Friday, February 15, 2008

தமிழர்களாக மட்டும் வாழ் என்று நிர்ப்பந்தித்த பேரினவாதம்

தமிழர் அரசியலின் முதலாவது கட்டம் 1833 இல் கோல்புறூக் சீர்திருத்தத்துடன் ஆரம்பித்து 1921 வரை செல்கின்றது. இக்காலத்தில் இன அடையாளம் முதன்மைப்படுத்தப்படாது, இலங்கையர் என்ற அடையாளம் முதன்மைப்படுத்தப்பட்டது. முத்துக்குமாரசுவாமி இராமநாதன், அருணாசலம் போன்ற தலைவர்கள் தமிழ்த் தலைவர்களாக கருதப்படாது இலங்கையர் தலைவர்களாகவே கருதப்பட்டனர்.

சிங்கள மக்கள் மத்தியில் சிறந்த தலைவர்கள் வளர்ந்திராத ஒரு கட்டத்தில் சிங்கள மக்களின் அபிலாசைகளுக்காக குரல் கொடுப்பவர்களாகவும் இவர்கள் விளங்கினர். சிங்கள மக்களின் பிரதிநிதிகள் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களாக இருந்தபோது. தமிழ்ப் பிரதிநிதிகள் மட்டும் சுதேச மதங்களில் ஒன்றான சைவர்களாக இருந்தமையும் சிங்கள மக்களைக் கவர்ந்திருந்தது.

உண்மையில், இக்காலகட்டத்தில் கிறிஸ்தவ மதப் பரவலுக்கு எதிரான உணர்வே சிங்கள மக்கள் மத்தியில் மேலோங்கியிருந்தது. பல கிறிஸ்தவ மிஷனரிகள் போட்டி போட்டுக்கொண்டு மதமாற்ற வேலைகளிலும் `கிறிஸ்தவ மதப்பரப்பலிலும் ஈடுபட்டபோது சிங்கள பௌத்தவர்களை அதுவே பெரிதாக பாதித்திருந்தது. இச் செயற்பாட்டை எதிர்த்தவர்களாக தமிழ்ப் பிரதிநிதிகள் இருந்தபோது இப்பிரதிநிதிகளை ஆதரிக்க அவர்கள் தலைப்பட்டனர். சேர் முத்துக்குமாரசாமி கண்டிய மக்களின் விவாகம் சம்பந்தமாக சிங்கள மக்கள் விரும்பாத ஒரு கட்டளைச் சட்டத்தை நிறைவேற்ற முனைந்தபோது, அதனை பலமாக எதிர்த்தார். அதேபோல சிங்கள மக்களைப் பாதிக்கின்ற கிராம சபைச் சட்டத்தை அரசு நிறைவேற்ற முயன்றபோதும் எதிர்த்து நின்றார்.

ஆசியாவிலேயே முதன் முதலாக பாரிஸ்டர் பட்டம் பெற்றவரும் இவரே! இவ்வாறு ஒரு கல்வியாற்றல் உடையவராக இருந்தமையும் சிங்கள பௌத்தர்கள் விரும்பக் காரணமாக இருந்தது. இதைவிட, கிறிஸ்தவ கல்விமான்கள் ஐரோப்பிய கலாசாரத்தையும், ஐரோப்பிய பண்பாட்டையும் தூக்கிப்பிடிக்க, இவர் கீழைத்தேச பண்பாட்டு கலாசாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தமையும் சிங்கள மக்களைக் கவர்ந்திருந்தது.

இவர் கீழைத்தேச கல்விமுறை, கலாசாரம், மதம் என்பன தொடர்பாக பல கட்டுரைகளையும் எழுதியதுமல்லாமல், ஆங்கிலத்தில் அரிச்சந்திர புராணத்தையும் எழுதியிருந்தார். அத்தோடு தாயுமானவர் சுவாமிகளின் அரிய பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார்.

உண்மையில், அந்நியராட்சியால் அழிவுண்டு போன கீழைத்தேச பண்பாடு, கலாசாரம் பற்றிய சிந்தனைகளை மீளப் புனரமைக்கும் பணியினை இலங்கையில் தொடக்கி வைத்தவர் இவர் என்றே சொல்ல வேண்டும். ஆங்கிலக் கல்வி மூலம் பெற்றுக்கொண்ட பன்முக அறிவினை ஆதாரமாகக் கொண்டே இப்பணிகளை இவர் மேற்கொண்டிருந்தார்.

இவருடைய இப்பணியினை இவருடைய மைந்தரான கலாயோகி ஆனந்த குமாரசுவாமி முன்கொண்டு சென்றார். ஆங்கிலத்தாயின் வயிற்றில் பிறந்து, ஆங்கிலப் பெண்ணையே திருமணம் செய்து. ஆங்கில நாட்டிலேயே நீண்டகாலம் வாழ்ந்தபோதும் ஆனந்தகுமாரசுவாமி மேலைத்தேச கலாசாரங்களிலிருந்து விலகி, கீழைத்தேச கலாசாரங்களை வளர்ப்பதில் ஈடுபாடு காட்டினார்.

1905 ஆம் ஆண்டு "சமுதாய சீர்திருத்தச் சங்கம்" எனும் அமைப்பினை உருவாக்கி அதனூடாக தனது பணிகளை மேற்கொண்டார். அநுராதபுரம், பொலநறுவை போன்ற பழைய தலைநகரங்களில் அழிந்து கிடந்த கோவில்கள், விகாரைகள், தூபிகள், கட்டிடங்கள், வாவிகள் என்பவற்றைப் பற்றி நடுநிலை நின்று ஆராய்ந்து பல நூல்களை எழுதினார். ஓவியங்கள், சிற்பங்கள், சிலைகள் என்பனவற்றை நுணுக்கமாக ஆராய்ந்து அது பற்றிய கலைக்களஞ்சியங்களை உருவாக்கினார். "சிவ நடனம்", "இராச புத்திர ஓவியங்கள்", "கண்டிக் கலையும் அதன் எழுச்சியும் வீழ்ச்சியும்", "இந்தியக் கலையின் சிறந்த பகுதிகள்", "மத்தியகாலச் சிங்களக் கலை", "இந்தோனேசிய கலைச் சரித்திரம், போன்றன இவற்றுள் முக்கியமானவை ஆகும். இப்பணிகளினூடாக கீழைத்தேச கலைகளை மட்டுமல்ல சிங்களக் கலைகளையும் ஆனந்தகுமாரசுவாமி மீள் உருவாக்கம் செய்திருந்தார்.

1912 ஆம் ஆண்டு குறூ ஸ்ரீ மக்கலம் சீர்திருத்தத்தின்படி, படித்த இலங்கையர் பிரதிநிதிக்கான தேர்தல் நடைபெற்றபோது பெரும்பான்மையான படித்த சிங்களவர்கள் இராமநாதனுக்கே தமது வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்தனர். இத்தேர்தலில் இராமநாதன், சிங்கள கரவா சமூக கிறிஸ்தவரான மாக்கஸ் பர்ணாந்து என்பவருடன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஏற்கனவே இவரது மாமனாரான முத்துக்குமாரசுவாமி, மைத்துனரான கலாயோகி ஆனந்த குமாரசுவாமி என்பவர்களின் மூலம் கிடைத்த செல்வாக்கும், நியமன உறுப்பினராக இருந்தபோது மேற்கொண்டபணிகளும், கல்வித் தகைமையும், சிங்களவர்கள் இவரை ஆதரிக்கத் தூண்டின. இதைவிட மார்க்கஸ் பர்ணாந்து கிறிஸ்தவராகவும், கரவாச் சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தமை, உயர் `கொய்கம" சாதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இராமநாதனை ஆதரிக்கத் தூண்டியிருந்தது.

1916 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் ரி.எஸ்.ஜெயவர்த்தனா என்ற சிங்களவரோடு போட்டியிட்டு இராமநாதன் வெற்றி பெற்றார். இத்தேர்தலிலும் படித்த சிங்களவர்களில் பெரும்பான்மையோர் இராமநாதனையே ஆதரித்தனர்.

1915 சிங்கள- முஸ்லிம் கலவரம் நடைபெற்றது. இதன்போது ஆங்கிலேய அரசாங்கம் இதனை கடுமையாக நசுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது. பிற்காலத்தில் பிரதமராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கா, எவ்.ஆர்.சேனநாயக்கா உட்பட பல சிங்கள அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சேர்.பொன்.இராமநாதன் சிங்களத் தலைவர்களுக்கு எதிரான இத்தாக்குதல்களை கடுமையாக கண்டித்தார். எதுவித நிபந்தனையுமில்லாமல் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என அரசை வற்புறுத்தினார். அரசு அதற்கு இணங்காதபோது முதலாம் உலக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த யுத்தகால சூழ்நிலையிலும் இங்கிலாந்துக்குச் சென்று மகாராணியாருடன் பேசி, கலவரத்தை நிறுத்தியதுமல்லாமல் கைது செய்யப்பட்ட சிங்களத் தலைவர்களையும் விடுவிக்கச் செய்தார். அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட தேசாதிபதியையும் வாபஸ்பெறச் செய்தார்.

அவர் நாடு திரும்பியபோது துறைமுக வாசலுக்கு வரவேற்கச் சென்ற சிங்களத் தலைவர்கள் குதிரையைக் கழற்றிவிட்டு, குதிரை வாகனத்தில் இராமநாதனை அமரச்செய்து காலிவீதி வழியாக இராமநாதனின் வீடுவரை தாமே இழுத்துச் சென்றனர். இச்சம்பவம் இலங்கையர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனை வெளிப்படுத்தும் ஓவியப்படம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் மண்டபமேடையில் இப்போதும் தொங்கவிடப்பட்டுள்ளது. இக்கலவரம் தொடர்பாக "1915 இனக்கலவரமும் இராணுவச் சட்டமும்" என்ற நூலையும் எழுதியிருந்தார்.

பௌத்த ஆலயங்களின் சொத்துரிமைச் சட்டம் நிறைவேற்றப்படல், வெசாக் விடுமுறைத் தினச் சட்டம் நிறைவேற்றப்படல் என்பனவற்றிற்கும் காரணமாக இருந்ததோடு, சிங்கள மக்கள் மத்தியில் மொழிப்பற்றையும் தேசிய உணர்வையும் ஊட்டியிருந்தார். 1904 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆனந்தாக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அவர், சிங்கள மக்களைப் பார்த்து "சிங்கள நாக்குகள் சிங்கள மொழியைப் பேசாவிடின் வேறுயார் தான் இதைப் பேசப்போகின்றார்கள் என்று கர்ச்சித்தார்.

If sinhales lips will not speak sinhalese language who else is there to speak it

நீண்ட காலமாகவே அரச உத்தியோகத்தில் இருந்த சேர்- பொன். அருணாசலம் 1913 இல் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்று அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.

இலங்கையர் என்ற அடையாளத்தில் நின்று அவர் மேற்கொண்ட பணிகளில் இரண்டு பணிகள் முக்கியமானவை.

ஒன்று இலங்கைத் தேசியத்திற்கான அடித்தளத்தை இட்டமையாகும். இதற்காக 1917 இல் அரசியல் சீர்திருத்தக் கழகத்தை உருவாக்கி பூரண சுதந்திரக் கோரிக்கையை வற்புறுத்தினார். பல்வேறு பிரதேசங்களிலும் இதற்காக பிரசாரம் செய்தார். இலங்கை மக்களுக்கென ஐக்கியப்பட்ட ஒரு தேசிய இயக்கம் தேவை எனக் கருதி இனரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் பிளவுண்டிருந்த எல்லா அமைப்புகளையும் இணைத்து 1919 இல் இலங்கைத் தேசிய காங்கிரஸை உருவாக்கினார்.

அதன் முதலாவது தலைவராகவும் அவரே பதவியேற்றார்.

இரண்டாவது இலங்கையில் சமூக மாற்றத்திற்கான அரசியலை ஆரம்பித்து வைத்தமையாகும். அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றதும் அவர் முதன் முதலாக உருவாக்கிய அமைப்பு சமூக சேவைச் சங்கமாகும். இச்சங்கத்தின் மூலம் கொழும்பு நகரத்தில் வாழும் ஏழைத் தொழிலாளர்களின் நலன்களுக்காக பாடுபட்டார்.

கொழும்பு நகரின் சேரிகள், தோட்டங்கள் என அழைக்கப்படும் ஏழை மக்களின் குடியிருப்புகள் எல்லாவற்றுக்கும் சென்று அவர்கள் நலன்கள் மேம்பட உழைத்தார். இதற்காக லண்டனுக்குச் சென்று லண்டன் மாநகரசபை நகரத் தொழிலாளர்கள் தொடர்பான என்னென்ன பணிகளை ஆற்றுகின்றது என்பவற்றை ஆய்வு செய்து இலங்கையின் நகர்ப்புறங்களிலும் அவை மேற்கொள்ளப்பட வேண்டும் என சிபார்சு செய்தார்.

அரசியல் விடயங்களைப் பார்க்கும் போது அடித்தள மக்களின் நலன்களிலிருந்தே அதனைப் பார்த்தார். இவரைப் பின்பற்றியே ஏ.ஈ.குணசிங்கா போன்ற தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிற்சங்க அரசியலுக்கு வந்தனர்.

இவ்வாறு இலங்கையர் என்ற அடையாளத்தினை உயர்த்திப் பிடிப்பது தொடர்பாக சிங்கள அரசியல் தலைவர்களிலும் பார்க்க மிக உயர்ந்த அளவில் தமிழ்த் தலைவர்கள் செயற்பட்டபோதும் 1920 களின் ஆரம்பத்தில் எல்லாமே தலைகீழாக மாறின.

1921 ஆம் ஆண்டு மானிங் அரசியற் சீர்திருத்த முயற்சிகள் நடந்தபோது மேல் மாகாணத் தமிழருக்கான பிரதிநிதித்துவம் தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்ட சிங்களத் தலைவர்கள் பின்னர் ஒப்பந்தத்தை மீறி தமது பேரினவாத முகத்தை காட்டத் தொடங்கினர். அதிகாரம் கொஞ்சம் கொஞ்சமாக இலங்கையர்களின் கைகளுக்கு மாறிய போது அவை சிங்களவர்களுக்கு மட்டுமே என்ற வகையில் செயற்படத் தொடங்கினர்.

விளைவு, இதுவரை இலங்கையர் என்ற அடையாளத்தை உயர்த்திய தமிழ்த் தலைவர்கள் தமிழர் என்ற அடையாள அரசியலை நோக்கி நகரத் தொடங்கினர். தேசிய காங்கிரஸை உருவாக்கிய அருணாசலம் மனம் புண்பட்டு தேசிய காங்கிரஸின் சாதாரண அங்கத்தவர் பதவியிலிருந்தும் இராஜிநாமாச் செய்தார். தமிழர்களை ஒன்றுதிரட்டி "தமிழர் மகாஜன சபை" என்ற அமைப்பை உருவாக்கினார்.

தமிழர் மகாஜனசபையின் தோற்றத்துடன் இலங்கையர் என்ற அடையாளம் தமிழர்களைப் பொறுத்தவரை அழியத் தொடங்கிவிட்டது.

உண்மையில், தமிழர்கள் இலங்கையராகவும், தமிழர்களாகவுமே வாழவிரும்பினர். ஆனால், பேரினவாதம் அவர்களை தமிழர்களாக மட்டும் வாழ் என நிர்ப்பந்தித்தது.


நன்றி - தினக்குரல்

0 Comments: