[21 - November - 2007]
* பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும்ஆட்டிவிடும் கைங்கரியத்தை வாஷிங்டனும் டில்லியும் தொடரக் கூடாதென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு
வ.திருநாவுக்கரசு
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் (TRO) நிதி முடக்கி வைக்கப்பட்டுள்ள நடவடிக்கையானது விடுதலைப்புலிகளுக்கு எதிரானதே ஒழிய தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல என அமெரிக்க அரசாங்கம் 16.11.2007 ஆம் திகதி தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டுவதற்கும் ஆயுதக் கொள்வனவு செய்வதற்கும் TRO முகவர் நிலையமாகச் செயற்பட்டு வருகிறதென்பதே நிதி முடக்கத்திற்கான காரணமெனக் கூறப்பட்டுள்ளது. அதாவது, அமெரிக்க நிர்வாகத்தின் 13224 இலக்க நிர்வாக உத்தரவின் கீழ் பயங்கரவாதக் குழுக்களையும் அவற்றின் வலையமைப்புகளையும் ஒதுக்கிவிடு முகமாக TRO இனங்காணப்பட்டுள்ள அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஊடக அறிக்கையொன்றின் மூலம் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இதனை மேலும் விளக்கியுள்ளது.
விடுதலைப்புலிகள் வன்முறையைக் கைவிட வேண்டும் தூதுவர் பிளேக்
அதனைத் தொடர்ந்து அமெரிக்க நிலையத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலும் மேற்குறிப்பிட்ட நிதி முடக்கமானது விடுதலைப்புலிகளுக்கு எதிரானதே ஒழிய தமிழருக்கு எதிரானதல்ல என தூதுவர் றொபெட் பிளேக் மீள வலியுறுத்தியுள்ளார். அத்தோடு விடுதலைப்புலிகள் வன்முறையைக் கைவிட்டு சமாதானப் பேச்சுவார்த்தைகளில் மீண்டும் பங்குபற்றுவதற்கு முன்வர வேண்டும் எனவும், தூதுவர் பிளேக் கூறியுள்ளதாக அறியக் கிடக்கிறது. மேலும் விடுதலைப்புலிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், அண்மையில் இலங்கை கடற்படைக்கு தம்மால் றேடர் தன்னியக்கிப் படகுகள் முதலியன வழங்கப்பட்டதன் மூலம் விடுதலைப்புலிகளுக்கு தெளிவானதொரு செய்தி வழங்கப்பட்டிருப்பதாகவும், பிளேக் கூறிவைத்துள்ளார். அதாவது பிளேக் முன்னர் சில சந்தர்ப்பங்களில் கூறியது போல ஒரு நம்பகத்தன்மையான தீர்வுத் திட்டம் இன்னும் தான் இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவில்லை. மாறாக முழு அளவிலான யுத்தத்தை கொண்டு நடத்துவதே அரசாங்கத்தின் திட்டவட்டமான நிகழ்ச்சி நிரலாகக் காணப்படுகின்றது. எனவே, ஒரு பறத்தில் விடுதலைப்புலிகள் வன்முறையைக் கைவிட வேண்டுமென வற்புறுத்திக்கொண்டு மறு புறத்தில் அரசியல் தீர்வில் அக்கறையற்ற இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுத உதவிகள் வழங்கப்படுவதானது அரசாங்கத்தின் இராணுவத் தீர்வுப் பிரயத்தனத்திற்கு வலுவூட்டுவதாகவே காணப்பட வேண்டியுள்ளது.
காலம் கடத்தும் கைங்கரியங்கள்
அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதிகள் குழு (APRC) ஒரு ஆக்கபூர்வமான தீர்வுத் திட்டத்தினை முன்வைக்கும். அப்படி முன்வைத்தாலும் அது அரசாங்கத்தால் சாதகமாகபரிசீலிக்கப்பட்டு ஒரு தீர்வு எட்டப்படுமென யாராவது எண்ணினால், அது இலவு காத்த கிளியின் கதையாகி விடுமென்பதைக் கூறிவைக்க விரும்புகிறோம். இத்தகைய ஏமாற்று வித்தைகளும், காலங்கடத்தும் கைங்கரியங்களும் தான் கடந்த 50 வருடங்களாக அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் என்ற போர்வையில் அரங்கேற்றப்பட்டு வந்துள்ளன என்பதை தூதுவர் பிளேக் போன்றோர் நன்கு அறிந்து வைத்திருப்பது நல்லது. இவ்வாறாகவே 5 வருடங்களுக்கு முன்பு அன்றைய அமெரிக்க தூதுவர் அ.ர். லி. வில்ஸின் கவனத்தை நான் ஈர்த்திருந்தேன். சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தின் விளைவு
இலங்கை அரசாங்கம் ஒரு நம்பகத்தன்மையான தீர்வுத் திட்டத்தினை முன்வைக்காத நிலையில் விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டுமென சர்வதேச சமூகமோ குறிப்பாக அமெரிக்க அரசாங்கமோ அழுத்தம் கொடுப்பதன் அர்த்தம் தான் என்ன? 1950 கள் முதல் எல்லா சிங்கள பௌத்த பெரும்பான்மை மேலாதிக்க அரசாங்கங்களும் தமிழரின் அபிலாசைகளையும் கோரிக்கைகளையும் ஏற்க மறுத்து வந்துள்ளது மட்டுமல்லாமல் தமிழர் மேற்கொண்ட சாத்வீகப் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கர அடக்கு முறைகள் அட்டூழியங்கள் மற்றும் உயிர் உடைமை அழிப்புக்கள் காரணமாகவே தமிழ் இளைஞர் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியதோடு விடுதலைப்புலிகள் இயக்கமும் தோற்றம் பெற்றது. எனவே, விடுதலைப்புலிகள் இயக்கமானது இலங்கை அரசினாலேயே உருவாக்கப்பட்டது என்ற வரலாற்று யதார்த்தத்தினை குறிப்பாக சர்வதேச சமூகம் நன்கு புரிந்து வைத்திருக்க வேண்டும். இனப்பிரச்சினைக்கு உகந்ததொரு தீர்வினை கொண்டு வருவதற்கு எந்தவொரு அரசாங்கத்திடமும் அரசியல் உறுதி இருந்ததில்லை. அவை சிங்கள கடும்போக்காளர்களாலும் பேரினவாத சக்திகளாலும் ஆட்டிப் படைக்கப்பட்டு வந்த வரலாற்றினையும் சர்வதேச சமூகம் மறந்து விடக் கூடாது.
இலங்கையும் அமெரிக்காவும் ஒரே சுலோகம்
நிற்க, TRO வின் நிதி முடக்கி விடப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளுக்கெதிரானதே ஒழிய தமிழ் மக்களுக்கெதிரானதல்ல என அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதானது இலங்கை அரசாங்கத்தின் நீண்ட கால சுலோகம் ஆகும். அதாவது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால், 1995 இல் "சமாதானத்துக்கான யுத்தம்" முடுக்கி விடப்பட்டபோது கூட அது விடுதலைப்புலிகளுக்கெதிரானதே ஒழிய தமிழருக்கெதிரானதல்ல என உள்நாட்டிலும் குறிப்பாக சர்வதேச ரீதியிலும் மிகத் தீவிரமாகப் பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால், சாதாரண பொது மக்களே முன்னர் எதிர்நோக்கியதைக் காட்டிலும், மோசமான அழிவுகளையும் அவலங்களையும் சந்தித்தனர். 2002 ஆகஸ்டில் யாழ்ப்பாணம் சென்று உலங்கு வானூர்த்தியிலிருந்து குடாநாட்டைப் பார்த்த போது தான் கீழே பார்த்தது ஒரு உடைக்கப்பட்ட பிரதேசம் Blasted landscape) என முன்னால் அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் றிச்சட் அமிற்றேஜ் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், 07/11/2007 ஆம் திகதி ஜனாதிபதியும் நிதியமைச்சருமாகிய மகிந்த ராஜபக்ஷ நிகழ்த்திய வரவு செலவுத் திட்ட உரையில் கூட "இந்த போராட்டம் (fight) பயங்கரவாதத்திற்கு எதிரானதே ஒழிய தமிழ் மக்களுக்கெதிரானதல்ல என்று குறிப்பிட்டிருந்தார். தமிழருக்கு நீதி செய்வது தான் பயங்கரவாதத்திற்கு எதிரான பெரிய ஆயுதமாகுமென ஜனாதிபதி ராஜபக்ஷ முதலாவதாக நிகழ்த்திய தனது சுதந்திர தின உரையில் கூறியிருந்தார். ஆனால், இன்றோ தமிழ் மக்கள் முன்னெப்போதையும் விட மோசமான அவலங்களைச் சந்தித்து வருகின்றனர்.
விடுதலைப்புலிகள் வன்செயல்களில் ஈடுபட்டு வருவது யாரும் அறிந்ததொன்றாகும். ஏன் அவர்கள் அப்படிச் செய்கின்றனர் என்பதற்கப்பால் ஏன், எப்போது அந்த இயக்கம் தோற்றம் பெற்றது என்பதற்கு விடை யாது? எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னணி வேட்பாளராய் விளங்குபவராகிய நொதாம் ஹிலாரி கிளின்டன் அண்மையில் பயங்கரவாதம் சம்பந்தமாக கூறிவைத்ததைச் சற்று நோக்குவோம். அவர் கூறியதாவது "சீர்தூக்கிப் பார்த்தால், எல்லா பயங்கரவாதிகளையும் நாம் ஒரே கூடையில் போட்டுவிட முடியாது. பயங்கரவாதிகளின் உந்து சக்தியும், அடிப்படை நோக்கமும் என்ன என்பதை நாம் தெளிந்து தெரிந்து கொள்வதற்கு கூடுதலாக உழைக்க வேண்டும். இன்னும் சொன்னால் இலங்கையில் தமிழ்ப் புலிகள் அல்லது ஸ்பெயினில் பாஸ்க் பிரிவினைவாதிகள் அல்லது அல் அபாக் மாகாணத்தின் கிளர்ச்சிவாதிகள் போன்றோரை எடுத்துக் கொண்டால் அவர்கள் தந்திரோபாயங்கள் மீது மட்டுமே தொடர்பு பட்டவர்களாயுள்ளனர். அவர்கள் அவ்வளவு தூரம் கொள்கை ரீதியாகவோ தத்துவ ரீதியாகவோ இணக்க நிலையில் இல்லாதிருக்கக் கூடும். அவர்கள் எல்லோரையும் ஒரு அகண்ட தூரிகை கொண்டு சாயமிடுவதே நாம் இழைக்கும் தவறுகளில் ஒன்றாகும். ஆகையால்,அவர்கள் எவ்வகையான குறிக்கோளுக்காக பயங்கரவாதத்தினைப் பிரயோகிக்கின்றனர் என்பதை நாம் அதனை சந்திக்கும் போது அதனைப் புரிந்து கொள்வதற்கு நிச்சயமாக உதவப் போவதில்லை".
அடுத்ததாக, முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் பத்து வருடங்களுக்கும் முன் அதாவது 53 வது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் ஆற்றிய உரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது இலங்கை ஆட்சியாளரின் கவனத்துக்குரியதாகும். "நாம் பயங்கரவாதத்தினை ஒரே மனதாக எதிர்க்க வேண்டுமாயினும், அதனை உருவாக்கியதன் காரணிகளை நாம் ஒரு போதும் புறந்தள்ளி விடக் கூடாது". இலங்கையில் நிகழ்ந்து வந்துள்ள உயிர் உடைமை இழப்புகள் அங்கவீனங்கள் பற்றியெல்லாம் கிளின்ரன் குறிப்பிட்ட அதே நேரத்தில் இலங்கையின் எரியும் இனப்பிரச்சினை துரித கதியில் தீர்க்கப்பட வேண்டியதாகும். (crying out for a solution) என்றும் கூறிவைத்ததை இங்கே குறிப்பிட வேண்டும்.
இன்று பத்து வருடங்கள் கழிந்த பின் தீர்வு என்னென்று அரசியல் வானில் தென்படவேயில்லை. மாறாக நிலைமை பன்மடங்கு மோசமடைந்துள்ளது. இராணுவத்தீர்வு என்பது அரசாங்கத்தின் முடிந்த முடிவாயுள்ளது. பயங்கரவாதத்தை முற்று முழுதாகத் துடைத்தெரியாமல் பிரச்சினைக்குத் தீவு காண முடியாது. எனவே, முதலில் பயங்கரவாதம் தீர்த்து கட்டப்பட வேண்டும். இவ்வாறு தான் ஜனாதிபதி ராஜபக்ஷ அண்மைய வரவு செலவுத் திட்ட உரையிலும் குறிப்பிட்டுள்ளார். அதன் பொருட்டு 2007 நிதித் தொகையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது பேரினவாதிகளுக்கு யுத்தவாதிகளுக்கும் வளைந்து கொடுத்து முழு நாட்டையும் மீட்க முடியாதளவுக்கு குட்டிச் சுவராக்க உகந்த வழியே ஒழிய வேறொன்றல்ல.
புதுடில்லி சமஷ்டி மாநாட்டில் ஏன் இலங்கை பங்குபற்றவில்லை
சென்ற மாதம் முதல்வாரம் சமஷ்டி ஆட்சி முறைமை தொடர்பான சர்வதேச மாநாடொன்று புதுடில்லியில் நடைபெற்றது. கனடா, ஜேர்மனி, தென்னாபிரிக்கா, பிலிப்பைன்ஸ், பிறேசில் அடங்கலாக பல நாடுகளிலிருந்து பல நூற்றுக் கணக்கான பிரதிநிதிகள் பங்கு பற்றியிருந்தனர். இந்தியா சார்பாக பங்கு பற்றியவராகிய வெளிநாட்டமைச்சர் பிரனாப் முகர்ஜி சிறுபான்மையினருக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும், அதிகாரப் பகிர்வென்பது ஜனநாயகத்துக்கு அத்தியாவசியமானதாகும். என்றெல்லாம் கருத்து வெளியிட்டிருந்தார். இலங்கை சார்பாக அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான தூதுக்குழுவொன்று மேற்படி மாநாட்டில் பங்கு பற்ற உத்தேசிக்கப்பட்டிருந்தபோதும் அது பின்பு கைவிடப்பட்டது. சமஷ்டி பற்றிய சர்வதேச விவாதமொன்றில் பங்கு பற்றுவதை தவிர்க்குமளவிற்கு இலங்கை அரசாங்கம் ஜே.வி.பி. ஹெல உறுமய போன்ற சக்திகளுக்கு அடிபணிந்து செயற்படுகிறதென்பதே அரசியல் ஆய்வாளர்களின் அபிப்பிராயமாகும்.
இந்தியா நம்பிக்கை இழப்பு
இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சி தொடர்பாக இலங்கை அரசாங்கம் மீது இந்தியா நம்பிக்கை இழந்து வருவதாக பிந்திய அறிக்கைகள் கூறுகின்றன. அககீஇ யின் செயற்பாடும் ஒரு ஏமாற்று நாடகம் தான் என்பது அம்பலமாகியுள்ளது போல் தெரிகிறது. அதிக காலம் கடந்து விட்ட நிலையிலும் இந்தியா களநிலை யதார்த்தங்களைப் புரிந்து கொள்வது நல்லது. அமெரிக்காவும் இதனைக் கவனத்தில் கொள்வது அவசியமாகும். மாறாக, இந்தியாவோ அமெரிக்காவோ பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் பாணியில் செயற்பட்டால் அது தமிழருக்கு மட்டுமல்லாமல் இறுதியில் முழு நாட்டிற்கும் கேடு என்பது திண்ணம்.
http://www.thinakkural.com
Wednesday, November 21, 2007
இலங்கை ஆட்சியாளரின் நீண்ட கால சுலோகத்தை உச்சாடனம் செய்ய ஆரம்பித்திருக்கும் அமெரிக்கா
Posted by tamil at 10:12 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment