Tuesday, April 7, 2009

மீளாக் கடனில் மூழ்கும் பரிதாபம்

இன்னும் ஒரு வாரத்தில் சிங்களப் புத்தாண்டு பிறக்கின்றது. சந்தர்ப்பவசமாக இந்துப் புத்தாண்டும் அதேநாளில் வருவது வழமை. தமிழர்களின் புத்தாண்டு தை மாதப் பிறப்பு என்பது இப்போது பிரசித்தமாகி வருகிறது.

எப்படியோ சிங்கள, இந்துப் புத்தாண்டுகள் ஒரே நாளில் வருவதனால் இலங்கையில் சிங்கள, இந்துப் புத்தாண்டு தினம் இரண்டு இன மக்களாலும் நாடளாவிய முறையில் குதூகலமாகக் கொண்டாடப்பட்டது உண்டு. இம்முறை, இந்தப் புத்தாண்டு அவ்வாறு அமைய முடியாத துரதிஷ்டம்.

வன்னியில் ஆயிரக்க கணக்கில் தமிழ் மக்கள் பலியாகிக் கொண்டிருக்கும் வேளையில், நாட்டின் ஏனைய பகுதியில் வாழும் தமிழ் மக்கள் தமது இரத்தத்தின் இரத்தங்களின் இழப்புகளால் மனம் உறைந்து போயுள்ள நிலையில், புத்தாண்டுக் கொண்டாட்டம் என்பது எண்ணியும் பார்க்க முடியாத ஒன்று. அது நிற்க.

சிங்கள, இந்து வருடப் பிறப்பு நாள் வருவதற்கு முன்னர் அநேகமாக ஆட்சியில் உள்ள அரசுகள் பொருள்களின் விலைகளைக் குறைத்து தமக்குள்ள மக்கள் ஆதரவைப் பெருக்கிக்கொள்ள முனைவது தான் வழமை.

சில பல வருடங்களுக்கு முன்னர், குறிப்பிட்ட புதுவருட நாள் வருவதற்கு ஒரு மாத காலத்திற்கு முன்னரே, அரசுகள் உணவுப் பொருள்கள், ஆடை அணிகலன்கள் மற்றும் பாவனைப் பொருள்களில் விலைக்குறைக்கப்படுவது உட்பட ஏனைய சலுகைகள் குறித்து பிரசாரப்படுத்தியது உண்டு. ஊடகங்க ளும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது நடைமுறை.
ஆனால் இப்போது..... இந்த வருடத்தில்.....

சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு உட்பட பல அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகள் புத்தாண்டுக்கு முன்னர் அதிகரிக்கப்படும் என்று சமிஞ்ஞை காட்டி இருக்கிறார்கள் அரசாங்க அதிகாரிகள். அரசாட்சியின் போக்கும் அதனால் விளைந்த பொருளாதாரத் தாழ்வு நிலையும் இப்படி ஒரு எதிர் மறையான விளைவைத் தந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.
இந்த நாட்டின் பொருளாதாரம் உயர்நிலையை நோக்கிச் செல்வதாக, சென்றதாகக் கடந்த பல தசாப் தங்களாக பேச்சுக்குக் கூட ஒரு சொல்லை உச்சரிக் கும் நிலை இருந்ததில்லை. மத்தியவங்கி அதிகாரிகள் தமது "தொழில்நுட்ப"ச் சொற்களில் நாட்டின் பொரு ளாதாரம் சிறப்பு நிலை நோக்கிச் செல்வதாகக்கூறி தமது எஜமானர்களுக்கு ஆதரவு நிலைக்கருத்துக் கூறிவந்த போதிலும், உண்மை நிலைமை அதற்கு மாறுபட்டதாகவே இருப்பதுண்டு.
ஆயினும், சிங்களப் புதுவருடத்துக்கு முன்னதாக அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகள் எகிறப்போகின்றன என்பது புதிய "சகாப்த சாதனை" என்று கருதப்பட வேண்டியது. இருபது பொருள்க ளின் "செஸ்" வரியை அதிகரிக்குமாறு நிதி அமைச்ச ராக விளங்கும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள் ளார். அதன் பெறுபேறே பருப்பு,சீனி, வெங்காயம் போன்ற உணவுப் பொருள்களின் விலைகளை உயர்த்த வேண்டிய தேவையை உருவாக்கி இருப்பதாக நுகர் வோர் விவகார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித் திருக்கின்றன.
நாட்டின் விவசாயிகளின் நன்மை மற்றும் உள்நாட்டு உற்பத்திகளைப் பாதுகாத்தல் கருதியும் புதிய வரி நடைமுறைக்குக் கொண்டு வரப்படுவ தாகவும் மற்றொரு காரணம் சொல்லப்படுகிறது.

ஆனால் மேற்கூறிய காரணங்களைவிட, புதிய "செஸ்" வரி விதிப்புக்கும், அதனால் ஏற்பட்டுள்ள பாதக நிலைக்கும் அரசாங்கம் பெரும் பணச்செல வில் நடத்தும் போர் பிரதான காரணி என்பதனை மறைத்துவிட முடியாது.

மொத்தத்தில் நாட்டின் பொருளாதார நிலை அதள பாதாளத்துக்குச் சென்று கொண்டிருப்பதற்கு, மக்க ளின் வரிப்பணத்தில் பெரும்பகுதியை போர் விழுங்குகின்றது என்பதே உண்மை.

இதனை அரசு தரப்பில் ஒப்புக்கொள்ளும் வகை யில் கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கருத்துத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் செல்வந்த நாடுகளிலேயே, வல்லரசுகளிலேயே பொருளாதார நெருக்கடி ஏற்பட் டுள்ளது என்றால், எமது "சுண்டங்காய்" நாட்டில் அதனைத் தவிர்ப்பது சாத்தியமில்லை என்று கல்வியமைச்சர் கூறியிருப்பது ஏற்கத்தக்கதே.
எனினும் அதற்கும் மேலாக
நாட்டில் போர் நடைபெறுகிறது. பயங்கரவாதத் துக்கு எதிரான போரை அரசு நடத்தி வருகிறது. அத னால் பாதுகாப்புத் துறைக்கு நிதி தேவைப்படுகிறது. அதன் காரணமாகவே நாடு பொருளாதார நெருக் கடிக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது என்று அவர் உண்மை விளம்பியுள்ளார்.

போரின் விளைவு நிகழ்காலத்தில மட்டுமல்ல, எதிர்காலத்திலும் இன்னும் எத்தனையோ ஆண்டு களுக்கு இந்த நாட்டை பொருளாதாரப் படுகுழிக் குள்ளேயே வைத்திருக்கும்.
அதிலிருந்து மீட்சி பெறுவதென்பது இன்னும் 50 வருடங்களானாலும் இயலாத காரியம்!

நன்றி
- உதயன் -

0 Comments: