Thursday, April 30, 2009

மேற்குலகின் ஐக்கியத்தை விரும்பாத இலங்கை

முல்லைத்தீவுக் களமுனையில் போர் விமானங்கள், கனரக ஆயுதங்கள் போன்றவற்றைத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்துவதில்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ள போதிலும் களத்தில் யுத்தம் தீவிரமாகத் தொடர்வதாகவும், பேரழிவு நாசம் எண்ணிப் பார்க்க முடியாத கொடூரமாக நீடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுத்த முனைப் பேரழிவுகள் தொடர்பாக சர்வதேசம் வெளிப்படுத்தும் சிரத்தை கவலை கரிசனை போன்ற வற்றை உதாசீனப்படுத்தியும், புறந்தள்ளியும் நடந்தபடி தன்னுடைய போர் முனைப்புப் போக்கைக் கொழும்பு தீவிரப்படுத்தியிருப்பது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தி ருக்கின்றது. இதனால், இலங்கை தன்னுடைய யுத்த வெறிப் போக்குக்கு முண்டுகொடுத்து, உதவி, ஒத்தாசை புரியும் சில "தோழமை" நாடுகள் தவிர்த்து ஏனையவற்றுடன் இராஜதந்திர முறுகலுக்கு ஆளாகும் நிலைமையும் ஏற் பட்டிருக்கின்றது.

குறிப்பாக மேற்குலகுடன், முரண்டு பிடித்து இழுபறிப்படும் நிலைமைக்கு இலங்கையின் இராஜதந்திரம் சென்றிருக்கின்றது.

இலங்கைப் போரினால் தமிழினத்துக்கு அப்பாவித் தமிழ் மக்களுக்கு நேர்ந்திருக்கும் பேரழிவுக் கொடூரங்கள் குறித்து சர்வதேச சமூகத்தின் மிக உயர்ந்த ஐக்கிய கட்டமைப்பான ஐ.நா.மன்றம் தெரிவித்த கருத்துக்களையும் கரிசனை யையும் கூட செவி மடுக்கவோ, கருத்தில் எடுக்கவோ கொழும்பு மறுத்துவிட்டது.

யுத்தமுனைப் பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கு நேரடியாகச் சென்று, அவர்களுக்கு அவசரமாகவும், அவசியமாகவும் தேவைப்படும் மனிதாபிமான உதவிகளை ஐ.நாவின் மனித நேயத் தொண்டு முகவர் அமைப்புகள் செய்வதற்கான அனுமதியைக்கூட இலங்கை அரசிடம் பெற முடியாத கையறு நிலையில் தமது இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு, வெறுங்கையோடு புறப்பட்டிருக்கின்றார் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா.ஆணையாளர் ஜோன் @ஹாம்ஸ்.

இனப்பிரச்சினையை ஒட்டிய யுத்த விவகாரத்தில் தனது வழிகாட்டு ஆலோசனைகளை ஒரேயடியாகப் புறக்கணித்து, மிதப்புடன் நடந்துகொள்ளும் கொழும்பின் போக்கு மேற்குலக இராஜதந்திரத்தை கடும் எரிச்சலுக்குள்ளும், விசனத்துக்குள்ளும்,சீற்றத்துக்குள்ளும் ஆழ்த்தியிருப்பதில் ஆச்சரியமில்லை.

இலங்கை விவகாரத்தை ஒட்டி அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் தமது பல்வேறு துறைசார் நிபுணர்களையும், நிர் வாகிகளையும் ஒருசேர அழைத்து ஆலோசிக்கும் அளவுக்கு நிலைமை சென்றிருக்கின்றது.

பிரிட்டன், பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, ஜேர்மன் போன்ற பல தரப்புகள் தெரிவித்திருக் கும் ஆலோசனைகளையும் ஒதுக்கித்தள்ளி யுத்த தீவிரத்தை மட்டும் முழு மூச்சாக முன்னெடுப்பதில் கொழும்பு விடாப்பிடியாக இருக்கின்றது.

இந்தப் பின்னணியில், இலங்கை விவகாரத்தை ஒட்டி, மேற்குலகம் ஐக்கியப்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கின் றது. இந்த ஐக்கியப் போக்கால் அதிருப்தி கொண்டிருக்கும் இலங்கை இவ்விடயத்தை மேற்குலகம் ஐக்கியமாகக் கையாள்வதை உடைத்து விடுவதில் தீவிரம் காட்டுகின்றது.

இலங்கையில் எழுந்துள்ள மனிதாபிமானப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் ஓர் எத்தனமாக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் ஒரே அணியாக இலங்கை வர முயன்றபோது அதற்கு அனுமதிக்காது, சுவீடன் வெளிவிவகார அமைச்சரின் விஜயத்துக்கு மாத்திரம் இலங்கை வேட்டு வைத்தது இந்த ஐக்கியத்தை உடைக்கும் நோக்கத்தில்தான் என்பது தெளிவு.

பிரிட்டனும், பிரான்ஸும் ஐ.நா.பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை வகிக்கும் வல்லரசு நாடுகள். சுமார் இருபத்தியைந்து ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையை விரைவில் ஏற்கப் போகும் தேசம் சுவீடன். இந்த மூன்று தேசங்களினதும் வெளிவிவகார அமைச்சர்கள் ஒரே சமயத்தில், இலங்கை வந்து, ஒன்றாக இங்கு விடயங்களைப் பார்வையிட்டு, கூட்டாக ஒரு முடிவு எடுத்தால் அது மேற்குலகின் ஏகமனதான முடிவாகத் தன் மீது திணிக்கப்பட்டுவிடும் என அஞ்சும் இலங்கை அதனால் அந்தக் கூட்டு முயற்சிக்கு எத்தனத்துக்கு வேட்டு வைத்திருக்கின்றது.

பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் மில்லி பாண்ட், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் குச்சனர் ஆகியோரின் வருகைக்கு பச்சைக்கொடி காட்டிய இலங்கை, சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ற்ட்டின் வருகைக்கு மட்டும் சிவப்பு சமிஞ்ஞை காட்டிவிட்டது.
மிக விரைவில் ஐரோப்பிய ஒன்றியத் தலைமைப் பத வியை ஏற்கவிருக்கும் ஒரு தேசத்தை இலங்கை இப்படி அவமானகரமாக நடத்தியமை ஐரோப்பிய ஒன்றியத்தைக் கடும் கோபத்துக்கு உள்ளாக்கியிருப்பதாகத் தெரிகின்றது. இந்நடவடிக்கையின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே எச்சரிக்கை வெளியிட்டிருக்கின்றது.
சுவீடனின் வெளிவிவகார அமைச்சரின் வருகையைத் தடுத்து நிறுத்தியமைக்கு "அதிக எண்ணிக்கையான அரசியல், இராஜதந்திரப் பிரமுகர்களை ஒரே சமயத்தில் வர வேற்பதற்கு இலங்கைக்கு இயலாத காரியம்" என்று நொண்டிச்சாட்டுக் கூறியிருக்கும் கொழும்பு, அதேசமயம் மறுபுறத் தில் தனக்கு அதிகளவில் உதவிகளை வழங்கி வரும் ஜப்பான் நாட்டின் விசேட தூதுவர் யசூஷி அகாஷியை மட்டும் விரும்பி வரவேற்க ஏற்பாடுகளைச் செய்கிறது. அவர் பெரும்பாலும் நாளை கொழும்பு வந்து சேருவார் என்றும் இலங்கையில் இரண்டு நாள்கள் தங்கியிருப்பார் என்றும் கூறப்படுகின்றது.

கொசோவாப் பிரச்சினையில் அப்பிராந்தியத்தின் சுயநிர்ணய உரிமையை உறுதிசெய்வதில் மிக நியாயமாகவும், உறுதியாகவும், முன்மாதிரியாகவும் செயற்பட்ட பிரமுகரே பிரான்ஸைச் சேர்ந்த குச்சனர் ஆவார். அவர் இப்போது பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சராகக் கொழும்பு வந்திருக்கின்றார்.

கொசோவா நியாயம், ஈழத் தமிழருக்கும் கிட்டுமா? ஈழத் தமிழர்கள் ஏங்கித் தவிப்பது அதற்குத்தான்........!

நன்றி
- உதயன் -

0 Comments: