Posted on : 2007-11-21
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விடுக்கப்பட்டிருக்கும் ஆயுதக்குழு அச்சுறுத்தல் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிரொலித்திருக்கின்றது.
கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தனில் இருந்து கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலரும் அது குறித்து விலாவாரியாக விளக்கியிருக்கின்றார்கள்.
இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு நடப்பது நாளை ஏனைய கட்சியினருக்கும் நடக்கலாம் என முற்கூட்டியே எச்சரித்திருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவரும், ஐ.தே.கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க.
அவர் கருணா குழு என்ற பெயரில் உருவாக்கிவிட்ட துணைப்படையே இன்று பிள்ளையான் குழுவாகி இந்த அரச அராஜகத்துக்குக் கருவியாகியிருக்கின்றது என்பதும் கூட கவனிக்கத்தக்க அம்சமே.
இதுவரை ஆட்களைக் கடத்தி, பணயம் வைத்து, பெரும் தொகைப் பணத்தை சுளையாகக் கொள்ளையிடுவதில் "வெற்றி கொண்ட' (?) ஒட்டுக்குழுக்கள், இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்களைக் கடத்திப் பணயமாக வைத்து, அதன் மூலம் அச்சுறுத்தி, எம்.பிக்களை நாடாளுமன்றத்தில் தமது விருப்புக்கு ஏற்ப ஆடவைக்கும் தந்திரத்தைக் கையாளத் தொடங்கியிருக்கின்றன. அதில் கணிசமான வெற்றியும் முதல் முயற்சியில் அக்குழுவினருக்குக் கிடைத்திருக்கின்றது என்றே கூறவேண்டும்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபையின் மருமகனே கடத்தப்பட்டு பணயம் வைக்கப்பட்டார். நாடாளு மன்றத்தில் அரசின் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கக் கூடாது என்றும், வாக்களித்தால் கடத்தப்பட்டவரின் உயிருக்கு உலை வைக்கப்படும் என்றும் கனகசபை எம்.பி. அச்சுறுத்தப்பட்டார். மேற்படி வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பது என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவையும் மீறி, வாக்கெடுப்புச் சமயம் கனகசபை எம்.பி. நாடாளுமன்றுக்கு சமுகம் கொடுக்கவில்லை. அச்சுறுத்தல் காரர்களின் எண்ணம் நிறைவேறியது. கனகசபை வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்காமை உறுதிப்படுத்தப்பட்டதும் அதற்கு முன்னர் களுதாவளையில் வைத்துக் கடத்தப்பட்ட அவரது மருமகன் மட்டக்களப்பில் வைத்து விடுவிக்கப்பட்டார். அவரை அரசுப் படைகளே உடனடியாகப் பாதுகாப்பாகக் கொழும்புக்குக் கூட்டி வந்து சேர்த்தன.
ஆக, மொத்தத்தில் அச்சுறுத்தல் மூலம் ஆட்களைக் கடத்திப் பணயம் வைக்கும் செயற்பாட்டின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தங்கள் கைப்பொம்மைகளாக்கி அடிபணிய வைத்து, ஆட்டிப்படைக்கும் கைங்கரியத்தை அரசுப் படைகளுடன் இயங்கும் ஒட்டுக்குழுக்கள் வெற்றிகரமாக ஆரம்பித்து விட்டன.
இந்தக் கைங்கரியத்தைத் தாங்களே செய்தனர் என்பதை அரசுப் படைகளின் கண்காணிப்பில் இயங்கும் பிள்ளையான் குழு மறைமுகமாக ஒப்புக்கொண்டிருப்பதை ஆங்கிலத் தினசரி ஒன்று நேற்று முற்பக்கச் செய்தியாகவும் வெளியிட்டிருந்தது.
ஆனால், இந்த அராஜகத்துக்காக அடாவடித்தனத்துக்காக எவரும் கைது செய்யப்படவுமில்லை; காத்திரமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவுமில்லை.
சம்பந்தப்பட்ட எம்.பியின் களுதாவளை வீட்டில் பொலிஸார் காவலில் இருக்கத்தக்கதாகவே துணைப்படையினர் வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்கள் கதறக் கதற மேற்படி எம்.பியின் மருமகனை இழுத்துச் சென்றிருக்கின்றனர்.
அதேபோல மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றைய இரண்டு எம்.பிக்களின் வீடுகளில் காவலுக்கு இருந்த பொலிஸார் விலக்கப்பட, அச்சமயத்தில் துணைப் படையினர் வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்தோரை அச்சுறுத்தியிருக்கின்றனர். சம்பந்தப்பட்ட எம்.பிக்கள் இருவரும் அரசின் வரவு செலவுத்திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கக் கூடாது என்று வீட்டில் உள்ளவர்கள் மூலம் மிரட்டப்பட்டிருக்கின்றனர்.
இவற்றை நோக்குபவர்கள் இது ஒட்டுக்குழுக்களின் வெறும் அடாவடித்தனம் மட்டுமல்ல, அரச பின்புலத்தில் திட்டமிட்டு, நேர்த்தியாக, கனகச்சிதமாக அரங்கேற்றப்பட்ட அராஜகம் "அரச பயங்கரவாதம்' என்பதை இலகுவாகப் புரிந்து கொள்வர்.
சுமார் மூன்று தசாப்த காலம் தங்களின் நியாயமான உரிமைகளுக்காக கௌரவத்துடன் கூடிய வாழ்வுக்காக மனித இருப்புக்காக ஆயுதம் ஏந்தாமல் அஹிம்சை வழியில், காந்தீயப் பாதை யில், அறநெறியில் போராடிய ஈழத் தமிழர்கள், அந்தப் போராட்டங்கள் எல்லாம் பௌத்த சிங்களப் பேரினவாத அரசுகளால் ஆயுத பலம் கொண்டு சீருடைப் படைகள் மூலம் பலவந்தமாக அடக்கி, ஒடுக்கப்பட்டதன் காரணமாகவே வேறு வழியின்றி ஆயுத வழிப் போராட்டத்துக்குத் தள்ளப்பட்டார்கள்.
ஆனால் இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ள மறுக்கும் அமெரிக்கா உட்பட்ட மேற்குலகு ஈழத் தமிழர்களின் நியாயமான உரிமைக்கான இந்த ஆயுதப் போராட்டத்தை வெறும் "பயங்கரவாதமாக' சித்திரித்து, சிறுமைப்படுத்தி, கொச்சைப்படுத்திக் கண்டிப்பதோடு, அந்த ஆயுத வன்முறை மார்க்கத்தைக் கைவிடு மாறு "மதபோதகர்கள்' போன்று ஈழத் தமிழர்களுக்கு ஞானம் உரைத்தும் நிற்கின்றது.
அத்தகைய மேற்குலக நாடுகள், இவ்வாறு மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களையே அவர்களின் உறவினர்களைக் கடத்தி, பணயம் வைத்து, கொல்வோம் என்று அச்சுறுத்தி, தங்கள் விருப்பப்படி ஆடவைக்கின்ற அரசுப் படைகளின் பின்புலத்தில் மேற்கொள்ளப்படுகின்ற "அரச பயங்கரவாதம்' குறித்து என்ன சொல்லப்போகின்றன?
uthayan.com
Wednesday, November 21, 2007
"அரச பயங்கரவாதம்' தொடர்பாக மேற்குலகின் பிரதிபலிப்பு என்ன?
Posted by tamil at 6:32 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment