Wednesday, April 1, 2009

அகதிகளின் நடமாடும் சுதந்திரம்

வவுனியாவில் அரசாங்கம் அமைத்துள்ள நலன்புரி நிலையங்களில் அகதி முகாம்களில் உள்ள நிலைமைகளை வெளிப்படுத்த அரசாங்கம் விருப்பம் கொண்டிருக்கவில்லை. ஆனால், அங்குள்ள மக்களை சர்வதேச நியமங்களுக்கு ஏற்பக் கவனிக்காவிட்டால், அவர்களின் நலன்கள் பேணப்படாவிட்டால், ஐக்கிய நாடுகள் சபை வழங்கும் நிதியுதவிகளை நிறுத்த நேரிடும் என்று வெளிவந்த அறிவித்தலைத் தொடர்ந்து அரசாங்கம் உசார் அடைந்திருப்பதை அவதானிக்கமுடிகிறது.

வன்னியில் இருந்து முல்லைத்தீவில் இருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வரும் மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அகதிமுகாம்கள் சர்வதேசதரத்துடன் இருக்கவேண்டும் என்று இம்மாத மத்தியில் கருத்துத் தெரிவித்திருந்தார் ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ்.
அந்த எச்சரிக்கை வந்த பின்னர், அரசாங்கமும் அமைச்சர்களும் அதிகாரிகளும், வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் அகதிகளாகக் தஞ்சம் அடைந்துள்ள தமிழ்மக்களை தாம் நினைத்தவாறு, தமது மனம்போன போக்கில் பராமரிக்க இயலாது என்று எண்ணி இருக்கவேண்டும்.

அதனால் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்களை ஏற்பாடு செய்யப்பட்ட விஜயத்தில் அழைத்துவந்து, எல்லாம் நல்லனவாகவே, சர்வதேச மட்டத்தில் எதிர்பார்க்கப்படும் விதிமுறைகள் நியமங்களுக்கு ஏற்பவே நடை பெறுகின்றன என்று "நிறம்பூசி"க் காட்டப்பட்டது. வெளிநாட்டு ஊடகங்களின் பிரதிநிதிகள் பலரும் தாம் அங்கு சென்றவேளை சீர்ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிலைமைகளைப் பார்த்துவிட்டு திருப்திகரமான தகவல்களை வெளியிட்டிருந்தார்கள். அவற்றால் அரசாங்கத் தரப்புகளின் மனங்கள் "குளிர்ந்த" போதிலும் சிலர் உண்மையான, அங்கு நிலவும் யதார்த்தமான நிலமையை வெளிப்படுத்தாமல் இல்லை.
குறிக்கப்பட்ட சார்பு நிலை அறிக்கைகள், செய்திகளின் மத்தியிலும் மறு பக்கங்களும் திட்டுத் திட்டாக வெளிவந்தன, வந்துகொண்டிருக்கின்றன.

நலன்புரி நிலையங்களைப் பராமரிப்பதற்குத் தேவைப்படும் நிதியைப் பெறுவதற்கு அவை குறித்து மினுமினுக்கும் அறிக்கைகள் தேவை என்பதனை மனித உரிமைகள் அமைச்சரும் அரசாங்கமும் நன்றாகப் புரிந்துகொண்ட நிலையில்
ஊடகவியலாளர்களை மட்டுமன்றி சர்வதேச தொண்டு அமைப்புக்களின் நற்சான்றுப் பத்திரங்களையும் பெற்றுக் கொண்டால் தமது பக்கம் நிமிர்வுறும் என்ற "கணக்கோடு"
சர்வதேச மனிதாபிமானத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் வவுனியா அகதி முகாம்களுக்கு விஜயம் செய்து பார்வையிட அனுமதி வழங்கி வருகிறது.
அந்த வகையில், செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் ஐரோப்பிய அலுவலரான எஸ்கோ ஹென்ட்ரஸ் கின்ஸ்கிஜ் வவுனியா நலன்புரி நிலையங்களைப் பார்வையிடுவதற்கு அரசாங்கம் அவருக்கு விசேட அனுமதி வழங்கியிருந்தது.

கின்ஸ்கிஜ் புதுடில்லியில் வெளியிட்டிருக்கும் தகவல் கருத்து உண்மைநிச்சயமாக அரசுக்கு ஓர் "அதிர்ச்சி வைத்தியம்" என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
வவுனியா அகதிமுகாம்களில் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையினர் தங்கவைக்கப்பட்டுள்னர். சுகாதாரம், சுற்றாடல், நிலைகளில் மோசமான பிரச்சினைகள் காணப் படுகின்றன.

அகதி முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஏராளமான இராணுவத்தினர் காணப்படுகின்றனர். இடம்பெயர்ந்த அகதிகள் வெளியேசென்றுவர அனுமதி வழங்கப்படுவ தில்லை. சுதந்திரமாக நடமாடுவதற்கான சூழ்நிலையும் காணப்படவில்லை என்று
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் வைத்து கின்ஸ் கிஜ் தாம் பார்த்ததை, உண்மையைக் கூறியதைக் கேட்டதும் அரசாங்கத் தரப்பினருக்கு உடன் ஒவ்வாமை (அலர்ஜி) உண்டாகியிருக்கும்.

இன்றோ நாளையோ மறுப்பு அறிக்கையொன்று சாதகமான பிரசார உக்திகளுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம். அதுமட்டுமன்றி, ஜோன் ஹோம்ஸ் போலவே இவரும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்று விமல் வீரவன்ச "ரெடிமேட்" முத்திரை குத்தி விடுவார்!
வன்னியில் உலக உணவுத் திட்டமும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவும் மட்டுமே பணியாற்ற இப்போது அனு மதிக்கப்பட்டிருக்கும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஆகும். குறிப்பாக அளப்பரிய மனிதாபிமான சேவைகளை ஆற்றிவருகிறது செஞ்சிலுவை ஐ.சி.ஆர்.சி.

அது தெற்கின் பலரின் கண்களைக் குத்தியிருக்கும். இதோ ஒரு சந்தர்ப்பம் வந்துவிட்டது, விட்டுவைக்கலாகாது, என்று எண்ணிக்கொண்டு கணக்குப்போட்டு செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவை வன்னியில் இருந்து வெளியேற்றவேண்டும் என்ற சுலோகம் ஏந்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இடமில்லை!

அகதி முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஏராளமான இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதும், அகதிகள் வெளியே செல்வதற்கும் சுதந்திரமாக நடமாடுவதற்கான சூழ்நிலையும் இல்லையென்று கின்ஸ்கிஜ் கூறியிருப்பதும் கவனிக்கப்படவேண்டியவை.
மனிதாபிமான அடிப்படை உரிமைகளில் மிகுமுக்கி யமானவற்றில், இன்றியமையாதவற்றில் நடமாடும் சுதந்திரமும் ஒன்று. உறவினர்கள் அகதி முகாம்களில் தங்கியிருப் போரை சந்திப்பதற்கு அனுமதித்தால் விடுதலைப் புலிகள் அதனைப் பயன்படுத்தி அங்குசென்று குண்டுத் தாக்கதல் நடத்துவார்கள் என்று அரச தரப்பில் ஒரு காரணம் காட்டப்பட்டது; நியாயம் தெரிவிக்கப்பட்டது. அதேபோன்று அகதிகளின் சுதந்திரமான நடமாட்டத்திற்கான தடைக்கும் அரச தரப்பினர் ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துக் கூறக்கூடும்; கூறுவர். ஆனால் ஒருவரின் நடமாடும் சுதந்திரம் தடுக்கப்படுவது அவரது அடிப்படையான வாழ்வுரி மையை மறுப்பது என்பதனை கருத்திற்கொண்டு, அரசு தனது நோக்கையும் போக்கையும் மாற்றிக்கொள்ளுமா?

நன்றி
- உதயன் -

0 Comments: