Thursday, April 30, 2009

பேய் ஆட்சி செய்கிறது ‐ பிணம் தின்ன வாருங்கள்

கொலையிலும் கொடியது
இவர்கள் அழுகிறார்கள்
நள்ளிரவில் திகில் கொள்கிறார்கள்
வாய்திறந்து பேச மறுக்கிறார்கள்
தினந்தோறும் மரணிக்கிறார்கள்

சகோதர சகோதரிகள் கணவன்மார்கள், குழந்தைகள், சிறுவர்கள் சிறுமிகள், கர்ப்பிணித் தாய்மார்கள், இவர்களின் முன்னாலேயே தாக்கப்படுகிறார்கள். கொலை செய்யப்படுகிறார்கள். கைது செய்யப்படுகிறார்கள். வெள்ளை வானில் கடத்தப்படுகிறார்கள். பெண்கள், சிறுமிகள்; பாலியல் சித்திரவதைப்படுத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் 50, 60, என்ற தொகை மாறி 100 200 என 1000 பேர்வரைகூட கொல்லப்பட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன வன்னியிலிருந்து.

புலிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் கண்கள் மூடிக் கட்டப்பட்டு கைகள் முதுகுப்புறமாய் கயிற்றால் இறுக்கப்பட்டு இழுத்து இழுத்து முழங்கால்கள் வீதிகளிலும் தரையிலும் தேய்க்க இழுத்துச் செல்லப்படுகின்றார்கள். அதற்கப்புறம் இவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது என கூறுகிறார்கள். வயது வேறுபாடின்றி பெண்கள் குழந்தைகள் முதியோர் எல்லோரையும் முகாமுக்கு கொண்டு செல்கின்றார்கள் வர மறுத்தவர்கள் முடியாதவர்கள் அந்த இடங்களிலேயே சுட்டுக்கொல்லப்படுகின்றார்கள். காணமால் போய்க் கொண்டிருக்கிறார்கள், பதுங்குழிகள் புதைகுழிகளாக மாறிக்கொண்டு இருக்கின்றன. கர்ப்பிணிப்பெண்களின் வயிற்றில் எறிகணை வீச்சுக்கள் பாய்ந்து குழந்தைகள் சிதறுகிறது.

ஒரு பெண் கத்துகிறாள் தன் மூன்று மாதக்குழந்தையை கையில் ஏந்தியவாறு ஓடி ஒடி தன்னை சூழவுள்ளவர்களுக்கு காட்டுகிறாள் கத்துகிறாள் அவளின் கதறல் அழுகுரல் யாரின் காதிலும் விழவில்லை காரணம் இவற்றுக்கு குரல் கொடுக்க வலுவற்றவர்களாக கரடுமுரடான காடுகளிலும் கூடாரங்களிலும் மக்கள் சோர்வுடன் அழுக்கு படிந்தவர்களாய், அவலம் நிறைந்ததாய் கொலைகள் நிறைந்த அவர்களின் வாழ்வு. அங்குள்ள பெண்கள், குழந்தைகள், சிறுமிகள, தாய்மார்களுக்கு தேவையான அவசியப்பொருட்கள் மற்றும் பெண்களுக்கு அத்தியாவசியமாக மாதவிடாய்க்காலங்களில் தேவையான பொருட்கள் இன்மையினால் அவர்கள் மிகவும் கஸ்டத்தை அனுபவித்து வருகிறார்கள்.

இலங்கையில் இதுவரை நடந்து கொண்டிருக்கும் யுத்தங்கள் ஒவ்வொன்றிலும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் மிகவும் கொடுரமாகவே நிகழ்ந்து வந்துள்ளன. இப்போ பாதுகாப்பு வலயத்திற்குள் வந்த பெண்களை இலங்கை இராணுவம் கடத்தி பாலியல் வல்லுறுவு செய்து விட்டு அவர்களை கொலை செய்த சம்பவங்கள் செய்திகளாக வருகின்றன.

தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் பெண்விடுதலைக்கான வேலைத்திட்டங்களுடன் அமையவில்லை என்றாலும் தமிழ் இனத்தின்மீதான ஆதிக்க, ஆக்கிரமிப்பு வெறிக்கு எதிராக போராடும் அனைத்து பெண்போராளிகளும் வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டியவர்கள். தேசிய விடுதலைக்காய் இயக்கங்களில் தம்மை இணைத்துக்கொண்டு போராடிய போராடுகின்ற அனைத்துப் பெண்போராளிகளும் இந்த சமூகத்தின் பெண்கள் சம்பந்தமான கருத்தியலில் ஒரு மீறலைச் செய்திருக்கிறார்கள் என்ற விடயம் புலியெதிர்ப்புக்குள் மறைக்கப்பட முடியாதது. அதேநேரம் சமூகத்தின் ஆணதிகாரக் கருத்தியலுக்கு எதிராக எந்த தகர்ப்பையும் விடுதலைப் புலிகள் அமைப்பு செய்யாததால் சமூகத்தில் அவர்களுக்கான இடம் இயக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் அச்சமூட்டும் ஒன்றாக அமைந்துவிடும் வாய்ப்பு உள்ளது. கலாச்சாரத்தின் பெயரால் ஒழுக்கத்தின் பெயரால் அவர்கள் ஓரம்கட்டப்படும் கொடுமைகூட நிகழலாம்.

யுத்தத்தின்போது கைதுசெய்யப்பட்ட அல்லது கொல்லப்பட்ட போராளிகளின் ஆடைகளை அகற்றி தமது வக்கிரங்களை காட்டுகின்ற இலங்கைப் பேரினவாத அரசின் இராணுவத்தையும் அவர்களின் ஆணாதிக்க வெறியையும் கண்டித்தே ஆகவேண்டும். இதற்கு விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக இருக்கவேண்டிய அவசியமில்லை. ஒரு பெண்ணியவாதியாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதற்கு ஒரு மனிதஜீவியாக இருத்தலே போதுமானது. இன்னமும் மேலாக பெண்ணியவாதிகள் இதற்கு எதிராக கடுமையான குரலை எழுப்பியாக வேண்டும். இந்தக் கொடுமை எந்தத் தரப்பால் நிகழ்ந்தாலும் சரி தனது அரசியல் போர்வையை விலக்கிக்கொண்டு குரல்கொடுக்க முன்வரவேண்டும்.

இலங்கையில் தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் ஆண்களுக்காகப் பெண்களை பழிவாங்கும், பணயம் வைக்கும் நிகழ்வுகளை நாம் வரலாற்றில் கண்டுள்ளோம். தமிழினப் படுகொலைக்கு எதிராக பெண்கள் பல்வேறு நிலைகளில் போராட்டக் களத்தில் நின்று பங்கேற்று வருகின்றனர். தன்மீதான ஒடுக்குமுறைகளின்போது ஒரு பெண் தன்னை பெண்ணாக மட்டும் உணர்ந்து வாழ்வதில்லை. ஒரு சமூகஜீவியாகவும் தன்னை உணர்கிறாள். இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அவள் ஆயுதம் ஏந்திச் செயல்படுவதில் எந்த அதிசயமும் இருக்க முடியாது. ஆனால் போர் அது ஏற்படுத்தும் நாசவிளைவுகள், அது உருவாக்கும் எதேச்சதிகார அரசியல் எல்லாமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு ஆண்களைவிட பாலியல் சித்திரவதை உட்பட மேலதிகமான கொடுமைகளை வழங்குகிறது..

இலங்கை இராணுவத்தின் வக்கிரமான சொற்பிரயோகங்களைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இப்போ அது இறந்த பெண்ணுடல் மீது தங்களது பாலியல் வக்கிரங்களை கொட்டித்தீhத்த இராணுவமாகவும் அம்பலப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல பாலியல் வல்லுறவு செய்துவிட்டு யோனியில் கிரனைட் வைத்து கொலை செய்த காட்டுமிராண்டி இராணுவமாகவும் அது ஏற்கனவே வெளிப்பட்டிருந்தது. கர்ப்பிணிப்பெண்களை பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கிய இராணுவமாகவும் அது வெளிப்படுகிறது. இதற்கெல்லாம் அது தமிழ் சிங்களம் என்று பார்ப்பதில்லை. மன்னம்பேரியை நிர்வாணமாக்கி வீதி வீதியாக இழுத்துச் சென்று, பாலியல் சித்திரவதை செய்து, பின் கொலை செய்த வரலாற்று நிகழ்வு இலங்கை இராணுவத்தையே சாரும்.

மனித நாகரீகங்களை குழிதோண்டி புதைத்து நிகழும் காட்டுமிராண்டித்தனமான இச்செயல்களை கண்டிக்க முன்வராமல் பெண்ணியம், மாற்றுக்கருத்து பற்றி கதைப்பது அர்த்தமற்றது.. போலியானது. இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் தமிழ் மக்கள் மீதான இனஅழிப்பையும் இனவாதத்தையும் இதயத்துடிப்பாகக் கொண்டு இயங்கும் சிங்கள பேரினவாத அரசு செய்து வரும் இந்த மனித பேரவலத்தை எந்ந வித பிரக்ஞையும் அற்று... இத்தகைய சம்பவங்கள் சாதாரணமானவை, தவிர்;க்க முடியாதவை போரில் இவையெல்லாம் சகஜமானவை என்ற நிலையை ஒருவர் முன்வைப்பது ஒடுக்குமுறைகளை சகித்துக்கொள்வதற்குச் சமம்.

இந்த மனித பேரவலத்தை பார்த்து தங்களுடைய அரசியல் இலாபங்களுக்காகவும் விருப்பு வெறுப்புகளுக்காகவும் தனியே புலி ஆதரவு, புலிஎதிர்ப்பு என்ற வரையறைக்குள் வைத்து அரசியல் இலாபம் தேட முற்படும் இன்றைய மாற்றுக்கருத்துகள் எல்லாம் கள்ள மௌனம் சாதித்து பிணம் தின்னுகின்றன.

குழந்தைகள் இரத்த வெள்ளத்தில் கிடக்கிறார்கள். பெற்றவர்கள் துயரத்தில் கதறுகிறார்கள் ஆயிரமாயிரம் உயிர்கள் பிரிந்து கொண்டிருக்கின்றன. வீதியோ பதுங்கு குழியோ மரநிழலோ வெட்டவெளியோ பற்றையோ புதரோ எங்கும் அவர்கள் மடிந்துகொண்டிருக்கிறார்கள். இந்தப்; போரின் பிறப்பிடமான பேரினவாதத்திற்கு புதிய விளக்கம் கொடுத்தபடி, வடக்கும், கிழக்கும், தெற்கும் கைகோர்க்கும் நாள் வரும் என்கின்றனர் சமாதானப் பிரியர்கள். ஒரு சில தனிமனிதர்களின் முட்டாள்தனமான முடிவுகளால் ஒரு பாவமும் அறியாத ஒரு தேசத்தின் மக்கள் உயிரையிழந்து உடமைகளை இழந்து அவஸ்தைப்படுவதைப் புரிந்துகொள்ள மரணத்துள் வாழும் மக்களுக்கு எந்தத் தத்துவமும் தேவையில்லை.

மரணமுகங்களை இன்று இலங்கை அரச பயங்கரவாதம் தமிழ் மக்களிடம் குத்திவிடுகிறது. புலிகளும் மக்களும் வேறுபாடின்றி பலி கொள்ளப்படும் குரூர யுத்தத்தில் வன்னி அகப்பட்டிருக்கிறது. மக்களின் வாழ்வில் குருதி வடிகிறது. பேய் அரசாட்சி செய்கிறது. பிணம் தின்ன வாருங்கள்!!

நன்றி
- மூலம் - றஞ்சி சுவிஸ் -

மேற்குலகின் ஐக்கியத்தை விரும்பாத இலங்கை

முல்லைத்தீவுக் களமுனையில் போர் விமானங்கள், கனரக ஆயுதங்கள் போன்றவற்றைத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்துவதில்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ள போதிலும் களத்தில் யுத்தம் தீவிரமாகத் தொடர்வதாகவும், பேரழிவு நாசம் எண்ணிப் பார்க்க முடியாத கொடூரமாக நீடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுத்த முனைப் பேரழிவுகள் தொடர்பாக சர்வதேசம் வெளிப்படுத்தும் சிரத்தை கவலை கரிசனை போன்ற வற்றை உதாசீனப்படுத்தியும், புறந்தள்ளியும் நடந்தபடி தன்னுடைய போர் முனைப்புப் போக்கைக் கொழும்பு தீவிரப்படுத்தியிருப்பது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தி ருக்கின்றது. இதனால், இலங்கை தன்னுடைய யுத்த வெறிப் போக்குக்கு முண்டுகொடுத்து, உதவி, ஒத்தாசை புரியும் சில "தோழமை" நாடுகள் தவிர்த்து ஏனையவற்றுடன் இராஜதந்திர முறுகலுக்கு ஆளாகும் நிலைமையும் ஏற் பட்டிருக்கின்றது.

குறிப்பாக மேற்குலகுடன், முரண்டு பிடித்து இழுபறிப்படும் நிலைமைக்கு இலங்கையின் இராஜதந்திரம் சென்றிருக்கின்றது.

இலங்கைப் போரினால் தமிழினத்துக்கு அப்பாவித் தமிழ் மக்களுக்கு நேர்ந்திருக்கும் பேரழிவுக் கொடூரங்கள் குறித்து சர்வதேச சமூகத்தின் மிக உயர்ந்த ஐக்கிய கட்டமைப்பான ஐ.நா.மன்றம் தெரிவித்த கருத்துக்களையும் கரிசனை யையும் கூட செவி மடுக்கவோ, கருத்தில் எடுக்கவோ கொழும்பு மறுத்துவிட்டது.

யுத்தமுனைப் பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கு நேரடியாகச் சென்று, அவர்களுக்கு அவசரமாகவும், அவசியமாகவும் தேவைப்படும் மனிதாபிமான உதவிகளை ஐ.நாவின் மனித நேயத் தொண்டு முகவர் அமைப்புகள் செய்வதற்கான அனுமதியைக்கூட இலங்கை அரசிடம் பெற முடியாத கையறு நிலையில் தமது இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு, வெறுங்கையோடு புறப்பட்டிருக்கின்றார் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா.ஆணையாளர் ஜோன் @ஹாம்ஸ்.

இனப்பிரச்சினையை ஒட்டிய யுத்த விவகாரத்தில் தனது வழிகாட்டு ஆலோசனைகளை ஒரேயடியாகப் புறக்கணித்து, மிதப்புடன் நடந்துகொள்ளும் கொழும்பின் போக்கு மேற்குலக இராஜதந்திரத்தை கடும் எரிச்சலுக்குள்ளும், விசனத்துக்குள்ளும்,சீற்றத்துக்குள்ளும் ஆழ்த்தியிருப்பதில் ஆச்சரியமில்லை.

இலங்கை விவகாரத்தை ஒட்டி அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் தமது பல்வேறு துறைசார் நிபுணர்களையும், நிர் வாகிகளையும் ஒருசேர அழைத்து ஆலோசிக்கும் அளவுக்கு நிலைமை சென்றிருக்கின்றது.

பிரிட்டன், பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, ஜேர்மன் போன்ற பல தரப்புகள் தெரிவித்திருக் கும் ஆலோசனைகளையும் ஒதுக்கித்தள்ளி யுத்த தீவிரத்தை மட்டும் முழு மூச்சாக முன்னெடுப்பதில் கொழும்பு விடாப்பிடியாக இருக்கின்றது.

இந்தப் பின்னணியில், இலங்கை விவகாரத்தை ஒட்டி, மேற்குலகம் ஐக்கியப்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கின் றது. இந்த ஐக்கியப் போக்கால் அதிருப்தி கொண்டிருக்கும் இலங்கை இவ்விடயத்தை மேற்குலகம் ஐக்கியமாகக் கையாள்வதை உடைத்து விடுவதில் தீவிரம் காட்டுகின்றது.

இலங்கையில் எழுந்துள்ள மனிதாபிமானப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் ஓர் எத்தனமாக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் ஒரே அணியாக இலங்கை வர முயன்றபோது அதற்கு அனுமதிக்காது, சுவீடன் வெளிவிவகார அமைச்சரின் விஜயத்துக்கு மாத்திரம் இலங்கை வேட்டு வைத்தது இந்த ஐக்கியத்தை உடைக்கும் நோக்கத்தில்தான் என்பது தெளிவு.

பிரிட்டனும், பிரான்ஸும் ஐ.நா.பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை வகிக்கும் வல்லரசு நாடுகள். சுமார் இருபத்தியைந்து ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையை விரைவில் ஏற்கப் போகும் தேசம் சுவீடன். இந்த மூன்று தேசங்களினதும் வெளிவிவகார அமைச்சர்கள் ஒரே சமயத்தில், இலங்கை வந்து, ஒன்றாக இங்கு விடயங்களைப் பார்வையிட்டு, கூட்டாக ஒரு முடிவு எடுத்தால் அது மேற்குலகின் ஏகமனதான முடிவாகத் தன் மீது திணிக்கப்பட்டுவிடும் என அஞ்சும் இலங்கை அதனால் அந்தக் கூட்டு முயற்சிக்கு எத்தனத்துக்கு வேட்டு வைத்திருக்கின்றது.

பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் மில்லி பாண்ட், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் குச்சனர் ஆகியோரின் வருகைக்கு பச்சைக்கொடி காட்டிய இலங்கை, சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ற்ட்டின் வருகைக்கு மட்டும் சிவப்பு சமிஞ்ஞை காட்டிவிட்டது.
மிக விரைவில் ஐரோப்பிய ஒன்றியத் தலைமைப் பத வியை ஏற்கவிருக்கும் ஒரு தேசத்தை இலங்கை இப்படி அவமானகரமாக நடத்தியமை ஐரோப்பிய ஒன்றியத்தைக் கடும் கோபத்துக்கு உள்ளாக்கியிருப்பதாகத் தெரிகின்றது. இந்நடவடிக்கையின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே எச்சரிக்கை வெளியிட்டிருக்கின்றது.
சுவீடனின் வெளிவிவகார அமைச்சரின் வருகையைத் தடுத்து நிறுத்தியமைக்கு "அதிக எண்ணிக்கையான அரசியல், இராஜதந்திரப் பிரமுகர்களை ஒரே சமயத்தில் வர வேற்பதற்கு இலங்கைக்கு இயலாத காரியம்" என்று நொண்டிச்சாட்டுக் கூறியிருக்கும் கொழும்பு, அதேசமயம் மறுபுறத் தில் தனக்கு அதிகளவில் உதவிகளை வழங்கி வரும் ஜப்பான் நாட்டின் விசேட தூதுவர் யசூஷி அகாஷியை மட்டும் விரும்பி வரவேற்க ஏற்பாடுகளைச் செய்கிறது. அவர் பெரும்பாலும் நாளை கொழும்பு வந்து சேருவார் என்றும் இலங்கையில் இரண்டு நாள்கள் தங்கியிருப்பார் என்றும் கூறப்படுகின்றது.

கொசோவாப் பிரச்சினையில் அப்பிராந்தியத்தின் சுயநிர்ணய உரிமையை உறுதிசெய்வதில் மிக நியாயமாகவும், உறுதியாகவும், முன்மாதிரியாகவும் செயற்பட்ட பிரமுகரே பிரான்ஸைச் சேர்ந்த குச்சனர் ஆவார். அவர் இப்போது பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சராகக் கொழும்பு வந்திருக்கின்றார்.

கொசோவா நியாயம், ஈழத் தமிழருக்கும் கிட்டுமா? ஈழத் தமிழர்கள் ஏங்கித் தவிப்பது அதற்குத்தான்........!

நன்றி
- உதயன் -

Monday, April 27, 2009

வன்னிக்கு விஜயம் செய்வதற்கான கட்டுப்பாட்டின் சூத்திரம் இதுதான்!

வன்னியில் இன்று தமிழ்மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள், அவலங்கள், துன்ப துயரங்கள் சொல்லுந்தர மன்று.சர்வதேசத்தின் கண்களுக்கு அவற்றை மூடி மறைக்கும் திட்டமிட்ட நடவடிக்கைகள் ஆளுந் தரப்பால் கன கச்சிதமாக முன்னெடுக்கப்படுகின்றன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.மக்கள் பேரவலம் கொடூரமாய்க் கட்டவிழும் யுத்தக் களமுனையை ஒட்டிய பிரதேசங்களுக்கு ஊடகவியலாளர்கள், மனித நேயத் தொண்டுப் பணியாளர்கள், ஐ.நா.முகவர் அமைப்பினர் எனப் பல தரப்பினரும் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை அல்லது கடுமையான கட்டுப்பாடு இந்த உள்நோக்கப் பின் னணியை அடிப்படையாகக் கொண்டது என்பதும் பரகசியம்.

மோதல் பகுதிகளுக்கு சுயாதீன வட்டாரங்கள் சென்று வருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புகள், ஊடக இயக்கங்கள், சர்வதேச சமூகம் உட்பட்ட பலம் வாய்ந்த தரப்புகள் வற்புறுத்தியும் கூட, "பாதுகாப்புக்கு முன்னுரிமை" என்ற காரணத்தைக் காட்டி, அக் கோரிக்கைகளை நிராகரித்து வந்திருக்கின்றது இலங்கை அரசுத் தலைமை.
மக்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள இத் தடையின் தாற்பரியம் என்னவென்பதை இப்போது நிகழ்ந் துள்ள ஒரு சம்பவம் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றது.

மோதல் இடம்பெறும் பிரதேசங்களை ஒட்டிய பகுதிகளுக் குச் சென்றுவர அனுமதிக்கப்பட்ட ஒருவர் மூலம், தமிழகத்தில் பற்றிக்கொண்ட ஒரு சிறு நெருப்புப் பொறி "ஒரு முழுக்காடே வெந்து தணிந்தது" போன்ற பெரும் அக்னிச் சுவாலைப் பிரதிபலிப்பை தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. ஓர் அதிரடி அரசியல் நிலை மாற்றத்தை ஏற்படுத்தும் சூறாவளி சர்ச் சையையே அது உருவாக்கியிருக்கின்றது.

இந்தியாவைச் சேர்ந்த தமிழில் சரளமாகப் பேசும் ஆற்றலுள்ள சுவாமி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி, "வாழும் கலை" பயிற்சி மையம் உட் படப் பல்வேறு இந்து சமயக் கட்டமைப்புகள் மூலம் ஆத்மீகப் பணி யாற்றி வருபவர். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவு டன் நெருங்கிய தொடர்பாடலைக் கொண்டவர் என மதிக்கப் படுபவர். ஜனாதிபதி ராஜபக்ஷ சகோதரர்களில் சிலர் தமது மனை வியர் சகிதம் சுவாமிஜியிடம் "வாழும் கலைப் பயிற்சி" பற்றிய தியானங்களைப் பயின்று வருகின்றனர் என்று கூறப்படுகின்றது. ஜனா திபதி ராஜபக்ஷவிடம் இவருக்கு நேரடியாக அதிக செல்வாக்கு இருக்கின்றது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த சுவாமி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி, அரசுத் தலைமையிடம் தமக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி வன்னிக்குச் சென்று, அங்கு இடம்பெயர்ந்து, வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் பேரவலப்படும் லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களை நேரில் சந்தித்தார். அந்த மக்களின் இழி நிலைமை பற்றிய உண்மைகளை நேரில் கண்டறிந்த அவர், அவற்றை வீடியோப் படமாக்கவும் தவறவில்லை.

அந்த விஜயத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய சுவாமி, இலங்கையில் தமக்குக் கிடைத்த அனுபவத்தை சத்தம் சந்தடியின்றி ஓர் அரசியல் பிரமுகரிடம் பகிர்ந்து கொண்டமை பெரும் அதிரடி அரசியல் மாற்றத்துக்கே வழி செய்திருக் கின்றது.

"வாழும் கலைப் பயிற்சி நிறுவுநர் காட்டிய வீடியோப் படங்களைப் பார்த்து நான் பேரதிர்ச்சி அடைந்துள்ளேன். இதுவரை தெரியாத பல உண்மைகளைக் கண்டறிந்து பெரும் வேத னையில் உறைந்து போயுள்ளேன்"" என்று அகில இலங்கை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா பகிரங்கமாகப் பெரு விசனத்தோடு வெளிப்படுத்தியிருக்கின்றார்.

ஈழத் தமிழர் விடயத்தில் சற்றுத் தூக்கி எறிந்து நடக்கும் போக்குடன் செயற்பட்டு வந்த செல்வி ஜெயலலிதாவை, இந்த ஒரு வீடியோக் காட்சி அதிரடியாக மாற்றிவிட்டது என் பதைத் தமது உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தில் ஈரோட்டில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜெயலலிதா பகிரங்கமாகக் கூறிய கருத்துகள் வெளிப்படுத்தியி ருக்கின்றன.

"இப்படி வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு மோசமான நிலையில் இலங்கைத் தமிழர்கள் உள்ளனர். அத்தனை தூரம் அடிமைகள் போல கைதிகள் போல மிகக் கேவலமாகவும், கொடூரமாகவும் அவர்கள் அங்கு நடத்தப்படுகின்றனர்"" எனக் குமுறியிருக்கின்றார் ஜெயலலிதா.

மொத்தத்தில் ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனி ஈழம்தான் என்ற ஒரே முடிவுக்கு வந்துவிட்ட இந்தியத் தலைவர்களின் பட்டியலில் இப்போது ஜெயலலிதாவும் இணைந்துகொண்டு அதைப் பகிரங்கப்படுத்தும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
இதுவரை காலமும் தமிழக முதல்வர் மு.கருணாநிதிபோல ஈழத் தமிழருக்குத் தனித் தேசம் கிடைத்தால் மகிழ்வோம் என்று மட்டுமே கூறிவந்தவர் ஜெயலலிதா. இப்போது அந்த நிலைப் பாட்டை அ.தி.மு.க. தலைவி மேலும் தீவிரமாக்கி விட்டார்.
தமது அ.தி.மு.க. ஆதரவுடன் புதிய இந்திய மத்திய அரசு அமையுமானால் தங்கள் சொல் கேட்கும் மத்திய ஆட்சி ஏற்ப டுமானால் தனி ஈழம் அமைப்பதற்கான நடவடிக்கையைத் தாம் எடுப்பார் என்றும், அதுவே ஈழத் தமிழர்களுக்கு ஒரே தீர்வு என்றும் ஜெயலலிதா அறிவித்திருக்கின்றார்.

இந்த அறிவிப்பு மூலம் தனி ஈழத்தை மட்டுமே ஒரே தீர்வாகக் கருதும் வைகோ, டாக்டர் இராமதாஸ், திருமாவளவன், விஜயகாந்த் போன்ற தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர் களின் பட்டியலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் இணைந்து கொண்டுவிட்டார்.
இத்தகைய அதிரடி அரசியல் நிலைப்பாடு மாற்றத்தை அவருக்கு ஏற்படுத்தியது இந்திய ஆத்மீகத் தலைவர் சுவாமி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி அவருக்குக் காட்டிய வீடி யோப்படம்தான்.
இலங்கை அரசுத் தலைவருடனான தனிப்பட்ட நட்புறவுடன் வன்னி சென்று மீண்ட ஓர் ஆத்மீகத் தலைவரின் ஒரு சிறிய விஜயமே இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியு மாயின், சுதந்திரப் பார்வையாளர்கள் அங்கு சென்று வருவதற் கும், உண்மையைக் கண்டறிந்து பகிரங்கப்படுத்துவதற்கும் கட் டுப்பாடின்றி அனுமதிக்கப்படுமானால் நிலைமை என்னவாகும்?

பொய்கள், புளுகு உரைகள், பித்தலாட்ட அறிக்கைகள், முழு வெற்று வேட்டுப் பிரகடனங்கள் போன்றவை மூலம் உலகின் முன் வன்னி நிலைமை குறித்துக் கட்டி எழுப்பப் பட்டிருக்கும் மாயவலைக் கோபுரம் அடியோடு தகர்ந்து உண்மை அம்ப லமாகிவிடாதா?
வன்னி நிலைமையைக் கண்டறியும் விஜயங்களுக்குத் தடை விதிக்கும் கட்டுப்பாட்டின் சூத்திரம் இதுதான்!

"இறைமையுள்ள ஒரு நாட்டின் உள் விடயங்களில் தான் தலையிட முடியாது" என்ற சுயாதீன கைவிலங்கை சர்வதேசம் தனக்குத் தானே பூட்டிக்கொண்டு நின்றால் இத்த கைய பேரவலக் கொடூரங்களுக்கு வழி சமைத்துக் கொடுக்கும் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளைப் பார்த்துக் கொண்டு வாளாவிருப்பதைத் தவிர வேறு வழியேயில்லை.

நன்றி

உதயன்

Sunday, April 26, 2009

வன்னியில் ஏற்பட்டுள்ள மனிதப்பேரவலமும் நீதி தவறிப்போன ஐக்கிய நாடுகள் சபையும்

கடந்த 15 ஆம் நாளில் இருந்து 17 ஆம் நாள் வரையில் இரட்டைவாய்க்கால் பகுதியின் ஊடாக இராணுவம் நகர்வுகளை மேற்கொண்டிருந்தது. பாதுகாப்பு வலையத்தை இரு பகுதிகளாக துண்டாடும் படையினரின் இந்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில் கடந்த 18 ஆம் நாள் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேக்கா வவுனியா படை தலைமயகத்திற்கு விஜயம் மேற்கொண்டு புதிய ஒரு களமுனையை திறக்கும் திட்டத்தை மேற்கொண்டிருந்தார்.

அதற்கமைய கடந்த திங்கட்கிழமை (20) அம்பலவான்பொக்கனை பகுதியின் ஊடாக பாரிய படை நகர்வை அரசு மேற்கொண்டுள்ளது. 300,000 மேற்பட்ட மக்கள் தங்கியுள்ள 18 சதுர கி.மீ பரப்பளவுள்ள பாதுகாப்பான பிரதேசத்தின் மீது கனரக ஆயுதங்கள் சகிதம் படைத்தரப்பு தாக்குதலை தீவிரப்படுத்தியிருந்தது.

இந்த தாக்குதலுக்கு ஏதுவாக தியத்தலாவை பகுதியில் இருந்து அதிகளிவிலான குறிபார்த்து சுடும் படையினரும், சிறப்பு படையணிகளை சேர்ந்த ஐந்து கொம்பனி துருப்புக்களும் கடந்த வராத்தின் இறுதிப்பகுதியில் வன்னிக்கு நகர்த்தப்பட்டிருந்தன.

இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.45 மணியளவில் கேணல் அத்துல கொடிப்பிலி தலைமையிலான சிறப்பு படையணிகள் ஐந்தும், கேணல் ரால்ஃப் நுகேரா தலைமையிலான இரண்டாவது கொமோண்டோ படையணி என்பன விடுதலைப்புலிகளின் மண் பாதுகாப்பு அரண்களை தாண்டி உள்நுளைய முற்பட்டிருந்தன. இரண்டாவது கொமோண்டோ படையணியின் களமுனை தளபதியாக மேஜர் சமால் சில்வா நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த படையணிகளுக்கு உதவியாக 58 ஆவது படையணியின் இரண்டு பிரிகேட்டுக்களை சேர்ந்த (58-1, 58-2) 9 ஆவது கெமுனுவோச், 8 ஆவது கஜபா பற்றலியன், 11 ஆவது இலங்கை இலகுகாலாட்படை பற்றலியன் என்பனவும் சிறப்பு படை நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டிருந்தன. புதுமாத்தளன் பகுதியில் இருந்து அம்பலவான்பொக்கணை பகுதி வரையிலான 3 கி.மீ நீளமான பாதுகாப்பு மண் அணைகளை கைப்பற்றி உள்நுளைவதே இவர்களின் திட்டம்.

வடமுனையின் தாக்குதல் திட்டம் இரண்டாவது கொமோண்டோ படையணியிடமும், 8 ஆவது கஜபா படையணியிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. முன்று பிரிவுகளாக நகர்வை மேற்கொண்ட கொமோண்டோ படையணியினை இரண்டு கப்டன் தர அதிகாரிகளும், ஒரு மேஜர் தர அதிகாரியும் வழிநடத்தியிருந்தனர்.

சிறப்பு படையணி ஒன்றுடன், 11 ஆவது இலங்கை இலகுகாலாட்படையணி தென்முனையில் அம்பலவான்பொக்கணை பகுதியில் தாக்குதலை மேற்கொண்டிருந்தது. நடுப்பகுதியில் 9 ஆவது கெமுனுவோச் தாக்குதலை மேற்கொண்டிருந்தது.

கடந்த 15 ஆம் நாளில் இருந்து 17 ஆம் நாள்வரையில் இரட்டைவாய்க்கால் பகுதியில் நடைபெற்ற சமரில் அதிகளவிலான பொறிவெடிகளையும், மிதிவெடிகளையும் எதிர்கொண்ட படைத்தரப்பு அம்பலவான்பொக்கனை பகுதியில் உள்ள மிதிவெடிகளை எதிர்கொள்ளும் பொருட்டு கடந்த 19 ஆம் நாள் அன்று இராணுவத்தின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் சென்ற மக்களில் பல நூறு மக்களை மனிதக்கேடயங்களாக பயன்படுத்தி கண்ணி வெடி வயல்களின் ஊடாக நகர்வை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது கண்ணிவெடிகளில் சிக்கிய பெருமளவான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதுடன், அதிகளவான மக்கள் படுகாயமடைந்திருந்தனர். பொதுமக்களுடன் நகர்வை மேற்கொண்ட இராணுவ அணிகள் மீது தாக்குதலை மேற்கொள்வது விடுதலைப்புலிகளுக்கு மிகவும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்ததை தொடர்ந்து விடுதலைப்புலிகளின் அணிகள் தமது நிலைகளில் இருந்து பின்நகர இராணுவம் முதலாவது மணல் பாதுகாப்பு அரணை அதிகாலை கைப்பற்றி கொண்டது.

எனினும் விடுதலைப்புலிகளின் சிறப்பு தாக்குதல் படையணிகள் களமுனைக்கு நகர்த்தப்பட்டு இராணுவத்தின் சிறப்பு தாக்குதல் அணிகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டபோது அங்கு கடுமையாக சமர் மீண்டும் வெடித்திருந்தது. உக்கிர சமரை தொடர்ந்து படைத்தரப்பு அதிகளவான இழப்புக்களை சந்தித்ததுடன் கைப்பற்றிய நிலைகளில் இருந்து திங்கட்கிழமை மாலை பின்வாங்கியிருந்தனர்.

இந்த சமரின் போது விடுதலைப்புலிகளின் பகுதிக்குள் சிக்கி கொண்ட 12 பேர் கொண்ட இராணுவத்தின் கொமோண்டோ படையணி ஒன்றின் கப்டன் தர கட்டளை அதிகாரி உட்பட 11 பேர் கொல்லப்பட்டதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்திருந்தது.

மேலும் இந்த நடவடிக்கையில் 36 சிறப்பு படையினர் கொல்லப்பட்டதுடன், 50 மேற்பட்டோர் கால்களை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள படை அதிகாரிகள் கொல்லப்பட்ட இலகுகாலாட் படையினரின் இழப்புக்களை தெரிவிக்க முடியாது என கூறியுள்ளனர். விடுதலைப்புலிகளின் 14.5 மி.மீ கனரக துப்பாக்கியின் தாக்குதலில் சிக்கியும், ஆழமான குழிகளினுள் வீழந்தும், பொறிவெடிகளில் சிக்கியும் அதிகளவான படையினர் உயிரிழந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு 7 ஆவது இலகுகாலாட்படை பற்றலியன், 6 ஆவது கெமுனுவோச், 10 ஆவது, 12 ஆவது, 14 ஆவது, 20 ஆவது கஜபா பற்றலியன் படையினரும் நகர்த்தப்பட்டிருந்தனர்.

படையினாரின் இந்த நடவடிக்கையை பொறுத்தவரையில் அம்பலவான்பொக்கனை பகுதியை ஊடறுத்து கடல் பகுதியுடன் ஒரு தொடுப்பை ஏற்படுத்துவதன் மூலம் அம்பலவான்பொக்கனை பகுதிக்கும் புதுமாத்தளன் பகுதிக்கும் இடையில் உள்ள மக்களை ஒரு பெட்டி வடிவ முற்றுகைக்குள் கொண்டு வருவதே படையினரின் திட்டம்.

தாக்குதல் ஆரம்பமாகிய சில மணிநேரங்களில் படையினர் மேற்கொண்ட செறிவான எறிகணை மற்றும் கனரக ஆயுதங்களின் தாக்குதலில் சிக்கி 1500 மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதுடன், 3000 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்டவர்களில் 476 பேர் சிறுவர்கள் என்பதுடன், காயமடைந்தவர்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறுவர்களும் அடக்கம்.

கடந்த 20 ஆம் நாளில் இருந்து 22 ஆம் நாள்வரையிலும் நடைபெற்ற தாக்குதல்களில் ஏறத்தாள 2500 மக்கள் வரையில் பாதுகாப்பு வலையத்தில் கொல்லப்பட்டுள்ளனர். 5000 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஒரு குறுகிய பரப்பளவினுள் சிறீலங்கா இராணுவம் பல ஆயிரம் எறிகணைகளை ஏவியிருந்ததாக வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த எறிகணைகளில் கணிசமான அளவு எறிகணைகள் வெள்ளைபொஸ்பரஸ் (றூவைந phழளிhழசரள ளாநடடள) எனப்படும் இரசாயணம் சேர்க்கப்பட்ட அதிஉயர் வெடிமருந்து கொண்டவை. அவை வீழந்து வெடிக்கும் போது பொருட்களும், பொதுமக்களின் உடல்களும் தீப்பற்றி எரிந்ததுடன், சிறுவர்களும், மதியவர்களும் மூச்சுத்திணறியும் இறந்துள்ளதாக வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன.

கனரக ஆயுதங்களை மக்கள் செறிவாக வாழும் பாதுகாப்பான பிரதேசத்தின் மீது பயன்படுத்த மாட்டோம் என சிறீலங்கா அரசு ஐ.நாவுக்கும், ஏனைய மேற்குலக நாடுகளுக்கும் உறுதி அளித்திருந்ததும் கவனிக்கத்தக்கது. இதனை ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதி ஜோன் கோல்ம்ஸ் கடந்த வாரமும் சிறீலங்கா அரசிற்கு நினைவுபடுத்தியிருந்த நிலையில் கனரக ஆயுதங்களை மட்டுமல்லாது இரசாயண ஆயுதங்களையும் மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் மீது சிறீலங்கா அரசு பயன்படுத்தியுள்ளது.

மேலும் பெருமளவான அப்பாவி மக்களை கண்ணி வெடிவயல்களை செயலிழக்க செய்யும் மனித கேடயங்களாக இராணுவம் பயன்படுத்தியிருந்ததுடன் அவர்களை சுட்டு படுகொலையும் செய்துள்ளது. இவை போரியல் குற்றங்களாகும்.

கடந்த திங்கட்கிழமை (20) மேற்கொண்ட தாக்குதல்களை தொடர்ந்து செவ்வாய்கிழமை (21) மற்றும் புதன்கிழமையும் (22) இராணுவம் தொடர்ச்சியாக பாதுகாப்பு வலையத்தின் மீது தாக்குதலை மேற்கொண்டு வந்திருந்தது. புதுமாத்தளன் மருத்துவமனை கடுமையாக சேதமடைந்ததை தொடர்ந்து அங்கிருந்து மக்களும் விடுதலைப்புலிகளும் வெளியேறிய நிலையில் இராணுவம் கடந்த செவ்வாய்கிழமை புதுமாத்தளன் பகுதியை கைப்பற்றியுள்ளது.

தனது படை நடவடிக்கையினால் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பான கருத்துருவாக்கங்களை மறைப்பதற்காக சிறீலங்கா அரசு விடுதலைப்புலிகள் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டதாகவும், ஓரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் படையினாரின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்துள்ளதாகவும் பொய்யான பரப்புரைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஆனால் இந்த பத்தி எழுதப்படும் வரையிலும் ஓமந்தை பகுதிக்கு 6500 மக்களும், யாழ்குடாநாட்டுக்கு 4000 பேர் வரையிலும் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

மீதம் 90,000 மக்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான விபரங்கள் இல்லை. எனவே பெருமளவிலான மக்கள் படையினரின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்துள்ளார்கள் என அரசு பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றதா? அல்லது அதிகளவிலான மக்கள் வன்னியில் உள்ள படையினரின் தளங்களில் இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

சுதந்திரமான ஊடகவியலாளர்களோ அல்லது கண்காணிப்பளர்களோ அற்ற நிலையில் வன்னியில் ஏற்பட்டுவரும் மனிதப்பேரவலம் உலகின் கண்கணில் அதிகம் தெரிவதில்லை என்பது மிகவும் வேதனையானது. சிறீலங்கா அரசின் பிரச்சாரங்களை அனைத்துலகமும், அனைத்துலக ஊடகங்களும் நம்ப முற்படுவதுடன், இந்த பேரவலத்தை நிறுத்துவதற்கும் அவர்கள் முன்வரவில்லை.

இருந்த போதும் அனைத்துலகத்தில் ஏற்பட்டுவரும் சிறு சிறு அழுத்தங்களில் இருந்து தப்பித்து கொள்ளவும், எதிர்வரும் 29 ஆம் நாள் ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்படவுள்ள சிறீலங்கா தொடர்பான விவாதத்தினை முறியடிக்கவுமே சிறீலங்கா அரசு தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றது.

இந்த பேரவலமாக நிலையை தொடர்ந்து கடந்த செவ்வாய்கிழமை (21) ஐ.நாவின் பாதுகாப்பு சபை உத்தியோகபூர்வமற்ற முறையில் கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தது. சீனா, ரஷ்யா உட்பட அதன் 15 உறுப்பினர்களும் இந்த கலந்துரையாடல்களுக்கு சம்மதம் தெரிவித்திருந்த நிலையில் ஐ. நா செயலாளர் நாயகம் பாக் கீ மூன் இன் பிரதம அதிகாரியான விஜய் நம்பியார் தனது சிறீலங்கா விஜயம் தொடர்பான தகவல்களை வழங்க வேண்டும் என சபையில் கோரப்பட்டிருந்தது. ஆனால் அவர் அது தொடர்பில் தகவல்களை வழங்குவதற்கு மறுத்தது அங்கு பெரும் ஆச்சரியங்களை ஏற்படுத்தியிருந்தது.

நம்பியாரின் இந்த முடிவை பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமை கொண்ட ஐந்து நாடுகளில் ஒன்று நேரடியாகவே எதிர்த்திருந்ததாக ஐ.நாவின் ஊடக மையமான இன்ன சிற்றி பிரஸ் தெரிவித்திருந்தது.

ஒரு மனிதப்பேரவலமான நிலையில் அது தொடர்பாக சிறீலங்கா அரசுடன் பேச்சுக்களை நடத்துமாறு ஐ.நாவினால் அனுப்பப்பட்ட பிரதிநிதி அது தொடர்பில் ஐ.நாவின் பாதுகாப்பு சபை கலந்துரையாடலில் தகவல் வெளியிட மறுத்தது இதுவே முதற்தடவை. அவர் தனது பதவியையும், ஐ.நாவையும் அவமதித்துள்ளதாகவே பல அமைப்புக்கள் கருத்துக்களை வெளியிட்டிருந்தன.

எனினும் நம்பியாரின் இந்த நிலைப்பாட்டை தொடர்ந்து அவரின் கடந்த கால செயற்பாடுகள் என்ன என்பது தொடர்பில் ஆராயப்பட்டுவது பொருத்தமானது.

நம்பியார் இந்திய அரசின் பிரதி பாதுகாப்புத்துறை ஆலோசகராகவும், இந்தியாவின் பாதுகாப்பு சபையின் செயலாளர்களின் தலைவராகவும் பணியாற்றியிருந்தது கவனிக்கத்தக்கது.

மேலும் அண்மையில் மூன்று நாள் விஜயமாக சிறீலங்காவுக்கு வந்து சென்ற நம்பியார் இந்தியாவில் தங்கி சென்றதும் குறிப்பிடத்தக்கது. அதாவது தற்போதைய போரில் இந்திய அரசு சிறீலங்கா அரசுக்கு படைத்துறை மற்றும் நிதி உதவிகளை மட்டும் வழங்கி வரவில்லை அதனுடன் இராஜதந்திர ரீதியாகவும் உதவிகளை வழங்கி வருகின்றது என்பது தெளிவாகியுள்ளது.

சிறீலங்கா அரசுக்கு ஏற்படும் இராஜதந்திர அழுத்தங்களை இந்திய மத்திய அரசு ஐ. நாவின் ஊடாக குறைப்பதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என்பது தற்போது வெளிப்படையானது.

இதனிடையே ஐ. நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அண்மைக்காலமாக சிறீலங்கா தொடர்பாக வெளியிட்டு வரும் அறிக்கைகள் தொடர்பிலும் அனைத்துல அரச சார்பற்ற உதவி அமைப்புக்கள் அதிதிருப்பதி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், தமிழ் மக்களும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

வன்னியில் மனிதப்பேரவலம் ஓன்று உருவாகியுள்ள போதும், ஐ.நாவின் தகவல்களின் பிரசாரம் அங்கு கடந்த மூன்று மாதங்களில் 6432 மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ள போதும் ஐ.நாவின் செயலாளர் நாயகம் போர் நிறுத்தம் என்ற சொற் பிரயோகத்தை தனது அறிக்கைகளில் பயன்படுத்த தவறியது பாரிய விசனங்களை தோற்றுவித்துள்ளது.

அகில உலகமும் போர் நிறுத்தம் தொடர்பாக ஒரு வார்த்தையேனும் பேசிய போதும் உலகில் அமைதியையும், மனிதாபிமானத்தையும் நிலைநாட்ட என உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை போர் நிறுத்தம் தொடர்பாக ஒரு வார்த்தையேனும் பேசாது சோரம் போயுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் மேற்குலக நாடுகளின் அழுத்தம் காரணமாக கடந்த புதன்கிழமை (22) மூடிய அறைக்குள் நடைபெற்ற பாதுகாப்பு சபையின் உத்தியேகப்பற்றற்ற கூட்டத்தில் நம்பியார் தனது அறிக்கையை வெளியிட சம்மதம் தெரிவித்திருந்தார்.

எனினும் அவரின் கருத்துக்களை பார்க்கும் போது தமிழ் மக்களின் பிரச்சனைகளை ஒரு மனிதாபிமான பிரச்சனை மட்டுமே என்ற வட்டத்திற்குள் முடக்கிவிட அவர் முயல்கின்றார் என்பதை காணக்கூடியதாக இருந்தது. அதாவது கடந்த செவ்வாய்கிழமை (21) அவர் வெளியிட்ட கருத்துக்களில் சிறீலங்காவில் அரசியல் ரீதியிலான பிரச்சனைகள் இல்லை மனிதாபிமான பிரச்சனைகளே உள்ளன என்ற கருத்துப்பட அவர் பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை (22) நடைபெற்ற பாதுகாப்பு சபையின் உத்தியோகப்பற்றற்ற கூட்டத்தினை தொடர்ந்து விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கையழித்துவிட்டு சரணடையவேண்டும் என ஐ.நா கேட்டுக்கொண்டது தமிழ் மக்களை மிகுந்த ஆத்திரத்திற்குள் தள்ளியுள்ளது.

ஆனால் ஐ.நாவின் இந்த நீதி தவறிய போக்கிற்கான காரணம் என்ன என்பது தற்போது தெளிவாக உள்ளதாகவே அவதானிகள் கருதுகின்றனர். அதாவது ஐ.நாவின் செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரியாக தற்போதைய போரை முன்னின்று நடத்திவரும் இந்தியாவை சேர்ந்த விஜய் நம்பியார் போன்றவர்கள் பணியாற்றும் போது தமிழ் மக்கள் எவ்வாறு ஐ.நாவிடம் இருந்து நீதியை எதிர்பார்க்க முடியும்.

எனினும் நடைபெறும் சம்பவங்களை வைத்து பார்க்கும் போது எதிர்வரும் நாட்கள் பல இராஜதந்திர நகர்வுகளை கொண்ட நாட்களாக இருக்கும் என்பதுடன், மோதல்களும் மேலும் உக்கிர நிலையை அடையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

வேல்ஸ் இல் இருந்து அருஷ்

-நன்றி வீரகேசரி வெளியீடு -

Saturday, April 25, 2009

சர்வதேச சதியை புரிந்துகொள்வோம்

வரலாற்றில் படித்த கொடூரமான மனிதப் பேரவலங்களுக்கு சற்றும் குறையாத குரூரமான கொலைக்கூத்து படலம் ஒன்று சிறுபான்மை இனம் ஒன்றுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த வேளையில் நீதியரசர்களாகவும் - மனசாட்சி உள்ள மனிதர்களாகவும் - மனிதநேயத்தின் மீட்பர்களாகவும் தம்மை கூறிக்கொள்ளும் சர்வதேச சமூகமும் அது சார்ந்த பொது அமைப்புக்களும் ஈழத்தமிழரின் இரத்தத்தை இன்னமும் பரிசோதனை செய்துகொண்டு அறிக்கைகளில் அழுது வடித்துக்கொண்டிருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபை எனப்படும் நீதி அவை இன்று தன்நேசப் பின்னணியுடனும் அதில் அங்கம் வகிக்கும் அரசுகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் கீழும்தான் இயங்கும் என்ற உண்மை, வெளிப்படையாகவே தெரியத்தொடங்கிவிட்டது. லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டாலும் தமது அரசியல், பொருளாதார லட்சியங்களை விட்டிறங்கி வந்து எந்த ஒருநாடும் தவிக்கும் வாய்க்கு தண்ணி கூட தரப்போவதில்லை என்பது இன்றைய நிலையில் ஐ.நா. ஊடாக தெளிவாக விளம்பரப்படுத்தப்பட்டுவிட்டது.

அப்படியானால், ஈழத்தமிழர் விவகாரத்தில் சர்வதேச சமூகம் என்பது தற்போது செய்து கொண்டிருப்பது என்ன?.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சுயநிர்ணய உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கும் ஒரு இனத்தின் விடுதலை முயற்சிகளை சகல பலத்தையும் பிரயோகித்து நசுக்கிவிடுவது என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ்தான் இன்று நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்பது ஏற்றுக்கொண்டாகவேண்டிய உண்மை.

தமிழரின் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளை 'பயங்கரவாதம்" என்ற சொல்லிற்கு கீழேயும் -

அங்கு அதற்காக எத்தனை விலையையும் கொடுப்போம் என்று ஆக்கிரமிப்பு சிறிலங்கா படைகளின் கொலைத்தாண்டடிவத்தில் தமது உயிர்களையே கொடுத்துக்கொண்டிருக்கும் தமிழ்மக்களை மீட்கிறோம் என்று அதனை 'மனிதாபிமான விவகாரம்" என்ற சொல்லின் கீழேயும் -

ஈழத்தமிழ் மக்களின் சுயஉரிமைப்போராட்டம் என்ற விடயத்தை அடியோடு நசுக்கிவிடுவதற்கு சர்வதேச சமூகம் தன்னாலான சகல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதுதான் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கபடநாடகம்.

'பயங்கரவாதம்", 'மனிதாபிமான விவகாரம்" இந்த இரண்டு சொற்களையும் தவிர்த்த ஏதாவது உருப்படியான - காத்திரமான - அறிக்கைகளையாவது, தமிழ்மக்களின் கரிசனைகொண்டுள்ளதாக தன்னை காண்பிக்கும் இந்த சர்வதேச சமூகம் இதுவரை விடுத்திருக்கிறதா? அல்லது அதனை ஒட்டி நடவடிக்கை எடுத்திருக்கிறதா?

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை பயங்கரவாதம் என்று சித்தரிக்கும் சர்வதேச சமூகம், கொத்துக்குண்டுகளையும் இரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்தி கடந்த மூன்று மாதங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை கொன்றுகுவித்த சிறிலங்கா அரசை அழைப்பதற்கு என்ன சொற்பதம் வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. அது தனிவாதம். அதனை விட்டுவிடுவோம். ஏனெனில் அதனை இப்போது வாதிப்பதால் எந்தப்பிரயோசனமும் இல்லை.

ஈராக்கில் இரசாயன ஆயுதமிருப்பதாக படையெடுத்து கடைசியில் தன்முயற்சிக்கு பாடைகட்டிய அமெரிக்கா, இன்று சிறிலங்காவில் அவ்வாறு ஒரு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்றால் உண்மையை ஆராய்வதற்கு ஒரு சுயாதீன விசாரணை குழுவையாவது களத்துக்கு அனுப்பியிருக்கலாமே? அது செய்வதற்கே கையால் ஆகாத அமெரிக்காவின் புதிய அரசின் 'அறிக்கை தலைவி" ஹிலாரி - ஆங்கிலத்தில் என்னென்ன துயரமான வார்த்தைகள் இருக்கின்றனவோ அத்தனையையும் தனது ஒவ்வொரு அறிக்கைகளிலும் பயன்படுத்தி ஒப்புக்கு ஓலமிட்டுக்கொண்டிருக்கிறார். இந்த ஒப்பாரி திருகோணமலைக்கான 'திருக்கூத்து" என்பது ஒருவரும் புரியாத விடயமல்ல.

இதேபோலத்தான் பிரிட்டனும் ஏனைய நாடுகளும் கூட. இந்தியாவின் கக்கத்தில் இருந்துகொண்டு கொட்டமடிக்கும் சிறிலங்காவை எதிர்க்க பிரிட்டனுக்கு அச்சம். ஏனெனில், இந்தமாதிரியான சூழ்நிலையில் சிறிலங்கா விடயத்தில் வெளிப்படையாக ஏதாவது செய்யப்போய் அது இந்தியாவுடன் முறுகலை ஏற்படுத்த, அதுவே 100 கோடிக்கும் மேற்பட்ட நுகர்வோர் கொண்ட தனது பிரமாண்டமான வர்த்தக சந்தையை இழக்கவைத்துவிடும் என்ற அச்சம் பிரிட்டனுக்கு.

இந்த முத்துமாலையின் வழியேதான் சர்வதேச சமூகத்தின் மனக்கணக்கு பயணிக்கிறது. போதாக்குறைக்கு தற்போதைய உலக பொருளாதார நிலைவரமும் வெளிநாடுகளை இப்படியான முடிவுடன் மட்டும் நின்றுகொள்ள நிர்ப்பந்தித்திருக்கிறது. அதுவும் ஈழத்தமிழருக்கு ஏற்பட்டுள்ள பெரும் துர்ப்பாக்கிய நிலை.

இந்தமாதரியான ஒரு சூழ்நிலையில் - தமது இந்த கையாலாக தன்மையை வெளிப்படையாக காண்பிக்க முடியாத நிலையில் - சர்வதேச சமூகம் எனப்படுவது தந்திரமாக காய்களை நகர்த்தி, தமிழரின் விடுலைப்போராட்டத்தை பயங்கரவாதம், மனிதாபிமான விவகாரம் என்ற இரட்டைச் சொற்களுக்குள் சறுக்கி விழுத்திவிட்டு, தாம் தமது தார்மீக கடமையிலிருந்து தப்பிக்க பார்க்கின்றன. முப்பதாண்டு கால விடுதலைப் போராட்டத்தை ஒரு மூச்சுப்பிடித்து எல்லோரும் சேர்ந்து அமுக்கிவிட்டால் அழித்துவிடலாம் என்ற கணக்கில் நடவடிக்கைகளை மேற்கொள்ள பார்க்கிறது.

அதற்காக அவை சிறிலங்கா அரசுடன் பேரம் பேசியே இந்த போர் நடைபெறுகிறது என்பதையும் தமிழ்மக்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசு தூக்கியெறிந்ததும் இந்த சர்வதேச சமூகத்தின் ஆசிர்வாதத்துடன்தான். யுத்தத்தை ஆரம்பித்ததும் இந்த சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன்தான். சிறிலங்கா அரசுக்கு சகல உதவிகளையும் வழங்கி இந்த வருட ஆரம்பத்துடன் இந்தப்போரை முடித்துவிடவேண்டும் என்று இந்த பன்னாட்டு சமூகம் கட்டளையிட்டது.

ஆனால், உலகம் பூராகவும் கிடைத்த உதவிகளைக்கொண்டு சண்டையிட்டும் ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரலும் முடியப்போகிறது போர் முடிவுக்கு வந்தபாடில்லை. சிறிலங்கா அரசோ சர்வதேச சமூகமோ எண்ணியதைப்போல விடுதலைப் புலிகளை அவ்வளவு எளிதாக தோற்கடிப்பது சாத்தியப்படவில்லை. நாட்கள் செல்ல செல்ல - மனிதப்பேரவலங்கள் கூடக்கூட - வெளிநாடுகளுக்கு உள்நாட்டில் அழுத்தங்கள் அதிகரித்ததே தவிர, தாங்கள் நினைத்த காரியங்கள் எவையும் களத்தில் நடைபெறவில்லை. சப்பாத்துக்குள் அகப்பட்ட குறுணிக்கல் போல இந்தப்போர் அனைத்துலகத்துக்கும் தொடர்ந்தும் நெருக்குதலை கொடுத்தவண்ணமுள்ளது.

இதனால் சீற்றமடைந்துள்ள வெளிநாடுகள் தற்போது சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளன. அவை என்னமாதிரியான அழுத்தமென்றால், போரை உடனடியாக முடிக்கும்படியான அழுத்தம் ஆகும். என்ன விலை கொடுத்தாவது நிலங்களைக்கைப்பற்றி, விடுதலைப் புலிகள் இனி இல்லை என்ற செய்தியை உலகம் நம்பும் வகையில் ஒரு சூழ்நிலையை உருவாக்கும்படியே இந்த பன்னாட்டு சமூகம் அழுத்தம் கொடுத்து வருகிறது.

இது பலருக்கு ஏற்றுக்கொள்ள இயலாத விளக்கமாக இருக்கலாம். ஆனால், இதுதான் உண்மை.

விடுதலைப் போராட்டங்களை நசுக்குவதற்கு ஒவ்வொரு காலகட்டத்தில் உலகம் வௌ;வேறு வகையான வியூகங்களை கையிலெடுத்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் - 21 ஆம் நூற்றாண்டில் - பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற படலம் தொடங்கப்பட்ட காலப்பகுதியில் - எழுச்சிபெற்ற விடுதலைப் போராட்டத்தை - வெளிநாடுகளின் தேவைகளுக்கு ஒத்துவராது என்ற கணிப்புக்கு உள்ளாகியுள்ள ஈழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு சர்வதேச சமூகம் தருணம் பார்த்து தூக்கியுள்ள கடைசி காண்டீபம்தான் தற்போது நடைபெறுகின்ற கபட நாடகம்.

சர்வதேச சமூகத்தின் முயற்சிகளின் ஒரு அங்கமாக, புலம்பெயர்ந்து வாழும் மக்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் அவர்களின் கோரிக்கைகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்ட வண்ணமுள்ளன. தமது உறவுகளின் உரிமைக்காக அவர்கள் எழுப்புகின்ற தொடர்ச்சியாக குரலை இந்த நாடுகள் வேண்டுமென்றே கணக்கிலெடுக்காது விட்டு, புலம்பெயர்ந்து வாழும் மக்களை, இனியென்ன செய்வது என்றதொரு மனதளவில் சளைப்புநிலைக்கு தள்ளிவிடுவது என்ற காரியங்களையும் தந்திரமாக மேற்கொண்டு வருகிறது.

இதுதான் தமிழ்மக்கள் விழித்துக்கொள்ளவேண்டிய நேரம்.

தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தை காலநீட்சியின் அடிப்படையில் நசுக்கிவிடுவது என்றும் அதற்கான குரலை சளைக்க வைத்துவிடுவது என்றும் திட்டமிட்டு செயற்படும் பன்னாட்டு சமூகத்தின் எதிர்பார்ப்புக்கு எமது மக்கள் எடுபடப்போகிறார்களா?

தமிழ்மக்கள் சந்தித்துள்ள இந்த வரலாற்று காலகட்டத்தில் - முப்பதாண்டு கால விடுதலைப்போர் ஆதிக்க சக்திகளின் அரசியல் சாணக்கியத்தில் அகப்பட்டு அழிந்துவிடப்போகிறதா?

புலம்பெயர்ந்து வாழும் தமிழன் ஒவ்வொருவனும் தம்மை தாமே கேட்கவேண்டிய கேள்வி இது. ஏனெனில் தமிழரின் போராட்டம் இன்றைய நிலையில் கிட்டத்தட்ட முழுமையாகவே புலம்பெயர்ந்து வாழும் மக்களின் கைகளில் வந்துவிட்டது. அதனை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய பாரிய வரலாற்றுப்பொறுப்பு இந்த மக்களின் கைகளில்தான் உள்ளது.

இன்று அந்தக்கடமையை தவறவிட்டுவிட்டால், வரும் சந்ததி எம்மை பழிக்கும். எமக்கு என்றொரு நிலம் இருந்தது.

எமக்கென்றொரு அடையாளம் இருந்தது. அவை அனைத்தும் எமது பாட்டனார் காலத்தில் சர்வதேச சதியால் அழிக்கப்பட்டது. விடுதலை வேட்கையற்ற எமது மூதாதையர் எமக்கு அடிமைப்பட்ட இனம் என்ற பெயரையே விட்டுச்சென்றிருக்கிறார்கள் - என்று அவர்கள் எம்மை பழிக்கும் நிலை வேண்டுமா?

இது ஒவ்வொரு தமிழனும் தன்னை தானே கேட்கவேண்டிய கேள்வி.

அப்படியானால், இந்தப்போராட்டத்தின் வெற்றிக்கு வழியென்ன?

சர்வதேச சமூகத்திற்கு தொடர்ந்தும் ஒரு விடயத்தை தெளிவாக - உறுதியாக - எடுத்துக் கூறவேண்டும்.

எவ்வளவு பெரிய மனிதப் பேரவலத்தை ஏற்படுத்தினாலும் - எவ்வளவு பெரிய யுத்த வெற்றிகளை சிறிலங்கா அரசுக்காக நீங்கள் பெற்றுக்கொடுத்தாலும் - விடுதலைப் போராட்டம் என்பது தமிழ்மக்களின் ஆன்மாவில் கலந்த ஒன்று.

அதனை இந்த யுத்த வெற்றிகள் தீர்மானிக்கப்போவதில்லை. எமது இனத்துக்கு ஏற்பட்ட அழிவுக்கு இந்த சர்வதேச சமூகம் அழுது கண்ணீர் வடித்து கட்டுப்போட்டவுடன் அவர்களுக்கு நிரந்தர விடிவு கிடைத்திடப்பொவதில்லை. அவர்களின் பேரப்பிள்ளைகளுக்கு நீங்கள் திரும்பச்சென்று மருத்துவம் பார்க்கும் நிலை வரக்கூடாது என்றால் அதற்கு ஒரு தீர்வு வேண்டும். அதுதான் தமிழ்மக்களுக்கான சுயநிர்ணய உரிமை.

இரசாயன ஆயுதங்களையும் கொத்துக்குண்டுகளையும் பயன்படுத்தி சிறுபான்மை இனம் ஒன்றை கொலை புரியும் அரசின் ஆட்சியின் கீழ் அந்த இனம் நிம்மதியாக வாழும் அல்லது அந்த அரசு அந்த சிறுபான்மை இனத்தை சீரும் சிறப்புமாக பராமரிக்கும் என்றெல்லாம் சர்வதெச சமூகம் நினைக்குமானால் அதனைவிட முட்டாள்தனதான முடிவு வேறொன்றுமில்லை.

விடுதலைப் புலிகளையும் தமிழ்மக்களையும் முதலில் பிரிப்போம் பின்னர் தமிழ்மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு கொடுப்போம் என்று சர்வதேசம் போடும் மனக்கணக்கெல்லாம், தற்போதைய சிறிலங்கா நிலவரத்தை மேலும் சிக்கலுக்குள் தள்ளுவதற்கு எடுக்கும் முயற்சிகளே ஆகும்.

போன்ற உண்மையை தமிழ்மக்கள் வெளிநாடுகளுக்கு ஓயாமல் எடுத்துக்கூற வேண்டும். பரந்துபட்ட பிரசார நடவடிக்கைகளும் மக்கள் எழுச்சியும் அவற்றில் இம்மியும் சளைக்காத நிலையும்தான் வெளிநாடுகளுக்கு ஒரு முடிவை எடுக்கும் நிலையை நோக்கி தள்ளும். அந்தந்த நாடுகளை சேர்ந்த மக்களுக்கு எமது போராட்டத்தினதும் எமது மக்கள் அவலங்களதும் சரியான - தெளிவான - புரிதல்கள் ஏற்படுத்தப்படவேண்டும். தமிழரின் போராட்டம் உலகமயமாக்கப்படும் வேகம்தான் விடுதலையை தீர்மானிக்கும் பிரதான சக்தியாக திகழப்போகிறது.

வெளிநாடுகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல மக்கள் எழுச்சியும் அதன் தொடர்ச்சியும் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் விடுதலைத் தேருக்கு அச்சாணியாக உள்ளது. சகல சதிகளையும் முறியடிக்கும் பலம் ஒவ்வொரு தமிழனதும் கைகளில் உள்ளது. முடிவெடுங்கள்.

- ப.தெய்வீகன் -

Wednesday, April 22, 2009

மனித நேயம் என்பது வெறும் அலங்காரச் சொல்தானா...?

முல்லைத்தீவு மக்கள் பாதுகாப்பு வலயத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் படை நடவடிக்கையின்போது கொலையுண்டிருக்கிறார்கள். 1300 இற்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றிருக்கிறார்கள். சர்வதேச அவதானிகள் தெரிவித்த மனிதப் பேரவலம் அங்கு நிகழ்ந்தி ருக்கிறது. முல்லைத்தீவுக் கடற்கரையில் இரத்த ஆறு ஓடும் அபாயம் இருப்பதாக ஐ.நா.உட்பட பல தரப்புகளும் கவலையுடன் ஊகம் தெரி வித்திருந்த போதிலும் எவராலும் அதனைத் தடுக்க முடியாமற் போயிற்று! உலக வரலாற் றில், சமீப காலத்தின் பெரும் மனித அழிப்பு நடை பெற்றிருக்கிறது.

நினைக்கவே இரத்தத்தை உறைய வைக்கும் இந்த மனித உயிர் இழப்புக் கண்டு ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலக நாடுகள் அனைத் தும் வெட்கித் தலைகுனியவேண்டும்.
உரிய காலத்தில், உரிய வேளையில் தமது சக்திகளைப் பயன்படுத்தி இந்த மனித அழிவை, தமிழர் இன அழிப்பைத் தடுத்து நிறுத்தவில்லை என்ற பழியை சர்வதேசம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். இது சரித்திரத்தின் கறுப்பு அத்தியாயங்களில் ஒன்றாகிவிட்டது.

இத்தகைய ஓர் மனிதப் பேரழிவு கொடுமை எந்த இனத்திற்கு ஏற்பட்டிருந்தாலும் அது மனித நேயத்திற்கு விழுந்த பேரடியாகும்; பேரிடி யாகும். இதுபோன்ற மனித அழிவு உலகில் வேறெங்கு நடைபெற்றாலும் தாங்க முடியாதே.

அது குறித்த அக்கறைக்குப் பதிலாக, அசட்டைத் தனம் மேலோங்கி நின்றதாலேயே, ஏனைய நானாவித ஒவ்வாத எண்ணங்கள் வந்து மேவி இப்படியொரு துன்பியல் பேரழி வைத் தந்திருக்கிறது.

போர் முடிவுக்கு வந்ததும் தமிழர்களின் உரிமைகள் வழங்கப்படும், பிரச்சினை தீர்க்கப் படும் என்ற கோஷங்கள் அர்த்தமற்றுப் போய் விட்டன. இன ஒற்றுமை, சகோதரத்துவம் என் பன ஒரேயடியாக நிர்மூலமாகிவிட்டன. மக்கள் அழிந்த பின்னர் அவை வெறும் வேதாந்தமா கவே மிஞ்சி நிற்கின்றன.

முல்லைத்தீவில் ஒருநாளில் ஓராயிரத்துக் கும் அதிகமான மக்கள் உயிரிழக்க நேரிட்டமை மனித உரிமை, மனிதநேயம் என்பவை எல் லாம் வெறும் அலங்காரச் சொற்களே அன்றிச் கவைக்கும் உதவாதவை என்பதனை வெளிப் படுத்தி உள்ளன.
இது குறித்து முழு மானிட உலகமும், தமது இயலாமை குறித்து வெட்கித் தலைகுனிய வேண்டும்.
உயிர்கள் காப்பாற்றப்படவேண்டியவை, பேணப்படவேண்டியவை. அழிக்கப்படவேண்டி யவை அல்ல என்பதனை அர்த்தபுஷ்டி உள்ள தாக்க வேண்டுமென்ற சிந்தனை செயலுருப் பெறுவதற்கு பிடிவாதமும்மேலோங்கும்போக்கும் மனிதர்களிடம் இருந்து அகல வேண்டும் என் பதனை வன்னிப் பேரழிவு எடுத்தியம்புகிறது.

போர்ப் பிரதேசத்தில் சிக்குண்டுள்ள லட்சக் கணக்கான மக்களில் எஞ்சியுள்ளவர்களின் கதி என்னவாகப்போகிறது என்பதனை நினைத்துத் தமிழ் உறவுகளின் நெஞ்சங்கள் இப்போது திணுக்குறுகின்றன. அவர்களைக் காப்பாற்ற வேண்டியது அனைத்துத் தரப்பினரதும் பொறுப்பாகும். ஆனால் ஏற்கனவே உண்டான இழப்புக்களின்போது மக்களின் உயிர்கள் காப் பாற்றவேண்டியவை, பறிக்கப்படவேண்டி யவை அல்ல என்ற மனித நேயம் முதலிடம் பெற்றிருக்கவில்லை.

அங்கே எஞ்சியுள்ளவர்களைக் காப்பாற்றுவ தற்கேனும் ஐ.நா.உட்பட்ட சர்வதேசம் நேர் மையுடனும் மனித நேயத்துடனும் விரைந்து செயற்படுவதற்கு மனங்கொள்ளுமா? அதுவே இப்போதைய உடனடித்தேவை. தமிழர் நெஞ் சங்களை மீண்டும் மீண்டும் உறைய வைக் காமல் தடுக்க வழி ஒன்று பிறக்காதா? உலக நீதியின் பால், மனுநீதியின் பால், மனித நேயம் சிறிதளவேனும் பிறக்கக்கூடாதா?

நன்றி - உதயன்

Tuesday, April 21, 2009

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே!

நாட்டின் முக்கிய அத்தியாவசிய சேவைகளை ஆற்றும் நிறுவனங்களின் பணியாளர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் குதித்தனர். இலங்கை மின் சாரசபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங் கைத்துறைமுக அதிகாரசபை ஆகிய மூன்று நிறு வனங்களும் மக்களுக்குரிய பிரதான அத்தியாவசிய சேவைகளுடன் சம்பந்தப்பட்டவை.

மேற்படி மூன்று நிறுவனங்களின் பணியாளர்களுக்கு மூன்று வருடங்களுக்கு ஒருமுறைதான் சம்பள உயர்வு வழங்கப்படுவது வழமை விதிமுறை என்று தெரிவிக்கப்படுகின்றது. அதன் பிரகாரம் இந்த வரு டத்தில் வழங்கப்படவேண்டிய சம்பள உயர்வு கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறதாம். தமது பக்கத்தில் எந்தவித கறுப்புப்புள்ளியும் இல்லாதிருந்த போதும், சம்பள உயர்வை அடுத்தவருடமே வழங்க முடியும் என்று ஜனாதிபதி (நிதி அமைச்சரும் அவரே) ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார் என்று பணியாளர் கள் தரப்பில் கூறப்படுகிறது; குற்றஞ்சாட்டப்படுகிறது.

நாட்டுக்காகக் கஷ்டப்பட்டு உழைக்கும் தமது சம்பளத்தை அதிகரிக்கவேண்டிய வேளையில், அத னைத் தவிர்க்கும் முடிவை அரசாங்கம் செய்ததாலேயே வேலை நிறுத்தத்தில் குதித்திருப்பதாகப் பணியாளர் காரணம் கூறுகிறார்கள். அந்த வகையில் அவர்களின் போராட்டம் நியாயமானது. எவரோ பின்னால் நின்று அரசக்கு எதிராகச் செய்யப்படும் சதி என்று வழமைபோல பூசிமெழுக முடியாதது.

தனியார் நிறுவனங்கள், சிறு வர்த்தக நிலையங்கள் தானும் தமது பணியாளர்களின் வருடாந்தச் சம்பள உயர்வை தவறாது வழங்கவேண்டும் என்பது அரசாங்கம் வகுத்துள்ள முக்கிய சட்டவிதி. அப்படியிருக்க மக்கள் சேவையாற்றும் மூன்று பிரதான நிறுவனப் பணியாளர்களின் சம்பள உயர்வை நிறுத்துவது நியாயமற்றது; சட்டவிரோதமானதும் கூட.
நாட்டுக்காகக் கஷ்டப்பட்டு உழைக்கும் எமது சம்பளத்தை அதிகரிக்க இந்த அரசுக்கு விருப்ப மில்லை. ஆனால், அமைச்சர்களோ முழு அளவில் சம்பள உயர்வைப் பெறுகிறார்கள்; அனுபவிக்கிறார்கள் என்று மூன்று நிறுவனங்களினதும் பணியாளர்கள் வெதும்புகிறார்கள். அவர்கள் கூறுவதில் எவ்வித தப்பையும் எவரும் காணமுடியாது.

சம்பந்தப்பட்ட பணியாளர்களின் உழைப்பில்தான் அவர்களது குடும்பங்கள் வாழ்கின்றன. கடந்த இரண்டு வருடங்கள் சம்பள உயர்வு இல்லை. இந்த வருடத்தில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்திருப்பர். தமது செலவினங்களைச் சமாளிக்க ஓரளவேனும் வழிபிறக் கும் என்று நம்பியிருந்திருப்பார்கள். அது கிடைக்காது அரசாங்கம் "அதிரடி வைத்தியம்" செய்தால் அவர்கள் பாடு அதோ கதிதான். மொத்தத்தில் இது ஒரு மனிதா பிமானப் பிரச்சினை.

அரசாங்கம் இதனை அந்தக்கண் கொண்டு பார்த்து நியாயம் செய்யவில்லையெனில் பாதிக்கப் படுபவர்கள் சம்பந்தப்பட்ட மூன்று நிறுவனங்களது பணியாளர்களின் குடும்பங்கள் மட்டுமா? நாட்டின் சகல மக்களும்தான்! அதனால் இறுதியில் நாட்டின் பிரதான சேவைகள் ஏதோ ஒரு வகையில் ஸ்தம்பிக்கும் அபாயம் உண்டு.

பணியாளர்களின் சம்பள உயர்வை நிறுத்தும் அளவுக்கு நாட்டின் நிதி நிலமை அதள பாதாளத்துக்குச் சென்றுவிட்டது என்ற துக்ககரமான நிலைமையையே மூன்று பிரதான நிறுவனப் பணியாளர்களின் சம்பள உயர்வு நிறுத்தம் எடுத்தியம்புகிறது. "யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே " என்பது பழமொழி. இப்போது வந்திருக்கும் மணியோசையைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதார வீழ்ச்சி என்ற யானை வந்து நாட்டை நாட்டு மக்களை அவர்க ளின் பொருளாதாரத்தை, துளாவி அடித்துத் துவம்சம் செய்யப்போகின்றது என்பதற்கான சமிக்ஞை இது.

நாட்டின் பொருளாதாரம் வருமானம் இந்தளவு அடிநிலைக்கு வருவதற்கான பிரதான காரணங்களில் முதன்மை வகிப்பது அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களாக நடத்தும் போர் என்பதனை திரையை மூடி இலகுவில் மறைத்துவிடமுடியுமா, என்ன? போர், போரின் வெற்றி என்ற மூடுபாகைகளால் நாட்டின் நாட்டு மக்களின் பொருளாதாரம் கீழ்நோக்கிச் செல் வதை மறைத்துவிட முடியாது. அவ்வாறு செய்வதானாலும் கூட, அது மிகக்குறைந்த காலத்துக்கேசாத்தியம். பாதிப்புப் பாதிப்புத்தான் என்ற திண்ம நிலை உறைநிலை வந்தபின்னர் அதனைச் சரி செய்து நிமிர்த்தி எடுப்பதற்கு எத்தனையோ வருடங்கள் செல்லும்!

தொடர்ந்தும் வெளிநாட்டுக் கடன்களிலும் நிதியுதவி என்ற பிச்சைகளிலும் தான் நாட்டின் பொருளாதாரம் தங்கு நிலையில் இருக்கவேண்டிய நிர்ப்பந்தமும் கஷ்டங்களும் உண்டாகும்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படவுள்ள 1.9 பில்லியன் டொலர் கடனுக்கு எந்த நிபந்தனைகளையும் ஏற்கமுடியாது என்ற செருக்கான பேச்சுக்கள் நாட்டு மக்களுக்கு சோறு போடுமா என்பதும் விநயமாக நோக்கப்படவேண்டிய ஒன்றே.

நன்றி
- உதயன் -

Monday, April 20, 2009

தட்டிப் பார்த்தால் தானே தெரியும் கதவு திறக்கப்படுகிறதா என்று....!

வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் தனது உள்ளூர்ப் பணியாளர்களைச் சுதந் திரமாக நடமாட அனுமதிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை அரசாங்கத்திடம் கேட்டிருப்பதாகத் தக வல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கான கோரிக்கைக் கடிதம் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிநிதி நீல் புஹுனேயிடம் இருந்து மீள்குடியமர்வு புனர்வாழ்வுத்துறை அமைச்சர் ரிச்சார்ட் பதியூதீனுக்குக் கிடைத்திருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கை குறித்து, தமது அமைச்சு அதிகாரிகள், படை அதிகாரிகளுடன் கலந்தா லோசனை நடத்தி வருவதாக அமைச்சர் பதியூதீன் தெரிவித்திருக்கிறார்.

வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் தடுப்பு முகாம்களில் ஐக்கிய நாடுகள் சபையின் உள் ளூர் பணியாளர்கள் பதினொரு பேர் தமது குடும் பங்களுடன் தங்கியிருப்பதாக ஐ.நா.வட்டாரங்கள் தெரி விக்கின்றன.

தமது உள்ளூர் பணியாளர்களை, சுதந்திரமாக நட மாடுவதற்கு அனுமதிக்குமாறு ஐக்கிய நாடுகள்சபை ஏற்கனவே பல தடவைகள் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டிருந்ததாகவும், ஆனால் அதற்கான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் நியு யோர்க்கில் உள்ள ஐ.நாவின் பேச்சாளர் பார்ஹன் ஹக் கூறியிருக்கின்றார். ஐக்கிய நாடுகள் சபைக்கே இத் தகைய பரிதாப நிலை என்றால்... ஏனையோருக்கு...? ...தமிழர்களுக்கு?

தமிழர்கள் என்றால், அதுவும் வன்னியில் இருந்து வந்தவர்கள் என்றால் அவர்கள் எல்லோருமே விடுத லைப் புலிகள் தான் என்ற கண்ணோடு பார்க்கும் படை அதிகாரிகளும் அரச சிவில் அதிகாரிகளும் ஐக்கிய நாடு கள் சபையின் பணியாளர்கள் என்றதும் அவர்களை புற நீங்கலாக்கிவிட மாட்டார்கள். இது அரசின் பொது விதி யின் கீழ் விதி விலக்குக்கு உரியதல்ல என்பது இலங்கை யர்களுக்குத் தெரிந்த சங்கதி தான்!

ஆனால், அகதிகளாயினும் சரி, இடம்பெயர்ந்தவர் களாயினும் சரி, அவர்களின் நடமாடும் சுதந்திரம் கட் டுப்படுத்தப்படுவது மனிதாபிமான விதிகளுக்கு முர ணானது. இது அரசாங்க அதிகாரிகளுக்கும் அமைச்சர்க ளுக்கும் தெரியாத விடயமும் அன்று.

ஏனெனில், தமிழர்களை எந்த விதமாக நடத்தினா லும் அவசரகால நிலை, பயங்கரவாதத் தடைச்சட்டம் என்ற பல வகையறாக்களுக்கு உள்ளே செருகி அவற்றில் தமக்கு வாய்ப்பாக உள்ள ஏதோ ஒன்றோடு பொருத்தி விடுவது தான் இங்குள்ள "ஒழுங்குவிதி".
வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப் பட்டுள்ள வன்னி மக்களை வவுனியாவில் நிரந்தரமாக வாழும் அவர்களது இரத்த உறவினர்களே சந்திப் பதற்கோ, தூர நின்று சுகம் விசாரிப்பதற்கோ ஆரம்பத்தில் தடைவிதிக்கப்பட்டிருந்தது ஒன்றும் இரகசியம் அல்ல.
தமது உறவுகளில் எவரும் அராங்கத்திடம் தஞ்சம் கோரி வன்னியில் இருந்து வவுனியா வந்துள்ளார்களா என்பதனை அறியமுடியாது வவுனியா வாழ் தமிழ் மக்கள் மனவேதனையுற்றதும் அங்கலாய்த்ததும் அவதி உற்றதும் மறந்துவிடக் கூடியவையல்ல. உயிரைக் காப் பாற்று வதற்காக வன்னியில் இருந்து வவுனியா வந்து விட்டோம், இங்குள்ள எமது உறவுகள் தேடிவந்து உதவ மாட்டார்களா, மன ஆறுதல் தரமாட்டார்களா? எங்கள் துயரத்தை, சோகத்தை அவர்களோடு பகிர்ந்து மனதில் ஏறியுள்ள அந்த பாரத்தை இறக்க முடியாத என்று இடம் பெயர்ந்த மக்கள் பல வாரங்கள் ஏக்கப் பெருமூச்சு விட்ட கவலை தரும் கதைகள் பல அத்தியாயங்களாக அப்போது விரிந்தது இப்போது பரகசியம்.
இவை யாவும் நலன்புரி நிலையங்களை வந்து பார்வையிட்ட ஐ.நா. மற்றும் சர்வதேச மனிதாபிமான அதிகாரிகளுக்கு தெரிந்திருக்க வசதி இல்லை.எனினும் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர் கள் இராணுவ தடுப்பு முகாம்க ளில் தரித்திருக்கும் கண் றாவியே உண்மையான காட்சி என்று ஒரு சில சர்வதேச அதிகாரிகள் கூறியதையும் மறப்பதற்கில்லை.

இத்தகைய, பின்புலத்தில் தமிழர்கள் என்றால் அவர் களுக்குள்ள அடிப்படை மனித உரிமைகளையும்கூட தேவையின் பிரகாரம் மதிக்காமல் உதாசீனம் செய்யலாம் என்ற எழுதப்படாத விதி இந்த நாட்டில் நடைமுறையில் உள்ளதை ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் இப் போதாவது உணர்ந்து கொள்வார்கள், தெரிந்துகொள் வார்கள் என்று நம்பலாம்.

தமது உள்ளூர் பணியாளர்களைச் சுதந்திரமாக நட மாட அனுமதிக்க வேண்டும் என்ற ஐ.நா. அதிகாரிகளின் கோரிக்கை தனக்குத் தனக்கு என்றால் சுளகு படக் குப் படக்கு என்றுஅடிக்கும் என்ற பேச்சு வழக்கு வாச கத்தை ஞாபகம் ஊட்டுகிறது.

தட்டிப் பார்ததால் தானே தெரியும் உள்ளே இருப் பவர் கதவைத் திறக்க வருகிறாரா.... என்று....!

நன்றி
- உதயன் -

Sunday, April 19, 2009

அதிகாரப் பகிர்வு மிஞ்சுமா?

போர் முடிவுற்றதும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு கொண்டு வரப்படும் என்ற தோற்றம் ஒன்று சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசினால் ஏற் படுத்தப்பட்டிருக்கிறது.

மிகக் குறிப்பாக அரசமைப்புச் சட்டத்துக்கான 13 ஆவது திருத்தத்தின் கீழ், அதிகாரப் பகிர்வு வழங்கும் நடைமுறைகளை அறிமுகம் செய்யும் தீர்வுப்பொதி ஒன்று முன்வைக்கப்படும் என்ற தோரணையில் சர்வதேச வட்டாரங்கள் நம்பும் விதத்தில் அரச தரப்பில் தகவல்கள் அடிக்கடி வெளியிடப்படுவது உண்டு.

இந்தியாவும், பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்றவாறு, 13 ஆவது சட்டத்திருத்தம் தனது முயற்சியினால் ராஜீவ் ஜே.ஆர்.ஒப்பந் தத்தின் பிரகாரம் கொண்டுவரப்பட்டது என்ற "பிடியுடன்"" இலங்கை இனப்பிரச்சினைக்கு நம் பகத்தன்மை கொண்ட அதிகாரப் பரவல் என்ற பாடலை அடிக்கடி கீறல் விழுந்த இசைத் தட்டுப் போன்று ஒலித்துவருகின்றது.

இப்போது இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் காலம். அதன்போது காங்கிரஸ் கட்சி யின் வாக்கு வங்கியைத் தமிழகத்தில் பெருக்கும் உள்நோக்கத் தோடு, ஈழத்தில் தமிழர்களுக்கென இரண்டு மாநிலங்களை உருவாக்குவதற்கு இலங்கை அரசுடன் ஏற்பாடு செய்யப்படும் அல் லது பேச்சு நடத்தப்படும் என்று அமைச்சர் ப.சிதம் பரம் பெரும் தொனியில் பேசிவருகிறார்.
இத்தனைக்கும் அரசமைப்புக் சட்டத்தின் 13 ஆவது சட்டத் திருத்தத்தின்கீழ் இணைக்கப்பட்டி ருந்த வடக்கு கிழக்கு மாகாணசபை வடக்குத் தனியாகவும் கிழக்குத் தனியாகவும் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் இரண்டாகப் பிளக்கப்பட்டுவிட் டது. அப்போதெல்லாம், அதனைத் தடுப்பதற்கு ஏதேனும் மாற்று நடவடிக்கையைக் கூட உச் சரிக்காத அமைச்சர் சிதம்பரம், இப்போது தமது இயலாத் தன்மையை அல்லது ஒத்தூதும் பாணியை மாற்றி, இலங்கையில் இரண்டு மாநிலங்களுக்கு வகை செய்யப்படவேண்டும் என்று தேர்தல் "புலுமாசு" விடுகிறார்.
தமிழர் பிரச்சினைக்கு அவர்களுக்குரிய உரிமை களை வழங்கி அரசியல் தீர்வைக் காண்பதில் இலங்கை அரசு நேர்மையாகவும் விசுவாசமாக வும் இருக்குமாயின் இணைந்திருந்த வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டிருக்கமாட்டாது. நீதிமன்றத் தீர்ப்பில் வழங்கப்பட்டிருந்த வாசகத்திற் கேற்ப வடக்கு கிழக்கை நாடாளுமன்றத்தில் சட்ட மூலம் கொண்டுவந்து இணைத்திருக்கலாம். ஆனால் அது நடைபெறவில்லை. வடக்கு, கிழக்கு நடைமுறை ரீதியாக, நிர்வாக ரீதியாக இரண்டுபட ஏற்பாடாகியுள்ளது.

இத்தனைக்கும் பிறகு
இப்போது 13 ஆவது சட்டத்திருத்தத்தின் பிர காரம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பலவற்றை அவற்றிடம் இருந்து பிடுங்கி எடுத்து மத்திய அரசின்கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் அசுர வேகத்தில் ஒப்பேற உள்ளன.

இன்னும் இரண்டு நாள்களில் (நாளை மறு தினம்) உள்ளூராட்சி விசேட ஏற்பாடுகள் திருத் தச் சட்டமூலம் நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரப்படவுள்ளது.

மாகாணசபைகள் சட்டத்தின்கீழ் அவற்றுக்கு வழங் கப்பட்ட அதிகாரங்களை நடாளுமன்றத்துக் குத் தாரை வார்த்துக் கொடுப்பதற்கான சட்டமூலம் அது.

இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் மிகவும் பாதிக்கப்படப்போவது, இப்போது இயங் கிக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாணசபை என்று அச் சபையினர் சுட்டிக் காட்டுகின்றனர். வடக்கு மாகாண சபை இயங்குமெனில் அதுவும் இந்த வரிசையில் நிச்சயம் சேரும் என்பதில் சந் தேகம் என்ன?

அதிகாரப் பகிர்வுக்கு எதிரும் புதிருமான இத் தகைய ஏற்பாடுகள், இனப்பிரச்சினைக்கான அர்த்த புஷ்டியான தீர்வு ஒன்றை எவரும் எதிர் பார்க்க முடியாது என்று முரசறைகின்றன.
கொடுத்த "பிச்சையை" தட்டிப் பறிக்கும் இந் தச் செயல், அதிகாரப் பகிர்வு என்ற நிர்வாக ஆட்சிக்கோட்பாட்டை செல்லுபடியற்றதாக்கும் முயற்சி.

இத்தகைய ஒரு பின்புலத்தில் சமஷ்டி, சுயநிர்ண யம் என்ற அரசியல் கோட்பாடுகளை தூரவைத்து நுகர்ந்து பார்க்கவும் இலங்கை அரசு விரும்பாது என்பது உணர்த்தப்படுகிறது.
மறுபுறத்தில் அனைத்துக் கட்சி மாநாட்டின் மூலம் தமிழர் பிரச்சினைக்கு உகந்த தீர்வு ஒன்று வைக்கப்படும் என்று எதிர்பார்ப்பது எங்ஙனம்?

நன்றி
- உதயன் -

Tuesday, April 14, 2009

போர் சுமக்கும் மகிந்தவுக்கு எதிராக தமிழினத்தின் வேர் சுமப்போம்

தமிழ்மக்களின் சதைகளாலும் பிண்டங்களாலும் செய்த வெற்றிக்கோப்பையை காண்பித்து சிங்கள தேசத்தின் புதுவருடத்தை மகிந்த அரசு மகிழ்ச்சியாக கொண்டாடுகிறது. தானும் தனது படைகளும் இந்த வெற்றியை கொண்டாடுவதற்காக அறிவித்துள்ள மோதல் தவிர்ப்பை ஏதோ தான் தமிழ்மக்களுக்கு செய்த பெரும் கைங்கரியமாக உலகெமெலாம் அறிவித்துள்ள மகிந்த அரசு, அதனை தனது அரசியல் நலனுக்கு லாவகமாக பயன்படுத்தவும் தவறவில்லை.

பாதுகாப்பு வலயத்திற்குள் தினமும் கொன்று குவிக்கப்படுகின்ற மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்று உலகமே ஏங்கி தவித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், தமிழ்மக்கள் தொடர்பில் எந்தக்கவலையும் இல்லாத இரு அரசியல் தலைவர்கள் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்றால், ஒருவர் மகிந்த மற்றையவர் தமிழக முதல்வர் கருணாநிதி.

இந்த வெறித்தனமான தமிழ் எதிர்ப்போக்குகள் ஒருபுறமிருக்க, மேற்குலகத்தின் நகர்வுகளை உற்றுநோக்கினால், அதன் மனச்சாட்சி இன்னும் சாகவில்லை என்ற மகிழ்ச்சியான சமிக்ஞை தொடர்ந்து தெரிந்தவண்ணம் உள்ளது. அதுதான் தமிழ்மக்களின் கலங்கரை விளக்காகவும் எரிந்து கொண்டிருக்கிறது.

ஈழத் தமிழினத்தின் விடிவு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டிய ஒன்று என்ற எண்ணத்தை அடிமனதில் கொண்ட பல நாடுகள், அதனை தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் எவ்வாறு சேர்த்துக்கொள்வது என்ற சங்கடத்தில் காத்திருக்கின்றன.

இன்னும் சில நாடுகள் சர்வதேச சார்பு அரசியல் நீரோட்டத்தில் கலந்துகொண்டிருந்து விட்டால் பிரச்சினைகளுக்கு தனித்து முடிவெடுக்கவேண்டிய தேவையிராது என்ற ஒரு முடிவுடன் இருந்துவிட்டு தற்போதெல்லாம் பகிரங்கமாக தமிழர் போராட்டம் பற்றிய வெளிப்படை அறிக்கைகளுடன் தமது பழைய கொள்கைகளில் இருந்து வெளியே வந்திருக்கின்றன.

அவ்வாறாக இன்றைய காலகட்டத்தில் ஈழத் தமிழர் போராட்டம் ஏதோ ஒருவகையில் எல்லாத்தரப்புடனும் சம்பந்தப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

சர்வதேச அளவில் இவ்வாறு மாற்றம் அடைந்துள்ள - இன்னமும் மாற்றம் அடைந்தவாறுள்ள - சூழ்நிலையை சிங்கள ஆட்சியாளர்களின் பிராசாரப்போர், இராஜதந்திரப்போர், அரசியல் போர் ஆகியவற்றுக்கு எதிராக புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்கள் எவ்வாறு கையாளப்போகிறார்கள் என்பது இன்னமும் தொக்கி நிற்கின்ற மிகப்பெரிய கேள்வி.

தமிழீழ விடுதலைப் போரின் களம் என்பது இன்றைய தினத்தில் இடம்பெயர்ந்து விட்டது. அது புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் கைகளில் முற்று முழுதாக வந்துவிட்டது. இதனை இன்னமும் உணராதவர்களாக இருக்கலாமா? எல்லாமும் சொல்லித்தான் தெரிய வேண்டியவையா? 30 வருட கால சுதந்திரப் போராட்டத்தில் இணைந்துள்ள மக்களுக்கு சில விடயங்கள் சொல்லாமலே புரியவேண்டிய முதிர்ச்சி வரவேண்டாமா?

இதுதான் செயற்பட வேண்டிய காலம். எமது இனத்தின் விடுதலையை ஆதிக்க சக்திகளின் கைகளிலிருந்தும் ஆக்கிரமிப்பு சக்திகளின் பிடியிலிருந்தும் முற்றாக விடுவித்து தமிழ்மக்களின் இலட்சியத்தை முழுமை பெறவைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல.

கால காலமாய் தமிழினம் கண்டுவந்த அனுபவம் இது. இந்த சிக்கலுக்குள்ளிருந்து விடுதலையை விடுவித்துக்கொள்ள தமிழினம் புதிய வியூகங்களின் ஊடாக தனது போராட்டங்களை ஆரம்பிக்க வேண்டும்.

புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மனித உரிமைகளையும் ஜனநாயக விழுமியங்களையும் உயர்நிலையில் வைத்துப்பேணும் நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆகவே, தமிழின விடுலைக்கான வேட்கையை இந்த நாடுகளிடம் சாத்வீக ரீதியில் எடுத்துக்கூற வேணடிய மிகப்பெரும் பங்கும் அதற்குரிய தார்மீக கடப்பாடும் புலம்பெயர்ந்து வாழும் மக்களிடம் உள்ளது.

தமிழின விடுலைப் போராட்டம் என்பது எவ்வளவு தூரம் உலகமயமாகிறது என்பதைப் பொறுத்துத்தான் அதற்குரிய சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் காலத்தின் நீளம் அமைந்துள்ளது.

புலம்பெயர்ந்து வாழும் மக்கள் இதற்கு எவ்வாறு பணியாற்றலாம் என்பதற்கு சரியான ஒரு உதாரணம் ஒன்று வருமாறு-

அரபு நாடுகளுக்கும் யூத இன மக்களுக்கும் இடையில் நடைபெற்ற பல நூறாண்டு காலப் போர் முடிவடைந்து, இஸ்ரேல் என்பது தனிநாடாக அங்கீகரிக்கப்படலாமா, இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு தொடர்பான விவாதத்துக்கு விடப்படுகிறது.

இந்த தீர்மானம் அரபு நாடுகளுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்டால், இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்துக்கு அமைவாக மீண்டும் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபடவேண்டும் என்பது இருதரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால், ஐ.நா.வின் ஆதரவு அரபு நாடுகளின் பக்கமே காணப்பட்டது. ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மை நாடுகளுக்கு தனது எண்ணெய் வளத்தைக் காட்டி அவற்றை தனது பக்கம் அரபு நாடுகள் சேர்த்துக்கொண்டன. இதனைப் புரிந்துகொண்ட இஸ்ரேல் தலைவர் டேவிட் பென் கூரியன், இந்த தீர்மானம் மீதான விவாதத்தை எப்படியாவது இழுத்தடிப்பது என்று தீர்மானித்தார்.

விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்ததற்கு அடுத்த நாள், வீரச்சாவடைந்த அமெரிக்க இராணுவத்தினரை நினைவு கூரும் நாள்.

அன்றைய நாள் நிச்சயம் ஐ.நா. சபை கூடாது என்பது பென் கூரியனுக்கு தெரிந்திருந்தது. அவரது திட்டத்தின் பிரகாரம் காரியங்கள் நடந்தன.

வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிற்போடப்பட்டது. இந்த இடைவெளிக்குள் வேகமாக செயற்பட்டார் பென் கூரியன். உலகெங்கும் பரந்து வாழ்ந்திருந்த யூத இன மக்களுக்கு ஒரு அறைகூவலை விடுத்தார்.

'யூத இன மக்களே! எமது தேசத்துக்கு விடிவு கிடைப்பதற்கான கடைசிச் சந்தர்ப்பம் எமது கைகளுக்கு வந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள எமது தேசத்தின் தலைவிதியை முடிவு செய்யும் தீர்மானத்தை எமக்குச் சார்பாக நிறைவேற்ற உங்கள், உங்கள் நாடுகளுக்கு அழுத்தங்களை கொடுங்கள்" - என்று அவர் கூறினார்.

உலகெங்கும் வாழ்ந்த யூதர்கள் சிலிர்த்தெழுந்தார்கள். தத்தமது நாடுகளிலுள்ள நாடாளுமன்றை நோக்கி புறப்பட்டார்கள். தனியாக அல்ல. அந்த நாட்டு மக்களையும் அணி திரட்டிக்கொண்டு சென்றார்கள். டென்மார்க் என்றால் அங்குள்ள யூதன் பத்து டெனிஷ் குடிமக்களை அழைத்துக்கொண்டு சென்றான். இவ்வாறு உலகெங்கும் வாழ்ந்த யூதர்கள் ஆயிரக்கணக்கில் சென்று அந்தந்த நாட்டு நாடாளுமன்றங்களை முற்றுகையிட்டனர்.

'வளங்களை சுரண்டும் எண்ணத்துடன் செயற்பட்டு எமது தேசத்தின் தலைவிதியை மாற்றிவிடாதீர்" - என்று உலகெங்குமுள்ள யூதர்கள் தமது தேசபக்தியை பறைசாற்றினார்கள்.

அந்த ஒரே நாளில் நிலைமை தலைகீழானது. இஸ்ரேல் தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தபோது, நிச்சயம் தமக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று அரபு நாடுகள் எண்ணியிருந்த பல நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்தன.

முடிவு: இஸ்ரேல் தனிநாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக விடுதலை வேண்டிப் போரிட்ட யூத இனம் தமக்கான நிலத்தை பெற்றுக்கொண்டது.

உலகெங்கும் வாழ்ந்த யூத இன மக்களை ஒரு குடையின் கீழ் அணிதிரட்டிய பென்கூரியனின் முயற்சி மகாவெற்றி கண்டது. வல்லரசுகளின் தன்நேச திட்டங்கள் உடைத்தெறியப்பட்டன. அரபு நாடுகளின் சதி தவிடுபொடியானது.

அதாவது, புலம்பெயர்ந்து வாழ்ந்த யூத இன மக்களின் புரட்சி இஸ்ரேலின் உருவாக்கத்துக்கு பெரும் அடித்தளமானது.

இத்தகைய ஒரு அர்ப்பணிப்பு மிக்க போராட்டத்துக்கு தமிழினம் இன்று தயாராக இருக்கிறதா? இத்தகைய போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்;பட்டே ஆகவேண்டிய கட்டாயநிலை தற்போது தோன்றியிருக்கின்றதை தமிழ்மக்களின் அனைத்து மட்டத்தினரும் ஏற்றுக்கொள்ளகொண்டிருக்கின்றன.

அதனை துரிதமாக செயற்படுத்த இனியும் தாமதிக்க முடியாத நிலையை தமிழினம் உணர்ந்;து கொள்ளவேண்டும். போர் சுமக்கும் மகிந்தவுக்கு எதிராக தமிழினதின் வேர் சுமக்கும் இனமாக புறப்படுவதே இன்றைய பணி.

நன்றி
ப.தெய்வீகன்
_ தமிழ்நாதம் -

Monday, April 13, 2009

புதுக்குடியிருப்பு பெரும் சமர் திருப்பங்களுக்கு வழி செய்யுமா?

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் "பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்தை' கைப்பற்றுவதற்கான இறுதிக் கட்ட முயற்சிகளில் அரசபடைகள் இறங்கியிருக்கின்றன. புதுக்குடியிருப்பு கிழக்குப் பகுதி முற்றாகப் படையினரால் கைப்பற்றப்பட்ட நிலையில் தற்போது புலிகள் வசம் 18 சதுர கி.மீ பிரதேசமே எஞ்சியிருப்பதாகவும், அதைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் படையினர் இறங்கியிருப்பதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

பாதுகாப்பு வலயத்தைச் சுற்றிலும் 53ஆவது டிவிசன், 55ஆவது டிவிசன், 58ஆவது டிவிசன், 59 ஆவது டிவிசன், 68ஆவது டிவிசன் என இராணுவத்தின் ஐந்து டிவிசன்கள் எல்லையிட்டு நிற்கின்றன.

இதற்கடுத்த நிலையில் 57ஆவது டிவிசன், 62ஆவது டிவிசன், 63ஆவது டிவிசன், 64ஆவது டிவிசன் ஆகிய நான்கு டிவிசன்கள் இரண்டாவது கட்ட பாதுகாப்பு நிலைகளை அமைத்து நிலைகொண்டிருக்கின்றன.

59ஆவது டிவிசன் வட்டுவாகல் பாலத்துக்குத் தெற்கே நிலைகொண்டிருப்பினும் அது வலிந்த தாக்குதல்களை நடத்தும் நோக்கில் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளை நந்திக் கடலோரமாக முன்னகர்ந்த 53ஆவது டிவிசனின் எயர் மொபைல் பிரிகேட் மற்றும் 681 பிரிகேட் என்பன இப்போது முள்ளிவாய்க்கால் பகுதியை நெருங்கி நிலைகொண்டிருக்கின்றன.

இதற்கடுத்து அம்பலவன்பொக்கணைப் பகுதியை நெருங்கி 58ஆவது டிவிசன் நிலைகொண்டிருக்கிறது. புதுமாத்தளனுக்குத் தெற்கே பாதுகாப்பு வலயத்துக்கு அருகே முன்னேறியிருக்கிறது 55ஆவது டிவிசன்.

இந்த நான்கு டிவிசன்களும் எப்போதும் பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதலைத் தொடங்கலாம் என்ற நிலையே இந்தப் பத்தியை எழுதும் வரை இருந்தது. ஏற்கனவே பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களை மீட்கும் தாக்குதல்களை ஆரம்பித்து விட்டதாகப் படைத்தரப்பு கூறியிருந்தாலும் அது முழுவேகத்தில் நடக்கின்ற முயற்சியாகத் தெரியவில்லை.



ஆனால், பொதுமக்கள் வாழும் பிரதேசத்தில் இருந்து கண்ணுக்கு எட்டிய தொலைவில் படையினர் நிலைகொண்டிருக்கின்றனர். அவர்கள் பெருந்தொகையில் ஒலிபெருக்கிகளை முன்னரங்கில் பொருத்தி சினிமாப் பாடல்களை ஒலிபரப்புவதுடன் தமது பிரதேசத்துக்குள் வருமாறும் அடிக்கடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். "வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா' என்ற பாடல் அடிக்கடி திரும்பத் திரும்ப ஒலிக்க விடப்படுகிறது. அதேவேளை அடுத்த சில தினங்களில் பெருந்தொகையான மக்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டுவர முடியும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

இது இந்த நிலையில் இருக்க, கடந்தவாரம் புதுக்குடியிருப்பில் நடைபெற்ற பெரும் சமர் புலிகளைப் பலவீனப்படுத்தி விட்டதாகப் பாதுகாப்பு வட்டாரங்களில் கருதப்படுகிறது. இனிமேல் புலிகளால் தலையெடுக்க முடியாதென்ற அளவுக்கு அவர்களின் முதுகெலும்பை முறித்து விட்டதாகக் கூட அவர்களிடத்தில் அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன. இது எந்தளவுக்கு சரியானது என்பதைக் காலப்போக்கில் தான் அறிந்து கொள்ள முடியும். புதுக்குடியிருப்பு கிழக்கில் ஆனந்தபுரம் பகுதியில் நடைபெற்ற சமர், ஈழப்போர் 4 இல் நடந்த மிகப்பெரிய சமராகக் கருதப்படுகிறது. இந்தச் சமருக்குள் புலிகள் சிக்கிக் கொண்டது எதிர்பாராத ஒரு நிகழ்வு என்றே சொல்லப்படுகிறது.. புலிகள் ஒரு பாரிய வலிந்த தாக்குதலுக்குத் தயாராகியிருந்த நிலையில் படைத்தரப்பு மேற்கொண்ட இந்தத் தாக்குதல் அவர்களுக்கு பாரிய சேதங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

புலிகள் தமது பெரும் படைவளங்களை குறிப்பிட்ட சிறிய பிரதேசத்துக்குள் ஒன்று குவித்திருந்ததை அறியாமலேயே படைத்தரப்பு இந்தத் தாக்குதல் நகர்வை மேற்கொண்டது.

ஆனால், படைத்தரப்பின் கணிப்பு 200 புலிகள் வரையே முற்றுகை இடப்பட்டிருக்கலாம் என்பதாகவே இருந்தது. ஆனால் உள்ளேயிருந்த புலிகளின் எண்ணிக்கை 700 இற்கும் மேல் என்று இப்போது பாதுகாப்புத் தரப்பு கூறுகிறது.

கடந்த 4ஆம் ,5ஆம் திகதிகளில் ஆனந்தபுரம் பகுதியில் சிலநூறு சதுர மீற்றர் பிரதேசத்துக்குள் சிக்கியிருந்த, புலிகளை அழிக்கப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கை இலங்கையின் வரலாற்றில் இதுவரை மேற்கொள்ளப்பட்டிராத ஒன்றாகும்.

ஒரு சிறிய களமுனையில் பெருந்தொகைப் படையினர் களமிறக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கை இதுவேயாகும்.

இதற்கு முன்னர் இலங்கை இராணுவம் பாரியளவிலான வலிந்த தாக்குதல்கள் பலவற்றை நடத்தியிருப்பினும் அது பல கி.மீற்றர் பரந்த பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது. ஆனால் ஒரு சதுர கி.மீற்றருக்கும் குறைந்த பிரதேசத்துக்குள் அதிகளவு படையினர் களமிறக்கப்பட்ட தாக்குதல் ஆனந்தபுரம் பெரும்சமர் தான்.

இந்தத் தாக்குதலின் ஆரம்பத்தில் சுமார் 10 வரையான பற்றாலியன்களைச் சேர்ந்த படையினரே ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் உள்ளேயிருந்த புலிகளின் எதிர்ப்பு அதிகமாக அதிகமாக படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

இதன் காரணமாக நடவடிக்கை முற்றுப் பெற்றபோது குறைந்தது 15 ஆயிரம் படையினரேனும் அந்தப் பகுதியில் இருந்திருக்கின்றனர். முதற்கட்டமாக லெப்.கேணல் அத்துல கொடிப்பிலி தலைமையிலான 1ஆவது விசேட படைப்பிரிவு, லெப்.கேணல் ஜெயந்த பாலசூரியவின்

தலைமையிலான 2ஆவது கொமாண்டோ றெஜிமென்ட் ஆகியவற்றுடன் லெப்.கேணல் வஜிர வெலகெதரவின் தலைமையிலான 8ஆவது கெமுனுவோச், லெப்.கேணல் லால் சந்திரசிறியின் தலைமையிலான 9ஆவது கெமுனுவோச், மேஜர் சம்பத் எக்கநாயக்கவின் தலைமையிலான 12ஆவது கெமுனு வோச், லெப்.கேணல் மணிந்திரவின் தலைமையிலான 6ஆவது கஜபா றெஜிமென்ட், லெப்.கேணல் சந்திர விக்கிரமசிங்கவின் தலைமையிலான 8ஆவது கஜபா றெஜிமென்ட், லெப்.கேணல் குமார பீரிஸின் தலைமையிலான 20ஆவது கஜபா றெஜிமென்ட் ஆகியன தேடியழிப்பு நடவடிக்கையில் இறக்கப்பட்டன.

அதேவேளை 11ஆவது இலகு காலாற்படைப் பிரிவும், 5ஆவது விஜயபா காலாற்படைப்பிரிவும் முற்றுகையை உடைத்துக் கொண்டு புலிகளை வெளியேறிச் செல்ல விடாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன.

புலிகளின் வலு முற்றுகை வலயத்துக்குள் அதிகமாக இருந்ததால் மேலதிக படையினரைக் களமிறக்கப் படைத்தலைமை தீர்மானித்தது.

53ஆவது டிவிசன் எயர் மொபைல் பிரிகேட்டைச் சேர்ந்த லெப்.கேணல் அஜந்த விஜேசூரியவின் தலைமையிலான 1ஆவது கெமுனுவோச், மற்றும் 2ஆவது விசேட படைப்பிரிவு, 1ஆவது கஜபா, லெப்.கேணல் சமிந்த லாமஹேவவின் தலைமையிலான 7வது கெமுனுவோச் ஆகியவற்றைப் புதிதாகக் களமிறக்கியது.

அதேவேளை 58ஆவது டிவிசன் மேலதிகமாக லெப்.கேணல் சாலிய அமுனுகமவின் தலைமையிலான 12ஆவது கஜபா றெஜிமென்ட், லெப்.கேணல் பலேகும்புரவின் தலைமையிலான 14ஆவது கஜபா றெஜிமென்ட், லெப்.கேணல் கமால் பின்னவெலவின் தலைமையிலான 6ஆவது கெமுனுவோச், லெப்.கேணல் உபுல் சேனாரத் தலைமையிலான 4ஆவது கெமுனுவோச், 20ஆவது இலகு காலாற்படை ஆகியவற்றைக் களமிறக்கியது.

55ஆவது டிவிசன், 57ஆவது டிவிசன், 63ஆவது டிவிசன், 64ஆவது டிவிசன் ஆகியவற்றில் இருந்து அவசர அவசரமாகப் படையினர் கொண்டு வரப்பட்டு சண்டையில் இறக்கப்பட்டனர்.

இவற்றை விட லெப்.கேணல் நிகால் சமரக்கோனின் 5ஆவது கவசப்படைப்பிரிவு தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தியது. அத்துடன் பிரிகேடியர் நாபாகொடவின் தலைமையிலான ஆட்டிலறிப் படைப்பிரிவு இரவு பகலாக குண்டுமழை பொழிந்து உதவியது.

இந்தத் தாக்குதலில் பங்கெடுத்த துணைச் சேவைப் படைப்பிரிவுகளின் எண்ணிக்கை தனி. புலிகளை முற்றுகையிட்டுத் தாக்கியழிக் கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட இராணுவ பற்றாலியன்களின் மொத்த எண்ணிக்கை 20 இற்கும் அதிகம் என்பது ஆச்சரியமளிக்கும் விடயம்.

சிறிய பகுதிக்குள் குறைந்தது 12ஆயிரம் காலாற்படையினரைக் கொண்டே இந்த அழித்தொழிப்புச் சமரைப் படைத்தரப்பு நடத்தியது.

இந்த அழித்தொழிப்பு நடவடிக்கையில் பங்கேற்ற பற்றாலியன்கள் அத்தனையும் சிறப்புப் பயிற்சி பெற்றது. அனுபவம் மிக்கது.

இராணுவத்தின் அனுபவம் மிக்க படைப்பிரிவுகள் அனைத்தும் களமிறக்கப்பட வேண்டியளவுக்கு அது கடினமான களமுனையாக இருந்தது.

அத்துடன் இந்தச் சமரில் இரு தரப்புக்கும் ஏற்பட்ட சேதங்களும் மிகமிக அதிகமென்றே தகவல்கள் கூறுகின்றன. படைத்தரப்போ புலிகளோ தமக்கு ஏற்பட்ட இழப்புகள் பற்றி எதுவும் கூறவில்லை.

புலிகள் தரப்பில் 525 பேரின் சடலங்களை கைப்பற்றியதாகக் கூறியிருந்தது படைத்தலைமை. புலிகள் தரப்பில் கொல்லப்பட் டதாக, பாதுகாப்பு வட்டாரங் கள் அறிவித்த கேணல் தீபன், மாலதி படையணி சிறப்புத் தளபதி கேணல் விதுசா, சோதியா படையணி சிறப்புத் தளபதி கேணல் துர்க்கா, படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர் கேணல் கடாபி ஆகியோர் மூத்த தளபதிகளாகச் செயற்பட்டவர்கள்.

இவர்களில் துர்க்கா தவிர்ந்த ஏனைய மூவரும் ஜெயசிக்குறு காலத்திலேயே கேணல் நிலைத் தளபதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள். தீச்சுவாலை முறியடிப்புச் சமரை அடுத்து 2001இல் துர்க்காவும் கேணலாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இவர்களைவிட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தளபதி நாகேஸ், ஜெயந்தன் படையணி சிறப்புத் தளபதி கீர்த்தி, கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி மணிவண்ணன், குட்டிசிறி மோட்டார் படையணியின் சிறப்புத் தளபதி கோபால், மணலாறு பகுதி தளபதிகளான சித்திராங்கன், ஆதித்யன், ராதா படையணித் தளபதி சிலம்பரசன், சோதியா படையணியின் தளபதி மோகனா, மற்றும் தளபதி ரூபன் என கொல்லப்பட்ட புலிகளின் தளபதிகள் என்று பட்டியலைக் காட்டியது படைத்தரப்பு.

தாக்குதல் நடந்து பல நாட்கள் கழிந்த நிலையில் குட்டிறிசிறி மோட்டார் படையணியைச் சேர்ந்த அமுதா, ராதா படையணியின் சிரேஷ்ட தளபதி இனியவன், திருமலை புலனாய்வு பிரிவு தலைவர் அன்ரன், புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்த மாங்குயில், நேரு என்று கொல்லப்பட்டதாகக் கூறப்படுவோரின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

ராதா படையணித் துணைத் தளபதி அன்பு, பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு தளபதியான அஸ்வினி போன்றோர் கொல்லப்பட்டதாக இராணுவ இணையத்தளம் கூறியிருந்த போதும் இவர்கள் காயமடைந்தாக தகவல் வெளியிட்டிருந்தது பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம்.

படைதரப்பு வெளியிட்ட இந்தத் தகவலைப் புலிகள் ஏற்கவோ மறுக்கவோ இல்லை. புலிகளின் இத்தனை தளபதிகளும் இறந்தது உண்மையானால் அது புலிகளுக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே இருக்கும்.

வீரகேசரி வாரவெளியீடு

Sunday, April 12, 2009

ஆனந்தபுரம் சமர் தோற்றுவித்துள்ள அதிர்வலைகள்

அனைத்துலகத்தின் கவனத்தை தன்பக்கம் திரும்பும் முகமாக பல நகர்வுகளை எதிரும்புதி ருமாக இலங்கை அரசாங்கம் மேற்கொள்வ துண்டு. தற்போது இலங்கை அரசாங்கம் எதிர் கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தேவையான நிதி உதவிகளுக்கு அனைத்துலக நாணய நிதியத்தை நம்பியுள்ள அரசு அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளினால் பலத்த அதிருப்தி அடைந்துள்ளது.

இலங்கை அரசு தனது கையிருப்பு நிதியை செலவிட்டு தனது நாணயத்தின் பெறுமதியை தக்கவைக்க முற்படுவதை நிறுத்த வேண்டும் என்பதே அனைத்துலக நாணய நிதியத்தின் முதலாவது நிபந்தனை. அதனை விட வன்னியில் நடைபெற்றுவரும் போர் மற்றும் அங்கு தோன்றியுள்ள மனித பேரவலம் தொடர்பாக வும் மேற்குலகத்தின் போக்குகளில் மாற்றம் தென்படுவதும் அரசிற்கு அனுகூலமானதல்ல.

எனவே அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் காரியங்களை அரசு மேற்கொண்டு வருகின்றது. கடந்த வாரத்தின் நடுப்பகுதியில் லிபியாவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு லிபியாவின் அரச தலைவர் கேணல் கடாபியை சந்தித்துள்ளார்.

அதே சமயம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தனது குழுவினருடன் சீனாவுக்கு பயணத்தை மேற் கொண்டுள்ளார். அங்கு அவர் சீனாவின் பொதுவுடமைக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான வாங் ஹாங் என்பவரை கடந்த புதன் கிழமை சந்தித்து இரு நாடுகளினதும் உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இந்த அரசியல் நகர்வுகளுக்கு முன்னர் வன்னி களமுனைகளில் பாரிய மோதல்கள் கடந்த 2 ஆம் திகதியில் இருந்து 5 ஆம் திகதி வரையில் நிகழ்ந்திருந்தது. அதன் பின்னர் அங்கு கடந்த புதன்கிழமை வரையிலும் ஒரு அசாதாரண அமைதி நிலவிய போதும் புதன் கிழமை நகர்வை மேற்கொண்ட இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மோதல்கள் நடைபெற்றுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கடந்த மார்ச் மாத இறுதி வாரப்பகுதியில் புதுக்குடியிருப்பு பகுதியில் உக்கிரமடைந்த தாக்குதல்கள் இந்த மாதத்தின் முற்பகுதியில் அதி தீவிரம் பெற்றுள்ளது. கடந்த முதலாம் திகதி 53 ஆவது படையணி, நடவடிக்கை படையணி8 என்பன தென்முனையில் இருந்து நகர, 58 ஆவது படை யணி வடமுனையில் இருந்து நகர்ந்து பச்சை புல்மோட்டை பகுதியை கைப்பற்றியிருந்ததாக படைத்தரப்பு தெரி வித்திருந்தது.

53 ஆவது படையணியின் 5 ஆவது விஜயபா பற்றலியன், 6 ஆவது கஜபா பற்றலியன் என்பனவும், 58 ஆவது படை யணியின் 14 ஆவது, 8 ஆவது, 20 ஆவது, 12 ஆவது கஜபா பற்றலியன் கள், 4 ஆவது கெமுனு வோச் பற்றலியன் என்பன நடவடிக்கை படையணி8 மற்றும் 53 ஆவது படையணிகளுடன் பச்சைப் புல் மோட்டை ஊடாக ஆனந்த புரம் பகுதியில் கடந்த 2 ஆம் நாள் அன்று இணைப்பை ஏற்படுத்திக் கொண்டன.

படையினரின் இந்த இணைப்புக்கு பின்புற மாக ஏறத்தாழ இரண்டு சதுர கி.மீ. பரப்பளவி னுள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலைப்புலி கள் நிலைகொண்டிருந்தனர். இதனை படைத் தரப்பு அறிந்திருந்தது. எனவே இந்த இணைப்பின் மூலம் விடுதலைப்புலிகளின் பெருமள வான அணிகளை முற்றுகைக்குள் கொண்டு வந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்திருந்தது.

ஆனால் படையினரை முற்றுகைக்குள் கொண்டு வருவதே விடுதலைப்புலிகளின் திட்டமாக இருந்துள்ளது. அதாவது படையினரின் பின்னணி நிலைகளுக்குள் ஒரு தொகுதி தமது உறுப்பினர்களை அனுமதிப்பதன் மூலம் இராணுவத்தின் வலிந்த தாக்குதல் படை யினரை பெட்டி வடிவ முற்றுகைக்குள் கொண்டுவந்து இரு முனைகளால் தாக்கி அழிக்கும் உத்திகளை விடுதலைப்புலிகள் வகுத்திருந்தனர்.

எனினும் படைத்தரப்பு தனது பலத்தை அதிகரிப்பதன் மூலம் இந்த முற்றுகையின் நோக்கத்தை மறுதலையாக்க முயன்றது. அதாவது விடுதலைப்புலிகளின் அணிகளை படைத்தரப்பும் பெட்டி வடிவ முற்றுகைக்குள் கொண்டுவர முற்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த 4 ஆம் திகதி சனிக்கிழமை இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா வன்னி படை கட்டளைத் தளத்திற்கு அவசர விஜயம் மேற்கொண்டு புதுக்குடியிருப்பில் நிலைகொண்டுள்ள படையணிகளின் கட்டளைத் தளபதிகளுடன் அவசர சந்திப்பு ஒன்றை மேற்கொண் டிருந்தார்.

சரத்பொன்சேக்காவின் இந்த விஜயத்தின் நோக்கம் புதுக்குடியிருப்பு நோக்கிய
படையினரின் இறுதியான வலிந்த தாக்குதலை தீவிரப் படுத்துவதுடன் படையினரின் பின்னணி நிலைகளுக்குள் நிலைகொண்டுள்ள விடுதலைப்புலிகளின் அணிகளை முற்றாக அழிப்பதுமே என வன்னி தகவல்கள் தெரிவித்திருந்தன. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சமரை ஆரம்பிக்க இராணுவம் திட்டமிட்டிருந்தது. அதற்கேற்ப பெருமளவான படையினரும், ஆயுதங்களும் அங்கு நகர்த்தப்பட்டன. சிறப்புப் படையணிகள், வான்நகர்வு பிரிகேட் என்பன அங்கு கொண்டுவரப்பட்டன.

கேணல் ராப்ல் நுகேரா தலைமையிலான கொமாண்டோ பற்றலியன், கேணல் அதுல கொடிப்பிலி தலைமையில் சிறப்பு படையணி, 5 ஆவது கவசவாகன படைப்பிரிவும் பெரு மளவான டாங்கிகளும் அங்கு நகர்த்தப்பட்டது டன், பிரிகேடியர் சவீந்தர் சில்வா, மேஜர் ஜெனரல் காமால் குணரட்ன, கேணல் ரவிப் பிரிய ஆகியோர் களமுனைகளை வழிநடத் துவதற்கு நியமிக்கப்பட்டதுடன், அவர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மேற்கொண்டிருந்தார்.

எனினும் படையினரின் திட்டத்திற்கு முன்ன ராக 4ஆம் திகதி சனிக்கிழமை நள்ளிரவு விடுதலைப் புலிகளின் அணிகள் தமது தாக்கு தல்களை ஆரம்பித்திருந்தனர். இரு தரப்பும் கடுமையாக மோதிக்கொண்டன. சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலும் ஏறத்தாழ 100,000 எறிகணைகளை படைத் தரப்பு பயன்படுத்தியதுடன், 15 நிமிடங்களுக்கு ஒரு வான் தாக்குதலையும் நிகழ்த்தி யிருந்தது.

விடுதலைப்புலிகளின் நிலைகளுக்கு அருகாமையில் படைத்தரப்பு நின்றபோதும் அங்கு எறிகணை வீச்சுக்களையும், வான்தாக்குதல்களையும் படையினர் செறிவாக பயன்படுத்தியி ருந்ததாக படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 8 ஆம் திகதி வரையிலும் வன்னி பகுதியில் பெரும் மோதல்கள் நிகழவில்லை. ஆனால் விடுதலைப்புலிகளின் ஆழஊடுரு வும் படையினரின் தாக்குதல் ஒன்று கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இராமநாதபுரத்தில் நிகழந்துள்ளதாக படைத் தரப்பு தெரிவித்துள்ளது.

இலங்கைப் படையினர் மீது விடுதலைப்புலிகளின் பெண்புலி உறுப்பினர் ஒருவர் தற் கொலைத் தாக்குதலை நிகழ்த்தியதாக படைத் தரப்பு தெரிவித்துள்ளது இராணுவத்தின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் ஊடுருவியுள்ள விடுதலைப்புலிகளின் அணிகளே இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது. இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை 10 ஆம் திகதி காலை படையினர் பாதுகாப்புப் வலயம் நோக்கிய தமது நகர்வுகளை ஆரம்பித்து விட்டதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் மக்கள் செறிவாக வாழும் இந்தப் பிரதேசத்தின் மீதான நடவடிக்கை பாரிய மனித பேரழிவுகளை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை தோற்று வித்துள்ளது.

தற்போதைய களமுனையை பொறுத்தவரையில் இராணுவம் தனது கவசப்படையையும், செறிவான பீரங்கி தாக்குதல்களையும் பயன் படுத்துவதுடன், தரைப்படையினர் 23 மி.மீ, 30 மி.மீ போன்ற இலகுரக பீரங்கிகளையும், 12.7 மி.மீ ரக கனரக துப்பாக்கிகளையும் தரை நடவடிக்கைகளில் அதிகளவில் பயன்படுத்தி யும் வருகின்றனர். எனவே அவ்வாறான ஒரு சூழ்நிலையில் பாதுகாப்பான பிரதேசத்திற்குள் இராணுவம் புகுந்தால் பாரிய மனிதப் பேரழிவு ஒன்று ஏற்படும் என்பதை யாரும் மறுத்து விட முடியாது.

தற்போது புதுக்குடியிருப்பு முழுவதையும் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ள அரசு பாதுகாப்பு வலயத்தை நோக்கி ஐந்து முனைகளில் நகர முற்பட்டு வருகின்றது. இந்தப் பிரதேசத்தில் மோதல்கள் ஆரம்பிக்குமாக இருந்தால் அங்கு குறுகிய நேரத்தில் பாரிய அழிவு ஏற்படலாம் என எதிர்வுகூறப்படுகின்றது. இது இரண்டாவது உலகப் போரின் பின்னர் நிகழப்போகும் மிகப்பெரும் பேரழிவாகும் என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்த பேரனர்த்தத்தைத் தவிர்க்கும் முகமாக போரை நிறுத்த செய்ய வேண்டிய முக்கிய பொறுப்பு அனைத்துலக சமூகத்திற்கு, குறிப்பாக இந்தியா விற்கும், மேற்குலகத்திற்கும் உண்டு. ஏனெனில் நான் ஏற்கெனவே பல தடவைகள் கூறி யது போல பொஸ்னியாவில் மேற்கொள்ளப் பட்ட அமைதி நடவடிக்கையின் போது இரு தரப்பும் சமவலுவுள்ள நிலையில் இருந்ததால் தான் நியாயமான தீர்வை எட்ட முடியும் என்ற சமன்பாடுகளை வகுத்தி ருந்த மேற்குலகம் தமிழ் மக்களுக்கு மறுதலையான கொள்கைகளை பின்பற்றியிருந்தது. இதன்மூலம் நடை பெற்றுவரும் போரை அவர் களே தூண்டியதாக ஒட்டுமொத்த தமிழினமும் கருதி வருகின்றது. எனவே தான் பல போராட்டங்களை புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி
வேல்ஸிலிருந்து அருஷ்
வீரகேசரி வாரவெளியீடு

Saturday, April 11, 2009

ஜோன் ஹோம்ஸின் கருத்து ஐ.நா.வின் நிலைப்பாடா?

இலங்கையில் ஒரு யுத்தநிறுத்தத்தினையோ அல்லது ஒரு இடைக்கால மோதல் தவிர்ப்பினையோ மேற்கொள்ளும்படி கோருவதை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தவிர்த்திருந்த மறுதினமே அவரது மிகவுயர்ந்த தரத்தினரான மனிதவுரிமை அதிகாரி ஜோன் ஹோம்ஸ், பிரித்தானிய கார்டியன் பத்திரிகையில் தெரிவித்த கருத்தில் இடைக்கால போர் ஓய்வு வலியுறுத்தப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் நடைபெற்ற மதியநேர செய்தியாளர் மாநாட்டில் இன்னர் சிற்றி பிறஸ் சார்பில், ஜோன் ஹோம்ஸ் இன் கருத்து இப்போது ஐ.நா.வினது நிலைப்பாடா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் மேலும் நுட்பமான விபரங்களை நீங்கள் நாளையோ, நாளை மறுதினமோ அறியலாம் என்று பான் கீ மூனின் பேச்சாளர் மைக்கெல் மொன்ராஸ் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் எந்தவொரு விமர்சனத்தையும் நிராகரிக்கும் நிலையில், ஒரு மனிதாபிமான இடைக்கால போர் ஓய்வினைக் கூட கோரும் நிலையில் இல்லை. ஆனால், ஹோம்ஸ் எதிர்வுகூறுவது போன்று கடற்கரையோரம் இரத்த காடாகும் நிலை ஏற்படுமாயின் ஐ.நா. மீது குற்றஞ் சுமத்ப்படுவதை அவர் விரும்பவில்லை. இருவகை நிலைப்பாட்டினை எடுப்பதும் தனது அறிக்கையை வெளியிடச் செய்வதும் ஐ.நா.வின் பழைய நிலையிலிருந்து மீட்புப் பெற உதவலாம் என அவதானிகள் கூறுவதாக இன்னர் சிற்றி பிறஸ் கூறுகிறது. இதேவேளை, இலங்கை இராணுவ நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட செலவினத்தையும், வடக்கின் தடுப்பு முகாம்கள் தொடர்பான செலவினத்தையும் ஈடுசெய்யும் வகையில் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியுள்ள இரண்டு பில்லியன் டொலர்கள் தொடர்பான கடன் பற்றி ஏப்ரல் 25ஆம் திகதி முடிவு செய்யப்படவிருக்கிறது.

மேலும் அண்மையில் லண்டனில் நடைபெற்ற ஜி20 மõநாட்டில் சர்வதேச நாணய நிதியத்திடம் சில உறுதிப்பாடுகள் விடப்பட்டுள் ளன. இந்த இரண்டு பில்லியன் டொலர்கள் சிறிய விடயம். மனிதவுரிமைகள் பற்றி கரிசனை கொள்வது யார்? என்பதே சிலரின் அபிப்பிராயமாகவுள்ளது. இதேவேளை,இன்னர் சிற்றி பிறஸ்: த கார்டியன் பத்திரிகையில் வெளியான அமைப்பு ஐ.நா.வினதா அல்லது ஹோம்ஸினதா? என்று எழுப்பியுள்ள கேள்விக்கு, பேச்சாளர் மொன்ராஸ்: ஹோம் ஸ் ஐ.நா. சார்பில் பேசுகிறார். மனிதவுரிமை அதிகாரி என்பதால் அல்ல என்று கூறியுள்ளார். அத்துடன், செயலாளர் நாயகம், சர்வதேச மனிதாபிமான சட்டங்களை ஏற்றுச் செ யற்படுமாறு இலங்கை அரசினைக் கோருவது போல் தெரிகிறது. ஆனால், ஹோம்ஸ் பகைமைகளை இடைநிறுத்திக் கொள்வது பற்றியல்லாவா பேசுகிறார்? ஐ.நா. வின் நிலைப்பாடு யாது? என்ற இன்னர் சிற்றி பிறஸ் எழுப்பிய கேள்விக்கு, இவ்விடயம் தொடர்பில் நாம் மேலும் சரியான நிலைப்பாட்டி னை நாளையே அறி யலாம் என்று ஐ.நா. பேச்சாளர் கூறியுள்ளார்.

நன்றி
- வீரகேசரி -

Thursday, April 9, 2009

வன்னியில் இரத்தக்களரிப் பேராபத்து; தடுத்து நிறுத்தத் தக்கார் யார்...?

இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்தி, சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக, அந்த நாட்டின் அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருக்கிறார்.
தாம் மட்டுமன்றி இணைத்தலைமை நாடுகளில் ஒன்றான அமெரிக்காவுடன் சேர்ந்தும் இலங்கையில் போரை நிறுத்துவதற்குச் சாத்தியமான வழிவகைகள் குறித்து ஆராய்ந்துள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டிருக்கிறார்.

நோர்வேயின் என்.ரி.பி. செய்தி நிறுவனத்துக்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வழங்கிய செவ்வியில் அவர் இவற்றைச் சொல்லியுள்ளார்.
இலங்கையில் போர் நிறுத்தம் தேவை என்பதனை சமீப காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை உட்பட அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் என்ற பல தரப்பு களும் ஏற்கனவே தமது கோரிக்கையாக முன்வைத்து விட்டன.

எந்தக் "கொம்பன்" சொன்னாலும் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதில் அரசாங்கம் மிக உறுதியாக நிற்கிறது; ஆணித்தரமாகக் கூறுகிறது.
அதனை "மேவி" எதனையும் செய்ய முடியாத நிலையிலும், வற்புறுத்திச் செய்விக்க முடியாத பரிதாப நிலையிலும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேசம் கையறு நிலையில் உள்ளமை,கறுப்புக்கு மேல் வெள்ளை போன்று மிகத் துல்லியமாகத் தெரி கிறது; துலாம்பரமாகப் புரிகிறது.

இத்தகைய ஒரு சூழ்நிலையில், பின்னணியில் போர் நிறுத்தம் ஒன்றை வருவிப்பதற்கான முயற்சி, கல்லில் நார் உரிக்கும் கருமமே என்பது விளங்கிக் கொள்ளக் கூடிய ஒன்றே. நோர்வே அமைச்சர் சொல்ஹெய்மின் வாயிலிருந்து வந்த பின்வரும் சொற்கள் அதனையே தொக்கு நின்று உறுதிப்படுத்துகின்றன:இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உலகத்திலேயே தன்னால் இயன்றவரை அதிக மாக உழைப்பது நோர்வே நாடே. அதேவேளை எல்லாத் தரப்புக்களின் கண்டனத்துக்கும் ஆளாவதும் எமது தேசமே.எங்கள் மீதான கண்டனங்கள் வாளிகளிலும் வந்து குவிகின்றன; குப்பைக் கூடைகளிலும் விழுந்து பெருகுகின்றன. நாம் தமது பிரச்சினையில் மிகக் குறைந்தள விலேயே அக்கறை காட்டுகிறோம் என்று தமிழர்கள் குறை சொல்கிறார்கள். அதேவேளை நாம் அளவுக்கு அதிகமாக இது தொடர்பில் செயற்படுகின்றோம் என்று இலங்கை அரசாங்கம் நினைக்கிறது என்று மனம் வெதும்புகிறார் அவர்.

எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளதும் கவலை கொடுத்துள்ளதுமான வன்னியின் மோசமான மனிதாபிமானப் பிரச்சினையைத் தீர்ப்பதில் முதற் கவனம் தேவை என்பதனை சொல்ஹெய்மும் தமது பேட்டியில் அழுத்திக் கூறியுள்ளார்.

இலங்கையில் இன்று உருவாகியுள்ள மனிதாபி மானப் பேரவலம், உலகத்திலேயே மிகமிக மோசமான தாகும். அங்கு போரில் சிக்குண்டுள்ள மக்களுக்கு உணவு, தண்ணீர் கிடைக்காமை ஒருபுறம் இருக்க, அந்தப் பிரதேசத்தில் நடைபெறும் குண்டுத்தாக்குதல் மிகமிகக் கொடுமையானதாகும். அங்கு வாழும் மக்கள் அதிலிருந்து தப்பிக்கொள்வதற்குப்பாது காப்பான வழிமுறை எதுவும் இல்லை பொது மக்கள் தங்கியுள்ள பகுதிகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இலங்கை அரசிடம் கேட்டுள்ளோம். அதேபோன்று மோதல் பிரதேசத்திலிருந்து வெளியே செல்ல விரும்பும் பொது மக்களை அனுமதிக்குமாறு விடுதலைப் புலிகளிடம் கேட்டுள்ளோம். ஆனால் எமது கோரிக்கையை இரு தரப்பினரும் கவனத்தில் கொள்ளவில்லை என்று சொல்ஹெய்ம் மனம் நொந்துள்ளார்.

சொல்ஹெய்ம் கூறிய மனிதாபிமான நெருக்கடி பெரும் பூதாகாரமாகி, பேராபத்து நிலைக்கு வந்து கொண்டிருப்பதை இலங்கைக்கு வந்து திரும்பிய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் நிபுணர் கலாநிதி வால்ட்டர் கலினும் எடுத்துக் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியாக அவர் இங்கு வந்திருந்தார்.
வன்னியில் பெரும் இரத்தக்களரி ஏற்படும் பேரபாயம் தோன்றியுள்ளது. எல்லா வழிகளாலும் அந்த இரத்தக்களரி உடனடியாகத் தடுக்கப்படவேண்டும் என்று கலாநிதி வால்ட்டர் கலின் ஜெனிவாவில் செவ்வாயன்று வழங்கிய வானொலிப் பேட்டியில் வலியுறுத்தி உள்ளார்.
வன்னியில் மனிதாபிமானப் பேராபத்து, பெரும் இரத்தக்களரியாக உருமாறிக் கற்பனைக்கும் எட்டாத அளவில் தமிழர்கள் செத்துமடிவது தடுக்கப்பட வேண் டும். இதனை இரண்டு தரப்புகளுக்கும் உணர்த்துவதில் ஐ.நா., நோர்வே, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சக்தி யுள்ள நாடுகள் அதிக சிரத்தை யும் கவனமும் எடுத்து வேகத்துடன் செயற்படுவதே இன்றைய தேவை.

அந்த வகையில், ஐக்கிய நாடுகள் சபை போன்ற அதிகாரமும் சக்தியும் மிக்க அமைப்பிடம் வன்னி மக் களின் பாதுகாப்பு ஒப்படைக்கப்படுவதே இப்போதுள்ள மனிதாபிமானப் பேரவலப் பூட்டை உடனடியாக உடைக்கக் கூடிய திறவுகோலாக அமையும்.

நன்றி
- உதயன் -

Wednesday, April 8, 2009

போர் முடிகிறது, அதற்குப் பின்....?

வடக்கில் வன்னியில் நடத்தப்பட்ட போர் முடிவுற்றுவிட்டதாக, விடுதலைப் புலிகள் தோற் கடிகக்கப்பட்டுவிட்டதாக அரசாங்கமும் அதன் அமைச்சர்களும் அதிகாரிகளும் கூறுகின்றனர். அதனையொட்டி சிங்களப் பிரதேசங்கள் குதூகலிக் கின்றன. அது இயற்கையானது; எதிர்பார்க்கவேண்டியது.

ஆனால் அடுத்தது என்ன? என்ற கேள்வி நாட்டு நல னில் அக்கறையுள்ள, நிதானமாகச் சிந்திக்கும் பிர சைகளின் மனதில் எழுவது இயல்பு.

அரசியல்வாதி என்பதால், நாட்டு நலனிலும் தமிழ்மக்களின் நலன்களிலும் அக்கறை உள்ளவர் என்ற வகையில், மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் மேற்குறிப்பிட்ட கேள்விக்குப் பதில் காண விழைந்திருக்கின்றார்.
தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பொருத்தமான அரசியல் தீர்வு ஒன்று உடனடியாக முன்வைக்கப்படவேண்டும். அவ்வாறு உகந்த தீர்வு ஒன்று முன்வைக்கப்படாவிட்டால், எதிர் காலத்தில் போர் வேறு வடிவத்தில் வெடிக்கும் என்று எடுத்துக்காட்டியுள்ளார் மனோகணேசன்.

அவர் மட்டும் இதனைக் கூறவில்லை. அரசி யல் விமர்சகர்கள், அரசியல் விவகாரங்களில் ஈடு பாடுடையவர்கள், சர்வதேச அரசியல் நோக்கர்கள் என்று பல தரப்பினரும் இந்தக் கேள்வியைத் தொடுத்துப் பதிலையும் கூறுகின்றனர்.

அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு, அரசமைப்புச் சட்டத்தின் 13 ஆம் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தமிழ் மக்களின் உரிமைகளை வழங்கு வதாக அமையவேண்டும் என்றும் வலியுறுத் தியிருக்கிறார் மனோகணேசன்.

போர் இப்போது முடிவுக்கு வரலாம். ஆனால் தமிழர் பிரச்சினைக்குப் பொருத்தமான அரசியல் தீர்வு முன்வைக்கப்படாவிட்டால், போர் வேறு வடி வத்தில் மீண்டும் வரும். இன்னுமொரு பிரபா கரன் தோன்றுவார் என்ற யதார்த்தத்தை விளம்பி யுள்ளார் மனோகணேசன். இது அவருக்கு மட்டு மல்ல, நியாயமாகச் சிந்தித்தால் அரசாங்கத் தரப்பில் உள்ளவர்களும் நிச்சயம் இந்தக் கருத்தை யதார்த் தத்தை உணர்வர்.

அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலை மையில் கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாகக் கூடிக் கலைந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு, மிக மிகக் கஷ்டப்பட்டு, இந்தியாவைச் சமா ளிக்கும் உள்நோக்குடன் மட்டும் தயாரித்த தீர்வு யோசனையும் "அம்போ" ஆகிவிட்ட சங்கதியும் வெளிப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் 13 ஆவது திருத்தம் சட்டத்திற்கு அப்பாலான தீர்வு யோசனையை அனைத்துக் கட்சிக் குழு தயாரித்ததாகவும் அதனை ஜனாதிபதி சரிபார்த்துவிட்டார் என்ற தகவலையும் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

யோசனையைச் சரிபார்த்த பின்னர், புதிய யோச னையைக் கிழித்து எறிந்துவிட்டார் என்ற தகவல் புதியது. இதுவரை வெளிவராத விடயம். இப்போது அது அம்பலமாகியிருக்கிறது.
75 சதவீதமான சிங்களப் பிரதிநிதிகளையும் 25 சதவீதமான தமிழ்ப் பிரதிநிதிகளையும் கொண்ட அனைத்துக் கட்சிக் குழு தயாரித்த தீர்வு யோச னையையே ஜனாதிபதி கிழித்து எறிந்தார் என்றால், இனிப் புதிதாக எந்தவித யோசனையை உட்புகுத்தி தீர்வு நகல் தயாரிக்கப்படும் என்று அர்த்தமுள்ள கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
இவ்வேளை இன்னொரு கேள்வியும் இயல்பாகவே எழுகின்றது.

இந்தியத் தலைவர்கள், வெறுமனே 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று நம்பகமான அதி காரப் பகிர்வு வழங்கப்படவேண்டும் என்று அடிக்கடி வாய் கிழியக் கத்துகிறார்கள். அவர்களால் போருக்கு உதவ முடியுமே அன்றி அரசியல் தீர்வு ஒன்றுக்கு உதவமுடியாது; உதவ விரும்பவில்லை என்ற நிலைமை இப்போது கலங்கித் தெளிகின்றது. அவ்வாறெனின் போர் முடிந்த பின்னரான காலப்பகுதியில் அரசு முன்வைக்கவுள்ள தீர்வு தமி ழர்களின் உரிமைகளை வழங்குவதாக, அவர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதாக அமையும் என்று எவ்வாறு எதிர்பார்ப்பது?

போர் முடிந்த பின்னர் அரசியல் தீர்வு பற்றி முயற்சிக்கலாம் என்று ஐ.நா.அதிகாரிகளும் மேற் குலக அரசியல்வாதிகள் சிலரும் அண்மைக் கால மாகக் கூறிவந்தனர். ஆனால்
தமிழ் மக்கள் வன்னியில் மனிதப் பேரவலத் தில் சிக்கியிருந்தபோது அவர்களுக்கு உதவ முடி யாத சர்வதேசம் வக்கற்று நின்கும் சர்வதேசம் தமிழர்களின் உரிமைகள் கிடைக்க உழைக்கும் என்று நம்புவது, காத்திருப்பது, எதிர்பார்ப்பது அர்த் தமற்றதே!

நன்றி
- உதயன் -

Tuesday, April 7, 2009

மீளாக் கடனில் மூழ்கும் பரிதாபம்

இன்னும் ஒரு வாரத்தில் சிங்களப் புத்தாண்டு பிறக்கின்றது. சந்தர்ப்பவசமாக இந்துப் புத்தாண்டும் அதேநாளில் வருவது வழமை. தமிழர்களின் புத்தாண்டு தை மாதப் பிறப்பு என்பது இப்போது பிரசித்தமாகி வருகிறது.

எப்படியோ சிங்கள, இந்துப் புத்தாண்டுகள் ஒரே நாளில் வருவதனால் இலங்கையில் சிங்கள, இந்துப் புத்தாண்டு தினம் இரண்டு இன மக்களாலும் நாடளாவிய முறையில் குதூகலமாகக் கொண்டாடப்பட்டது உண்டு. இம்முறை, இந்தப் புத்தாண்டு அவ்வாறு அமைய முடியாத துரதிஷ்டம்.

வன்னியில் ஆயிரக்க கணக்கில் தமிழ் மக்கள் பலியாகிக் கொண்டிருக்கும் வேளையில், நாட்டின் ஏனைய பகுதியில் வாழும் தமிழ் மக்கள் தமது இரத்தத்தின் இரத்தங்களின் இழப்புகளால் மனம் உறைந்து போயுள்ள நிலையில், புத்தாண்டுக் கொண்டாட்டம் என்பது எண்ணியும் பார்க்க முடியாத ஒன்று. அது நிற்க.

சிங்கள, இந்து வருடப் பிறப்பு நாள் வருவதற்கு முன்னர் அநேகமாக ஆட்சியில் உள்ள அரசுகள் பொருள்களின் விலைகளைக் குறைத்து தமக்குள்ள மக்கள் ஆதரவைப் பெருக்கிக்கொள்ள முனைவது தான் வழமை.

சில பல வருடங்களுக்கு முன்னர், குறிப்பிட்ட புதுவருட நாள் வருவதற்கு ஒரு மாத காலத்திற்கு முன்னரே, அரசுகள் உணவுப் பொருள்கள், ஆடை அணிகலன்கள் மற்றும் பாவனைப் பொருள்களில் விலைக்குறைக்கப்படுவது உட்பட ஏனைய சலுகைகள் குறித்து பிரசாரப்படுத்தியது உண்டு. ஊடகங்க ளும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது நடைமுறை.
ஆனால் இப்போது..... இந்த வருடத்தில்.....

சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு உட்பட பல அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகள் புத்தாண்டுக்கு முன்னர் அதிகரிக்கப்படும் என்று சமிஞ்ஞை காட்டி இருக்கிறார்கள் அரசாங்க அதிகாரிகள். அரசாட்சியின் போக்கும் அதனால் விளைந்த பொருளாதாரத் தாழ்வு நிலையும் இப்படி ஒரு எதிர் மறையான விளைவைத் தந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.
இந்த நாட்டின் பொருளாதாரம் உயர்நிலையை நோக்கிச் செல்வதாக, சென்றதாகக் கடந்த பல தசாப் தங்களாக பேச்சுக்குக் கூட ஒரு சொல்லை உச்சரிக் கும் நிலை இருந்ததில்லை. மத்தியவங்கி அதிகாரிகள் தமது "தொழில்நுட்ப"ச் சொற்களில் நாட்டின் பொரு ளாதாரம் சிறப்பு நிலை நோக்கிச் செல்வதாகக்கூறி தமது எஜமானர்களுக்கு ஆதரவு நிலைக்கருத்துக் கூறிவந்த போதிலும், உண்மை நிலைமை அதற்கு மாறுபட்டதாகவே இருப்பதுண்டு.
ஆயினும், சிங்களப் புதுவருடத்துக்கு முன்னதாக அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகள் எகிறப்போகின்றன என்பது புதிய "சகாப்த சாதனை" என்று கருதப்பட வேண்டியது. இருபது பொருள்க ளின் "செஸ்" வரியை அதிகரிக்குமாறு நிதி அமைச்ச ராக விளங்கும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள் ளார். அதன் பெறுபேறே பருப்பு,சீனி, வெங்காயம் போன்ற உணவுப் பொருள்களின் விலைகளை உயர்த்த வேண்டிய தேவையை உருவாக்கி இருப்பதாக நுகர் வோர் விவகார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித் திருக்கின்றன.
நாட்டின் விவசாயிகளின் நன்மை மற்றும் உள்நாட்டு உற்பத்திகளைப் பாதுகாத்தல் கருதியும் புதிய வரி நடைமுறைக்குக் கொண்டு வரப்படுவ தாகவும் மற்றொரு காரணம் சொல்லப்படுகிறது.

ஆனால் மேற்கூறிய காரணங்களைவிட, புதிய "செஸ்" வரி விதிப்புக்கும், அதனால் ஏற்பட்டுள்ள பாதக நிலைக்கும் அரசாங்கம் பெரும் பணச்செல வில் நடத்தும் போர் பிரதான காரணி என்பதனை மறைத்துவிட முடியாது.

மொத்தத்தில் நாட்டின் பொருளாதார நிலை அதள பாதாளத்துக்குச் சென்று கொண்டிருப்பதற்கு, மக்க ளின் வரிப்பணத்தில் பெரும்பகுதியை போர் விழுங்குகின்றது என்பதே உண்மை.

இதனை அரசு தரப்பில் ஒப்புக்கொள்ளும் வகை யில் கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கருத்துத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் செல்வந்த நாடுகளிலேயே, வல்லரசுகளிலேயே பொருளாதார நெருக்கடி ஏற்பட் டுள்ளது என்றால், எமது "சுண்டங்காய்" நாட்டில் அதனைத் தவிர்ப்பது சாத்தியமில்லை என்று கல்வியமைச்சர் கூறியிருப்பது ஏற்கத்தக்கதே.
எனினும் அதற்கும் மேலாக
நாட்டில் போர் நடைபெறுகிறது. பயங்கரவாதத் துக்கு எதிரான போரை அரசு நடத்தி வருகிறது. அத னால் பாதுகாப்புத் துறைக்கு நிதி தேவைப்படுகிறது. அதன் காரணமாகவே நாடு பொருளாதார நெருக் கடிக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது என்று அவர் உண்மை விளம்பியுள்ளார்.

போரின் விளைவு நிகழ்காலத்தில மட்டுமல்ல, எதிர்காலத்திலும் இன்னும் எத்தனையோ ஆண்டு களுக்கு இந்த நாட்டை பொருளாதாரப் படுகுழிக் குள்ளேயே வைத்திருக்கும்.
அதிலிருந்து மீட்சி பெறுவதென்பது இன்னும் 50 வருடங்களானாலும் இயலாத காரியம்!

நன்றி
- உதயன் -

Monday, April 6, 2009

தடுமாறும் சமர்க்களம் - வெல்லப்படாத போர்

போர் நிறுத்த ஒப்பந்தங்கள் கொடிய போரின் மற்றுமொரு முகம். இராஜதந்திர முயற்சியின் பிறப்பு.

அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள், சில விட்டுக்கொடுப்புக்கள், ஆசைகளை காட்டுதல், எதிர்பார்ப்புக்களை மெருகேற்றுதல், போன்றவற்றை நாசுக்கான முறையில் நகர்த்துதல் இராஜதந்தரத்தின் இன்னொரு பக்கம்.

இவற்றினூடாக விருப்பப்படாத விடயங்களைக் கூட தமது நலன்களுக்கு ஏற்ப இணங்க வைத்துக்கொள்ளுதல் குறிப்பிடத்தக்க அம்சம்.

இது உலக வரலாற்றில் நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. இவையனைத்தினதும் பின்ணனியில் பலமே மூலதனமாக உள்ளது.

பலத்தில் உயர்ந்தவனே இராஜதந்திர களத்திலும் உயர்வான்.

பலம் என்பது தனித்து அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ பலத்தை மையமாக கொண்டாலும் தனித்து அதற்குள் மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல.

இராஜதந்திரம் பேச வேண்டிய நேரத்திலெல்லாம் பேசுவது கிடையாது. பேசப்படுகின்ற விடயங்களிலெல்லாம் அர்த்தங்கள் இருக்காது.

தம்மைச் சுற்றி அராஜகங்கள் தலைதூக்கும் போது அமைதியாக இருப்பதுவும், பொருத்தமற்ற நேரங்களில் தேவையற்ற விடயங்களை கிளறுவதுவும் இராஜதந்திரம்தான்.

இவை எல்லாவற்றிற்கும் பின்னணியில் விரித்து வைத்திருப்து ஒரு பொறி. அதிலிருந்து மீள்வது கடினம்.

விடயங்களை ஆழமாக அவதானித்து தனது இலக்கில் மிக மிக கவனமாக செயற்பட்டு, சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப திறமையாக செயற்பட்டு அவ்வாறான ஒரு பொறியை வைக்கக் கூடியதுவே சிறந்த இராஜதந்திரமாகும்.

தனித்து அரசியலுக்கும், பொருளாதாரத்துக்கும் மட்டுமன்றி வெற்றிகரமான ஒரு போரை முன்னெடுப்பதற்கும் இராஜதந்திரம் துணை நிற்கும்.

மேற்கூறிய அம்சங்களை தன்னகத்தே கொண்ட இராஜதந்திரப் பொறிதான் 'ஈழப் போர் - ஐஐஐ" இன் முடிவு காலத்தோடு இலங்கைத் தீவை நோக்கி சடுதியாகவும் விரைவாகவும் நகர்ந்தது.

இந்த நகர்வுக்கு பல்வேறு பின்புலங்கள் இருப்பினும், தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களுடைய 'தலைவிதியோடு" தொடர்புபட்டமை முக்கியத்துவமானது.

தமது அவல வாழ்வுக்கு பரிகாரம் கிடைக்கும்: சுபீட்சமான வாழ்வு மலரும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் இருந்தார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை, பலஸ்தீன பேச்சுவார்த்தை முன்னெடுப்புகள் ஒரு 'தேங்குநிலை களமாக" இருந்தமையை சரிவர எடைபோட்ட போதும் 'நல்லதொரு மாற்றத்திற்கான" ஆரம்பப் புள்ளியாக போர் நிறுத்த ஒப்பந்தம் திகழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமக்கு இருக்கிறது, ஆதலால் நல்லதொரு மாற்றத்திற்கான ஒரு சந்தர்ப்பமாக இதனை நோக்குவோம் என்ற தொனிப்படவே போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான தமது கருத்தினை வெளிப்படுத்தியிருந்தது.

புதிய உலக ஒழுங்கின் போக்கிற்கு ஏற்ப, ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதைலைப் புலிகளிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தினூடாக புலிகள் சவால் நிறைந்த சர்வதேசமயப்பட்ட இராஜதந்திர களத்தை திறந்து வைத்தார்கள்.

அதிலும் கவனிக்கப்பட வேண்டிய பிரதான விடயம் யாதெனில், அந்த சவால் மிகுந்த இராஜதந்திர களத்தில் உலக வல்லரசுகளும், பிராந்திய வல்லரசுகளும் முக்கிய தரப்புகளாக இருந்தமையாகும்.

இந்தியாவுடனும் அதன் படைகளுடனும் போர் புரிவதற்கு புலிகள் தீர்மானித்த பிற்பாடு எடுக்கப்பட்ட அடுத்;த 'அபரிதமான" ஒரு முடிவாகவே இதனை நோக்க முடிகிறது.

வெற்றி தோல்வியே என்பதற்கு அப்பால், அந்த களம் திறக்கப்பட வேண்டியது, சளைக்காத போராட்டம் அவசியமானது என்பதுடன் அதற்கான ஆத்மபலம் உண்டு என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு முடிவாகவே இதனை கணிப்பிட முடிகிறது.

இந்த வேரோட்டத்தில் முளைவிட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்தவும், சர்வதேசத்தை திருப்திப்படுத்தவும், புலிகளைப் பலவீனப்படுத்தவும் மேற்கின் விசுவாசியான ஐக்கிய தேசிய கட்சியினால்; மேற்கின் அனுசரணையுடன் முன்னகர்த்தப்பட்டது.

சர்வதேச சமூகம் எனக் கூறப்படுவோருக்கு, ஈரான், ஈராக்குக்கு இணையான எண்ணை வளமோ, அல்லது ஆபிரிக்கா கண்டத்தில் குவிந்துள்ளது போன்ற கனிம வளங்களோ அல்லது கிழக்கு ஐரோப்பாவில் உள்ளது போன்ற தமது தேசிய நலனில் தாக்கத்தை உண்டுபண்ணக்கூடிய கேந்திர முக்கியத்துவமோ இலங்கைத் தீவுக்கு இல்லை.

ஆனால், அது போன்ற முக்கியத்துவம் இலங்கைத் தீவுக்கு இல்லாவிட்டாலும் கூட இலங்கைத் தீவை புறந்தள்ளி வைக்க முடியாத அளவுக்கு கணிசமானதும் அவசியமானதுமான முக்கியத்துவம் இலங்கைத் தீவுக்கு உண்டென்பதை எந்தக் கட்டத்திலும் மறுக்க முடியாது.

சீனா, இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ரஷ்யா, அமெரிக்கா என சுழல்கிற 'அமைதிப் புயலின்" சூட்சுமம் இலங்கைத் தீவு ஒதுக்கி வைக்கப்பட முடியாதது என்பதை வெளிப்படுத்துகிறது.

மேற்கூறிய சூட்சுமம், சிறீலங்காவினுடைய ஆட்சியாளர்களுக்கு அதிர்ஸ்டகரமான சாதகத்தன்மையை அள்ளி வழங்குகிறது.

அந்த தன்மையே சிறீலங்கா ஆட்சியாளர்களை எத்தகைய பொருத்தமற்ற தீர்மானங்களையும்;, முடிவுகளையும் எடுக்க தூண்டுகிறது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது என்ற முடிவானாலும் சரி, போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்ற முடிவானாலும் சரி மேற்கூறப்பட்ட அடிப்படையில்தான் மேற்கொள்ளப்பட்டது.

உதாரணமாக, அமெரிக்காவின் ஆசியுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

முடிந்த வரை புலிகளை பலமிழக்கச் செய்தல் என்ற பொறியுடன் அமெரிக்காவின் ஆதரவுடன் தனது சில அமைச்சர்களுக்கோ நாட்டின் ஜனாதிபதிக்கோ தெரியாமல் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

சர்வதேச பாதுகாப்பு வலையமைப்பு என்பது இதன் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். உண்மையில் இந்த திட்டமானது, புலிகளை பலமிழக்கச் செய்தல் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளிப்படையாக கூறும் திட்டத்தை விட அபாயகரமானது.

புலிகளுக்குள் குழப்பங்களினூடாக பிளவுகளை உண்டாக்கி பலமிழக்கச் செய்தல் என்ற அவர்களுடைய கன்னி முயற்சி வெற்றி பெற்றது.

அதனூடாக அமைப்பையும் அதன் தலைமையையும் பலவீனப்படுத்துதல் திட்டமாகும்.

அதன் காரணமாக புலிகளே போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக விலகிக் கொள்வார்கள். அதன் விளைவாக அவர்கள் முற்று முழுதாக சர்வதேசத்திலிருந்து ஒரங்கட்டப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தென்னிலங்கையில் பெருமளவில் காணப்பட்டது.

ஆனால், புலிகள் தொடர்பான எதிர்பார்ப்பு அவர்களின் வேறுபட்ட பிரதிபலிப்புகளால் மீண்டும் ஒருமுறை தவிடுபொடியானது.

ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய அமைச்சர்களாக இருந்த மிலிந்த மொரகொட அவர்களும், நவீன் திசநாயக்கா அவர்களும் 2005 இல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே புலிகளுக்குள் பிளவை ஏற்படுத்தியது தாம்தான் (ஐக்கிய தேசிய கட்சி) என்பதை பிரசார கூட்டங்களில் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தனர்.

அதற்கான விளைவுகளை ஜனாதிபதி தேர்தலில் அறுவடை செய்து, இன்று அதை வெளிப்படுத்தியவர்கள் கூட இல்லாமல் ஐக்கிய தேசியக் கட்சியும் பிளவுபட்டு, அதன் தலைமையும் பலவீனப்பட்டு நீண்டகாலமாக காட்டி காத்து வளர்த்த கட்சியின் தனித்துவமும் சிதைவடைந்து, இன்று கட்சியின் எதிர்காலமே கேள்விக்குள்ளாகியுள்ளது.

இவ்வாறான நிலையில், அதிகமான போர் நிறுத்த மீறல்களை தமிழீழ விடுதைலைப் புலிகளே மேற்கொண்டதாக சிறீலங்கா அரசாங்கத்தால் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதேவேளை, தமிழீழ விடுதைலைப் புலிகளுக்கு ஆத்திரமூட்டும் பல சம்பவங்களும் சிறீலங்கா படையினரால் மேற்கொள்ளப் பட்டிருந்தது.

அதில் 2007 நவம்பர் இடம்பெற்ற சு.ப.தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலும், மாவீரர் நாளன்று நடத்தப்பட்ட தாக்குதல்களும் முக்கியமானவற்றுள் சிலவாகும்.

மேற்குறிப்பிட்ட நிலையில், சர்வதேச சமூகம் தொடக்கம் உள்நாடு வரை தமிழீழ விடுதைலைப் புலிகளே போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக விலகும் முடிவை அறிவிப்பார்கள் என்ற எதிர்வுகூறல்கள் நிலவியிருந்தது.

ஆனால், அதற்கு எதிர்மாறாக அரசாங்கமே அத்தகைய முடிவை 2008 ஜனவரி 2 ஆம் திகதி அறிவித்திருந்தது.

இது யார் யாருக்கு என்ன செய்தது என்பதை விட அமெரிக்காவை அசௌகரியமடையச் செய்துள்ளது என அமெரிக்கா தெரிவித்த கருத்து முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது.

போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்ததனூடாக, தாம் அசௌகரியம் அடைந்துள்ளதை அமெரிக்க அரச திணைக்கள பேச்சாளர் சீன் மக்கோமக் (ளுநயn ஆஉஊழசஅயஉம) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார். "ருnவைநன ளுவயவநள றயள வசழரடிடநன டில வாந னநஉளைழைn".

இராஜதந்திரமென்பது கேவலமான விடங்களை மிக இனிமையான முறையில் சொல்வதும் செய்வதும் (னுipடழஅயஉல ளை வழ னழ யனெ ளயல வாந யௌவநைளவ வாiபௌ in வாந niஉநளவ றயல) என அமெரிக்க பல்துறை அறிஞ்ஞரான ஐசாக் கோல்ட்பேர்க் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவரை ஒருவர் நெருக்கடிக்குள் தள்ளும் பொறி மிகுந்த இராஐதந்திர களத்தில் யார் வென்றார்கள் என்பது ஒரு புறமிருக்க, 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் சமாதனமும், சுபீட்சமும் மலரும் என எதிர்பார்திருந்த மக்கள் மீண்டும் ஒரு தடவை ஏமாந்து போனார்கள் என்பது கவலையான விடயம்.

இத்தகைய நிலையிலேயே, சர்வதேச உறவுகளுக்கான திணைக்களம் என்ற ஒரு கட்டமைப்பை உருவாக்கி, அதற்கான பொறுப்பாளராக செல்வராசா பத்மநாதன் அவர்களை நியமித்ததனூடாக, சர்வதேச ரீதியாக கணிசமான காலப்பகுதி இடைவெளியாக இருந்த இடத்தை, தமிழீழ விடுதலைப் புலிகள் காலமறிந்து, உரியமுறையில் நிரப்பியுள்ளார்கள்.

களமும் புலமும் தீவிரமடைந்துள்ள ஒரு காலகட்டத்தில்தான், நோர்வேயின் அனுசரணையுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச உறவுகளுக்கான திணைக்களத்தின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் அவர்களுக்கும், மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. செயலாளர் ஜோன் ஹோம்ஸ் அவர்களுக்குமிடையில், தொலைபேசி மூலமான உரையாடல் இடம்பெற்றதையடுத்து சிறீலங்கா அரசாங்கத் தரப்பு மிகுந்த அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளதாக கொழும்புச் செய்திகளினூடாக அறிய முடிகிறது.

களமுனையில் தொடர்ச்சியான பின்னகர்வுகளில் ஈடுபட்டு வரும் புலிகள், இராஜதந்திர களத்தில் படி நிலை வளர்ச்சியடைந்து வருகிறார்கள் என்பது தெளிவாகிறது.

மூன்று தசாப்த காலமாக இலங்கைத் தீவில் தொடரும் இனக்குழும அரசியல் மோதுகை என்பது, என்றுமில்லாததவாறு சர்வதேச சமூகத்தின் 'கவனத்தை ஈர்ந்துள்ளது".

சிறீலங்கா அரசாங்கம் தொடர்பாக மென்மையான நிலைப்பாட்டை எடுத்து வந்த ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரித்தானிய மற்றும் இவற்றின் கூட்டணிகளின் நிலைப்பாட்டில், மாற்று நிலையாக்கம் ஒன்று சடுதியாக ஏற்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

இதனை 'புதிய மாற்றம் ஒன்றிற்கான ஆரம்பப் புள்ளியாக கருதமுடியும்."

சிறீலங்கா அரசாங்கமோ வன்னிக் களமுனையில் தமது கவனத்தை குவித்திருக்க, புலிகளோ சர்வதேச இராஜதந்திரக் களத்தில் முன்னகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

சுமார் ஐந்து தாசப்த்த காலங்களுக்கு மேலாக, அணிசேரா கொள்கையில் இருந்த சிறீலங்கா, மேற்குலகம் விரும்பாத ஒரு கொள்கையை கடைப்பிடிக்கப் போய், தனக்கிருந்த ஆதரவை இழந்தது மட்டுமன்றி, தமிழர் தரப்புக்கு சாதகமான சூழலுக்கான 'ஒரு வாசற்கதவை" உருவாக்கிக் கொடுத்துள்ளது.

இது தனித்து மேற்குலகின் சிறீலங்கா தொடர்பான கொள்கையை மாற்றியமைக்க வழிகோலியது மட்டுமன்றி, பெரும்பான்மையான புலம்பெயர் தமிழர்களையும் வௌ;வேறு வடிவங்களில் ஆக்ரோசத்துடன் அணிதிரள வைத்துள்ளது.

'ஓபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு", 'இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு" ஆகியன நீதியை நிலை நிறுத்தி உரிமையை மீளப்பெறுவதற்காக சட்டரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட, 'தமிழ் இளையோர் அமைப்பை" முதன்மையாகக் கொண்ட புலம்பெயர் தமிழர்களின் கவனயீர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.

தமது உறவுகள் தமிழர் தாயகத்தில் நாளாந்தம் படுகொலை செய்யப்படுவதால், வெகுண்டெழுந்த புலம்பெயர் தமிழர்களின் அறவழிப் போராட்டங்கள் சர்வதேச சமூகத்தின் மீது அழுத்தத்தை உண்டுபண்ண தொடங்கியுள்ளன.

இவற்றிற்கான சில உதாரணங்களே, கனடா நாடாளுமன்றத்தில் இலங்தை; தீவு தொடர்பாக இடம்பெற்ற அவசர கலந்துரையாடல் மற்றும் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாத போதும் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கத்தீவில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை ஆகும்.

இவை போன்ற நடவடிக்கைகளின் வெளிப்பாடே, போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்புகளும் உடனடியான மனிதாபிமான போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா. உள்ளிட்ட மேற்குலகு அழுத்தம் கொடுத்து வருவதாகும்.

சிறீலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளிலும் பார்க்க, புலிகளை முற்று முழுதாக அழித்து போரை முடிவுக்கு கொண்டு வருவதாக விடுக்கப்பட்ட காலக்கெடுக்கள் அதிகம்.

சிறீலங்காவின் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதி, பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை பேச்சாளர் போன்றோர் காலக்கெடு விதித்து களைத்துப் போன நிலையில், அவர்களின் வரிசையில் ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்கள், புலிகளுடனான போர் இன்னும் மூன்று வார காலத்துக்குள் முடிவுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்.

ஆனால், தென்னிலங்கையில் வெளிப்படையாகப் பேசப்படுகின்ற விடயங்களுக்கும், பாதுகாப்பு சபையில் பேசப்படுகின்ற விடயங்ககுக்;கும் இடையில் பாரிய வேறுபாடு நிலவுவதாக அறியமுடிகிறது.

அதனைத்தான், வன்னிக் களமுனையின் மிகப்பிந்திய களநிலவரமும் வெளிப்படுத்துகிறது.

சமர்களை தொடர்ச்சியாக வென்ற சிறிலங்காப் படையினரால், அவர்கள் நினைப்பது போலவோ அல்லது அவர்களின் அரசாங்கம் எண்ணுவது போலவோ போரினை வெல்ல முடியவில்லை.

புலிகளை நெருக்கடிக்குள் தள்ளிய போர், இப்போது, அதனை முன்னெடுக்கின்ற அரசாங்கத்தையே முட்டி மோதி பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்போகிறமைக்கான சாத்தியக்கூறுகள் தென்பட ஆரம்பித்துள்ளன.

களமுனையில் கையோங்குவதால் இராஜதந்திரத்தை வளைத்துப்போடுவதிலும் பார்க்க, இராஜதந்திர நகர்வின் ஊடாக களமுனையில் மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.

இதனைத்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நான்கம் கட்ட ஈழப்போரும் கட்டியம் கூறி நிற்கிறது.
- நி.பாலதரணி -