிலை உருவாகி வருகிறது. சீன, இந்திய பிராந்திய நலன்களுக்கு இடையில் புகுந்து விளையாடிய இலங்கை அரசாங்கம் அமெரிக்காவினது விருப்பங்களுக்கு முரணாகச் செயற்பட இனிமேல் முடியாது.
அப்படிச் செயற்பட முனைந்தால் சர்வதேச ரீதியான ஆதரவை இலங்கை அரசாங்கம் இழக்க நேரிடும். நிதியுதவிகள் பறி போகலாம். போர் நடைபெற்ற இறுதி நேரத்தில் அமெரிக்கா முன்வைத்த சில யோசனைகளை இலங்கை அரசாங்கம் கருத்தில் எடுக்கவில்லை. புலிகளைக் காப்பாற்றும் முயற்சியாகவே அதை இலங்கை அரசாங்கம் பார்த்தது. அந்த யோசனைகளை உதாசீனம் செய்ததையிட்டு அமெரிக்காவுக்கு உள்ளூர ஒரு வருத்தம் அல்லது கோபம் இருக்கக் கூடும். தொடர்ந்து இலங்கை அரசாங்கம் அமெரிக்க விரோத அல்லது உதாசீனப் போக்கைக் கடைப்பிடித்தால் இலங்கை அரசுக்கு பொருளாதாரச் சிக்கல் இன்னமும் அதிகரிக்கக் கூடும். இதிலிருந்து மீண்டெழுவதென்பது இலங்கைக்கு மிகவும் இலகுவானதொரு விடயமாகவும் இருக்காது. இப்போது இலங்கை அரசு, அமெரிக்காவைத் திருப்திப்படுத்துவதற்கு அவசியமாகத் தேவைப்படுவது ஓர் அரசியல் தீர்வுத் திட்டமாகவே இருக்கலாம்.
வீரகேசரி வாரவெளியீடு
Posted by tamil at 12:13 PM 0 comments Links to this post
Sunday, June 28, 2009
இந்தியா - சீனா - சிறிலங்கா: "ஆழமான பார்வை"
இந்தியா – சீன மறைமுக போரின் மைதானமாக மாறியுள்ள இலங்கை தனது அத்தனை தேசிய சொத்துகளையும் இரண்டு நாடுகளிடமும் அடகு வைத்துவிட்டு, அதற்கு வட்டி கேட்பதுபோல தான் போட்டு வைத்த இராணுவ நிகழ்ச்சி நிரலுக்கு ஆயுதங்களை கேட்டு பெற்றுக்கொள்வதில் காட்டிய முனைப்பும் அதற்குப்பிறகு நடந்த சம்பவங்களும் சிங்களத்துக்கு சார்பாக நடைபெற்று முடிந்து இன்னமும் அதன் தூவானங்கள் ஆங்காங்கே விழுந்துகொண்டிருக்கின்றன.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் அப்படி என்னதான் குடுமிப்பிடி சண்டை என்று சற்று ஆழமாக நோக்கினால் அது பல படிநிலைகளில் அனல் பறக்க நடைபெற்றுவருதை காணலாம்.
கடற்படை ஆதிக்கம், அணு ஆயுத போட்டி, பிரபஞ்ச படை மேம்பாட்டு போட்டி, அயல் நாடுகளை அணைத்துக்கொள்வதில் போட்டி, அதற்கான எல்லை இழுபறி, பொருளாதார வளங்களை கையகப்படுத்துவதில் போட்டி போன்றவை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில்; ~தொடர்ச்சியான பகல் - இரவு சண்டை காட்சிகளாக நடைபெற்று வருகின்றன.
இவற்றில் இலங்கையை மையமாக கொண்டு நடைபெறும் பாரிய படைத்துறை பிரச்சினை என்றால் அது கடலாதிக்கம் என்று கூறலாம்.
இலங்கையில் சீனாவின் அண்மைக்கால அதிரடி பிரசன்னங்களாக கடந்த வருடம் கைச்சாத்திடப்பட்ட 36.7 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத தளவாட ஒப்பந்தம், நுரைச்சோலை அனல் மின்நிலை திட்ட உதவி, மன்னார் எண்ணெய் வள ஆராய்ச்சிக்கான அனுமதி, கொழும்பில் கலாச்சார மண்ட நிர்மாண உதவி, குடாநாட்டுக்கு மின் வழங்க காங்கேசன்துறைக்கு வழங்கிய நான்கு மின் பிறப்பாக்கிகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆனால் இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக காணப்படுவது அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டம். இது சீனா மேற்கொள்ளும் ஏனைய திட்டங்களின் நோக்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டியுள்ள ஒன்றும் அதன் ஏக சிந்தனையில் சிதறிய நீண்டகால கனவும் கூட.
சீனா தனது தேவைக்கான பெரும்பகுதி எண்ணெய் வளத்தை இந்து சமூத்திர பிராந்தியத்தினூடாகவே பெற்றுக்கொள்கிறது. அதற்காக தனது கப்பல்களின் தரிப்பிடங்களாக ஆங்காங்கே சில நாடுகளின் துறைமுகங்களை தான் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் தனது உறவுகளை வலுப்படுத்திவருகிறது.
அந்தவகையில் பாகிஸ்தானுடனான தனது உறவை பலப்படுத்தி அந்நாட்டு துறைமுகத்தை பயன்படுத்துவதிலுள்ள சிக்கல்களை தவிர்த்துள்ள சீனா, அடுத்து இலங்கையை தனது வலைக்குள் விழுத்தியிருக்கிறது. அதற்காக மேற்கொண்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு சீனா சுமார் ஒரு பில்லியன் டொலர்களை அள்ளி வீசியிருக்கிறது.
தனது பிராந்தியத்தில் எவர் அடிபட்டாலும் பரவாயில்லை தனக்கு ஆயுதம் தரக்கூடிய எந்த நாட்டுடனும் சோடி சேர்வது என்ற நோக்கத்துடன் இருந்த இலங்கை, இப்படியெல்லாம் கூட்டு சேர்வது தனக்கு எவ்வளவு ஆபத்து என்று கொஞ்சமும் சிந்திக்கவில்லையே என்பது இந்தியாவின் காலாவதியான கவலை.
ஆனால், இலங்கை துறைமுகத்தினுள் சீனா ஊடுருவும் இந்த இரகசிய இராஜதந்திர போரால் இந்தியா ஏன் சீறுகிறது? அப்படி என்ன சீன இந்திய கடல் பிரச்சினை என்று பார்த்தால் எல்லாம் இந்த கடற்படை வலுவை முன்வைத்துத்தான்.
உலக வளர்ச்சியில் உயர்ந்த ஸ்தானத்துக்கு போய்விட்ட இந்த இரு நாடுகளினதும் கடற்படைகள், தத்தமது நிகழ்ச்சி நிரல்களின் பிரகாரம் தமது விரிவாக்கத்தை மேற்கொண்டு வருகின்ற போதும் சீனா எப்போதுமே அதிரடியாக – சத்தம் சந்தடியின்றி – தனது படைகளை பல பரிமாணங்களில் பட்டை தீட்டி கொள்வதில் இந்தியாவை விட பல படிகள் மேல் என்றே கூறலாம். இந்த பல பரிமாண வளர்ச்சி இந்தியாவுக்கு பாரிய சவால் என்பது உண்மை.
இந்த சவாலை உடனடியாக சமாளிக்க முடியாத இந்தியாவின் இயலாமையின் வெளிப்பாடும் -
அப்படிப்பட்ட சீனா அயல் நாடான இலங்கை மற்றும் இதர நாடுகளுக்குள் வந்து நின்று கொண்டு தம்மிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச படை வலுக்களையும் மோப்பமிடுகிறது என்ற இந்தியாவின் குடைச்சலும் -
சீனாவுக்கு இடம்கொடுத்த அயல்நாடுகளின் மீதும் இந்தியாவை சினம் கொள்ள வைத்துள்ளது.
படைவலு பரிசோதனை
இந்திய படைத்துறையை பொறுத்தவரை அதனிடம் உள்ள மிகத்திறமான படைக்கலம் என்றால் நிலத்திலிருந்து ஏவக்கூடிய அணு ஆயுதங்கள் உள்ளன.
~அக்னி, ~ப்ருதிவி என கடந்த காலங்களில் இந்தியா இவை தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டு அவற்றின் உருவாக்கத்தில் வெற்றி கண்டிருக்கிறது.
அதேபோல, வான் படையை பார்க்கப்போனால் ~மிராஜ் எனப்படும் - ஈழத் தமிழர்கள் தமது வாழ்நாளில் மறக்கமுடியாத - போர் விமானங்கள் இந்தியாவிடம் வளமான வான் கலங்களாக உள்ளன.
ஆனால், இந்தியாவின் கடற்படை வலு என்பது பேச்சுக்கு கடலில் ஓடித்திரியும் பெரிய பெரிய கப்பல்களாக காணப்படுகிறதே தவிர, அவை சீனாவின் அதிநவீன கடற்படை வலுவுக்கு முன்னால் கால்தூசு என்பதுதான் ஏற்றுக்கொண்டேயாக வேண்டிய உண்மை.
அதுவும், சீனா தற்போது அணு ஆயுத ஏவுகணைகளை ஏவக்கூடிய தளங்கள் கொண்ட மிகப்பெரிய கடற்படை தளம் ஒன்றை தெற்கு சீனக்கடலில் உள்ள ஹெய்னின் என்ற தீவில் நிர்மணித்து வருவது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
அணு ஆயுத ஏவுகணைகளை ஏவக்கூடிய சுமார் 20 கடற்கலங்கள் தரிக்கக்கூடிய இந்த தளம் ~ஜேம்ஸ் பொண்ட் படங்களில் வருவதுபோன்ற தோற்றப்பாடு கொண்டது என்று பிரித்தானிய நாளிதழ் ஒன்று அண்மையில் தெரிவித்திருக்கிறது.
இவ்வாறான அணு ஆயுத ஏவுகiணை வலுக்கொண்ட கடற்கலங்கள் கடலுக்கடியில் நிறுத்திவைக்கக்கூடியவை மட்டுமல்லாமல் அவை எங்கு நிற்கின்றன என்பதை கண்டுபிடிப்பதும் கடினம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
மூன்றாம் உலகப்போர் ஒன்று வெடித்தால், எங்கிருந்து வருகிறது என்று தெரியாமலே வந்து தாக்கி ஒரு கண்டத்தையே துவம்சம் பண்ணக்கூடிய அணு ஆயுத ஏவுகணை கப்பல்களை சீனா இரகசியமாக தயாரித்து வைத்திருக்கிறது என்கிறார்கள் போரியல் நோக்கர்கள்.
இந்த அணு ஆயுத கப்பல்கள் கடலுக்கடியில் பல்லாயிரக்கணக்கான கிலோ மீற்றர்கள் இரகசியமாக பயணம் செய்து எந்த நாட்டின் துறைமுகத்துக்கு அடியில் வந்து நின்றாலும் உடனடியாக அவற்றை கண்டுபிடிப்பது மிகக்கடினம்.
இதனால்தான், சீனா இன்று இலங்கை பக்கம் தலைகாட்டி துறைமுகங்களை விரிவாக்கம் செய்யப்போவதாக அறிவித்தவுடன் ~குய்யோ முறையோ என்று இந்தியா கூக்குரலிட ஆரம்பித்திருக்கிறது.
இலங்கை துறைமுகங்களில் கடலுக்கடியில் வந்து நிற்கக்கூடிய சீனாவின் அணு ஆயுத கப்பல்கள் இந்தியாவின் பாதுகாப்பு நிலைவரங்களை அறிந்துகொள்ளும் என்றும் -
அது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் இலங்கையிடம் சொல்லி அழுமளவுக்கு தற்போது இந்தியாவின் கதி அதோ கதியாகியிருக்கிறது.
சீனாவுடன் போட்டி போட்டு நீருக்கடியில் அணு ஆயுத போர் நடத்துமளவுக்கு இந்தியாவின் கடற்படை உள்ளதா என்று பார்த்தால், அந்த முயற்சியில் இந்தியா இப்போதுதான் அரிவரி நிலையிலிருக்கிறது.
1970-களில் ஆரம்பிக்கப்பட்ட அணு ஆயுத ஏவுகணை கடற்கலங்கள் தொடர்பான இந்தியாவின் முயற்சிகள் இன்னமும் அந்த நிலையிலிருந்து பெரிதாக நகரவில்லை.
சீனாவின் வளர்ச்சியை கண்டு மிரண்டெழுந்து இப்போதுதான் சுதாரித்துக்கொண்டுள்ள இந்தியா, அடுத்த ஆண்டு இந்த முயற்சியை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.
இந்திய கடற்படை வலு
இதன் ஆரம்ப கட்டமாக, தனது போர்க்கப்பல்களிலிருந்து ~கே-15 ஏவுகணையை ஏவி பரிசோதிக்கும் ~சாகரிக்கா என்ற பெயரிடப்பட்ட முயற்சியை இந்த ஆண்டு மேற்கொள்ளப்போவதாகவும், அதன்பின்னர் படிப்படியாக அணு ஆயுத ஏவுதிறன் குறித்த முயற்சிகளில் இறங்கப்போவதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.
இதற்காக, 650 மில்லியன் டொலர் செலவில் 12,000 தொன் எடையுள்ள ~அகுலா -2 என்ற அணு ஆயுத ஏவுகணை கப்பலை தனது உற்ற நண்பனான ரஷ்யாவிடமிருந்து வாங்க முன்னர் திட்டமிட்ட இந்தியா, தற்போது அதே இரகத்தில் புதிய வசதிகளுடன் கூடிய இன்னொரு கப்பலையும் வாங்க திட்டமிட்டிருக்கிறது.
தற்போது இந்தியாவிடம் உள்ள பாரிய கடற்கலங்களை கணக்கிலெடுத்தால் அமெரிக்காவிடமிருந்து வாங்கிய ~ஐ.என்.எஸ்.ஜலஷ்வா என்ற விமானம் தாங்கி கப்பல் சுமார் 36 வருடங்கள் பழமை வாய்ந்தது. இதை விட பெரிய விமானம் தாங்கி கப்பல் ~ஐ.என்.எஸ்.விராத். இவை இரண்டும்தான் குறிப்பிடக்கூடியவை
(தனது பழைய கப்பல்களை அமெரிக்கா இந்தியாவின் தலையில் கட்டிவிடுவதும் அதேபோல இந்தியா இலங்கையின் தலையில் கட்டிவிடுவதும் காலகாலமாக நடைபெற்றுவரும் ஒன்றுதான். தற்போது இலங்கையிடம் உள்ள ~எஸ்.எல்.என்.எஸ்.சயுர, ~சமுத்ரா, ~வரகா போன்றவை ஆளாளுக்கு மாறி மாறி பரிசளித்த பழைய சமான்கள்தான்)
இந்த பழைய தாரை தப்பட்டைகளை வைத்துக்கொண்டு சீனாவின் கடற்படையுடன் போட்டியிட முடியாது என்பதை புரிந்துகொண்ட இந்தியாவின் கடற்படை, தற்போது தன்னிடமுள்ள 23 பாரிய கடற்கலங்கள் கொண்ட படையை விரிவாக்கம் செய்ய பெருமெடுப்பில் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அடுத்த 15 வருடங்களில் இந்திய கடற்படையில் 40 புதிய போர்க்கப்பல்களை இணைத்துக்கொள்வதற்காக இந்திய அரசு 12 பில்லியன் டொலர் செலவிலான திட்டத்தை முடுக்கிவிட்டிருக்கிறது.
அத்துடன், எதிர்காலத்தில் எவ்வழியிலும் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை முறியடிப்பதற்காக, இந்து சமுத்திர பிராந்தியத்தில் நீருக்கடியில் நடைபெறக்கூடிய நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக, 14 முதல் 16 பில்லியன் டொலர் செலவில் 24 நீரடி கண்காணிப்பு கலங்களை வாங்க முடிவு செய்திருக்கிறது.
அதேவேளை, தற்போதைக்கு தன்னிடமுள்ள சாதாரண ஏவுகணைகளை அவ்வப்போது பரிசோதனை செய்து சீனாவிடமிருந்து ஏற்படக்கூடிய உடனடி அச்சுறுத்தலுக்கு பதில் சொல்லும் வகையிலான ஏற்பாடுகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.
கப்பலில் இருந்தும் தரையிலிருந்து ஏவக்கூடிய இந்தியாவின் ~பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பான மேலதிக முன்னேற்றகர திட்டங்கள் தொடர்பான தனது முயற்சிகளிலும் முனைப்படைந்திருக்கிறது.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், அண்மையில் இந்தியா சோதனை செய்த ~அக்னி-3 என்ற தரையிலிருந்து ஏவும் ஏவுகணை 3,500 கிலோமீற்றர் பாய்ந்த சென்று தாக்குதல் நடத்தக்கூடியது. ஆனால், சீனாவிடமுள்ள ஏவுகணைகள் 11,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் பறந்து சென்று தாக்குதல் நடத்தக்கூடியது.
சீனாவின் இந்த கன கடூரமான வளர்ச்சி மிக்க கடற்படை, இந்து சமுத்திரத்தின் ஆதிக்கத்தை அதன் கைகளில் கொண்டுவருவதற்கு தாராளமாக போதும். ஆனால், அந்த இலக்கை அடைவதற்காக – ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார் என்பதற்காக - இன்னமும் கனவை மட்டும் கண்டுகொண்டிருக்கும் இந்தியா, காரியங்களில் இறங்குவதில் காட்டியுள்ள தாமதம் அதன் பின்னடைவுக்கே வழிவகுத்திருக்கிறது.
அணில் ஏறவிட்ட.....
ஆகவே, தனது கடற்படையின் வளர்ச்சிப்போக்கில் ஒரு திருப்பம் ஏற்படும்வரை, சீனாவின் ஆதிக்கப்பிடியை தனது இராஜதந்திரப் போரின் மூலம் முறியடித்து, தனக்கான இருப்பிடத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்கே இந்தியா அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகிறது.
இந்தவகையில், இலங்கை மீதான இந்தியாவின் கவலை முன்னர் குறிப்பிட்டதுபோல காலாவதியான ஒன்று. அன்று அன்னை இந்திராவுடன் முரண்டு பிடித்துக்கொண்டு அமெரிக்காவிடம் சென்று அது மறுக்க இஸ்ரேல் ஊடாகவும் இதர நாடுகள் ஊடகவும் ஆயுதங்களை உருவிக்கொண்ட ஜே.ஆரின் பாணியிலேயே, இன்று மகிந்த அரசு சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் ~தேனிலவு கொண்டாடுகிறது.
கைமீறிப்போன இந்த நிலைவரத்தை மீண்டும் கையகப்படுத்துவதற்கு இந்தியாவுக்கு கிடைத்த பெரும் சந்தர்ப்பம்தான் ஈழத்தமிழர் விவகாரம். அதில் தலையிட்டு தமிழருக்கு ஆதரவு தரக்கூடிய ஒரு நிலைமையை இந்தியா உருவாக்கி சிறிலங்காவை கொஞ்சமாவது தனது பிடிக்குள்ள வைத்திருக்ககூடிய சூழ்நிலை உருவானபோதும், புலிகளையும் அழிக்கவேண்டும் அதேவேளை சீனாவையும் எதிர்க்கவேண்டும் என்ற இரண்டும் கெட்டான் நிலையில் நின்று இந்தியா காண்பித்த அரைவேக்காட்டு இராஜதந்திர கொள்கை இன்று அதன் நிலையை அணிலை ஏறவிட்ட நாயின் நிலைக்கு கொண்டுவந்து தள்ளியிருக்கிறது.
முன்னமே கூறியதுபோல இது காலம் கடந்த கவலை. இனிமேல் கச்சதீவில் கடற்படைத்தளம் என்ன? தூத்துக்குடியில் தும்புத்தொழிற்சாலை கட்டப்போகிறோம் என்று சிறிலங்கா கூறினால் கூட இந்தியப் பிரதிநிதிகள் கொழும்புக்கு வந்து - எமக்குள்ள எந்த பிரச்சினையும் இல்லை என்பது போல - சிரித்துக்கொண்டே மகிந்தவுக்கு கைலாகு கொடுத்துவிட்டு செல்லவேண்டிய நிலைதான்.
நன்றி
ப.தெய்வீகன் -
Posted by tamil at 7:46 PM 0 comments Links to this post

