Friday, January 30, 2009

3,000 இந்திய இராணுவத்தினர் தமிழர்களுக்கு எதிராய் போரிட கொழும்பு பயணம்

3,000 இந்திய இராணுவத் துருப்புக்கள் இன்று மாலை இலங்கை நேரப்படி 4 மணிக்கு இலங்கையில் இறங்கியதாகவும், அவர்கள் அனைவரும் உடனடியாய் கொழும்பு ஊடாக முல்லைத் தீவை நோக்கி புலிகளுடன் போரிட செல்வதாய் இந்திய தலைவர்கள் கூறுகின்றனர்.


இதுதொடர்பாக தமிழ்ச் செய்தி மையம் வெளியிட் டுள்ளதாவது, இந்திய பாரதிய பார்வேட் பிளாக் கட்சியின் தலைவர் திரு. நகைமுகன் தமிழ்ச் செய்தி மையத்துடன் தொடர்பு கொண்டு அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களை எம்முடன் பகிர்ந்து கொண்ட பொழுது, ராசபக்சே அறிவித்துள்ள 48 மணி நேர போர்நிறுத்தம் என்பது இந்தியாவிலிருந்து 3,000 இராணுவத்தினர் முல்லைத் தீவை நோக்கி பயணிப்பதாயும், அவர்கள் அனைவரும் முல்லைத் தீவிலுள்ள புலிகளுடன் நேரிடையாக போரிட செல்வதாயும் கூறினார்.


மேலும் அவர், இந்திய வெளிவிவகாரதுறை அமைச்சர் நமது தமிழக முதல்வருக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் சொல்லப்படுவது உண்மையல்ல என்றும், ஐ.நா.வின் பொதுச்செயலாளர் திரு. பான் கீ மூன் டெல்லி வருவதற்கு முன்பே இலங்கைக்கு நமது படைகள் அனுப்பி வைத்துள்ளதாயும் கூறுகிறார்.


அவர் மேலும், அண்மையில் புலிகளால் தகர்க்கப்பட்ட கல்மடுஅணையின் போது ஏற்பட்ட இழப்பில் இந்திய படைகள் மிக மோசமாய் இறப்புகள் சந்தித்ததாயும், அதை ஈடுகட்டவே, இன்றைக்கு 3,000 இந்தியப் படைகள் இலங்கை சென்றுள்ளதாய், இதற்கு தம்மிடம் ஆதரமுள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை கூறினார்.


இந்தத் தகவல் உறுதி செய்யும் விதமாய், தமிழர் களத்தின் அமைப்பாளர் திரு. அரிமாவளவன் திருச்சியிலிருந்து நம்மை தொடர்பெடுத்து, 3,000 இந்திய துருப்புக்கள் இன்று மாலை இலங்கையில் இறங்கியுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் முல்லைத் தீவை நோக்கி போரிட செல்வதாயும் அதிர்ச்சி தகவலை நமக்கு சொன்னார்கள்.


புலிகளுக்கெதிரான போராய் அறிவித்த இலங்கை அரசு, ஒவ்வொரு நாளும், அங்குள்ள தமிழர்களை கொன்று வருவதும், பொது மக்களுக்கு உண்ண உணவோ, காயமடைந்தவர்களுக்கு மருந்துகளோ இல்லாத நிலையில், 3,000 இந்திய இராணுவத்தினர் அங்கு செல்வது, அங்கு அவதிப்படும் தமிழ் மக்களை கேள்விக்குள்ளாக்கும்.


இதை உடனடியாய் இங்கிருக்கும், நமது தமிழ் தலைவர்கள் தடுத்து நிறுத்துவது கடமையாகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி :-
சங்கதி

Tuesday, January 27, 2009

ஒரு நாள் காலக்கெடுவும் மூன்று வார இழுத்தடிப்பும்!

"சுகம் வரும். ஆள் தப்பாது" என்ற பேச்சு மொழி நம் மத்தியில் அடிக்கடி பாவனையில் உண்டு.

ஈழத் தமிழர் விவகாரத்தை ஒட்டி தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி எடுக்கும் குயுக்தித் தன நடவடிக்கைகளும் அறிவிப்புகளும் இத்தகைய பேச்சு மொழியைத்தான் நமக்கு நினைவூட்டுகின்றன. இவ்விவகாரத்தைத் தமிழக முதல்வர் கையாளும் மெத்தனப் போக்கை நோக்கும்போது, பிரச்சினைக்குத் தீர்வு என்ற "சுகம்" கிட்டும், ஆனால் ஈழத் தமிழ் மக்கள் தான் இங்கு "தப்பவே மாட்டார்கள்" என்பது நமக்கு உறுதியாகின்றது.
ஈழத் தமிழரைக் காப்பாற்றுவதற்காக இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு இந்திய மத்திய அரசுக்கு ஒரேயொரு நாள் காலக்கெடு விதித்துத் துடிப்புடன் கலைஞர் கருணாநிதி அறிவித்த போது நாமெல்லாம் மகிழ்ந்துதான் போனோம்.
"நன்றே செய்; அதை இன்றே செய்!" என்பது போல இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதற் கான நடவடிக்கை எடுப்பதாயின் அதை ஒருநாளில் செய்து முடி என்று மத்திய அரசுக்கு கலைஞர் "வெட்டு ஒன்று; துண்டு இரண்டாக" காலக்கெடு விதித்தபோது உலகத் தமிழரெல்லாம் புளங்காகிதமடைந்துதான் போனார்கள்.

ஆனால்
அந்தக் காலக்கெடுவுக்குள் அதைச் செய்ய மத்திய அரசு தவறினால் தி.மு.க. பொதுக்குழு கூடி அடுத்த கட்டம் குறித்து ஆராயும் என்று அவர் "இழுத்த" போது தான் வழமைபோல இவ்விவகாரத்தில் அவரின் பித்தலாட்டப் போக்கு மாறவேயில்லை என்பது வெளிப்படையாயிற்று.

மத்திய அரசுக்கு இறுதிக் காலக்கெடு விதிப்பது போல ஒரு நாள் கால அவகாசம் வழங்கிய முதல்வர் கருணாநிதி, அதை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் பதில் நடவடிக்கை என்ன வென்பதைத் தீர்மானிப்பதற்கான காலக்கெடுவை மட்டும் மூன்று வாரங்கள் தள்ளிப் போட்டு பெப்ரவரி 15 ஆம் திகதியளவில் தீர்மானிப்பாராம்! யாரின் காதில் பூச்சுற்ற முயல்கிறார் தமிழக முதல்வர்.....?

இலங்கையில் ஈழத் தமிழினம் வாழ்வா, சாவா என்ற உயிர்ப் போராட்டத்தில் சிக்கித் தவிக்கின்றது. ஒரு மிகக் குறுகிய பிரதேசத்துக்குள் சிக்கித் தவிக்கும் மூன்று முதல் நான்கு லட்சம் அப்பாவித் தமிழர்கள் மீது குரூர யுத்த அரக்கன் தன் கொலை வெறிப் பார்வையைத் திருப்பியிருக்கின்றான். தினசரி டசின் கணக்கானோர் உடல் பிய்ந்து உயிரிழக்கும் பேரவலம். பலடசின் கணக்கானோர் அவயவங்கள் சிதறி, குற்றுயிரும் குலையுயிருமாகத் துடிக்கும் பரிதாபம். கணத்துக்கு கணம் கோரக் கொடூரம் குரூரமாக அரங்கேறும் பெருந்துயர் நிலைமை.

வன்னியில் ஒருபுறம் உணவு மற்றும் மருந்து, சுகாதார வசதிகள், உடை, உறையுள் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யக்கூட வசதியின்றி சிக்கியிருக்கும் மக்கள் மீது யுத்த அனர்த்தம் ஏவி விடப்பட்டிருக்கையில், அந்த மக்கள் அடுத்த நாள் வரை அடுத்த வாரம் வரை உயிரோடு தாக்குப் பிடிப்பார்களா என்ற பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் யுத்தத்தை நிறுத்த உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்திய மத்திய அரசுக்கு ஒருநாள் காலக்கெடுவைக் கொடுத்த கலைஞர் கருணாநிதி, அதை மத்திய அரசு செய்யத் தவறும்போது அது குறித்து எடுக்கப்பட வேண்டிய பதில் நடவடிக்கை குறித்துத் தீர்மானிப்பதை மட்டும் மூன்று வாரம் தள்ளிப்போட்டு நீண்ட கால அவகாசம் வழங்குகின்றார் எனக் கயிறு விடுகின்றார்.

கலைஞர் கருணாநிதி மூத்த அரசியல்வாதி. சாணக்கியமும் இராஜதந்திரமும் மிக்க தலைவர். உலகத் தமிழினத்தின் தலைவராகத் தம்மை அடையாளப்படுத்த முனைபவர். அப்படிப்பட்டவர் வாழ்வா, சாவா என்ற உயிர்ப் போராட்டத்தில் சிக்கி மடிந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழினத்தின் விடயத்தில் தமது அரசியல் சித்து விளையாட்டையும், சாணக்கிய இராஜதந்திர அரசியலையும் காட்ட முயல்வது வெட்கக் கேடானது; பேர பத்தம் நிறைந்தது.
இந்த வகையில் பார்த்தால்
ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பவர்களைப் போலத் தம்மைக் காட்டிக்கொண்டு அதில் அரசியல் குளிர் காயும் தென்னிந்திய அரசியல் தலைவர்களை விடத், தாங்கள் ஈழத் தமிழர்களின் போராட்ட சக்திகளுக்கு எதிரானவர்கள் என்பதை வெளிப்படையாகக் காட்டிக்கொண்டும், கூறிக்கொண்டும் தென்னிந்தியாவில் அரசியல் நடத்தும் எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதா போன்றோர் எத்தனையோ மடங்கு தேவலை......!
ஈழத் தமிழர் விடயத்தை ஒட்டி கடந்த ஆறு மாதங்களாகத் தமிழக முதல்வர் கலைஞரும் அவரது கட்சியும், அவரது தமிழக மாநில அரசும் மேற்கொண்டுவரும் போராட்டப் பிரகடனங்கள் வெத்து வேட்டுப் புஸ் வாணங்கள்தாம் அர்த்தமற்ற அரசியல் பித்தலாட்டங்கள்தாம் என்பது அவற்றை ஆழமாக சீர்தூக்கிப் பார்த்தால் இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.

இவையெல்லாம் வெறும் பொம்மலாட்ட நடிப்புகளின்றி வேறில்லை.....!

நன்றி
-உதயன்

Sunday, January 25, 2009

ஈழத் தமிழர்களின் பிரச்சினை பற்றி டில்லி அறிவுஜீவிகளுக்கு எதுவுமே தெரியாது

* ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களை முன்னின்று நடத்திவரும் கலையரசன் தினக்குரலுக்கு பேட்டி
தமிழகத்திலிருந்து கே.ஜி.மகாதேவா

""ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள், அதற்கான அடிப்படைக் காரணங்கள், இன்று அந்த இனமே அழிந்து போகும் நிலைக்கு எரிமலையாக வெடித்திருக்கும் அரசுப்போர் பற்றி எல்லாம் இங்குள்ள அறிவுஜீவிகளுக்கு எதுவுமே விளக்கமாகத் தெரியாது. அறிந்துகொள்ளவேண்டிய கட்டாயம் இவர்களுக்கு இல்லை என்று கருதப்பட்டாலும் அவர்களுக்குப் புரியவைக்க வேண்டிய அவசியம் இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது. இதனை பல்வேறு வடிவங்களில் படிப்படியாக நிறைவேற்றி வருகின்றோம். இலங்கைத் தமிழர்களுக்காக தெற்கில் தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் உரத்த குரலில் கோரிக்கை எழுப்பிவரும் அதேநேரம், வடக்கில்டில்லியில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றுபட்டு தொடர் ஆர்ப்பாட்டங்கள், விளக்கக் கூட்டங்கள் நடத்தி போர்க்கொடி உயர்த்தி அரசின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகிறார்கள். ஈழத் தமிழர்கள் எதிர்நோக்கும் பல்வேறு இன்னல்கள் குறித்து டில்லி மேல்தட்டு மக்கள் விபரமாக அறிந்துகொள்ளும் வகையில் ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் பிரசுரங்கள், நூல்கள் வெளியிட்டு ஒரு விழிப்புணர்வை உண்டாக்கி வருகின்றோம். டில்லியிலுள்ள கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களின் ஒன்றுபட்ட போராட்ட உணர்வின் வெளிப்பாடு இது' என்று டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆவு மாணவர் ஆறுமுகம் கலையரசன் "தினக்குரலு'க்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர் பிரச்சினையில் அதிக அக்கறைகொண்டு பல்வேறு போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களில் முன்னின்று பங்கேற்றுவரும் ஆ.கலையரசனின் குடும்பம் திராவிடர் இயக்க பாரம்பரியத்தில் அதிக ஈடுபாடு கொண்டது குறிப்பிடத்தக்கது. அரசியல், சமூக துறைகளில் நேரு பல்கலைக்கழகத்தில் ஆவு மேற்கொள்ளும் இவர், ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் அங்கு நடைபெறும் தமிழினப் படுகொலையைக் கண்டித்தும் உடனடியாக அங்கு போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் டில்லியில் கடந்த சில மாதங்களாக நடைபெறும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்களில் முன்னின்று மாணவர்களை ஒன்று திரட்டிய பெருமையும் பெற்றவர். தனிப்பட்ட முறையில் பல்வேறுதுறை பிரமுகர்களையும் சந்தித்து ஈழத் தமிழர்கள் பிரச்சினையின் பின்னணியை ஆதாரங்களுடன் விளக்கிவரும் ஆ.கலையரசன் இதுவரை வெளிவராத பரபரப்பான தகவல்களை "தினக்குரலு'க்குத் தெரிவித்துள்ளார். மாறுபட்ட நிலைப்பாட்டுடன் சத்தமின்றி இலங்கையிலிருந்து வந்த அகிலன் கதிர்காமர், சிவமோகன் சுமதி ஆகியோரின் கருத்துகளுக்கும் வரதராஜப் பெருமாளின் திடீர் விஜயத்துக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கிடைத்த "வரவேற்பு' குறித்தும் இச்சந்திப்பில் அலசப்பட்டது. இச்சம்பவங்கள் எல்லாம் இப்பொழுதுதான் வெளிச்சத்துக்கு வருவது குறிப்பிடத்தக்கது. ஆ.கலையரசனுடன் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஒரு நேர்காணல்.

நீங்கள் பல்கலைக்கழக மாணவன். ஈழத் தமிழர் பிரச்சினையில் அதிக ஈடுபாடு கொண்டதன் காரணம் என்ன?

நான் பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே சமூக நீதியில் மிகவும் அக்கறை கொண்டவன். எனக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு ஆசிரியரிடம் துருவித் துருவி விளக்கம் கேட்பேன். இப்பழக்கம் கல்லூரி, பல்கலைக்கழகம் என்று வளர்ந்துவிட்டது. ஈழத் தமிழர் பற்றி பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வரும் செதிகள், கட்டுரைகள், புகைப்படங்களைப் பார்த்து மிகவும் நொந்து போவேன். அவர்கள் பற்றிய உண்மை நிலை அறிய விரும்பி பலருடன் தொடர்பு கொண்டேன். அந்த நாட்டின் அரசியலமைப்பைப் படித்தேன். அவர்களது பிறப்புரிமை, மறுக்கப்படும் உரிமைகள், ஆயுதம் ஏந்தக் காரணம் பற்றி எல்லாம் அறிந்த நான் அங்கு நடப்பது இனப்படுகொலை என்று முடிவு செதேன். அவர்களது உரிமைப் போராட்டத்துக்கு பெரும்பங்காற்ற நினைத்து செயல்பட்டு வருகின்றேன். யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி பல மாணவர்களையும் அமைப்புகளையும் ஒன்று திரட்டி டில்லியில் ஆர்ப்பாட்ட ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றோம். கடந்த 24ஆம் திகதி இந்திய பாராளுமன்றம் முன்பாக மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. யுத்தநிறுத்தம் கோரி டில்லியில் முதன்முதலில் பல்கலைக்கழக மாணவர்களது ஆர்ப்பாட்டத்தை நடத்தியது மறக்க முடியாது.

ஈழத் தமிழர் இன்று அனுபவிக்கும் கொடுமைக்கு என்ன காரணம் என்பதை டில்லியில் பிரமுகர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்களா?

அறிவுஜீவிகளுக்கே எதுவும் தெரியாத நிலையில் பிரமுகர்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் என்ன புரியப்போகிறது? இதில் மாற்றம் ஏற்படுத்த புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். "எங்கள் சரித்திரம்' எனும் பெயரில் பதினெட்டுப் பக்க நூலை வெளியிட்டிருக்கின்றோம். தமிழில் உள்ளதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளிவந்துவிட்டது. இதனை ஹிந்தி மொழியில் கொண்டுவர முயற்சி எடுத்துள்ளோம். இப்பிரசுரத்தில் ஈழத் தமிழர் பிரச்சினைகள், அங்கு என்ன நடக்கிறது, பறிக்கப்பட்ட உரிமைகள், கட்டாயத்தின் பேரில் தூக்கப்பட்ட ஆயுதங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் ஆண்டு வாரியாக குறிப்புகள் மூலம் இடம்பெற்றுள்ளன. இதனைப் படிப்பவர்கள் ஈழத் தமிழரின் பிரச்சினைகளை நன்கு அறிய முடியும்.

மாணவர்களைக் கூட்டி போராட்டங்கள் நடத்தும் நீங்கள், தனிப்பட்ட முறையில் பிரமுகர்களை சந்தித்து விவாதித்தீர்களா? அவர்களின் கருத்துகள் எப்படி இருந்தது?

பொதுவாக, இலங்கையிலிருந்து இங்கு வரும் பல தமிழ் பாராளுமன்ற அங்கத்தவர்களை அவசியம் சந்திப்பேன். இவர்களுடன் ஈழப்பிரச்சினை தொடர்பாக வருவோரையும் சந்திப்பேன். அண்மையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சமூகப் போராளி, "புக்கர்' பரிசுபெற்ற எழுத்தாளர் அருந்ததிரா, பா.ஜ.க.அரசியல் சட்ட அமைச்சராக இருந்த ராம்ஜெட்மலானி ஆகியோரை சந்தித்து கருத்துகள் கேட்டேன். அமைதி திரும்ப போர்நிறுத்தம் அவசியம் என்று வலியுறுத்திய அருந்ததிரா, இவ்விடயத்தில் இந்தியா உதவும் என்று எதிர்பார்க்கிறீர்களா என்று என்னிடம் கேட்டது அவரது உள்ளக் கருத்தை உணரக்கூடியதாக இருந்தது. ராம்ஜெட் மலானியைச் சந்திக்க சென்றபோது, இலங்கை எம்.பி.சிவாஜிலிங்கமும் வந்திருந்தார். ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி நிறையத் தெரியாது என்பதை ஒத்துக்கொண்ட அவர் பல விபரங்களையும் கேட்கவே, இலங்கை அரசியல் அமைப்பு 13ஆவது திருத்தம் மற்றும் ஈழத் தமிழர் பற்றிய குறிப்புகளை சிவாஜிலிங்கம் உதவியுடன் சேகரித்து நகல் எடுத்து ஒரு "பைல்' தயாரித்து அவரிடம் கொடுத்தேன். அதனைப் பெற்றுக்கொண்ட அவர் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசுவேன் என்று உறுதி அளித்திருந்தார். இவை தவிர, ஈழத் தமிழர்கள் விடயத்தில் உண்மைகளை மறைக்கும் கலந்துரையாடல், விவாதங்கள், கூட்டங்களில் அவசியம் கலந்துகொண்டு உரையாற்றுவேன்.

அந்த அனுபவங்கள் பற்றி...?

நான் பயிலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அடிக்கடி கருத்தரங்குகள், சிறப்புரைகள் நடைபெறும். சில சந்தர்ப்பங்களில் பல்கலைக்கழக நிர்வாகமே இவற்றை நடத்துவதுண்டு. இலங்கையில் அரசு, ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்தத்தை மீறியதைத் தொடர்ந்து அரசின் நிலைப்பாட்டை விளக்கும் முகமாக டில்லியிலுள்ள இலங்கைத் தூதரின் கூட்ட மொன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. நானும் சில தமிழ் மாணவர்களும் கூட்டம் நடைபெறுமிடத்துக்கு முன்கூட்டியே போயிருந்தோம். தூதர் வந்தார். கறுப்புக்கொடி காட்டினோம். திரும்பிப் போ என்று கோஷம் எழுப்பினோம். கடைசிவரை அவரைப் பேசவிடவில்லை. திரும்பிப் போவிட்டார். இவ்வருடம் ஜனவரி இரண்டாவது வாரத்தில் இலங்கையிலிருந்து அகிலன் கதிர்காமர், சிவமோகன் சுமதி ஆகிய இருவர் சிறப்புரையாற்ற பல்கலைக்கழகம் வந்திருந்தனர். இலங்கைப் பிரச்சினையைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்றும் இது ஒரு தேசியப் பிரச்சினையே இல்லை என்றும் ஒரு குழுவுடன் அரசு மோதுகிறது. விரைவில் இவர்களை அரசு காலி பண்ணிவிடும் என்றும் கூறி உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டனர். இவர்களது சிறப்புரையைக் கேட்க பத்துப்பேர் மட்டுமே வந்திருந்தனர். இதன் பின்னர் மூன்று நாட்கள் கழித்து இலங்கையின் முன்னாள் வட க்கு, கிழக்கு முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் கலந்துகொண்ட கூட்டம் நடந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், வரதராஜப் பெருமாள் சிறப்புரையாற்றுவார் என்ற எந்தவொரு செதியும் வெளிவராமல், வந்தார் சென்றார். பல்கலைக்கழக நிர்வாகமே ஒழுங்கு செதிருந்த இக்கூட்டத்தில் அவர்கள் நான்கு பேருடன் வேறு ஆறுபேர் அமர்ந்திருந்தனர். புலிகளுக்கு இராணுவத் தீர்வு, மக்களுக்கு அரசியல் தீர்வு என்பது வரதராஜப் பெருமாளின் முக்கியமான கருத்தாக இருந்தது. அவர் வெளியேறிய பின்னர்தான் இப்படி ஒருவர் வந்துபோன செதி வெளியில் பரவியது.

இம் மூவரின் திடீர் விஜயம், கருத்துப் பரிமாற்றம் பற்றி பல்கலைக்கழக மாணவர் வட்டா ரத்தில் என்ன பேசிக் கொண்டார்கள்?

இது ஒரு திட்டமிட்ட செயல்பாடு என்றும் பலமான பின்னணி இருக்கிறது என்றும் பொதுவாகப் பேசப்பட்டாலும் தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையை திசைதிருப்பும் திட்டமாகவும் இந்திய அரசை ஓரளவு திருப்திப்படுத்தும் நோக்கமாகவும் வடிவமைக்கப்பட்டது புலனாகிறது. ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பைக் கருத்தில்கொண்டு இப்படியொரு பிரசார தந்திரத்தை இலங்கை அரசு கைக்கொண்டிருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது. நாங்கள் தொடர்ச்சியாக நடத்திக்கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் மத்தியில் இதுபோன்ற அரச, முயற்சிகள் எதுவுமே பலிக்காது. மக்கள் ஆதரவும் இருக்காது!

நன்றி:-
தினக்குரல்

Saturday, January 24, 2009

ஈழத் தமிழர் கோரிக்கைக்கு ஆப்பு வைக்கும் ஜெயலலிதா!

ஈழ தேசம் என்பது இன்று இல்லையாம் அதனால் ஈழத் தமிழர் என்ற இனமும் இல்லையாம். தமிழச்சியே அல்லாத இந்த அழகு சுந்தரிக்கு இப்படி ஒரு அதிசய சிந்தனை எழுவதில் எவருக்கும் வியப்பு ஏற்பட நியாயம் இருக்காது.

வெள்ளிப் பணத்துக்கு வெள்ளித் திரையில் ஆட்டம் போட்ட அம்மணிக்கு பூர்வீகம் தமிழ் நாடு அல்ல. அதனால் அவர் தமிழச்சியும் அல்ல. அதனால் தமிழர் இனம் பற்றியும் தமிழர் நாடு பற்றியும் அவருக்கு பட்டறிவு கிடையாது. அவரது படிப்பறிவும் நாடுகள், இனம் அல்லது வரலாறு பற்றியதாக இருக்கும் வாய்ப்பே நிச்சயமாக இல்லை.

அதுவல்ல, எமது பிரச்சினை. இங்கு ஈழம், ஈழத் தமிழர் பற்றிய அவரது பொன் மொழிகள் எமது தாய் மண் மற்றும் தமிழ் இனத்தின் விடுதலை பற்றி அவதூறாய் இருப்பதே எமது ஆதங்கமாய் இருக்கிறது.

எதற்கும் முதலில் அவர் பலமுறை ஆட்சி நடத்திய தமிழ் நாடும், தமிழ் மக்களும் 1967 க்கு முன்னர் மதராஸ{ம் மதராஸிகளும் என வழங்கி வந்த வரலாறு தெரியாமல் இருக்கிறதும் ஒருவேளை அவர் படித்த ஆங்கிலக் கான்வென்டுகளில் அவருக்குச் சொல்லிக் கொடுக்கப்படாத காரணமாகவும் இருக்கலாம்.

அவருடன் பதவிகள் வகித்த பேர்வழிகளும் அவை பற்றி அவர் மீதுள்ள பயம் காரணமாகச் சொல்லாமலும் விட்டிருக்கலாம். தன் நாட்டு நிலவரமே சரியாகத் தெரியாத நிலையில் அடுத்த நாட்டையும் மக்களையும் பற்றி அவர் பேசியது யாருக்காகவோ யாரேர கொடுத்த பணத்துக்காக அல்லாது அவரது அறிவு சம்பந்தப்பட்டதாக இல்லை என்பதே உண்மை.

இலங்கையில் தமிழர் என்ற இனத்தையே இல்லாமல் செய்வதே 1948 முதல் இன மேலாதிக்க சிங்கள அரசுகளின் செயற்பாடாக இருந்து வந்துள்ளது. தமிழ் இனத்தை இந்தியத் தமிழர் என்றும் இஸ்லாமியர் என்றும் பிரித்து வகைப்படுத்திச் சட்டங்களை இயற்றி இந்தியத் தமிழரின் வாக்குரிமையைப் பறித்து இந்தியாவுக்குக் கப்பல் ஏற்றி, தனிச் சிங்களச் சட்டம், நாட்டின் அரச மதம் புத்த மதம் என்பவற்றால் இலங்கை என்பதே இல்லாமல் செய்து ஸ்ரீ லங்கா என நாட்டின் பெயரை மாற்றிக் கொண்ட பின்னர்தான், தமிழினம் தனது பூர்வீக தேசத்தின் பெயரை மாற்றிக் கொண்டது.

ஈழம், ஈழத் தமிழர் பெயரால் 1952 இல் முன்னாள் வவுனியாப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சி. சுந்தரலிங்கம் ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி என்று தனிக் கட்சி அமைத்துத் தனித் தமிழீழம் அமைக்கப் போராடியதும் அம்மையார் அறியாத விடயங்களே. அம்மையார் எப்போதும் உண்மைகள் பற்றிக் கவலைப்படுபவர் அல்ல. அவருக்கு கிடைக்கும் பணப் பெட்டியைப் பொறுத்தே அவரது அரசியலும் அமைவது உலகறிந்த விடையம்.

இத்தனை வருடங்களாகத் தன்னைத் தமிழீழ விடுதலைப் புலிகள் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் எனப் ஒப்பாரி வைத்துத் தனக்கு அதிசிறப்புக் காவல் படை வேண்டும் எனத் தனது அரசியலைச் செய்து வந்தார். ராஜீவ் காந்தியின் கொலையைத் தொடர்ந்து தனது அரசியல் துருப்புச் சீட்டாக இந்தத் தந்திரத்தைப் பயன்படுத்தி வருகிறார். ஆனால், பாவம் புலிகள் அவரை ஒரு பொருட்டாக எடுக்கவே இல்லை.

ராஜீவ் காந்தியின் கொலையால் பல வழியிலும் நன்மை பெற்றவர் ஜெயலலிதா என்பதை உலகமே அறியும். அக்கொலை மீதான பழியில் அவருக்கும் பங்கு இருக்கலாம் என்ற சந்தேகம் பல ஆய்வாளர்களிடமும் உள்ளது. ஒட்டு மொத்தமாக எதுவித சந்தேகமும் தமது பக்கம் வந்து விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாகவே இவரும் சுப்பிரமணிய சுவாமியும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ளனர்.

இலங்கை அரசு தனது தமிழின ஒழிப்புப் போருக்குப

நன்றி
-த.எதிர்மனசிங்கம்-

Thursday, January 22, 2009

இராணுவ நடவடிக்கை வெற்றியின் பின் அரசியல் தீர்வு எனும் பூச்சுற்றல்

இலங்கையின் சிறுபான்மையினரான தமிழர்களுக்கு எதிராகக் குரூரமாகக் கட்டவிழ்ந்த அரச ஒடுக்குமுறையின் பெறுபேறே இலங்கை இனப்பிரச்சினை.
பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து இலங்கைத் தீவு விடுபட்ட காலம் முதல் இங்கு மாறி மாறி ஆட்சிப்பீடம் ஏறிய பௌத்த - சிங்களப் பேரினவாதச் சிந்தனைப் போக்குடைய சகல அரசுகளினதும் அடக்குமுறைச் செயற்பாடுகளின் வரலாற்றுப் பிறப்பே இலங்கையில் இரத்த ஆறு ஓடுவதைத் தோற்றுவித்துள்ள இந்த இனப்பிரச்சினையின் மூலமாகும்.
இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக - நீதி வேண்டி - சுமார் மூன்றரை தசாப்த காலம் அஹிம்சை வழியில் போராடிய தமிழினம், அந்த மார்க்கத்தில் இந்த நோய்க்கு மருந்து கிட்டாத பின்னணியிலேயே ஆயுதப் போராட்டம் என்ற மருத்துவத்தை நாட வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்துக்கு உள்ளானது.
இலங்கை இனப்பிரச்சினையைப் பொறுத்தவரை, சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கும் வகையில், அவர்கள் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் உட்படுத்தப்படுவதே இங்கு பிரதான நோயாகும்.
அந்த நோய்க்கு மருந்து செய்தால் பிரச்சினை தீர்வுக்கு வந்துவிடும்.
அந்த நோயின் குணங்குறியாகவே, ஆயுதப் போராட்டம், வன்முறைக் கலாசாரம், பலவந்தப் பிரயோகம் என்ற விளைவுகள் சமூகத்திலிருந்து வெளிப்பட்டன.
ஆனால் நோய்க்கு விரைந்து மருந்து செய்ய வேண்டிய இலங்கைத் தீவின் அரசோ, நோயின் மூலம் குறித்து சட்டை செய்யாமல் - அந்த மூலப் பிரச்சினைக்கு மருத்துவம் செய்வதை விடுத்து - குணங்குறிக்கு மருத்துவம் பார்க்க முயல்கின்றது.
அடக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ள தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தையே இலங்கை இனப்பிரச்சினை என்று காட்ட முனையும் இலங்கை அரசு, அதன் வாயிலாக இங்கு இனப்பிரச்சினைக்கு மூலமாக இருக்கும் - ஈழத் தமிழரின் பிரதான இனப்பூசலையே மூடி மறைக்க முயல்கின்றது.
இனப்பிரச்சினை விவகாரத்தில் ஈழத் தமிழர்களின் பேரம் பேசும் வலுவாக இருக்கும் ஆயுத பலத்தை சிதறடித்து நாசமாக்கி விட்டால், இலங்கை இனப்பிரச்சினையைத் தனக்கு விருப்பமான முறையில் கையாண்டு, தமிழர் தரப்பை நிரந்தரமாக அடக்கி விடலாம் எனக் கனவு காணும் கொழும்பு, அதற்கேற்ப காய்களை நகர்த்தத் தொடங்கியிருக்கிறது.
இலங்கையில் இனப்பிரச்சினை என ஒன்றுமில்லை என்பது போலவும் -
தான் ‘பயங்கரவாதமாக’ சித்திரித்திருக்கும் ஈழத் தமிழரின் ஆயுதப் போராட்டத்தை அடக்கி, ஒடுக்கி, சிதறடித்து, நாசப்படுத்தி விட்டால் அதன் பின்னர் இனப்பிரச்சினை என்ற ஒன்றே இலங்கையில் இல்லை என்ற மாதிரியாகிவிடும் என்பது போலவும் காட்ட முனைகிறது கொழும்பு.
அப்படிக் கொழும்பு போடும் படத்தைக் கயிறாக விழுங்கி ஏற்றுக் கொள்கின்றது இந்தியத் தரப்பும்.
இலங்கையில் தனது ‘வெற்றிகரமான’ இராணுவ நடவடிக்கைச் செயற்பாட்டின் பின்னர், அரசியல் தீர்வுக்கான மார்க்கங்களை கொழும்பு அரசு முன்னெடுக்கும் என்ற தோரணையில் கொழும்பிலிருந்து வெளியிடப்படும் தகவல்களும் -
அத்தகைய தகவலை அப்படியே ஏற்றுக்கொண்டு, விழுங்கிக் கொள்ளும் புதுடில்லியின் போக்குப் பற்றிய செய்திகளும் -
இந்த நிலைமையைத்தான் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விடயத்தில், தமிழர் தரப்பின் ஆயுத பலத்தை அடக்கி, ஒடுக்குவதற்காகப் பல்லாயிரம் கோடி ரூபா நிதியைக் கொட்டிக் கொடுத்து, முழு நாட்டையுமே பெரும் பொருளாதார சுமைக்குள் ஆழ்த்தி, பெருமளவு உயிர், உடைமை இழப்புகளையும், நாசங்களையும், பேரழிவுகளையும் உருவாக்கி, யுத்த வெறி பிடித்து, சந்நதம் கொண்டு நிற்கிறது பேரினவாதம்.
ஆனால், மறுபக்கத்தில் இனப்பிரச்சினைக்கு மூலமான விடயத்துக்குத் தீர்வு காண்பதில் துளியளவும் முன்னேற்றமில்லை. வெறும் அனைத்துக் கட்சி மாநாட்டு அமர்வுகள், தொண்ணூறு வீதமான விடயங்களில் இணக்கப்பாடு, அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் என்ற ஆரவார அறிவிப்புகள் போன்ற ‘காதில் பூச்சுற்றும்’ தடபுடல் பிரகடனங்களைத் தவிர உருப்படியாக ஏதும் நடக்கவில்லை.
அப்படியிருக்க, முழு அளவிலான இராணுவ நடவடிக்கை வெற்றியின் பின்னர் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ‘நியாயமான தீர்வு’ காண்பதற்கான அரசியல் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் எனக் கொழும்பு கொடுக்கும் கயிறை புதுடில்லி இன்னும் அப்படியே ஏற்று விழுங்கிக் கொண்டிருக்கின்றது.
நொந்து போயிருக்கும் ஈழத் தமிழினம், புதுடில்லியின் இந்த ஏமாந்த சோணகிரிப் போக்குக் குறித்து மேலும் தன்னைத்தானே நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தவிக்கின்றது.

நன்றி
உதயன்

Monday, January 19, 2009

ஆனையிறவும் அதனூடே முல்லைத்தீவும்

தியன் பியன் பூவில் ஹோசிமிங்கின் படைகளின் வலிமையையும் சீனத்து போரியல் பேறறிஞர் சான் சூவின் தத்துவங்களையும் களமுனை பின்னகர்வுகளின் போதான தயவூட்டும் காரணியாக, அல்லது எங்களை ஆசுவாசப்படுத்தும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திய எம்; எண்ணங்களிலெல்லாம் மண்ணைத் தூவிவிட்டு சிறிலங்கா அரசின் வீச்செல்லை அல்லது தாக்குதல் ஆக்ரோசம் மிகுந்திருக்கிற நேரமிது.

யாதார்த்ததை உள்ளபடி கிரகிக்க முடியாதபடி, அல்லது எதையுமே சமநிலையோடு ஏற்றுக்கொள்கிற மனப்பாண்மையை வளர்;த்துக்கொள்ள இயலாத வகையில் புலம்பெயர்ந்த தமிழர்களை தமிழ்த் தேசியம் சார் அரசியல் ஆய்வாளர்கள் எனப்படுவோர் வைத்திருந்தார்கள் என்கிற உண்மை ஏற்றுக்கொண்டு ஒருமுறை தாயகத்தை திரும்பிப் பார்ப்போமா?.

வெற்றிகளின் படிக்கட்டில் பயணிக்கின்ற போதிலும் பின்னடைவு அல்லது பின்வாங்கல் என்பது அசாத்தியமானதொரு தற்காப்புப் போர்முறை என்ற புகட்டலில்லாமல் சிங்களத்தின் பிணங்கள் ஒன்றிரண்டு சரியும் போதெல்லாம் புலம்பெயர்ந்த தமிழர்களை உருவேற்றி உண்மையை உணர விடாது தடுத்தமையே இந்த போரின் உண்மை முகம் பற்றிய தெளிவான பார்வையை அவர்கள் பெறாததற்கான காரணம்.

ஏனெனில் சூதாட்டப் பந்தயத்தில் கலந்து கொள்கிற இரு குதிரைகளாகவே சிறிலங்கா அரசையும், விடுதலைப் புலிகளையும் இதுவரைப் பார்த்து வந்திருக்கிறோம்.

எங்களுடைய குதிரை முந்துகிற போதெல்லாம் விசிலடித்து புழகாங்கிதித்த மனம் இப்போது போராட்டம் மந்த கதியை அடைகிறதா அல்லது மங்கிச் செல்கிறதா என்கிற எண்ணவோட்டங்களிலெ;லாம் பயணிக்கிறது.

இந்த போராட்டம் எங்கே செல்கிறது என்ற கேள்விக்கான பதில் இன்றைய உலகத்தின் இணைவுப் பாதையுடன் தன்னைத் தொடுக்க முனைகிறது என்பதேயாகும்.

இந்திய இராணுவம் வன்போரியரில் 1987 இல் புலிகளை தள்ளிய போது எந்த ஒரு உணர்வு இருந்ததோ, அல்லது ஜெயசிக்குறு போரின் போது 1998 இல் எந்த ஒரு அவலம் இருந்ததோ அதை விடப் பெரிய அவலமாக இன்றைய நிலை இல்லவே இல்லை.

ஆனால், வெற்றி என்பது மட்டுமே முடிந்த முடிபு என்பதைத் தவிர எதையுமே ஏற்க மறுக்கின்ற எங்களின் மன ஆளுமையும் எதிர்காலச் சிக்கல்கள் பற்றிய சிந்தனையற்ற சிங்கள அரசின் மாறுபட்ட போரியலும் உண்மைக்குத் திரைபோட்டு இப்போரியலை ஒரு மாயவலைக்குள் சிக்க வைத்துவிட்டதே எமக்காக நாமே ஏற்படுத்திக் கொண்ட தற்போதைய துன்பமாகி விட்டது. ஆனால் உண்மை அவ்வாறல்ல.

இதைவிட நெருக்கடியான நிலையில் விடுதலைப் போர் இருந்ததென்பதும் இதனையொத்த பல காலங்களை அது தன்னகத்தே கொண்டிருந்தது என்பதுமே உண்மை.

ஆனால், இலத்திரனியலின் வளர்ச்சி செய்திகள் வந்தடைகின்ற வேகம் என்பவை இந்தப் போரை ஏனையவற்றிலிருந்து முற்றிலும் மாறுபடுத்தி தேவைக்கதிகமான செய்திகளை எமக்கு வழங்கி இப்போரை வித்தியாசமாகக் காட்ட முனைகின்றன என்பது மறுப்பதற்கில்லை.

இன்றும் எனக்குப் பசுமையாக நினைவிருக்கிறது. 1987 இல் இந்திய இராணுவத்துடன் சமர் தொடங்கிய போது 'ஐயகோ! உலகின் நான்காவது வல்லரசுடனா போர். விடுதலைப் போரே மடியப்போகிறது" என்று ஏங்கி அழுதவர்களுக்கெல்லாம் புதிய புறநானூற்றை காட்டியெழுந்தவர்கள் விடுதலைப் புலிகள்.

இதற்கும் மேலாக ஜெயசிக்குறுவுடன் முடிந்து விட்டாகள் என்பதற்கு அவர்கள் எழுதிய கணக்கு வேறுவிதமாக இருந்தது.

மூன்றே மூன்று நாட்கள் ஒட்டிசுட்டான் தாக்குதல் எப்படி மாங்குளத்தை அடைந்தது வவுனியா வரை இராணுவத்தை விரட்டியது என்பது பற்றியும் கிளிநொச்சித் தாக்குதல் எப்படி கிளாலி வரை வந்து கொழும்புத்துறையை மேவி யாழ். நகரில் கைகுலுக்கக் காத்திருந்தது என்பது பற்றியும் இன்றும் வியந்து கொள்ளக்கூடிய தாக்குதல்களைத் தந்த விடுதலைப் புலிகளின் கணக்கு எப்போதுமே வேறுவிதமானது.

எந்த ஒரு மூத்த தளபதியும் போர்முனையில் இன்னுமேன் நிற்கவில்லை என்று எதிரியானவனே திகைத்து நிற்க வான்படையின் ஊர்திகள் முதல் அசுர ஆயுதங்கள் எதனையுமே இன்றுவரை இக்களங்களில் இழக்கவில்லை. மறக்க வேண்டாம் பூநகரி முனையிலிருந்து பலாலித்தளத்திற்கு பாய்ந்து சென்ற ஆட்டிலறிகளும் நகர்த்தப்படுகின்றவே தவிர இழக்கப்படவில்லை என்பதே உண்மை.

தலைவன் தனது ஆளணிகளையும் ஆயுதங்களையும் இழப்பின்றி அழகாக நகர்த்துகின்ற இப் போரியல் இன்றைய பின்வாங்கல் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது.

உலகின் புதிய வரலாறொன்றிற்கான தேவையின் நிமிர்த்தமான நகர்வில் இதுவல்ல இன்னமும் இடம்பெற்றாலும் அதற்கான காரணங்களை ஏற்றுக் கொள்வதற்கான மன ஆளுமையைப் பெற வேண்டியதே எம்முடைய தேவை. அதை விடுத்து, பின்வாங்கலிற்காண காரணங்களை தேடுவதிலும் அல்லது சிங்களத்தின் மேதாவித்;தனத்தை வியப்போடு பார்ப்பதையும் நிறுத்திக்கொண்டு நாங்கள் யதார்த்தத்தை உணரத் தலைப்பட வேண்டும்.

போராட்டம் மற்றொரு முனை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான பரிசில்களாகவே இப்போதைய பின்வாங்கல்களும் இழப்புக்களும் இருக்கின்றன.

பேச்சுவார்த்தை மேசைக்கு சென்ற விடுதலைப் போர் மீண்டு வந்ததாகச் சரிதமே இல்லாதிருக்கின்ற இன்றைய உலகில் எங்களது மட்டும் விதிவிலக்காகி மீண்டு வந்து கொண்டிருக்கிறது என்பதை விட என்ன உறுதி வேண்டும் எங்களுக்கு? எத்தனை எத்தனை சூழ்ச்சிகள் நடந்தேறின? ரோக்கியோ மாநாடு முதல் கயவனின் துரோகம் வரை ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை.

அதற்கும் மேலாக வழங்கல் பாதையில் பயணித்து வந்த கலங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பல இழக்கப்பட்ட துன்பியல் வரலாறும் இந்த அனைத்துலக ஆதரவுடனான பேச்சுவார்த்தைக் காலம் நமக்குத் தந்த உயர் பரிசுகள் இருந்த போதும் விடுதலைப் போர் கிஞ்சித்தும் சிதறாமல் நவீன கிரகிப்புடன் பயணிக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக நாங்கள் மாற வேண்டும்.

யாழ். முன்னரங்கு, வவுனியா முன்னரங்கு, மணலாறு முன்னரங்கு, மன்னார் முன்னரங்கு என்று வன்னிக்களப்பரப்பில் திறக்கப்பட்ட போர்முனைகள் நாற்பதிற்கும் மேல் இவையனைத்திலும் வலுவுடன் பொருதினால் விடுதலைப் புலிகள் தொடர்ச்சியான ஆள் இழப்பு மற்றும் காயமடைந்து களத்திலிருந்து அகற்றப்படும் போராளிகளென இழப்புக்கள் அளவு கடந்து போய் அதன்மூலம் அவர்கள் ஆட்டம் கண்டுவிடுவார்கள் என்பது சிங்களத்தின் சிம்மாசனக் கணக்கு.

அதற்கு மேலாக இவ்வளவு முன்னரங்குகளிலும் பொருதும் போது தொடர்ச்சியான ஆயுத தளவாடப் பாவனைகளினால் அவர்களின் ஆயுத இருப்பும் வற்றும் நிலையை அடைந்து விடும் என்பது சிங்களத்தின் உச்சக்கனவு. அதனை தவிடுபொடியாக்கி விடுதலைப் புலிகள் நாற்பது களமுனைகளை சுருக்கி முல்லைத்தீவைச் சுற்றியுள்ள நான்கு திசைகளையும் முனைகளாக்கி பொருதுகிறார்கள்.

இப்போது கால்பதித்த இடங்களைக் காத்துக் கொள்ளத் திணறும் சிங்களத்திற்கு, முல்லைத்தீவைச் சுற்றிவரப் போர் தொடுக்கும் சிங்களத்திற்கு, தெற்கில் சிங்களப் பகுதிகளிலுள்ள படைத்தளங்களை விடுதலைப் புலிகள் தாக்கப போகிறார்கள் என்ற அச்சம் பலமாக ஏற்பட்டிருக்கிறது.

தியத்தலாவையை உச்சப்பாதுகாப்பிற்குள் கொண்டு வந்தது இதற்கான இன்றைய உதாரணம்.

இந்த அச்சம் சிங்களத்திற்கே மட்டும் புரிந்த அச்சம். போரரங்குகள் சுருக்கப்பட்டதால் இப்போது பல நூற்றுக்கணக்கான போராளிகளை எந்தத் தேவைக்காகவும் எந்தவிடத்திலும் பாவிக்கக்கூடிய திறனை விடுதலைப் புலிகள் தாராளமாகப் பெற்றுள்ளார்கள். அதுவும் எந்தவொரு சிறந்த தளபதியும் இன்னமும் களத்தில் இழக்காத ஒரு நிலையில் இந்தத் தாராள வசதியைச் சிங்களம் செய்து கொடுத்திருக்கிறது.

விரிந்து பரந்து வியாபித்து இராணுவத்தை நிலைநிறுத்தியுள்ள சிங்களம் இன்னமும் தொடர்ந்து தக்கவைக்க இரண்டு லட்சம் பேர் தேவை என்று புலம்புவது எதைக் கூறுகிறது? அல்லது முல்லைத்தீவை உடனேயே முடக்கிவிட வேண்டும் என்று இன்றும் முயல்வது எதனைக் காட்டுகிறது? என்ற கேள்விகளுக்கான விடையை விடுதலைப் புலிகள் தரும் வரை ஒன்றை நம்புவோமாக…

தேசியத் தலைவரின் கனவுகளிற்கு நிஜவடிவம் தந்து ஒட்டுமொத்த சிங்களத்தையும் இரையாக்கிய பெருமையை மகிந்த ராஜபக்ச விரைவில் பெறப்போகிறார்.

நன்றி
-எ.இராஜவர்மன்-
தமிழ்நாதம்

Sunday, January 18, 2009

தூதுவர்களுடன் முரண்படும் இலங்கையின் இராஜதந்திரம்

அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளாக்கும் ஜேர்மனியத் தூதுவர் ஜேர்கன் வீர்த்தும் இப் போது கொழும்பு அரசியல் மட்டத்தில் அடிக்கடி சர்ச்சைகளைச் சந்தித்து வருகின்றனர்.

இருவருமே இப்போது பொது நிகழ்வுகளில் பங்கேற்கின்ற போது வலியுறுத்தி வருகின்ற ஒரு விடயம் இலங்கை அரசாங்கம் உடனடியாக அரசியல் தீர்வு ஒன்றை முன் வைக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது.

இராணுவ ரீதியில் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாதென்றும் அரசியல் தீர்வு காணு மாறும் வலியுறுத்தும் வெளிநாட்டுத் தூதுவர்க ளும், இராஜதந்திரிகளும் தென்னிலங்கை அரசி யலில் வெறுப்போடு நோக்கப்படுகின்றனர். அரசாங்கத்தின் இராணுவத் தீர்வு முனைப் புக்கு ஆதரவு வழங்குவோர் அல்லது அதற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிப்போர் தேசாபிமானிகள் என்றும் அரசியல் தீர்வுக்கு அமைதித்தீர்வுக்கு வலியுறுத்துவோர் தேசத் துரோகிகளாகவும் பார்க்கப்படுகின்றனர்.

இது உள்நாட்டவர்களுக்கு மட்டும் பொருத்தமானதல்ல. வெளிநாட்டு இராஜதந்திரிகள், தூதுவர்களையும் தென்னிலங்கை இப்படித்தான் பார்க்கிறது. புலிகள் இயக்கத்திடம் இருந்து முல்லைத்தீவு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாலும் கூட அமைதித்தீர்வு, அரசியல் தீர்வு ஏற்பட்டு விடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

இதையேதான் அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளாக் கும் ஜேர்மனியத் தூதுவர் ஜேர்கன் வீர்த்தும் அடிக்கடி வலியுறுத்தி வந்தனர். அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளாக் அண்மையில், தமது நாட்டு அரசாங்கம் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் பட்ட பாடு போதும். நீங்களாவது சிந்தித்துச் செயற்படுங்கள் என்ற தொனியில் ஆலோசனை கூறப் போக அதையே ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய, ஜே.என்.பி. என்பன இலங்கையின் இறைமை மீதான தலையீடு என்று குற்றம்சாட்டின.

இப்போது மீண்டும் அமெரிக்கத் தூதுவரும் ஜேர்மனியத் தூதுவரும் தென்னிலங்கை அரசி யல் சக்திகளிடம் இருந்து நெருக்குதல்களை எதிர்நோக்குகின்றனர். இப்போதைய சிக்கலுக்கு காரணம் சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பாக அவர்கள் தெரிவித்த கருத்தே.

இலங்கையில் ஊடக சுதந்திரம் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கத் தூதுவர் பிளாக் தெரிவித்த கருத்துக்கு விமல் வீரவன்ச கடும் கண்டனத்தை வெளிப்படுத்தினார். அத்தோடு ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய ஆகியனவும் இந்தக் கருத்தை வன்மையாகக் கண்டித்திருக்கின்றன.

அமெரிக்கத் தூதுவர் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்துக்குள் அளவுக்கதிகமாக மூக்கை நுழைக்கிறார் என்கின்றன இந்தக் கட்சிகள். ஊடக சுதந்திரம் பற்றி வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவர் கருத்து தெரிவிப்பதானால் அது வெளிவிவகார அமைச்சினூடாகவே தெரிவிக்க வேண்டும் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்திருக்கிறார். இலங்கையின் ஊடக சுதந்திரம் பற்றி அமெரிக்கத் தூதுவர் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. உலகம் சிரிக்கின்ற அளவுக்கு இலங்கையின் ஊடக சுதந்திரம் கிழிந்து போய்க் கிடக்கிறது.

இப்படியான நிலையில் இதைப் பற்றிய கருத்தை வெளிவிவகார அமைச்சின் ஊடாகத்தான் வெளியிட வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஏனென்றால் இந்தக் கருத்து பொதுப்படையானது. அரசாங்கம் மீதான எந்தக் குற்றச்சாட்டையும் கொண்டதல்ல. இதுவே புலிகள் மீது குற்றச்சாட்டை முன் வைக்கின்ற கருத்தாக இருந்திருக்குமேயானால் இந்த சக்திகள் அனைத்தும் கைதட்டி வரவேற்றிருக்கும். அதை நாட்டின் இறைமை மீதான தலையீடாக எவரும் பார்க்கமாட்டார்கள்.

அமெரிக்கத் தூதுவர் மீதான வெறுப்பை அதிருப்தியை வெளிப்படுத்தக் கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தவற விடக்கூடாதென்ற நோக்கமே இத்தகைய எதிர்ப்புகளில் இருந்து உறுதியாகிறது. அது போன்றே இலங்கை அரசாங்கம் அமைதி வழித் தீர்வை முன் வைக்கும் என்று தான் ஒரு போதும் நம்பவில்லை என்று சில மாதங்களுக்கு முன்னர் ஜேர்மனியத் தூதுவர் ஜேர்கன் வீர்த் கருத்து தெரிவித்த பின்னர், அவரோடு அடிக்கடி முரண்பாடுகள் ஏற்பட்டு வருவதையும் காணமுடிகிறது.

லசந்தவின் இறுதிச் சடங்கில் ஜேர்மனியத் தூதுவர் ஜேர்கன் வீர்த் தெரிவித்த கருத்துக் குறித்து இலங்கை அரசாங்கம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளர் பாலித கொஹன்ன இந்த உத்தியோகபூர்வ கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். அப்படி அவர் ஒன்றும் பெரிதாக அரசாங்கத்தை குற்றம் சாட்டவும் இல்லை. எவரையும் தாக்கவும் இல்லை.

"இன்று ஒருவர் மௌனித்துள்ளார். இதைப் பற்றி நாம் ஏற்கெனவே பேசியிருக்க வேண்டும். ஆனால் இன்று தாமதமாகிவிட்டது. இன்று மனிதத்துவத்தின் பாரிய உண்மைக் குரலை இழந்து விட்டோம்' என்பதே அவரது சுருக்கமான பேச்சு. ஆனால் இது குறித்து அரசாங்கம் வெளியிட்டிருக்கின்ற அதிருப்தியானது வெளிநாட்டுத் தூதுவர்கள் இலங்கையில் நடக்கின்ற எதையுமே கண்டு கொள்ளக் கூடாதென்ற உண்மையைத் தான் உணர வைத்திருக்கிறது.

இந்த இரண்டு விடயங்களிலும் அரசாங்கமும் சரி, தென்னிலங்கை அரசியல் சக்திகளும் சரி ஒன்றை மறந்து விட்டன. இலங்கைப் பிரச்சினை என்பது ஒரு சிறிய நாட்டுக்குள் நடக்கின்ற பிரிவினைப் போராட்டம் மட்டுமல்ல. இதற்குள் தமிழ்மக்களின் உரிமை பற்றிய கேள்விகள் நிறையவே இருக்கின்றன. 1980களுக்கு முன்னர் ஜே.ஆர் காலத்தில், சிறிமாவோ காலத்தில் இந்தப் போராட்டத்தை அடக்கியிருந்தால் அப்போது எவரும் மூக்கை நுழைத்துக் கேள்வி கேட்க வந்திருக்க மாட்டார்கள்.

ஆனால் உலகம் முழுவதற்கும் இப்போது இந்தப் போராட்டத்தின் பிரச்சினையின் தாக்கங்கள் பரவிப் போய்விட்டன. இலங்கையில் நிகழும் ஒவ்வொரு சிறு மாற்றமும் உலகம் முழுவதிலும் எதிரொலிக்கிறது.

இந்தக் கட்டத்தில் இலங்கையின் உள்விவகாரம் பற்றிப் பேசுவதற்கு வெளிநாடுகளுக்கு எந்தத் தகைமையும் கிடையாதென்று கூறமுடியாத நிலை வந்து விட்டது. இலங்கை அரசாங்கம் புலிகளை அழிப்பதற்காக என்று நாடு நாடாக உதவி கேட்டுப் பெற்றுத் தான் போரை நடத்துகிறது. அப்படி உதவிகளை வழங்கிய நாடுகள் கருத்துக்களை தெரிவிக்கத்தான் செய்யும் என்பதையும் அரசாங்கமோ தென்னிலங்கை அரசியல் சக்திகளோ புரிந்து கொள்வதாகத் தெரியவில்லை.

ஆனால் அரசாங்கத்தினதும் தென்னிலங்கையின் அரசியல் சக்திகளினதும் இத்தகைய போக்கு சர்வதேச ரீதியில் இலங்கையை மேலும் மேலும் தனிமைப்படுத்தவே உதவப் போகிறது.

நன்றி :- வீரகேசரி

Sunday, January 11, 2009

கருணாநிதி முன்னெடுக்கும் கண்ணாமூச்சி விளையாட்டு

இதுவரை ‘தமிழ்’, ‘தமிழன்’ என்று தமிழின் பெயரால் அர சியல் பிழைப்பு நடத்தித் தம்மையும் தமது குடும் பத்தையும் உயர்த்திக் கொண்ட தமிழக முதல்வர் கலைஞர் கருணா நிதி-இந்தத் தள்ளாத வயதிலாவது-தமது கடைசிக் காலத்திலாவது-ஈழத்தமிழர்களுக்கு நியாயம் செய்ய அவர் ஏதேனும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பார் என்று நம் பிக் காத்திருந்த உலகத் தமிழர்களுக்கு மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியிருக்கின்றது.
ஈழத் தமிழர்களுக்காகக் கொதித்து எழுந்த தமிழகம் போராட்டம், ஆர்ப்பாட்டம், மனிதச்சங்கிலி, உண்ணாவிர தம், பதவி விலகல் மிரட்டல், அனைத்துக் கட்சிக் கூட்டம், புதுடெல்லிப் பயணம், பிரதமர் சந்திப்பு என்று பல்வேறு வகைகளில் தனது உணர்வை உச்சமாக வெளிப்படுத்தி விட்டது.

ஆனால் பயன்தான் ஒன்றும் விளையவில்லை.
இவ்விடயத்தில் தமிழகத்தை வழிப்படுத்தி, தமிழகத் தின் ஒட்டு மொத்தக் கருத்தை நெறிப்படுத்தி, ஈழத்தமி ழருக்காக ஆக்கபூர்வமாக ஏதேனும் செய்தாக வேண்டிய, தமிழக முதல்வர், அதற்குப் பதிலாகக் கண்ணாமூச்சி விளையாட்டுக் காட்டுகின்றார்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு, உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு இராஜினா மாச் செய்வர் என்ற மிரட்டல் அறிவிப்பை முன் னெடுத்தவர் இந்தக் கலைஞர் கருணாநிதிதான். புதுடில்லிக்கு இரண்டு வாரக் காலக்கெடுவைக் கொடுத்து, அதனடிப்படையில் தமிழக எம்.பிக்களின் இராஜினாமாக் கடிதங் களை வாங்கித் தனது சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டு காலத்தை இழுத்தடித்த கலைஞர், பின்னர் தமது ஏற்பாட்டில் முன் னெடுக்கப்பட்ட பதவி விலகல் எச்சரிக்கைத் தந்திரத்தில் இருந்து தாமே ‘பல்டி’ அடித்தார்.
அந்தப் பதவி விலகல் காலக்கெடு கடந்து இரண்டரை மாதங்களாகிவிட்டன. எதுவும் நடக்கவில்லை.

திரும்பவும் அனைத்துக் கட்சிக் கூட்டம், புதுடில்லிப் பயணம், பிரதமர் சந்திப்பு, இந்திய வெளிவிவகார அமைச் சர் விரைவில் இலங்கை விரைவு என்ற அறிவிப்பு என நாட கங்களை அவர் அரங்கேற்றினார். பலன் ஒன்றுமில்லை.

வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு செல்வார் எனத் தமிழக முதல்வர் அறிவித்தும் ஒன்றரை மாதங்களாகி விட்டன. அதுவும் நடக்கவில்லை.
இப்போது சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங், தமது வெளிவிவகார அமைச்சரை விரைவில் கொழும்புக்கு அனுப்புவார் எனத்திரும்பவும் உறுதிமொழி அளித்தார் என்று மீண்டும் உலகத்தமிழர்களின் காதில் பூச்சுற்றப்படுகின்றது.

அடுத்த பெப்ரவரி மாதம், ‘சார்க்’ அமைப்பை ஒட்டிய ஒரு கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் கொழும்பு வரவுள்ளார். அதுவரை விடயங்களை இழுத்தடித்துவிட்டு, ‘சார்க்’ மாநாட்டு அமர்வுக்காகக் கொழும்பு வரும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் பயணத்தை, தமது வற்புறுத்தலின் பேரில்-ஈழத்தமிழர் விடயத்தை ஒட் டிப் பேசுவதற்காக-மேற்கொள்ளப்படும் விஜய மாகக் காட்ட முனைவார் கலைஞர். அப்படித் திரும்பவும் பூச்சுற்றப்படும்.

வெளிநாட்டில் வாழும் இந்தியரின் மாநாட்டை சென்னை நந்தம்பாக்கத்தில் கடந்த வியாழனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங். அந்த நிகழ்வில் கலைஞர் கருணாநிதியும் கலந்து கொண்டார்.
பிரதமரை வைத்துக் கொண்டு அங்கு உரை நிகழ்த்திய தமிழக முதல்வர் கருணாநிதி ஈழத்தமிழர் விவகாரம் குறித்து வாயே திறக்கவில்லை. அவர் அப்படி என்றால், இந்தியப் பிரதமர் இன்னும் ஒருபடி மேலே போனார்.

பக்கத்து நாட்டில்- அயலில்- இலங்கைப் படைகளின் படையெடுப்பால் ஈழத்தமிழர் தாயகத்தில் தமிழர்கள் படும் பேரவலம் குறித்து ஒரு வார்த்தை பேசாத இந்தியப் பிரத மர், காஸாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால்-ஈழத்தமிழர்களைப் போன்று-யுத்தப் பேரவலத்தில் சொல்லொணாக் கஷ்டங் களை அனுபவிக்கும் பலஸ்தீன மக்கள் குறித்து அங்கு நீலிக் கண்ணீர் வடித்தார்.
பிரதமரை வைத்துக் கொண்டு ஈழத்தமிழர் விவகாரத்தைப் பகிரங்கமாக எழுப்புவதற்குத் திராணியற்ற கருணாநிதி-
ஈழத் தமிழர்களுக்காக கொதித்தெழுந்துள்ள தமிழகத் தின் உணர்ச்சிப் பிரவாகத்தை தமது தந்திர நடவடிக்கை கள் மூலம் மழுங்கடித்துவரும் தமிழக முதல்வர்-
ஈழத்தமிழர் விவகாரத்தில் எதுவுமே செய்ய இயலாத தமது கையாலாகத்தனம் குறித்து தமிழகத்தில் எழுந்துள்ள சீற்றத் தைத் திசைதிருப்புவதற்காக அந்த இயலாமைக்காகத் தானும் கவலைப்படுகின்றவர் போல "இதன் பிறகும் இந்த அரசு (தமிழக அரசு) இருக்கத்தான் வேண்டுமா?" - என்று அப்பாவி போல பொதுக்கூட்டம் ஒன்றில் வினா எழுப்பியிருக்கின்றார்.
இந்தப் பின்னணிகளைப் பார்க்கும்போது இவ்விடயத்தை ஒட்டி ‘ஆனந்த விகடன்’ தனது ஆசிரிய தலையங்கத்தில் எழுப்பிய சந்தேகம்தான் ஈழத்தமிழருக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எழுந் திருக்கின்றது.

"புலிகளை நாங்கள் முழுவதும் ஒடுக்கி விடுகிறோம். அதுவரை உங்கள் தேசத்து மக்களை திசை திருப்பும் வகை யில் கண்ணாமூச்சி அரசியல் நடத்திக் காலத்தைக் கடத் துங்கள்" என்று மத்திய அரசோடு எழுதப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைப் போட்டிருக்கின்றதோ ஸ்ரீலங்கா அரசு என்ற பலமான சந்தேகம் எழுகின்றது.

நினைத்ததை எல்லாம் நிபந்தனைகளாக விதித்து குறித்த நேரத்துக்குள் சாதித்துக் கொள்கின்ற தமிழக ஆளும் கட்சி, இந்த விடயத்தில் எள்முனையளவு கூட எதையும் சாதிக் கவில்லை என்பதுதான் மனவேதனையளிக்கும் நிதர் சனமாகும்.

-இப்படி ஆனந்த விகடன் எழுப்பும் சந்தேகமே உலகத் தமிழினத்தின் சந்தேகமுமாகும்.
இந்தப் பின்புலத்தில் தமிழக முதல்வர் தமது அரசு குறித்து எழுப்பிய அதே கேள்வியை மீண்டும் அரசிடம் உலகத் தமிழர்கள் சார்பில் கேட்க விரும்புகிறோம்.

"இதன் பிறகும் உங்கள் அரசு இருக்கத்தான் வேண் டுமா, கலைஞரே.....?"
கையாலாகாத்தனத்தோடு- பதவிக்கதிரைக்கு டேற் றிக்கொண்டு-தள்ளாத வயதிலும் அதிகாரத்தில் தொடர அவாக் கொள்வது அபத்தம்......! இல்லையில்லை...... பேரபத் தம்......!


நன்றி ;-
உதயன்

Saturday, January 10, 2009

இரத்தவெறி அரக்கர்களே இரட்டை வேடம் கலைந்ததா?

உங்கள் பெயர்களை இங்கே குறிப்பிடும் அளவுக்கு நீங்கள் யோக்கியமானவர் அல்ல. அதனால் நீங்கள் நடத்தும் கட்சியின் பெயராலும் அமைப்பு மற்றும் ஆயுதக் குழுக்கள் பெயராலும் நீங்கள் தமிழ் ஈழ மக்களுக்கும் ஒட்டு மொத்தத் தமிழினத்துக்கு செய்த, செய்து வருகிற துரோகங்களை மனித குலம் ஒரு போதும் மன்னிக்காது என்பதை மட்டும் நினைவு படுத்த விரும்புகிறோம்.

கிளிநொச்சிக்குள் சிங்கள இனவெறி அரசின் இராணுவம் புகுந்த செய்தியைக் கேட்டுப் பரவசப்படும் உங்களின் மனதில் உள்ள கீழ்த்தரமான உணர்வுகள் பளிச்சிடுவது தெரிகிறது. ~தலைவனைப் பிடித்துத் தாருங்கள் ராஜீவ் காந்தி கொலை பற்றி விசாரிக்க வேண்டும்| என்று சிங்கள அரசிடம் கெஞ்சும் கேவலத்தைச் செய்கிறீர்கள். வெட்கம் கெட்டு ஒரு பிராந்நிய வல்லரசு எனப் பெருமை பேசும் உங்களுக்கு என்ன சிறப்பு இதனால்? உங்கள் படையால் செய்ய முடியாமல் போன ஆற்றாமை உங்கள் கோரிக்கையில் வெளிப்படுகிறது.

ஈராக்கில் அப்பன் புஷ் செய்ய முடியாமல் போன வருத்தத்தில் மகன் புஷ் படையெடுத்து சதாமைக் கொன்றது போன்ற செயலில் நீங்கள் இறங்கி இருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், ஈழத்தில் எந்த இந்திய அரசு தோல்வி கண்டு போனதோ அதே இந்திய அரசு படை நடத்தி வெற்றி கண்டிருந்தால் அதுவே உண்மை வெற்றி.

ஈழத் தமிழனை இரண்டாம் பட்சமாக நீங்கள் நினைத்து வஞ்சம் தீர்ப்பதை நியாயமாகக் கொண்டாலும், தமிழனாகப் பிறந்து தமிழனாக வாழ்ந்து கொண்டே தமிழ் நாட்டில் அரசியல் நடத்தும் தமிழகக் காங்கிரஸ்காரருக்கு தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்படுவது கூடத் தெரியாமலா போனது? தமிழகத் தமிழனுக்கே துரோகம் செய்வதை விட வேறு நல்ல குணமே இல்லையா?

உலகமறிய இடம் பெற்ற அமைதிப் பேச்சுக்களை, இனவெறிச் சிங்கள அரசுடன் இணைந்து இடைநடுவிலே குழப்பி ஒரு போர்ச் சூழலை உருவாக்கியும், அந்தப் போரை மறைமுகமாக நடத்தியும் ஈழத் தமிழரைக் கொன்றொழிக்க இந்தியக் காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய அரசு மேற்கொண்ட கபடத்தனம் நிறைந்த செயற்பாடுகளை உங்களின் கோரிக்கை இன்று வெளிப்படுத்தி விட்டது.

தமிழகக் காங்கிரஸ் கட்சியினர் உண்மையிலேயே தமிழர்களையும் தமிழகத்தையும் நேசிப்பவர்களாக இருந்தால், நேர்மையான மனித குணம் படைத்திருந்தால், ராஜீவ் காந்தி கொலை விசாரணையை நடுநிலை கொண்ட கமிஷன் மூலம் நடத்தி அதன் மூலம் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிவதை முன்னெடுக்க வேண்டும். ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணைகள் சந்தேகத்துககு இடமளிக்கும் வகையில் நடைபெற்று உள்ளதாகப் பலராலும் கண்டிக்கப் பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

எனவே, அத்தகைய ஊழல் நிறைந்த விசாரணை முடிவுகளின் அடிப்படையில் இந்திய அரசால் விதிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தின் மீதான தடையும் கூட நீதிமன்றத்தில் எதுவித எதிர்வாதமும் இல்லாமலே, ஆதாரப்படுத்தப்படாத சாட்சியங்களின் அடிப்படையில் நீடிக்கப்பட்டு வருவதும் கடந்த 17 வருடங்களாக இடம்பெறும் அநீதியாகும். இத்தகைய அநீதியை முக்கியமாகத் தமிழக மக்களுக்கு மறைத்தும், அவர்களின் ஈழத் தமிழர் மீதான உணர்வுகளை மழுங்கடிப்பதற்காகவே பலரைப் பல ஆண்டுகள் சிறைகளில் போட்டும், அல்லது போடுவதாகப் பயமுறுத்தியும் கீழ்த்தர அரசியலை நடத்துவதே காங்கிரசின் சிறப்பாக இருக்க வேண்டுமா?

சிங்கள அரசுகள் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழரின் நிலத்தை, மொழியை, அரசியல், தொழில் மற்றும் கல்வித்துறைகளில் தமிழரின் வாய்ப்புகளைப் பறித்ததால் அவற்றிற்கு எதிராகப் நாம் போராடுவது குற்றமா? அதைத் தடுக்க உங்களின் ராஜீவ் காந்திக்கு யார் கொடுத்தார் அதிகாரம்? ஏம்மைக் காக்க என்று வந்து பின்னர் எமது உயிர் உடமைகளை அழித்துச் சிங்களத்தின் இனவெறி அரசியலுக்கு துணைபோகவா வேண்டும்?

மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழரின் வாக்குரிமையும் குடியுரிமையும் பறிக்கப்பட்டதும் தனிச் சிங்கள அரச மொழிச் சட்டம், உயர் கல்வி வாய்ப்பில் தமிழருக்கு எதிரான தரப்படுத்தல் முறை என்பனவற்றால் தமிழ் இனத்தின் அரசியல் மற்றும் சமூக பொருளாதார வளங்கள் சீரழிக்கப்பட்டதே. இவற்றுக்கு எதிரான உண்ணாவிரதம், மக்களின் சத்தியாக் கிரகம், தேர்தல் புறக்கணிப்பு என எல்லா வகையான அமைதி வழி அரசியல் நடவடிக்கைகளையும் தந்தை செல்வாவின் தலைமையில் கடைப்பிடித்தும் கிடைத்த பலன் என்ன?

30 வருடங்களுக்கு மேலாக மேற்கொண்ட தமிழரின் அரசியல் நடவடிக்கைகளை சிங்கள அரசு தனது தனிச் சிங்களப் பாதுகாப்புப் படைக் கட்டமைப்புகளாலும், சிறப்புச் சட்டங்கள், நீதிமன்றத் தீர்ப்பாயங்கள் மூலமாக எதிர்கொண்டதே அது ஜனநாயகப் பண்பா? நேர்மையான நியாயமான நீதி மறுக்கப்பட்டுச் சிறப்புத் தடுப்பு முகாம்களில் சித்திரவதையும் சிறையும் தமிழினத்தின் மீது தொடராகத் திணிக்கப்பட்டபோது அடைக்கலமும் ஆறுதலும் தந்த இந்தியாவும் இந்திரா காந்தியின் கொலையுடன் போனதா?

அன்றே எம்மை அண்ட விடாது விரட்டியிருந்தால் இன்று எமக்கு இந்த இழிநிலையும் உங்களின் எக்காளச் சிரிப்பும் கிடைக்காதே. இலங்கை அரசின் வன்முறைக்கு எதிராக முகங்கொடுக்க முடியாது தத்தளித்த தமிழர் தலைவர்கள் தமிழகத்தையும் இந்திய மத்திய அரசையும் நாடியதும் எதற்கு? தாய்-சேய் உறவு, தமிழ் என்ற தொப்புள் கொடித் தொடர்பு என்ற துணிவில்தானே நாடி ஓடி வந்தோம். இந்த வகையில் இன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி 1960 களில் இருந்தே முக்கிய தமிழகப் பிரமுகராகத் திகழ்ந்தவர்தானே.

அவருடைய முக்கிய சகாவான திரு. அப்பாப்பில்ளை அமிர்தலிங்கம் கொலையுண்டமை அவருக்கு மன்னிக்கப்பட முடியாத குற்றமாகப்படலாம். அதே போன்றே அவரின் கையாள் போன்று நடந்துகொண்ட பத்மநாபாவின் கொலையும் அவருக்குத் தென்படுவதில் ஆச்சரியமே இல்லை. ஆனால், ஈழத் தமிழரின் நியாயமான உரிமைகளை வென்றெடுக்கப் முன்னின்று விட்டுப் பின்னர் எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கும் துரோகத்தைச் செய்தவர்களில் மேற்குறிப்பிட்ட இருவரும் முக்கிமானவர்கள். எனவே, இவர்களின் மரணம் ஈழத் தமிழரைப் பொறுத்தவரை கவலைக்குரியதல்ல என்பதே உண்மை நிலை.

அதற்காக இவர்களின் கொலைகளைக் காரணம் காட்டிச் சிங்களத்தின் தமிழின அழிப்புக்கு இன்று கலைஞர் துணைபோவது ஒரு இனப்பற்று மிக்க மனிதருக்கு எப்படிப் பொருந்தும்? எனவே கலைஞரும் அவரது மகள் கனிமொழியும் எவ்வளவுதான் ஆறுதல் மொழியோ அடுக்கு மொழியோ பேசினாலும், ஈழத் தமிழர் மீதான சிங்களத்தின் இன அழிப்புப் போருக்கு முடிவு காண்பதும், அவர்களுக்கான தாயக மீட்புக்கு உதவதும் போன்ற வேறு ஒரு சிறந்த பணி இருக்க முடியுமா? இவற்றை இவர்கள் முழுமூச்சாகச் செய்து முடிக்காமல் என்னதான் பேசினாலும் அவை எல்லாம் வெத்து வேட்டுக்களாகவே இருக்கும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மன்னார் மற்றும் வன்னிப் பிரதேசங்களின் மீது 1700 தடவைகளுக்கு மேலாக விமானக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாக இலங்கை விமானப்படை கூறியிருக்கிறது. தொடர்ந்தும் இவற்றை நடத்திக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு தடவையும் குறைந்தது நான்கு குண்டுகளை வீசுவதாகக் கணக்கிட்டாலும் மொத்தம் 6,800 குண்டுகள் வீசப்பட்டுள்ளமை புலனாகும். இவை ஒவ்வொன்றும் சராசரியாக 500 கிலோ வெடிப்பொருளைக் கொண்டுள்ளன. இவற்றைவிடப் பல்குழல் பீரங்கிகள், இரவு பகலாக வீசப்படும் எறிகணைகள் என்பவற்றின் எண்ணிக்கையோ 2 இலட்சத்தையும் கடந்து இன்னும் தொடருகின்றன. இத்தனைக்கும் இப்பிரதேசத்தின் பரப்பளவோ வெறும் 50 சதுர மைல் விஸ்தீரணம் கூட இல்லை.

இவை அழித்து வரும் மனிதர் மற்றும் கால் நடை உட்பட்ட பல்வேறு உயிரினங்கள், வன வளம் மற்றும் தாவர வளங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. வெளியேற்றும் நச்சுப் புகைகளும் வாயுக்களும் எத்தகைய உயிராபத்தை விளைவிப்பவை என்பதை வெளி உலகத்துக்குத் தெரிய விடாது ஐ.நா. தொண்டர் அமைப்புக்கள் உட்பட எவருமே அங்கு போக முடியாதவாறு அரசு தடை செய்து உள்ளது. மரங்கள் முறிந்தும் எரிந்தும் அனைத்து இயற்கை வளங்களும் அழிக்கப் பட்டு விட்டன. அமைதிக் காலத்தில் புலிகளினால் நடைமுறைப் படுத்தப் பட்டு வளர்த்த பனை மரங்கள் அரச படைகளின் காவல் அரண்களில் மரணித்துக் கிடக்கின்றன. கரையோர மண்ணரிப்புக்கு எதிராக வளர்க்கப்பட்ட பல இலட்சம் சவுக்கு மரங்கள் பாதுகாப்புக் காரணங்கள் எனக் கூறி இராணுவத்தால் அழிக்கப்பட்டு விட்டன.

மூன்று இலட்சம் வரையான மக்கள் தொடர் இடப்பெயர்வுகளால் அகதிகளாகி அல்லல் பட்டு வருகின்றனர். உணவு, உடை, உறையுள் என்ற அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டவர்களாய் இரவு பகல் குண்டு மற்றும் எறிகணை வீச்சுக்களுக்கு முகம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர��
�. உழைப்பும் ஊதியமும் மறுக்கப்பட்டு உளவுரண் சிதைக்கப்பட்டு உயிர்ப் பறிப்புக்கும் ஊனப்படுத்தலுக்கும் இரத்தமும் சதையும் நித்தமும் சிந்தும்: வாழ்வுக்கும் தள்ளப்பட்டு பாம்புக்கடிகளாலும் வதைபடும் சோகம் எவருக்குமே புரியாதவை.

கிளிநொச்சி பிடிக்கப் படும் வரை ஊமையாய் இருந்துவிட்டுக் கிளிநொச்சி பறிபோனதும் பிரபாகரனையும் பிடித்துத் தாருங்கள். எங்கள் தலைவர் ராஜீவ் காந்தியின் உயிரைப் புலிகளே பறித்தனர் அதனால் புலிகளின் தலைவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் வீரப்ப மௌலி அறிக்கை விட்டுள்ளார். இத்தனை காலமும் அரசியல் தீர்வு என அறிக்கை விட்டு இந்திய மத்திய அரசும் காங்கிரசும் ஆடிய நாடகம் இப்போது எங்கே போனது? அப்படியானால் வழக்கு எனக் கூறி 26 பேருக்கு மரண தண்டனை விதித்தீர்களே அந்த வழக்கு யாருக்காக ஏன் நடத்தப்பட்டது?

இத்தனை வருடங்கள் கண்ணை மூடிப் பாசாங்கு காட்டிய மர்மம் என்ன? இந்தியக் காங்கிரஸ் கட்சி உண்மையான நீதி விசாரணையை விரும்புவதாக இருந்தால் ஒரு சர்வதேச விசாரணைக்கு இந்த வழக்கை எடுத்துப் போயிருந்தால் அதன் உண்மை நோக்கம் தெளிவாகத் தெரியும். ராஜீவ் காந்தி கொலையில் பல வெளிநாட்டு அரசுகளும் உள்நாட்டு அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்டிருப்பதும் அதன் விசாரணையில் பல மோசடிகள் இடம்பெற்றிருப்பதும் பலராலும் வெளிப்படுத்தப்பட்டும் அவை பற்றி எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாதது ஏன்?

தற்கொலைதாரி ஒரு ஈழத் தமிழர் என்பதாலும் அதனைப் புலிகளே செய்திருப்பர் என்ற கோணத்தில் வழக்கின் திசை திருப்பப்பட்டதற்கான ஆதாரங்கள் இப்போதும் வெளியாகும் நிலையில் எப்படிப் பழியைப் புலிகள் மீது சுமத்தலாம்? புலிகளை இந்திய நீதி மன்றத்தில் சமூகம் அளிக்கவோ அவர்கள் சார்பாக எவரும் வாதிடவோ முடியாதபடி தடைசெய்து விட்டு அந்தத் தடையை இரண்டு வருடத்துக்கு ஒரு தடவை புதுப்பித்து அதுவே நீதி எனக் கொக்கரிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

ஈழத் தமிழர் அழிவையும் இந்தியத் தமிழ் மீனவர் அழிவையும் செய்து வரும் இலங்கையின் சிங்கள அரசின் கைக் கூலிகளாக இருந்து சொந்த நாட்டையும் சொந்த இனத்தையும் காட்டிக் கொடுக்கும் தமிழ் நாட்டுக் காங்கிரசுக்கும் கட்ட பொம்மன் ஊமைத்துரையைக் காட்டிக் கொடுத்த எட்டப்பனுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? இத்தோடு புலிகள் இயக்கமும் ஈழத் தமிழினமும் அழிந்து போகலாம், ஆனால் உங்களின் ஈனப் புத்தியால் உங்களின் இந்தியத் தாய்த் திருநாடும் அழிந்து போவது உறுதியாகத் தெரிகிறது. வடக்கிலும் மேற்கிலும் கிழக்கிலும் ஆபத்தான எதிரிகளையும், தெற்கிலே ஒரு ஆபத்தான நண்பனாகச் சிங்களவனையும் தேடிக்கொண்டு விட்ட பின் தென் இந்தியாவுக்கும் எந்த அளவுக்குப் பாதுகாப்பும் அமைதியும் கிடைக்கும் என்பதை உணரும் அறிவு இருந்தால், தமிழக மற்றும் இந்திய வாக்காளரும் சிந்திக்க வேண்டிய காலம் இது.

நன்றி:
-ம.எதிர்மனசிங்கம்-
நிலவரம்

Thursday, January 8, 2009

போர் வெறி முனைப்பு மேலும் தீவிரமடையும் சூழ்நிலைப் போக்கு

இலங்கை இனப் பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு என்பதற்குச் சாத்தியமேயில்லை. அமைதி வழியிலான அரசியல் தீர்வு குறித்து சம்பந்தப்பட்ட தரப்புகள் கலந்துரையாடி இணக்கத்துக்கு வரவேண்டிய வேளை வந்துவிட்டது.

- இவ்வாறு நான்கு முக்கிய நாடுகள் தமது கருத்தைப் பிரதிபலித்திருக்கின்றன.

இதுவரை காலமும் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகரமாக விளங்கிய கிளிநொச்சி நகரத்தை இலங்கை அரசுப் படைகள் கைப்பற்றியமையை ஒட்டி அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளே இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றன.
ஆனால் அரசியல், வாழ்வியல் உரிமைகள் கோரித் தமிழர்கள் நடத்தும் சுதந்திரப் போராட்டத்தை ஆயுதப் பலாத்காரம் மூலம் அடக்கி விட வேண்டும் என்ற வெறியில் இராணுவ நடவடிக்கைத் தீவிரத்தில் முனைப்பாகச் செயற்படும் தென்னிலங்கையின் பௌத்த - சிங்கள ஆட்சிப் பீடத்தின் காதுகளில் இந்த முக்கிய நான்கு நாடுகளின் கோரிக்கை விழப் போவதில்லை. அந்த வேண்டுகோளை உதாசீனப்படுத்தி, புறக்கணித்து விட்டுத் தனது போர் வெறித் தீவிரத்தில் கொழும்பு முனைப்பாக ஈடுபடும் என்பதில் சந்தேகமேயில்லை.
சர்வதேசத்தின் காதுகளில் பூச்சுற்றுவதற்காக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு என்ற கபட நாடகத்தைக் கனகச்சிதமாக அரங்கேற்றி, காலத்தை இழுத்தடித்து வரும் மஹிந்தரின் அரசு, அதை வைத்துக்கொண்டே மேலும் காலத்தைக் கொண்டிழுத்து, தனது இராணுவ நோக்கத் திட்டத்தை - காரியத்தை - முன்னெடுத்து வருகிறது; தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

கிளிநொச்சி வெற்றியை அடுத்து, இனப்பிரச்சினையில் தமிழர்களின் பேரம் பேசும் வலுவான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டமைப்பைச் சிதறடித்து, சின்னாபின்னமாக்கி, சிதைத்து, அழிக்கலாம் என்று முழு அளவில் நம்புகின்றது மஹிந்தரின் தலைமை. அதனால் புலிகளை அழித்தொழிக்கும் தனது இராணுவ நோக்கு எய்தப்படும் வரை அவரது அரசு யுத்தத்தை நிறுத்தப்போவதோ, சமரசத் தீர்வு குறித்து சிந்திக்கப்போவதோ கிடையாது என உறுதியாக நம்பலாம்.

கிளிநொச்சியை இழந்து, இராணுவ வலுச் சமநிலையைக் கோட்டைவிட்டு, பலவீனமானவர்கள் போல புலிகள் அமைப்பினர் காணப்படுவதால், அவர்களுடன் அமைதிப் பேச்சு நடத்தி, இணக்கத்தீர்வுக்கு வர முயலுங்கள் என்ற கோரிக்கை - வற்புறுத்தல் - இந்திய மற்றும் மேற்குலகத்திடமிருந்து தமக்குத் தொடர்ந்தும் அந்த நாடுகளின் பல மட்டங்களில் இருந்தும் வரும் என்றும் எதிர்பார்க்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
அத்தகைய நெருக்குதலை - அழுத்தத்தை - சமாளிப்பதற்காகவே ‘புலிகள் மீதான தடை’ என்ற புதிய அஸ்திரத்தைப் பயன்படுத்த முனைகின்றார் ஜனாதிபதி மஹிந்தர்.
கடந்த ஆண்டின் முற்பகுதியில், புலிகளுடனான யுத்த நிறுத்தத்தை முறிக்க வேண்டாம் என சர்வதேச நாடுகள் கொழும்புக்கு அழுத்தம் கொடுத்தபோது, அதைப் புறக்கணித்து, உதாசீனம் செய்தபடி யுத்த நிறுத்தத்தைத் தள்ளுபடி செய்தார் இலங்கை ஜனாதிபதி.
அதுபோல இவ்வாண்டின் ஆரம்பத்திலும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தடை விதிக்கும் ஆயுதத்தைத் தூக்கிப் பிடித்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அதன் மூலம் ஒரு கல்லில் இரு மாங்காய்களை விழுத்த அவர் திட்டமும் தீட்டியிருக்கின்றார்.

விடுதலைப் புலிகள் மீது இலங்கை அரசு தடை விதித்தால் -
ஒன்று - தனது பக்கத்தில் இருக்கும் பௌத்த - சிங்களத் தீவிரவாதிகளை அதன் மூலம் வளைத்துப் போட்டு அவர்களது முழு ஆதரவைத் தாம் மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்பது ஜனாதிபதியின் கணிப்பீடு.

அடுத்தது - தடை செய்யப்பட்ட அமைப்பான புலிகளுடன் சமாதானத் தீர்வு குறித்தோ, சமரசம் பற்றியோ பேசுமாறு இந்தியா உட்பட எத்தரப்பும் அல்லது எந்த நாடும் தன்னை வற்புறுத்த முடியாது என்பது தமக்கு அடுத்த சாதகமான விடயம் என்று ஜனாதிபதி மஹிந்தர் எண்ணுகிறார்.

இந்தக் காரணங்களால் புலிகள் மீது தடை விதிப்பது அரசுத் தலைமையின் அடுத்த - அவசர அவசரமான - நடவடிக்கைத் திட்டமாக இருக்கக் கூடும் என நம்பப்படுகின்றது.
அரசியல் தீர்வுக்கு முன்னுரிமை கொடுத்து, அது தொடர்பாக ஆக்கபூர்வமாக நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச சமூகம் கொழும்பை வற்புறுத்தினாலும் கூட -
ஈழத் தமிழர்களுக்குத் தமது கௌரவமான வாழ்வு மற்றும் உரிமைகள் தொடர்பாகக் கிளர்ந்தெழுந்து பேரம் பேசுவதற்குப் பின்னணி வலுவாக இருக்கும் ஆயுத பலத்தை சிதைத்து, அழித்து, அவர்களின் உரிமைக் குரலின் முதுகெலும்பை நசுக்கி, அடக்கும் ஒரே வெறியில் தீவிரமாக இருக்கும் கொழும்பின் காதுகளில் சமரசத் தீர்வுக்கான சர்வதேசத்தின் அழுத்தம் - கோரிக்கை - விழப்போவதேயில்லை.

ஆகையால் புலித்தடையும், போர்வெறித் தீவிரமுமே இனியும் தமிழர் தேசத்துக்கு எதிராகக் கட்டவிழும் என்பதை உறுதியாக நம்பமுடியும்.

நன்றி :- உதயன்

Wednesday, January 7, 2009

தமிழ்த் தலைமைகள் இந்திய அரசை நம்புவதில் நன்மை எதுவுமில்லை

"கிளிநொச்சியைக் கைப்பற்றியதானது எமது வரலாற்றில் பல நூற்றாண்டுகளாகக் காணப்பட்டு வந்த இராணுவ வீரகாவியத்தின் பதிவுகளில் மிக உச்சமான கௌரவம் கொண்டதாகும்' என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி செயலகத்தில் மந்திரி பிரதானிகள் மத்தியில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார். அதாவது உதாரணமாக துட்டுகைமுனு எல்லாளன் போரில் ஈட்டப்பட்ட வெற்றியினை விடவும், கிளிநொச்சியில் ஈட்டிய வெற்றி பிரமாதமானதென ஜனாதிபதி ராஜபக்ஷ கருதியுள்ளார் போல் தெரிகிறது. நிகரற்றதொரு வெற்றியென அதனைக் குறிப்பிட்ட அவர். அதேநேரத்தில் கிளிநொச்சியைக் கைப்பற்றியமை தெற்கு வடக்கைத் தோற்கடித்து விட்டதாகக் கொள்ளக் கூடாதெனவும், அது அனைத்து மக்களுக்கும் கிடைத்த வெற்றியெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், ஜனாதிபதியின் உரையில் தொக்கிநிற்கும் செய்தியினைப் புரிந்துகொள்வது கடினமாயிருக்க முடியாது. மறுபுறத்தில் புரையோடிப் போயுள்ள தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்த்துவைக்கும் முகமாக நம்பகத்தன்மையான தீர்வுத் திட்டம் எதனையும் முன்வைக்காமல் தனது இருப்பை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் இராணுவ அணுகுமுறையினையே முதன்மைப்படுத்தி வருவது கண்கூடு. எனவே, சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான அரசியல் தீர்வுகண்டு, சமாதானத்தை எட்டி நாட்டினை சுபிட்சப்பாதையில் இட்டுச்செல்ல முடியுமென்றால் அதுவே முழுநாட்டினதும் வெற்றியாகும்.

பிரிவினைவாதம் 1956 இல் நாட்டப்பட்டது

"இது பிரிவினைவாதம், பயங்கரவாதம் மற்றும் இனவாதத்தை எதிர்க்கும் மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும். ஒரே தேசம், ஒரே கொடி' என ஜனாதிபதி ராஜபக்ஷ தனது வெற்றியுரையில் மேலும் கூறியதோடு, "தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியில் பல தசாப்த காலங்களாகச் சிக்குண்டிருந்த மக்கள் இனிமேல் சுதந்திரத்தை அனுபவிக்கப்போகின்றனர்' எனவும், தொடர்ந்து குறிப்பிட்டுள்ளார். உண்மையில் பிரிவினைவாதம் என்பது 1956 இல் நாட்டப்பட்டுவிட்டது என்பதை முற்றிலும் மறந்த நிலையிலேயே சிங்கள அரசியல் தலைமைகளால் காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன. இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராய் விளங்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ மிக இளைய பாராளுமன்ற உறப்பினராக அன்று அரசியலில் பிரவேசிக்க முன்னதாகவே அன்றைய ஸ்ரீ.ல.சு.க.தலைவர் பண்டாரநாயக்கவின் "சிங்களம் மட்டும்' சட்டத்தின் மூலம் அது முடுக்கிவிடப்பட்டது. இந்த விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஐ.தே.க. அதே நிலைப்பாட்டில் இருந்ததை மறந்துவிட முடியாது. அன்று பிரதமர் பதவியை எட்டுவதற்குத் துடித்துக்கொண்டிருந்த பண்டாரநாயக்க ஐ.தே.க.வை முந்திக் கொண்டார். அவ்வளவுதான்.

இரு கட்சிகளுமே சிங்கள பேரினவாதத்தை வளர்த்து வந்தன

இவ்வாறாக ஐ.தே.க.வும் ஸ்ரீ.ல.சு.க.வும் ஆட்சி அதிகாரத்தைக் குறியாகக் கொண்டு ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்பட்டு தமிழ் பேசும் மக்களை ஓரங்கட்டி, சிங்கள பேரினவாதத்தினை மென்மேலும் வளர்த்துவந்தன. அது முற்றி தமிழ் மக்கள் மீது மூர்க்கத்தனமான அடக்குமுறைகளையும் தொடர்ச்சியாக உயிர் உடைமை அழிப்புகளையும் மேற்கொண்டு வந்த நிலையில் 3 தசாப்தங்கள் பொறுத்தது போதும் என்றவாறாகவே 1976 இல் தனிநாட்டுக் கோரிக்கையும், அதனையடுத்து ஆயுதம் ஏந்திப் போராடுவதைவிட வேறு வழியில்லை எனும் நிலைமையும் ஏற்பட்டது. இதனைச் சிங்கள தலைமைகள் உணர மறுத்து வந்துள்ளது மட்டுமல்லாமல் இறுதியில் யுத்தத்தையும், தமிழர் மீது திணித்துவிட்டன. ஆனால், யுத்தம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிரானதே ஒழிய தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல எனக் குறிப்பாக சர்வதேச ரீதியில் பிரசாரம் செய்யப்பட்டு வருவதைக் காணலாம். விசேடமாக இன்றைய நிலையில் அரசாங்கம் தனது செல்வாக்கை நிலைநாட்டுவதற்கும் தனது இருப்பை உறுதிப்படுத்துவதற்கும் யுத்தத்தையே பிரதான சாதனமாகப் பயன்படுத்துகின்றது. "அரசியல் நலனுக்காகவே யுத்தம் வியாபாரமாக்கப்பட்டுள்ளது' என்கிறார் வேறுயாருமல்ல பெருந்தோட்டத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா சு.க.வின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவருமாகிய டீ.எம்.ஜயரத்ன. அடிக்கடி தேர்தல்களை நடத்தி அவற்றில் வெற்றியீட்டுவதற்கும் யுத்தம் பயன்படுத்தப்படுகிறது. கடந்த வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தலின்போது அது வெட்ட வெளிச்சமாகக் காணப்பட்டது. ஆகஸ்ட் 23 தேர்தல் தினத்தில் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டுவிடும் எனப்பிரசாரம் செய்யப்பட்டது.

எதிர்வரும் மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பாக 01/01/2009 ஆம் திகதி கொழும்பு மகாவலி நிலையத்தில் விளக்கமளித்தவராகிய ஸ்ரீ.ல.சு.க.வின் பொதுச் செயலாளரும் விவசாய அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன; "கிளிநொச்சியில் ஓரிரு தினங்களில் சிங்கக்கொடி பறக்கும், மக்கள் மகிழ்ச்சியுடன் பார்க்கப் போகிறார்கள்' என்று கூறிவைத்தார். விடுதலைப் புலிகள் கிளிநொச்சியை விட்டு பின்னகர முடிவெடுத்து விட்டனர் என்பதற்கான சமிக்ஞை அரச தரப்பினருக்கு அப்போது தென்பட்டுவிட்டது எனலாம். மற்றும், போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும, "நாட்டைக் காப்பாற்றும் யுத்தத்தை நாம் காப்பாற்றுவோம்' என்பதே தமது தேர்தல் பிரசாரத்திற்கான சுலோகம் என பறைசாற்றியுள்ளார்.

ஐ.தே.க.வின் யுத்த வெற்றிக் கதைகள்

இதனிடையே யுத்தத்தில் ஈட்டப்பட்டு வரும் வெற்றிகளுக்கான பெருமை தம்மையே சாரும் என ஐ.தே.க.வினர் மார்தட்டுகின்றனர். 2002 இல் யுத்தநிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்ட பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெரியதொரு பிளவை ஏற்படுத்தியதற்கு ஐ.தே.க.வே காரணகர்த்தாவாயிருந்தது என அண்மையில் ஐ.தே.க.பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த றங்க பண்டார பெருமிதப்பட்டுக் குறிப்பிட்டிருந்தார்."கருணா அம்மானும் அவரின் 6000 உறுப்பினர்களும் விலகுவதற்கு நாமே வழிசமைத்தோம். அதுதான் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியின் ஆரம்பம். அப்போது ஐ.தே.க.தலைவர் ரணில் விக்கிரமசிங்க தயாரித்துவைத்த உண்டியையே இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ருசித்துக் கொண்டிருக்கிறார்' என பண்டார குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான பிரசாரம் தான் 2005 ஜனாதிபதித் தேர்தலின்போது ஐ.தே.க.விலிருந்து பின்னர் அரசாங்கத்திற்குத் தாவி இன்று அமைச்சர்களாய் விளங்குபவர்களாகிய மிலிந்த மொறகொட, நவீன் திஸாநாயக்க ஆகியோர் மேற்கொண்டிருந்தனர். இன்று ஈட்டப்படும் வெற்றிகளுக்கு 2002 யுத்தநிறுத்த ஒப்பந்தமே வழிசமைத்ததென ரணில் விக்கிரமசிங்கவே நேற்று முன்தினம் ஸ்ரீ.ல.சு.க.(ம) தலைவர் மங்கள சமரவீர, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் சகிதம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கூறிவைத்தார். முன்னர் ஐ.தே.க.ஆட்சிக்காலத்திலும் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு உருப்படியான அரசியல் தீர்வின்றி ஏறத்தாழ 10 வருடங்களாக யுத்தம் நடத்தி தமிழ் மக்களைப் பதம் பார்த்ததை யாரும் மறந்துவிடமுடியாது. பின்பு 2001 முதல் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சிக்காலத்திலும் தமிழர் தரப்பிலான போராட்டத்தினை மட்டந்தட்டு முகமாக சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னல் ஒன்றினை ஏற்படுத்துவதில் அவர் ஈடுபட்டிருந்தார். தனது ஆட்சிக் காலத்தில் செய்துகொண்ட யுத்தநிறுத்த ஒப்பந்தம் காரணமாகவே அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆயுதப்படையினருக்கு ஆயுதங்கள் வழங்க முன்வந்தன எனவும், அதே ஆயுதங்களைப் பயன்படுத்தியே இன்று வெற்றிகள் ஈட்டப்பட்டு வருகின்றன எனவும் விக்கிரமசிங்க மகிழ்ச்சியடைந்துள்ளார்.

APRC மீது ஜே.வி.பி.யினர் ஏன் கொக்கரிக்கின்றனர்?

இதனிடையில் அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதிகள் குழு (APRC) தமிழ் மக்களுக்கு ஏதோ அள்ளிக் கொடுத்து விடப்போகின்றதென ஜே.வி.பி.யினர் கொக்கரித்துத் திரிகின்றனர். அதனை உடனடியாகக் கலைத்து விடவேண்டுமென ஆவேசப்படுகின்றனர். தமிழரைப் பொறுத்தவரை அக்குழுவானது வலுவற்றது. முற்றிலும் பிரயோசனமற்றது என்பது ஏற்கனவே தெரிந்த விடயமாகும். "தமிழ் பேசும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே எமது நோக்கம். அதில் முக்கியமானது சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதாகும். எத்தகைய தீர்வுத்திட்டத்தை தயாரித்தாலும் எமது நாட்டின் பெரும்பான்மை மக்களான சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளா விட்டால் அதை அமுல்படுத்த முடியாது. எனவே தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் அதேவேளை அதற்கு சிங்கள மக்களின் சம்மதத்தையும் பெறும் வகையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து செல்கிறோம்' இவ்வாறு அமைச்சர் விதாரண அண்மையில் வழங்கியிருந்த செவ்வியொன்றில் குறிப்பிட்டுள்ளார். இது உண்மையில் சிங்களப் பெரும்பான்மை மேலாதிக்கத்திற்கு அடிபணிந்து போகும் தன்மையையே கோடிட்டுக் காட்டுகிறது. அககீஇ யானது எதுவித தீர்வுத் திட்டத்தையும் கொண்டு வருவதற்கு வக்கற்ற நிலையில் உள்ளதால் தாம் அதிலிருந்து விலகுவது பற்றி ஒரு முடிவை விரைவில் எடுக்கப்போவதாக ஸ்ரீ.ல.மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வில் அரசாங்கத்திற்கு அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை எனவும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்.

வன்னியில் அப்பாவி மக்கள் கொலைகள்

கடந்த சில தினங்களாக வன்னியில் குறிப்பாக முரசுமோட்டை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நாள்தோறும் நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சுக்கள் மற்றும் ஷெல் தாக்குதல்கள் காரணமாக நான்கு நாட்களில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 78 பேர் காயமடைந்துமுள்ளனர்.

காஸா மீது இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் விமானக் குண்டு வீச்சுக்கள் காரணமாக ஒப்பீட்டு ரீதியில் பெருந்தொகையானோர் கொல்லப்பட்டும், காயமடைந்தும் உள்ளனராயினும், அதே பாணியில் வன்னியில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவது மிகவும் வேதனையளிப்பதாகும். "பொது மக்களுக்கு இழப்புகள் எதுவும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கொள்கையை' படையினர் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி ராஜபக்ஷ திருப்தி தெரிவித்துள்ளதாக அறியக்கிடக்கிறது. பலஸ்தீனத்திலுள்ள உண்மையான நிலைமையை அறிந்து கொள்வதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷ எடுத்த முயற்சி பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அங்கே உண்மையில் நடப்பது வெள்ளிடை மலைபோல் தெரிகிறது. அதன் காரணமாகவே குருதிப் பெருக்கு அதிகரித்துச் செல்வது கவலையளிக்கிறது; கலந்துரையாடல்கள் நடத்திப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென சென்ற வாரம் இலங்கை அரசாங்கத்தின் தரப்பில் அறிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

அரசியல் தீர்வு

அரசியல் தீர்வில் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை என்ற விடயம் தொடர்பாக பங்களாதேஷ் "டெயிலிஸ்ரார்' பத்திரிகை நேற்று முன்தினம் தீட்டிய ஆசிரியர் தலையங்கத்தில் வழங்கிய அறிவுரையை இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொள்வது சாலச் சிறந்ததாகும். "பேச்சுவார்த்தை மூலமே நிலையான தீர்வு' எனக் கூறியுள்ள ஆசிரியர் தலையங்கத்தில், அந்நியப்படுத்தப்பட்டவர்கள் என தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் உணர்வைப் போக்குவதற்காக அவர்கள் சமத்துவமாக நடத்தப்படுவார்கள் என உறுதியளிக்கப்படுவதோடு, தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும் அவர்களைச் சம்பந்தப்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆம், தமிழ் மக்கள் இறைமையுள்ள பிரஜைகள், அரசியல் அதிகாரப் பகிர்வு மூலம், இந்த நாட்டின் அபிவிருத்திப் பணியில் அவர்கள் பங்குதாரர்களாக்கப்பட வேண்டும் என நாம் பல தடவைகள் வலியுறுத்தியுள்ளோம். இராணுவ வெற்றி நிலையானதல்ல என்ற அர்த்தப்பட "டெயிலிஸ்ரார்' கூறியதும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியதாகும். விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்து சரணடைய வேண்டும் என ஜனாதிபதி கடுமையான தொனியில் கோரிக்கை விடுத்துள்ளாராயினும் அது நடைபெறுமா இல்லையா என்று கூறுவதற்கு ஒருவர் அரசியல் மேதையாயிருக்க வேண்டியதில்லை. ஆக அரசியல் தீர்வு தான் இறுதி வெற்றி, அதன் மூலம் தான் நாட்டையும் மக்களையும் உண்மையில் காப்பாற்ற முடியும். எனவே, "டெயிலிஸ்ரார்' ஆசிரியர் தலையங்கம் ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் சிந்தனைக்கு விருந்தாகட்டும்.

தமிழ்த் தலைமைகள் சுய விமர்சனம் செய்ய வேண்டிய தேவை மிக அவசியமானதாகும். அதாவது, அவர்களின் சமகால அணுகுமுறைகள் கண்டிப்பாக மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டியவையாகும். குறிப்பாகச் சொன்னால், இந்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குக் கைகொடுக்கும் என்றெண்ணுவதில் பயன் எதுவுமில்லை. அண்மைக்கால நிகழ்வுகள் இதனை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. அன்று இந்திரா காந்தி முதல் இன்று மன்மோகன் சிங் வரை அதே நிலைமைதான் காணப்பட்டு வந்துள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதியைப் பொறுத்தவரை அவர் இலங்கைத் தமிழருக்காகச் செத்து மடியவும் தயாரென எவ்வளவுதான் கூறினாலும், அவரின் வகிபாகம் மண்குதிரைக்குச் சமனானதாகும். அவர் பிரசார யுக்தியாக அண்மையில் தமிழ்நாடு அரசியல் கட்சித்தலைவர்கள் சகிதம் டில்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தாராயினும் வெளிநாட்டமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்பி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உறுதியளிக்கப்பட்டதாயினும் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்போது கருணாநிதி மெளனம் காத்து வருகிறார்.

மறுபுறத்தில், இந்திய கம்யூனிஸ்ட்கட்சி (CPI) களத்தில் நின்று போராடி வருகிறது. நேற்று செவ்வாய் கூட சென்னையில் ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்கட்சியும் (CPIM) அக்கறை கொண்டு குரல் கொடுத்து வருகிறது. இவ்விரு கட்சிகளும் இணைந்து மேலும் காத்திரமாகக் குரல் கொடுக்கச் செய்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.


நன்றி :-

தினக்குரல் வ.திருநாவுக்கரசு

Tuesday, January 6, 2009

இனவழிப்பு செயற்பாடு குறித்து சர்வதேசத்தின் பதில்தான் என்ன?

கிளிநொச்சியை அரசுப் படைகள் கைப்பற்றியமையை ஒட்டி தென்னிலங்கைச் சிங்களவர்கள் வெடி கொளுத்தி, இனிப்புப் பரிமாறி, பால்சோறு பொங்கிக் கொண்டாட, மறுபுறத்தில் தலைநகரிலும் மேல்மாகாணத்தின் ஏனைய இடங்களிலும் உள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழர்கள் வரிசையாகக் காத்து நின்றனர் - தம்மைப் பொலிஸில் மீண்டும் மூன்றாவது தடவையாகப் பதிவு செய்வதற்காக.

தமிழர் தேசம் கைப்பற்றப்பட்டமையை ஒட்டி, சிங்கள தேசம் ஆரவாரித்துக் கொண்டாடி மகிழ்கையில் - அந்த நேரம் பார்த்து - இந்தப் பதிவுக்கான அழைப்பைத் திடீரென விடுத்து, அதை முன்னெடுத்தமை ஈழத் தமிழரின் நெஞ்சத்தில் ஆழப் பதியும் விதத்தில் ஆப்பு இறக்கிய ஒரு வேலைதான் என்பதில் சந்தேகமில்லை.

இதுவரை புலிகளின் அரசியல் தலைநகராக இருந்த கிளிநொச்சியை இலங்கை அரசுப் படைகள் கைப்பற்றிய ஆரவாரத்தை ஊன்றி அவதானித்த சர்வதேச சமூகம், அந்த நடவடிக்கையின் பெயரால் அரங்கேறிய சில அனர்த்தங்களைக் கவனியாமலேயே அசட்டையாக இருக்கின்றமையை மன வேதனையுடன் சுட்டிக்காட்டியிருக்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

புலிகளின் தேசத்தைக் கைப்பற்றுதல் என்ற பெயரில் ஜெனிவாப் பிரகடனங்களுக்கு முரணான வகையில் தமிழர் தேசத்துக்கு எதிராகப் பெரும் போர்க் குற்றங்கள் இழைக்கப்படுவது மாத்திரமன்றி, தமிழ் மக்களுக்கு எதிராக இனவழிப்புப் படுகொலைக் கொடூரமும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றமையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அம்பலப்படுத்தி வெளிப்படுத்தியிருக்கின்றது.

தமிழர்களின் வாழ்வியல் கட்டுமானங்கள் - குறிப்பாக மருத்துவமனைகள், நிர்வாகக் கட்டமைப்புகள் போன்றவை - வேண்டுமென்றே திட்டமிட்ட முறையில் இலக்கு வைக்கப்பட்டு இலங்கைப் படைகளால் தாக்கி அழிக்கப்படுகின்றன என்பதை வேதனையுடனும், விசனத்துடனும் வெளிப்படுத்தியிருக்கின்றது தமிழ்க் கூட்டமைப்பு.

கிறிஸ்மஸ், புதுவருடம், தைப்பொங்கல் என்று இந்தப் பண்டிகைக் காலத்தில் தமிழர்களின் கட்டமைப்புகள் எவ்வாறு இலக்கு வைக்கப்பட்டன, அதனால் பொதுமக்களுக்கு - தமிழ் மக்களுக்கு - ஏற்பட்ட உயிரிழப்புகள், படுகாயங்கள், சொத்து மற்றும் உடைமை நாசங்கள் போன்றவற்றை விவரமாகத் தொகுத்து கூட்டமைப்பு அம்பலப்படுத்தியிருக்கின்றது.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள பொதுமக்களின் குடியிருப்புகள், வைத்தியசாலைகள் போன்றவற்றின் மீது கண்மூடித்தனமான குண்டு வீச்சுகள், ஷெல் தாக்குதல்களை நடத்தி, அப்பாவிச் சிவிலியன்களுக்குப் பேரிழப்புகளை ஏற்படுத்தும் அரச படைகள், அவற்றை மூடி மறைத்துப் புலிகளுக்கு இழப்புகளை ஏற்படுத்தியதாகத் தம்பட்டம் அடிப்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படுத்தியிருக்கின்றது.

பண்டிகைக் காலத்தில் - கடந்த 19 ஆம் திகதி முதல் ஜனவரி 2 ஆம் திகதிவரை - அரசுப் படைகள் மேற்கொண்ட அட்டூழியத் தாக்குதல்களில் அப்பாவித் தமிழ் பொதுமக்களுக்கு ஏற்பட்ட நாசங்களையும், இழப்புகளையும் பட்டியலிட்டு விவரங்களுடன் வரிசைப்படுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது திட்டமிட்ட இனவழிப்பு என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

வன்னியில் சுமார் மூன்று லட்சத்து 30 ஆயிரம் மக்கள் உள்நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்து அந்தரிக்கும் போது - புலி அழிப்பு என்ற பெயரில் - இப்படி அந்த அகதிகள் தங்கியிருக்கும் பிரதேசங்கள் மீது கண்மூடித்தனமாகக் குண்டு வீச்சுகளையும், ஷெல், பீரங்கித் தாக்குதல்களையும் நடத்துவது திட்டமிட்ட இனவழிப்பன்றி வேறில்லை.

அத்துடன் இவ்வாறு இடம்பெயர்ந்த அகதிகள் உணவின்றி, உடையின்றி, சுகாதார வசதிகளின்றி, உயிர்வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய வக்கின்றி அல்லல்படும்போது, அந்த மக்களுக்கான விநியோகங்களைக் கட்டுப்படுத்தி, பொருளாதார மற்றும் மருத்துவ வசதித் தடைகளை ஏற்படுத்துவது மனித குலத்துக்கு எதிரான போர்க்குற்றமாகக் கருதப்படவேண்டும் என்பதையும் தமிழ்க் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இத்தகைய இனப்படுகொலை அல்லது இனவழிப்புச் செயற்பாடு குறித்து சர்வதேசம் மௌனம் சாதிப்பது மட்டுமல்லாமல், அத்தகைய இன அழிப்புக் கொடூரத்துக்கு ஒத்தாசை புரிவது போல இலங்கைத் தரப்புக்கு இராணுவ உதவிகளையும் தாராளமாக வழங்கிவருவது பேரதிர்ச்சிக்கும் பெரு விசனத்துக்கும் உரியது என்பதை ஈழத் தமிழர்களின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துக் காட்டியிருக்கின்றது.

அரசுப் படைகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டிருக்கின்றமையால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் குறுகியுள்ளது. அந்தப் பிரதேசத்துக்குள்ளேயே நான்கு, ஐந்து லட்சம் தமிழர்கள் இன்று வசிக்கின்றார்கள்.

அரசுப் படைகளின் இராணுவ நடவடிக்கை மேலும் விஸ்தரிக்கப்படும்போது, இந்த மக்கள் மேலும் பேராபத்துக்குள் சிக்கும் மோச நிலைமை ஏற்படும்.
இந்த இனவழிப்பு நடவடிக்கையை இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் இனியும் பார்த்துக்கொண்டு வாளாவிருக்கப் போகின்றதா?

நன்றி - உதயன்