Monday, November 19, 2007

புலிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் ஜே.வி.பி.

on : 2007-11-19

""மஹிந்தவின் அரசு படைப்பலத்தை அடிப்படையாகக் கொண்டே தமிழரின் தலைவிதியை நிர்ணயிக்க விரும்புகின்றது. தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து, அதன் மூலம் இராணுவ மேலாதிக்க நிலையில் நின்று தான் விரும்பும் அரைகுறைத் தீர்வைத் தமிழர் தலையில் கட்டிவிட எண்ணுகின்றது. இந்தப் போர்முனைப்புச் செயற்பாட்டால் போர்நிறுத்த ஒப்பந்தம் செத்துச் செயலிழந்து போய்க் கிடக்கின்றது. ஒப்பந்தம் கிழிக்கப்படாமலேயே உக்கிப்போன தாளாகி, உருக்குலைந்து கிடக்கிறது. புலிகளின் இலக்குகளுக்கு எதிராக மும்முனைகளிலும் தாக்குதல் தொடரும் என அறிவித்து, மஹிந்த அரசு ஒப்பந்தத்திற்கு ஈமைக்கிரியைகளையும் நடத்தி முடித்திருக்கின்றது.''

இது கடந்த வருடம் மாவீரர் தின உரையில் தலைவர் பிரபாகரன் தெரிவித்த கருத்துகள். இதே உரையில் மற்றொரு விடயத்தையும் அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.
""மஹிந்த உள்நாட்டில் தமிழின அழிப்புப் போரை நடத்திக்கொண்டு, உலக நாடுகளுக்கு சமாதானம் விரும்பும் ஓர் அமைதிப் புறாவாகத் தன்னை இனங்காட்ட முனைகிறார். தனது ஏமாற்று நாடகத்துக்குப் பக்கத்துணையாக அனைத்துக் கட்சி மாநாட்டை அவர் கூட்டியிருக்கிறார். எந்தவொரு பிரச்சினைக்கும் முகம்கொடாது, தட்டிக்கழிக்க விரும்பினால் ஒரு விசாரணைக் கமிஷனையோ, ஒரு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவையோ அமைத்து, சர்வகட்சி மாநாட்டையோ ஒரு வட்டமேசை மாநாட்டையோ நடத்தி, அதனை முடிவில்லாமல் இழுத்தடிப்பது சிங்கள ஆட்சியாளர்களின் அரசியற் பாரம்பரியம். இதனையேதான் மஹிந்தவும் செய்கிறார். பற்றியெரியும் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு காணுமாறு நாம் வழங்கிய வாய்ப்புகளையும் உதாசீனம் செய்து, உதறித்தள்ளிவிட்டு, இந்த அனைத்துக் கட்சி மாநாட்டுக்குள் மஹிந்த பதுங்கிக் கிடக்கின்றார். அந்த அனைத்துக் கட்சிக் குழுவும் கடந்த பத்து மாத காலமாக இருட்டுக்குள் கறுப்புப் பூனையைத் தேடியலைபவன்போல தமிழர் பிரச்சினையைத் தேடியலைந்து கொண்டிருக்கிறது.''

இதுவும் சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் பிரபாகரன் கூறிய கருத்தே. இந்தக் கருத்துகளின் ஊடாகப் புலிகளின் தலைவர் சொல்ல வருவது என்ன?

செத்துச் செயலிழந்து, உக்கிப்போன தாளில் உருக்குலைந்து கிடக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைத் தான் இன்னும் மதிப்பதாக சர்வதேச சமூகத்துக்குக் காட்டிக் கொண்டு நடித்துக் கொண்டு அந்த ஒப்பந்தத்துக்கு விரோதமாக முழு யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது அரசு.

ஆக, யுத்தநிறுத்தத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொண்டு செயலில் அதற்கு மாறாக நடக்கும் நடிக்கும் இலங்கை அரசின் உண்மைச் சொரூபத்தை உணர்ந்துகொள்ளுங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்பதையே இதனூடாக சர்வதேச சமூகத்துக்குப் புலிகள் எடுத்துரைக்க முனைகின்றனர்.

அதேசமயம் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கமிட்டி அல்லது சர்வகட்சி மாநாடு என்று மஹிந்த அரசு கூட்டியிருக்கும் ஏற்பாடு கூட, சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் ஒரு தந்திரோபாயம் நாடகம் என்பதையே புலிகளின் தலைவர் பிரபாகரன் தமது கடந்த வருட மாவீரர் தின உரையில் அம்பலப்படுத்துகின்றார். அதுவே, தமிழர் தரப்பின் இன்றைய கருத்தும் கூட.
அதாவது, யுத்த நிறுத்த ஒப்பந்தம், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு என்பன மஹிந்த அரசின் நாடகங்கள் அரங்கேறுவதற்கான மூலோபாயங்கள் எனப் புலிகளும் தமிழர்களும் சுட்டிக்காட்டுகின்றனர். இவ்விடயங்களின் மஹிந்த அரசின் அரசியல் நடிப்பை பித்தலாட்டத்தை உண்மைச் சொரூபத்தை உலகம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே புலிகளினதும் தமிழர் தரப்பினதும் வேணவா; எதிர்பார்ப்பு.

ஆனால் முழுப் பௌத்த, சிங்களப் பேரினவாதக் கட்சியான ஜே.வி.பி. கூட இவ்விடயங்களில் தமிழர் தரப்புக்கும் புலிகளுக்கும் ஆதரவாகச் செயற்படுகின்றது போலவே தோன்றுகின்றது; தென்படுகின்றது.

யுத்த நிறுத்த ஒப்பந்த விடயத்திலும் சர்வ கட்சிப் பிரதிநிதிகள் கூட்ட விவகாரத்திலும் மஹிந்த அரசின் நடிப்புக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் உண்மை ரூபத்தை கவனத்தில் கொள்ளுங்கள் என்று புலிகளும் தமிழர்களும் வற்புறுத்த
அந்த இரு விடயங்களிலும் மஹிந்த அரசு தனது வெளிவேடங்களையும் கலைத்துவிட்டு உண்மை ரூபத்தைக் காட்ட வேண்டும் என ஜே.வி.பியும் வற்புறுத்தியிருக்கின்றது.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முற்றாக முறிக்கும்படியும், சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவை முற்றாகக் கலைத்து விடும்படியும் ஜே.வி.பி. நிபந்தனை விதித்திருப்பது, இவ்விடயங்களில் உண்மை நிலையை நிலைப்படுத்துமாறு தமிழர்களும், புலிகளும் விடுக்கும் கோரிக்கைக்கு முழு அளவில் ஒப்பானது.

இப்போதெல்லாம் புலிகளின் வேலையை புலிகளுக்கு சார்பான பணிகளை தென்பகுதி ஜே.வி.பி. செய்வதாகவே தோன்றுகின்றது.


http://www.uthayan.com/

0 Comments: