தமிழீழ விடுதலை ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுத்து அதற்கான திட்டமிடல்களை மேற்கொள்ளும் வேளையி்ல் ஆயுதரீதியான போராட்டத்தில் மட்டும் நின்றுவிடாது போரும் பொருளாதாரமும், போரும் புனர்வாழ்வுப் பணிகளும், போரும் சமூக அபிவிருத்தியும் என்று அனைத்தையும் சேர்த்துத் திட்டமிட்டுச் செயற்படுத்திய கட்டுமான பணிக்குள் 1985 ம் ஆண்டு தமிழர் புனர் வாழ்வுக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் ஒவ்வொரு அகவையிலும் நிவாரண, புனர்வாழ்வு அபிவிருத்தி, இயற்கை அனர்த்தங்களையும் எதிர்கொண்டு துன்பதுயரங்களிலிருந்து வெளியே வந்து புதிய வாழ்வினைத் தொடங்கும் அளவிற்கு பலவிதமான வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் 1985 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து தனது வெளிநாட்டுத் செயற்பாட்டுத்திட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. தாயகத்தில் சிங்கள அரசின் பேரினவாத அரசாங்கத்தின் கண்மூடித்தனமான பயங்கரவாதச்செயல்களால பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண, புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு அரசு அல்லது அரசு சார்ந்த அமைப்புகளிடமிருந்தோ உதவிகளைப் பெறுவதோ இயலாத ஒன்றாக இருந்ததை நடைமுறையில் கண்ட உண்மைகள். இப்படிப்பட்ட நிலையில் புனர்வாழ்வுக் கழக ஆளுமைக்குழு தனது செயற்பாட்டினை கடல் கடந்து புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் கிளைகளை நிறுவி செயற்படுத்தி வருகின்றது. தாயகத்தில் இன்னற்படும் மக்களின் துயர் துடைப்புச் செயற்பாடுகளிற்காக புலம்பெயர்ந்து வாழும் மக்களிடமும், சில மனிதாபிமான அமைப்புகளிடமிருந்தும் உதவிகளைப் பெற்று வந்திருக்கின்றன.
நீதியானதும், வீரம் செறிந்ததுமான விடுதலைப்போராட்டத்தை தலைமையேற்று நடத்திவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்திய அமெரிக்கா தற்போது தமிழர் புனர்வாழ்வுக்கழத்தின் சொத்துக்களை முடக்கியுள்ளமை ஈழத்தமிழர்கள் உணர்வுகளை காயப்படுத்தும் செயல்களாக அமைந்திருக்கின்றது.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களையும் நிதிகளையும் வழங்குகின்றது என்ற இலங்கை அரசின் பொய்ப்பிரசாரத்தை நம்பியே அமெரிக்க அரசும் தனக்கு சாதகமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இலங்கைக்குள் எப்படியாவது நுழைந்து இந்தியாவின் உளவுநிலை அறிவதற்கான சந்தர்ப்பத்தை தேடிக்கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துவிடப்போகின்றது. இலங்கை மீதான அமெரிக்காவின் மூக்குநுழைப்பு தந்திரோபாயங்கள் நிறைந்ததாகும். சிங்கள பெளத்த பேரினவாத அரசும், எகாதிபத்திய சக்திகளும் ஒன்று சேர்ந்து விடுதலைப்புலிகளின் பலத்தை பலமிழக்கச்செய்து சிங்கள தேசத்தை தமது பிராந்திய தேவைகளுக்காக பயன்படுத்தலாம் என்ற உள்நோக்கத்துடன் செயற்படுகின்றது.
ஐ.நா. பொதுச் செயலாளர் இலங்கையின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தபோதும் , அமெரிக்கா சிறிலங்காவுக்கு இராணுவத்தளபாடங்களையும், ராடர் கருவிகளையும் விநியோகித்துக் கொண்டு தான் இருக்கின்றது.
அமெரிக்காவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஓர் அறக்கட்டளை அமைப்பாக வேலை செய்கின்றது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு அமெரிக்க அறக்கட்டளையினால் நான்கு நட்சத்திர தகுதி வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி அமெரிக்காவின் மிகப் பிரபல்யமான இரண்டு அறக்கட்டளை அமைப்புக்களும் இணைந்தே செயற்படுகின்றன.
2004 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமிப் பேரலை தாக்கத்தின் பின்னர் அந்த அழிவிலிருந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மறுவாழ்வை ஏற்படுத்திக் கொடுப்பதில் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் பெரும் பங்கு வகித்தது. அதன் செயற்பாடுகள் மிகச்சிறப்பாக அமைந்தன என அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஒரு கேடயம் ஒன்றையும் இந்த அமைப்புக்கு வழங்கி இருந்தார். அதைவிட அந்த சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த கோபி அனான், பில் கிளின்டன் ஏனேயோரும் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தினருடன் உரையாடி, அமைப்புக்களின் செயற்பாடுகள் பற்றியும் கலந்து உரையாடியுள்ளார்கள்.
புனர் வாழ்வுக் கழகம் தமிழர், முஸ்லிம், சிங்களவர் என இனம்,மதம் கடந்து பணியாற்றி வருகின்ற உன்னதமான தொண்டு நிறுவனம்.தமிழர் புனர் வாழ்வுக்கழகத்தின் தன்னலமற்ற பணியாளர்களின் சேவையாலும் மனித நேயம் மிக்க புலம் பெயர்ந்த தமிழீழ மக்களின் பங்களிப்பாலும் இன்று புனர் வாழ்வுக்கழகம் ஓர் ஆலமரமாக வளர்ந்து, அவலங்களைச் சுமந்து வாழும் உள்ளங்களுக்கு நிழல் தருபவையாக இருக்கின்றது.
பல பாரிய புனருத்தாரணத் திட்டங்களை மேற்கொண்டு எமது மக்களின் வாழ்வு இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குப் பெரிதும் முன்னின்று உழைத்ததும் இதே தமிழர் புனர் வாழ்வுக்கழகம்தான்.
அமெரிக்க அரசின் இந்த திடீர் நடவடிக்கையால் யுத்தம் மற்றும் கடல்கோள் போன்ற இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கான நிவாரணப் பணிகள் பாரிய அளவில் தடைப்படுவதோடு, தாயகத்தின் தமிழ் மக்களை பட்டினி போட்டு, அழிப்பதற்கான வழியாக மாறப்போகின்றது.
இந்த நிலையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பண முடக்கம் தமிழர்களுக்கு எதிரானது அல்லவாம் அத்தோடு இனப்பிரச்சினைக்கான தீர்வை சமாதானப் பேச்சுவார்த்தையின் மூலமே காண முடியுமெனவும், சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் கருத்துத் தெரிவிக்கின்றபோதும், விடுதலைப் புலிகளின் பேச்சுக்குழுவின் தலைவர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் சிறீலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்டபோது எந்தவித கண்டனத்தையோ அறிக்கையையோ வெளியிடாததும் ஏனோ?
பல்லாயிரக்கணக்கான மக்கள் படும் அவலங்களை சென்று பார்க்க முடியாத நிலையில், ஏனைய ஐ.நா அமைப்புக்களும் சர்வதேச தொண்டு நிறுவனங்களும் உள்ள நிலையில் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் அம் மக்கள் மத்தியில் நின்று சேவையாற்றி வருவது அமெரிக்கா அறிந்திருக்கவில்லையா, அல்லது கண்மூடிக் கொண்டு இருக்கின்றதா?
அரச பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களை அழிவுகளுக்கும் அவலங்களுக்கும் உள்ளாக்கிவரும் ஸ்ரீலங்கா அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்துவரும் அமெரிக்கா மேற்படி ஸ்ரீலங்கா அரசின் நடவடிக்கைகளால் அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவியளித்து அரவணைத்து வரும் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் சொத்துக்களை முடக்குவது வேதனைக்குரியது.
தமிழர்களுடைய தலைமை குறித்து சரியான பார்வையை இதுவரை சர்வதேசம் கொண்டிருக்கவில்லை. சமாதானத்துக்கு வலு சேர்க்கின்றோம் என்று கூறிக்கொண்டு அவலமும் அழிவும் நிறைந்த பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களுக்கு எதிராக முன்னேடுத்து வரும் இன அழிப்பை அமெரிக்காவின் உதவி கொண்டு மேலும் தீவிரப்படுத்தி, மேலும் மேலும் தமிழ் மக்களுக்கு அழிவுகளையும் அவலங்களையும் கொடுப்பதற்காகவே அமையப்போகின்றது.
வெளிநாட்டு, உள்நாட்டு மனிதநேய அமைப்புகள் பணியாற்ற முடியாத பல இடங்களில் தமிழ் மக்களிற்கான பணியை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆற்றி வருகின்றது. இந்த நிறுவனம் ஊடாகவே புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தமது உறவுகளுக்கு உதவி செய்து வருகின்றனர். ஆகவே இதனையும் முடக்கி தாயகத்தில் உள்ள மக்களை பட்டினி போட்டு அழிப்பதற்கான நடவடிக்கையே சிறிலங்கா அரசு செய்து வருகின்றது.
புனர்வாழ்வுக்கழகத்தின் வேலைத்திட்டங்களை முடக்கி இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளை முடக்குவதே தென்னிலங்கை அரசியல்வாதிகளின் திட்டம். அதன்படி அவர்கள் செய்கின்றார்கள். எனவே புலம்பெயர் நாடுகளில் வதியும் மக்கள் இதனைப் புரிந்துகொண்டு செயற்படவேண்டும்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் சர்வதேச நெறிமுறைகளை பின்பற்றி செயற்படுகின்றது. புலம்பெயர் மனிதர்கள், அமைப்புக்களின் கரங்கள் இணைந்த ஒத்துழைப்பு கொடுக்கும் அழுத்தங்கள், இந்த நடவடிக்கையில் இருந்து விடுபட்டு நல் வழியை காட்டும்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துகளை முடக்குவதாக அமெரிக்கா முழங்கிவிட்ட முனைப்பில், முடக்கும் முட்டுக்கட்டைகளை முறித்து புதியவழிமுறையில் முனைப்புடன் ஆக்கபூர்வமாக செயற்படுவோம்.
யாழ் இணையம்: கறுப்பி
Tuesday, November 20, 2007
உதவும் கரங்களை முறிக்கும் வல்லாதிக்கம்
Posted by tamil at 8:07 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment