Thursday, April 30, 2009

பேய் ஆட்சி செய்கிறது ‐ பிணம் தின்ன வாருங்கள்

கொலையிலும் கொடியது
இவர்கள் அழுகிறார்கள்
நள்ளிரவில் திகில் கொள்கிறார்கள்
வாய்திறந்து பேச மறுக்கிறார்கள்
தினந்தோறும் மரணிக்கிறார்கள்

சகோதர சகோதரிகள் கணவன்மார்கள், குழந்தைகள், சிறுவர்கள் சிறுமிகள், கர்ப்பிணித் தாய்மார்கள், இவர்களின் முன்னாலேயே தாக்கப்படுகிறார்கள். கொலை செய்யப்படுகிறார்கள். கைது செய்யப்படுகிறார்கள். வெள்ளை வானில் கடத்தப்படுகிறார்கள். பெண்கள், சிறுமிகள்; பாலியல் சித்திரவதைப்படுத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் 50, 60, என்ற தொகை மாறி 100 200 என 1000 பேர்வரைகூட கொல்லப்பட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன வன்னியிலிருந்து.

புலிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் கண்கள் மூடிக் கட்டப்பட்டு கைகள் முதுகுப்புறமாய் கயிற்றால் இறுக்கப்பட்டு இழுத்து இழுத்து முழங்கால்கள் வீதிகளிலும் தரையிலும் தேய்க்க இழுத்துச் செல்லப்படுகின்றார்கள். அதற்கப்புறம் இவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது என கூறுகிறார்கள். வயது வேறுபாடின்றி பெண்கள் குழந்தைகள் முதியோர் எல்லோரையும் முகாமுக்கு கொண்டு செல்கின்றார்கள் வர மறுத்தவர்கள் முடியாதவர்கள் அந்த இடங்களிலேயே சுட்டுக்கொல்லப்படுகின்றார்கள். காணமால் போய்க் கொண்டிருக்கிறார்கள், பதுங்குழிகள் புதைகுழிகளாக மாறிக்கொண்டு இருக்கின்றன. கர்ப்பிணிப்பெண்களின் வயிற்றில் எறிகணை வீச்சுக்கள் பாய்ந்து குழந்தைகள் சிதறுகிறது.

ஒரு பெண் கத்துகிறாள் தன் மூன்று மாதக்குழந்தையை கையில் ஏந்தியவாறு ஓடி ஒடி தன்னை சூழவுள்ளவர்களுக்கு காட்டுகிறாள் கத்துகிறாள் அவளின் கதறல் அழுகுரல் யாரின் காதிலும் விழவில்லை காரணம் இவற்றுக்கு குரல் கொடுக்க வலுவற்றவர்களாக கரடுமுரடான காடுகளிலும் கூடாரங்களிலும் மக்கள் சோர்வுடன் அழுக்கு படிந்தவர்களாய், அவலம் நிறைந்ததாய் கொலைகள் நிறைந்த அவர்களின் வாழ்வு. அங்குள்ள பெண்கள், குழந்தைகள், சிறுமிகள, தாய்மார்களுக்கு தேவையான அவசியப்பொருட்கள் மற்றும் பெண்களுக்கு அத்தியாவசியமாக மாதவிடாய்க்காலங்களில் தேவையான பொருட்கள் இன்மையினால் அவர்கள் மிகவும் கஸ்டத்தை அனுபவித்து வருகிறார்கள்.

இலங்கையில் இதுவரை நடந்து கொண்டிருக்கும் யுத்தங்கள் ஒவ்வொன்றிலும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் மிகவும் கொடுரமாகவே நிகழ்ந்து வந்துள்ளன. இப்போ பாதுகாப்பு வலயத்திற்குள் வந்த பெண்களை இலங்கை இராணுவம் கடத்தி பாலியல் வல்லுறுவு செய்து விட்டு அவர்களை கொலை செய்த சம்பவங்கள் செய்திகளாக வருகின்றன.

தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் பெண்விடுதலைக்கான வேலைத்திட்டங்களுடன் அமையவில்லை என்றாலும் தமிழ் இனத்தின்மீதான ஆதிக்க, ஆக்கிரமிப்பு வெறிக்கு எதிராக போராடும் அனைத்து பெண்போராளிகளும் வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டியவர்கள். தேசிய விடுதலைக்காய் இயக்கங்களில் தம்மை இணைத்துக்கொண்டு போராடிய போராடுகின்ற அனைத்துப் பெண்போராளிகளும் இந்த சமூகத்தின் பெண்கள் சம்பந்தமான கருத்தியலில் ஒரு மீறலைச் செய்திருக்கிறார்கள் என்ற விடயம் புலியெதிர்ப்புக்குள் மறைக்கப்பட முடியாதது. அதேநேரம் சமூகத்தின் ஆணதிகாரக் கருத்தியலுக்கு எதிராக எந்த தகர்ப்பையும் விடுதலைப் புலிகள் அமைப்பு செய்யாததால் சமூகத்தில் அவர்களுக்கான இடம் இயக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் அச்சமூட்டும் ஒன்றாக அமைந்துவிடும் வாய்ப்பு உள்ளது. கலாச்சாரத்தின் பெயரால் ஒழுக்கத்தின் பெயரால் அவர்கள் ஓரம்கட்டப்படும் கொடுமைகூட நிகழலாம்.

யுத்தத்தின்போது கைதுசெய்யப்பட்ட அல்லது கொல்லப்பட்ட போராளிகளின் ஆடைகளை அகற்றி தமது வக்கிரங்களை காட்டுகின்ற இலங்கைப் பேரினவாத அரசின் இராணுவத்தையும் அவர்களின் ஆணாதிக்க வெறியையும் கண்டித்தே ஆகவேண்டும். இதற்கு விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக இருக்கவேண்டிய அவசியமில்லை. ஒரு பெண்ணியவாதியாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதற்கு ஒரு மனிதஜீவியாக இருத்தலே போதுமானது. இன்னமும் மேலாக பெண்ணியவாதிகள் இதற்கு எதிராக கடுமையான குரலை எழுப்பியாக வேண்டும். இந்தக் கொடுமை எந்தத் தரப்பால் நிகழ்ந்தாலும் சரி தனது அரசியல் போர்வையை விலக்கிக்கொண்டு குரல்கொடுக்க முன்வரவேண்டும்.

இலங்கையில் தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் ஆண்களுக்காகப் பெண்களை பழிவாங்கும், பணயம் வைக்கும் நிகழ்வுகளை நாம் வரலாற்றில் கண்டுள்ளோம். தமிழினப் படுகொலைக்கு எதிராக பெண்கள் பல்வேறு நிலைகளில் போராட்டக் களத்தில் நின்று பங்கேற்று வருகின்றனர். தன்மீதான ஒடுக்குமுறைகளின்போது ஒரு பெண் தன்னை பெண்ணாக மட்டும் உணர்ந்து வாழ்வதில்லை. ஒரு சமூகஜீவியாகவும் தன்னை உணர்கிறாள். இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அவள் ஆயுதம் ஏந்திச் செயல்படுவதில் எந்த அதிசயமும் இருக்க முடியாது. ஆனால் போர் அது ஏற்படுத்தும் நாசவிளைவுகள், அது உருவாக்கும் எதேச்சதிகார அரசியல் எல்லாமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு ஆண்களைவிட பாலியல் சித்திரவதை உட்பட மேலதிகமான கொடுமைகளை வழங்குகிறது..

இலங்கை இராணுவத்தின் வக்கிரமான சொற்பிரயோகங்களைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இப்போ அது இறந்த பெண்ணுடல் மீது தங்களது பாலியல் வக்கிரங்களை கொட்டித்தீhத்த இராணுவமாகவும் அம்பலப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல பாலியல் வல்லுறவு செய்துவிட்டு யோனியில் கிரனைட் வைத்து கொலை செய்த காட்டுமிராண்டி இராணுவமாகவும் அது ஏற்கனவே வெளிப்பட்டிருந்தது. கர்ப்பிணிப்பெண்களை பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கிய இராணுவமாகவும் அது வெளிப்படுகிறது. இதற்கெல்லாம் அது தமிழ் சிங்களம் என்று பார்ப்பதில்லை. மன்னம்பேரியை நிர்வாணமாக்கி வீதி வீதியாக இழுத்துச் சென்று, பாலியல் சித்திரவதை செய்து, பின் கொலை செய்த வரலாற்று நிகழ்வு இலங்கை இராணுவத்தையே சாரும்.

மனித நாகரீகங்களை குழிதோண்டி புதைத்து நிகழும் காட்டுமிராண்டித்தனமான இச்செயல்களை கண்டிக்க முன்வராமல் பெண்ணியம், மாற்றுக்கருத்து பற்றி கதைப்பது அர்த்தமற்றது.. போலியானது. இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் தமிழ் மக்கள் மீதான இனஅழிப்பையும் இனவாதத்தையும் இதயத்துடிப்பாகக் கொண்டு இயங்கும் சிங்கள பேரினவாத அரசு செய்து வரும் இந்த மனித பேரவலத்தை எந்ந வித பிரக்ஞையும் அற்று... இத்தகைய சம்பவங்கள் சாதாரணமானவை, தவிர்;க்க முடியாதவை போரில் இவையெல்லாம் சகஜமானவை என்ற நிலையை ஒருவர் முன்வைப்பது ஒடுக்குமுறைகளை சகித்துக்கொள்வதற்குச் சமம்.

இந்த மனித பேரவலத்தை பார்த்து தங்களுடைய அரசியல் இலாபங்களுக்காகவும் விருப்பு வெறுப்புகளுக்காகவும் தனியே புலி ஆதரவு, புலிஎதிர்ப்பு என்ற வரையறைக்குள் வைத்து அரசியல் இலாபம் தேட முற்படும் இன்றைய மாற்றுக்கருத்துகள் எல்லாம் கள்ள மௌனம் சாதித்து பிணம் தின்னுகின்றன.

குழந்தைகள் இரத்த வெள்ளத்தில் கிடக்கிறார்கள். பெற்றவர்கள் துயரத்தில் கதறுகிறார்கள் ஆயிரமாயிரம் உயிர்கள் பிரிந்து கொண்டிருக்கின்றன. வீதியோ பதுங்கு குழியோ மரநிழலோ வெட்டவெளியோ பற்றையோ புதரோ எங்கும் அவர்கள் மடிந்துகொண்டிருக்கிறார்கள். இந்தப்; போரின் பிறப்பிடமான பேரினவாதத்திற்கு புதிய விளக்கம் கொடுத்தபடி, வடக்கும், கிழக்கும், தெற்கும் கைகோர்க்கும் நாள் வரும் என்கின்றனர் சமாதானப் பிரியர்கள். ஒரு சில தனிமனிதர்களின் முட்டாள்தனமான முடிவுகளால் ஒரு பாவமும் அறியாத ஒரு தேசத்தின் மக்கள் உயிரையிழந்து உடமைகளை இழந்து அவஸ்தைப்படுவதைப் புரிந்துகொள்ள மரணத்துள் வாழும் மக்களுக்கு எந்தத் தத்துவமும் தேவையில்லை.

மரணமுகங்களை இன்று இலங்கை அரச பயங்கரவாதம் தமிழ் மக்களிடம் குத்திவிடுகிறது. புலிகளும் மக்களும் வேறுபாடின்றி பலி கொள்ளப்படும் குரூர யுத்தத்தில் வன்னி அகப்பட்டிருக்கிறது. மக்களின் வாழ்வில் குருதி வடிகிறது. பேய் அரசாட்சி செய்கிறது. பிணம் தின்ன வாருங்கள்!!

நன்றி
- மூலம் - றஞ்சி சுவிஸ் -

0 Comments: