Monday, February 18, 2008

குற்ற உணர்வு ஏதுமற்ற ராஜபக்ச சகோதரர்கள்

முன்னாள் சனாதிபதி பிரேமதாசா ஒருமுறை 'மகாத்மா காந்தி எனது ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்டிருந்தால் அதற்கான பழியையும் என்மீதே சுமத்தியிருப்பர்" என்று கூறினார். உண்மையில் அவர் இதனை மனப்பூர்வமாகக் கவலையுடன் தெரிவித்தாரா? அல்லது அவ்வாறு கவலைப்படுவதாக நடித்தாரா? என்பது தெரியவில்லை. ஆனால் அவ்வாறு வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

மகிந்த ஆட்சியும் இன்று அவ்வாறுதான் இருக்கின்றது. அதாவது பிரேமதாச காலத்து மனித உரிமை மீறல்களை அன்று உலகிற்கு வெளிப்படுத்திய மகிந்தவின் ஆட்சியும் அந்த நிலையை அடைந்துள்ள போதும் இது குறித்த உணர்வுகள் எதுவும் மகிந்த ஆட்சியிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் தேசிய அமைப்பாளர் சிறீபதி சூரியாராய்ச்சி வாகன விபத்தொன்றில் பலியாகியுள்ளதையடுத்து இச்சம்பவம் தொடர்பில் பலத்த சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

இது உண்மையில் விபத்தா? அல்லது அவர் பயணம் செய்த வாகனம் விபத்துக்கு உள்ளாகும் வகையில் சதி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றத��
�? என்ற சந்தேகம் பலரின் மத்தியில் எழுந்திருக்கின்றது.

பிரதான எதிர்க்கட்சியாகிய ஐ.தே.க. சம்பவம் நடந்தவேளை அப்பகுதியில் வெடிச்சத்தங்கள் கேட்டதாகத் தகவல் தமக்குக் கிடைத்திருப்பதாகக் கூறுகின்றது. எனவே இது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை ஒன்றை நடத்துமாறு கோரியுள்ளது. மேலும் அவர் பயணம் செய்த வாகனத்தைத் தயாரித்த நிறுவனமும் விசாரணை நடத்தக் கோரியுள்ளது.

முதலில் இந்த விபத்துத் தொடர்பில் சந்தேகம் யார் மீது எழுந்திருக்கின்றது? என்று பார்த்தால் அது மகிந்த அரசாங்கத்தின் மீதே என்பதில் எதுவித ஐயமும் இல்லை. அதிலும் குறிப்பாக ராஜபக்ச சகோதரர்களின் மீதே சந்தேகம் எழுந்துள்ளது என்று கூறலாம்.

அடுத்ததாக இந்தச் சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் மகிந்த அரசிடமே விடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே சந்தேகத்துக்கு உரியவர்களே விசாரணை நடத்தக் கூடிய அல்லது பாரபட்சமற்ற விசாரணையை அனுமதிக்கக் கூடிய உயர் தகுதி நிலையிலும் இருக்கின்றனர்.

இது சிறிலங்காவின் இன்றைய சாபக்கேடான நிலையாகும். தமிழ் மக்களைப் பொறுத்த வரை மட்டுமல்ல சிங்கள தேசத்தவரும் கூட இவ்வாறான நிலையிலேயே இருக்கின்றனர் என்பதற்கு இச்சம்பவம் சாட்சியமாக அமைகின்றது.

இவ்வாறு மகிந்தரின் ஆட்சி மீது எவரும் சந்தேகம் கொள்ளக்கூடிய வகையிலேயே அவ் ஆட்சியின் இலட்சணம் இருப்பதையும் எவரும் மறுத்துவிட முடியாது.

மகிந்த ஆட்சியானது தனக்கு எதிராக எழுகின்ற எந்த ஒரு எதிர்ப்பையும் 'சனநாயக" முறையில் அல்லது மென்முறையில், நேர்மையான முறையில் கையாளும் ஒன்றாக இல்லை.

ஆகக் குறைந்தது தன்னை எதிர்ப்போர் கொல்லப்பட வாய்ப்பை ஏற்படுத்துவது என்ற ரீதியிலேயே செயற்படுகின்றது.

அதாவது அது தம்மை எதிர்ப்போரின் பாதுகாப்பை உடனடியாகவே நீக்கிவிடுவதையே குறைந்தபட்சத் தண்டனையாக வழங்குகின்றது.

சிறிலங்காவின் அரசியல்வாதிகள் இன்று சம்பாதித்து வைத்துள்ள எதிர்ப்புக்களின் அளவை வைத்துப்பார்க்கும் போது அவ்வாறான பாதுகாப்பு நீக்கம் என்பது ஏறத்தாள மரண தண்டனை விதித்ததற்குச் சமனாகும்.

சிறீபதி சூரியாராய்ச்சியை எடுத்துக்கொண்டால் இவருக்கு நெருங்கிய நட்பு வட்டத்தில் சிறிலங்காவில் இயங்கிவரும் பாதாளக்குழு ஒன்று இருப்பது ஒன்றும் இரகசியமானது அல்ல.

முன்னாள் கடற்படை அதிகாரியான இவர் ஆமிசெரான் என்றும் பாதாள உலகக் குழுவின் தலைவருடன் தொடர்பைக் கொண்டிருந்ததாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தவர். இந்த ஆமிசெரான் என்பவர் 2004 யூன் மாதம் இவரது அலுவலக வாயிலில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருக்கி��
�ார்.

சிறிலங்காவின் செயற்றிறன்மிக்க அரசியல்வாதிகள், அல்லது அரசுத் தலைவருக்கு வேண்டியவர்கள் எனக் கூறக்கூடிய எல்லோருமே இவ்வாறு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகளைக் கொண்டவர்களாகவே இருந்திருக்கின்றனர்.

உதாரணமாக முன்னாள் சனாதிபதி பிரேமதாசவுக்கு மிகவும் நெருங்கியவராக இருந்தவர் சிறிசேன கூரே. இவர் இவ்வாறான வன்முறைக் கும்பல்களுடன் தொடர்புடையவராக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்.

இவரைப் போலவே எஸ்.பி.திசாநாயக்க சந்திரிகா குமாரதுங்கவிற்குப் பாதாள உலகக் குழுவினரைத் தொடர்புபடுத்துவதில் முக்கியமானவராக இருந்தார். முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தான் ஆறு வௌ;வேறு தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று சாதனை படைத்திருப்பதாகப் பெருமிதம் கொண்டிருந்தார். இத்தேர்தல்களின் பின்னணியில் பாதாள உலகக் குழுவினர் இருந்திருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு இருந்தே வந்துள்ளது. இத்தேர்தல் வெற்றிகளின் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால் பாதாள உலகக் குழுவுடன் தொடர்புகளைப் பேணிவந்த மங்கள சமரவீர, எஸ்.பி.திசாநாயக்க போன்றோரே இருந்துவந்துள்ளனர்.

உள்ளுராட்சித் தேர்தல்கள், மாகாணசபைத் தேர்தல்கள் எல்லாம் வன்முறைக் காலங்களாக மாறியிருந்த வேளையில் அதிகமாக வன்முறைகளுக்கு அப்போது ஜே.வி.பி.யினரே இலக்காகி வந்தனர். ஆனால் ஐ.தே.க. வினரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரும் போட்டிப் பாதாள உலகக் குழுவின் உதவியுடன் பாரிய வன்முறைகளை நிகழ்த்தி வந்தனர்.

இவ்வாறான நிலையில் எஸ்.பி.திசாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தாவிய பின் சந்திரிகா அம்மையாரின் ஆட்சியில் மங்கள சமரவீர போன்ற செயற்பாட்டாளராக சிறீபதி சூரியாராய்ச்சி மாறியிருந்தார். இதனால் அவர் 2004 இல் சந்திரிகா அம்மையாரின் அமைச்சரவையிலும் இடம்பெற்றார். பின்னர் மகிந்த ராஜபக்சவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக நியமித்து விட்டு அவரைத் தோற்கடிக்கும் திட்டத்துடன் சந்திரிகா அம்மையார் செயற்பட்டு வந்தவேளை மகிந்தவிற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவராக சிறீபதி சூரியாராய்ச்சி இருந்தார்.

ஆனால் இவர் குறித்த சந்தேகம் பசில் ராஜபக்சவுக்கு இருந்த நிலையில் மகிந்தவின் ஆட்சியில் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சே கிடைத்தது. அதன் பின்னர் பிரதி அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. இரு தடவைகளும் பதவியேற்று சில மணிநேரங்களில் பதவியை விட்டு இவர் விலகினார். பின்னர் மங்கள சமரவீரவுடன் இணைந்து மகிந்த ஆட்சியிலிருந்து வெளியேறினார். இவர்களுடன் கூடவே விலகிய அநுரா பண்டாரநாயக்க மகிந்த சகோதரர்களின் மிரட்டல் காரணமாக அல்லது பதவி மோகத்துடன் மீண்டும் மகிந்த ஆட்சியுடன் இணைந்து கொண்டார்.

இவ்வாறு கடந்த வருடம் பெப்ரவரி மாதம் ஒன்பதாம் திகதி மகிந்தவின் ஆட்சியிலிருந்து வெளியேறிய இவர்கள் மகிந்த ஆட்சிக்கு முக்கிய சவாலாக இருந்திருக்கின்றனர்.

முக்கியமாக சிறீபதி சூரியாராய்ச்சி மகிந்த சகோதரர்களின் ஊழல்கள் தொடர்பிலான பல தகவல்களை வெளியிட்டு வந்தார். அதிலும் வான்கலங்கள் கொள்வனவில் கோத்தபாய ராஜபக்ச மோசடியில் ஈடுபட்டதாக முன்வைத்த பலமான குற்றச்சாட்டானது பாரதூரமானதாக அமைந்தது.

அத்துடன் கடந்த வரவு-செலவுத் திட்டத்தின் போது மகிந்த ஆட்சியைக் கவிழ்ப்பது தொடர்பான நகர்வுகளில் ஐக்கிய தேசியக் கட்சியிலும் பார்க்க தீவிரமாகவும் தாக்கமுள்ள வகையிலும் செயற்படக் கூடியவர்களாக மங்கள சமரவீரவும் சிறீபதி சூரியாராய்ச்சியும் இருந்தனர்.

ஏனெனில் இவர்களுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் புகைந்து கொண்டிருக்கும் முரண்பாடுகள் தொடர்பாகவும் மகிந்த சகோதரர்களுக்கு எதிரான உணர்வு அலைகளும் நன்றாகவே தெரியும். எனவே எவரெவர் மகிந்தவின் ஆதரவாளர்கள் எவரெவர் வெளியேறிவரத் தயாரான நிலையில் உள்ளவர்கள் என்பதை உணர்ந்தவர்கள்.

அத்துடன் ஜே.வி.பி.யுடனும் இவர்கள் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தனர்.

எனவே மகிந்த ஆட்சிக்கு ரணிலை விடவும் சவாலானவர்களாக இவர்கள் இருந்து வந்த நிலையில் சிறீபதி சூரியாராய்ச்சி குறிவைக்கப்படக் கூடியவர் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை.

இவ்வாறான நிலையில் அவர் ஆட்சியிலிருந்து வெளியேறிய வேளையிலிருந்து 365 ஆம் நாளில் அதாவது ஒரு வருடம் பூர்த்தியான நாளில் மரணமடைய நேரிட்டமை மகிந்த ஆட்சி மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரது சாவு நிகழ்விற்கான ஏற்பாடுகளைக் குழப்புவதில் மற்றொரு 'செயற்பாட்டாளர்" அதாவது பாதாள உலகத்தவருடனான தொடர்பை மிகவும் வெளிப்படையாக வெளிப்படுத்தி வருபவரான மேர்வின் சில்வா ஈடுபட்டிருப்பது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

அதாவது மகிந்த ஆட்சியின் கடந்த இரண்டு வருடகாலச் செயற்பாடுகள் எவரையும் அவ்வாறான சந்தேகம் கொள்ளவைப்பதில் தவறேதும் இல்லை. எனினும் இதனைப் போக்கும் முயற்சியில் மகிந்த ஆட்சி ஈடுபடப்போவதில்லை. அதற்கான தேவையோ அது குறித்த குற்ற உணர்வோ மகிந்த ஆட்சியிடம் இல்லை. இவ்வாறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்போது பிரேமதாச கவலைப்படுவது போலவாவது காட்டிக் கொண்டார். அந்த மனநிலை கூட மகிந்த
ஆட்சியிடம் இல்லை.

நன்றி:-வேலவன்-

0 Comments: