Friday, November 30, 2007

தமிழ்த் தேசியத்திற்கு தேவை அனுதாபங்களல்ல...

சமீபத்தில் விடுதலைப் புலிகளின் அசியல்துறைத் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் சிறிலங்கா விமானப் படையின் தாக்குதலொன்றில் தற்செயலாக கொல்லப்பட்டார்.

விடுதலைப் புலிகளின் அதிர்ச்சி வைத்தியமான அனுராதபுரத் தாக்குதலால் நிலை குலைந்து போன சிறிலங்காவின் ஆளும் பிரிவினர், தமிழ்ச்செல்வன் அவர்கள் மீதான தாக்குதலை தமது நீண்டநாள் தாக்குதல் நகர்வுகளுக்கு கிடைத்த வெற்றியென கொண்டாடினர்.

தமது ஆட்சியை தக்க வைப்பதற்கு இராணுவ வெற்றிகளை மட்டுமே நம்பியிருக்கும் மகிந்த அணியினர், தமிழ்ச்செல்வன் அவர்களது மறைவை பெரியளவில் கொண்டாடியதில் நாம் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

தமிழ்ச்செல்வன் அவர்களது இழப்பு தமிழ் மக்கள் மத்தியில் கவலையையும், ஒருவிதமான சோர்வையும் ஏற்படுத்தியதை பரவலாக அவதானிக்க முடிந்தது. மக்களின் கவலையினதும் ஆதங்கத்தினதும் வெளிப்பாடானது, மீட்கப்பட்ட பகுதிக்கும் ஆக்கரமிக்கப்பட்ட பகுதிக்கும் இடையில் பெரியளவில் வேறுபாட்டை கொண்டிருந்தது.

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களின் உணர்வு வெளிப்பாட்டில் உள்ள வரையறையை நாம் விளங்கிக்கொண்டாலும் வெறும் அனுதாபங்கள் தேசியத்திற்கு தேவையற்றவை என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டியிருக்கிறது.

அதேவேளை சமீபகால புலிகளின் பொறுமையும், கிழக்கில் இழப்புக்களை தவிர்க்கும் வகையில் புலிகள் மேற்கொண்ட தந்திரோபாய நகர்வுகளும் தமிழ் மக்கள் மத்தியில் சோர்வையும் தடுமாற்றத்தையும் ஏற்படுத்தியது உண்மை.

இராணுவ தந்திரோபாய நகர்வுகள் நமது சாதாரண அறிவுகளுக்கு எட்டக்கூடியவையல்ல.

விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல வகையான இழப்புக்களை சந்திருக்கின்றனர். ஏற்கனவே கேணல் கிட்டு, கேணல் சங்கர், போன்றவர்களின் இழப்புக்களை அவர்கள்; எதிர்கொண்டிருக்கின்றனர். இவ்வாறான இழப்புக்கள் ராணுவ அர்த்தத்தில் மிகவும் கனதியுடையவையாகும்.

அதே வேளை துரோகங்களாலும், காட்டிக் கொடுப்புக்களாலும், வல்லாதிக்க தலையீடுகளாலும் பல இழப்புக்களை நாம் எதிர்கொண்டிருக்கிறோம்.

தெற்காசியாவின் பலம் பொருந்திய சக்தியும் உலகின் நான்காவது வல்லரசுமான இந்தியாவை புலிகள் எதிர்கொண்டிருக்கின்றனர்.

சுங்கான் பற்றி முடிவதற்குள் புலிகளை அழித்துவிடுவதான ஆதிக்க குரல்களை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். அவ்வாறான சந்தர்பங்களில் எல்லாம் மன உறுதியாலும், தலைவர் பிரபாகரனின் மதிநுட்ப வழிகாட்டலாலும் இழப்புக்களை உரமாக்கி வென்றிருப்பதே தமிழர் தேசத்தின் ஆயுத வழி போராட்ட வரலாறு.

தமிழர் தேசம் இழப்புக்களை சந்திக்கும் போதெல்லாம் நாம் இந்த உண்மையை மனதில் இருத்த வேண்டும்.

சிங்களம் புரிந்துனர்வு ஒப்பந்தத்தை ஒரு பொறியாக்கி தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க முற்பட்ட போது புலிகள் அதனை முறியடிக்கும் வகையில் சில தந்திரோபாய நகர்வுகளை மேற்கொண்டனர்.

குறிப்பாக ரணிலின் தலைமையிலான ஜக்கிய தேசியக்கட்சி, புலிகளை பேச்சுவார்த்தை என்ற வலைக்குள் நிரந்தரமாக சிக்க வைப்பதற்கான காய்களை நகர்த்தியது.

புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான புரிந்துனர்வு ஒப்பந்தமானது புலிகளின் இராணுவ வலுச்சமநிலையை அங்கீகரித்து உருவாக்கப்பட்ட ஒன்று.

உண்மையில் இந்த ஒப்பந்தத்திற்குள் ரணில் தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சி பிரவேசித்ததன் பின்னணியில், இரண்டு திட்வட்டமான காரணங்கள் இருந்தன.
ஒன்று புலிகள் மேலும் இராணுவ ரீதியாக முன்னேறுவதை தடுத்தல் மற்றையது பேச்சுவார்த்தையை ஒரு பொறியாக்கி புலிகளின் இராணுவ ஆற்றலை படிப்படியாக சீர்குலைத்தல்.

பலஸ்தீன மற்றும் கொலம்பிய அனுபவங்கள் இவ்வாறன படிப்பினைகளை வழங்கியிருக்கின்றன. இதற்குப் பின்னால் சில வல்லாதிக்க சக்திகளின் ஆலோசனை நிகழ்சி நிரலும் இருந்திருக்கக்கூடும். இந்த சவாலை உடைக்கும் வகையிலேயே புலிகள் ஆட்சி மாற்றமொன்றை விரும்பினர்.

சதாரணமாகப் பார்த்தால் ரணில் தீர்வுகளை தருபவர் போன்றும், தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை உள்ளவர் போன்றும் தெரியக்கூடும். ஆனால் உண்மை வேறு. ரணிலுக்கும் மகிந்தவிற்கும் இடையில் உள்ள வேறுபாடு மிகவும் தெளிவானது.

ரணில் நல்ல முகம் காட்டி கோரங்கள் புரிவார், மகிந்த தனது கோரத்தை நியாயப்படுத்த இனிய முகங் காட்டுவார். நமக்கான அரசியல் அர்த்தத்தில் இரண்டாவது வகையினர் நன்மை செய்வர் என்ற அடிப்படையிலேயே புலிகளின் ஆட்சி மாற்றமொன்றை விரும்பினர்.

புலிகளின் ஒவ்வொரு முடிவும் நீண்டகால நோக்கில் தமிழர் தேசத்திற்கு நன்மைகளை கொண்டு வரும் ஆற்றல் கொண்டது.

இதிலுள்ள துரதிர்ஸ்டவசமான நிலைமை என்னவென்றால் நமது படித்தவர்கள் என்று சொல்லுபவர்கள் கூட இந்த அடிப்படைகளை விளங்கிக் கொள்ள முயல்வதில்லை. இதனால்தான் அவர்கள் படித்தவர்களாக வலம் வரக் கூடியதாக இருக்கின்றதோ என்னவோ.

ரணிலின் புன்னகை பூத்த முகத்தில் மயங்கி 'இவங்கள் அவசரப்பட்டிட்டாங்கள்" என்று சலித்துக் கொள்வதை கேட்க முடிகிறது.

எப்போதுமே, புலிகளது முடிவில் தடுமாற்றங்களற்ற பார்வை நமக்கு அவசியம்.
அவ்வாறான பார்வையை சாமானிய மக்களுக்கு உணர்த்தும் வகையில் தமிழ்த்; தேசிய சக்திகள் தொழிற்பட வேண்டியிருக்கிறது.

இன்று தமிழர் தேசிய அரசியலானது, நமது விடுதலை அர்த்தத்தில் இறுதி கட்டத்தில் நிற்கிறது. சிங்கள ஒடுக்குமுறை வரலாற்றில் என்றும் இல்லாதவாறான ஒரு இராணுவ மேலாதிக்க அரசியல் இன்று உருவாகியிருக்கிறது.

புலிகளின் பொறுமைக்கு பின்னால் இருந்த நிகழ்சி நிரலும் இதுதான். பிரேமதாச காலத்தில் இவ்வாறானதொரு அரசியல் தெற்கில் நிலவியது. புலிகளை அழித்தொழித்தல் என்னும் பெரும் எடுப்பிலான நகர்வுகளில் சிங்களம் இறங்கியது.

இராணுவ ரீதியில் புலிகளும், விடுதலை அர்த்தத்தில் தமிழர் தேசமும் மிகவும் பலமடைந்ததுடன் எதிரிக்கு மிக மோசமான தோல்விகளின் வரலாறாகவும் அக்காலம் அமைந்தது.

அதிலிருந்து மீள்வதற்கான திட்டங்களுடன் சந்திரிக்கா குமாரதுங்கா வந்தார். சிங்கள பெரும் தேசியவாதத்தின் வரலாற்று ரீதியான போக்கானது, தமிழர்களை தமக்கு கீழ் அடிமைப்படுத்துதல் என்பதையே பிரதான திட்டமாக கொண்டிருக்கும். எந்த ஆட்சி வந்தாலும், எந்த சிங்கள தலைவர் வந்தாலும் இதுதான் தெற்கின் அரசியல் நிலைப்பாடாக இருக்கும்.

சந்திரிகாவும் தனது பங்கிற்கு இராணுவ ரீதியாக புலிகளை பலவீனப்படுத்தும் முயற்சியில் இறங்கினார்.

மிக மோசமான தோல்விகளின் காலமாக அவரது அரசியல் வரலாறு முடிவுற்றது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், சிங்கள மேலாதிக்கத்தின் கீழ் தமிழர்களை அடக்கி ஒடுக்குதல் என்பது புலிகள் இருக்கும் வரை ஒருபோதும் நடக்கப்போவதில்லை.

எனவேதான் சிங்களத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் போதெல்லாம், பெரும் எடுப்பில் புலிகளை பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகள் முடுக்கி விடப்படுகின்றன. இதன் பின்னால் தமிழர்களை அடிமைப்படுத்த வேண்டுமென்பதில் தீவிரமாக இருக்கும் சிங்கள பௌத்த மதபீடமும், சிங்கள ஆளும் வர்க்கமும் கைகோர்த்து நிற்கிறது. எந்த அரசு வந்தாலும் இந்த இரண்டு தரப்பினரும் புலிகளை அழித்தொழிக்க வேண்டுமென்பதில் சமரசமற்ற முறையில் அரசை ஆதரிப்பர்.

இப்பொழுது மகிந்த அவரது பங்கிற்கு அவரது முன்னோர்கள் காட்டிய வழியில் புலிகளை அழித்தொழிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார். சந்திரிகாவின் நப்பாசைக்கு இராணுவ ரீதியில் முண்டு கொடுக்க அவரது மாமனார் அனுருத்த ரத்வத்தைக்கு இருந்தது போன்று, மகிந்தவின் நப்பாசைக்கு முண்டு கொடுக்க அவரது சகோதரர்கள் வந்திருக்கின்றனர்.

மகிந்தவிற்கு பல கனவுகள் உண்டு. சந்திரிகா போன்று தொடர்ந்து தனது ஜனாதிபதி காலத்தை நிறைவு செய்ய வேண்டும், பண்டாரநாயக்கா குடும்பத்தின் அரசியல் ஆதிக்கத்தை இல்லாதொழித்து ராஜபக்ச குடும்ப அரசியலை நிலைநிறுத்த வேண்டும், சிங்கள மக்கள் மத்தியில் வரலாற்று நாகயனாக இடம்பெற வேண்டும் இப்படி பல கனவுகளின் சங்கமம்தான் யுத்தத்தில் புலிகளை தோற்கடிக்க வேண்டுமென்ற மகிந்தவின் ஆசை.

மகிந்தவிற்கு இன்னொரு ஆசையும் இருக்கக் கூடும். தனது ஜனாதிபதி காலத்திற்கு பின்னர் பிரதமர் ஆட்சியை கொண்டு வருவதன் மூலம் தொடர்ந்தும் அதிகாரத்திலிருத்தல். இப்படியொரு ஆசை சந்திரிகாவிற்கும் இருந்தது.

இதிலுள்ள சுவையான விடயம் என்னவெனில், சந்திரிகாவின் காலத்தில் அவரால் அதிகம் இழிவுபடுத்தப்பட்ட மகிந்தவிற்கு சந்திரிகாவிற்கு என்னவெல்லாம் ஆசைகள் இருந்தனவோ அதுவெல்லாம் மகிந்தவிற்கும் இருப்பதுதான்.

ஆனால் இதிலுள்ள வேடிக்கை என்னவெனில் எல்லாவற்றையும் தீர்மானிப்பவர்களாக புலிகள் இருப்பதுதான். எவரை சிங்களம் அடிமைப்படுத்த முற்படுகிறதோ, எந்த அரசியலை பலவீனப்படுத்த சதா முயன்று வருகிறதோ அவற்றுக்கு சொந்தக்காரர்களாகிய நாம்தான் சகலரது அரசியல் இருப்பையும் தீர்மானிப்பவர்களாக இருக்கின்றோம்.

இதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய நமது பலம்.

எந்தவொரு தேசம் தனது பலம் குறித்து தெளிவில்லாமல் இருக்கிறதோ அந்த தேசத்தை வீழ்த்த எதிரிகள் வெளியில் இருந்து வரவேண்டியதில்லை. இதுதான் நாம் நமது மக்களுக்கு சொல்ல வேண்டிய செய்தி.
-தாரகா (தாயகம்)-

ஐ.நாவுக்கு இது வெட்கம்!

"இலங்கை இனப்போரின் போக்கை ஆழமாக அவதானித்து வருகின்றவர்களுக்கு, வன்னியில் கடந்த செவ்வாயன்று அரசுப் படைகளின் தாக்குதல்களில் அப்பாவிப் பொதுமக் கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட நிகழ்வுகள் பேர வலம் தரும் மோசமான விளைவை உருவாக்கும் என்ற அச்ச உணர்வையே ஏற்படுத்துகின்றன'' என்று நேற்று இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
அந்த ஆசிரிய தலையங்கம் அச்சாகிக்கொண்டிருந்த சமயத்திலேயே நேற்று முன்தினம் மாலை கொழும்பு நுகேகொடையில் 19 அப்பாவிப் பொதுமக்களின் உயி ரைக் குடித்து, சுமார் நாற்பது அப்பாவிகளைப் படுகாயப் படுத்தி, பெருமளவு உடைமைகளுக்கு அழிவை ஏற்படுத் தும் கோரகொடூரகுண்டு வெடிப்பு இடம்பெற்றிருக்கின்றது.

கிளிநொச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விமானப் படை நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் நான்கு அப்பாவிகள் கொல்லப்பட்டமையைக் கண்டிப்பதுபோல
அடுத்தநாள் அநுராதபுரம் மாவிலாச்சியவில் நான்கு அப்பாவிகளும், கடந்த செவ்வாயன்று வன்னியில் கிளை மோர்த் தாக்குதலில் ஒன்பது பாடசாலை மாணவர்கள் உட்பட 11 அப்பாவிகளும், அதேநாள் விமானக்குண்டு வீச்சில் பத்துப் பொதுமக்களும் கோரமாகக் கொல்லப் பட்டமையையும் கண்டிப்பது போல
நுகேகொடைக் குண்டுத் தாக்குதலையும் வன்மையாகவும் கவலையோடும் கண்டிக்கிறோம்.
வன்முறைக்கு எதிரான நீதியாளர்கள் என்று தங்க ளைக் காட்டிக் கொள்ளும் தனித்தரப்புகள் ஒவ்வொன்றும் தொடக்கம், சர்வதேசத் தரப்புகள் வரை அனைவருமே இந் தத் தாக்குதல்கள் அனைத்தையுமே ஒரே விதமாகவே கண் டிக்க முன்வரவேண்டும். நாம் முன்னர் இப்பத்தியில் சுட்டிக்காட்டியிருப்பதுபோல "ஒரு கண்ணில் சுண்ணாம்பும் மறுகண்ணில் வெண்ணெய்யும் தடவுவது போல' இவ் விவகாரத்தில் நடந்துகொள்வது முறையற்றது.

வேண்டுமானால் ஆனந்தசங்கரி போன்ற அரசியல் பிர கிருதிகள் தென் னிலங்கை எஜமானர்களுக்கு வாலாட்டு வதற்காக, வன்னி யில் ஒன்பது மாணவர்கள் உட்பட பதினொரு அப்பாவிகள் கிளைமோர்க் குண்டில் கொல்லப்பட்டனர் என்ற தகவலைப் புனைகதையாகவோ, கட்டுக்கதையாகவோ காட்டிப் புறந்தள்ளலாம். ஆனால், ஐ.நா. போன்ற சர்வதேச நடுநிலை அமைப்புகள் அப்படி நடந்து கொள்ள முடியாது. அவை நீதியுடன் செயற்படுவது மட்டு மல்ல, நீதியுடன் செயற்படுகின்றவையாகத் தம்மைக் காட்டிக்கொள்ளவும் வேண்டும்.
ஆனால்
நுகேகொடையில் நடந்த கோரக் குண்டுவெடிப்பை யும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அமைச்சுக் குள் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்பையும் கண்டித்திருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், கிளிநொச்சியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத் தில் ஐ.நாவின் உலக உணவுத்திட்ட அலுவலகம் சேத மடையக் காரணமாக இருந்த விமானக்குண்டு வீச்சுக் குறித்து வெறும் கவலை சிரத்தை மட்டும் வெளியிட்ட தோடு அடங்கிவிட்டார். அந்தத் தாக்குதலில் அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்பட்டமை குறித்தோ, அதற்கு சற்று முன்னர் நடந்த கிளைமோர்த் தாக்குதலில் ஒன்பது மாணவர்கள் உட்பட பதினொரு பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்தோ கண்டனமோ கவலையோ தெரிவிக்கும் நியாயம் கூட அவருக்குத் தெரியவில்லை; நீதி புரியவில்லை.

இதனைத்தான் எமது நேற்றைய ஆசிரிய தலையங்கத்தில்
""பழிக்குப் பழி வாங்கும் தாக்குதல் போக்குக்கு அப் பாவிகள் இலக்காகும் இரையாகும் கொடூரம் இலங் கைத் தீவில் தீவிரம் பெறுமானால், இவ்விடயத்தில் பொறுப் புடனும், நீதியுடனும், நடுநிலையுடனும் செயற்படத் தவறிழைத்த சர்வதேசமும் அக்குற்றத்துக்குப் பெரும் பொறுப் பேற்க வேண்டி நேருவது தவிர்க்க முடியாதது.'' என்று குறிப்பிட்டிருந்தோம்.
அந்தக் குற்றச்சாட்டில் உள்ள வலுத் தன்மையை ஈழத் தமிழர் விடயத்தில் சர்வதேசம் நீதியாக நடந்து கொள்ளவில்லை என்று இரண்டு நாட்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரன் சுமத்திய குற்றச்சாட்டை நாற்பத்தியெட்டு மணி நேரத் திற்குள் உண்மை என்று தமது ஒரு பக்கச் சார்பான கண்டன அறிக்கை மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கின்றார் ஐ.நா. செயலாளர் நாயகம்.

கொழும்புக் குண்டு வெடிப்புகளில் கொல்லப்பட்டவர் களினதும் பாதிக்கப்பட்டவர்களினதும் குடும்பத்தவர்களுக் கும் அனுதாபம் தெரிவிக்க முன்வந்துள்ள ஐ.நா. செய லாளர் நாயகத்துக்கு, அதற்கு முதல்நாள் தமிழர் தாயகத் தில் அப்பாவிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல் லப்பட்ட ஒன்பது பாடசாலை மாணவர்கள் உட்பட இருபதுக்கும் அதிகமான அப்பாவிகளினதும் படுகாயமடைந்த டசினுக்கும் மேற்பட்ட பொதுமக்களினதும் குடும்பத்த வர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுதாபம் தெரிவிக் கும் நியாயம் தெரிந்திருக்கவில்லை.
"" எமது தேசியப் பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் நகர்வுகளும் நடவடிக்கைகளும் எம்மக்களுக்குத் திருப்தி தருவனவாக அமையவில்லை. இந்நாடுகள் மீது எம் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை இன்று தகர்ந்துபோயிருக் கிறது. இந்நாடுகளின் நடுநிலைச் செயற்பாட்டிலே இன்று பெரும் கேள்விக்குறி எழுந்திருக்கின்றது.'' என்று பிரபாகரன் கூறியதை இவ்வளவு விரைவில் ஐ.நா. செய லாளர் நாயகம் உண்மையாக்கிக் காட்டியிருக்கின்றார்.
அனைத்து மக்களுக்கும் பொதுவான நடுநிலை யான அமைப்பு என்று கூறிக்கொள்ளும் ஐ.நாவுக்கு இத்தகைய நிலைப்பாடு முற்றிலும் பாரபட்சமானது; வெட்கக் கேடானது.

uthayan.com

Thursday, November 29, 2007

"ஈழத்தமிழருக்கு இந்தியா துரோகம்-தமிழகம் பொறுத்துக்கொள்ளாது"

திருப்பூர் மாநாட்டில் வைகோ முழக்கம்

உலகில் முதலில் தோன்றிய மொழி எது என்று கேட்டால் அது தமிழ்தான் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியும். என்று பிறந்தது என்று அறிய முடியாத தமிழ் மிகுந்த பாரம்பரியத்தைப் பெற்றிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கான வரலாற்றைப் பெற்றிருக்கிறது என்பது மட்டுமல்ல அந்த மொழி சார்ந்த இன மக்களின் நாகரிகம் உலகிலுள்ள அத்தனை நாகரிகங்களையும் விஞ்சியது. காலத்தாலும் விஞ்சியது இதுதான். இதற்கு அடிப்படை. -நாகரிகம் உயர்ந்திருக்கிறது என்று சொன்னால் அவன் வாழும் இடம், அவன் வசிக்கும் இடம், அவன் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, உறைந்திடும் உறையுள், அவன் சார்ந்திருக்கக் கூடிய சுற்றுப்புறத்தில் அமைந்திருக்கிற சமூக அமைப்பு, அதனைக் கட்டி ஆளுகின்ற அரசுகள், பின்பற்றுகிற நெறிமுறைகள் இவைகளை வைத்துத்தான் ஒரு சமுதாயத்தின் நாகரிகத்தை நாம் எடை போட முடியும். அந்த விதத்தில் ஏழாயிரம் ஆண்டுகள், பத்தாயிரம் ஆண்டுகள் என்ற கணக்குகள் எல்லாம் இங்கே சொல்லப்பட்டன. பதினோராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டு கடலில் அமிழ்ந்து கிடக்கும் நகரம் காவிரிபூம்பட்டினம் என்பதை ஆய்வாளர்கள் தகுந்த ஆய்வைச் செய்து நமக்கு மெய்ப்பித்திருக்கிறார்கள். நாகரிகத்தில் இவ்வளவு சிறப்புகளைக் கொண்டிருந்த தமிழன் வர்த்தகம் என்பது பண்டமாற்று ஒரு காலத்திலே. நாணயங்கள் வருவதற்கு முன்பு பொருட்களைக் கொடுத்து பொருட்களை வாங்கிய காலம். அப்படிப் பொருட்களைக் கொடுத்து பொருட்களை வாங்குகிற பொழுது குறிஞ்சி, மருதம், நெய்தல், முல்லை, பாலை இப்படி வகுக்கப்பட்ட நிலங்களிலே வாழுகின்ற மக்கள் அந்தந்தப் பகுதிகளுக்கேற்ற தொழில்களில் ஈடுபடுகின்றனர். காட்டிலே உலவுபவர்கள் மான்களை வேட்டையாடுகிறார்கள். தேனும் கிழங்கும் கொண்டு வருகிறார்கள். தேனையையும் கிழங்கையும் கொண்டு வந்து கடைகளில் கொடுத்து விட்டு அவன் மானின் இறைச்சியும் கள்ளும் வாங்கி அங்கே பருகி உண்டு மகிழ்கிறான். நெய்தல் நிலத்திலிருந்து மீனைக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் மீனைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு அவர்கள் இந்த மதுவை வாங்கிப் பருகுகிறார்கள். இவன் குறிஞ்சிப் பகுதியிலிருந்து வேடன் மானின் இறைச்சியைக் கொண்டு வருகிறான். அவர்கள் இந்த இடத்திற்கு வந்து குளக்கரையிலே விளைந்திருக்கக் கூடிய அருமையான நெல்லை வாங்கிக் கொண்டு போகிறார்கள். இப்படி பொருட்களை உள்நாட்டுக்குள்ளே மட்டும் வாங்கினார்களா? ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் போய் பொருட்களை வாங்குகிறார்கள். அதற்கு அடுத்து நாணயம் வருகிறது. காசுகள் வருகின்றன. காசுகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உலவியதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கோட்பாட்டை முன்வைத்திருக்கிறீர்கள். உலகத் தமிழர் பேரமைப்பு என்ற பெயரை சொல்லும் தகுதியைப் பெற்றவன் தமிழன். கொலம்பசு புறப்படுவதற்கு முன்பு, வாசுகோடகாமா புறப்படுவதற்கு முன்பு இந்த உலகத்தின் பல பகுதிகளை தங்கள் காலனிகளாக ஆக்கிக் கொண்ட ஐரோப்பியர்கள் பல நாடுகளுக்குச் செல்வதற்கு முன்பு இந்த உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவன் தமிழன். அப்படிப் பயணம் செய்த காரணத்தினாலே தான் அவன் உலகின் பல நாடுகளுக்குச் சென்று திருப்பூர் நகரம் என்பதினால் சொல்லுகிறேன் இந்த துணிகளைத் தயாரிப்பதைப் பொறுத்தமட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய இலக்கியங்களில் இந்த துணிகள், பட்டினால் செய்த துணிகள், பருத்தி நூலால் செய்த துணிகள், அது மட்டுமல்ல மயிரினால் செய்யப்பட்ட துணிகள், இந்த துணிகள் மிக மென்மையாக இருந்தன. உலகத்தின் பல்வேறு நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன என்பதற்கும் சரித்திர ஆதாரங்கள் இருக்கின்றன. ரோம் கிரேக்கத்திலிருந்து வணிகர்கள் இங்கே வந்து வாங்கிச் சென்றார்கள். அவர்களுடைய நாணயங்கள் இன்று அகழ்விலே எடுக்கப்படுகின்றன. அப்படித் தயாரிக்கப்பட்ட துணிகளைப் பற்றிச் சொல்லுகின்ற பொழுது இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்படடு சொல்லுகிறான். இந்தியத் திருநாட்டின் தென்பகுதியாக இருக்கக் கூடிய இந்தப் பகுதியைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லுகின்றான். அவனுக்குத் தெரியவில்லை. செடியிலே விளையக்கூடிய பருத்தியிலிருந்து நூல் கிடைப்பது அவனுக்குத் தெரியவில்லை. அதனால் அவன் எழுதுகிறான்.

நம்முடைய நாடுகளிலே இருக்கக்கூடிய ஆடுகளிலே கிடைக்கக்கூடிய மயிர்களைவிட இந்த நாட்டிலே கம்பளி மரங்களிலே விளைகின்ற கம்பளி மென்மையானது. அது மிக விசேடமானது. இது இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்கிறான். நம் பருத்தி நூலைப் பற்றி சொல்லுகிற பொழுது செடிகளிலே மரங்களிலே கிடைக்கிற இந்தக் கம்பளி, ஆடுகளின் மயிரிலிருந்து கிடைக்கும் கம்பளியை விட தரம் வாய்ந்தது என்று எழுதுகிறான்.
சிலப்பதிகாரத்தில் இளங்கோ குறிப்பிடுகிற பொழுது எவ்வளவு சிறந்த வணிகம் அங்கு நிறைந்திருந்தது என்பதை சுட்டிக்காட்டுகிறான். முத்திரை பொறிக்கப்பட்டு பொருட்களுக்கு அக்மார்க் போடுகிறான். புலி பொறித்த பண்டம் நிறைந்திருந்தது சோழத் திருநாட்டிலே கருமவினையாளர்கள் என்பவர்கள் இந்த துணிகளைத் தயாரிப்பவர்கள். ஆக தொழில் என்று சொன்னால் துணி தயாரிக்கும் தொழில் இருந்தது. சிற்பம், ஓவியம் என்று வரிசையாகச் சொன்னார்கள். எத்தனையோ கடைகள் இருந்தன. உழவுத் தொழில் சிறப்புற்றிருந்தது. இங்கே கரும்பு விளைந்திருக்கிறது. அது தெரியாது கிரேக்கத்தில் இருந்தவனுக்கு. அலெக்சாந்தர் சொல்கிறான். எகிப்தைக் கடக்கிற போது சொல்கிறான். இன்னும் தொலைதூரம் செல்வோம். இந்துகுஷ் மலையைக் கடந்து செல்வோம். அங்கு ஒரு நாடு இருக்கிறது. அந்த நாட்டின் தெற்குப் பகுதிக்குச் செல்வோம். தேனைப் பிழிகின்ற தாவரங்கள் இருக்கிறது. அவைகளை உங்களுக்குத் தருகிறேன். அந்த தாவரங்களைப் பிழிந்தால் தேன் கிடைக்கும். கரும்பு அவனிடம் கிடையாது.

அப்படிப்பட்ட கரும்பும் நெல்லும் விளைந்த காலத்தில் பசியில்லா காலத்தில் அப்படி பசியோடு வருகிறவர்களுக்கு பசியைப் போக்க அட்சய பாத்திரத்தை அமுத சுரபியை ஏந்தினாள் மணிமேகலை என்று சொல்லும் காப்பியம் உருவாகிய காலத்தில் நான் வேதனையோடு தெரிவிக்க விரும்புகிறேன். இங்கிருந்து உணவு வெளியே அனுப்பப்பட்டது மட்டுமல்ல வெளியில் இருந்து பண்டமாற்று மூலம் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் என்று உள்ளது. ஈழத்து உணவும் வந்தது.

இதையெல்லாம் நான் குறிப்பிடு வதற்குக் காரணம் இளைஞர்களுக்கு உலகத்தில் யார் கடலோடிகள் என்று சொன்னால் கிரேக்கர்களை விட தமிழர்கள் தான் முதல் கடலோடிகள். கடலில் பயணம் செய்யக்கூடிய சாதனத்தைக் கண்டறிந்தவர்கள் அவர்கள். மரக்கலம் அமைத்தவர்கள். கப்பல் கட்டியவர்கள்.

உலக நாடுகளின் வரலாற்றைக் குறிப்பிடுகிறபோது நேரு குறிப்பிடுகிறார். ஆக மரக்கலம் வைத்து நாவாய்கள் வைத்து கப்பல்கள் கட்டி அந்தக் கப்பல்கள் மூலம் பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் வெளிநாட்டு கப்பல்கள் வந்து நங்கூரம் அடித்து தங்குவதற்கும் உரிய துறைமுகங்கள் அமைத்து அப்படி வருகின்ற கப்பல்களிலே உள்ள பொருட்கள் வருகின்றன. அரபு நாட்டு குதிரைகள் வருகின்றன. யவன தேசத்துப் பொருட்கள் வருகின்றன. ரோம் நாட்டிலிருந்து பொருட்கள் வருகின்றன. எகிப்திலிருந்து பொருட்கள் வருகின்றன. டைகிரீசு நதிக்கரை பகுதிகளில் சுமேரியர்கள் வாழ்ந்தார்கள். அந்தப் பகுதியிலிருந்து பொருட்கள் வருகின்றன. பண்டமாற்று நடக்கிறது. மலைகள் போல பொருட்கள் குவிந்து கிடக்கின்றன.
என்ன அழகாகச் சொல்லுகிறார். அந்த வெளிநாட்டுக் கப்பல்கள் வந்து காவிரிப்பூம்பட்டினத்து கடலில் அவை மிதக்கின்ற அந்தக் காட்சியை எண்ணிப் பார்க்கிற போது நங்கூரம் அடிக்கப்பட்ட கப்பல்கள் மிதப்பது குதிரை தாடையை அசைப்பதுபோல இருக்கிறது என்று எழுதுகிறான். அப்படிச் சொல்லுகிற போது ஈழத்திலிருந்து உணவு வந்தது என்று சொல்லுகிறான். இங்கும் தமிழன் செழிப்பாகவே இருந்தான். அங்கும் தமிழன் மகோன்னதமாகவே வாழ்ந்தான்.
இப்படியெல்லாம் வாழ்ந்த காலத்தில் உலகத்தின் பல்வேறு நாடுகளுக்குப் படையெடுத்து செல்ல முடிந்தது. கடற்கொள்ளைக்காரர்களை அடக்க முடிந்தது. கடற்படை அமைக்க முடிந்தது. கடற்படை சென்றது. சென்ற இடமெல்லாம் வெற்றிக் கொடி நாட்ட முடிந்தது. பறக்கிற கொடி புலிக்கொடி என்று கிழக்காசிய நாடுகள் பூராவும் புலிக்கொடி பறந்தது.
அப்படிபட்ட காலகட்டத்தில் உலகத்தின் பல நாடுகளுக்குச் சென்றான். வணிகம் நடத்தினார்கள். பல நாடுகளில் இன்றைக்கும் நம்முடைய வழிபாட்டுத் தலங்கள் போல அங்கு அமைக்கப்பட்டிருக்கின்றன.

இன்றைக்கு ஏதிலிகளாக புலம்பெயர்ந்த தமிழர்கள் பல நாடுகளில் வேதனைகளை சுமந்து கொண்டிருக்கிற இந்த நேரத்தில் உலகத் தமிழர்களுடைய கூட்டமைப்பு என்பது உலகத்தின் எந்தக் கோடியிலே தமிழனுக்கு துன்பம் நேர்ந்தாலும் அதைத் தடுப்பதற்கு முயலுகிறார்கள்.
இது தமிழகத்தின் எல்லைகளைக் கடந்த மேடை. அந்த அரசியல் எல்லைகளைக் கடந்த மேடைக்கு அழைக்கக் கூடிய அத்தனை தகுதிகளையும் படைத்த தலைவர் இவர். அவர் அழைத்ததினாலே நான் இங்கே வந்திருக்கிறேன். தந்தை பெரியாருக்கு அந்த தகுதி இருந்தது. அவர் தேர்தலை நாடவில்லை. வாக்குச்சாவடிகளை நாடவில்லை. வர்ணாசிரம கொடுமைகளை உடைத்தெறிவதற்காக உழைத்து உலகத்தில் எந்த சீர்திருத்தவாதியும் பெற முடியாத வெற்றியைப் பெற்றவர் தந்தை பெரியார் அவர்கள் என்று பேரறிஞர் அண்ணா பாராட்டுகின்ற தகுதியைப் பெற்றவர் தந்தை பெரியார்.

அதே போலத் தான் அத்தகைய தகுதிகளோடு இன்றைக்கு தன்னலமில்லாத - தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத - தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் தனக்கென எதையுமே நாடாமல் - தமிழர்களுக்காக அதுவும் மரணபூமியிலே மடிந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களின் விடியலுக்காக உழைக்கிறார்கள். ஆனால் இங்கே சொரணையற்ற சோற்றாலடித்த பிண்டங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறது ஒரு கூட்டம் இருக்கிறது என்று வேதனைப் படும் நேரத்தில் அந்த வேதனையைப் போக்குகின்ற ஒரு தலைவர் தான் எல்லா எல்லைகளுக்கும் அப்பாற் நின்று பணியாற்றுகின்ற ஒரு உத்தம தலைவன் அழைத்ததாலே அவரது அழைப்பிலே தமிழர்கள் அவர்கள் உரிமைகளுக்காக நடத்தப்படுகின்ற ஒரு மாநாடு தான் இந்த மாநாடு.
ஆக பல நாடுகளுக்குப் படையெடுத்துச் செல்லக் கூடிய தமிழன் கடற்படை நடத்தியவன் கடாரம் வென்றவன் பழந்தீவுகள் பன்னீராயிரத்திலே கொடியைப் பறக்க விட்டவன் இன்று அவனுடைய நிலைமை என்ன என்று கேட்டால் நான் ஒரு முறை சொன்னேன். இலங்கைத் தீவிலே தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். நாதியற்று சாகிறார்கள். எங்கள் சொந்த சகோதரிகள் வீதிகளிலே நாசமாக்கப்படுகிறார்கள். அந்த அவலக் குரல் இந்த அரசின் காதுகளிலே கேட்கவில்லையா? இந்தக் காதுகள் செவிடாகிப் போய்விட்டனவா? கண்கள் குருடாகிப் போய்விட்டதா?

எங்களுக்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது. இந்தியா என்ற ஒரு அமைப்பு ஏற்படுவதற்கு முன்பு இன்றைக்கு இருக்கின்ற இந்தியா என்கிற தேசம் அமைவதற்கு முன்பு தனித்தனி நாடுகளாகச் சிதறிக் கிடந்த காலத்தில் மாபெரும் பேரரசை நடத்தியவர்கள் தமிழர்கள். உலகத்தின் பற்பல நாடுகளை வென்றவர்கள் தமிழர்கள் என்ற வரலாறு உள்ளது. அதை பண்டித சவகர்லால் நேரு குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய நாட்டின் இராணுவ தளபதி தலைமை இராணுவ தளபதி தீபக் கபூர் நேற்றைய தினம் சொன்னதாக இன்றைய ஏடுகளில் செய்தி வந்திருக்கிறது. இந்திய நாட்டின் தலைமைத் தளபதி சொல்லுகிறார். இலங்கை இராணுவத்திற்கு நாங்கள் பயிற்சி கொடுக்கிறோம். அதோடு நிறுத்தவில்லை. இலங்கைக்கு ஆயுதங்கள் தருகிறோம். விமான எதிர்ப்பு பீரங்கிகள் தருகிறோம். விண்ணிலே பறந்து வருகின்ற விமானங்களை சுட்டுத்தள்ள தேவையான ஆயுதங்களைத் தருகிறோம். தீபக் கபூர் சொல்லியிருக்கிறார். நான் இந்திய நாட்டு பிரதமரைக் கேட்கிறேன். இலங்கைக்கு விமானத்தைத் தாக்குகின்ற விமான எதிர்ப்பு பீரங்கிகளைத் தந்திருக்கிறீர்களே, எதற்காக? யாரை எதிர்த்துப் போரிடுவதற்காக? இலங்கையின் மீது சீனத்து விமானங்கள் பறக்கிறதா? பாகிசுத்தான் விமானங்கள் பறக்கிறதா? அது விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சனை. ஆனால் இலங்கைக்கு இன்றைக்கு சீனமும் பாகிசுதானமும் ஆயுதங்கள் தருகின்றன. அப்படியானால் இலங்கைக்கு விமான எதிர்ப்பு பீரங்கிகள் தருவது எதற்கு? தமிழர்களின் விடுதலைப் புலிகளின் விமானங்களை தாக்குவதற்காகவா? அது தானே நோக்கம். இலங்கைத் தீவில் விடுதலைப் புலிகளின் விமானங்களைத் தாக்குவதற்கு அவர்கள் விண்ணில் பறந்து வந்து இனக்கொலை செய்கின்ற சிங்கள இராணுவ தளங்களை அழிக்கிற உலகம் இதுவரை கண்டும் கேட்டும் இராத வீர சாகசம் செய்கின்ற அந்த போர்க் களத்தில் அவர்களை எதிர்ப்பதற்கு எங்கள் வரிப்பணத்தில் வாங்கிய எங்கள் தமிழ்நாட்டு மக்கள் வரிப்பணமும் இருக்கிறது அந்த வரிப்பணத்தில் வாங்குகிற பீரங்கிகளை அனுப்புகிறீர்களா? அப்படி யானால் தமிழர்களை அழிக்க வேண்டும் என்பது தானே உங்கள் நோக்கம்.

இலங்கை அரசுக்கு விமான எதிர்ப்பு பீரங்கியைக் கொடுத்து சிங்களவனுக்கு உதவினால் விடுதலைப் புலிகளுக்கு நேரடியாக எல்லாவிதமான உதவிகளையும் செய்வதற்குத் தயார், எங்களிடம் ஆயுதம் இல்லை. இருந்தால் கொடுப்போம். பதிவு செய்து கொள். உன் புலனாய்வுத் துறை மூலம் பதிவு செய்து கொள். உனக்கு கண்காணி வேலை பார்க்க தமிழ்நாட்டு சர்க்கார் இருக்கிறது. காலம் இப்படியே இருக்காது. இந்த அநீதியை எதிர்த்து தமிழர்களின் உள்ளம் எரிமலையாகக் கொதிக்கிறது. 66 குழந்தைகள் செஞ்சோலையிலே சுட்டுத் குவிக்கப்பட்ட போது அந்தப் பச்சைக் குழந்தைகள் படுகோரமாகக் கொல்லப்பட்ட போது அகிலமே அழுதது. உலகமே கண்ணீர் வடித்தது. இந்திய அரசு கண்டித்ததுண்டா?

செஞ்சோலை சம்பவத்திற்கு மட்டுமல்ல தேவாலயத்திலே கிருத்துமசு பண்டிகைக்கு முதல் நாள ,புனித தேவாலயத்தில் மண்டியிட்டு செபித்துக் கொண்டிருந்தாரே நாடாளுமன்ற உறுப்பினர் ,,,, நெற்றிப் பொட்டிலே சுட்டுக் கொன்றானே உலகத்தில் அந்த அக்கிரமம் எங்காவது நடந்ததுண்டா? கண்டித்ததா இந்தியஅரசு? மனிதாபிமானம் செத்துப் போய் விட்டதா மத்திய அரசுக்கு? மனிதநேயம் மரத்துப் போய் விட்டதா? ரவிராசா துரைராசா நடராசா எம்.பி. நாடாளுமன்ற உறுப்பினர் பட்டப்பகலில் வீட்டு வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டார். கண்டித்ததா இந்த அரசு? உலகளாவிய பத்திரிகையாளர் துராக்கி நடுவீதியில் சுடப்பட்டாரே, கண்டித்ததுண்டா இந்த அரசு?

இந்த சூழ்நிலையில் தான் இந்தியா ஆயுதம் தருகிறது. தமிழ் இனத்திற்கு விரோதமாக தருகிறது. 1987இல் ஈழத் தமிழர்கள் மீது அவர்கள் விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காக அவர்கள் மீது ஒப்பந்தத்தை அக்கிரமமாக இந்தியா திணித்தது. அது தமிழர்களுக்குச் செய்த பச்சைத் துரோகம். மன்னிக்கமுடியாத துரோகம். அது மட்டுமல்ல. அர்கிரத்ஙிசிங்கை என் அருமைச் சகோதரர் விடுதலைப் புலிகளின் ஒப்பற்ற தலைவர் பிராபகரன் சொல்லியிருக்கிறார். அர்கிரத் எழுதியிருக்கிறார். பிரபாகரனைத் தீர்த்துக் கட்டுமாறு உத்தரவிட்டார்கள். இதற்கு என்ன சொல்லப் போகிறது இந்திய அரசு?

87இல் மறந்து விடாதீர்கள். 87-88இல். ஆபரேசன் செக்மேட் நடந்து கொண்டிருந்த காலத்தில் அதற்கும் முன்னதாகவே. தொடக்கத்திலேயே திலீபன் உண்ணாவிரதம் இருந்தானே அந்த காலகட்டத்திலேயே தீர்த்துக்கட்டச் சொன்னார்கள் என்று ஹர்கிரத் சிங் அவர்கள் சொல்கிறாரே, இதே மாதிரி ஒரு நிலைமை இந்தியாவில் வேறு ஒரு மாநிலத்தில் ஏற்பட்டிருக்குமானால் என்ன ஆயிருக்கும்? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். எரிமலை மாதிரி வெடித்திருக்கும் அந்த மாநிலம். இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை ஹர்கிரத்சிங் வைக்கிறார். இத்தனைக்கும் பிறகு அவர்களுக்குத் துரோகம் செய்கின்ற வேலை நடந்து கொண்டிருக்கிற வேளையில் பசியாலே சாகிறார்களே, பட்டினியால் சாகிறார்களே, மருந்தில்லாமல் தமிழ் மக்கள் சாகிறார்களே என்று இந்த மண்ணிலே தமிழ்நாட்டிலே மனிதாபிமான உணர்வும் தமிழ் உணர்வும் கொண்ட மக்கள் அவர்கள் உழைத்த உழைப்பினால் கிடைத்த ஊதியத்தில் சிறுகச் சிறுகச் சேமித்ததைத் திரட்டிக் கொடுத்து அதன் மூலம் வாங்கப்பட்ட அந்தப் பொருட்கள் மருந்துகள் அனுப்ப இதுவரை அனுமதி வழங்கவில்லையே மத்திய அரசு. இந்த நிமிடம் வரை அனுப்பாததற்கு காரணம் என்ன?

உலகத்தின் எந்த நாட்டிலும் செஞ்சிலுவைச் சங்கம் இயங்கலாம். இரண்டாம் உலகப் போரில் செஞ்சிலுவைச் சங்கம் இயங்கியது. நாசிகள் கொட்டமடித்த நாடுகளுக்கிடையே கூட செஞ்சிலுவைச் சங்கம் உலவியிருக்கிறது. ஆனால் பஞ்சசீலம் பேசிய பாரதத்தின் நிலைமை என்ன? செஞ்சிலுவைச் சங்கம் மூலம் தானே அனுப்ப வேண்டுமென்று அண்ணன் நெடுமாறன் கேட்டிருக்கிறார்? ஏன் அனுப்ப மறுக்கிறது? சாகிற தமிழனுக்கு உணவு கொடுக்கத் தயாராக இல்லை. தமிழனைச் சாகடிக்க இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பாயா? அறவழியிலே தானே போராடுகிறார் அண்ணன் நெடுமாறன். தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்து வதற்குத் தானே பயணம் மேற்கொண்டார்? காந்திய வழியில் அற வழியில் அகிம்சை வழியில் எங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்துகிறோம் என்று சென்னையில் உண்ணாவிரதம் இருந்த போது அந்த உண்ணாவிரதப் பந்தலைப் பிரித்ததே இந்த காவல் துறை உண்ணாவிரதம் அறிவித்த நிமிடத்திலிருந்து என்னுடைய கவலை எல்லாம் உண்ணாவிரதம் இருக்க விடக்கூடாது என்பதிலே. ஏன்? இன்னொரு நெடுமாறன் நமக்குக் கிடைக்க மாட்டார். அவரை இழந்து விடக்கூடாது என்பதற்காக. (பலத்த கைதட்டல்) ஆகையினால் அவரை நிர்ப்பந்தப் படுத்தினோம். அவரை நிர்ப்பந்தப்படுத்தி உண்ணாவிரதம் இருக்கக் கூடாது என்று சொன்னோம்.
உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக சீர்கெட்டு வருகிறது. அவர் ஏற்கனவே இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டவர். நொடிப்பொழுதிலே ஏதாவது ஆகிவிடக் கூடாதே என்ற மனக் கவலையின் காரணமாகத் தான் அந்த உண்ணாவிரதத்தை நிறுத்தும்படி நிர்ப்பந்தப்படுத்தினோம். அந்த உண்ணாவிரதத்தை நிறுத்துவதற்கு நாங்கள் முயன்றோம். உண்ணாவிரதம் இருந்த போது அவரைப் பற்றி அக்கறை இருந்ததா? பொறுப்பிலே இருப்பவர்களுக்கு . அதை மதிக்கின்ற பண்பாடு இருந்ததா? இதே போன்று தான் தீட்சித் நடந்து கொண்டார் திலீபன் உண்ணாவிரதம் இருந்த போது. போர் விளைந்ததே அதனால் தான்.

சிறுகச் சிறுகச் செத்துக் கொண்டிருந்தான் திலீபன். திலீபன் அழைப்பது சாவையா இந்தச் சின்ன வயதில் இது தேவையா என்று உணர்ச்சிக் கவிஞர் குரல் கேட்டு நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு எதிரில் அத்தனை மக்களும் அழுது கொண்டிருந்த அந்த நேரத்தில் இந்தியாவினுடைய பிரதிநிதியான தீட்சித் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்குச் சென்று பார்க்க அவருக்கு மனமில்லை. உங்கள் கவுரவத்தையாவது கொஞ்சமாவது பாதுகாத்துக் கொள்ளக் கூடாதா?
மத்திய அரசையும் கேட்கிறேன். மாநில அரசையும் கேட்கிறேன். செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் அனுப்ப வேண்டிய உணவும் மருந்தும் அனுப்பாமல் இருப்பதற்கு என்ன காரணம்? ஏன் அனுப்பவில்லை? உலகத்தில் எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட கொடுமை நடக்க முடியாது. மத்திய அரசாங்கம் ஆயுதம் வழங்குகிறது என்றால் மத்திய அரசைக் குற்றம் சாட்டுகிறேன். தமிழர்களுக்கு துரோகம் செய்வதாக. அத்துடன் உள்ள அத்தனை கட்சிகளையும் நான் குற்றம் சாட்டுகிறேன். நாங்கள் அதே கூட்டணியில் இடம் பெற்றிருந்திருக்கிறோம். ஆனால் அமைச்சரவையில் இடம் பெறாத அந்தக் காலத்திலும் இந்திய இலங்கை இராணுவ ஒப்பந்தம் போடப் போகிறார்கள் என்ற செய்தியை அறிந்தவுடன் அந்த நிமிடத்திலிருந்து கனலில் விழுந்ததைப் போல துடித்து அதைத் தடுப்பதற்கு எளியவனான நான் என்னாலான எத்தனையோ முயற்சிகளை செய்தேன். உலக மக்களுக்கு அவ்வப்போது என்ன நடக்கிறது என்பதைத் தெரிவித்தேன். இதற்கு முன்பேயே ஒரு மறைமுக இரகசிய ஒப்பந்தம் இராணுவ ஒப்பந்தம் இலங்கை அரசோடு போடப்பட்டுள்ளது. இந்திய கடற்படையும் இலங்கை கடற்படையும் புரிந்துணர்வு இரகசிய ஒப்பந்தம் போட்டுள்ளது. அங்கே இனத்தைக் காக்க மரணத்தோடு விடுதலைப் புலிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழீழ உரிமை காக்கும் போரில் கிழக்கு விழுந்து விட்டது என்று எவனோ பைத்தியக்காரன் சொல்வதை நம்பி விடாதீர்கள். கிழக்கு விழாது கிழக்கு அங்கே வெளுத்து விடும். போர் மூளும். கார்த்திகைக்குப் பிறகா அல்லது எப்போது என்று எனக்குத் தெரியாது. விரைவிலே ஒரு பெரிய யுத்தம் வரப்போகிறது. அந்த யுத்தத்திலே விடுதலைப் புலிகள் வெல்வார்கள். (பெருத்த கரவொலி)
தமிழ் ஈழத்தை ஆக்கிரமித்து இருக்கிற இராணுவம் நாசிகள் எப்படி அவர்கள் ஆக்கிரமித்து இருந்த லெனின்கிராடைவிட்டு வெளியேறினார்களோ அதைப் போல யாழ்ப்பாணத்தை விட்டு விரட்டப்படுவார்கள் சிங்களர்கள். அப்படிப்பட்ட ஒரு போர் மூளுகிற ஒரு சந்தர்ப்பத்தில் தன்மானம் உணர்வு மிக்க தமிழர்களே தோள் தட்டி வாருங்கள் அவர்களுக்கு ஆதரவு தருவதற்கு வாருங்கள். உலகத்தில் எந்த விடுதலை இயக்கமும் செய்ய முடியாத சாதனையை விடுதலைப் புலிகள் மாத்திரமே செய்திருக்கிறார்கள். என்ன காரணம்? அது தான் நான் சொன்னேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே பருத்தித் தொழிலிருந்து கப்பல் கட்டும் தொழிலிலிருந்து அத்தனை தொழில்களையும் செய்தவ னல்லவா தமிழன். ஆகவே தான் உபகரணங்கைைத் தயாரித்து விமானங்களையே தயாரித்து விட்டான். அதைச் சாதிக்கவும் முடிகிறது. புறப்பட்டு கண்ட இடத்தில் அல்ல குறிப்பிட்ட இடத்தில் இடத்தைத் தேர்ந்து எடுத்து துல்லியமாக இது தான் தாக்குதல் நடத்த வேண்டிய இடம் என்று தேர்வு செய்து அந்த இடத்திலே குண்டு வீசி பக்கத்திலே இருக்கிற மக்களுக்கு ஆபத்தில்லாமல் அந்த இடத்தை தகர்த்து தரைமட்டம் ஆக்கிவிட்டு பத்திரமாக மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே சென்று சேருகிற சாகசம் அவர்களுக்கே சொந்தமானது. அமெரிக்கா வின் சாலஞ்சர் கூட தடுமாறுகிறது. தமிழன் சாதிக்கிறான். பெருமையாக இருக்கிறது. உலகத்திலே தமிழன் என்று சொல்வதற்கு. தமிழா இந்த உலகத்தில் உனக்கு ஒரு பெருமையைத் தேடித் தந்திருப்பவன் பிரபாகரன். (பலத்த கரவொலி)

இதை ஊருக்கு ஊர் போய்ச் சொல்ல வேண்டும். சொல்வோம். இது தான் வேலை. இதிலே ஒன்றும் தப்பு கிடையாது. நீ சிங்களவனுக்கு ஆயுதம் தருகிறபோது புலிகளை ஆதரித்துப் பேசாவிடில் இந்த நாக்கு இருந்து என்ன செய்ய? (பலத்த கரவொலி) தூய்மையான நோக்கத்தோடு இந்த மாநாடு நடக்கிறது. இந்திய அரசு செய்கின்ற துரோகத்தைக் கண்டித்து ஈழத்து மக்களுக்கு நாங்கள் துணையாக இருப்போம்.

21 கரும்புலிகள் இதோ குகைக்குள் செல்லப் போகிறோம் உயிர்க்கொடை தரப்போகிறாம் என்று அறிவித்து விட்டு போனார்களே, நினைத்துப் பார்க்க முடியுமா, வாலிபத்தின் வசந்தத்தில் இருக்கும் வாலிபர்கள். வாழ்க்கையின் வசந்தங்களை ஒரு துளி அளவும் அனுபவிக்காத வாலிபர்கள். வாழ்க்கையின் இன்பங்கள் எதையுமே தேடாத உள்ளங்கள், இளைஞர்கள். சொந்த மண்ணை விடுவிக்க தாய் மண்ணை விடுவிக்க விடுதலை பெற புறப்பட்டுச்சென்றார்களே ஒவ்வொரு போருக்கும் சரியான திட்டத்தை வகுக்கின்றவர் பிரபாகரன் என்று ஒரு அமைச்சர் இராணுவ இணை அமைச்சராக இராசீவ் காந்தி அமைச்சரவையிலே இருந்தவர் ஒருநாள் நாடாளுமன்ற லாபியிலே இராணுவ சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆய்வு செய்து நிறைய எழுதியவர் அவர் என்னை அழைத்து சொன்னார் இருபதாம் நுற்றாண்டில் பிரபாகரனைப் போல் ஒருவரைப் பார்க்க முடியாது என்று. 87இலே சொன்னார். இணையற்ற வான்புலிகள் இப்போது தாக்குவதைப் பற்றி இப்போது சொன்னால் என்ன கூறுவாரோ.

திட்டங்கள் வகுத்து வெற்றி பெற்ற மாவீரர்கள் வரலாற்றிலே படித்திருக்கிறேன். சீசர் காலத்திலிருந்து அலெக்சாண்டர் காலத்திலிருந்து நெப்போலியன் காலத்திலிருந்து எவரும் பிரபாகரனுக்கு நிகராக மாட்டார்கள். இதைச் சொன்னால் தேசத் துரோகம் என்று சொல்கிறார்கள். அனுராதபுரத்தைத் தாக்கினான். ஏன் ? அங்கு தான் எங்கள் மன்னன் எல்லாளன் இருந்தான். 44 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் அனுராதபுரத்திலே. அனுராதபுரத்திலே ஆட்சி புரிந்த எங்கள் மன்னன் எல்லாளனை வஞ்சகமாக வீழ்ததினாரகள். மன்னன் எல்லாளன் வாழ்வு முடிந்தது. 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே அனுராதபுரத்தில் கொள்ளுப்பேரனுக்கு கொள்ளுப்பேரனுக்கு கொள்ளுப்பேரனான பிரபாகரன் தாக்குதல் நடத்தியுள்ளான். எப்படி எல்லாளன் அரசு அமைத்து ஆண்டானோ அப்படி தமிழ் ஈழ அரசு அமையும். இந்த உலகத் தமிழர் பேரமைப்பு இந்த நிகழ்ச்சியின் மூலமாக - நடக்கப் போகிற யுத்தத்திற்கு - ஈழத் தமிழ் மக்களுக்கு - பெருந்துணையாக இருப்போம். தொழிலும் வணிகமும் வளர்ப்போம் - தமிழ் இனத்தின் வலிமையைப் பெருக்குவோம் என்று கூறி விடைபெறுகிறேன்.

thenseide.com

சர்வதேச சமூகத்தின் அணுகுமுறை குறித்து....

விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை வன்னியில் இருந்து நிகழ்த்திய இவ்வருடத்தைய மாவீரர் தின உரையின் பிரதான செய்தி சர்வதேச சமூகத்தைக் குறிவைத்ததாகவே அமைந்திருந்தது.
இலங்கை அரசாங்கத்துடன் அரசியல் இணக்கத் தீர்வைக் காண முடியுமென்ற நம்பிக்கை தனக்கில்லை என்றும் தென்னிலங்கையின் எந்தவொரு அரசியல் கட்சியிடமிருந்தும் அரசியல் தீர்வொன்றை எதிர்பார்ப்பது அரசியல் அசட்டுத்தனமாகும் என்றும் குறிப்பிட்ட பிரபாகரன் இலங்கை அரசாங்கத்தின் சாதுரியமான, சாணக்கியமான பிரசாரங்களுக்கு பலியாகி அன்று இந்தியா இழைத்த தவறை இன்று சர்வதேச சமூகமும் இழைத்து நிற்கிறது என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார். சமாதான முயற்சிகளுக்குப் பாதுகாவலர்களாக நின்ற நாடுகள் நடுநிலை தவறி ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதன் காரணமாக சர்வதேச சமூகத்தின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் பிரபாகரன், இந்த நாடுகள் வழங்கிவரும் தாராள பொருளாதார இராணுவ உதவிகளும் இரகசியமான இராஜதந்திர முண்டுகொடுப்புகளும் இலங்கை அரசாங்கத்தை மேலும் மேலும் இராணுவப் பாதையில் தள்ளிவிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை இனநெருக்கடியில் சர்வதேச நாடுகளின் நகர்வுகளும் நடவடிக்கைகளும் தமிழ் மக்களுக்குத் திருப்தி தருவனவாக இல்லை என்பதை வெளிப்படையாகவே கூறியிருக்கும் பிரபாகரன், தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பில் சர்வதேச சமூகத்திடமிருந்து புதிய அணுகுமுறையை எதிர்பார்க்கிறார். மீண்டும் முற்று முழுதான போர் மூளுவதற்கு இலங்கை நெருக்கடி தொடர்பில் சர்வதேச சமூகம் கடைப்பிடித்த அணுகுமுறையே காரணம் என்பதே விடுதலை புலிகளின் தலைவரின் முக்கிய குற்றச்சாட்டாகும். இதற்கு சர்வதேச சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கும் வல்லாதிக்க நாடுகள் எத்தகைய பிரதிபலிப்பை வெளிக்காட்டப் போகின்றனவோ தெரியவில்லை. ஆனால், பொதுவில் தமிழ்மக்கள் மத்தியில் சர்வதேச சமூகத்தின் தற்போதைய போக்கு தொடர்பில் காணப்படக் கூடியதாக இருக்கின்ற அபிப்பிராயத்தின் பின்னணியிலேயே பிரபாகரனின் செய்தியை நோக்க வேண்டியிருக்கிறது.

நோர்வே அனுசரணையுடனான சமாதான முயற்சிகளுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் இருந்ததன் காரணத்தினால் மாத்திரம் தமிழ் மக்கள் அந்த முயற்சிகள் மீது நம்பிக்கை வைத்தார்கள். இலங்கை நெருக்கடியிலான சர்வதேச சமூகத்தின் ஈடுபாடு மீண்டும் முழுஅளவிலான போர் மூளுவதைத்தடுக்கும் என்றும் அந்த மக்கள் எதிர்பார்த்தார்கள். சமாதான முயற்சிகளில் ஏற்பட்ட முட்டுக்கட்டை நிலையை அகற்றுவதற்கோ, மீண்டும் போர் மூளுவதைத் தடுப்பதற்கோ சர்வதேச சமூகத்தினால் எதையுமே செய்யக் கூடியதாக இருக்கவில்லை. இலங்கையின் அண்மைக்கால நிகழ்வுப் போக்குகள் குறித்து சர்வதேச சமூகம் அவ்வப் போது விசனத்தைத் தெரிவித்து வந்ததைத் தவிர, அதனால் வேறு எதையுமே செய்யக் கூடியதாக இருக்கவில்லை. அரசாங்கப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான தற்போதைய மோதல்களும் அரசாங்கப் படைகள் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் பாரிய தாக்குதல்களும் கொண்டுவரக் கூடிய விளைவுகள் எத்தகையவையாக இருக்கும் என்பதைப் பொறுத்தே அடுத்த நகர்வைச் செய்வதற்கு சர்வதேச சமூகம் காத்திருக்கிறது போலும்.

இலங்கை அரசாங்கத்தின் தீவிர இராணுவ முனைப்பை அதைரியப்படுத்தக்கூடிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை உணராமல், மறுபுறத்தில் இராணுவ முனைப்புக்கு தூபம் போடக்கூடிய நகர்வுகளையே சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகள் இன்று செய்துகொண்டிருக்கின்றன. இத்தகையதொரு நிலைமையே இலங்கையில் இன்று படுமோசமான அரசியல் - இராணுவ நிகழ்வுப் போக்குகளுக்கு வழிவகுத்திருக்கிறது. சர்வதேச சமூகத்தின் அணுகுமுறையில் ஆரோக்கியமான மாற்றம் ஏற்படாதபட்சத்தில் நிலைமை மேலும் மோசமடையவே செய்யும்.

thinakkural.com

விபரீத விளைவுகளுக்கு சர்வதேசமும் பொறுப்பு

Posted on : 2007-11-29

மாவீரர் தினத்தை ஒட்டி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் ஆற்றிய உரையும்

அந்த மாவீரர் தினத்தில் வன்னி மீது இலங்கைப் படைகள் பல்வேறு முனைகளில் நடத்திய தாக்குதல்களில் 22க்கும் அதிகமான அப்பாவிகள் உயிரிழக்க, டசினிற்கும் அதிகமானோர் காயமடைந்தமையும்

புலிகளின் தலைவர் பிரபாகரனை விரைவில் கொன்றொழிப்போம் என இலங்கை அரசின் பாதுகாப்புத் துறையில் அதி சக்தி வாய்ந்தவரான பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சூளுரைத்திருக்கின்றமை பற்றிய செய்தி வெளியாகியமையும்
ஏறத்தாழ ஒரே சமயத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

இவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இலங்கைத்தீவின் நிலைமை மிக மோசமான விபரீத கட்டத்துக்குள் நுழைந்து கொண்டிருப்பதை உய்த்துணர முடியும்.

இலங்கை விவகாரம் தொடர்பாக சர்வதேச ரீதியில் ஆச்சரியத்துடன் கவனிக்கப்பட்ட ஓர் விடயத்தை இப்பத்தியில் அண்மைக் காலங்களில் நாம் மேலோட்டமாகக் கோடிகாட்டி வந்தோம்.
சர்வதேச ரீதியாக மஹிந்த அரசினதும், அதன் படைகளினதும், அவற்றின் கீழ் இயங்கும் துணைப் படைகளினதும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளும் கண்டனங்களும் சர்வதேச அமைப்புகள் ரீதியாகத் தீவிரமடைந்து வலுப்பெற்று வர, இவ்விடயத்தில் புலிகள் பெயர் சற்று மேம்பட்டு வருவதையே நாம் சாடைமாடையாக இப்பத்தியில் தொட்டுக்காட்டியிருந்தோம். சர்வதேச சமூகமும் இதை ஆச்சரியத்துடன் பார்த்து நிற்கின்றது என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

அது உண்மைதான். நீதியாக நியாயமாக நடப்பதன் மூலம் சர்வதேச சமூகத்தின் தார்மீக ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை நம்பிக்கையோடு எதிர்பார்த்துத் தங்கள் செயற்பாடுகளை அண்மைக் காலத்தில் ஒழுங்குபடுத்தி, நேர்சீராக்குவதில் புலிகள் அதிக சிரத்தையும் கவனமும் கரிசனையும் காட்டி வந்தனர்.

ஆனால் இதற்கு ஆக்கபூர்வமான பிரதிபலிப்பைக் காட்டி, புலிகளை மேலும் ஊக்கப்படுத்துவதில் சர்வதேச சமூகம் தவறிவிட்டது என்றே தோன்றுகின்றது.

கிழக்குத் திமோர், மொன்ரி நிக்ரோ, கொசோவோ போன்றவற்றின் விடயங்களில் தர்மத்துடன் செயற்பட்ட சர்வதேச நாடுகள் தமிழரின் தேசிய இனப்பிரச்சினையில் திருப்தியாக நடந்துகொள்ளவில்லை என்றும், இதனால் எம் மக்கள் இந்த சர்வதேச நாடுகள் மீது வைத்திருந்த நம்பிக்கை தகர்ந்து போய்விட்டது என்றும், இந்த நாடுகளின் நடுநிலைச் செயற்பாட்டில் கேள்விக்குறி எழுந்திருக்கின்றது என்றும் தலைவர் பிரபாகரன் விசனத்தோடு விவரிப்பதும்
அந்த ஆதங்கமே இந்த வருட மாவீரர் தின உரையின் மையப்பொருளாக வெளிப்படுத்தப்பட்டிருப்பதும் இந்த நிலைமையையே எடுத்துக்காட்டுகின்றன.

சர்வதேசத்துக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டு விரல் தமிழர் தரப்பில் இருந்து எச்சமயத்தில் நீளுகின்றது என்பதும் கவனிக்கத்தக்கது.

தமிழ்ச்செல்வன் உயிரிழக்கக் காரணமான விமானக்குண்டு வீச்சால் ருசி கண்டுவிட்ட கொழும்பு, அதையே தன்னுடைய பிரதான தாக்குதல் தந்திரோபாயமாகப் பயன்படுத்தப் போகின்றது என்பது அதன் அண்மைக்கால செயற்பாட்டில் இருந்தும், பாதுகாப்புச் செயலாளரின் செருக்குமிக்க பேட்டியிலிருந்தும் தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது.
நேற்று முன்தினம் மாவீரர் தினத்தன்று மட்டும் இத்தகைய விமானக்குண்டுவீச்சு மற்றும் ஆழ ஊடுருவும் படையணியின் கிளைமோர்த் தாக்குதல்களில் இருபதுக்கும் அதிகமான சிவிலியன்கள் பலியாகியிருக்கின்றார்கள்.

ஒருபுறம் தமிழரின் தேசிய இனப்பிரச்சினை விடயத்தில் சர்வதேசம் நீதியாக நடுநிலையாக செயற்படவில்லை என்ற விசனமும், ஆதங்கமும் வன்னியிலிருந்து சூடாகவே வெளிப்படுகின்றன.
மறுபுறம், தமிழர் தேசம் மீதான கண்மூடித்தனமான விமானக்குண்டுவீச்சு மற்றும் கிளைமோர்த் தாக்குதல்களில் அப்பாவிப் பொதுமக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுகின்றனர்; காவு கொள்ளப்படுகின்றனர்.

விடுதலைப் புலிகளை ஏற்கனவே பயங்கரவாத இயக்கமாகப் பட்டியலிட்டுச் சித்திரித்த சர்வதேசம், இப்போக்கைப் பார்த்துக்கொண்டு வாளாவிருக்கின்றது.
இவை எத்தகைய விபரீதத்துக்கு வழிப்படுத்தும்?

இலங்கை இனப்போரின் போக்கை ஆழமாக அவதானித்து வருகின்றவர்களுக்கு இப்போக்கின் விளைவு பேரவலம் தரும் மோசத்தை உருவாக்கும் என்ற அச்ச உணர்வையே ஏற்படுத்துகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் நால்வர் கொல்லப்பட்டமையும், அடுத்தநாள் அநுராதபுர எல்லைப் புறப் பிரதேசமான மாவிலாச்சியவில் நான்கு அப்பாவி சிங்கள விவசாயிகள் கொல்லப்பட்டமையும் இனி நிகழ்ப்போகும் அந்த விபரீதங்களுக்கான கட்டியம் கூறலோ என்னவோ.............?
இவ்வாறான பழிக்குப்பழி வாங்கும் தாக்குதல் போக்குக்கு அப்பாவிகள் இலக்காகும் இரையாகும் கொடூரம் இலங்கைத் தீவில் தீவிரம் பெறுமானால், இவ்விடயத்தில் பொறுப்புடனும், நீதியுடனும், நடுநிலையுடனும் செயற்படத் தவறித் தவறிழைத்த சர்வதேசமும் அக்குற்றத்துக்குப் பெரும் பொறுப்பேற்கவேண்டி நேருவது தவிர்க்க முடியாததாகும்.

uthayan.com

Wednesday, November 28, 2007

தில்லுமுல்லுக்களும் திருகுதாளங்களும் நிரம்பிவழியும் இலங்கை அரசியல்

சென்ற வாரம் உகண்டா தலைநகர் கம்பாலாவில் இடம் பெற்ற பொதுநலவாய நாடுகள் ஸ்தாபனத்தின் மாநாட்டில் பாகிஸ்தானின் அங்கத்துவம் இடைநிறுத்தப்படவேண்டுமென்ற பிரேரணைக்கு வெளிநாட்டமைச்சர் ரோகித்த போகொல்லாகம ஆதரவளித்திருந்தார். பின்பு ஜனாதிபதி ராஜபக்ஷ அப்பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆயினும், இலங்கை அரசாங்கம் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் பாரிய தவறு இழைத்து விட்டதாகவும் அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டுமெனவும் ஜே.வி.பி.யின் அரசியற்குழு விடுத்த அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி பேர்வெஸ் முஷாரப் ஜனவரி 8 இல் பொதுத்தேர்தல் நடத்துவதற்கு ஆவன செய்துள்ளதோடு, ஆயிரக்கணக்கான சிறைக்கைதிகளை விடுதலை செய்து அஞ்ஞாதவாசம் செய்திருந்த தலைவர்களை நாடுதிரும்ப அனுமதித்து நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளாரெனவும் ஜே.வி.பி.தனது பாராட்டினைத் தெரிவித்துள்ளது.

உண்மையில், முஷாரப் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பெரிதும் விசுவாசமானவர் என்பதும், 1999 இல் இராணுவ சதி மூலம், அன்றைய பிரதமர் நவாஷ் சரீப்பை பதவி நீக்கியவர் என்பதும் உலகறிந்த விடயம். ஜனாதிபதி பதவியோடு இராணுவத்தளபதி பதவியையும் தன்வசம் வைத்திருந்தவர். முன்னாள் பிரதம நீதியரசர் சௌத்திரியை ஏதேச்சாதிகாரமாக பதவி நீக்கம் செய்தவர். தொடர்ந்து பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையடுத்து, பிரதம நீதியரசர் பதவியை மீண்டும் தனதாக்கிக் கொண்டவராகிய சௌத்ரி அடங்கலாக உச்ச நீதிமன்றம் முழுவதையும் கலைத்து விட்டு, பதிலாக, தனது கையாட்களை நியமித்தவர். இதன்பொருட்டு, அவசர கால நிலையைப் பயன்படுத்தி அரசியல் யாப்பை இடைநிறுத்தி விட்டவர். அவ்வாறாக, தான் ஜனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டது சம்பந்தமாக எழுந்ததாகக் கூறப்பட்ட சீர்கேடுகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கையும் தவிடுபொடியாக்கியவர். பாகிஸ்தானில் இன்று குறிப்பாக, ரறூக் அலி போன்ற பிரபல இடதுசாரிகள் தலைமறைவாக வேண்டியுள்ள அளவிற்கு பயங்கர அடக்குமுறை நிலவுகிறது. இவற்றையெல்லாம் ஜே.வி.பி.கண்டுகொள்ளாமலிருப்பது வேடிக்கையாயிருக்கிறது.

ஐ.தே.க.வின் அங்கலாய்ப்பு

மறுபுறத்தில் ஐக்கிய தேசியக்கட்சியினர் மேலும் வெளிப்படையாகவே தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். அதாவது, பொதுநலவாய நாடுகள் ஸ்தாபனம், பாகிஸ்தானை இடைநிறுத்தம் செய்வதற்கு வெளிநாட்டமைச்சர் ஆதரவு வழங்கியது உண்மையில் நாட்டுத்துரோகமென ஐ.தே.க.தனது கடுமையான விசனத்தைத் தெரிவித்துள்ளது. ஏனென்றால், குறிப்பாக 2000 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பெருவாரியான பல்குழல் றொக்கட் லோஞ்சர்களை தந்து உதவியபடியால் தான் விடுதலைப்புலிகளின் கொட்டத்தை அடக்கி பலாலி இராணுவ முகாம் காப்பாற்றப்பட்டதென்ற நன்றிக்கடனை மறந்து விடக்கூடாதென லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகிய ஐ.தே.க.பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் காரசாரமாக எடுத்தியம்பியிருந்தனர். எனவே, மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மட்டுமல்லாமல், ஐ.தே.க.வும் இராணுவத்தீர்வில் பெரிதும் நாட்டம் கொண்டிருப்பது கண்கூடு.

ஐ.நா.வுக்கு விடுதலைப்புலிகள் அனுப்பியிருந்த மகஜர்

கடந்த செப்டெம்பர் பிற்பகுதியில் 62 ஆவது ஐ.நா.பொதுச்சபைக்கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உரையாற்றுவதற்கு சற்று முன்னதாக, விடுதலைப்புலிகள் ஐ.நா.செயலாளர் நாயகத்துக்கு அனுப்பிவைத்த மகஜரில், தமிழரின் இறைமை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான் சமாதானப் பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாயிருக்க வேண்டுமென கோரியுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;

"இலங்கை அரசாங்கம் தனது ஏமாற்று வித்தைகளை நிறுத்த வேண்டும். இராணுவத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும். தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு (அககீஇ) போன்று காலங்காலமாக வட்டமேசை நாடகங்கள் மாறி மாறி ஆட்சி செய்துவந்த எல்லா அரசாங்கங்களாலும் மேற்கொள்ளப்பட்டு வந்த பச்சை ஏமாற்று வித்தையாகும். அரசாங்கம் இராணுவத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டு வருகின்ற போதும் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுடன் நடந்து வருவதோடு, பேச்சுவார்த்தைக்கான எமது கதவுகள்தான் அகலத்திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. அரசாங்கத்தின் இராணுவத் தாக்குதல்களில் அதிக எண்ணிக்கையான சாதாரண பொது மக்களே பலியாகி வருவதால், இலங்கை அரச படைகள் தமிழ் மக்கள் மீது இனக்கொலை யுத்தமொன்றினை நடத்திவருவது வெள்ளிடை மலை. சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள அடக்கு முறைச்சட்டங்கள் இக்கொடுமைகளை ஏற்று நிற்கின்றன. அச்சட்டங்கள் கண்மூடித்தனமான முறையில் கைதுகள் செய்தல், சித்திரவதை செய்தல், கொலை செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு இடமளிக்கின்றன. ஆக, கிழக்கு திமோர் மற்றும் கொசொவோவில் காணப்படுவது போன்று, தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கு வேண்டிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்" இவ்வாறுதான் விடுதலைப்புலிகளின் மகஜரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அரசாங்கத்தை தக்கவைப்பதற்கு யுத்தம்

மறுபுறத்தில் மகிந்தராஜபக்ஷ அரசாங்கமோ, விடுதலைப்புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட வேண்டும். அதுவே அரசியல்தீர்வுக்கு இன்றியமையாததாகும் என வரிந்து கட்டிநிற்பதை ஏலவே குறிப்பிட்டுள்ளோம். ஏனென்றால், அரசியல்தீர்வுக்கான உருப்படியான வரைபடமெதுவும் அரசாங்கத்திடம் இல்லாத நிலையில், வாழ்க்கைச் செலவுப் பிரச்சினை தென்னிலங்கையில் விஸ்வரூபமெடுக்கும் நிலையில், அதனை ஒருவாறு சமாளிக்கும் நோக்கில் அரசாங்கம் தன்னை தக்க வைத்துக் கொள்வதற்கு யுத்தம் புரிந்து கொண்டிருப்பதையும் வெற்றிகள் ஈட்டுகிறோம் என்று சித்திரிப்பதையும் தவிர, வேறு வழியின்றி நிற்கிறது. அத்தோடு, சர்வதேச சமூகத்தின் சில பிரிவினர் அரசாங்கத்திற்கு சேறு பூச முற்பட்டுள்ளனர் என்றொரு அங்கலாய்ப்பையும் ஜனாதிபதி அண்மையில் வெளிப்படுத்தியுள்ளார்.

பொருளாதார பாதிப்புகள் பற்றி கவலை காணப்படவில்லை

இவ்வாறான நிலைமைகள் காரணமாக, பொருளாதாரரீதியில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டு வருவதை அரசாங்கம் கணக்கில் எடுப்பதாகத் தெரியவில்லை. உதாரணமாக, முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுவரும் அதிருப்தியைக் குறிப்பிடலாம். "எமது சகபாடிகள் பெற்ற பிரதிகூலமான அனுபவங்கள் காரணமாக இந்திய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதை விலக்கியுள்ளனர்". இவ்வாறு அண்மையில் தேசிய ஏற்றுமதியாளர் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கொன்றில் இந்திய உயர்ஸ்தானிகராலய வர்த்தக அலுவலர் சந்தொஸ் ஜா குறிப்பிட்டிருந்தார். அப்பலோ மருத்துவமனை, லங்கா ( ஐ?இ) போன்ற நிறுவனங்கள் மூலம் பெற்ற கசப்பான அனுபவங்கள் காரணமாக இந்திய முதலீட்டாளர்கள் ஆர்வமிழந்து போகும் நிலை ஏற்படக்கூடும் என்பதால், இந்திய முதலீட்டாளர்களைக் கவரவல்ல வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா, இலங்கையில் பெரியளவில் முதலீடு செய்து வந்துள்ளது. கடந்த 1- 1/2 வருட காலத்தில் இந்தியாவின் வெளிநாட்டு முதலீடு 30 பில்லியன் அமெரிக்க டொலர் தொகை ஆகும். இலங்கையில் முதலீடு செய்வது மிகவும் இலகுவான காரியமாகும். அதற்கான வாய்ப்புகள் எழுச்சியானவையாக அமைய வேண்டும். இவ்வாறு ஜா தனது உரையில் கூறிவைத்தார்.

அடுத்ததாக மூளைசாலிகள் வெளியேற்றம் அபாயகரமாயுள்ளதென இலங்கை பட்டயக் கணக்காளர் சங்கத் தரப்பினர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர். கணக்காளர்கள் அவுஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளுக்குப் பறந்து கொண்டிருக்கின்றனர். அரசாங்கமோ இப்பாரிய பிரச்சினையை கம்பளத்தின் கீழ் தள்ளிவிட்டு கைகட்டி நிற்கிறது. இது நாட்டின் பொருளாதார அபிவிருத்தி முயற்சிகளுக்கு பெரிதும் குந்தகம் விளைவிக்கும் என்பது ஆட்சியாளர்களால் உணரப்படாதது மிகுந்த கவலைக்குரியதாகும். நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையோ, நல்லாட்சியோ இல்லாமையே மூளைசாலிகள் வெளியேற்றத்துக்கு பிரதான காரணமென ஆய்வாளர்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.

வரவு- செலவுத்திட்டம்

நிற்க, வரவு- செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு தொடர்பாக சுவாரஸ்யமான இரண்டொரு விடயங்களைப் பார்ப்போம். இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் பங்குபற்றுவதற்கு அமைச்சர் அனுர பண்டாரநாயக்க சபையை நோக்கிச் சென்று கொண்டிருந்தவேளை, ஜனாதிபதியின் சகோதரர், பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ அனுரவிடம் குசலம் விசாரிக்க முற்பட்டார். "ஜனாதிபதி ராஜபக்ஷ நாட்டையும் அழித்துக் கொண்டு பண்டாரநாயக்க குடும்பத்தையும் அழிப்பதற்கு முனைந்து வருகின்றார். அவரின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன" என்பது தான் அனுர அளித்த பதிலாகும். மேலும், ஜனாதிபதியும் அவரின் செயலாளரும் ஏன் அடிக்கடி தொலைபேசியில் நினைவூட்டிச் சினமூட்டி வருகின்றனர். உங்களுக்கு பெரும்பான்மை உண்டென்றால் ஏன் என்னையும் இழுப்பதற்குத் தவிக்கின்றீர்கள் என்றும் அனுர சீண்டியிருந்தார். பின்பு வாக்கெடுப்பு முடிந்ததும் தனது தாய், தந்தையருக்காகவே ஆதரித்து வாக்களித்ததாக அனுர கூறியதையும் இங்கு குறிப்பிடலாம்.

மற்றும் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் வன்னியைக் கைப்பற்றுவது தடைப்பட்டுவிடும் . இது விடயமாக அலி- கொட்டி (யானை- புலி) சதித்திட்டமும் உண்டென்றபடியால் எதிராக அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் விடுதலைப் புலிகளுக்கு சாதகமான வாக்கு ஆகும் என்றெல்லாம் பகீரதப்பிரயத்தனங்கள் செய்துதான் 2 ஆவது வாசிப்பு நிறைவேற்றப்பட்டது.

14.12.2007 இல் 3 ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும் வேளை அரசாங்கமே தோல்வியைத் தழுவக்கூடும் என சில வட்டாரங்களில் எதிர்வு கூறப்படுகிறது. ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இ.தொ.கா. இரு கட்சிகளும் அன்றைய தினம் எதிர்த்து வாக்களிக்கக் கூடும் என்றும் சமிக்ஞைகள் சற்றுத்தென்படுகின்றன. அத்தகைய சூழ்நிலை தோன்றினால் யுத்தம் முன்னெடுக்கப்பட வேண்டியது தமது முதலாவது தெரிவாகையால் ஜே.வி.பி. யினர் தமது முன்னைய முடிவை மீள்பரிசீலனை செய்து 14.12.2007 இல் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடும். அதாவது, 2 ஆவது வாசிப்பின் போது தாமும் ஐ.தே.க.வும் தமிழர் தேசியக் கூட்டமைப்பும் எதிர்த்து வாக்களித்தது முற்றிலும் வெவ்வேறு காரணங்களுக்காகவென ஜே.வி.பி. தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் எனலாம். தில்லுமுல்லுகளும் திருகுதாளங்களும் நிரம்பிவளியும் இலங்கை அரசியலில் இவையெல்லாம் ஆச்சரியப்படுவதற்குரியவை அல்ல.
வ.திருநாவுக்கரசு
thinakkural.com

மேலாண்மைச் சிந்தனையில் வெளிப்பாடாகும் அறிவிப்புகள்

Posted on : 2007-11-28

"விடுதலைப் புலிகளையும் அந்த இயக்கத்தின் தலை வர் பிரபாகரனையும் கொன்றொழிக்கப்போகின்றோம். அதன் பின்னர் அரசியல் தீர்வு காண்போம்.'' என்று சூளுரைத்திருக்கின்றார் இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளரும், இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அடுத்து பாதுகாப்புத்துறையில் அதிக அதிகாரமும் செல்வாக்கும் கொண்டவரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோத்த பாய ராஜபக்ஷ.
""விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதே எங் கள் இலக்கு. நாங்கள் எப்படியும் இராணுவ ரீதியாக அவர் களைத் தோற்கடித்தாகவேண்டும். வன்னியை எமது கட் டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டும். அது சாத்திய மானதே. இனி, அவர்களை நசுக்குவதுதான் பாக்கி. அதன் பின்னர் அரசியல் தீர்வு சாத்தியமாகும்.'' என்று முழங்கி யிருக்கின்றார் அவர்.
ஆக, வாழ்வுரிமைக்காகவும், நீதியான வாழ்வுக்காகவும் போராடும் ஈழத்தமிழர்களுக்கு, அவர்களின் போராட்ட வடிவத்தை அழித்தொழித்த பின்னர் தாம் நீதி செய்யப்போகிறார் அரசியல் தீர்வு வழங்கப் போகின்றார் என்று சபதம் செய்திருக்கிறார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்.

""பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்த பின்னரே அரசி யல் தீர்வு'' என்ற தென்னிலங்கையின் பம்மாத்து, "அலை ஓய்ந்த பின்னர் குளிக்கலாம் என்று கடற்கரையில் காத்தி ருப்பதற்கு' ஒப்பானது.

ஈழத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்க மறுத்து அவர்களுக்கு நீதி செய்வதை நிராகரித்து அந்தப் பூர்வீகத் தேசிய இனத்தை அடிமைப்படுத்தி, அடக்கி, ஒடுக்குவதில் தென்னிலங்கைப் பேரினவாதச் சிங்களம் காட்டிய தீவிரமே இன்னும் சரியாகச் சொல்லப்போனால் பேரினவாத வெறியே இலங்கைத் தீவில் ஆயுத வன் முறைக் கலாசாரத்துடன் கூடிய போராட்டத்துக்கு ஊற்றுக் கண்ணாக அமைந்தது.

அந்த ஊற்றுக்கண்ணை அடைக்காமல், "பயங்கர வாதம்' என்று தென்னிலங்கை இன்று அடையாளப்படுத் திச் சித்திரிக்கும் ஆயுதப் போராட்டப் புரட்சியை அடைப் பது என்பது பகல் கனவு. அத்தகைய முயற்சி, இப்பத்தியில் நாம் முன்னர் சுட்டிக்காட்டியபடி நோயின் மூலத்துக்கு நோயின் காரணத்துக்கு வைத்தியம் செய்யாமல், நோயின் விளைவான வெளிப்பாட்டுக்கு குணங்குறிக்கு மருத்து வம் செய்வதற்கு ஒப்பானதாகும்.

ஈழத் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் ஐம் பதுகளிலும், அறுபதுகளிலும், எழுபதுகளின் ஆரம்பத்தி லும் ஜனநாயக வழி தழுவிய வெகுஜனப் போராட்ட வடிவ மாகவே முன்னெடுக்கப்பட்டது. அந்தப் போராட்டத்தின் மையப் பொருளாகப் புதைந்து கிடந்த நியாயத்தை நீதியை கவனத்தில் கொள்ள மறுத்த தென்னிலங்கைப் பேரின வாதம், ஆயுத முனையில் வன்முறை வாயிலாக பலாத் கார நடவடிக்கைகள் மூலம் அந்தப் போராட்டத்தை அடக்கி, ஒடுக்க முற்பட்டது. அந்தக் காரணத்தினால் அந்தத் தேசிய விடுதலை முயற்சி பின்னடைவுகளைக் கண்டது. சமாதான வழியில் தமிழர் தேசத்தை ஒன்றுபடுத்திய அந்த விடுதலை முயற்சி அதற்கு அப்பால் அந்தப் போராட்டத்தை முன்னெ டுக்க முடியாமல் வன்முறை வாயிலாக ஒடுக்கப்பட்டது. அதன் காரணமாகவே ஆயுதம் தரித்த எதிர்ப்புப் போராட் டம் தமிழர் மத்தியில் வரலாற்றுப் பிறப்பை எடுத்தது.

எனவே, ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டமானது, தாங்கொணா அரச ஒடுக்குமுறையின் வரலாற்றுக் குழந்தை யாகவே தோற்றம் பெற்றது. புரட்சிகர ஆயுதப் போராட்டத் தைத் தமிழர்கள் முன்னெடுக்க அவர்களைக் கட்டாயப் படுத்தி, நெட்டித் தள்ளி, பலவந்தப்படுத்தியதே தென்னி லங்கைத் தேசம்தான்.

ஆகவே, இன்று தமிழர் தரப்பில் முன்னெடுக்கப்படும் ஆயுதம் தாங்கிய உரிமைப் போராட்டமானது, அதற்கு முன் னர் ஈழத் தமிழர்கள் முன்னெடுத்த அரசியல் போராட்டங் களின் தொடர்ச்சியாகவும், நீட்சியாகவும், முன்னெடுப்பாக வுமே கருதப்பட வேண்டும்.
இந்தப் போராட்டத்தின் யதார்த்தப் புறநிலைகளையும், வரலாற்றுப் பின்னணிகளையும் சரிவர எடைபோட்டால், ஈழத் தமிழர்களை இராணுவ ரீதியாக அடக்கி, ஒடுக்கிவிடுவதன் மூலம், தமிழரின் தேசிய விடுதலை உணர்வை மழுங்கடித்து அவர்களை நிரந்தர அடிமைகளாக்கி விடலாம் என்ற திட்டம் என்றுமே சித்திக்காது என்பது சம்பந்தப்பட்டோருக்குப் புரிய வரும்
ஈழத் தமிழரின் தேசிய இனப்பிரச்சினையை நாகரிக மான அமைதி வழியில் தீர்க்கும் திடசங்கற்பம் தென்னிலங் கைக்குக் கிஞ்சித்தும் கிடையாது. வன்முறை வழியிலான போரைத் தீவிரப்படுத்தி, தமிழர் தேசத்தின் மீது பெரும் படை யெடுப்பையே மேற்கொண்டு, தமிழரின் ஆயுத வலி மையை நொறுக்கி, அவர்களை இராணுவப் பலம் மூலம் அடிமைப்படுத்தி மண்டியிட வைத்து, அதன் பின்னர் தான் முன்வைக்கும் உருப்படியற்ற ஒரு திட்டத்தை அரசியல் தீர்வு யோசனையாகத் தமிழர் மீது திணித்து, அதற்கு அவர் களைப் பலவந்தமாக இணங்கச் செய்வதே தென்னிலங்கையின் உள்ளார்ந்த திட்டமாகும். அதையே பாதுகாப்புச் செயலாளரின் இந்த ஒப்புதல் வாக்குமூலமும் உறுதிப் படுத்துகின்றது.

தமிழர்களை இந்தத் தீவின் பூர்வீகத் தேசிய இனமாக ஏற்று, சமபங்காளி உறவோடு அவர்களைக் கருதி, அவர்களு டன் அமைதி வழிப் பேச்சு மூலம் நல்லிணக்கத்துக்கு வரும் தாரா ளப் பாங்கு தென்னிலங்கையிடம் இல்லை. பேரினவாத மேலாதிக்கத் திமிரும், மேலாண்மை மமதையும், மொழிச் செருக்கும் சேர்ந்து அந்த உயர் பண்பைச் சிதைத்துச் சீரழித்து விட்டன. அதன் காரணமாக அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத் தும் அதிகாரத் தொனியோடு அறிவிப்புகள் வெளிவருகின் றன. அதுவே இன்றைய துன்பியல் நிலைமை.

uthayan.com

Tuesday, November 27, 2007

தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை

தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை
[ த.இன்பன் ] - [ நவம்பர் 27, 2007 - 12:43 PM - GMT ]
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

நவம்பர் 27, 2007.


எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள்.

எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள். எதிரிக்குத் தலைவணங்காத வணங்கா மன்னர்கள். எமது தேசவிடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த மாவீரர் அனைவரும் மனிதமலைகளாக, மனிதக்கோட்டைகளாகவே எமது மண்ணைக் காத்துநிற்கின்றனர். ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.

மனித வரலாற்றுச் சக்கரம், காலங்களைக் கடந்து, யுகங்களை விழுங்கி, முடிவில்லாமற் சுழல்கிறது. இந்த முடிவில்லாத இயக்கத்தில், உலகத்து மனிதன் நிறையவே மாறிவிட்டான். அவனிடத்தில் எத்தனையோ புதிய சிந்தனைகள் தோன்றியிருக்கின்றன் எத்தனையோ புதிய கருத்தோட்டங்கள் பிறந்திருக்கின்றன. எத்தனையோ புதிய எண்ணங்கள் அவன் மனதிலே தெறித்திருக்கின்றன. இந்தச் சிந்தனைத் தெறிப்பிலே, சுதந்திரமும் சமத்துவமும் கூடிக்குலவும் ஒரு வாழ்வை அவன் கண்டுகொண்டான். சாதி, சமய, பேதங்கள் ஒழிந்த, அநீதியும் அட்டூழியங்களும் அகன்ற, சூழ்ச்சிகளும் சுரண்டல்களும் நீங்கிய, கொந்தளிப்புக்களும் நெருக்கடிகளும் அகன்ற ஓர் உன்னத வாழ்வைக் கற்பிதம் செய்தான். இந்தக் கற்பிதத்திலிருந்து தோன்றிய கருத்துருவம்தான் சுதந்திரம். இந்த உன்னதமான கருத்துருவை வாழ்வின் உயரிய இலட்சியமாக வரித்து, மனிதன் போராடப் புயலாகப் புறப்பட்டான்.

ஓயாது வீசும் இந்த விடுதலைப் புயல் இன்று எமது தேசத்திலே மையம்கொண்டு நிற்கிறது. சுழன்றடிக்கும் சூறாவளியாக, குமுறும் எரிமலையாக, ஆர்ப்பரித்தெழும் அலைகடலாக எமது மக்கள் வரலாற்றிலே என்றுமில்லாதவாறு ஒரே தேசமாக, ஒரே மக்களாக ஒரே அணியில் ஒன்றுதிரண்டுநிற்கின்றனர். ஒரே இலட்சியத்தில் ஒன்றுபட்ட சக்தியாக, ஒன்றுபட்ட இனமாகத் தமக்கு முன்னால் எழுந்த எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து நெஞ்சுறுதியுடன் நிமிர்ந்துநிற்கின்றனர். எல்லைக்காப்புப் படைகளாக, துணைப்படைகளாக, விசேட அதிரடிப்படைகளாக எழுந்துநிற்கின்றனர். போர்க்கோலம் கொண்டு, மூச்சோடும் வீச்சோடும் போராடப் புறப்பட்டுநிற்கின்றனர்.

முப்பத்தைந்து ஆண்டுகளாக ஓய்வில்லாமல் வீசும் எமது வீரவிடுதலை வரலாற்றில் நாம் என்றுமில்லாதவாறு தரைப்படை, கடற்படை, வான்படையென முப்படைகளும் ஒன்றுசேர ஒரு பெரும் படையாக எழுந்து, நிமிர்ந்து நிற்கிறோம். நீண்ட கொடிய சமர்களிற் களமாடி அனுபவமும் முதிர்ச்சியும் பெற்ற முன்னணிப் படையணிகளோடும் பன்முகத் தாக்குதல்களையும் நிகழ்த்தவல்ல சிறப்புப் பயிற்சிபெற்ற சிறப்புப் படையணிகளோடும் நவீன படைக்கலச் சக்திகளுடனும் பெரும் போராயுதங்களுடனும் ஆட்பலம், ஆயுதபலம், ஆன்மபலம் எனச் சகல பலத்துடனும் நவீன இராணுவமாக வளர்ந்துநிற்கிறோம். நீண்டகாலம் பெரும் சமர்களை எதிர்கொண்டு, மூர்க்கமாகப் போர்புரிந்து பெற்றெடுத்த பட்டறிவாலும் கற்றறிந்த பாடங்களாலும் கட்டப்பட்டுச் செழுமைபெற்ற புதிய போர் மூலோபாயங்களோடும் புதிய போர்முறைத் திட்டங்களோடும் நவீன போரியல் உத்திகளோடும் எதையும் எதிர்கொள்ளத் தயாராக நிற்கிறோம். இந்த மலையான நிமிர்விற்கு, இந்தப் பூகம்ப மாற்றத்திற்கு ஆதாரமாக நிற்பவர்கள் எமது மாவீரர்கள் என்பதை நான் இங்குப் பெருமிதத்துடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

எனது அன்பார்ந்த மக்களே!

நாம் வாழும் உலகிலே புதிய பூகம்ப மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. உலகமே ஆசியாவை நோக்கித் திரும்பியிருக்கிறது. இருபத்தொராம் நூற்றாண்டும் ஆசியாவின் சகாப்தமாக ஆரம்பித்திருக்கிறது. எமது பிராந்தியத்தைச் சேர்ந்த, எமது கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் சமூக, பொருளாதார, விஞ்ஞானத்துறைகளிலே பெருவளர்ச்சியீட்டி முன்னேறி வருகின்றன. அண்டவெளி ஆராய்ச்சிகள், சந்திரமண்டல ஆய்வுகள், அணுக்கருப் பரிசோதனைகளெனப் புதிய பாதையிலே பயணிக்கின்றன. மனித சமுதாயம் முன்னெப்போதும் காணாத புதிய சவால்களுக்கு முகம்கொடுத்து, இயற்கையின் எண்ணற்ற புதிர்களுக்கு விடைகள் காணவும் தீராத வியாதிகளுக்குத் தீர்வுகள் தேடவும் புதிய பயணத்திலே இறங்கியிருக்கிறது; அரிய உயிரினங்களையும் தாவர வகைகளையுங்கூடக் காத்து, பூகோள முழுமையையும் பாதுகாக்கின்ற புனித முயற்சியிலே காலடி எடுத்துவைத்திருக்கிறது. ஆனால், சிங்களத் தேசம் மாத்திரம் நேரெதிர்த் திசையிலே, அழிவு நோக்கிய பாதையிலே சென்றுகொண்டிருக்கிறது. தன்னையும் அழித்து, தமிழினத்தையும் அழித்துவருகிறது. இதனால், அழகிய இலங்கைத்தீவு இரத்தத்தீவாக மாறியிருக்கிறது.

பௌத்தம் ஓர் ஆழமான ஆன்மீகத் தரிசனம். அன்பையும் அறத்தையும் ஆசைகள் அகன்ற பற்றற்ற வாழ்வையும் தர்மத்தையும் வலியுறுத்தி நிற்கும் தார்மீகத் தத்துவம். இந்தத் தார்மீக நெறியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொள்ளும் சிங்களம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே இனவாத விசத்தினுள் மூழ்கிக்கிடக்கிறது. சிங்கள இனவாத விசம் இன்று மிருகத்தனமான வன்முறையாகக் கோரத்தாண்டவமாடுகிறது. அறுபது ஆண்டுகளுக்கு மேலாக வன்முறை அகன்ற அகிம்சை வழியிலும், ஆயுதவழியிலும் தமிழர் நீதிகேட்டபோதும் சிங்கள உலகிலே சிறிதளவும் மனமாற்றம் நிகழவில்லை. எத்தனையோ இழப்புக்கள், எத்தனையோ அழிவுகள், எண்ணற்ற உயிர்ப்பலிகள் நிகழ்ந்தபோதும் சிங்களத் தேசம் மனந்திருந்தவில்லை. தொடர்ந்தும், அது வன்முறைப் பாதையிலேயே பயணிக்கிறது. அடக்குமுறையாலும் ஆயுதப்பலத்தாலும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவே அது விரும்புகிறது. அமைதி முயற்சிகளுக்கு ஆப்புவைத்துவிட்டு, தனது இராணுவ நிகழ்ச்சித்திட்டத்தைத் துணிவுடனும் திமிருடனும் தொடர்ந்து முன்னெடுத்துவருகிறது. இதற்குச் சர்வதேசச் சமூகத்தினது பொருளாதார, இராணுவ உதவிகளும் அரசியல் தார்மீக ஆதரவும் இராஜதந்திர முண்டுகொடுப்புக்களும் ஒருபக்கச்சார்பான தலையீடுகளுந்தான் காரணம்.

எமது பிராந்தியத்திலே உலகப் பெரு வல்லரசுகளின் இராணுவ, பொருளாதார, கேந்திர நலன்கள் புதைந்து கிடப்பதை நாம் நன்கு அறிவோம். அந்த நலன்களை முன்னெடுக்க உலக வல்லரசுகள் முனைப்புடன் முயற்சிப்பதையும் நாம் விளங்கிக்கொள்கிறோம். இதற்கு இலங்கைத்தீவில் நெருக்கடிநிலை நீங்கி, சமாதானமும் நிலையான நல்லாட்சியும் தோன்ற அனைத்துலக நாடுகள் ஆர்வமும் அக்கறையும் காட்டுவதையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். இதேநேரம் பேரினவாதச் சிங்கள அரசு உலகநாடுகளின் நலன்களையும் அவை எமது பிராந்தியத்திற் பதிந்திருப்பதையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சிக்கிறது. போலியான, பொய்யான பரப்புரைகள் வாயிலாக உலக நாடுகளைத் தமது வஞ்சக வலைக்குள் வீழ்;த்தி, தமிழரது விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகத் திருப்பிவிடுகின்ற கைங்கரியத்தைச் செய்துவருகிறது. சிங்கள அரசின் வஞ்சக வலைக்குள் வீழ்ந்து, உலகநாடுகள் எமது பிரச்சினையில் எதிர்மறையான தலையீடுகளைச் செய்வதுதான் எமக்கும் எமது மக்களுக்கும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தருகிறது.

இப்படியான அநீதியில் அமைந்த அந்நியத் தலையீடுகள், காலங்களை விழுங்கி நீண்டுசெல்லும் எமது போராட்டத்திற்குப் புதியவை அல்ல. அன்று இந்தியா தனது தெற்கு நோக்கிய வல்லாதிக்க விரிவாக்கமாக எமது தேசியப் பிரச்சினையிலே தலையீடு செய்தது. தமிழரது சம்மதமோ ஒப்புதலோ இன்றி, சிங்கள அரசுடன் கூட்டுச்சேர்ந்து ஓர் ஒப்பந்தம் செய்தது. அடிப்படையில் அந்த ஒப்பந்தம் தமிழரது நலனுக்காகவோ நல்வாழ்விற்காகவோ செய்யப்பட்டதன்று. தீர்வு என்ற பெயரில் ஐம்பத்தேழிற் கைச்சாத்தான பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் இருந்த அதிகாரங்களைக்கூடக் கொண்டிராத எலும்புத்துண்டு போன்ற ஒரு அரைகுறைத் தீர்வை இந்தியா அன்று எம்மக்கள்மீது கட்டிவிட முயற்சித்தது. ஓர் இலட்சம் இராணுவத்தினரின் பக்கபலத்தோடும் இரண்டு அரசுகளின் உடன்பாட்டு வலிமையோடும் எட்டப்பர் குழுக்களின் ஒத்துழைப்போடும் அந்த ஒப்பந்தத்தைச் செயற்படுத்திவிட இந்தியா தீவிரமாக முயற்சித்தது. தமிழரது தேசியப் பிரச்சினையின் அடிப்படைகள் எதையும் தொட்டுநிற்காத, தமிழரின் அரசியல் அபிலாசைகள் எதையும் பூர்த்திசெய்யாத அந்த அரைகுறைத் தீர்வைக்கூடச் செயற்படச் சிங்களப் பேரினவாதிகள் அன்று அனுமதிக்கவில்லை.

சிங்களத் தேசம் பற்றியும் அதன் நயவஞ்சக அரசியல் பற்றியும் நாம் நன்கு அறிவோம். எமக்கு அதுபற்றிய நீண்ட பட்டறிவும் கசப்பான வரலாறும் இருக்கின்றன. எனவேதான், நாம் அன்று இந்தியாவுடன் பல்வேறு தடவைகள் பல்வேறு இடங்களிற் பல்வேறு மட்டங்களில் நடந்த பேச்சுக்களின்போது, சிங்களப் பேரினவாதம் பற்றி அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக்கூறினோம். தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகண்டு, தமிழர் தேசத்தில் அமைதியைக் கொண்டுவருவது சிங்கள அரசின் நோக்கமன்று, தமிழர் தேசத்தை ஆக்கிரமித்து, தமிழரின் வளங்களை அழித்து, தமிழரை அடிமைகொண்டு, அழித்தொழிப்பதுதான் சிங்கள அரசின் நோக்கம் என்பதை அன்று இந்தியாவிற்கு எடுத்துரைத்தோம். இந்தியா இணங்கமறுத்தது. இதனால், தமிழ் மக்கள் தமது மண்ணிலேயே பெரும் அழிவுகளையும் அனர்த்தங்களையும் சந்தித்தனர்.

அன்று இந்தியா இழைத்த தவறை இன்று சர்வதேசமும் இழைத்து நிற்கிறது. சிங்கள அரசின் சாதுரியமான, சாணக்கியமான பரப்புரைகளுக்குப் பலியாகி, சமாதான முயற்சிகளுக்குப் பாதுகாவலனாக நின்ற நாடுகளே, எமது விடுதலை இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டிருக்கின்றன. இதில் வேதனையான, ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என்னவென்றால் ஒருகாலத்தில் எம்மைப் போன்று தமது சுதந்திரத்திற்காகப் போராடிய தேசங்களும் எம்மைப் பயங்கரவாதிகளாகப் பட்டஞ்சூட்டியமைதான்.

இவற்றுக்கும் மேலாக, புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் தாம் வாழும் நாடுகளிலே பலம்பொருந்திய சக்தியாக நின்று, தமிழீழ விடுதலைப் போருக்கு உதவி வருவதையும் அரசியல் ஆதரவைத் திரட்டிவருவதையும் சிங்களத் தேசத்தாற் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடிக்குட்சிக்கி, எம்மக்கள் அழிந்துவருவதையும் அந்தப் பேரழிவைத் தடுக்க, புலம்பெயர்ந்த மக்கள் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானப் பணிகளையும் மேற்கொண்டுவருவதையும் சிங்களப் பேரினவாதத்தாற் சகிக்கமுடியவில்லை. எனவேதான், புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் தாயக மக்களுக்கும் இடையிலான உறவுப்பாலத்தை உடைத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிடச் சிங்களப் பேரினவாதம் தீவிரமாக முயற்சித்துவருகிறது. இந்த அநியாயத்திற்குச் சில உலக நாடுகளும் துணைபோகின்றன. எம்மக்கள் தாம் வாழும் நாடுகளின் அரசியற்சட்டங்களுக்கு அமைவாக, நீதி தவறாது மேற்கொள்ளும் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானச் செயற்பாடுகளையும் படுபாதகமான குற்றவியற் செயல்களாக இந்நாடுகள் காட்டிவருகின்றன. தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைதுசெய்து, சிறைகளிலே அடைத்து, அவமானப்படுத்தியிருக்கின்றன. நீதி கேட்டு, நியாயம் கோரி எம்மக்கள் நடாத்திய போராட்டங்களைக் கீழ்த்தரமாகக் கொச்சைப்படுத்தியிருக்கின்றன.

இத்தகைய நடுநிலை தவறிய ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் சர்வதேசச் சமூகம்மீது எம்மக்கள் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கைகளை மோசமாகப் பாதித்திருப்பதோடு அமைதி முயற்சிகளுக்கும் ஆப்புவைத்திருக்கின்றன் சமாதானப் பேச்சுக்களிற் பங்குகொண்ட இருதரப்பினரது சமநிலை உறவைப் பாதித்து, அமைதி ஒப்பந்தமும் முறிந்துபோக வழிசெய்திருக்கின்றன. அத்தோடு, இந்நாடுகள் வழங்கிவரும் தாராளப் பொருளாதார இராணுவ உதவிகளும் இரகசியமான இராஜதந்திர முண்டுகொடுப்புக்களும் சிங்கள இனவாத அரசை மேலும்மேலும் இராணுவப் பாதையிலேயே தள்ளிவிட்டிருக்கிறன. இதனால்தான், மகிந்த அரசு அநீதியான, அராஜகமான ஆக்கிரமிப்புப் போரை எமது மண்ணிலே துணிவுடனும் திமிருடனும் தொடர்ந்துவருகிறது.

இராணுவப் பலத்தைக்கொண்டு, தமிழரின் சுதந்திர இயக்கத்தை அழித்துவிடலாம் என்ற மமதையில் மகிந்த அரசு சமாதானத்திற்கான கதவுகளை இறுகச்சாத்தியது. தமிழ் மண்ணை ஆக்கிரமித்து, தமிழரை அடக்கியொடுக்கி ஆளவேண்டும் என்ற ஆசை என்றுமில்லாதவாறு தீவிரம்பெற்றது. முழுஉலகமும் முண்டுகொடுத்துநிற்க, போர்நிறுத்தத்தைக் கவசமாக வைத்து, சமாதானச் சூழலை வாய்ப்பாகப் பயன்படுத்தி, மகிந்த அரசு ஆக்கிரமிப்புப் போரை அரங்கேற்றியது. போர்நிறுத்தத்தைக் கண்காணித்த கண்காணிப்புக்குழு கண்களை மூடிக்கொண்டும் கைகளைக் கட்டிக்கொண்டும் கொழும்பிலே படுத்துறங்கியது. அனுசரணையாளரான நோர்வே நாட்டினர் அலுத்துப்போய் அமைதியாக இருந்தார்கள். எமக்குச் சமாதானம் போதித்த உலக நாடுகள் மௌனித்துப் பேசமறுத்தன. ஷசமாதானத்திற்கான போர்| என்றும் ஷபயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கை| என்றும் ஷதமிழரின் விடுதலைக்காக, விமோசனத்திற்காக நடாத்தப்படும் போர்| என்றும் சிங்கள அரசு தமிழின அழிப்பை நியாயப்படுத்திப் போரைத் தொடர்கிறது.

மகிந்த அரசு தனது முழுப் படைப்பலச்சக்தியையும் அழிவாயுதங்களையும் ஒன்றுதிரட்டி எமது தாயகத்தின் தெற்குப் பிராந்தியம் மீது பெரும் போரைக் கட்டவிழ்த்துவிட்டது. ஓயாத மழையாகப் பொழிந்த அகோரக் குண்டுவீச்சுக்களாலும் எறிகணைகளாலும் எமது பண்டைய நாகரிகம் புதைந்த வரலாற்றுமண் மயானபூமியாக மாறியது. சரித்திரப் பிரசித்தி பெற்ற தமிழரின் தலைநகரான திருமலை சிதைக்கப்பட்டது. தமிழரின் பண்டைய பண்பாட்டு நகரான மட்டக்களப்பு அகதிகளின் நகரானது. வடக்கில் தமிழரின் கலாச்சார மையமான யாழ்ப்பாணம் வெளியுலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது.

மொத்தத்தில், சிங்கள அரசின் தமிழின அழிப்புப்போர் தமிழரின் நிம்மதியான வாழ்வைக் கெடுத்து, தமிழரை அகதிகளாக்கி, தமிழரின் சமூக, பொருளாதார வாழ்வைச் சீரழித்து, தமிழருக்கு என்றுமில்லாத பேரவலத்தைக் கொடுத்திருக்கிறது. எமது தாய்நிலம், ஒருபுறம் சிங்கள இராணுவப் பேயாட்சிக்குட் சிக்கிச்சீரழிய, மறுபுறம் உயர்பாதுகாப்பு வலயங்கள், விசேட பொருளாதார வலயங்கள் என்ற பெயரில் வேகமாகச் சிங்களமயப்படுத்தப்படுகிறது. சிங்கக் கொடிகளை ஏற்றியும் சித்தார்த்தன் சிலைகளை நாட்டியும் வீதிகளுக்குச் சிங்களப் பெயர்களை மாற்றியும் பௌத்த விகாரைகளைக் கட்டியும் சிங்களமயமாக்கல் கடுகதி வேகத்திலே தொடர்கிறது. இதன் உச்சமாக, தமிழீழத்தின் தென் மாநிலம் முழுவதிலும் சிங்களக் குடியேற்றங்கள் காளான்கள் போன்று அசுரவேகத்திலே முளைத்துவருகின்றன.

அநீதியான யுத்தம் ஒன்றை நடாத்தி, பொருளாதாரத் தடைகளை விதித்து, போக்குவரத்துச் சுதந்திரத்தை மறுத்து, தமிழரைக் கொன்றுகுவித்து, இலட்சக்கணக்கில் இடம்பெயரவைத்துவிட்டு, தமிழின ஆன்மாவை ஆழமாகப் பாதித்த இந்தச் சோகமான நிகழ்வைச் சிங்களத் தேசம் வெற்றிவிழாவாகக் கொண்டாடிமகிழ்கிறது. தமிழரைப் போரில் வென்றுவிட்டதாகப் பட்டாசு கொழுத்தி, வாணவேடிக்கைகள் காட்டி ஆர்ப்பரிக்கிறது. கிழக்கு மீதான முற்றுகைவலயம் முற்றுப்பெற்றுவிட்டதாகவும் யாழ்ப்பாணத்தின் கழுத்தைச் சுற்றி முள்வேலியை இறுக்கிவிட்டதாகவும் சிங்கள இராணுவத் தலைமை எண்ணிக்கொண்டது. பொத்துவில் தொடக்கம் புல்மோட்டை வரை, கிழக்குக் கரையோரம் முழுமைக்கும் விலங்கிட்டுவிட்டதாகச் சிங்களப் பேரினவாதம் திமிர்கொண்டது. புலிகளுக்கு எதிரான போரிற் பெருவெற்றி ஈட்டிவிட்டதாகச் சிங்கள ஆட்சிப்பீடம் திருப்திகொண்டது.

எமது விடுதலை இயக்கத்தையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் சிங்களத் தேசம் எப்போதும் தவறாகவே புரிந்துகொள்கிறது; குறைத்தே மதிப்பீடுசெய்கிறது. பூகோள அமைப்பையும் புறநிலை உண்மைகளையும் மிகவும் துல்லியமாகக் கணிப்பிட்டு, எதிரியின் பலத்தையும் பலவீனத்தையும் சரியாக எடைபோட்டு, எதிர்விளைவுகளை மதிப்பீடு செய்து, இவற்றின் அடிப்படையிலேயே நாம் எமது போர்த்திட்டங்களைச் செயற்படுத்துகிறோம். எதிரியின் யுத்த நோக்குகளையும் உபாயங்களையும் முன்கூட்டியே தீர்க்கதரிசனமாக அனுமானித்தறிந்தே, எமது போர்த்திட்டங்களை வகுக்கிறோம். இப்படித்தான் கிழக்கிலும் எமது போர்த்திட்டங்களை வகுத்தோம். தற்காப்புத் தாக்குதல்களை நடாத்தியவாறு தந்திரோபாயமாகப் பின்வாங்கினோம். புலிகளின் தேசத்தில் அகலக்கால் நீட்டுவதும் நீட்டிய காலை நிலையாக வைத்திருப்பதும் எத்தனை ஆபத்தான விவகாரம் என்பதை சிங்களம் ஷஷஜெயசிக்குறு|| சமரிற் கற்றறிந்திருக்கலாம். ஆனால், சிங்கள இராணுவம் நாம் விரித்த வலைக்குள் வகையாக விழுந்து, பெருந்தொகையில் படையினரை முடக்கி, ஆளில்லாப் பிரதேசங்களை இன்று ஆட்சிபுரிகிறது. நில அபகரிப்பு என்ற பொறியிற் சிங்களம் மீளமுடியாதவாறு மீளவும் விழுந்திருக்கிறது. இதன் பாரதூரமான விளைவுகளை அது விரைவிற் சந்தித்தே ஆகவேண்டிவரும்.

வரலாற்றிலே முதல்தடவையாக எமது கரும்புலி அணியினரும் வான்புலிகளும் கூட்டாக நடாத்திய ஷஷஎல்லாளன்|| நடவடிக்கை சிங்கள இராணுவப்பூதத்தின் உச்சந்தலையிலே ஆப்பாக இறங்கியிருக்கிறது. இந்த மண்டை அடி சிங்களம் கட்டிய கற்பனைகள் கண்டுவந்த கனவுகள் அத்தனையையும் அடியோடு கலைத்திருக்கிறது. அநுராதபுர மண்ணில் எம்மினிய வீரர்கள் ஏற்படுத்திய இந்தப் பேரதிர்விலிருந்து சிங்களத் தேசம் இன்னும் மீண்டெழவில்லை. ஈகத்தின் எல்லையைத் தொட்டுவிட்ட இந்த வீரர்களின் உயர்ந்த உன்னதமான அர்ப்பணிப்பு சிங்களத் தேசத்திற்கு ஒரு செய்தியைச் சொல்கிறது. அதாவது, தமிழனை அழிக்க நினைப்போருக்கு அழிவு நிச்சியம் என்பதோடு, இந்த மாவீரர்கள் பற்றவைத்துள்ள விடுதலைத்தீயின் எரிநாக்குகளிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் எங்கிருந்தாலும் தப்பிவிடமுடியாது என்பதுதான் அது.

இராணுவ அடக்குமுறை என்ற அணுகுமுறை மூலம் தமிழரின் தேசியப் பிரச்சினையைத் தீர்க்கமுடியாது என்பதை மகிந்த அரசு இனியும் உணர்ந்துகொள்ளப்போவதில்லை. இராணுவ மேலாதிக்கத்தை எட்டிப்பிடிக்கவேண்டும், தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்துச் சிங்களமயமாக்கிவிடவேண்டும் என்ற ஆதிக்கவெறியும் சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து அகன்றுவிடப்போவதில்லை. தொடர்ந்தும் கோடிகோடியாகப் பணத்தைக் கொட்டி, உலகெங்கிலிருந்தும் அழிவாயுதங்களையும் போராயுதங்களையும் தருவிக்கவே மகிந்த அரசு முனைப்புடன் செயற்படுகிறது. எனவே, மகிந்த அரசு தனது தமிழின அழிப்புப்போரைக் கைவிடப்போவதில்லை.

தனது பாரிய இராணுவத் திட்டத்தையும் அதன் விளைவாகத் தமிழீழ மண்ணில் ஏற்பட்டுவரும் பேரவலங்களையும் மூடிமறைத்து, உலகத்தின் கவனத்தைத் திசைதிருப்பி, உலக நாடுகளின் உதவியையும் பேராதரவையும் பெற்றுக்கொள்ளவே மகிந்த அரசு அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவை அமைத்தது. இதனைக் கடந்த மாவீரர் நினைவுரையில் நான் தெளிவாக எடுத்துக்கூறியிருந்தேன். வருடக்கணக்கிற் காலத்தை இழுத்தடித்து, எந்தவிதமான தீர்வையும் முன்வைக்கமுடியாது, இறுதியில் இரண்டு மாத விடுப்பிற் பிரதிநிதிகள் குழுவினர் சென்றிருப்பது இதனையே காட்டிநிற்கிறது.

தமிழரின் தேசியப் பிரச்சினையை நீதியான முறையிற் சமாதான வழியில் தீர்த்துவைப்பதற்கான அரசியல் நேர்மையும் உறுதிப்பாடும் தென்னிலங்கையில் எந்த அரசியற் கட்சியிடமுமில்லையென்பது கடந்த அறுபது ஆண்டுகளில் தெட்டத்தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும் தமிழரின் தேசியத் தனித்துவத்தை அங்கீகரிக்கவும் தென்னிலங்கைக் கட்சிகள் தயாரில்லையென்பதும் இன்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என ஆளும்கட்சி அடம்பிடிப்பதும் தீர்வுத்திட்டமே வேண்டாம் என மஞ்சள், சிவப்புக் கட்சிகள் பிடிவாதமாக நிற்பதும் கடந்தகால நிலைப்பாடுகளிலிருந்து குத்துக்கரணம் அடித்து, அரசின் போர் நடவடிக்கைக்கும் ஆதரவு, சமாதான முயற்சிகளுக்கும் ஆதரவு எனப் பிரதான எதிர்க்கட்சி எதையும் தெளிவாகக் கூறாது இழுவல் மொழியில் நழுவிக் கண்ணாம்பூச்சி விளையாடுவதும் இதனைத்தான் தெளிவுபடுத்துகின்றன. இதன்மூலம் சிங்கள அரசியற் கட்சிகள் அனைத்தும் அடிப்படையில் தமிழின விரோதப் பேரினவாதக் கட்சிகள் என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படியான இனவாதக் கட்சிகளிடமிருந்து யாரும் தீர்வை எதிர்பார்த்தால், அது அரசியல் அசட்டுத்தனமேயன்றி வேறொன்றுமன்று.

சிங்களப் படைகளின் “அக்கினிக்கீல” என்ற பாரிய படைநடவடிக்கையைத் தவிடுபொடியாக்கி, போரிற் புலிகளை வெற்றிகொள்ளமுடியாது என்பதைச் சிங்களத் தேசத்திற்கு இடித்துரைத்தபோதுதான் அன்று சிங்களம் அமைதி முயற்சிக்கு ஆர்வம்காட்டியது. எமது உயரிய போராற்றலை வெளிப்படுத்தி, இராணுவ மேலாதிக்கநிலையில் நின்றபோதுதான் சிங்களத் தேசம் அமைதி ஒப்பந்தத்திற் கைச்சாத்திட்டது. உலக நாடுகளிலிருந்து பெற்ற தாராள நிதியுதவிகளையும் ஆயுத உதவிகளையுங் கொண்டு தனது சிதைந்துபோன இராணுவ இயந்திரத்தைச் செப்பனிட்டு, தனது இராணுவ அரக்கனைப் போரிற்குத் தயார்ப்படுத்திச் சிங்களத் தேசம் சமாதான வழியிலிருந்தும் சமரசப் பாதையிலிருந்தும் விலகித் தனது பழைய இராணுவப்பாதையிற் பயணிக்கிறது.

மகிந்த அரசு ஒருதலைப்பட்சமாகப் போர்நிறுத்தத்தை முறித்து, தமிழர் தாயகத்தின் புவியியல் ஒருமைப்பாட்டையும் தனித்துவத்தையும் அழித்தொழிக்கும் இராணுவச் செயற்றிட்டத்தை இன்று ஈவிரக்கமின்றிச் செயற்படுத்திவருகிறது. ஆயிரக்கணக்கில் எம்மக்களைக் கொன்றுகுவித்து, கடத்திப் புதைகுழிகளுக்குட் புதைத்து, பெரும் மனித அவலத்தை எம்மண்ணில் நிகழ்;த்திவருகிறது. அனுசரணையாளரான நோர்வேயை அதட்டி அடக்கிவருகிறது. கண்காணிப்புக்குழுவைக் காரசாரமாக விமர்சித்துவருகிறது. தனது பயங்கரவாதத்தை மூடிமறைக்க ஐ.நாவின் உயர் அதிகாரிகளைக்கூடப் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கிறது. செய்தியாளர்களோ தொண்டுநிறுவனங்களோ செயற்படமுடியாதவாறு தமிழர் தாயகத்திற் பதற்றத்தையும் பயப்பீதியையும் உருவாக்கி, உண்மை நிலைவரத்தை உலகிற்கு மறைத்துவருகிறது.

உலக நாடுகள் தமது சொந்தப் பொருளாதாரக் கேந்திர நலன்களை முன்னெடுக்கின்ற போதும் மனித உரிமைகளுக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் மதிப்புக்கொடுக்கத் தவறுவதில்லை. இந்தப் பிரபஞ்சமும் சரி, மனித வாழ்வியக்கமும் சரி, உலக உறவுகளும் சரி தர்மத்தின் சக்கரத்திலேயே இன்னமும் சுழல்கின்றன. இதனால்தான், விடுதலைக்காகப் போராடிய கிழக்குத்தீமோர், மொன்ரிநீக்ரோ போன்ற தேசங்கள் சர்வதேசத்தின் ஆதரவோடும் அனுசரணையோடும் புதிய தேசங்களாக அடிமை விலங்கை உடைத்தெறிந்துகொண்டு விடுதலை பெற்றன. கொசோவோ போன்ற தேசங்களின் விடுதலைக்காகவும் சர்வதேசம் தொடர்ந்தும் தீவிரமாகச் செயற்பட்டுவருகிறது.

இருப்பினும், எமது தேசியப் பிரச்சினையிற் சர்வதேச நாடுகளின் நகர்வுகளும் நடவடிக்கைகளும் எம்மக்களுக்குத் திருப்தி தருவனவாக அமையவில்லை. இந்நாடுகள் மீது எம்மக்கள் வைத்திருந்த நம்பிக்கை இன்று தகர்ந்துபோயிருக்கிறது. இந்நாடுகளின் நடுநிலைச் செயற்பாட்டிலே இன்று பெரும் கேள்விக்குறி எழுந்திருக்கிறது. சமாதானத்திற்காக உழைத்த எமது தவப்புதல்வன் தமிழ்ச்செல்வனைச் சர்வதேசம் சமாதானம் பேசியே சாகடித்திருக்கிறது. அமைதிப் பாதையில் இயங்கிய எமது விடுதலை இயக்கத்தின் இதயத்துடிப்பை வலுக்கட்டாயமாக இழுத்து நிறுத்தியிருக்கிறது. எமது இதயங்களில் இலட்சிய நெருப்பை மூட்டி, மறைந்த மாவீரருக்கு ஆண்டுதோறும் விளக்கேற்றும்போது எப்போதும் என்னருகிருந்த எனது அன்புத்தம்பி தமிழ்ச்செல்வனுக்கும் சேர்த்து இம்முறை என்கையால் ஈகச்சுடரேற்றும் நிலைமையைச் சர்வதேசம் உருவாக்கியிருக்கிறது. உலகத் தமிழினத்தையே கண்ணீரிற் கரைத்து, கலங்கியழவைத்திருக்கிறது.

சிங்களத் தேசத்தின் சமாதான விரோதப்போக்கை, போர்வெறியை உலக நாடுகள் உறுதியோடு கண்டித்திருந்திருந்தால், தமிழ்ச்செல்வன் இன்று உயிரோடு இருந்திருப்பான். சமாதானத்திற்கு இப்படியொரு பேரிடி விழுந்திருக்காது. சமாதானத்தின் காவலர்களாக வீற்றிருக்கும் இணைத்தலைமை நாடுகளும் இந்தப் பெரும் பொறுப்பிலிருந்து தவறியிருக்கின்றன. சமாதானத்தைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பும் தார்மீகக் கடமைப்பாடும் இந்த இணைத்தலைமை நாடுகளுக்கு இல்லையென்றால் காலத்திற்குக்காலம் இடத்திற்கிடம் அவர்கள் மாநாடு கூட்டுவதன் அர்த்தம்தான் என்ன? சிங்கள அரசிற்குச் சீர்வரிசை செய்து, ஆயுத உதவிகள் அளித்து, தமிழரை அழித்துக்கட்டத் துணைபோவதுதான் இந்த நாடுகளின் உள்ளார்ந்த நோக்கமா? இத்தனை கேள்விகள் இன்று எம்மக்களது மனங்களிலே எழுந்திருக்கின்றன. எனவே, சர்வதேசச் சமூகம் இனியாவது எமது விடுதலைப் போராட்டம் தொடர்பாக நீதியான புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என எமது மக்கள் உறுதியாக நம்புகின்றனர். இனஅழிப்பைத் தொடரும் சிங்கள அரசிற்கு இராணுவப் பொருளாதார உதவிகள் வழங்குவதை அடியோடு நிறுத்தி, சர்வதேசச் சமூகம் எமது மக்களின் சுயநிர்ணய உரிமையையும் இறையாண்மையையும் ஏற்று அங்கீகரிக்கும் என எமது மக்கள் இன்றைய புனிதநாளிலே எதிர்பார்த்து நிற்கின்றனர்.

எனது அன்பார்ந்த மக்களே!

நாம் பூமிப்பந்திலே வாழ்கின்ற தனித்துவமும் விசேட பண்புகளும் கொண்ட ஒரு சிறப்புவாய்ந்த இனம்; மிகவும் தொன்மை வாய்ந்த இனம்; தனித்துவமான இன அடையாளங்களோடும் தேசிய இனக்கட்டமைப்போடும் வாழுகின்ற ஓர் இனம். நீண்ட காலமாக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் இன ஒடுக்குமுறைக்கு எதிராக, விடிவு தேடி, விடுதலை வேண்டிப் போராடிவருகிறோம். நாம் காலங்காலமாகப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த எமது சொந்த மண்ணில் எமக்கேயுரித்தான வரலாற்று மண்ணில் அந்நியரிடம் பறிகொடுத்த ஆட்சியுரிமையை மீளநிலைநாட்டுவதற்காகவே போராடிவருகிறோம். இழந்துவிட்ட எமது இறையாண்மையை மீளநிறுவி, எமது சுதந்திரத் தேசத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காகவே நாம் போராடிவருகிறோம்.

எமது மக்களின் இந்த நீதியான, நியாயமான, நாகரிகமான போராட்டத்தைச் சிங்களத் தேசம் தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ள மறுத்துவருகிறது. மாறாக, எம்மண்மீதும் மக்கள்மீதும் பெரும் இனஅழிப்புப் போரை, ஆக்கிரமிப்புப் போரைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. போர் என்ற போர்வையில் மாபெரும் மனித அவலத்தை ஏற்படுத்திவருகிறது. அறுபது ஆண்டுக்காலமாக அநீதி இழைக்கப்பட்டு, அடக்குமுறைக்கு ஆட்பட்டு, சாவும் அழிவும் எண்ணில்லா இன்னல்களும் குடிபெயர்ந்த அகதிவாழ்வுமாக எம்மக்களின் அன்றாடச் சீவியம் சீரழிந்த போதும் எமக்காக எந்தவொரு நாடோ, எந்தவோர் அமைப்போ குரல்கொடுக்கவில்லை. ஆதரவோ அனுதாபமோ தெரிவிக்கவில்லை. உலகமே கண்ணை மூடிக்கொண்டு, பாராமுகமாகச் செயற்படுகிறது.

பூமிப்பந்தெங்கும் எண்பது மில்லியன் தமிழர் பரந்துவாழ்ந்த போதும், எமக்கென ஒரு நாடு இல்லாதமைதான் இந்தப் பரிதாப நிலைக்கு - இந்த மோசமான நிலைமைக்குக் காரணம். எனவே, எமது மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய எழுச்சிநாளில் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ்மக்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைக்காக உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுமாறு வேண்டிக்கொள்கிறேன். அறிவுவளம், செயல்வளம், பொருள்வளம், பணவளம் என உங்களிடம் நிறைந்துகிடக்கும் அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி, எமது விடுதலைப் போராட்டத்திற்கு நீங்கள் வழங்கிய பங்களிப்புக்களுக்கும் உதவிகளுக்கும் இச்சந்தர்ப்பத்திலே எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதேபோன்று வருங்காலத்திலும் நிறைந்த பங்களிப்பை வழங்குமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.

சத்திய இலட்சியத்திற்காகச் சாவைச் சந்தித்துச் சரித்திரமாவதற்கு ஆயிரமாயிரம் வீரர்கள் எமது விடுதலை இயக்கத்தில் அணிவகுத்து நிற்கும் வரை, எமக்கு முன்னால் எழுகின்ற எல்லாத் தடைகளையும் நாம் உடைத்தெறிந்து போராடுவோம். எதையும் தாங்கும் இதயத்துடனும் இரும்பையொத்த இலட்சிய உறுதியுடனும் அஞ்சாத வீரத்துடனும் எமது வீரர்கள் சமராடும் வரை, எத்தனை துயர் வரினும் எத்தனை இடர் வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம். புனித இலட்சியத்திற்காகத் தம்மையே ஆகுதியாக்கிக்கொண்ட எமது மாவீரரை நினைவுகூரும் இன்றைய நாளில் நாம் ஒவ்வொருவரும் அந்த மாவீரரின் இலட்சியக் கனவை எமது நெஞ்சங்களிலே சுமந்து, அந்த மாவீரரின் இறுதி இலட்சியம் நிறைவுபெறும் வரை தொடர்ந்து போராடுவோம்.


"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
(வே. பிரபாகரன்)
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.


ஈழத்தமிழ்.நெட்

பாகிஸ்தானுக்கு ஒரு நியாயம் இலங்கைக்கு வேறு நியாயமா?

Posted on : 2007-11-27


உகண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெற்று முடிந்த பொதுநல நாடுகள் அமைப்பின் உச்சி மாநாட்டைஒட்டி இலங்கை நடந்துகொண்ட குளறுபடித்தனம் கண்டு உலகமே கைகொட்டிச் சிரிக்கிறது.
அதேசமயம், பொதுநல அமைப்பு நாடுகள் ஒவ்வொரு தரப்புக்கு ஒவ்வொரு விதமாக மாறுபாடான அணுகுமுறையோடு நடந்துகொண்டமையைப் பார்க்கும்போது அதுவும் கூட நையாண்டி நளினமாகத்தான் தோன்றுகின் றது என்பதைக் குறிப்பிட்டேயாக வேண்டும்.
பொதுநல அமைப்பு நாடுகள் தமது கூட்டமைப்பின் உறுப்புரிமையிலிருந்து பாகிஸ்தானை இடைநிறுத்த எடுத்த முடிவையும்
அந்த முடிவை ஆரம்பத்தில் ஆதரித்த இலங்கை பின் னர் அதைக் கடுமையாக எதிர்த்தமையையும் எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.
ஆனால், ஜன நாயக விழுமியங்கள் பாதிக்கப்பட்டு, அவசரகாலச் சட்டத் தினால் அடிப்படை மனித உரிமைகள் மிதிக்கப்படும் நாடாக பாகிஸ்தான் மட்டுமே பொதுநல அமைப்பு நாடுகளின் கண்களுக்குப் பட்டது என்பதைத் தான் எம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை.
பாகிஸ்தானை இடைநிறுத்தும் பொதுநல நாடுகள் அமைப்பின் தீர்மானத்தை இலங்கை எதிர்த்தமைக்குப் பிர தான காரணங்கள் இரண்டு.
ஒன்று உள்நாட்டு யுத்தத்தில் அந்தரிக்கும் கொழும் புக்கு இராணுவ ஆயுதத் தளபாடங்கள் மற்றும் இராணுவச் சேவை, பயிற்சி உதவிகளை வழங்கிக் கைகொடுத்து வரும் முக்கிய நாடு பாகிஸ்தான்தான். ஆகவே, அந்த நாட்டுக்கு இயல் பாகவே கைகொடுக்க இலங்கை முன்வந்தமை ஆச்சரியப் படத்தக்கதல்ல. அத்துடன், பாகிஸ்தானை பொதுநல நாடு கள் அமைப்பிலிருந்து இடைநிறுத்தும் முடிவை இலங் கையும் ஆதரித்தது என்ற காரணத்துக்காக இலங்கை மீது பாகிஸ்தான் சீற்றம் கொண்டு, இலங்கைக்கான உதவிகளை நிறுத்தத் தீர்மானித்து, பாகிஸ்தான் இலங்கையைக் கைவிடுமானால் கொழும்பின் கதி அம்போதான். ஆகவே, எப்படி யாவது பாகிஸ்தானை தாஜா பண்ணி, சமாளித்து, திருப்தி செய்து, தன்னுடன் அரவணைத்து வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் கொழும்புக்கு உண்டு என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. இதற்காகத்தான் ஆரம்பத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லா கம திசைமாறிச் செயற்பட்டபோதும், பின்னர் இலங்கை ஜனாதிபதி தாமே நேரடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு பாகிஸ்தானுக்காகக் குரல் எழுப்பி, பாகிஸ்தானுடனான உற வைச் சமாளித்துக் கொண்டார்.
அடுத்தது "இனம் இனத்தையே சாரும்' என்ற கார ணத்தில் அமைந்தது. அவசரகாலச் சட்டத்தை நடை முறைப்படுத்தி, ஜனநாயக விழுமியங்களைக் குழி தோண் டிப் புதைத்தமைக்காக பாகிஸ்தான் மீது பொதுநல நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுக்குமானால் அந்தத் தொப்பி தனக்கும் அளவாக விழும் என்பதால் அடுத்த இலக்குத் தானாகி விடலாமோ என்ற அச்சம் கொழும்புக்கு. அதனால் தான் இந்தக் குற்றச்சாட்டுக்காக பாகிஸ்தானைப் பொறுப் பாக நிறுத்தும் நடவடிக்கையிலிருந்து அந்த நாட்டை விடு விக்கத் தலைகீழாக நின்றது கொழும்பு.
கடந்த இரண்டு, மூன்று வாரங்களில் பாகிஸ்தானில் நடந்தது என்ன? ஆக, அவசரகாலச் சட்டம் புதிதாகக் கொண்டுவரப்பட்ட விடயம்தான். அதன் கீழ் ஜனநாயகக் கட்சிகளின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். அவ்வளவே. அவசரகாலச் சட்டத்தின் கீழ் புதிதாகக் கொலைகளோ, கொடூரங்களோ அங்கு அரங் கேறவில்லை.
ஆனால், இலங்கையிலோ நிலைமை அதைவிட மோசம். இந்த அரசின் ஆட்சி, அவசரகாலச் சட்டம் என்ற தூணில் தான் நீண்ட காலமாகத் தொங்கிக் கொண்டு தொடர்கின்றது.
இந்த அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ்
ஆள்கள் கடத்தப்படுகின்றார்கள்; காணாமற்போகச் செய்யப்படுகின்றார்கள்; கடத்திக் கப்பம் அறவிடப்படு கின்றது; சட்ட விரோதக் கொலைகள் கணக்கு, வழக்கின் றித் தொடர்கின்றன. கைதுகளும், தடுத்து வைப்புகளும் எல்லை மீறி நடக்கின்றன. துணைப் படைகளின் அட்ட காசம் அளவு கடந்துள்ளது. பத்திரிகைச் சுதந்திரம் பறிக் கப்பட்டுள்ளது. ஊடகங்களும், ஊடகவியலாளரும் கொடூ ரத் தாக்குதலுக்கு இலக்காகும் அவலம் நீடிக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களோ அச்சுறுத்தப்பட்டு அவர் களின் நாடாளுமன்றச் சுதந்திரம் பறிக்கப்படுகின்றது. குற்றமிழைக்கும் சீருடையினரை சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாதவாறு விசேட சட்ட விலக்களிப்புக் கவசம் வழங் கப்பட்டிருக்கின்றது. பெரும் தொகைப் பணத்திற்கு அரசி யல்வாதிகளை விலைக்கு வாங்கும் "வர்த்தக அரசியல்' நாடாளுமன்றத்தில் கோலோச்சுகின்றது. மொத்தத்தில் இங்கு அவசரகால விதிகளின் கீழ் அராஜக ஆட்சி அரங்கேறுகின் றது.
இவற்றையெல்லாம் இங்கு கண்டுகொள்ளாத பொது நல நாடுகள் அமைப்பின் கண்களுக்கு பாகிஸ்தான் அராஜ கங்கள் மட்டுமே தோற்றுகின்றன.
இந்தச் "சீத்துவத்தில்' பொதுநல அமைப்பு நாடுகளின் அடுத்த அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தை நடத்தும் வாய்ப்பு என்ற கௌரவத்தையும் கொழும்புக்கு வழங்க அந்த அமைப்பு முன்வந்திருக்கின்றதாம்!
ஒருபுறம் பாகிஸ்தான் மீது பாய்ந்துகொண்டு, மறுபுறம் இலங்கைக் கொடூரங்களைக் கண்டும் காணாதது போல பொறுப்பற்று இந்த அமைப்பு செயற்படுவது ஒரு கண்ணில் சுண்ணாம்பும், மறு கண்ணில் வெண்ணெய்யும் தடவு வதற்கு ஒப்பாகும். பொதுநல நாடுகள் அமைப்பு சகல நாடு களின் விடயத்திலும் ஒரே நீதியைப் பின்பற்றுவதுதான் பொருத்தமாக இருக்கும்.
அப்படிப் பின்பற்றுமானால் பாகிஸ்தானுக்கு விதித்த உறுப்பினர் உரிமை இடைநிறுத்தம் என்ற நடவடிக்கையை அது இலங்கை மீதும் பிரயோகித்திருக்க வேண்டும். தவறி விட்டதே!
uthayan.com

Monday, November 26, 2007

'தமிழின அழிப்பிற்கான வரவு-செலவுத் திட்டம்!"

சிறிலங்கா அரசாங்கத்தின் 2008 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் பதினாறு வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. ஜனநாயக விழுமியங்களை முற்றிலும் புறம் தள்ளி, 'பேரம் பேசுதல், கொலை அச்சுறுத்தல்கள், ஆட்கடத்தல்கள், கட்சித்தாவல்கள்" போன்ற அநாகரிகச் செயற்பாடுகளை மகிந்த ராஜபக்சவின் அரசு மேற்கொண்டு, தனது வரவு-செலவுத் திட்டத்தை ஒருவாறு நிறைவேற்றியுள்ளது. இந்த வரவு-செலவுத் திட்டத்தின் மூன்றாம் நிலை வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, டிசம்பர் மாதம் 14 ஆம் திகதியன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில், சில கருத்துக்களை எமது வாசகர்கள் முன்வைக்;க விழைகின்றோம்.

இந்த வரவு-செலவுத் திட்டத்தில் சுமார் பதினாறாயிரம் கோடி ரூபாய்களை, தமிழ் மக்;கள் மீதான யுத்தச் செலவிற்காக மகிந்தவின் அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக அறிகின்றோம். இதற்கும் மேலாகக் கடன் அடிப்படையிலும், அன்பளிப்புக்கள் மூலமும், வெளிநாட்டு நிபுணத்துவ உதவிகள் மூலமும் யுத்தத்திற்குத் தேவையான செயற்பாடுகள் முடுக்கி விடப்பட உள்ளன. அப்படிப் பார்க்கப் போனால் முப்பதாயிரம் கோடி ரூபாய்களுக்கு மேலான நிதியைக் கொண்டுதான், அடுத்த ஆண்டு தமிழ் மக்களுக்கு மீதான யுத்தத்தை, மகிந்தவின் அரசு நடாத்தத் திட்டமிட்டிருக்கின்றது என்பது புலனாகிறது. சம்பந்தப்பட்ட சில வெளிநாடுகளின் ~மறைமுகமான உதவிகள்| இதில் உள்ளடக்கப்படவில்லை.

இந்த யுத்தச் செலவுகளுக்கான தொகையின் ஒரு விழுக்காடுப்; பகுதி கூட, தமிழ் மக்களின் நலனுக்காகவோ, தமிழ் மக்களின் மறுவாழ்வுக்காகவோ ஒதுக்கப்படவில்லை. இவற்றைச் செய்து வருகின்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைத் தடை செய்யும் காரியத்தைத்தான் மகிந்தவின் அரசு செய்துள்ளது. அத்தோடு, உதவி செய்கின்ற வெளிநாட்டு அமைப்புக்களையும் வெளியேற்ற முனைவதில்தான் சிங்கள அரசு முனைப்பாக நிற்கின்றது. ஜனநாயகம், மக்கள் உரிமை, மனித உரிமை, அவர்களின் நலன் என்று பெரிதாக வாய் கிழியப் பேசி அறிக்கைகளை விடுகின்ற நாடுகளோ, இது குறித்து எந்தவித அக்கறையுமே கொள்ளவில்லை.

சிறிலங்கா அரசு ஒரு காட்டுமிராண்டி அரசு என்றால், அதற்குத் துணை நிற்கின்ற சர்வதேசமோ, சிறிலங்காவையும் விட மோசமான, கேவலமான, ஏமாற்றுகின்ற, பொய்மையான, கீழ்த்தரமான நிலையில் நிற்கின்றது.

மேற்கூறிய விடயங்களின் அடிப்படையில் சில கருத்துக்களை முன்வைத்துத் தர்க்கிக்க விழைகின்றோம்.

ஐனநாயக மரபற்ற ஓர் அரசு, நாட்டிற்கு எந்தவித நன்மையும் செய்யாத ஒரு காட்டுமிராண்டி அரசு, தமிழ் மக்களை அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ள ஒரு பேரினவாத அரசு, மிகப்பெரிய எதிர்ப்புக்களுக்கு இடையே கொண்டு வந்த, போருக்கான வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதற்குக் காரணமாக இருந்தவர்கள் யார்?

தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் என்று தங்களை அடையாளம் காட்டிக் கொள்;கின்ற 'இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய முஸ்லிம் காங்கிரஸ், நுPனுP போன்ற கட்சிகள்தான் மகிந்த ராஜபக்ச அரசின் வரவு-செலவுத் திட்டத்திற்குத் தங்களின் ~மகத்தான| ஆதரவை அளித்து, வரவு-செலவுத் திட்டம் நிறைவேறக் காரணமாக விளங்கியுள்ளார்கள்.

இன்று இந்தக் கட்சிகள், தங்கள் ஆதரவுக்கான காரணங்களுக்காக என்;னதான் ~விளக்கங்களைக்| கொடுத்தாலும், இங்கே ஒரு விடயத்தை நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும்.

தமிழ் மக்;கள் மீதான போருக்காக, உத்தியோகபூர்வமாகப் பதினாறாயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ள இந்த வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகத் தங்கள் வாக்குகளை வழங்கியுள்;ள மேற்கூறிய 'தமிழ்க் கட்சிகள்" தங்களுடைய இந்த வாக்குகள் மூலம் தமிழ் மக்கள் மீதான போருக்கான ஓர் அங்கீகாரத்தை வழங்கியுள்ளார்கள் என்றுதான் நாம் கருதுகின்றோம்.

தமிழர்களை அழிக்க வேண்டும் என்று வெளிப்டையாகச் சொல்லி வருகின்ற ஜேவிபியே, வேறு காரணத்திற்காக, மகிந்த அரசின் வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளது. இந்த வாய்ப்பை உபயோகப்படுத்தி, தமிழர்களுக்கு எதிரான - அவர்களை அழிக்க முயலும் யுத்தத்திற்கு ஆதரவான- இந்த வரவு-செலவுத் திட்டத்தைத் தோற்கடிக்க வேண்டிய 'தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள்" என்று தம்மைச் சொல்லி;க்கொள்கின்ற இவர்கள், தமிழ் மக்களின் விரோதியான மகிந்த ராஜபக்சவோடு, ஒட்டிக்கொண்டு, தமிழ் மக்களுக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்.

அற்ப பதவிகளுக்காகவும், தனிப்பட்ட சுகவாழ்வுக்காகவும், தங்களுடைய மக்களது நலன்சார்ந்த எதையுமே கவனிக்காமல், இவர்கள் விலை போயுள்ளார்கள். இவர்களுக்கு மனச்சாட்சியே கிடையாது என்பதால், இவர்கள் தங்களுடைய துரோகத்தனங்கள் குறித்துக் கவபை;படப் போவதில்லை என்பதுதான் யதார்த்த நிலையாகும்!

மலையக மக்களின் நிலை குறித்து முதலில் சில கருத்துக்களைச் சொல்ல விழைகின்றாம். மலையக மக்களின் தலைவர்கள், மலையக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதவர்களாகத்தான் தொடர்ந்தும் இருந்து வருகின்றார்கள். தமது பதவிகளுக்காகவும், தங்களின் சுயநல இன்பங்களுக்காகவும், தமது சொந்த இனத்தையே விற்று விடவும் இவர்கள் தயங்குவதில்லை. இதில் ஆறுமுகம் தொண்டமான் பற்றிப் புதிதாக எதையும் சொல்லத் தேவையில்லை. இவருடைய பரம்பரையே தொடர்ந்தும் தன்னுடைய மக்களைக் காட்டிக் கொடுத்து, அடிமைகளிலும் அடிமைகளாக்கி, ஏமாற்றி வருகின்றது. தன்னுடைய முன்னோர்களைப் போலவே இவரும் சிறிலங்கா அரசு வழங்குகின்ற ~எலும்புத் துண்டுகளை| நக்கிக் கொண்டு திரிகின்றார்.

இந்த ~எலும்புத் துண்டுகளை| நக்குவதற்கு ஆறுமுகம் தொண்டமானுக்குப் போட்டியாகப் புதிதாக தோன்றியவர்தான் மலையக மக்கள் முன்னணியின் சந்திரசேகரன் அவர்கள்! தமிழீழம் சென்று, தலைமையிடம் பெரிதாக ~தமிழர்;கள்-உணர்வுகள்| என்று சொல்லி விட்டு, இன்று மகிந்த ராஜபக்சவை வானுயரப் புளுகிக் கொண்டு, அவரோடு இணைந்து, சுயலாப அரசியல் நடாத்திக் கொண்டு நிற்கின்றார். காலை எழுந்தவுடனேயே ஆரம்பமாகின்ற இவருடைய தனிப்பட்ட பலவீனம் காரணமாக, மலையக மக்களை இவர் விலை பேசி விற்கின்றார். அத்தோடு தமிழீழ மக்களுக்கு எதிரான போருக்கு ஆதரவாக இன்று வாக்களித்தும் நிற்கின்றார்.

மலையக மக்கள் இன்னும் முற்றாக எழுச்சி பெறவில்லை. அவர்கள் முற்றாக எழுச்சி பெறுவதற்கு இன்னும் நாளெடுக்கக்கூடும் என்றாலும் மலையக மக்கள் முன் போன்ற நிலையில் இல்லாமல், இன்று அறிவு ரீதியாக, உணர்வு ரீதியாக, பட்டறிவு ஊடாக, மெதுவாக வளர்ச்ச்pயடைந்து வருகின்றார்கள். ஆனால் இவர்களுடைய தலைவர்களோ அற்ப பதவிகளுக்காவும், அற்ப பணத்திற்காகவும் சிங்களப் பேரினவாதத்திடம் விலை போய் விட்டார்கள்.

மலையக மக்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுகின்றார்கள்;, காணாமல் போகி;றார்கள், கொலை செய்யப்படுகின்றார்கள். அவர்களுடைய நிலங்களும் பறிக்கப்பட்டு வருகின்றன. மலையகத் தலைவர்களோ இவற்றைக் கண்டு கொள்ளாமல், சும்மா இருந்து கொண்டு கதை பேசிக்கொண்டு தங்கள் மக்களைக் காட்டிக்கொடுத்த வண்ணம் உள்ளார்கள்.

மலையக மக்களின் நிலை, அப்படியே முஸ்லிம் மக்களுக்கும் பொருந்தும். முஸ்லிம் தலைவர்களும,; தொடர்ந்து முஸ்லிம் மக்களை ஏமாற்றி வருகின்றார்கள். முஸ்லிம் மக்களும் தொடர்ந்து அழிவுகளைச் சந்தித்து வருகின்றார்கள். அவர்களுடைய நிலங்களும் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. மிகப் பாரிய இக்கட்டுக்களைச் சிங்கள அரசு முஸ்லிம் மக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் முஸ்லிம் மக்களின் தலைவர்களும் சிங்களப் பேரினவாதம் வழங்கும் எலும்புத் துண்டுகளுக்காக சிங்கள அரசுக்குத் தொடர்ந்தும் ஆதரவைக் கொடுத்து வருகின்றார்கள்.

டக்ளஸ் தேவானந்தா பற்றிப் புதிதாக எதையும் விளக்கத் தேவையில்லை. மேற்கூறிய எல்லோரையும் விடத் தனக்குப் பெரிய எலும்புத் துண்டு கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தன் இனத்தையே தொடர்ந்தும் காட்டிக் கொடுத்து வருபவர் அவர்!

சிங்களப் பேரினவாத அரசிற்கு, அரசியல் துரோகிகளின் விலை என்னவென்று சரியாகத் தெரியும். இன்று சுமார் 108 அமைச்;சர்கள் சிங்கள அரசில் அங்கம் வகிக்கின்றார்கள். சிறிலங்கா அரசிற்கு எந்தவிதமான உருப்படியான கொள்கைகளும் இல்லாதது போன்றே, இந்த அரசியல்வாதிகளுக்கும் எந்தவிதக் கொள்கையோ, மக்கள் நலன் குறித்த அக்கறையோ கிடையாது. தங்களுடைய சுகவாழ்க்;கையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்வதுதான் இவர்களுடைய நோக்கமாகும்.

சிங்களப் பேரினவாத அரசு, தன்னுடைய அநியாயங்களுக்குத் துணை போகின்றவர்களுக்கு எலும்புத் துண்டுகளை அள்ளி வழங்கும். தனக்கு எதிராகக்; கிளம்புவர்களை அச்சுறுத்தும், கடத்தும், கொலைப் பயமுறுத்தல் விடும், கொலையும் செய்யும். இவற்;றிற்கும் மேலாக தனக்கு எதிராக எழுதும் பத்தி;ரிகை அலுவலகத்தை எரிக்கும்.

இப்படியான குளறுபடியான அரசியலையும், மனிதஉரிமை மீறல்களையும் சிறிலங்கா அரசு தமிழர்கள் மீது மட்டும் புரியவில்லை. சாதாரணச் சிங்களவர்களுக்கும் இதே அநியாயங்களைத்தான் சிங்கள அரசு செய்கிறது.

இப்படிப்பட்டவர்கள் ஒரு மிகப் பெரிய இனப்பிரச்சனையைச் சுமூகமாக, நேர்மையாகத் தீர்;;ப்பார்கள் என்றும், அதனைச் சமாதானப் பேச்சுக்கள் ஊடாகப் பெறலாம் என்றும் சர்வதேசம் இன்றுவரை சொல்லி வருவதுதான் வேடிக்கையாகும்!

தமிழர் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள், தன்னுடைய கடந்த ஆண்டு மாவீரர் தினப்பேருரையின் போது, 'சிங்களப் பௌத்தப் பேரினவாதம் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நீதியான சமாதானத் தீpர்வைத் தராது" என்று தெரிவித்திருந்தார். மகிந்த ராஜபக்சவின் பேரினவாத அரசு, எமது தேசியத் தலைவரின் கூற்றை மீண்டும் மீண்டும் நிரூபித்தே வந்துள்ளது. ஆகையால்தான் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தமிழீழ விடுதலைக்கான, நியாயமான எமது சுதந்திரப் போராட்டத்தை அங்கீகரிக்கும்படி சர்வதேசத்திடம் கடந்த ஆண்டு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனால் வருந்தத்தக்க வகையில், நியாயமற்;ற வகையில் சர்வதேசம் நடந்து கொண்டிருக்கின்றது. ஹிட்லரைப் போலச் செயல்படுகின்ற சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆதரவாக, அதனுடைய தமிழின அழிப்புக்கு ஆதரவாக, அதனுடைய மனித உரிமை மீறல்களுக்கு ஆதரவாகச் சர்வதேசம் இயங்குகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரும், சமாதானப்பேச்சு வார்த்தைகளை முன்னின்று நடாத்தியவருமான பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை சிங்கள பயங்கரவாத அரசு கொலை செய்ததன் மூலம், சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குப் பாரிய பின்னடைவை அரசு ஏற்படுத்தியது. அப்போதும்கூட சர்வதேசம் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தது.

இவை எல்லாவற்றிற்கும் அப்பால் சர்வதேசம் நீதிக்கும், நேர்மைக்கும் புறம்பாக நடந்து கொண்டது. தமிழீழ விடுதiலைப் புலிகள் இயக்கத்தின் மீது தேவையற்ற அழுத்தங்களைச் சர்வதேசம் மேற்கொண்டதன் மூலம், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அது ஒடுக்க முனைந்தது. அத்தோடு மட்டும் நின்றுவிடாமல், மகத்தான புனருத்தாரண, புனர்நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு வருகின்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதியை முடக்கி வைத்ததன் மூலம், தமிழ் மக்களின் நலனுக்கு எதிராகத் தான் செயல்படுவதையும் பகிரங்கப்படுத்திக் கொண்டது.

சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும்; ஜனநாயக விரோதச் செயல்பாடுகள் குறித்து, மேற்குலகம் வெறுமனே அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருக்கின்றதே தவிர செயல் வடிவம் எதுவுமே கொடுக்கவில்லை. மாறாகச் சிறிலங்கா அரசிற்கு மேலும் மேலும் ஆயுத உதவிகளைச் செய்து வருவதன் மூலம், மேற்குலகம் சிறிலங்காவின் தமிழின அழிப்புக்குத் துணையாக நிற்கின்;றது. இன்று சுமார் பதினாறாயிரம் கோடி ரூபாய்களை தமிழ் மக்கள் மீதான யுத்தச் செலவாக, சிறிலங்கா அரசு தன்னுடைய வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கியுள்ளதையும் இதே சர்வதேசம் பார்த்துக் கொண்டுதான் சும்மா நிற்கின்றது.

இந்தியா உட்பட, சர்வதேசம் தன்னுடைய மதிப்பை இழந்து கொண்டு வருகின்றது. இவைகள் தங்களுடைய கொள்கையை அடியோடு மாற்றி, நேர்மையான முறையில் செயல்பட வேண்டிய நேரம் இது என்பது எமது கருத்தாகும்!

இன்று மிகப் பெரிய சக்திகள், தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு இடையூறாக, எதிராக, நியாயத்திற்குப் புறம்பாக இருக்கின்ற போதும், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மிகச் சரியான முறையில் நகர்த்திச் செல்கின்றார். கிடைத்தற்கரிய அந்த மகத்தான தலைவனின் விடுதலை வேட்கையும், உறுதியும், அர்ப்பணிப்பும், தன் நம்பிக்கையும், போராளிகளின் தாகமும், மாவீரர்களின் தியாகமும் எமது விடுதலைப் போராட்டத்தை நிச்சயம் வெற்;றி கொள்ள வைக்கும்.

இன்று புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் முற்று முழுதாக தமது எழுச்சியை வெளிக்காட்டாது போனாலும், ஓர் ஆழமான கருத்து நிலையை, உறுதியாக வெளிப்படுத்தியுள்ளார்கள். தமிழ் நாட்டுத் தமிழர்களும் இதே நிலையை வெளிப்படுத்தியுள்ளார்கள். இவை யாவும் தேசியத் தலைமைக்கும், விடுதலைப் போராட்டத்திற்கும் ஊக்கத்தைத் தருகின்ற விடயங்களாகும்!

இந்த ஊக்கத்தை வலுப்படுத்த வேண்டியதும், அதற்கு உண்மையான செயல் வடிவம் கொடுக்க வேண்டியதும், நம் எல்லோருடைய தார்மீகக் கடமையாகும். இந்த மாவீரர் தினமாகிய, புனித தினத்திலே, மாவீரர் கனவை நனவாக்குகின்ற உறுதியை எடுத்து, எமது தேசியத் தலைவரின் கரங்களை மேலும் பலப்படுத்துவதன் மூலம், எமது தாயக விடுதலையைத் துரிதப்படுத்துவோம்.

மாவீரர்களுக்கு எமது வீர வணக்கம்!

-சபேசன் (அவுஸ்திரேலியா)-

அம்பலமாகிக்கொண்டிருக்கும் சிங்களத் தேசப்பற்றாளர்கள்

'இப்பொழுது அரசியல் விளையாட்டின் ஒரு ஆட்டம் தான் நிறைவுக்கு வந்துள்ளது. அதற்குள் இரண்டாவது ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது" எனக் கூறுகிறார் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க.

வரவு-செலவுத்திட்டத்திற்கு எதிராக ஜே.வி.பி வாக்களித்த போதிலும் அது நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில் இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பைத் தொடர்ந்து கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற வாக்கெடுப்பில் மகிந்த ராஜபக்ச வெற்றிகண்டுவிட்டார். இந்த வெற்றிக்கு அவர் எடுத்த முயற்சிகள் காய்நகர்த்தல்கள் என்பன சிறிலங்காவின் படுமோசமான அரசியல் நடவடிக்கைகளுக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டது.

கையூட்டு, அமைச்சுப்பதவி என்பனவற்றைக்காட்டி ஆசையூட்டி ஆதரவாக வாக்களிக்க வைக்கப்பட்டமை ஒருபுறமென்றால் மறுபுறம் கடத்தல்கள், உயிர்ப்பயமுறுத்தல்கள் என மகிந்தவின் ஆட்சிக்கே தனித்துவமான படுபாதகச் செயற்பாடுகளிலும் அது ஈடுபட்டது.

இந்த வரவு-செலவுத்திட்டம் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், எமக்கு ஆதரவாக இருந்தால் உங்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என மகிந்த ஆட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூறியிருந்தது. இது மகிந்த ஆட்சியின் ஒரு மறைமுகமான மிரட்டலாக இருந்தது. அதாவது எம்மை எதிர்த்தால் உங்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படமாட்டாது என்பதே அதன் கருத்தாக இருந்தது.

பின்னர் மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களின் வதிவிடங்கள், அலுவலகங்களுக்கான பாதுகாப்பை நீக்கி ஒட்டுக்குழு மூலமாக நேரடியாகவே அவர்களது குடும்பத்தினர், உறவினரை எச்சரித்தது.

இவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை அவர்களின் மருமகன் ஒட்டுக்குழு வினரால் கடத்தப்பட்டு கனகசபை அவர்கள் வாக்களிப்பிற்கு பாராளுமன்றத்திற்குச் செல்ல முடியாத வகையில் தடுக்கப்பட்டார்.

இதேவேளை ஏனையோரும் கூட பெரும் உயிர் அச்சுறுத்தலின் மத்தியிலேயே பாராளுமன்றத்திற்குச் சென்று வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பிற்கு முன்னைய நாட்களில் சிறிலங்காவின் குற்றப்புலனாய்வுத்துறையினர௼br />? விசாரணைக்கெனத் திடீரென அழைத்தனர். இதுவும் கூட பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது அரச அதிகாரிகள் மூலமான மிரட்டலாகவே அமைந்தது.

இவ்வாறு பெருமளவு பணம், பல்வேறு வகை மிரட்டல்கள், தொடர்ச்சியான அழுத்தங்கள் என மகிந்த ஆட்சி பல தகிடுதத்தங்களை மேற்கொண்டு வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கின்றது. எவ்வாறாயினும் மகிந்த ஆட்சிக்கு இந்த வாக்கெடுப்பு விடயத்தில் அச்சம் நிலவியே வந்தது. இந்த அச்சத்தை உருவாக்குவதில் முழுவெற்றி ஐ.தே.க.வுக்குக் கிடைத்திருக்கிறது.

வரவு-செலவுத்திட்டம் தொடர்பான வாக்களிப்பில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுவிட்ட போதிலும் பாராளுமன்றத்தில் அதனது நிலை இப்பொழுது உறுதியடைந்துவிட்டது. எனக் கூறிவிடமுடியாது. ஏனெனில் அங்குள்ள நிலைமையில் மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. உண்மையில் நிலைமை மோசமடைந்து விட்டது என்றே கூறவேண்டும்.

ஏனெனில் முக்கியமானதொரு பலப் பரீட்சைக்களத்தில்- ஆளும் கட்சிக்கு வெளியே இருந்தாலும் பலமாகவிருந்த-ஜே.வி.பி. அரசாங்கத்திற்கு எதிராக நடந்துகொண்டு விட்டது. இவ்வாறு ஒரு நிலைமையை உருவாக்குவதிலும் ஐ.தே.க. வெற்றி பெற்றுவிட்டது.

ஜே.வி.பி. என்னதான் கூறிக்கொண்டாலும் அரசுக்கு எதிராக நடந்துகொள்ளாது என்ற நம்பிக்கையை மகிந்த ராஜபக்ச கொண்டிருந்தார். இந்த நம்பிக்கைக்குப் பல காரணங்கள் இருந்தன.

ஒன்று ஜே.வி.பி. ஆளும் கட்சிக்கான ஆதரவை விலக்கிக் கொண்டால் ஆட்சி கவிழ்ந்து பாராளுமன்றத் தேர்தல் ஒன்றை எதிர்நோக்க வேண்டிவரும் என்பது, இரண்டாவது அது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான நிலையை எடுக்கமாட்டாது என்பது, மூன்றாவது இந்த வரவு-செலவுத்திட்டம் போரை முதன்மைப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளதால் அதனை எதிர்க்க முடியாது என்பது.

இதனை விட ஜே.வி.பி.யிலுள்ள முக்கியஸ்தர்கள் சிலரை நயத்தாலும் சிலரை பயத்தாலும் மகிந்த பணிய வைத்திருந்தார். ஜே.வி. பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இவற்றை ஜே.வி.பி. ஆட்சிக்கு ஆதரவு வழங்குவதன் காரணமாகவே சந்திரிகா அம்மையாரும் சரி மகிந்தவும் சரி கையிலெடுக்கவில்லை.

அதேவேளை அதன் பரப்புரைச் செயலாளர் விமல் வீரவன்சவின் மோசடி ஒன்று குறித்த கோப்புக்களை மகிந்த கைவசம் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை ஜே.வி.பி.யில் பிளவுகளை ஏற்படுத்துவதிலும் மகிந்த சிறிது வெற்றி பெற்றிருக்கின்றார் என்பதை நந்தன குணதிலகவின் நடவடிக்கை வெளிப்படுத்துகின்றது.

எனவே ஜே.வி.பி. ஆட்சியை எதிர்க்காது என மகிந்த எதிர்பார்த்திருந்த போதும் ஜே.வி.பி. எதிர்த்து வாக்களித்துவிட்டது.

எனினும் கூட ஜே.வி.பி. இந்த விடயத்தில் இரண்டு முரண்பாடான விடயங்களை கவனத்தில் எடுத்திருக்கிறது.

ஒன்று பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள், மோசடிகள் அதனைவிட விலைவாசி ஏற்றம் என்பவற்றால் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ள மகிந்த ஆட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவாக இருப்பது தனது எதிர்காலத்திற்குப் பாதகமானது என நினைக்கின்றது.

ஆட்சியைவிட்டு விலகியிருந்தால் மகிந்த ஆட்சி சந்திக்கவிருக்கும் தோல்வியைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இரண்டாவது நிலையை எட்டுவதே அதனது திட்டமாகும்.

அதேவேளை மகிந்த ஆட்சி நடத்துகின்ற யுத்தத்தையும் எதிர்ப்பது போன்ற தோற்றப் பாட்டையும் அது விரும்பாததால் இவ்விடயத்தில் அது தந்திரமாகவே நடந்து கொள்கின்றது.

இரண்டாவதாக மகிந்தவின் ஆட்சி இப்போதைக்குக் கவிழ்ந்து விடாமல் இருக்கவேண்டும் என்பதிலும் அது கவனம் செலுத்துகிறது. எனவே வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது அது என்ன செய்யப் போகின்றது என்பதைப் பல்வேறு குழப்பகரமான செய்திகளை வெளியிட்டு இறுதியில் எதிர்த்து வாக்களித்திருக்கின்றது.

வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பு முடி வடைந்த பின்னர் ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச வெளியிட்ட கருத்து இதனைப் புலப்படுத்துகிறது. ஜே.வி.பி. தனது நிலைப்பாட்டை ஒரு வாரங்களுக்கு முன் வெளியிட்டிருந்தால் நிச்சயமாக அரசு கவிழ்ந்திருக்கும,; ஜாதிக ஹெல உறுமய கூட எதிர்த்து வாக்களித்திருக்கும், ஹக்கீம், தொண்டமான் ஆகியோர் கூட எதிர்த்திருப்பார்கள் என்று விமல் வீரவன்ச கூறியிருக்கிறார்.

எனவே ஜே.வி.பி. இந்த வரவு-செலவுத் திட்டத்திற்கு வாக்களிப்பது தொடர்பில் முடிவெடுக்கும் போது சிங்கள மக்கள் மத்தியில் மகிந்த ஆட்சி செல்வாக்கு இழந்து வருவதாக மதிப்பிட்டுள்ளது என்பதை உணரமுடியும். எனவே தான் அது அரசை எதிர்க்க முடிவு செய்திருக்கின்றது. எனினும் இந்த நிலையிலும் கூட தனது சுயநலத்திற்காக மகிந்த அரசைக் காப்பாற்றி யிருக்கிறது என்பதும் வெளிப்படுகிறது.

எவ்வாறாயினும் இந்த வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததன் மூலம் அதனது தேசப்பற்றுக்கு மாசு கற்பிக்க ஆட்சியாளர்கள் முயல்வர் என்பது அதற்குத் தெரியும். அதற்காகவே. அது வரவு-செலவுத்திட்டத்துடன் சிறிதும் தொடர்பில்லாத நான்கு நிபந்தனைகளை முன்வைத்தது. இந்த நிபந்தனைகள் அரசாங்கம் முற்று முழுதாக யுத்தத்தில் இறங்க வேண்டும் என்பதாக இருந்தது.

இப்பொழுது சோமவன்ச அமரசிங்க வரவு-செலவுத்திட்டத்தினை நிறைவேற்றுவதையும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை முன்னெடுப்பதையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த விடயங்களாக அரசாங்கம் சித்திரிக்க முனைவது தவறானது. அதலபாதாளத்தை நோக்கிச்சென்று கொண்டிருக்கும் நாட்டினை வலுவான நிலைக்கு ராஜபக்ச அரசாங்கம் இட்டுச்செல்வதற்கு இன்னமும் காலம் கடந்து விடவில்லை அதற்கு இன்ன மும் 25 நாட்கள் உள்ளன என்கிறார்.

அவர் 25 நாட்கள் எனக்கூறுவது எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள வரவு- செலவுத்திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பையாகும். இந்த 25 நாட்களுக்குள் பல அரசியல் மாற்றங்கள் நிகழப்போவதாகவும் அப்போது தேசபக்தர்கள் யார்? என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ளும் என்று அவர் மேலும் கூறியிருக்கிறார்.

இதனை இப்போது மிரட்டும் சந்தர்ப்பம் மகிந்தவின் கையிலிருந்து ஜே.வி.பி.யின் கைக்கு மாறிவிட்டதாகவும் கொள்ளலாம். அதேவேளை மகிந்த ஆட்சிக்கு மீண்டும் அழுத்தத்தை ஐக்கிய தேசியக்கட்சி உருவாக்கியுள்ளது. 19 ஆம் திகதி வாக்கெடுப்பில் அரசாங்கம் சந்தித்த அழுத்தத்தை விடவும் ஜே.வி.பி. இப்போது ஆட்சிக்கு எதிராகத் திரும்பிவிட்ட நிலையில் அழுத்தம் அதிகமாகவே இருக்கும். ஏனெனில் இ.தொ.கா, முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி என்பனவற்றின் மீது இப்பொழுது எவரும் பூரண நம்பிக்கை கொண்டவர்களாக இல்லை.

எனவே மீண்டும் ஜே.வி.பி.யை வழிக்குக் கொண்டுவரவே மகிந்த ஆட்சி முயல்கின்றது. இதற்கு மறைமுகமாகச் செய்ய வேண்டியவை ஒருபுறமிருக்க வெளிப்படையாகச் செய்பவை சிலவும் உள்ளன. அவற்றின் வரிசையில் புலிகள் மீதான தடை, தமிழர் புனர்வாழ்வுக்கழகம் மீதான தடை, சிறுவர் பாதுகாப்பு நிதியம் மீதான விசாரணை என ஆளும் கட்சி அறிவிப்புக்களை ஜே.வி.பி.யின் கோரிக்கைக்கு இணங்க விடுப்பது போலக்காட்டிக்கொள்கிறது. அதேவேளை வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டால் அடுத்தவருடம் யுத்தம் செய்ய நிதியிருக்காது என அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே ஜே.வி.பி.யின் தேசப்பற்றை உரசிப்பார்த்திருக்கிறார்.

இவ்வாறு பார்க்கையில் மீண்டும் 25 நாட்களுக்கு சிறிலங்கா அரசியலாளர்கள் வரவு-செலவுத்திட்டம் தொடர்பான கயிறிழுத்தலில் தீவிர கவனம் செலுத்துவர் என்பது வெளிப்படுகின்றது. அதுமாத்திரமல்ல இது முடிவடைவதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை.

2004 ஏப்ரலில் தெரிவு செய்யப்பட்ட சிறிலங்காவின் இப்பாராளுமன்றம் சபாநாயகர் தெரிவிலேயே பெரும் குழப்பங்களைச் சந்தித்தது. இக்குழப்ப நிலை தொடர்கின்றது. இன்னும் தொடரும் என்றே கூறமுடியும்.

இனப்பிரச்சினைக்குச் சமாதானத் தீர்வு காணும் முயற்சி ஒன்றைச் சர்வதேசம் ஆரம்பித்த நிலையில் அதனைக்குழப்பும் முயற்சிக்குக்கிடைத்த ஆரம்ப வெற்றியாகவே இந்தப் பாராளுமன்றம் அமைந்தது.

'தேசப்பற்றாளர்களால்" நிரம்பிய இந்தப் பாராளுமன்றத்தில் இவர்கள் அனைவரதும் தேசப்பற்றுக்கள் அம்பலமாகிக்கொண்டிருக்கின்றன. ஐக்கிய தேசியக்கட்சி அண்மையில் மக்களிடம் 'வரவு-செலவுத்திட்ட விவாத அரங்குகளை நீங்கள் தவறாமல் பார்வையிட வேண்டும்" எனக்கோரியது. ஆனால் அவ்வாறு பார்க்கத்தேவையில்லாமல் வெளியிலேயே பல காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. அதேவேளை சிறிலங்கா சுதந்திரக்கட்சி தான் விதைத்ததை அறுத்துக்கொண்டிருக்கிறது.
-வேலவன்-

நன்றி: ஈழநாதம்