Wednesday, November 7, 2007

பிரிகேடியர் சுப. தமிழச்செல்வனுக்குப் பின் என்ன ?

புதன், 07 நவம்பர் 2007 14:50


தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது போர்களையும், பேச்சுவார்த்தைகளையும் மாறி மாறிக் கோர்த்த மாலையாக உள்ளது. இந்தவகையில் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம், பிரிகேடியர் சுப. தமிழ்செல்வன் காலம் முடிவடைந்து அடுத்த காலம் ஆரம்பிக்கிறது.

சுப. தமிழ்செல்வனின் இழப்பு பேச்சுக்களில் பின்னடைவை உண்டுபண்ணும் என்று சிலர் கூறுகிறார்கள். இதுபோலவே அன்ரன் பாலசிங்கத்தின் மரணத்தின் போதும் கூறினார்கள். இந்த நிலையில் சுப. தமிழ்செல்வனுக்குப் பின் என்ன என்ற கேள்விக்கு பதில்காண முயல்கிறது இக்கட்டுரை.

கேள்வி - பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பிடமும் சர்வதேச சமுதாயம் கேட்டது என்ன ?

பதில் - சிங்களத்தரப்பிடம் அவர்களால் கொடுக்கக் கூடிய உச்சமான அளவு எது என்றும், விடுதலைப் புலிகளிடம் அவர்களால் கேட்கக் கூடிய உச்சகட்ட உரிமை எது என்பதும் எழுத்தில் கேட்கப்பட்டது. விடுதலைப் புலிகள் கேட்டதை சிங்கள அரசு கொடுக்கவோ, சிங்கள அரசு கொடுக்க முன்வந்ததை விடுதலைப்புலிகள் ஏற்கவோ முன்வரவில்லை இதுதான் நடந்தது.

கேள்வி - இருதரப்பும் சமரசம் காண முடியாதபோது சர்வதேச சமுதாயம் என்ன கூறியிருக்கும் ?

பதில் - இருதரப்பு விருப்பங்களிலும் ஒரு நியாயம் இருக்க வேண்டும். அதை களத்தில் நிதர்சனமாகக் காட்ட வேண்டும் என்று கூறியிருப்பார்கள். இதுதான் சகல பேச்சுக்களிலும் நடைபெறுகிறது.

கேள்வி - இதன் பின்னர் என்ன நடைபெற்றது ?

பதில் - போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறிக்காமலே இருதரப்பும் தத்தமது தரப்புக்களின் நியாயப்பாடுகளை உறுதி செய்யும் களநிலையை ஏற்படுத்த ஆரம்பித்தன. அரசு வடக்குக் கிழக்கை சட்டரீதியாக இரண்டாக பிரித்தது. கிழக்கை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளiதி பத்து வருடங்களாக ஒப்புக் கொள்ளாத அரசு இப்போது அதை தாம் கைப்பற்றிவிட்டதாகக் கூறியது. ஏ9 பாதையை முற்றாகத் தடை செய்தது. மறுபுறம் விடுதலைப் புலிகளோ ஏ 9 பாதையில் வரி விதித்து, போலீஸ் நிலையங்களை உருவாக்கி தாம் தனியரசுக்குரிய கட்டுமானங்களை கொண்டிருப்பதாகக் காட்ட முயன்றனர். எரிபொருள் கொண்டு சென்றால் சிங்கள இராணுவத்திடமும் வரி விதித்தனர். யுத்த நிறுத்தத்தின் பின்னர் நடைபெற்ற அத்தனை சம்பவங்களும் இருதரப்பும் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைத்த கோரிக்கைகளின் வெளிப்பாடுகள்தான்.

கேள்வி - சுவிசில் நடைபெற்ற பேச்சுக்களில் ஏ-9 பாதையை திறப்பதைப்பற்றியே சுப.தமிழ்செல்வன் வலியுறுத்தி பேசியதற்கு காரணமென்ன ? அரசு அதைத் திறந்திருக்கலாமே மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்?

பதில் - அதற்குள்தான் சகல மர்மங்களுமே அடங்கியுள்ளன. ஒரு ஆளுமையுள்ள அரசு தனது பிரதேசத்திற்குள் வருவோரிடம் வரிவிதிப்பதும், கடவுச்சீட்டுக்களை பரிசோதிப்பதுமான நடைமுறையை அமல் செய்தால் அங்கு தனியான நாடு அல்லது தனியான நிர்வாக அலகு இருக்கிறது என்பது அர்த்தம். மறுபுறம் சிங்கள அரசு ஏ-9 பாதையைத் திறப்பதற்கு உடன்பட்டால் விடுதலைப் புலிகளின் பிரதான கோரிக்கையை தாமே அங்கீகரித்துவிட்டதாக முடியும் என்று அஞ்சியது. இதுதான் பேச்சுக்களில் முறிவு ஏற்படக்காரணம்.

கேள்வி - அரசு சமாதான செயலகத்தில் குண்டுவீசி அமைதிப் பேச்சுக்களுக்கு பொறுப்பாக இருந்தவரை கொன்றதற்குரிய நோக்கம் என்ன ?

பதில் - அனுராதபுரம் தாக்குதலில் அரசு பட்ட அடி மிக மோசமானது. கோபம் கொண்டு, தம்மளவில் யுத்த நிறுத்தம் முடிவடைந்துவிட்டது என்ற செய்தியை சுப. தமிழ்செல்வனின் மீது நடாத்திய தாக்குதல் மூலம் சொல்லியிருக்கிறது.

கேள்வி - சிறீலங்கா அரசு இப்படியான செயலை கடுகளவும் கூசாமல் செய்யும் என்பதற்கு முன்னரே பல உதாரணங்கள் இருந்தும் விடுதலைப்புலிகள் ஏன் தாக்குதல் இலக்கில் இருந்தார்கள்.

பதில் - நடைபெறுவது போர் அதில் பூரணமாக தப்பி வாழ்வது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சாத்தியமில்லை. ஆனால் எந்தவொரு அரசும் சமாதானப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் பகுதியை தாக்குவதில்லை, சர்வதேச சமுதாயமும் அதை அங்கீகரிக்காது என்பது மரபு. அதை நம்பியது தவறு என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது.
கேள்வி - இந்த நிலையில் அடுத்த கட்டம் எப்படியாக அமையலாம் ?

பதில் - முதலில் இதுவரை நடைபெற்ற பல நிகழ்வுகளை விடுதலைப்புலிகள் தொடர் மதிப்பீடு செய்ய வேண்டும். இரு தரப்பிற்கும் தெரிந்தோ தெரியாமலோ அனைத்திற்கும் மேலால் ஒரு மாயக்கரம் இருப்பது போல, நிகழ்வுகளின் போக்கு உள்ளது. இதை நிரூபிக்க ஆதாரங்கள் இல்லை என்றாலும் சம்பவங்களின் சிக்சக் என்றும் எதிரும்புதிருமான நிகழ்வுகள் அந்த சந்தேகத்தை காட்டுகின்றன.

01. விடுதலைப்புலிகளின் கப்பல்கள் தாழ்க்கப்பட்டன - அதேபோல சிறீலங்கா அரசின் 24 விமானங்கள் அழிக்கப்பட்டன.
02. சுப. தமிழ்செல்வன் மீது இலக்கு தவறாத தாக்குதல் நடைபெற - மறுபுறம் ஒட்டுப்படை கருணா கைதுசெய்யப்பட்டார், பிள்ளையான் கருணாவின் காரியாலயங்களுக்குள் இராணுவ உதவியுடன் புகுந்தார்.
03. பிரான்சில் ரிரிஎன் நிறுத்தப்பட்டது பதிலாக இலண்டனில் ரிபிசி நிறுத்தப்பட்டது.

இப்படி ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறும் சம்பவங்கள் தற்செயலானவை அல்ல என்பதையே காட்டுகிறது. தற்செயல் போலவே நன்கு வகுக்கப்பட்ட திட்டங்கள் நகர்கின்றனவா என்ற கேள்விக்கு பதில் காணவேண்டும். ஈராக் போர், சிஐஏ உளவு விமானம் போன்ற நிகழ்வுகளில் செயற்பட்ட மாயக்கரங்களை அறிந்தால் இதை எளிதில் விளங்கலாம். ஆகவே மிகவும் நிதானம் வேண்டும். கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்லு என்று செயற்படுவது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். போரில் உள்ள ஆபத்து சமாதானத்திலும் இருக்கிறது என்பதற்கு சுப. தமிழ்செல்வனின் இழப்பு ஓர் உதாரணம்.

கேள்வி - கண்காணிப்புக்குழு இப்போதும் ஏன் இருக்கிறது ?

பதில் - இவ்வளவு நடந்த பிறகும் இருதரப்பும் ஏன் யுத்தநிறுதத்தில் இருந்து தாம் வெளியேறுவதாக அறிவிக்கவில்லை ? இதற்கு என்ன பதிலோ அதே பதில்தான் கண்காணிப்பு குழுவின் இருத்தலுக்கும் பொருந்தும்.

கேள்வி - சுப. தமிழ்செல்வனுக்குப் பின் என்ன ?

பதில் - அவருடைய இடத்திற்கு உடனடியாக பா. நடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். சுப. தமிழ்ச்;செல்வன் வரை ஓடிவந்த நதி யூரேண் எடுத்து எதிர்ப்புறமாக திரும்பாது.. அது தனது தடத்திலேயே ஓடும் என்றே உணர முடிகிறது.

அலைகள் ஆய்வுப்பிரிவு 07.11.07

0 Comments: