Thursday, November 29, 2007

"ஈழத்தமிழருக்கு இந்தியா துரோகம்-தமிழகம் பொறுத்துக்கொள்ளாது"

திருப்பூர் மாநாட்டில் வைகோ முழக்கம்

உலகில் முதலில் தோன்றிய மொழி எது என்று கேட்டால் அது தமிழ்தான் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியும். என்று பிறந்தது என்று அறிய முடியாத தமிழ் மிகுந்த பாரம்பரியத்தைப் பெற்றிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கான வரலாற்றைப் பெற்றிருக்கிறது என்பது மட்டுமல்ல அந்த மொழி சார்ந்த இன மக்களின் நாகரிகம் உலகிலுள்ள அத்தனை நாகரிகங்களையும் விஞ்சியது. காலத்தாலும் விஞ்சியது இதுதான். இதற்கு அடிப்படை. -நாகரிகம் உயர்ந்திருக்கிறது என்று சொன்னால் அவன் வாழும் இடம், அவன் வசிக்கும் இடம், அவன் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, உறைந்திடும் உறையுள், அவன் சார்ந்திருக்கக் கூடிய சுற்றுப்புறத்தில் அமைந்திருக்கிற சமூக அமைப்பு, அதனைக் கட்டி ஆளுகின்ற அரசுகள், பின்பற்றுகிற நெறிமுறைகள் இவைகளை வைத்துத்தான் ஒரு சமுதாயத்தின் நாகரிகத்தை நாம் எடை போட முடியும். அந்த விதத்தில் ஏழாயிரம் ஆண்டுகள், பத்தாயிரம் ஆண்டுகள் என்ற கணக்குகள் எல்லாம் இங்கே சொல்லப்பட்டன. பதினோராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டு கடலில் அமிழ்ந்து கிடக்கும் நகரம் காவிரிபூம்பட்டினம் என்பதை ஆய்வாளர்கள் தகுந்த ஆய்வைச் செய்து நமக்கு மெய்ப்பித்திருக்கிறார்கள். நாகரிகத்தில் இவ்வளவு சிறப்புகளைக் கொண்டிருந்த தமிழன் வர்த்தகம் என்பது பண்டமாற்று ஒரு காலத்திலே. நாணயங்கள் வருவதற்கு முன்பு பொருட்களைக் கொடுத்து பொருட்களை வாங்கிய காலம். அப்படிப் பொருட்களைக் கொடுத்து பொருட்களை வாங்குகிற பொழுது குறிஞ்சி, மருதம், நெய்தல், முல்லை, பாலை இப்படி வகுக்கப்பட்ட நிலங்களிலே வாழுகின்ற மக்கள் அந்தந்தப் பகுதிகளுக்கேற்ற தொழில்களில் ஈடுபடுகின்றனர். காட்டிலே உலவுபவர்கள் மான்களை வேட்டையாடுகிறார்கள். தேனும் கிழங்கும் கொண்டு வருகிறார்கள். தேனையையும் கிழங்கையும் கொண்டு வந்து கடைகளில் கொடுத்து விட்டு அவன் மானின் இறைச்சியும் கள்ளும் வாங்கி அங்கே பருகி உண்டு மகிழ்கிறான். நெய்தல் நிலத்திலிருந்து மீனைக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் மீனைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு அவர்கள் இந்த மதுவை வாங்கிப் பருகுகிறார்கள். இவன் குறிஞ்சிப் பகுதியிலிருந்து வேடன் மானின் இறைச்சியைக் கொண்டு வருகிறான். அவர்கள் இந்த இடத்திற்கு வந்து குளக்கரையிலே விளைந்திருக்கக் கூடிய அருமையான நெல்லை வாங்கிக் கொண்டு போகிறார்கள். இப்படி பொருட்களை உள்நாட்டுக்குள்ளே மட்டும் வாங்கினார்களா? ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் போய் பொருட்களை வாங்குகிறார்கள். அதற்கு அடுத்து நாணயம் வருகிறது. காசுகள் வருகின்றன. காசுகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உலவியதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கோட்பாட்டை முன்வைத்திருக்கிறீர்கள். உலகத் தமிழர் பேரமைப்பு என்ற பெயரை சொல்லும் தகுதியைப் பெற்றவன் தமிழன். கொலம்பசு புறப்படுவதற்கு முன்பு, வாசுகோடகாமா புறப்படுவதற்கு முன்பு இந்த உலகத்தின் பல பகுதிகளை தங்கள் காலனிகளாக ஆக்கிக் கொண்ட ஐரோப்பியர்கள் பல நாடுகளுக்குச் செல்வதற்கு முன்பு இந்த உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவன் தமிழன். அப்படிப் பயணம் செய்த காரணத்தினாலே தான் அவன் உலகின் பல நாடுகளுக்குச் சென்று திருப்பூர் நகரம் என்பதினால் சொல்லுகிறேன் இந்த துணிகளைத் தயாரிப்பதைப் பொறுத்தமட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய இலக்கியங்களில் இந்த துணிகள், பட்டினால் செய்த துணிகள், பருத்தி நூலால் செய்த துணிகள், அது மட்டுமல்ல மயிரினால் செய்யப்பட்ட துணிகள், இந்த துணிகள் மிக மென்மையாக இருந்தன. உலகத்தின் பல்வேறு நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன என்பதற்கும் சரித்திர ஆதாரங்கள் இருக்கின்றன. ரோம் கிரேக்கத்திலிருந்து வணிகர்கள் இங்கே வந்து வாங்கிச் சென்றார்கள். அவர்களுடைய நாணயங்கள் இன்று அகழ்விலே எடுக்கப்படுகின்றன. அப்படித் தயாரிக்கப்பட்ட துணிகளைப் பற்றிச் சொல்லுகின்ற பொழுது இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்படடு சொல்லுகிறான். இந்தியத் திருநாட்டின் தென்பகுதியாக இருக்கக் கூடிய இந்தப் பகுதியைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லுகின்றான். அவனுக்குத் தெரியவில்லை. செடியிலே விளையக்கூடிய பருத்தியிலிருந்து நூல் கிடைப்பது அவனுக்குத் தெரியவில்லை. அதனால் அவன் எழுதுகிறான்.

நம்முடைய நாடுகளிலே இருக்கக்கூடிய ஆடுகளிலே கிடைக்கக்கூடிய மயிர்களைவிட இந்த நாட்டிலே கம்பளி மரங்களிலே விளைகின்ற கம்பளி மென்மையானது. அது மிக விசேடமானது. இது இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்கிறான். நம் பருத்தி நூலைப் பற்றி சொல்லுகிற பொழுது செடிகளிலே மரங்களிலே கிடைக்கிற இந்தக் கம்பளி, ஆடுகளின் மயிரிலிருந்து கிடைக்கும் கம்பளியை விட தரம் வாய்ந்தது என்று எழுதுகிறான்.
சிலப்பதிகாரத்தில் இளங்கோ குறிப்பிடுகிற பொழுது எவ்வளவு சிறந்த வணிகம் அங்கு நிறைந்திருந்தது என்பதை சுட்டிக்காட்டுகிறான். முத்திரை பொறிக்கப்பட்டு பொருட்களுக்கு அக்மார்க் போடுகிறான். புலி பொறித்த பண்டம் நிறைந்திருந்தது சோழத் திருநாட்டிலே கருமவினையாளர்கள் என்பவர்கள் இந்த துணிகளைத் தயாரிப்பவர்கள். ஆக தொழில் என்று சொன்னால் துணி தயாரிக்கும் தொழில் இருந்தது. சிற்பம், ஓவியம் என்று வரிசையாகச் சொன்னார்கள். எத்தனையோ கடைகள் இருந்தன. உழவுத் தொழில் சிறப்புற்றிருந்தது. இங்கே கரும்பு விளைந்திருக்கிறது. அது தெரியாது கிரேக்கத்தில் இருந்தவனுக்கு. அலெக்சாந்தர் சொல்கிறான். எகிப்தைக் கடக்கிற போது சொல்கிறான். இன்னும் தொலைதூரம் செல்வோம். இந்துகுஷ் மலையைக் கடந்து செல்வோம். அங்கு ஒரு நாடு இருக்கிறது. அந்த நாட்டின் தெற்குப் பகுதிக்குச் செல்வோம். தேனைப் பிழிகின்ற தாவரங்கள் இருக்கிறது. அவைகளை உங்களுக்குத் தருகிறேன். அந்த தாவரங்களைப் பிழிந்தால் தேன் கிடைக்கும். கரும்பு அவனிடம் கிடையாது.

அப்படிப்பட்ட கரும்பும் நெல்லும் விளைந்த காலத்தில் பசியில்லா காலத்தில் அப்படி பசியோடு வருகிறவர்களுக்கு பசியைப் போக்க அட்சய பாத்திரத்தை அமுத சுரபியை ஏந்தினாள் மணிமேகலை என்று சொல்லும் காப்பியம் உருவாகிய காலத்தில் நான் வேதனையோடு தெரிவிக்க விரும்புகிறேன். இங்கிருந்து உணவு வெளியே அனுப்பப்பட்டது மட்டுமல்ல வெளியில் இருந்து பண்டமாற்று மூலம் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் என்று உள்ளது. ஈழத்து உணவும் வந்தது.

இதையெல்லாம் நான் குறிப்பிடு வதற்குக் காரணம் இளைஞர்களுக்கு உலகத்தில் யார் கடலோடிகள் என்று சொன்னால் கிரேக்கர்களை விட தமிழர்கள் தான் முதல் கடலோடிகள். கடலில் பயணம் செய்யக்கூடிய சாதனத்தைக் கண்டறிந்தவர்கள் அவர்கள். மரக்கலம் அமைத்தவர்கள். கப்பல் கட்டியவர்கள்.

உலக நாடுகளின் வரலாற்றைக் குறிப்பிடுகிறபோது நேரு குறிப்பிடுகிறார். ஆக மரக்கலம் வைத்து நாவாய்கள் வைத்து கப்பல்கள் கட்டி அந்தக் கப்பல்கள் மூலம் பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் வெளிநாட்டு கப்பல்கள் வந்து நங்கூரம் அடித்து தங்குவதற்கும் உரிய துறைமுகங்கள் அமைத்து அப்படி வருகின்ற கப்பல்களிலே உள்ள பொருட்கள் வருகின்றன. அரபு நாட்டு குதிரைகள் வருகின்றன. யவன தேசத்துப் பொருட்கள் வருகின்றன. ரோம் நாட்டிலிருந்து பொருட்கள் வருகின்றன. எகிப்திலிருந்து பொருட்கள் வருகின்றன. டைகிரீசு நதிக்கரை பகுதிகளில் சுமேரியர்கள் வாழ்ந்தார்கள். அந்தப் பகுதியிலிருந்து பொருட்கள் வருகின்றன. பண்டமாற்று நடக்கிறது. மலைகள் போல பொருட்கள் குவிந்து கிடக்கின்றன.
என்ன அழகாகச் சொல்லுகிறார். அந்த வெளிநாட்டுக் கப்பல்கள் வந்து காவிரிப்பூம்பட்டினத்து கடலில் அவை மிதக்கின்ற அந்தக் காட்சியை எண்ணிப் பார்க்கிற போது நங்கூரம் அடிக்கப்பட்ட கப்பல்கள் மிதப்பது குதிரை தாடையை அசைப்பதுபோல இருக்கிறது என்று எழுதுகிறான். அப்படிச் சொல்லுகிற போது ஈழத்திலிருந்து உணவு வந்தது என்று சொல்லுகிறான். இங்கும் தமிழன் செழிப்பாகவே இருந்தான். அங்கும் தமிழன் மகோன்னதமாகவே வாழ்ந்தான்.
இப்படியெல்லாம் வாழ்ந்த காலத்தில் உலகத்தின் பல்வேறு நாடுகளுக்குப் படையெடுத்து செல்ல முடிந்தது. கடற்கொள்ளைக்காரர்களை அடக்க முடிந்தது. கடற்படை அமைக்க முடிந்தது. கடற்படை சென்றது. சென்ற இடமெல்லாம் வெற்றிக் கொடி நாட்ட முடிந்தது. பறக்கிற கொடி புலிக்கொடி என்று கிழக்காசிய நாடுகள் பூராவும் புலிக்கொடி பறந்தது.
அப்படிபட்ட காலகட்டத்தில் உலகத்தின் பல நாடுகளுக்குச் சென்றான். வணிகம் நடத்தினார்கள். பல நாடுகளில் இன்றைக்கும் நம்முடைய வழிபாட்டுத் தலங்கள் போல அங்கு அமைக்கப்பட்டிருக்கின்றன.

இன்றைக்கு ஏதிலிகளாக புலம்பெயர்ந்த தமிழர்கள் பல நாடுகளில் வேதனைகளை சுமந்து கொண்டிருக்கிற இந்த நேரத்தில் உலகத் தமிழர்களுடைய கூட்டமைப்பு என்பது உலகத்தின் எந்தக் கோடியிலே தமிழனுக்கு துன்பம் நேர்ந்தாலும் அதைத் தடுப்பதற்கு முயலுகிறார்கள்.
இது தமிழகத்தின் எல்லைகளைக் கடந்த மேடை. அந்த அரசியல் எல்லைகளைக் கடந்த மேடைக்கு அழைக்கக் கூடிய அத்தனை தகுதிகளையும் படைத்த தலைவர் இவர். அவர் அழைத்ததினாலே நான் இங்கே வந்திருக்கிறேன். தந்தை பெரியாருக்கு அந்த தகுதி இருந்தது. அவர் தேர்தலை நாடவில்லை. வாக்குச்சாவடிகளை நாடவில்லை. வர்ணாசிரம கொடுமைகளை உடைத்தெறிவதற்காக உழைத்து உலகத்தில் எந்த சீர்திருத்தவாதியும் பெற முடியாத வெற்றியைப் பெற்றவர் தந்தை பெரியார் அவர்கள் என்று பேரறிஞர் அண்ணா பாராட்டுகின்ற தகுதியைப் பெற்றவர் தந்தை பெரியார்.

அதே போலத் தான் அத்தகைய தகுதிகளோடு இன்றைக்கு தன்னலமில்லாத - தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத - தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் தனக்கென எதையுமே நாடாமல் - தமிழர்களுக்காக அதுவும் மரணபூமியிலே மடிந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களின் விடியலுக்காக உழைக்கிறார்கள். ஆனால் இங்கே சொரணையற்ற சோற்றாலடித்த பிண்டங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறது ஒரு கூட்டம் இருக்கிறது என்று வேதனைப் படும் நேரத்தில் அந்த வேதனையைப் போக்குகின்ற ஒரு தலைவர் தான் எல்லா எல்லைகளுக்கும் அப்பாற் நின்று பணியாற்றுகின்ற ஒரு உத்தம தலைவன் அழைத்ததாலே அவரது அழைப்பிலே தமிழர்கள் அவர்கள் உரிமைகளுக்காக நடத்தப்படுகின்ற ஒரு மாநாடு தான் இந்த மாநாடு.
ஆக பல நாடுகளுக்குப் படையெடுத்துச் செல்லக் கூடிய தமிழன் கடற்படை நடத்தியவன் கடாரம் வென்றவன் பழந்தீவுகள் பன்னீராயிரத்திலே கொடியைப் பறக்க விட்டவன் இன்று அவனுடைய நிலைமை என்ன என்று கேட்டால் நான் ஒரு முறை சொன்னேன். இலங்கைத் தீவிலே தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். நாதியற்று சாகிறார்கள். எங்கள் சொந்த சகோதரிகள் வீதிகளிலே நாசமாக்கப்படுகிறார்கள். அந்த அவலக் குரல் இந்த அரசின் காதுகளிலே கேட்கவில்லையா? இந்தக் காதுகள் செவிடாகிப் போய்விட்டனவா? கண்கள் குருடாகிப் போய்விட்டதா?

எங்களுக்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது. இந்தியா என்ற ஒரு அமைப்பு ஏற்படுவதற்கு முன்பு இன்றைக்கு இருக்கின்ற இந்தியா என்கிற தேசம் அமைவதற்கு முன்பு தனித்தனி நாடுகளாகச் சிதறிக் கிடந்த காலத்தில் மாபெரும் பேரரசை நடத்தியவர்கள் தமிழர்கள். உலகத்தின் பற்பல நாடுகளை வென்றவர்கள் தமிழர்கள் என்ற வரலாறு உள்ளது. அதை பண்டித சவகர்லால் நேரு குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய நாட்டின் இராணுவ தளபதி தலைமை இராணுவ தளபதி தீபக் கபூர் நேற்றைய தினம் சொன்னதாக இன்றைய ஏடுகளில் செய்தி வந்திருக்கிறது. இந்திய நாட்டின் தலைமைத் தளபதி சொல்லுகிறார். இலங்கை இராணுவத்திற்கு நாங்கள் பயிற்சி கொடுக்கிறோம். அதோடு நிறுத்தவில்லை. இலங்கைக்கு ஆயுதங்கள் தருகிறோம். விமான எதிர்ப்பு பீரங்கிகள் தருகிறோம். விண்ணிலே பறந்து வருகின்ற விமானங்களை சுட்டுத்தள்ள தேவையான ஆயுதங்களைத் தருகிறோம். தீபக் கபூர் சொல்லியிருக்கிறார். நான் இந்திய நாட்டு பிரதமரைக் கேட்கிறேன். இலங்கைக்கு விமானத்தைத் தாக்குகின்ற விமான எதிர்ப்பு பீரங்கிகளைத் தந்திருக்கிறீர்களே, எதற்காக? யாரை எதிர்த்துப் போரிடுவதற்காக? இலங்கையின் மீது சீனத்து விமானங்கள் பறக்கிறதா? பாகிசுத்தான் விமானங்கள் பறக்கிறதா? அது விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சனை. ஆனால் இலங்கைக்கு இன்றைக்கு சீனமும் பாகிசுதானமும் ஆயுதங்கள் தருகின்றன. அப்படியானால் இலங்கைக்கு விமான எதிர்ப்பு பீரங்கிகள் தருவது எதற்கு? தமிழர்களின் விடுதலைப் புலிகளின் விமானங்களை தாக்குவதற்காகவா? அது தானே நோக்கம். இலங்கைத் தீவில் விடுதலைப் புலிகளின் விமானங்களைத் தாக்குவதற்கு அவர்கள் விண்ணில் பறந்து வந்து இனக்கொலை செய்கின்ற சிங்கள இராணுவ தளங்களை அழிக்கிற உலகம் இதுவரை கண்டும் கேட்டும் இராத வீர சாகசம் செய்கின்ற அந்த போர்க் களத்தில் அவர்களை எதிர்ப்பதற்கு எங்கள் வரிப்பணத்தில் வாங்கிய எங்கள் தமிழ்நாட்டு மக்கள் வரிப்பணமும் இருக்கிறது அந்த வரிப்பணத்தில் வாங்குகிற பீரங்கிகளை அனுப்புகிறீர்களா? அப்படி யானால் தமிழர்களை அழிக்க வேண்டும் என்பது தானே உங்கள் நோக்கம்.

இலங்கை அரசுக்கு விமான எதிர்ப்பு பீரங்கியைக் கொடுத்து சிங்களவனுக்கு உதவினால் விடுதலைப் புலிகளுக்கு நேரடியாக எல்லாவிதமான உதவிகளையும் செய்வதற்குத் தயார், எங்களிடம் ஆயுதம் இல்லை. இருந்தால் கொடுப்போம். பதிவு செய்து கொள். உன் புலனாய்வுத் துறை மூலம் பதிவு செய்து கொள். உனக்கு கண்காணி வேலை பார்க்க தமிழ்நாட்டு சர்க்கார் இருக்கிறது. காலம் இப்படியே இருக்காது. இந்த அநீதியை எதிர்த்து தமிழர்களின் உள்ளம் எரிமலையாகக் கொதிக்கிறது. 66 குழந்தைகள் செஞ்சோலையிலே சுட்டுத் குவிக்கப்பட்ட போது அந்தப் பச்சைக் குழந்தைகள் படுகோரமாகக் கொல்லப்பட்ட போது அகிலமே அழுதது. உலகமே கண்ணீர் வடித்தது. இந்திய அரசு கண்டித்ததுண்டா?

செஞ்சோலை சம்பவத்திற்கு மட்டுமல்ல தேவாலயத்திலே கிருத்துமசு பண்டிகைக்கு முதல் நாள ,புனித தேவாலயத்தில் மண்டியிட்டு செபித்துக் கொண்டிருந்தாரே நாடாளுமன்ற உறுப்பினர் ,,,, நெற்றிப் பொட்டிலே சுட்டுக் கொன்றானே உலகத்தில் அந்த அக்கிரமம் எங்காவது நடந்ததுண்டா? கண்டித்ததா இந்தியஅரசு? மனிதாபிமானம் செத்துப் போய் விட்டதா மத்திய அரசுக்கு? மனிதநேயம் மரத்துப் போய் விட்டதா? ரவிராசா துரைராசா நடராசா எம்.பி. நாடாளுமன்ற உறுப்பினர் பட்டப்பகலில் வீட்டு வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டார். கண்டித்ததா இந்த அரசு? உலகளாவிய பத்திரிகையாளர் துராக்கி நடுவீதியில் சுடப்பட்டாரே, கண்டித்ததுண்டா இந்த அரசு?

இந்த சூழ்நிலையில் தான் இந்தியா ஆயுதம் தருகிறது. தமிழ் இனத்திற்கு விரோதமாக தருகிறது. 1987இல் ஈழத் தமிழர்கள் மீது அவர்கள் விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காக அவர்கள் மீது ஒப்பந்தத்தை அக்கிரமமாக இந்தியா திணித்தது. அது தமிழர்களுக்குச் செய்த பச்சைத் துரோகம். மன்னிக்கமுடியாத துரோகம். அது மட்டுமல்ல. அர்கிரத்ஙிசிங்கை என் அருமைச் சகோதரர் விடுதலைப் புலிகளின் ஒப்பற்ற தலைவர் பிராபகரன் சொல்லியிருக்கிறார். அர்கிரத் எழுதியிருக்கிறார். பிரபாகரனைத் தீர்த்துக் கட்டுமாறு உத்தரவிட்டார்கள். இதற்கு என்ன சொல்லப் போகிறது இந்திய அரசு?

87இல் மறந்து விடாதீர்கள். 87-88இல். ஆபரேசன் செக்மேட் நடந்து கொண்டிருந்த காலத்தில் அதற்கும் முன்னதாகவே. தொடக்கத்திலேயே திலீபன் உண்ணாவிரதம் இருந்தானே அந்த காலகட்டத்திலேயே தீர்த்துக்கட்டச் சொன்னார்கள் என்று ஹர்கிரத் சிங் அவர்கள் சொல்கிறாரே, இதே மாதிரி ஒரு நிலைமை இந்தியாவில் வேறு ஒரு மாநிலத்தில் ஏற்பட்டிருக்குமானால் என்ன ஆயிருக்கும்? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். எரிமலை மாதிரி வெடித்திருக்கும் அந்த மாநிலம். இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை ஹர்கிரத்சிங் வைக்கிறார். இத்தனைக்கும் பிறகு அவர்களுக்குத் துரோகம் செய்கின்ற வேலை நடந்து கொண்டிருக்கிற வேளையில் பசியாலே சாகிறார்களே, பட்டினியால் சாகிறார்களே, மருந்தில்லாமல் தமிழ் மக்கள் சாகிறார்களே என்று இந்த மண்ணிலே தமிழ்நாட்டிலே மனிதாபிமான உணர்வும் தமிழ் உணர்வும் கொண்ட மக்கள் அவர்கள் உழைத்த உழைப்பினால் கிடைத்த ஊதியத்தில் சிறுகச் சிறுகச் சேமித்ததைத் திரட்டிக் கொடுத்து அதன் மூலம் வாங்கப்பட்ட அந்தப் பொருட்கள் மருந்துகள் அனுப்ப இதுவரை அனுமதி வழங்கவில்லையே மத்திய அரசு. இந்த நிமிடம் வரை அனுப்பாததற்கு காரணம் என்ன?

உலகத்தின் எந்த நாட்டிலும் செஞ்சிலுவைச் சங்கம் இயங்கலாம். இரண்டாம் உலகப் போரில் செஞ்சிலுவைச் சங்கம் இயங்கியது. நாசிகள் கொட்டமடித்த நாடுகளுக்கிடையே கூட செஞ்சிலுவைச் சங்கம் உலவியிருக்கிறது. ஆனால் பஞ்சசீலம் பேசிய பாரதத்தின் நிலைமை என்ன? செஞ்சிலுவைச் சங்கம் மூலம் தானே அனுப்ப வேண்டுமென்று அண்ணன் நெடுமாறன் கேட்டிருக்கிறார்? ஏன் அனுப்ப மறுக்கிறது? சாகிற தமிழனுக்கு உணவு கொடுக்கத் தயாராக இல்லை. தமிழனைச் சாகடிக்க இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பாயா? அறவழியிலே தானே போராடுகிறார் அண்ணன் நெடுமாறன். தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்து வதற்குத் தானே பயணம் மேற்கொண்டார்? காந்திய வழியில் அற வழியில் அகிம்சை வழியில் எங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்துகிறோம் என்று சென்னையில் உண்ணாவிரதம் இருந்த போது அந்த உண்ணாவிரதப் பந்தலைப் பிரித்ததே இந்த காவல் துறை உண்ணாவிரதம் அறிவித்த நிமிடத்திலிருந்து என்னுடைய கவலை எல்லாம் உண்ணாவிரதம் இருக்க விடக்கூடாது என்பதிலே. ஏன்? இன்னொரு நெடுமாறன் நமக்குக் கிடைக்க மாட்டார். அவரை இழந்து விடக்கூடாது என்பதற்காக. (பலத்த கைதட்டல்) ஆகையினால் அவரை நிர்ப்பந்தப் படுத்தினோம். அவரை நிர்ப்பந்தப்படுத்தி உண்ணாவிரதம் இருக்கக் கூடாது என்று சொன்னோம்.
உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக சீர்கெட்டு வருகிறது. அவர் ஏற்கனவே இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டவர். நொடிப்பொழுதிலே ஏதாவது ஆகிவிடக் கூடாதே என்ற மனக் கவலையின் காரணமாகத் தான் அந்த உண்ணாவிரதத்தை நிறுத்தும்படி நிர்ப்பந்தப்படுத்தினோம். அந்த உண்ணாவிரதத்தை நிறுத்துவதற்கு நாங்கள் முயன்றோம். உண்ணாவிரதம் இருந்த போது அவரைப் பற்றி அக்கறை இருந்ததா? பொறுப்பிலே இருப்பவர்களுக்கு . அதை மதிக்கின்ற பண்பாடு இருந்ததா? இதே போன்று தான் தீட்சித் நடந்து கொண்டார் திலீபன் உண்ணாவிரதம் இருந்த போது. போர் விளைந்ததே அதனால் தான்.

சிறுகச் சிறுகச் செத்துக் கொண்டிருந்தான் திலீபன். திலீபன் அழைப்பது சாவையா இந்தச் சின்ன வயதில் இது தேவையா என்று உணர்ச்சிக் கவிஞர் குரல் கேட்டு நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு எதிரில் அத்தனை மக்களும் அழுது கொண்டிருந்த அந்த நேரத்தில் இந்தியாவினுடைய பிரதிநிதியான தீட்சித் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்குச் சென்று பார்க்க அவருக்கு மனமில்லை. உங்கள் கவுரவத்தையாவது கொஞ்சமாவது பாதுகாத்துக் கொள்ளக் கூடாதா?
மத்திய அரசையும் கேட்கிறேன். மாநில அரசையும் கேட்கிறேன். செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் அனுப்ப வேண்டிய உணவும் மருந்தும் அனுப்பாமல் இருப்பதற்கு என்ன காரணம்? ஏன் அனுப்பவில்லை? உலகத்தில் எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட கொடுமை நடக்க முடியாது. மத்திய அரசாங்கம் ஆயுதம் வழங்குகிறது என்றால் மத்திய அரசைக் குற்றம் சாட்டுகிறேன். தமிழர்களுக்கு துரோகம் செய்வதாக. அத்துடன் உள்ள அத்தனை கட்சிகளையும் நான் குற்றம் சாட்டுகிறேன். நாங்கள் அதே கூட்டணியில் இடம் பெற்றிருந்திருக்கிறோம். ஆனால் அமைச்சரவையில் இடம் பெறாத அந்தக் காலத்திலும் இந்திய இலங்கை இராணுவ ஒப்பந்தம் போடப் போகிறார்கள் என்ற செய்தியை அறிந்தவுடன் அந்த நிமிடத்திலிருந்து கனலில் விழுந்ததைப் போல துடித்து அதைத் தடுப்பதற்கு எளியவனான நான் என்னாலான எத்தனையோ முயற்சிகளை செய்தேன். உலக மக்களுக்கு அவ்வப்போது என்ன நடக்கிறது என்பதைத் தெரிவித்தேன். இதற்கு முன்பேயே ஒரு மறைமுக இரகசிய ஒப்பந்தம் இராணுவ ஒப்பந்தம் இலங்கை அரசோடு போடப்பட்டுள்ளது. இந்திய கடற்படையும் இலங்கை கடற்படையும் புரிந்துணர்வு இரகசிய ஒப்பந்தம் போட்டுள்ளது. அங்கே இனத்தைக் காக்க மரணத்தோடு விடுதலைப் புலிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழீழ உரிமை காக்கும் போரில் கிழக்கு விழுந்து விட்டது என்று எவனோ பைத்தியக்காரன் சொல்வதை நம்பி விடாதீர்கள். கிழக்கு விழாது கிழக்கு அங்கே வெளுத்து விடும். போர் மூளும். கார்த்திகைக்குப் பிறகா அல்லது எப்போது என்று எனக்குத் தெரியாது. விரைவிலே ஒரு பெரிய யுத்தம் வரப்போகிறது. அந்த யுத்தத்திலே விடுதலைப் புலிகள் வெல்வார்கள். (பெருத்த கரவொலி)
தமிழ் ஈழத்தை ஆக்கிரமித்து இருக்கிற இராணுவம் நாசிகள் எப்படி அவர்கள் ஆக்கிரமித்து இருந்த லெனின்கிராடைவிட்டு வெளியேறினார்களோ அதைப் போல யாழ்ப்பாணத்தை விட்டு விரட்டப்படுவார்கள் சிங்களர்கள். அப்படிப்பட்ட ஒரு போர் மூளுகிற ஒரு சந்தர்ப்பத்தில் தன்மானம் உணர்வு மிக்க தமிழர்களே தோள் தட்டி வாருங்கள் அவர்களுக்கு ஆதரவு தருவதற்கு வாருங்கள். உலகத்தில் எந்த விடுதலை இயக்கமும் செய்ய முடியாத சாதனையை விடுதலைப் புலிகள் மாத்திரமே செய்திருக்கிறார்கள். என்ன காரணம்? அது தான் நான் சொன்னேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே பருத்தித் தொழிலிருந்து கப்பல் கட்டும் தொழிலிலிருந்து அத்தனை தொழில்களையும் செய்தவ னல்லவா தமிழன். ஆகவே தான் உபகரணங்கைைத் தயாரித்து விமானங்களையே தயாரித்து விட்டான். அதைச் சாதிக்கவும் முடிகிறது. புறப்பட்டு கண்ட இடத்தில் அல்ல குறிப்பிட்ட இடத்தில் இடத்தைத் தேர்ந்து எடுத்து துல்லியமாக இது தான் தாக்குதல் நடத்த வேண்டிய இடம் என்று தேர்வு செய்து அந்த இடத்திலே குண்டு வீசி பக்கத்திலே இருக்கிற மக்களுக்கு ஆபத்தில்லாமல் அந்த இடத்தை தகர்த்து தரைமட்டம் ஆக்கிவிட்டு பத்திரமாக மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே சென்று சேருகிற சாகசம் அவர்களுக்கே சொந்தமானது. அமெரிக்கா வின் சாலஞ்சர் கூட தடுமாறுகிறது. தமிழன் சாதிக்கிறான். பெருமையாக இருக்கிறது. உலகத்திலே தமிழன் என்று சொல்வதற்கு. தமிழா இந்த உலகத்தில் உனக்கு ஒரு பெருமையைத் தேடித் தந்திருப்பவன் பிரபாகரன். (பலத்த கரவொலி)

இதை ஊருக்கு ஊர் போய்ச் சொல்ல வேண்டும். சொல்வோம். இது தான் வேலை. இதிலே ஒன்றும் தப்பு கிடையாது. நீ சிங்களவனுக்கு ஆயுதம் தருகிறபோது புலிகளை ஆதரித்துப் பேசாவிடில் இந்த நாக்கு இருந்து என்ன செய்ய? (பலத்த கரவொலி) தூய்மையான நோக்கத்தோடு இந்த மாநாடு நடக்கிறது. இந்திய அரசு செய்கின்ற துரோகத்தைக் கண்டித்து ஈழத்து மக்களுக்கு நாங்கள் துணையாக இருப்போம்.

21 கரும்புலிகள் இதோ குகைக்குள் செல்லப் போகிறோம் உயிர்க்கொடை தரப்போகிறாம் என்று அறிவித்து விட்டு போனார்களே, நினைத்துப் பார்க்க முடியுமா, வாலிபத்தின் வசந்தத்தில் இருக்கும் வாலிபர்கள். வாழ்க்கையின் வசந்தங்களை ஒரு துளி அளவும் அனுபவிக்காத வாலிபர்கள். வாழ்க்கையின் இன்பங்கள் எதையுமே தேடாத உள்ளங்கள், இளைஞர்கள். சொந்த மண்ணை விடுவிக்க தாய் மண்ணை விடுவிக்க விடுதலை பெற புறப்பட்டுச்சென்றார்களே ஒவ்வொரு போருக்கும் சரியான திட்டத்தை வகுக்கின்றவர் பிரபாகரன் என்று ஒரு அமைச்சர் இராணுவ இணை அமைச்சராக இராசீவ் காந்தி அமைச்சரவையிலே இருந்தவர் ஒருநாள் நாடாளுமன்ற லாபியிலே இராணுவ சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆய்வு செய்து நிறைய எழுதியவர் அவர் என்னை அழைத்து சொன்னார் இருபதாம் நுற்றாண்டில் பிரபாகரனைப் போல் ஒருவரைப் பார்க்க முடியாது என்று. 87இலே சொன்னார். இணையற்ற வான்புலிகள் இப்போது தாக்குவதைப் பற்றி இப்போது சொன்னால் என்ன கூறுவாரோ.

திட்டங்கள் வகுத்து வெற்றி பெற்ற மாவீரர்கள் வரலாற்றிலே படித்திருக்கிறேன். சீசர் காலத்திலிருந்து அலெக்சாண்டர் காலத்திலிருந்து நெப்போலியன் காலத்திலிருந்து எவரும் பிரபாகரனுக்கு நிகராக மாட்டார்கள். இதைச் சொன்னால் தேசத் துரோகம் என்று சொல்கிறார்கள். அனுராதபுரத்தைத் தாக்கினான். ஏன் ? அங்கு தான் எங்கள் மன்னன் எல்லாளன் இருந்தான். 44 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் அனுராதபுரத்திலே. அனுராதபுரத்திலே ஆட்சி புரிந்த எங்கள் மன்னன் எல்லாளனை வஞ்சகமாக வீழ்ததினாரகள். மன்னன் எல்லாளன் வாழ்வு முடிந்தது. 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே அனுராதபுரத்தில் கொள்ளுப்பேரனுக்கு கொள்ளுப்பேரனுக்கு கொள்ளுப்பேரனான பிரபாகரன் தாக்குதல் நடத்தியுள்ளான். எப்படி எல்லாளன் அரசு அமைத்து ஆண்டானோ அப்படி தமிழ் ஈழ அரசு அமையும். இந்த உலகத் தமிழர் பேரமைப்பு இந்த நிகழ்ச்சியின் மூலமாக - நடக்கப் போகிற யுத்தத்திற்கு - ஈழத் தமிழ் மக்களுக்கு - பெருந்துணையாக இருப்போம். தொழிலும் வணிகமும் வளர்ப்போம் - தமிழ் இனத்தின் வலிமையைப் பெருக்குவோம் என்று கூறி விடைபெறுகிறேன்.

thenseide.com

0 Comments: