Monday, February 11, 2008

ஒற்றையாட்சியை உறுதிப்படுத்தும் அறுபதாவது சுதந்திரதினம்

வட கிழக்கில் "நமோ... நமோ... தாயே' கேட்கவில்லை. வழமைபோன்று துக்க தினம்.
தென்னிலங்கையில், வீடுகளிற்குள் மக்கள், வெடிகுண்டு அதிர்வுகளுக்கு மத்தியில் கொழும்பில் தேசியக் கொடி ஏற்றினார் ஜனாதிபதி.

அந்த வகையில் பலத்த பாதுகாப்போடு சோசலிசக் குடியரசின் 60 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

இந்திய ராடர்களும் சீன தாங்கிகளும் பாகிஸ்தான் பல்குழல் பீரங்கிகளும் நாட்டின் தலைமகளிற்கு பாதுகாப்பு வழங்கி சுதந்திரத்தை உறுதிப்படுத்தின.
1925 இல் கண்டி மாநாட்டில் கண்டிச் சிங்களவர்களுக்கு சமஷ்டி அரசு கோரிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் அரசியல் வாரிசுகள் ஒற்றையாட்சிக்குள் தீர்வென்ற முடிவினை 60 ஆவது சுதந்திர தினச் செய்தியாக்கினர்.

அதாவது கரையோரச் சிங்களத் தலைமைகள், பிரித்தானிய ஆட்சிக் காலத்திலிருந்து இற்றைவரை ஒற்றையாட்சி என்கிற அரசியல் கருத்துருவத்தை எக்கால கட்டத்திலும் விட்டுக் கொடுக்கவில்லையென்கிற உண்மை இன்றும் தெளிவாகத் தெரிகிறது.
பண்டாரநாயக்கவின், முக்கூறாக்கப்பட்ட சமஷ்டி இராஜ்ஜியங்களை அன்று கரையோர சிங்களத் தலைமை ஏற்றுக் கொள்ளவில்லை.
வட கிழக்குத் தமிழர்களுக்கும் கண்டிச் சிங்களவர்களுக்கும் கரையோரச் சிங்களவர்களுக்குமாக தனித்தனி சமஷ்டி அரசுகள் உருவாக்கப்பட வேண்டுமென்கிற கருத்தினை கண்டி மாநாட்டில் முன்வைத்தபோது தமிழ்த் தலைவர்களும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒற்றையாட்சியின் கீழ் முழு இலங்கையிலும் இன ரீதியான பிரதிநிதித்துவமும் சம வாய்ப்பும் தரப்பட வேண்டுமென்பதே தமிழ் தலைமையின் கோரிக்கை.

இதற்கு மறுதலையாக ஒற்றையாட்சியில் பெரும்பான்மை இனத்தின் அதிகாரம் நிலை நிறுத்தப்பட வேண்டுமென கரையோர சிங்களத் தலைமைகள் உறுதியாக இருந்தன.
அதேவேளை, வட கிழக்கிற்கு பூரண சுயாட்சி வழங்கப்பட வேண்டுமென்கிற அடிப்படையில் தமது அரசியல் நிலைப்பாட்டினை வகுத்துக் கொண்டது யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ்.
83 ஆண்டுக்கு முன்னர் நிகழ்ந்த இந்த முத்தரப்பு இறுக்க சூழலை இன்றைய கால கட்டத்தில் நினைவுபடுத்திப் பார்த்தால் பல விளக்கங்களும் தெளிவுகளும் புலப்படும்.

தமிழர் தலைமையின் ஒற்றையாட்சிக்குட்பட்ட அதிகாரப் பகிர்வினை எதிர்த்து தமிழர் தாயகத்தில் பூரண சுயாட்சி கோரிய யாழ்ப்பாண வாலிப காங்கிரஸின் கருத்து நிலை புதிய தளம் நோக்கிய வளர்ச்சிப் பாதையில் தாயகம், தேசியம், தன்னாட்சி என்கிற முதிர்வு நிலையை தற்போது எட்டியுள்ளது.
ஒட்டுமொத்த இலங்கைக்குள் சமபங்கு கேட்டுப் போராடிய தமிழ் தலைமைகள், தனித் தமிழீழம் அமைக்க 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தீர்மானம் மேற்கொண்டனர்.

1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் அதற்கான தமிழர் தாயக மக்களாணையும் பெறப்பட்டது. தமிழ் மக்களின் தனியரசுக் கோரிக்கையை ஜனநாயக வழிமுறையூடாக சிங்களம் ஏற்றுக் கொள்ளாது என்பதைப் புரிந்து கொண்ட புதிய இளைஞர் சமுதாயம் ஆயுதப் போராட்ட வடிவத்தை உள்வாங்கிக் கொண்டது. அதன் அரசியல் பரிணாம வளர்ச்சியின் முற்போக்கான தன்மையாகவே கருத வேண்டியுள்ளது.

அஹிம்சைப் போராட்ட வடிவத்தை பேரினவாதம் எதிர்கொண்ட முறைமையில் சிதைவுகள் கட்டுக் கடங்காமல் பரவி நிற்க, நிமிர்வினை ஏற்படுத்தும் வெடிப்பு நிலையே ஆயுத போராட்ட முறைமைக்கு உந்து விசையாக அமைந்தது. தமிழர் தேசிய விடுதலை போராட்ட தொடர் நிகழ்வின் புதிய பாய்ச்சலாகவே இதனைக் கருத வேண்டும்.
ஆயுத போராட்ட வளர்ச்சி, உச்ச நிலையை அடைந்துள்ள இக்கால கட்டத்தில் இரு துருவ அரசியல் வடிவம் எழுச்சி பெற்றுள்ளது.
படைவலுச் சமநிலையில் பாரிய பிரதேசங்கள், தமிழர் தேசியத் தலைமையின் ஆளுகைக்குற்பட்ட வேளையில் சர்வதேசமானது சமரசத் தளத்தினை உருவாக்கியது.

புரிந்துணர்வு ஒப்பந்தம், பேச்சுவார்த்தை என்கிற அசைவியக்கச் செயற்பாடுகள் நடைமுறை வடிவம் பெறுகையில் ஒற்றையாட்சிப் பிதாமகர்கள் தென்னிலங்கையில் ஆட்சிபீடமேறினர்.
பெரும்பான்மையின மக்களின் ஒற்றையாட்சித் தத்துவத்தை வரலாற்று ரீதியாக உறுதியாகக் காவிச் செல்லும் கரையோரச் சிங்களத் தலைமை, மஹிந்த சிந்தனை என்கிற கோட்பாட்டை தற்போது உயர்த்திப் பிடிக்கிறது.

"சமவுரிமை கோருவது' பயங்கரவாதமென்பதுதான் பேரினவாதச் சித்தாந்தத்தின் தற்போதைய அரசியல் கோட்பாடு.


இருவேறு யதார்த்த தளத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் இனச் சுத்திகரிப்பு என்கிற பாதையை சிங்களத்திடமும் நில மீட்பு என்கிற விடுதலைப் பாதையை தமிழர் தரப்பிடமும் விட்டுச் சென்றுள்ளது.

போரவலம், மனிதப் பேரவலமாக மாறுதலடையும் இவ்வேளையில் ஒற்றையாட்சியின் சகல அதிகாரங்களையும் தன் வசம் கொண்டுள்ள ஜனாதிபதி யுத்தம் மூலம் தமிழர் தரப்பின் அரசியல் அபிலாஷைகளை அழித்தொழிக்கும் பாதையை தேர்ந்தெடுத்துள்ளார்.

அதேவேளை தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையினை அங்கீகரிக்குமாறு சர்வதேசத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கும் விடுதலைப் புலிகள், அதனை வென்றெடுக்கும் பாதையில் சகல தமிழ் மக்களையும் அணி சேர்த்து தமது நிகழ்ச்சி நிரலை வகுத்துள்ளார்கள். தற்போது தென்னிலங்கையெங்கும் வெடி குண்டுகளின் அதிர்வலைகள் வியாபிக்கின்றன. வட கிழக்கு மக்கள் அனுபவித்து வரும் மனிதப் பேரவலங்களின் துயரச் சுமைகளை, சிங்கள ஊடகங்கள் திரைபோட்டு மறைத்தாலும் அதன் எதிரொலி வீச்சுக்கள் தமது வாசலிற்கு வருவதை தென்னிலங்கை மக்கள் அச்சத்துடன் உணர்கிறார்கள்.

ஜெனீவா சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தலைமை வகித்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் அண்மைய கூற்றொன்று இனப்பிளவினை துலாம்பரமாக எடுத்துக் காட்டுகிறது.

விடுதலைப் புலிகளுடன் இனி எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் கிடையாதென்பதை ஒரு அரசியல் பிரகடனமாக அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

தமிழர் தரப்புடன் அரசியல் தீர்வு குறித்து பேசப்படும் தளத்தை இக்கூற்று தகர்த்துள்ளதென்பதையே இவை எடுத்துக் காட்டுவதாக மக்கள் கருதுகின்றனர்.

தமது இராணுவ தீர்வுத் திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையிலேயே அரச தரப்பினரும் செய்திகளை வெளியிட்ட வண்ணமுள்ளனர்.
சிறுபான்மை இன அழிப்பு கருத்துருவாக்கம், சிங்கள அரசியல் ஆளுமையை விழுங்கி அதுவாகிக் தோற்றமுற்றிருக்கும் அழிவு நிலை, மாறுதலடையுமென சர்வதேசம் எதிர்பார்க்கலாம். விமான அரக்கனின் பேரிரைச்சலில் பதுங்கு குழிகளுக்குள் வாழ்வைக் கழிக்கும் வன்னிக் குழந்தைகளின் உளச் சிதைவுகளை சர்வதேச மானிடர்கள் தரிசிக்க மறுக்கிறார்கள்.

ஆழ ஊடுருவும் படையணியினர் மன்னாரில் பாடசாலை மாணவர்களை கொன்றொழித்தபோது இச் சர்வதேசத்தின் மனிதாபிமானக் கோட்பாடுகள் மரணித்து விட்டன.

தமிழர் தலைமையினை பூண்டோடு அழிக்கப் புறப்பட்டுள்ள பேரினவாதக் கூட்டம், முஸ்லிம்களை சவூதிக்கு இடம்பெயரச் சொல்கிறது.

பாலைவனக் காடுகளில் அவர் சிந்தும் வியர்வைகள், ரியாலாகவும், டினாராகவும் அரச கஜானாவை நிரப்பி அப்பணத்தில் இன ஒழிப்புச் சூதாட்டம் ஆடுகிறது பேரினவாதம்.
வடமுனையில் ஆரம்பித்து இற்றைவரை நீண்டு செல்கிறது பூர்வீக முஸ்லிம் குடிகளின் நிலம் மீதான ஆக்கிரமிப்பு.
பறிக்கப்படும் நிலங்களில் சிங்களத் தொன்மைகள், இரவோடு இரவாக இறக்கப்படுகின்றன. இந்நிலையில் வட கிழக்கில் வாழும் தமிழ் பேசும்இனங்களின் பூர்வீக பூமி பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தமென்கிற போர்வையில் சிங்கள பேரினவாதத்தால் ஆக்கிரமிக்கப்படுவதனை தற்போது நிதர்சனமாகக் காணலாம்.

செம்மணியில் மட்டுமா புதைகுழிகள்? தமிழர் தாயகமே புகை குழிகளின் தேசமாகி விட்டது. 48 இல் மலையக மக்களை நாடற்றவராக்கி 2007 இல் தமிழர் தாயகத்தை துண்டாடி இன்று இறுதிப் போர் தொடுத்தது வரை நீண்டு செல்கிறது இலங்கையின் 60 ஆண்டு கால சுதந்திர வரலாறு.

பனியிலும் வெயிலிலும் உதிரத்தைக் கொட்டும், இழப்பதற்கு ஏதுமற்ற மனிதக் கூட்டம். தோட்டப்புற அட்டைகளுக்கு இரத்த தானம் வழங்குவது வாழ்வாகிப் போய்விட்டது.

பூர்வீக மண்ணில் வியர்வை சிந்திய மூத்த தமிழ்க் குடிகள், வேர்களைச் சுமந்தபடி புலம்பெயர்ந்து அலைகின்றனர்.
இந்நிலையில் வன்னியை கைப்பற்றிய பின்னரே வடக்கின் இடைக்கால தீர்வு நாடகம் அரங்கேற்றப்படுமென தற்போது சிங்கள தேசம் கூறுகிறது. தீர்வினைக் காட்டி யுத்தம் புரியும் குறளி வித்தைக்காரர்களின் ஏமாற்று அரசியலை இன்றைய தமிழர் தலைமை தெளிவாகவே உணரும்.

அதேவேளை தீர்வினை வரவேற்ற தனித்துவ தேசமான இந்தியா புலிகளின் ஆளுகைப் பிரதேச நில அளவையில் கரிசனை காட்டுகிறது.

16,000 படையணியுடன் மன்னாரின் பல பிரதேசங்களை மீட்டு விட்டோமென அரச தரப்புக் கூறுவதால் அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டு அதிகளவு ஆயுத உதவி செய்யவே இந்த நிலப் பரப்பு கணக்குகளை தேடியலைகிறது இந்தியா.
இத்தகைய இந்திய, பாகிஸ்தான் ஆயுதக் குவிப்புகளால் உருவாக்கப்படுகின்ற புதிய படையணிகள், மன்னாரில் பரீட்சார்த்த களம் அமைத்து போரிட்டு வருகின்றன. ஆனாலும் மன்னாரில் அதிகரிக்கும் யுத்த அதிர்வுகள், ஜெயசிக்குறுவின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வாய்ப்புக்களையும் தோற்றுவிக்கலாம். இனித் திகதி குறிப்பிட்டு வெற்றிச் செய்திகளை விளம்பரப்படுத்த விசேட தினங்களை தேடியலைய வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது அரசாங்கம்.

மடு பிடிக்கும் செய்தி சொல்ல, புத்தாண்டு தினமே அடுத்து வரும் புனித நாளாகும். ஆயினும் காதலர் தினத்தையும் கவனத்தில் கொள்ளலாம்.

வரணிக்கு அடுத்ததாக புதிய விசேட படையணிகள் களத்தில் குவிக்கப்படுமிடமாக மன்னார் பிரதேசம் மையங் கொள்வதால் விடத்தல் தீவும் பூநகரியும் ஊடக முக்கியத்துவம் பெறக்கூடும்.
ஆயினும் மன்னாரின் ""ஒட்டி சுட்டான்'' எதுவென்பதை விடுதலைப் புலிகள் தீர்மானிக்கும் போது அரசின் நீண்ட காலச் சமர்களுக்கு முடிவுரை வரையப்படலாம்.



நன்றி - இதயச்சந்திரன் -

0 Comments: