Posted on : 2007-11-20
ஈழத்தமிழரின் தேசிய இனப்பிரச்சினையை வைத்துத்தான் தென்னிலங்கைச் சிங்களக் கட்சிகளின் அரசியல் அதிகாரப் போர்கள் நடக்கின்றன என்பதைப் பல தடவைகள் இங்கு சுட்டிக்காட்டினோம்.
நாடு தேசிய ரீதியில் பிளவுபட்டு, சிறுபான்மையினரான தமிழர்களின் உண்மை நிலை பெரும்பான்மைச் சிங்களவர்களுக்குத் தெரியாத புரியாத பெரும் இடைவெளி நிலைமை நிலவுகின்றது. இதை வசதியாகப் பயன்படுத்திக் கொண்டு பேரினவாத அரசியல் கனகச்சிதமாக நகருகின்றது; நகர்த்தப்படுகின்றது.
உதாரணத்துக்கு சில சம்பவங்களை இங்கு குறிப்பிடலாம் என நம்புகிறேன். அவற்றில் பொதிந்து கிடக்கும் உண்மைகளைத் தாமாகவே உய்த்து, உணர்ந்து கொள்வதன்மூலம் தென்னிலங்கைச் சிங்கள அரசியல் நாகரிகத்தின் போக்கு எத்தகையது என்பதை நமது வாசகர்களே எடை போட்டுக்கொள்ள முடியும்.
அண்மையில் சமாதானத்துக்கான எத்தனம் என்ற பெயரில் வர்த்தகர் சம்மேளனம் ஒன்று கொழும்பில்கலந்துரையாடல் ஒன்றைக் கூட்டியிருந்தது. இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் தேசிய நல்லிணக்க, அரசமைப்பு விவகார அமைச்சருமான டியூ குணசேகரா பிரதான பேச்சாளர். தென்னிலங்கையின் உயர் குழாம் பிரதிநிதிகள் அங்கு திரண்டிருந்தனர்.
அங்கு பேசும்போது அமைச்சர் டியூ குணசேகரா ஒரு தகவலை வெளியிட்டார்.
""நான் அண்மையில் லண்டன் சென்றிருந்தேன். அங்கு அதிகாரபூர்வ பிரதிநிதி ஒருவர் மூலம் பிரபாகரனின் மனைவியார் என்னுடன் தொடர்புகொண்டார். எப்படியாவது இந்தப் பிரச்சினையை பேச்சுமூலம் சுமுகமாக தீர்த்து வையுங்கள் என்று என்னிடம் அவர் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார். அவர் இரண்டு பிள்ளைகளின் தாய். ஆகவே, அவருக்கு யதார்த்தம் உண்மை நிலைவரம் புரிகின்றது. அதனால் இப்படி மன்றாடுகிறார்'' என்ற சாரப்பட அமைச்சர் டியூ அங்கு முழங்கினார். பிரபாகரனின் துணைவியார் லண்டனில் உள்ளார் என்பது போலவும், அவருடன் தாம் உரையாடினார் என்பது போலவும், பிரச்சினையைத் தீர்த்துவைக்குமாறு அவர் தன்னிடம் கெஞ்சினார் என்பது போலவும் அமைச்சர் டியூ அங்கு கூறிய கருத்துரைகளைத் தென்னிலங்கை உயர் சமூகக் குழாம் வாய்பிளந்து உள்வாங்கிக் கொண்டிருந்தது.
அதேபோல அமைச்சர் மேர்வின் சில்வா நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் மீதான உரையில் ஒரு விடயத்தைக் கூறினார்.
""புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கின்றார். அதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது சகோதரரும், எம்.பியுமான பஸில் ராஜபக்ஷ, அவரது சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ, அவரது மற்றொரு சகோதரரான அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் பதினைந்து அமைச்சர்கள் மரணத்தின் நுழைவாயிலில் இருக்கின்றனர் எனப் பிரபாகரன் அக்கடிதத்தில் அச்சுறுத்தியுள்ளார்.'' என மேர்வின் சில்வா கூறுகின்றார்.
இதேபோல தென்னிலங்கைச் செய்தி ஊடகங்களில் கடந்த சில நாட்களாக ஒரு விவகாரம் பூதாகாரச் செய்தியாக அடிபட்டு வருகின்றது.
மஹிந்த ராஜபக்ஷவின் இந்த அரசைக் கவிழ்ப்பதற்காகப் பெரும் நிதியைப் புலிகள் வாரி இறைக்கின்றனர் என்றும்
அரசை விட்டு வெளியேறி, அரசுக்கு மாறாக வரவு செலவுத் திட்டத்தில் வாக்களிக்க முற்படும் அரசுத் தரப்பு எம்.பிக்களுக்கு பணத்தைக் கொட்டுவதற்காக டொலர் கட்டுகளோடு புலிகளின் நிதி முகவர்கள் கொழும்பில் முகாமிட்டிருக்கின்றனர் என்றும்
தென்னிலங்கையில் பரபரப்பான செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
பேரினவாதத்தின் ஊதுகுழலாக ஒலிக்கும் தென்னிலங்கையின் ஆங்கிலத் தினசரிப் பத்திரிகை ஒன்று இதற்கு மேலும் போய், நேற்றைய வரவு செலுவுத்திட்டப் பலப்பரீட்சையை ""மஹிந்த எதிர் பிரபாகரன்'' என்று தனது ஆசிரிய தலையங்கத்துக்குத் தலைப்பிட்டு அதனை முன்பக்கத்தில் பிரசுரித்துச் சித்திரித்திருக்கின்றது.
அந்த வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பவர்கள் எல்லோரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பக்கத்திலும் எதிர்ப்பவர்கள் எல்லோரும் பிரபாகரன் பக்கத்திலும் நிற்கின்றனர் என்று அர்த்தப்படுவதன் மூலம் தனது அரசியல் எதிர்பார்ப்பை நிறைவு செய்து கொள்ள அந்த ஊடகமும் அதையொட்டிய தென்னிலங்கைச் சமூகமும் முயல்கின்றன. அதன் வெளிப்பாடே அத்தகைய சித்திரிப்பு.
இந்தத் தகவல்களை அறிந்துகொள்ளும் நமது வாசகர்கள் அதன் மூலம் தென்னிலங்கை அரசியல் போக்குச் சிந்தனையின் மனவமைப்பை நன்கு புரிந்து கொள்ளமுடியும்.
கற்றறிந்த அமைச்சர்களில் இருந்து தெருச்சண்டியர்ப் போக்கு அரசியல்வாதிகள் வரை அனைவருமே தென்னிலங்கையில் சிங்கள மக்களை முட்டாள், மூடர்களாக்கி, அவர்களின் தலைகளின் மேல் மிளகாய் அரைப்பதுபோல அரசியல் செய்து வருகின்றார்கள் என்பதே நாம் புரிந்துகொள்ளும் உணர்ந்துகொள்ளும் அந்த உண்மையாகும்.
இத்தகைய அறிவிலித்தனமான நிலையில் சமூகமும் நாடும் இருக்கும்வரை இவ்வாறு அதை நம்பி அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளின் பாடு படு கொண்டாட்டம்தான்.
அரசியல் நிலைவரங்கள் பற்றிய உண்மைகளை யதார்த்தத்தை நிதர்சனத்தை தேடிக் கண்டறியும் அறிவை சமூகம் விருத்தி செய்யும்வரை இவ்வாறு மக்களைத் தவறாக வழிநடத்தி அரசியல் பண்ணும் பிரகிருதிகளின் கொட்டம் அடங்காது என்பது நிச்சயம்.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை விடயத்திற்கும் கூட இது பொருந்தும்.
http://www.uthayan.com/
Tuesday, November 20, 2007
நாட்டு மக்களை மூடர்களாக்கி அரசியல் நடத்தும் எத்தனம்
Posted by tamil at 6:50 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment