Sunday, April 19, 2009

அதிகாரப் பகிர்வு மிஞ்சுமா?

போர் முடிவுற்றதும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு கொண்டு வரப்படும் என்ற தோற்றம் ஒன்று சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசினால் ஏற் படுத்தப்பட்டிருக்கிறது.

மிகக் குறிப்பாக அரசமைப்புச் சட்டத்துக்கான 13 ஆவது திருத்தத்தின் கீழ், அதிகாரப் பகிர்வு வழங்கும் நடைமுறைகளை அறிமுகம் செய்யும் தீர்வுப்பொதி ஒன்று முன்வைக்கப்படும் என்ற தோரணையில் சர்வதேச வட்டாரங்கள் நம்பும் விதத்தில் அரச தரப்பில் தகவல்கள் அடிக்கடி வெளியிடப்படுவது உண்டு.

இந்தியாவும், பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்றவாறு, 13 ஆவது சட்டத்திருத்தம் தனது முயற்சியினால் ராஜீவ் ஜே.ஆர்.ஒப்பந் தத்தின் பிரகாரம் கொண்டுவரப்பட்டது என்ற "பிடியுடன்"" இலங்கை இனப்பிரச்சினைக்கு நம் பகத்தன்மை கொண்ட அதிகாரப் பரவல் என்ற பாடலை அடிக்கடி கீறல் விழுந்த இசைத் தட்டுப் போன்று ஒலித்துவருகின்றது.

இப்போது இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் காலம். அதன்போது காங்கிரஸ் கட்சி யின் வாக்கு வங்கியைத் தமிழகத்தில் பெருக்கும் உள்நோக்கத் தோடு, ஈழத்தில் தமிழர்களுக்கென இரண்டு மாநிலங்களை உருவாக்குவதற்கு இலங்கை அரசுடன் ஏற்பாடு செய்யப்படும் அல் லது பேச்சு நடத்தப்படும் என்று அமைச்சர் ப.சிதம் பரம் பெரும் தொனியில் பேசிவருகிறார்.
இத்தனைக்கும் அரசமைப்புக் சட்டத்தின் 13 ஆவது சட்டத் திருத்தத்தின்கீழ் இணைக்கப்பட்டி ருந்த வடக்கு கிழக்கு மாகாணசபை வடக்குத் தனியாகவும் கிழக்குத் தனியாகவும் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் இரண்டாகப் பிளக்கப்பட்டுவிட் டது. அப்போதெல்லாம், அதனைத் தடுப்பதற்கு ஏதேனும் மாற்று நடவடிக்கையைக் கூட உச் சரிக்காத அமைச்சர் சிதம்பரம், இப்போது தமது இயலாத் தன்மையை அல்லது ஒத்தூதும் பாணியை மாற்றி, இலங்கையில் இரண்டு மாநிலங்களுக்கு வகை செய்யப்படவேண்டும் என்று தேர்தல் "புலுமாசு" விடுகிறார்.
தமிழர் பிரச்சினைக்கு அவர்களுக்குரிய உரிமை களை வழங்கி அரசியல் தீர்வைக் காண்பதில் இலங்கை அரசு நேர்மையாகவும் விசுவாசமாக வும் இருக்குமாயின் இணைந்திருந்த வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டிருக்கமாட்டாது. நீதிமன்றத் தீர்ப்பில் வழங்கப்பட்டிருந்த வாசகத்திற் கேற்ப வடக்கு கிழக்கை நாடாளுமன்றத்தில் சட்ட மூலம் கொண்டுவந்து இணைத்திருக்கலாம். ஆனால் அது நடைபெறவில்லை. வடக்கு, கிழக்கு நடைமுறை ரீதியாக, நிர்வாக ரீதியாக இரண்டுபட ஏற்பாடாகியுள்ளது.

இத்தனைக்கும் பிறகு
இப்போது 13 ஆவது சட்டத்திருத்தத்தின் பிர காரம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பலவற்றை அவற்றிடம் இருந்து பிடுங்கி எடுத்து மத்திய அரசின்கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் அசுர வேகத்தில் ஒப்பேற உள்ளன.

இன்னும் இரண்டு நாள்களில் (நாளை மறு தினம்) உள்ளூராட்சி விசேட ஏற்பாடுகள் திருத் தச் சட்டமூலம் நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரப்படவுள்ளது.

மாகாணசபைகள் சட்டத்தின்கீழ் அவற்றுக்கு வழங் கப்பட்ட அதிகாரங்களை நடாளுமன்றத்துக் குத் தாரை வார்த்துக் கொடுப்பதற்கான சட்டமூலம் அது.

இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் மிகவும் பாதிக்கப்படப்போவது, இப்போது இயங் கிக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாணசபை என்று அச் சபையினர் சுட்டிக் காட்டுகின்றனர். வடக்கு மாகாண சபை இயங்குமெனில் அதுவும் இந்த வரிசையில் நிச்சயம் சேரும் என்பதில் சந் தேகம் என்ன?

அதிகாரப் பகிர்வுக்கு எதிரும் புதிருமான இத் தகைய ஏற்பாடுகள், இனப்பிரச்சினைக்கான அர்த்த புஷ்டியான தீர்வு ஒன்றை எவரும் எதிர் பார்க்க முடியாது என்று முரசறைகின்றன.
கொடுத்த "பிச்சையை" தட்டிப் பறிக்கும் இந் தச் செயல், அதிகாரப் பகிர்வு என்ற நிர்வாக ஆட்சிக்கோட்பாட்டை செல்லுபடியற்றதாக்கும் முயற்சி.

இத்தகைய ஒரு பின்புலத்தில் சமஷ்டி, சுயநிர்ண யம் என்ற அரசியல் கோட்பாடுகளை தூரவைத்து நுகர்ந்து பார்க்கவும் இலங்கை அரசு விரும்பாது என்பது உணர்த்தப்படுகிறது.
மறுபுறத்தில் அனைத்துக் கட்சி மாநாட்டின் மூலம் தமிழர் பிரச்சினைக்கு உகந்த தீர்வு ஒன்று வைக்கப்படும் என்று எதிர்பார்ப்பது எங்ஙனம்?

நன்றி
- உதயன் -

0 Comments: