இலங்கை அரசாங்கம் மீது யுத்தமீறல் குற்றச்சாட்டு சுமத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டதற்காக, ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை பயங்கரவாதத்துக்குத் துணை போகின்றவராக சேறு பூசும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
வன்னியில் பாதுகாப்பு வலயத்துக்குள் 2800 இற்கும் அதிகமான அப்பாவிப் பொதுமக்கள் குண்டுகள் வீசிக் கொல்லப் பட்டிருப்பதாகவும், 7000 பேர் காயமடைந்திருப்பதாகவும், தனது அறிக்கையில் கூறியிருந்தார் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை.
அதேவேளை புலிகள் மீதும் அவர் குற்றச்சாட்டை முன்வைக்கத் தவறவில்லை.
இரண்டு தரப்புகள் மீதும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், இத்தகைய செயல்கள் போர்க் குற்றங்களாகக் கருதப்படத் தக்கவை என்பதையும் நினைவுபடுத்தியிருந்தார்.
இலங்கை அரசாங்கத்தை இந்த அறிக்கை கிலி கொள்ள வைத்தது.
உடனடியாகவே விழுந்தடித்துக் கொண்டு நவநீதம்பிள்ளையின் அறிக்கை பக்கச்சார்பானது என்றும் அரசின் மீதான அபாண்டமான குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் கூறியது இலங்கை அரசாங்கம்.
வெளிவிவகார அமைச்சின் செயலாளரான பாலித கொஹன்ன கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசும் போது 'ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை புலிகளின் ஆதரவாளராக இருப்பார் என்று தான் கருதவில்லை என்றும், அப்படியிருந்தால் அது பாரதூரமான விடயம்" என்றும் நாசூக்காக குற்றச்சாட்டைச் சுமத்தினார்.
அத்துடன் இந்த அறிக்கை, புலிகளினதோ அல்லது அவர்களினது ஆதரவாளர்களினதோ நிர்ப்பந்தத்தின் பேரில் விடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்று ஆரூடம் கூறவும் தவறவில்லை.
அதேவேளை மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவும் கூட, இது புலிகளின் அறிக்கையை ஒத்திருக்கிறது என்று கூறி புலிகளோடு முடிச்சுப் போடப் பார்த்தார்.
ஆனால் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவோ நேரடியாகவே விஷயத்துக்கு வந்தார்.
விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்துக்கு ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை துணை நிற்பதாக குற்றம் சாட்டினார்.
'புலிகளுக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகள் பற்றி உலகத்துக்கு தெரியப்படுத்த எவரும் முன்வருவதில்லை. ஆனால் அரசாங்கத்தின் மீது வீண்பழி போடப்படுகிறது.
புலிகளின் அறிக்கையை ஒத்ததாகவே ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையும் வெளியாகியிருக்கிறது" என்பதே அவரது குற்றச்சாட்டு.
அதாவது நவநீதம்பிள்ளை பயங்கரவாதத்துக்கு துணை போகிறவர் என்பதே அவரது கருத்தின் சாரம்.
இந்தக் கருத்தை நியாயப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இன்னொரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையும், புலிகளின் இணையத்தள அறிக்கைகளும் பெரும்பாலும் ஒத்துப் போகின்றன.
இந்த ஒன்றே சர்வதேச நிறுவனங்களில் புலிகள் ஊடுருவியிருப்பதற்குப் போதுமான ஆதாரமாகும்.
ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை இலங்கையின் இறைமைக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்திருப்பதாகவும்-
ஐ.நாவின் நம்பகத் தன்மையே கேள்விக்கு உள்ளாகியிருப்பதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியிருக்கிறார்.
இந்தக் கருத்துகளில் இருந்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கம் எத்தகைய விசனத்தைக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
கடந்த காலங்களில் இலங்கையின் நிலவரம் குறித்து ஆய்வு செய்ய வந்த ஐ.நா உயர் பிரதிநிதிகள், ஆணையாளர்கள் கூட இலங்கை அரசாங்கத்தால் மிகக் கேவலமான முறையில் விமர்சிக்கப் பட்டிருந்தனர்.
சிறுவர் படைச் சேர்ப்பு பற்றி ஆராய வந்த ஐ.நாவின் உயர் பிரதிநிதி, அரசாங்கப் படைகள் சிறுவர் படைச்சேர்ப்புக்கு உதவுவதாக குற்றம் சாட்டியதற்காக அவர் மீது பழி போடப் பட்டது.
இடம்பெயர்ந்தோர் நலன் குறித்து ஆராயவந்த ஐ.நாவின் உயர் ஆணையாளரையே, புலிகளின் ஏஜென்ட் என்றும் பயங்கரவாதி என்றும் விமர்சித்தார் அமைச்சர் ஒருவர்.
இப்படி சர்வதேச சமூகத்தின் மதிப்பு மிக்க பிரதிநிதிகளை கொச்சைப்படுத்தும், கேவலப்படுத்தும் அநாகரீக இராஜதந்திரப் பண்பாடு இலங்கை அரசுக்கு பழக்கப்பட்டுப் போனதொன்று தான்.
இந்தவகையில் தான் இப்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை பயங்கரவாதிகளுக்கு துணை போகிறவர் என்றும் சர்வதேச நிறுவனங்களில் ஊடுருவியிருக்கின்ற புலிகளின் ஆதரவாளர் என்றும் குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு சுமத்தியிருக்கிறது.
அப்பாவி மக்களை ஓட ஓடத் துரத்தி, அவர்களை சிறிய பகுதிக்குள் அடைத்து விட்டு நாளாந்தம் குண்டுகளைக் கொட்டி பத்து, நூறு என்று கொன்று குவிக்கின்ற இலங்கை அரசாங்கம், ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளரைப் பார்த்து பயங்கரவாத்துக்குத் துணை போகிறவர் என்று குற்றம் சாட்டியிருப்பது அபாண்டமானதே.
தமிழ் மக்கள் மீது எத்தகைய பயங்கரவாதத்;தை ஏவிவிட முடியுமோ, அந்தளவுக்கு மனிதாபிமானத்தை மலினப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இலங்கை அரசாங்கத்தினால், தன் மீதான குற்றச் சாட்டுகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
சர்வதேச சுமூகத்தை ஏமாற்றி நாடகம் நடத்தி தமிழின அழிப்புக்கு அவர்களையும் சாட்சியாக்க முனைந்த இலங்கை அரசு, இப்போது தனது முகத்திரைகள் கிழியத் தொடங்கியதும் சர்வதேசத்துக்கும் அதன் பிரதிநிதிகளுக்கும் பயங்கரவாத முத்திரை குத்தப் பார்க்கிறது.
தமக்கு வால் பிடிக்கவில்லை என்பதற்காக ஐ.நா.வின் மதிப்பு மிக்க பிரதிநிதிகளைக் கேவலப்படுத்துவது இலங்கை அரசுக்கு கைவரப் பெற்ற கலை.
இப்போது அது ஐ.நா.வையும் விட்டு வைக்கவில்லை. நாளை இதே குற்றச்சாட்டு அமெரிக்காவை நோக்கியோ இந்தியாவை நோக்கியோ பிரிட்டனை நோக்கியோ நீளலாம்.
இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் எவ்வளவு உதவிகளையும் கைகட்டி, கெஞ்சி நின்று பெற்றுக் கொள்ளும்.
ஆனால், அதைத் தட்டிக் கேட்க யாரும் வரக்கூடாதென்பதுதான் அதன் வழக்கம்.
தமிழ் மக்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டு வருகின்ற போது, சர்வதேசமே வேடிக்கை பார்க்கின்ற கட்டத்தில் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை தமிழ் மக்களை சற்று நிம்மதி கொள்ள வைத்தது.
உலகம் எமது மக்களின் துயரங்களைப் பற்றி கொஞ்சமேனும் திரும்பிப் பார்க்கிறது என்று அவர்கள் ஆறுதல் கொண்டனர்.
ஆனால், இலங்கை அரசோ இந்த அறிக்கையால் சீறிச் சினந்து கொண்டிருக்கிறது.
தமிழ் மக்களை அழிக்கின்ற கொடூரமான போரை மனிதாபிமான யுத்தம் என்று உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது இலங்கை அரசு.
ஆனால் இலங்கை அரசாங்கம் இதுவரை கூறி வந்த பொய்களை கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருந்த உலகம் இப்போது கொஞ்சமேனும் விழித்துக் கொண்டு கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளது.
இதைத்தான் இலங்கை அரசாங்கத்தால் பொறுக்க முடியாதுள்ளது. இந்த இயலாமையின், வெறுப்பின் விளைவாகவே இலங்கை அரசின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும், அமைச்சர்களும் ஐ.நா மீதும் மனித உரிமைகள் ஆணையாளர் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.
இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேசமே சதி செய்வது போன்று அது புலம்பிக் கொண்டிருக்கிறது.
சர்வதேச நிறுவனங்களையும், சர்வதேச சமூகத்தையும் புலிகளோடு தொடர்புடையவை, புலிகளின் அனுதாபிகள் என்று பட்டம் கட்டுவதும் பழிபோடுவதும் இலங்கை அரசாங்கம் கீழ்த்தரமான இராஜதந்திர முறைக்குள் சென்று கொண்டிருப்பதையே காட்டுகிறது.
அதேவேளை சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதையும் இலங்கை அரசின் இந்தப் புலம்பல்களில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
நன்றி:
- மாதுமை -
நிலவரம்
Thursday, April 2, 2009
நவநீதம்பிள்ளைக்கு பயங்கரவாத முலாம்: இலங்கையின் அசிங்கமான இராஜதந்திரம்!
Posted by tamil at 9:01 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment