Tuesday, November 13, 2007

வரலாற்று திருப்புமுனையில் தமிழ்ச் செல்வனின் இழப்பு - சி.இதயச்சந்திரன்

விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் இழப்பால் தாயக புலம்பெயர் தமிழ் மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

இறுதி வணக்க நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்த மக்களின் முகத்தில் சகோதரன் ஒருவரை இழந்த துன்பம் வெளிப்பட்டது.

வலிகளை நெஞ்சிற் சுமந்தாலும் எந்நேரமும் அவர் புன்னகையை வெளிப்படுத்திய விதமே, மக்களின் மனதை ஈர்த்துள்ளது.

இவர் குறிவைத்துக் கொல்லப்பட்டாரா அல்லது தினக் குண்டு வீச்சில் ஏதேச்சையாக அகப்பட்டுக் கொண்டாராவென்பது குறித்து பல விமர்சன ஆய்வுகள் வலம் வருகின்றன.

இதில் பரவலாகப் பேசப்படும் இரு விடயங்கள் பற்றிப் பார்க்கலாம்.

ஒரு மாதத்திற்கு மேலாக கொல்லப்பட்ட இடத்திற்கு வந்திராத தமிழ்ச்செல்வன் அங்கு சென்ற நேரத்தையும் நாளையும் பின் தொடர்ந்த ஒருவரே தெரிந்திருக்க முடியும்.

அரச படையினர் புலிகளின் பாதுகாப்பு பிரதேசத்தில் தமிழ்ச்செல்வனைப் பின் தொடர்வது சாத்தியமற்ற விடயமாகும்.

அதேபோல் வன்னி வான் பரப்பில் அடிக்கடி வட்டமிடும் ஆளில்லா வேவு விமானங்களும் தனி நபரை இலக்கு வைத்து துல்லியமான பின் தொடர்வை மேற்கொள்ள முடியாது.

அடிக்கடி இருப்பிடத்தை மாற்றும், விடுதலைப் புலி முக்கியத்தர்களை தம்மால் இலக்கு வைக்க முடியுமென பாதுகாப்புச் செயலர் கோத்தபாய கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சிங்கள மக்களின் உள உறுதியை அதிகரிப்பதற்கு அவர் கூறும் அதிகப் பிரசங்கித் தனமான சொல்லாடல்களாகவும் இதனைக் கொள்ளலாம்.

இலக்குகளெல்லாம் தம் கைவசமிருப்பதால், துல்லியமான விமானக் குண்டு வீச்சினை நடத்தி விடுதலைப் புலிகளை அழிக்க முடியுமெனக் கூறுபவரே, இன்னமும் இரண்டு ஆண்டு காலம் தேவையென முன்பு கூறினார்.

இரண்டாவது பார்வையானது களநிலைமை சார்ந்ததாகும்.

கிழக்கு வெற்றியை வைத்து பல மாதங்களாக அரசியல் செய்த அரசாங்கத்திற்கு, பேரிடியாக விழுந்தது அநுராதபுர வான் தள அழிப்பு.

ஏதாவதொரு வெற்றிச் செய்தியை சிங்கள மக்களுக்கு வழங்க இலக்குத் தேடி அலைந்தார்கள்.

முகமாலை, மன்னார் முரன்னரங்க நிலைகளிலிருந்து பாரிய படை நகர்வினை மேற்கொண்டு கைப்பற்றப்படும் சிறு இடத்திலாவது கொடி ஏற்றி விழாக் கொண்டாட விரும்பியது அரசாங்கம்.

கொடி ஏற்றும் செய்தியை அறிவிக்கச் சென்றவர்கள் பலத்த இழப்புக்களுடன் பின் வாங்கிச் செல்ல வேண்டிய பதிலடி கிடைத்தது.

தமிழ்ச்செல்வனின் மறைவிற்கு முதல் நாள் நடந்த சோக நிகழ்வு இது.

அவசரத் திட்டங்களை வகுத்த படைத்தரப்பு மன்னார் இழப்போடு மென் இலக்குகளை தேடி இருக்க வேண்டும்.

ஏறத்தாழ தினமும் குண்டு வீசுப்படும் இடங்களான புதுக்குடியிருப்பு, ஒட்டிசுட்டான், நாகர்கோயில் போன்றவற்றைத் தவிர்த்து அரசியல், நிர்வாக துறையினர் அதிகமாகக் காணப்படும் கிளிநொச்சி நகரை தாக்குதலுக்குரிய தெரிவிடமாக தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

கிளிநொச்சி நகரிலேயே சமாதானச் செயலகம், அரசியல் துறைக் காரியாலயம், காவல் துறை தலைமையகம் என்பன அமைந்துள்ளன.

அதைவிட ஏனைய நிர்வாகப் பிரிவுகளின் செயலகங்களும் தற்காலிகத் தரிப்பிட மையங்களும் உண்டு. இதில் ஒன்றுதான் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான தமிழ்ச்செல்வனின் தற்காலிகத் தங்குமிடமாகும்.

அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் கிளைகள், ஐ.நா. சபை உப அமைப்புகளின் காரியாலயங்கள் யாவும் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ளதையும் அரசாங்கம் அறியும்.

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகாமையில் நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சு மட்டுமே இதுகாலவரை நகர மற்றும் சுற்றாடலில் அரசால் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலாகும்.

அநுராதபுர அடிக்கு எதையாவது செய்ய வேண்டுமென கையறு நிலையிலிருந்த அரசாங்கம், கிளிநொச்சி நகர மென் இலக்குகளை தமது தெரிவாகக் கொண்டது.

துல்லியமான தாக்குதலை மேற்கொள்ளாவிட்டால் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலையிலும் குண்டு விழலாம் என்பதையும் படைத்தரப்பு உணர்ந்திருந்தது.

அரசாங்கத்தைப் பொறுத்தவரை கிளிநொச்சி நகரும் சுற்றாடலும் விமான குண்டுவீச்சிற்குரிய இறுதியான இடத்தெரிவாக கொள்ள வேண்டிய இலக்காகும். ஏனெனில் அப்பிரதேசத்தில் அவர்களால் மேற்கொள்ளக் கூடிய விமானத் தாக்குதல்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும் அங்கு தரித்திருக்கும் உலக அமைப்புகளின் தரிசனத்திற்கு உடனே வந்து விடும்.

இவை எவற்றையும் கவனத்தில் கொள்ளக் கூடிய நிலையில் இல்லாத ஆட்சியாளர்கள், பதிலடி கொடுக்கத் தேர்ந்தெடுத்த மென் இலக்கு கிளிநெõச்சியாக அமைந்தது ஆச்சரியமான விடயமல்ல.

ஆயினும் பேரினவாதத்தின் அராஜக வெளிப்பாடுகளை உணர்ந்தவர்கள், அஜாக்கிரதையாக இருந்துள்ளார்களென பொதுமைப்படுத்திக் கூறுவது தவறானதாகும்.

போர்ச் சூழலில் எதுவும் நிகழக்கூடிய சாத்தியப்பாடுகள் அதிக முண்டென்பதையும் உணர்தல் வேண்டும்.

கடந்த வருட பிற்பகுதியில் நடந்த முகமாலை முறியடிப்புச் சமரில் 300 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். பாரிய படைக் கலச்சேதாரம் ஏற்பட்டது.

அதற்குப் பதிலடியாக தெரிவு செய்யப்பட்ட புலிகளின் குரல் ஒலிபரப்பு மையமும் ஒரு அரசியல் மென் இலக்குத்தான்.

பாரிய இழப்புகள் ஏற்படும்போது மென் இலக்குகளையே இலகுவாகக் குறி வைக்க அரசாங்கம் விரும்புகிறது.

முன்னரங்க நிலையில் பேரழிப்புகளை இராணுவம் சந்தித்தால் பதிலடிச் செயற்பாடாக விமானக் குண்டு வீச்சுகள் நடக்குமென்பதை வன்னிக் குழந்தைகளும் அறியும்.

விடுதலைப் புலிகளின் படைமுகாம்கள், பயிற்சி நிலையங்கள் மீது விமானத் தாக்குதல் தொடுப்பதாகவும் அதனால் படைவலு அழிக்கப்படுவதாகவும் பரப்புரை செய்தவாறு பல மாதங்களாக இந் நடவடிக்கையைத் தொடர்கிறது அரசாங்கம். தமிழ்ச்செல்வனின் பூதவுடல் துயிலுமில்லத்தில் விதைக்கப்படுமுன் விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதலொன்றை ஆரம்பிப்பார்களென அரசாங்கம் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக நம்பக்கூடிய அளவிற்கு ஊகங்கள் வெளியாகியிருந்தன.

அதன் எதிர்விளைவின் செயற்பாடாகவே முகமாலை, முல்லைத்தீவுக் கடல், ஓமந்தை போன்ற மும்முனைகளில் படைத்தரப்பு தயார் நிலையில் இருந்துள்ளதெனக் கணிப்பிடலாம்.

அதாவது, விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதலொன்றை முன்னெடுத்தால் அதன் வாசற் கதவுகள், மேற்குறிப்பிட்ட மூன்று முனைகளாக இருக்குமென்ற கணிப்பீடு இராணுவத்திற்கு இருப்பதாகவும் கருதலாம்.

சமாதான முகமூடி அணிந்த தமிழ்ச்செல்வனைக் கொன்றது, சரியானதென உறுதிப்படக் கூறுகிறார் நாட்டின் பிரதமர் ரத்தினசிறி விக்கிரமநாயக்க.

ஒப்பந்தம் முறிவடைந்துவிட்டது என்கிற செய்தியையும் இவரே பிரகடனப்படுத்தக்கூடும்.

சர்வதேசமானது, புலிகளுக்கு விரித்த வலைப் பின்னலை தற்போதைய ஆட்சியாளர்கள் அறுத்தெறிந்தாலும் மீதமிருக்கும் இரும்பு வலை இந்த போர் நிறுத்த உடன்படிக்கையாகும். அதையும் உடைப்பதற்கே படைத்துறைக்கான 20 வீத நிதி அதிகரிப்பு ஒதுக்கப்படுகிறது.

பேரினவாதத்தின் முழுப் பரிமாணத்தையும் ஆட்சியாளர்கள் வெளிச்சமாக்குவது, தமிழ் மக்கள் ஒரு திசையில் செல்லும் பாதைத் தெரிவினை தீர்மானிக்க வழி சமைத்துள்ளது.

வரலாற்றுத் திருப்பு முனையை தொட்டிருக்கும் தேசிய விடுதலைப் போராட்டம், தமிழ்ச் செல்வனின் இழப்போடு தெளிவான திசை நோக்கி நகரப் போகிறது.

புதிய வரலாறுகளைப் படைக்கும் மக்கள் சக்தி வீதிக்கு வந்துவிட்டது.

மக்களே, இனி வரலாற்றுத் தேரினை வடம் பிடித்து நகர்த்திச் செல்வார்கள்.

-நன்றி வீரகேசரி-

0 Comments: