தமிழர் தேசத்தின் விடிவுக்கான போராட்டம் களத்தில் உச்சம் பெற்றிருக்கும் இன்றைய நிலையில் அதன் வீச்சு பாரெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழன் ஒவ்வொருவன் மனதிலும் பெரும் வேட்கையை உண்டு பண்ணியிருக்கிறது.
அவ்வாறு ஒவ்வொரு தமிழனிடமும் ஏற்பட்டிருக்கும் வீச்சு 7 கோடி தமிழ் மக்களின் குரலாக நீதிச்சங்கின் காதுகளில் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது. அதுவே, அங்கு இரத்த வெறியாடும் சிங்கள ஆட்சியாளர்களின் பிடரிகளை பிடித்தாட்டும் பெரும் சக்தியாக மாறியிருக்கிறது.
களத்தில் நடப்பது என்ன?
நிலங்களை விழுங்கிக்கொள்வதால் மட்டும் ஒரு இனத்தின் இரண்டு தசாப்தகால விடுதலைப்போரை ஒடுக்கிவிடலாம். அவர்களின் உரிமைகளை நசுக்கி விடலாம் என்ற நப்பாசையில் சிங்கள தேசம் தமிழர் பிணங்களில் இன்று நித்தமும் ஊழிக்கூத்தாடி வருகிறது.
ஆண்டாண்டு காலமாக ஈழத்தமிழன் ஒவ்வாருவன் மனதிலும் கனன்று கொண்டிருக்கும் விடுதலை தீயை ஏதோ இரண்டு வருடங்களுக்கு மூச்சுப்பிடித்துக்கொண்டு போரிட்டு விட்டால் அணைத்து விடலாம் என்று சிங்கள தேசம் சிக்கன சிந்தனைக்குள் சிரித்து விளையாடுகிறது.
விடுதலைப் போராட்டத்தின் அரசியல் இலக்கு என்பது சமரில் தீர்மானிக்கப்படுவது அல்ல. அது அந்த மக்களின் எண்ணங்களில் ஏலவே தீர்மானிக்கப்பட்டது.
ஈழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல் இலக்கு பாரெங்கும் வாழும் 7 கோடி தமிழ் மக்களின் உள்ளத்தில் உருவான கோரிக்கை. பருவ காலத்துக்கு ஏற்ப பதவியேறும் சிங்கள ஆட்சியாளர்கள் ஆளாளுக்கு ஆட்லறி கூவி செல்வதால் தமிழனின் ஆன்மாவில் கலந்துவிட்ட விடுதலை மூச்சினை அணைத்துவிட முடியாது.
தமிழர் சேனை எப்போதும் ஆயுதம் தரித்திருப்பது அதன் பலத்தை நிரூபித்து உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கே தவிர அது வன்முறையே வழி என்று தவம் கிடக்கவில்லை.
இன்று ஈழ விடுதலைப் போராட்டம் அடைந்திருக்கும் பரிமாணம் புதியது. அது பார்ப்பவர்களுக்கு புதியது. ஆனால், புலிகளுக்கு பழையது. சிங்கள தேசத்துக்கும் அதன் கூட்டணிகளுக்கும் சிறிலங்காவுக்கு சுதந்திரம் கிடைத்ததை விட பெரிய மகிழ்ச்சியை அது ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால், உண்மையில் நடந்திருப்பது என்ன?
- நிலங்களை நாம் இழந்திருக்கிறோம். உண்மை. ஆனால் போராட்டதின் இலக்கை தொலைத்து விட்டோமா? இல்லை.
- தேசத்துக்காக சத்திய வேள்வி நடத்தும் மாவீரர்களை இழந்திருக்கிறோம் உண்மை. தமிழர் சேனையை இழந்து விட்டோமா? இல்லை.
- பெறுமதியான உயிர்களை இழந்ததால் வாட்டமடைந்துள்ளோம். உண்மை. ஆனால், அதற்காக எமது விடுதலை தாகத்தை இழந்துவிட்டோமா? இல்லை.
தமிழர் போராட்டத்தின் வடிவம் மாறியிருக்கிறது ஆனால் அதன் இலக்கு மாறவில்லை. முன்பிலும் பார்க்க பெருவீச்சடைந்து பாரெங்கும் பரந்திருக்கிறது. போராட்டம் உலகமயமாகியிருக்கிறது. இதுதான் உண்மை.
அது சர்வதேச நாடுகள் ஒவ்வொன்றையும் எமது பிரச்சினைக்குள் இழுத்து விழுத்தியிருக்கிறது. எமது கேள்விகளுக்கு அவை கட்டாயம் பதில் கூறியே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியிருக்கிறது.
தாயகத்தில் நடைபெறும் போரினை சர்வதேச அளவிலான போராட்டமாக மாற்றுவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வாரு தமிழனும் தற்போது சரியாக பயன்படுத்துவதின் விளைவுதான் இந்த பன்னாட்டு சமூகத்தின் பார்வை இடப்பெயர்ச்சி.
இன்று -
- ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.
- சிறிலங்கா நிலைவரம் குறித்து அமெரிக்காவின் ஆளும் கட்சி பிரதிநிதி ஹிலறி கிளிண்டன் சிறிலங்கா அரச தலைவருக்கு தொலைபேசி எடுத்து பேசுகிறார்.
- சிறிலங்கா நிலவரத்தை உன்னிப்பாக கவனிப்பதற்கு பிரித்தானிய அரசு கொழும்புக்கு தனது சிறப்பு தூதுவரை நியமிக்க முனைகிறது.
- மனித உரிமைகளை பாதுகாப்பு விடயத்தில் முறையாக நடந்து கொள்ளாவிட்டால் தமது வர்த்தக வரிச்சலுகையை நிறுத்தி விடப்போவதாக சிறிலங்கா ஐரோப்பிய ஒன்றியம் மிரட்டுகிறது.
- தம்மிடம் கடனெடுத்து போர் நடத்துவதற்கெல்லாம் காசு தர முடியாது என்று சிறிலங்கா அரசை சர்வதேச நாணய நிதியம் காட்டமாக கூறி தனது கொழும்பு அலுவலகத்தையே மூடி சென்றிருக்கிறது.
- சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பகம் முதல் சர்வதேச மன்னிப்புச்சபை வரை எத்தனையோ சர்வதேச அமைப்புக்கள் சிறிலங்கா அரசை வன்மையாக கண்டிக்க ஆரம்பித்து விட்டன.
இவை எல்லாம் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மேற்கொண்டு வருகின்ற தொடர்ச்சியான அறவழிப் போராட்டங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சியை தொடர்ச்சியாக தொட்டுப்பேச மேற்கொண்ட முயற்சிகளின் பெறுபேறு.
இந்த விளைவுகள் இன்று சிறிலங்கா அரசை உள்ளுர உலுப்பியிருக்கின்றன. இந்தியாவை கக்கத்தில் வைத்துக்கொண்டு தம்பாட்டுக்கு நினைத்தபடி கரணம் அடிக்கலாம் என்று சிங்கள தேசம் என்னதான் நினைப்பினும் மேற்குலகின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் கண்டனத்தையும் சம்பாதித்துக்கொண்டு ஒரு கட்டத்துக்கு அப்பால் செயற்படமுடியாது என்பது மகிந்த அரசுக்கு நன்றாகவே தெரியும்.
இதனால், இன்று சிங்கள தேசத்தக்கு கிலேசம் ஏற்பட ஆரம்பித்து விட்டது.
பெருவெற்றிகளை ஈட்டுவதாக கூறிக்கொண்டு தாம் நடத்தும் போர் பற்றி பேசுவதைவிட சர்வதேச அரங்கில் ஏற்பட்டிருக்கும் தமிழர் எழுச்சியை எவ்வாறு அடக்கலாம் என்பது பற்றியே சிறிலங்கா நாடாளுமன்றில் இன்று தினமும் வாதம் நடைபெறுகிறது.
அமைதிப் பேச்சுக்கு வந்துவிட்டு இன்று யுத்தம் பற்றி மட்டும் பேசும் ஜீ.எல்.பீரிஸ் முதல் இனவாத முதலைகள் ஜே.வி.பி.யினர் வரை எவருமெ இதற்கு விதி விலக்கல்லர்.
'வணங்கா மண்" அனுப்பும் வணங்கா தலைகளை எப்படி எல்லாம் ஒடுக்குவது என்பது குறித்து சகல நாடுகளிலும் உள்ள சிறிலங்கா தூதரகங்களுடன் நேரடி பேச்சுக்களில் இறங்கியுள்ள அரச தலைவர் மகிந்த, களத்துக்கு வெளியே தமிழின எதிர் போரை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பது குறித்து வியூகங்களை வகுத்துவருகிறார்.
இந்தநிலையில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களின் அடுத்த கட்டப்போராட்டம் மிகத்தெளிவாக இருக்க வேண்டும்.
இன்றையா நிலையில் ஈழ விடுதலைப் போராட்டத்தின் 75 வீதமான பகுதி புலம்பெயர்ந்து வாழும் தமிழ ;மக்களின் கைகளிலேயே உள்ளது. அந்த உண்மையை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து கொள்வது மிக மிக அவசியம்.
எங்கள் தலைவிதியை தீர்மானிப்பதற்கு இனியும் காத்திருப்பதற்கு எம்முன் காலம் பெரியளவில் இல்லை. எமக்கும் விடுதலைக்கும் இடையிலான தூரத்தை குறைப்பது என்பது ஒன்றும் மயாஜாலம் இல்லை. அது எமது கைகளில்தான் உள்ளது.
எமக்கான நீதி கேட்டு சர்வதேச நாடாளுமன்றங்களினதும் வாயில ;வரை சென்றுவிட்டோம். இந்தப்போராட்டம் தொடரும்போது அவர்கள் எங்களை உள்ளே அழைத்து பேசுவதற்கு அதிக நாட்கள் எடுக்காது. ஜனநாயக வழியிலான எமது போராட்டங்களை அவர்கள் எவ்வளவு தூரம் மதிக்கிறார்கள் என்பதை நாம் வாரா வாராம் ஒவ்வொரு நாட்டிலும் தெளிவாக காண்கிறோம்.
ஆகவே எமது எண்ணிக்கைகள் அதிகரிக்கும் போதுதான் அவர்களது கரிசனையும் அதிகரிக்கும். எமது கோரிக்கை ஒன்றதான். அது யாருக்கும் பாதகம் இல்லாத கோரிக்கை. பாதிப்பில்லாத கோரிக்கை.
எமது இந்த கோரிக்கைகளை உரக்கக்கூறும் போராட்டங்களில் கலந்துகொள்ளலாமா வேண்டாமா என்று தம்மை தாமே இன்னமும் கேள்வி கேட்டுக்கொள்பவர்களுக்கு ஒன்றே ஒன்றுதான் கூறமுடியும்.
தாயகத்தில் ஆக்கிரமிப்பு போருக்கு எதிராக - தனது மக்களை பாதுகாக்க - ஆயுதம் தாங்கி செல்லும் அந்தப் போராளியை பாருங்கள். தனக்கு இன்றோ அல்லது நாளையோ மரணம் நிச்சயம் என்ற சவாலுடன் அவன் அங்கு களமாடிக்கொண்டிருக்கிறான்.
அவன் யாருடைய விடுதலைக்காக போராடுகிறான். நிச்சயமாக அவனுக்குரிய விடுதலைக்காக அல்ல. இன்றைக்கோ நாளைக்கோ மரணத்தை தழுவப்போகிறேன் என்ற சவாலுடன் போராடுகிறவனுக்கு ஏன் விடுதலை?
அப்படியானால், அவன் யாருடைய விடுதலைக்காக போராடுகிறான்?
உரிமைக்குரல் கொடுப்பதற்கு வீதியில் இறங்குவதற்கே இத்தனை கேள்விகள் உங்கள் மனங்களில் இருந்தால் உரிமைக்காக உயிரை கொடுக்கப்போகும் அந்த வீரனின் மனதில் எத்தனை கேள்விகள் இருக்கும்?
அவன் அத்தனையையும் தாண்டிய போராளியாகவே அங்கு களமாடிக்கொண்டிருக்கிறான்.
இதனை மனதில் நிறுத்தி புலம்பெயர்ந்து வாழும் அனைத்து மக்களும் நெஞ்சுரத்துடன் இந்த செயலூக்கம் பெறவேண்டும்.
களத்தின் வலிகளை உணர்ந்து புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்படும் உணர்வுபூர்வமான போராட்டங்களே இலக்கினை இலகுவாக்கும்.
நன்றி
- ப.தெய்வீகன் -
தமிழ்நாதம்
Thursday, April 2, 2009
தேசத்தின் வலிகளை புரிந்து புறப்படுங்கள்
Posted by tamil at 6:20 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment