Friday, October 26, 2007

புலிகளை முற்றாக தோற்கடிக்க வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் நாட்டை முற்றாக அழித்துவிடக் கூடாது

கிழக்கு கைப்பற்றப்பட்டது போல், வடக்கையும் கைப்பற்றுவோம். கிழக்கு மக்கள் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது போல, வடக்கிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள், இவ்வாறாகவே அரச தரப்பு உயர் மட்டத்தினர் அண்மைக் காலமாக மார்தட்டி வந்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் 3 ஆயுதக் கப்பல்களை தாக்கி அழித்து விட்டதாகப் பறைசாற்றி திருகோணமலை கடற்படைத்தளத்தில் கொண்டாட்டம் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆற்றிய தனதுரையில், விடுதலைப் புலிகளை 50% அல்ல 75% அல்ல 100% தோற்கடிக்க வேண்டும் என முழக்கம் செய்திருந்தார்.

சென்ற வாரம் `மக்கள் சந்திப்பு' எனப்படும் தொலைக்காட்சிப் பேட்டியில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்காமல் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அடித்துக் கூறியிருந்தார். கிழக்கு கைப்பற்றப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகள் பல வீனமடைந்து விட்டனர் என தென்னிலங்கையில் பெரியளவில் பிரசாரம் செய்யப்பட்டது. அவர்கள் நொண்டி நொண்டிக் கொண்டிருக்கின்றனர் என்று கூட ஒரு சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். சென்ற மாதம் கத்தோலிக்க ஆயர் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனைச் சந்தித்து கலந்துரையாடிய பின் "ஏசியன் நியூஸ்" எனும் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியொன்றில், விடுதலைப் புலிகள் பலவீனப்பட்டிருப்பதாகவோ, அச்சம் எதுவும் கொண்டிருப்பதாகவோ தனக்கு எண்ண முடியவில்லையெனக் கூறியிருந்தார்.

ஒரு வார கால இடைவெளியில் விடுதலைப் புலிகள் தென்னிலங்கையில் இருவேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அதாவது, முதலாவதாக சென்ற வாரம் (15 ஆம் திகதி) யால தேசிய பூங்காவில் அமைந்துள்ள இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். அது குறிப்பாக உல்லாசப் பயணத்துறைக்கு குறிப்பிடத்தக்களவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மீது உருவாக்கியுள்ள தாக்கமானது, குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல. இரண்டாவதாக சென்ற திங்கள் அதிகாலை அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீது நடத்தப்பட்ட வான்வழி - தரைவழித் தாக்குதலானது, ஒரு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்துள்ளது என்று கூறினால் அது மிகையல்ல.

பயங்கரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பான மாநாடு

சென்ற வாரம் "பயங்கரவாதத்தை எதிர்கொள்வது" எனும் தொனிப் பொருளில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற மாநாட்டில் பங்கு பற்றியவர்களில் ஒரு வராகிய பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் கலாநிதி ஜெரார்ட் சாலியான்ட், விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவத்தினரால் தோற்கடிக்க முடியாது எனவும் தமிழரின் நியாயபூர்வமான கோரிக்கையை அங்கீகரித்து பரந்தளவு சுயாட்சி வழங்குவதே சிறந்த வழி எனவும் கூறியுள்ளார். இலங்கை இராணுவம் சிறப்பாகச் செயற்படுவதாகவும் சாலியான்ட் தொலைவிலிருந்து கள நிலைவரம் தெரியாமல் பேசுகிறார் என்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இதற்கு முன்னரும் சில இராஜதந்திரிகள் இலங்கை இனப் பிரச்சினைக்கு இராணுவ அணுகுமுறை அன்றி அரசியல் தீர்வொன்றே விரைந்து காணப்பட வேண்டியதாகும் என கருத்துத் தெரிவித்துள்ளனர். உதாரணமாக, அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் நம்பகத்தன்மையான அரசியல் தீர்வுத் திட்டம் இன்றி விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாதென கடந்த ஒரு வருட காலப்பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை கூறியுள்ளார். அது போலவே, அண்மையில் இடம்பெற்ற ஜேர்மன் தேசிய தின வைபவத்தின் போது, ஜேர்மன் தூதுவர் ஜோர்ஜன் வீர்த் இனப்பிரச்சினைக்கு யுத்தம் தீர்வாகாது யார் எவ்வாறு தான் அர்த்தம் கற்பித்தாலும் யுத்தம் கொடியது. ஒருவரை ஒருவர் கொல்லாமல் சமாதானமாகச் சேர்ந்து வாழ நாம் கற்றுக் கொள்ள முடியாது எனவும் நாம் உலகப் பிரஜைகள் என்ற வகையில் இலங்கை எதிர்நோக்கும் எரியும் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வை இலங்கை மக்களே காண்பதற்கு நாம் கைகொடுக்கவே விரும்புகிறோம் எனவும் வீர்த் கூறியுள்ளார். ஆனால், வீர்த் தனது கற்பனையில் 2011 இல் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு நோபல் பரிசு கைக்கெட்டும் நாள் வரவேண்டும் என்று ஆசைவார்த்தை கூறி நாட்டைப் பிரித்து விடப்பார்க்கிறார் என ஜே.வி.பி.யினர் தமக்கே உரிய பாணியில் வீர்த் மீது எரிந்து விழுந்துள்ளனர்.

ஜனாதிபதியின் `இந்துஸ்தான் ரைம்ஸ் உரை'

ஜனாதிபதி ராஜபக்ஷ அண்மையில் `இந்துஸ்தான் ரைம்ஸ்' தலைமை மாநாட்டில் ஆற்றிய உரையில் இன்றைய `ஏசியன் நூற்றாண்டு' என்ற காலகட்டத்தில் இந்தியா தனிச்சிறப்பு வாய்ந்த தலைமைத்துவமளிக்கும் வாசற்படியில் நின்று கொண்டிருப்பதாகவும் இந்தியா சுதந்திரமடைந்த காலம் முதல், ஆட்சி செய்யும் விடயத்தில் தனது சொந்தக் கைவண்ணத்தை பிரயோகித்துள்ளது எனவும் பாராட்டியுள்ளார். மாறாக, இலங்கை ஒரு ஜனநாயக நாடாக இருந்து வந்துள்ள போதும், எமது சுதந்திர இலட்சியங்கள் முதலியன கொண்டதொரு அரசியலமைப்பினை எமது மக்களால் சிருஷ்டிக்க முடியாமற் போனது ஒரு குறைபாடாக இருந்து வந்துள்ளது என ராஜபக்ஷ வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆனால், 1972 ஆம், 1978 ஆம் ஆண்டுகளில் இலங்கையிலேயே இருவேறு குடியரசு யாப்புகள் தயாரிக்கப்பட்டன என்பதை ஜனாதிபதி ஏன் மறந்து விட்டாரோ? ஆனால், இரண்டு யாப்புகளிலுமே தமிழரின் சுயாட்சி அபிலாஷைகள் உள்வாங்கப்படாததால் அவை தமிழரால் ஏற்றுக் கொள்ளப்படாதவையாகும். தனது உரையில் ஒரு கட்டத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிந்தோ, தெரியாமலோ கூறிவைத்த இன்னொரு விடயத்தினை சென்னை வதியும் பிரபல இந்திய ஆய்வாளர் என்.சத்தியமூர்த்தி அதனை சற்று சுவாரஸ்யமாக வியாக்கியானம் செய்துள்ளார். `நான் ஒரு கிராமம்' தந்த பையனாகவே உதித்தேன். ஆனால், அந்தக் `கிராமம்' என்னுள்ளேயே இருந்துள்ளது.' என்றுதான் ராஜபக்ஷ கூறிவிட்டார். அதனை சத்திய மூர்த்தி பின்வருமாறு விமர்சித்துள்ளார். "தமிழர் தவிர, இலங்கையின் இன்றைய, புதிய தலைமுறையினரின் நிலையும் அதுதான். தமிழர் அந்தக் `கிராமம்' என்பதற்கு வெளியே வந்து நீண்ட காலமாகி விட்டது. ஆனால், நாட்டின் ஏனையோர் அவர்களோடு சேர்ந்துவரப்புறப்படவில்லை. மாறாக, சிங்கள சமுதாயமானது அந்த `கிராமத்திற்குள்ளேயே' தேங்கி விட்டது.... ஜனாதிபதி ராஜபக்ஷ இலங்கைக்கு சமாதானத்தையும் சுபீட்சத்தையும் கொண்டு வர வேண்டுமாயின் , அந்தக் `கிராமம்' அந்தப் `பையனை' விட்டுவிட வேண்டும். அதேபோல், அந்தப் `பையன்' அந்தக் `கிராமத்தை' விட்டுவிலக வேண்டும். அதாவது, தென்னிலங்கை சிங்களவர்தான் தனக்கு வாக்களித்தவர்கள் என்று முன்னர் கூறியதற்கு மாறாக, தான் இலங்கை ஜனாதிபதி என அவர் எண்ணவேண்டும்", இதுதான் சத்தியமூர்த்தி கூறியுள்ளதன் சாராம்சம் ஆகும்.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா

இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காண்பதையே தனது அடிநாதமாகக் கொண்டு பயணித்து வந்துள்ளது. அவ்வப்போது வெவ்வேறு பிரச்சினைகள் தோன்றிவந்துள்ள போதும், அவற்றுக்கு அப்பால் இந்திய தேசம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து புதிய அரசியல் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்ட பின், மூன்றாவது தடவையாக அது தற்போது மீளாய்வு செய்யப்பட்டு வருகிறது. காலத்திற்கேற்ப மாற்றங்களும் தேவைக்கேற்றவாறு கூடுதலான அதிகாரப் பகிர்வு முயற்சிகளும் (சில மாநிலங்களைப் பொறுத்தவரை சமச்சீரற்ற முறையிலும் கூட) மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் பொருட்டு, "அரசியல் அமைப்பு செயற்பாடு மீளாய்வுக்கு ஆன தேசிய ஆணைக்குழு" என்னும் கட்டமைப்பு ஒன்று நிரந்தர அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது.

இந்திய நீதித்துறையும் இவற்றையெல்லாம் நன்கு கணக்கில் எடுத்துச் செயற்பட்டு வருகிறது. சட்டவாக்க மற்றும் நிறைவேற்றுத் துறைகள் தவறிழைக்கும் கட்டங்களில் நீதித்துறை அவற்றை சீர்திருத்தி செயற்பட்டு, வருகின்றது. மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களை கலைத்துவிடும் அதிகாரத்தினை இந்திய உச்ச நீதிமன்றம் அகற்றிவிடத் தலைப்படவில்லையாயினும் அதனை இலகுவாக, அரசியல் மயப்படுத்தி நடைமுறைப்படுத்த முடியாதளவிற்கு உச்ச நீதிமன்றம் பாதுகாவலனாக விளங்குகின்றது.

இலங்கையில் வேற்றுமையை வளர்க்கும் பேரினவாதம் இலங்கையைப் பொறுத்தவரை வேற்றுமையில் ஒற்றுமை காண்பதை ஆட்சியாளர் முற்றாகப் புறந்தள்ளி விட்டு வேற்றுமைகளையே சிங்கள பேரினவாத உரமிட்டு வளர்த்து வருகின்றனர். தமிழர் மீது இடையறாது இனக்கொலைத் தாக்குதல்கள் நடத்தி அடிமைப்படுத்தி விடலாமென அவர்கள் எண்ணுகின்றனர்.

இச்சந்தர்ப்பத்தில் கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை பேராசிரியர் ஜயதேவ உயாங்கொட அண்மையில் கூறிவைத்த கருத்துகளைப் பார்ப்போம். அதாவது இந்தியாவில் சமஷ்டி ஆட்சி முறை நிலவுவதாக மேலோட்டமாக எண்ணப்பட்டாலும் 1951 இல் நிறைவேற்றப்பட்ட அரசியல் அமைப்பானது, அப்படியானதல்ல. அது இலங்கையின் நிலையில் தான் அன்று இருந்தது.

பின்பு காலத்திற்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் நாம் கிணற்றுத் தவளைகள் போல் ஒரு அங்குலமாவது நகர்வதற்கு அழுங்குப்பிடியாக மறுத்து தேங்கிவிட்டோம். மத்தியில் அரசாங்கம் பலமாய் இருக்க வேண்டுமென்று எண்ணப்பட்டதே தவிர, மாற்றமடையும் நிலைமைகளுக்கு ஏற்ப கட்டமைப்பு மாற்றங்கள் தேவைப்பட்ட போதும் நாம் அவற்றை உதாசீனம் செய்து விட்டோம். இந்தியாவிடம் குறுகிய அல்லது தறுதலை மனோபாவம் அற்றிருந்தமை அதன் சிறப்பம்சமாகும்.

இலங்கையைப் பொறுத்தவரை காலம் காலமாக கட்டவிழ்த்து விடப்பட்டு வந்த பேரினவாத பித்தலாட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இனவிரிசலை நிச்சயமாக யுத்தத்தின் மூலம் தீர்த்து விட முடியாது.

இந்தியாவில் மாநில அரசுகளுக்கு கூடுதலான சுயாதீனம் வழங்கப்பட்டுள்ளது. அதனைப் பாதுகாப்பதில் இந்திய உச்சநீதிமன்றம் குறியாய் உள்ளது. இந்திய நீதித்துறை அரசியல் மயப்படுத்தப்படாமல் இருப்பது பெருமைக்குரியதாகும். அதிகாரப்பகிர்வு விடயத்தில் இந்தியாவில் பெரும்பான்மையினர் சிறுபான்மையினரின் மீது நம்பிக்கை வைத்து செயற்பட்டு வருகின்றனர். சிறுபான்மையினருக்கு தேவையான அதிகாரங்களை வழங்குவதற்கு பெரும்பான்மையினர் அச்சம் கொள்வதில்லை. சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பிரதானமானது என்றவாறாகவே ஜனநாயகமானது அங்கே புரிந்து கொள்ளப்படுகிறது. அதற்கு முற்றிலும் மாறாகவே இலங்கையில் உள்ள பெரும்பான்மை அரசியல்வாதிகள், அதிகாரவாதிகள் , புத்திஜீவிகள் முதலியோர் சிறுபான்மையினர் மீது நம்பிக்கை வைப்பது கிடையாத நிலை காணப்படுகிறது. மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பேணுவது நாட்டின் ஐக்கியத்திற்கு தடையாய் உள்ளது என்ற கேவலமான சிந்தனையும் அவர்கள் மத்தியில் உண்டு. இவ்வாறாகவே பேராசிரியர் உயாங்கொட தனது உள்ளக்கிடக்கையினை வெளிக்கொணர்ந்துள்ளார்.

இந்தியாவைப் புகழ்ந்து பேசி இலங்கைக்கு இந்தியாவின் தார்மீக ஆதரவு தாராளமாயுண்டு என சூளுரைத்து வரும் ஜனாதிபதி ராஜபக்ஷ, ஏன் இந்தியாவின் செயற்பாட்டினை சற்று முன்னுதாரணமாகக் கொள்ளக்கூடாது? இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் கீழ் தற்காலிகமாகவேனும் 18 வருடங்களாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு- கிழக்கு சட்டரீதியாக நோக்கும் நிலையிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளதாயினும், அதனை ஏன் அரசியல் ரீதியாக மீள இணைப்பதற்குத் தலைப்படவில்லை? பேரினவாதம் போட்டு வந்துள்ள தடைக்கற்களும் 3 தசாப்த கால யுத்தம் தந்த பேரழிவும் போதும். யுத்தம் பிரச்சினைக்குத் தீர்வாகாது என பல்வேறு வட்டாரங்களிலிருந்து விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை அரசாங்கம் செவிமடுக்க வேண்டும். அதனை விடுத்து, ஆட்சியைத் தக்க வைப்பதற்காக விடுதலைப் புலிகளை முற்றாகத் தோற்கடிக்க வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் நாட்டை முற்றாக அழித்து விடக்கூடாதென்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

TK

0 Comments: