Monday, January 7, 2008

அமெரிக்கா, யெப்பான், இந்தியா, இலங்கைத் தீவு

இலங்கைத்தீவில் சிறிலங்கா, தமிழீழம் எனும் தேசங்கள் உண்டு. இதை ஏற்க உலக நாடுகள் மறுத்து வருகின்றன. அமைதி வழித் தீர்வு எனப் பேசிக்கொண்டு உலகின் தொன்மையான ஒரு நாகரிகத்தை, மொழியை அழிக்க உலகு சிறிலங்காவுக்கு உதவி வருகின்றது.

இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்கா சிறிலங்காவின் உள் அரசியலில் தலையீடு செய்கின்றது. அமைதித் தீர்வில் மிகுந்த அக்கறை காட்டிய யப்பான் போருக்கு எனப் பண உதவி செய்கின்றது. இந்தியாவோ தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளையும் தமிழீழப் போராட்டத்தின் நியாயத்தையும் புறந்தள்ளி விட்டு சிறிலங்காவோடு, உறவை வளர்க்கப் பெரிதும் விளைகின்றது. சிறிலங்காவின் தமிழின அழிப்புக்குப் போர்க்கருவிகள், பண உதவிகள், போர்ப்பயிற்சிகள் என வழங்கிப் பெரிதும் துணை புரிகின்றது.

அமெரிக்கா இப்போது அதன் நலன்களுக்கு எதிராகச் செயற்படக்கூடிய நாடுகள், அமைப்புக்கள் மீது முன் செயலிழப்புத் (Pசந-நஅpவiஎந) திட்டத்தைச் செயற்படுத்தி வருகின்றது. அதன் நலனுக்கு ஆபத்து என அது கருதுவோர் மீது- ஏதாவது பொய்க் காரணங்களைக் காட்டியாவது- அது தாக்குதலை நடத்தும் இதுவே அதனது முன் செயலிழப்புக் கொள்கையாகும்.

அமெரிக்கா அதன் நலன்களுக்கு எதிராக எதிர்காலத்தில் எழும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஒரு தாக்குதல் தளமாகவும் மத்திய கிழக்கிலிருந்தான நில நெய்வழியைக் காக்கக்கூடிய இடமாகவும் இந்த இரண்டு இலக்குகளையும் அடையக்கூடிய மூலோபாய இடமாகவும் இலங்கைத்தீவைக் கருதுகின்றது.

இன்று இசுலாம் உலகின் இரண்டாவது பெரிய மதமாக வளர்ந்துள்ளது. அது அரபுகளை மட்டும் உள்ளடக்கிய மதமாக இல்லாமல் இசுப்பானியர்கள், மூர்கள, கறுப்பு ஆபிரிக்கர்கள், கிழக்கு ஐரோப்பியர், துருக்கியர், குர்தீசுகள், ஆர்மீனியர்கள், ஈரானியர், ஆப்கானிசுத்தவர், மத்திய ஆசியாவிலிருக்கும் பல இனக்குழுவினர், மொங்கோலியர், சீனர், பாகிசுத்தானியர், இந்தியர், பங்களா தேசத்தினர், மலேசியர், இந்தோனேசியர் எனப் பல்வேறு நாட்டு மக்களிடையேயும் பரவிய ஒரு மதமாக இருக்கின்றது.

இந்து மாவாரியானது ஏறத்தாழ ஒரு முசுலிம் ஏரிபோலவே காணப்படுகின்றது. அது கிழக்கே பங்களாதேசம், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்சு ஆகிய நாடுகளாலும் மேற்கே மொசாம்பிக், சான்சிபர், சோமாலியா, சூடான், எகிப்து, யேமன், சவுதி அரேபியா ஆகியவற்றோடு பாரசீக வளைகுடா, அரேபியன் கடல் ஆகியவற்றைக் கண்காணிக்கும் நாடுகளாலும்- இவற்றுள் பாகிசுத்தானும் இந்தியாவும் அடங்கும்- சூழப்பட்டிருக்கின்றது. இந்தியாவில் இரண்டரைக்கோடி முசுலிம் மக்கள் உள்ளனர்.

இங்குள்ள பல நாடுகளில் அல்-குவைதா அமைப்பு நன்கு காலூன்றியுள்ளது. இதனால் பெருமளவில் இயிகாதிகள் (துihயனளைவ) உருவாக்கப்படுகின்றனர்.

உலகிற்கான நிலநெய்யைக் கப்பல் மூலம் கொண்டு செல்லும் வழியில் மூன்று இடங்களில் தடையை ஏற்படுத்தல் சுலபம். சுயசுகால்வாய், கோமசு நீர்க்கால், மலாக்கன் நீர்க்கால் ஆகிய ஒடுங்கிய வழிகள் முசுலிம் மக்களைக்கொண்ட நாடுகளின் அரண்கள் வழியே இருக் கின்றன. உலகின் 60மூ நிலநெய் செல்லும் வழி இதுதான். இயிகாதிகள் இதனைத் தடுக்க முயலுவர் என அமெரிக்காவோடு மேற்குலகு அஞ்சுகின்றது.

கசுபியன் கடற்பகுதியில் பெருமளவிலிருக்கும் நிலநெய்யைக் குழாய் மூலம் ஆப்கானிசுத்தானூடாக அமெரிக்கா கொண்டு செல்வதற்காகவே அது ஆப்கானிசுத்தான் மீது படையெடுத்தது. இங்கு அது செய்யும் முதலீடு காரணமாக கோமசு நீர்க்காலும் சுயசு கால்வாயும் எவ்வாறேனும் காக்கப்பட வேண்டும். சுயசு கால்வாயில் சில நிலநெய் தாங்கிகள் தாக்கி மூழ்கடிக்கப்பட்டால் அல்லது கோமசு நீர்க்காலில் தாங்கிகள் மூழ்கடிக்கப்பட்டால் பாரசீக வளைகுடா, கசுபியன் கடல் ஆகியவற்றிலிருந்து செல்லும் நிலநெய் முற்றாகத் தடைப்படும். இதனால் உலகப் பொருளாதாரம் பெரும் பின்னடைவை எதிர்கொள்ளும்.

இதன் காரணமாக அமெரிக்கா, மேற்குலகோடு யப்பானுக்கும் இந்துமாவாரியில் உள்ள வழிகளை காப்பாக்குவதும் அதில் தடையேற்படாது இருப்பதும் இன்றியமையாததாக இருக்கின்றது. இதனால் இவை இயிகாதிகளால் குழப்ப முடியாத ஒரு நடுநிலையான தளத்தைத் தேடுகின்றன. அந்தத் தளத்திலிருந்து இந்த வழிகளைக் கண்காணிக்கவும் காக்கவும் விரும்புகின்றன.

அமெரிக்காவுக்கு இடியாகோ கார்சியாவில் ஒரு தளமுண்டு. இடியாகோ கார்சியாவைத் தளமாக அமெரிக்கா பயன்படுத்துவதற்கான உடன்பாடு 2017-இல் முடிவுக்கு வருகின்றது. இடியாகோ கார்சியாவில் 900 அமெரிக்கப் படையினர் அதனது ஐந்தாவது கடற்படைக்கும் பி-52 சிகுவாட்டிரன் குண்டு வீசிகளுக்கும் ஆதரவு தர இருக்கின்றனர். இத்தளத்திலிருந்தே ஆப்கானிசுத்தான் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

இந்தச் சூழலிலேயே அமெரிக்கா திருமலையில் ஒரு தளத்தை அமைக்க விரும்புகின்றது. இலங்கையை அது ஒரு பௌத்த நாடாகப் பார்க்கின்றது. இலங்கையில் இயிகாதிகளால் குழப்ப மேற்படுத்த முடியாது என அது கருது கின்றது.

இந்தியாவும் அதன் நாட்டுள் எழக்கூடிய இயிகாதிகளின் அச்சுறுத்தலையும் எழுச்சிபெற்று வரும் சீனாவின் அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள அமெரிக்காவின் ஒத்துழைப்பையும் காப்பையும் விரும்புகின்றது.

திருக்கோணமலை உலகில் மூன்றாவது பெரிய இயற்கைத் துறைமுகத்தைக் கொண்டுள்ளது. இங்கு அமெரிக்காவின் அணு நீர் மூழ்கிக்கப்பல் காப்பாக மறைந்திருக்கக்கூடிய ஒரு ஆழமான சுரங்கமுண்டு. மேலும் திருக்கோணமலையில் நிலநெய்யைச் சேமித்து வைக்கக் கூடிய நூறு பெரிய நிலநெய்த் தாங்கிகள் உண்டு. இதனைப் பயன்படுத்தி அமெரிக் காவால் அதனது ஐந்தாவது கடற்படைத் தொகுதிக்கு நிலநெய் வழங்கலை மேற்கொள்ளமுடியும். அதனால், திருமலை வான் தளத்தை அமெரிக்காவின் பி-52, எவ்-14 வானூர்திகள் பயன்படுத்தக் கூடிய வகையில் சீரமைக்க முடியும். அமெரிக்கா சிறிலங்காவுடன் 2002-இல் ஒரு காப்பு உடன்படிக்கையைச் செய்தது. இதன்மூலம் அமெரிக்கக் கடற்படை சிறிலங்காவின் துறைமுகங்களுக்குச் செல்வதற்கான ஒப்புதலைப் பெற்றுள்ளது.

அடுத்த இருபது ஆண்டுகளில் சீன ஆசியாவின் வலுமிக்க வல்லரசாகும். அதனது விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு இலங்கை மூலோபாய ரீதியில் நல்ல இடமாகும். மத்திய கிழக்கிலிருந்து நிலநெய்யை இறக்குமதி செய்யும் சீனாவானது மியான்மர், இந்தோனேசியாவிலிருக்கும் நிலநெய்மீதும் கண் வைக்கலாம். யப்பான் இதே காரணத்திற்கான 1940-இல் இப்பகுதியில் போரிட்டதும் குறிப்பிடத்தக்கது.

இயிகாதிகளின் செல்வாக்கை முன்செயலிழக்கச் செய்யவும். மத்திய கிழக்கிலிருந்து சுயசு கால்வாய், கோமசு நீர்க்காலூடான கடல் வழியைத் திறந்து வைத்திருக்கவும் அமெரிக்கா, இந்தியா, யப்பான் ஆகிய நாடுகள் இலங்கையை மூலோபாய வகையில் மிக முக்கிய நாடாகக் கருதுகின்றன. அவற்றிற்கு இருக்கும் பெரிய சிக்கல் இங்கு நடக்கும் போராகும். எனவே இந்தப் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே அவற்றின் விருப்பாகும்.

போரை முடிவுக்குக்கொண்டு வரவேண்டும். எனும் அவற்றின் விருப்பில் தமிழர் உரிமை குறித்துப்பெரிய அளவில் அக்கறை இருப்பதாக அவற்றின் கடந்த, நிகழ்கால நடவடிக்கைகள் காட்டவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலமிழக்கச் செய்வதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைக்குரலை வலுவிழக்கச் செய்து சிங்களப் பேரினவாதம் விரும்பும் ஒரு தீர்வைத் தமிழ்மக்கள் மீது திணிக்கவே அவை விரும்புகின்றன. அமைதி என்ற போர்வையில் போராட்டத்தை நீர்த்துப்போக வைக்க முடியும் என்ற அவற்றின் கனவு சிதைந்துவிட அவை சிங்களப் பேரினவாத வெறிக்கு ஊக்கம் தந்து அதற்குப் படைக்கலம் தந்து தமிழர்களின் உரிமைக் குரலை நசுக்கும் பணியில் வெட்கமின்றி மனச்சாட்சியின்றி ஈடுபட்டுள்ளன.

அதனது நலனுக்காக தமிழர்களின் உணர்வுகளைப் புறந்தள்ளிச் செய்யப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தற்காலிக வட கிழக்கு மாகாண இணைப்பை சிங்கள அரசு கைவிட்டபோது இந்தியாவின் செயலின்மை மேற்கூறிய கருத்துக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். இந்த ஒப்பந்தத்திற்குச் செயல் வடிவம் தரவே போர் தொடுத்ததாகக் கூறிய இந்திய அரசு அதற்காக ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களைக் கொன்று குவித்து நூற்றுக்கணக்கில் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, தமிழர்களின் பொருளாதாரத்தை அழித்தது.

இப்போது அமெரிக்கா, இந்தியா, யப்பான், பாகிசுத்தான், சீனா ஆகிய நாடுகள் இலங்கையில் இருக்கும் ~பயங்கரவாதத்தை| ஒழிக்கத் தாம் சிறிலங்காவுக்கு உதவுவதாகக் கூறுகின்றன. அதேவேளை தமிழர்கள் உரிமை குறித்து அவ்வப்போது கடமைக்குப் பேசி வருகின்றன.

இரண்டாம் உலகப் போரின் பின் யப்பானுக்கு விடுதலை அளிக்க வேண்டுமென அப்போது சிலோன் என்று அழைக்கப்படும் இலங்கைத்தீவின் வெளி விடய அமைச்சராக இருந்த யே.ஆர்.யெயவர்த்தனா 1952-ல் சான்பிரான்சிக்கோ மாநாட்டில் பேசியமைக்காக யப்பான் சிறிலங்காவை நன்றி உணர்வுடன் மதித்து வருகின்றது. யப்பான் வழங்கும் இரு நாடுகளுக்கான உதவிப் பணத்தில் பெருமளவு பணம் சிறிலங்காவுக்கே தரப்படுகின்றது. இந்தப் பகுதியில் அது அளிக்கும் கடனில் மூன்றிலொரு பகுதியை சிறிலங்காவுக்கே தருகின்றது. சிறிலங்கா பெறும் இரு நாடுகளுக்கான உதவிகளில் நாற்பது வீதத்தை யப்பானே தருகின்றது. மகாயன பௌத்த நாடான யப்பான் தேரவாத பௌத்த நாடான சிறிலங்காவுடன் கொண்டிருக்கும் உறவானது மதம், நன்றிக்கடன் என்பதற்கு அப்பால் தென்னாசிய வர்த்தகம், இப்பகுதியை ஆதிக்கஞ்செலுத்தல், புல்மோட்டையிலிருக்கும் கனிம வளங்களைப் பெறுதல் ஆகிய நோக்கங்களைக் கொண்டிருக்கின்றது. அது இப்போது, இவற்றிற்கெல்லாம் மேலாக மேலே கூறப்பட்ட காரணங்களுக்காகவும் சிறிலங்கா அரசுக்கு உதவி வருகின்றது.

சிறிலங்கா அரசைப் பொறுத்த வரை அதனது உண்மையான நட்பு நாடு சீனாவே. இது இந்தியா, அமெரிக்கா, யப்பான் ஆகிய நாடுகளுக்குத் தெரியும். அது முக்கிய காலகட்டங்களில் இந்தியாவைக் கைவிடும். முன்பு கைவிட்டும் இருக்கின்றது. இந்திய எதிர்;ப்பு என்பது சிங்களப் பேரினவாதிகளின் மரபணுக்குள்ளேயே பொதிந்து கிடக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் போரால் வலுவிழக்கச்செய்ய முடியாது என்பதைக் காலம் இந்நாடுகளுக்கு உணர்த்தும். அதற்குள் சிங்களப் பேரினவாதத்தால் மலையகம் வாழ் தமிழர், முசுலிங்களின் வெறுப்பையும் கோபத்தையும் சிறிலங்கா எதிர்கொள்ளும் பொருளாதாரம் சீரழிவு, நாடு முழுவதையும் படையமயமாக்கல் என்பன சிங்களவர் களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும்.

இன்று சூழல் தமிழீழத்திற்கு எதிரானதுபோல காட்சியளிப்பினும் நாம் வலுவோடு அடிபணியாது, துணிந்து எமது உரிமைக்காக எவ்வளவு இடர்வரினும் போரிடுவோமாயின் சூழல் மாறும் தமிழீழத் தனியரசுக்கான வாசல் தானாகவே திறக்கும்.

உசாத்துணைக் கட்டுரை:

* Neville Jayaweera-the geo-politics of south Asia and Srilankan Changing Fortunes (Or why the USA and India will Intervene in Srilanka)

* Sisil de pandith- Golden Jubliee of Srilanka- Japan relationship

யோ.சே.யோகி

0 Comments: