Saturday, February 2, 2008

யுத்தத்தின் இயல்பான சுழற்சி.

நான்காம் ஈழப்போர் மாவிலாற்றில் தொடங்கி சம்பூர் வாகரை வவுணதீவு கொக்கட்டிச்சோலை குடும்பிமலையூடாக வன்னிக்குள் கொண்டுசெல்லப்பட்டுவிட்டது என கொழும்பின் அனைத்துவட்டாரங்களும் வெகு சில மாதங்களுக்கு முன்னர் மார்தட்டிக்கொண்டன.

இதன் வழியாக வன்னிக்குள் முடக்கப்பட்டிருக்கும் புலிகளை முற்றாக அழித்தொழிப்பதற்காக நிகழ்ச்சி நிரலைக்கூட அவர்கள் வெளியிட்டும் இருந்தார்கள். இதன் உச்சமாக ஐந்து படையணிகள் (53,56,57,58,59 வது டிவிசன்கள்) வன்னிக்குள் புகுவதற்கு தயாராக இருப்பதாகவும் வெறும் 7200 ஏக்கர் நிலம்மட்டுமே புலிகளின் வசம் இருப்பதாகவும் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் சார்பில் பேசவல்லராகிய அமைச்சர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.

ஆனால், கடந்த 20ம் திகதி இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன காலைச்செய்தி அறிக்கையில் முதன்மைச் செய்தியோ வேறுவிதமாக இருந்தது. நாட்டின் பாதுகாப்புக்குறித்து பரப்பப்படும் கட்டுக்கதைகளை நம்பவேண்டாம் என மக்களை வேண்டிக்கொண்டதோடு தென்பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 8000; படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் 2000 ஊர்காவற்படையினர் நியமிக்கபடவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

அரசு யுத்தத்தை வடக்கிற்குள் அதிலும் வன்னிக்குள் முடக்கிவிடுவதற்கு முயற்சித்தபோதும் யுத்தம் அம்பாறை, அம்பாந்தோட்டை, மொனறாகல வழியாக இப்போது இரத்தினபுரி மாவட்டத்திற்குள்ளும் பிரவேசித்து விட்டதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரத்திரனபுரி மாவட்டத்திற்குட்பட்ட உடவளவை வனச்சரணாலயம் ஆயுதபாணிகள் அங்கு மறைந்திருக்கலாம் என்ற அச்சத்தையடுத்து மூடப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் மூடப்பட்ட யால வனச்சரணாலயம் மீளத்திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு ஒரு சில நாட்களுக்குள்ளேயே இந்த வனச்சரணாலயம் மூடப்பட்ட செய்தி வந்திருக்கிறது. மட்டுமன்றி மொனறாகலையின் சப்ரகமுவ மாகாண எல்லையை ஒட்டிய சில கிராமங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்திருப்பதான தகவலும் வந்திருக்கிறது. படையினரும் அரச அதிகாரிகளும் எந்தளவுதான் மக்களை தைரியமூட்ட முயற்சித்தபோதும் அவர்கள் அவற்றை நம்பத்தயாராக இல்லை. தங்களுடைய கிராமங்களை ஒட்டிய காட்டுப்பகுதிகளுக்குள் ஆயுதபாணிகள் நடமாடுவதாகவும் அவர்களால் கொல்லப்பட்ட தமது சகாக்களின் சடலங்கள் அக்காடுகளுள் மேலும் கிடப்பதாகவும் கிராமவாசிகள் தெரிவிக்கிறார்கள். பிந்திக்கிடைத்த தகவலின் படி இவ்வாறான மேலும் மூன்ற சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனமல்வில பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் திருமகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் எதிர்கொள்கின்ற பாதுகாப்பு நெருக்கடிகளை அப்பட்டமாக வெளிக்காட்டியுள்ளன. குடந்த 16ம் திகதி புத்தள பகுதியில் இடம்பெற்ற மூன்று தாக்குதல் சம்பவங்களையடுத்து அப்பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 500 கிராமவாசிகளிற்கு துப்பாக்கிகளை வழங்குவதென அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் சிபார்சிற்கு அமைய ஜனாதிபதியால் இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும௼br />? 16ம் திகதி இரவு செய்திகள் வெளியாயின.

18ம் திகதி காலை தனமன்வில காட்டுப்பகுதியில் துப்பாக்கிச்சூட்டுச்சத்தங்஼br />?ள் கேட்டதாக செய்திகள் தெரிவித்தன. அன்று மதியம் வெளியான தகவல்களின் படி முதன்நாள் இரவு அப்பகுதிக்காடுகளில் ஆயுதபாணிகளின் நடமாட்டம் இருப்பதாக அறியப்பட்டதையடுத்து ஊர்காவற்படையினருடன் இணைந்து தேடுதலில் ஈடுபட்ட ஆயுதம்தாங்கிய பொதுமக்கள் பத்துப்பேரும் ஊர்காவற்படையினர் ஒருவரும் ஆயுதபாணிகளின் துப்பாக்கிச்சூட்டில் பலியானதாகவும் காலையில் அப்பகுதிக்குச் சென்ற விசேட பொலிஸ் அணியொன்று கொல்லப்பட்டவர்களின் சடலங்களை மீட்டதாகவும் தெரியவந்தது.

இந்தத் தகவல்களை இராணுவ ரீதியாக பகுப்பாய்வு செய்யும் போது திரு.மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் தென்னிலங்கையில் எதிர்கொள்ளும் பாதுகாப்பு நெருக்கடிகளின் தீவிரத்தன்மையை உய்த்துணரமுடியும். 16ம் திகதி காலை 7.30 மணிக்கு புத்தள மொனறாகல வீதியில் கிளேமோர் வெடித்தது. 18ம் திகதி இரவு 10.00 மணிக்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ஆயுதம் தாங்கிய பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். இந்த இரண்டு சம்பவங்களிற்குமிடையில் 40 மணிநேரமே கழிந்திருந்தது.

ஆனால் புத்தள சம்பவம் கொழும்பிற்கு அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு அமைச்சால் பொதுமக்களுக்கு துப்பாக்கி வழங்கப்படும் தீர்மானம் எடுக்கப்பட்டு, அது ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டு அவரால் அங்கீகரிக்கப்பட்டு, 500 துப்பாக்கிகள் தனமன்விலப் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டு, அவை வழங்கப்படவேண்டிய பொதுமக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, துப்பாக்கிகளை இயக்குவதற்கான பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு,அவர்கள் நடவடிக்கையில் இறக்கப்பட்டு, அவர்களுள் முதல் தொகுதியனராகிய பத்துப்பேர் பலியாகி அவர்களடைய ஆயுதங்களும் பறிபோன, இந்த நீண்ட சம்பவத்தொடர் நிகழ்ந்தேற ஆக 40 மணிநேரம் மட்டுமே சென்றிருக்கிறது!

இதிலுள்ள மற்றொருவிடயம் காட்டுக்குள் நடமாடுவதாக அவதானிக்கப்பட்ட ஆயுததாரிகளைத் தேடுவதற்கு ஊர்காவற் படையினரும் முறையான பயிற்சிகள் எதுவுமற்ற சிலமணி நேரங்களிற்கு முன்னர்தான் கையிலே ஆயுதங்களைப் பெற்றிருந்த கிராமவாசிகளும் களமிறக்கப்பட்டமையாகும். காடுகளுக்குள் இறங்கி தீவிரதாக்குதல் முனைப்போடு செயற்படுகின்ற குறித்தாக்குதல் குழுவின் அங்கத்தவர்கள் நிச்சயமாக அதியுயர் பயிற்சிகளைப் பெற்றவர்களாகவே இருப்பார்கள் என்பது பகிரங்க இரகசியம்.

இவ்வாறானவர்களைத் தேடுவதற்கு அறவே பயிற்சிகளையோ அனுபவத்தையோ பெறாத கிராமவாசிகளை களமிறக்கியதென்பது ஒரு போர்க்குற்றம் போன்றதே. கிராமத்து மொழியில் சொல்வதாக இருந்தால் அவர்கள் திரு.மகிந்தவின் அரசாங்கத்தினால் கொல்லக்கொடுக்கப்பட்டார்கள்.

இவர்களது சடலங்களைத் தேடுவதற்குக் கூட அரசாங்கத்தால் ஒரு பொலிஸ்குழுவை மட்டுமே அனுப்பமுடிந்தது. உண்மையில் குறித்தஆயுதபாணிகளைத் தேடுவதற்கு காட்டுப்போர் முறையில் தேர்ந்த கொமாண்டோ துருப்புக்கள்தான் களமிறக்கப்பட்டிருக்கவேண்டு஼br />?்.

அவர்கள் இல்லாதபட்சத்தில் சிறப்புப் படையணியினரோ இராணுவத்தின் ஏனைய தீவிர பயிற்சிபெற்ற துருப்புக்களும் அல்லது குறைந்தபட்ச சிறப்பு அதிரடிப்படையினரோ அனுப்பப்பட்டிருக்கவேண்டும். இவர்ளுள் எந்தவொரு தரப்பையும் களமிறக்குவதற்கு முடியாதநிலையிலேயே திரு.மகிந்தவின் அரசு அவரது நேரடிப்பணிப்பின் பேரிலேயே பொதுமக்களின் கையிலே உரியபயிற்சிகள் எதையும் வழங்காமலேயே ஆயுதங்களை திணித்து காடுகளுக்குள் கலைத்துவிட்டுள்ளது. இதன் விளைவாக இவ்வாறான திடீர் ஆயுதபாணிகளான பத்துப் பொதுமக்கள் உயிரிழந்ததோடு அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களும் பறிகொடுக்கப்பட்டுள்ளன.

இவ்வளவு தீவிரமாக நிலைமை இறுகிவிட்டபின்னரும் கூட அரசாங்கத்திடம் கொல்லப்பட்டவர்களின் சடலங்களைத் தேடுவதற்கும் ஆயுதபாணிகளைப் பிடிப்பதற்குமென அனுப்புவதற்கு வெறும் பொலிஸ்படை மட்டுமே கைவசமிருந்தது. அவர்களால் கொல்லப்பட்டவர்களின் சடலங்களை கண்டெடுக்கமுடிந்ததே தவிர ஆயுதபாணிகளைத் தடந்தொடரவோ கண்டுபிடிக்கவோ கொல்லவோ முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் அந்தப்பணிக்குரியவர்கள் அல்ல. அவர்கள் பெற்ற பயிற்சியும் அதற்கானதல்ல, அவர்கள் வசம்இருக்கும் ஆயுதங்களும் அதற்கானவையல்ல.

இதனை தனமன்வில பகுதிமக்கள் நன்குணர்ந்திருக்கிறார்கள். எனவேதான் அரசாங்கமும் அதனுடைய அதிகாரிகளும் வழங்கிய எந்தவாக்குறுதிகளையும் நம்பாமல் தமது வாழிடங்களிலிருந்து இடம்பெயர்ந்து செல்கின்றனர். இவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும்முகமாகவே சிறிலங்கா ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்த஼br />?ன் 20 ம் திகதிய காலைச் செய்தியறிக்கையில் அரசாங்கம் அவ்வாறு நீட்டிமுழக்கியிருந்தது.

கொழும்பின் பத்தி எழுத்தாளர் ஒருவர் நான்காம் ஈழப்போர் மிகுந்த செலவுகொண்டதாக இருக்கப்போகின்றது என்று எழுதுகிறார். ஏனென்றால் தனமன்வில சம்பவத்திற்குப் பின்னர் 2000 ஊர்காவல்படையினரை மேலதிகமாக ஆட்சேர்ப்பதற்கு திரு.மகிந்தராஜபக்சவின் அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. இவர்களுக்கான சம்பளம் ஏனைய செலவுகள் ஆயுததளபாடங்கள் போன்ற பல்வேறுசெலவீனங்களை ஈடுசெய்ய பலநூறுகோடி ரூபாக்களை மேலதிகமாக செலவிடும் நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் தாக்குதல்கள் தனமன்விலவோடு மட்டும் நின்றுவிடுமா?

இன்னுமொரு தாக்குதல் நடத்தப்படுகின்றபோது அந்தப்பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதென்ற கோதாவில் இன்னும் எத்தனைபேர் ஆட்சேர்க்கப்படப்போகின்றனர்? அவர்களுக்கான செலவீனத்தை ஈடுசெய்ய எங்கிருந்து நிதியினை அரசாங்கம் திரட்டப்போகிறது? இவ்வாறு நிலைமை ஏற்பட்டபோதும் வன்னியின் மீதான தாக்குதல் நிறுத்தப்படமாட்டாது என இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா சூளுரைத்திருக்கிறார் உண்மையில் அவர் இப்போது இவ்வாறு தெரிவிக்க நேர்ந்திருப்பதென்பதே களமுனைகளில் இருந்தும் பின்களங்களிலிருந்தும் குறிப்பிட்டளவு துருப்புக்களையாவது தென்பகுதிநோக்கி நகர்த்தவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான்.

கடந்த சனிக்கிழமை அரச வானொலியின் செய்தியறிக்கையின்படி தனமன்வில காட்டுப்பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கென மட்டக்களப்பிலிருந்து விசேட அதிரடிப்படையின் இரண்டு அணிகள் மீளப்பெறப்பட்டிருக்கின்றன. இது தனியே மட்டக்களப்பிலிருந்து மட்டுமன்றி வடபோர் அரங்கிற்கும் பொருத்தமானதே. ஆகவேதான் ஜெனரல் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவிக்க நேர்ந்திருக்கிறது.

திரு.மகிந்தராஜபக்ச யுத்தத்தை கிழக்கிலிருந்து வடக்கிற்கு நகர்த்த முற்பட்ட உத்தி மறுவழமாக யுத்தத்தை தென்னிலங்கையின் கிராமங்கள் தோறும் சேனைகள்தோறும் கொண்டுசென்று சேர்த்திருக்கிறது.

விளைவாக அதன் காடுகள்தோறும் சடலங்கள் கண்டெடுக்கப்படவும் மக்கள் இடம்பெயரவும் பாடசாலைகள் மூடப்படவும் நேர்ந்திருக்கிறது.
நன்றி - பு.சத்தியமூர்த்தி

0 Comments: