Wednesday, November 7, 2007

தமிழ்ச் செல்வன் மரணம்... தமிழீழத்தின் ஜனனம்?!

தமிழ்ச்செல்வன் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது அவரது சிரித்த முகம்தான். பேச்சுவார்த்தைக்குப் பொருத்தமானவர் இவர் என்று எவரும் நம்புவதற்கான சான்றிதழாக இருந்தது அவரது சிரிப்பு. அவர் பேசும்போது யுத்தத்தைப் பற்றி பேசுவதாகவே தோன்றாது, அப்படியரு பாவனை. பாலசிங்கத்தின் தோற்றமே அவரையரு ‘ராஜதந்திரி’ எனக் காட்டுவதாக இருக்கும். ஆனால் தமிழ்ச் செல்வனோ நம்மில் ஒருவரைப்போல, அவ்வளவு இயல்பாகத் தெரிவார். இளம் வயதிலேயே மிகுந்த அரசியல் பக்குவத்தை வெளிப்படுத்தியவர், உலகின் மிக உக்கிரமான போராளி இயக்கமாகக் கருதப்படும் புலிகளுடைய அரசியல் பிரிவின் தலைவர் & தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டு விட்டார். சிங்கள விமானப்படையின் குண்டு வீச்சுக்கு அவர் பலியாகிவிட்டார் என்பதை இன்னும்கூட நம்பமுடியவில்லை.

‘1983 ஜூலைக் கலவரம்’ என அழைக்கப்படும் இனப்படுகொலைகளுக்குப் பிறகு புலிகள் இயக்கத்தில் இணைந்தவர் தமிழ்ச்செல்வன். அவர் ஆயுதப் பயிற்சி பெற்றது தமிழ்நாட்டில்தான். அப்போது தமிழ்நாட்டில் தங்கியிருந்த புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் இருந்தவர்களுள் தமிழ்ச் செல்வனும் ஒருவர். தினேஷ் என்ற பெயரால் அப்போது அறியப்பட்ட தமிழ்ச்செல்வன் 1986&ல் பிரபாகரனுடன் இலங்கைக்குச் சென்றார். அடுத்த ஆண்டில் புலிகள் இயக்கத்தின் தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்திய அமைதிப்படையை எதிர்த்து அப்பகுதியில் போராடியவர் அவர். அவரது போர்த்திறன் காரணமாக 1991&ல் யாழ்ப்பாண மாவட்ட சிறப்புத்தளபதியாக பதவி உயர்த்தப்பட்டார்.

1991 முதல் 1993 வரையிலான அனைத்துப் போர் நடவடிக் கைகளிலும் அவரது முத்திரை பதிந்திருந்தது. மன்னார் படைத் தளம் மீதான தாக்குதல், பூ நகரி படைத்தளம் மீதான ‘தவளை நடவடிக்கை’ என்று பெயரிடப்பட்ட தாக்குதல், தச்சன்காடு படைமுகாம் மீதான தாக்குதல், காரைநகர் தாக்குதல் எனப் பல்வேறு போர் நடவடிக்கைகளிலும் முக்கியப்பங்கு வகித்த தமிழ்ச்செல்வன், ‘ஓயாத அலைகள்\3’ எனப் பெயரிடப்பட்ட தென்மராட்சியை மீட்பதற்கான யுத்தத்தில் கட்டளைத் தளபதியாக செயல்பட்டு, தான் ஒரு போராளி மட்டுமல்ல, தலைவரும்கூட என்பதை நிரூபித்தார்.

1993&ம் ஆண்டு தமிழீழ அரசியல் துறைப் பொறுப் பாளராக நியமிக்கப்பட்ட அவர் யுத்த களங்களில் சிறப்பாக செயல்பட்டது போல சமாதானப் பேச்சு வார்த்தையிலும் திறம்படப் பணிபுரிந்தார். சந்திரிகா அரசோடு சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட குழுவுக்கு அவர் தலைமை வகித்தார். 2002&ம் ஆண்டு ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையைத் தொடர்ந்து நார்வே அரசின் உதவியோடு நடத்தப்பட்ட அமைதிப் பேச்சு வார்த்தைகளின்போது முதலில் பாலசிங்கத்தின் தலைமையின் கீழ் பங்கேற்ற தமிழ்ச்செல்வன், பாலசிங்கத் துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது பேச்சுவார்த்தைக் குழுவுக்குத் தலைமையேற்றார். கடந்த ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தை முறியும் வரை, தமிழ்ச்செல்வன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டு உலக நாடுகள் பாராட்டும் விதத்தில் பணியாற்றினார். இலங்கையில் ‘பஞ்சமர்’ என அழைக்கப்படும் தீண்டாத சாதிகளுள் ஒன்றான நாவிதர் சமூகத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் புலிகளின் படையில் பிரபாகரனுக்கு அடுத்த இரண்டாவது முக்கியமான தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்தது அங்கே நடந்து வரும் சமூக மாற்றத் துக்கு உதாரணமாகும். தமிழ்ச்செல்வனுக்கு மனைவியும், எட்டு வயதில் ஒரு மகளும், நான்கு வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

தமிழ்ச்செல்வன் மட்டுமின்றி மேலும் ஐந்து முக்கியத் தலைவர்களும் இந்த விமானப் படைத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சிப் பகுதியில் இருக்கும் இரணமடு என்னுமிடத்தில்தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இதற்குப் பத்து நாட்களுக்கு முன்னர் அனுராதபுரம் விமான தளத்தின் மீது புலிகள் நடத்திய தாக்குதலால் நிலைகுலைந்து போயிருந்த சிங்கள அரசு இப்போது உற்சாகமடைந்திருக்கிறது. புலிகளின் தலைவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது தங்களுக்குத் தெரியும் எனவும் அவர்களை ஒவ்வொருவராக ஒழித்துக் கட்டப்போவதாகவும் சிங்கள அரசின் ராணுவச் செயலாளர் கொத்தபாய ராஜபக்சே கொக்கரித்திருக்கிறார்.

தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டிருப்பது புலிகளின் ராணுவ மற்றும் அரசியல் தளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் அறிவார்கள். புலிகளிடம் விமானங்களை அடை யாளம் காட்டக்கூடிய ரேடார் கருவிகள் இல்லை, விமான எதிர்ப்பு பீரங்கிகளும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால்தான் சிங்கள விமானங்கள் அச்சமின்றி தமிழர் பகுதிகளில் குண்டு வீச்சில் ஈடுபட முடிகிறது. குண்டு வீச்சிலிருந்து தப்பிப்பதற்கு தங்கும் இடங்களை அடிக்கடி மாற்றுவது தவிர புலிகளுக்கு வேறு உபாயம் இல்லை. தமிழ்ச்செல்வன் மீது நடந்துள்ள தாக்குதலைப் பார்க்கும்போது அது இலக்கின்றி நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. தமிழ்ச்செல்வனும் மற்ற தலைவர்களும் இருப்பது தெரிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கை நோக்கி நடத்தப்பட்ட தாக்குதலாகவே அதைக் குறிப்பிட வேண்டியுள்ளது. இதில் மிக்&27 மற்றும் கிஃபிர் ரக விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அனுராதபுரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலால் சிங்கள விமானப் படை முற்றாக முடங்கிப்போய்விடவில்லை என்பதை இதன்மூலம் சிங்கள ராணுவத்தினர் நிரூபித்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 22&ம் தேதி அதிகாலை அனுராத புரம் விமானதளம் புலிகளின் தற்கொலைப்படையின் தாக்குதலுக்கு இலக்கானது. மூன்று பெண் புலிகள் உள்ளிட்ட இருபத்தோரு பேரைக்கொண்ட புலிகளின் தற்கொலைப்படை விமான தளத்தில் ஊடுருவி ரேடாரையும், விமான எதிர்ப்பு பீரங்கிகளையும் செயலிழக்கச் செய்து சுமார் ஆறு மணி நேரம் அந்த விமானதளத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத் திருந்தது.

அனுராதபுரம் தாக்குதலில் மொத்தம் எட்டு விமானங்களை இழந்துவிட்டதாக சிங்கள அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் லண்டனிலிருந்து வெளிவரும் ‘டெய்லி டெலிகிராப்’ பத்திரிகையின் கொழும்பு நிருபர் அந்தத் தாக்குதலில் பதினெட்டு விமானங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட பீச்கிராஃப்ட் என்ற வேவு பார்க்கும் விமானம் இதில் முக்கியமானது. பறக்கும்போதே தரையில் உள்ளவற்றைத் துல்லியமாகப் படம் பிடிக்கக்கூடிய அந்த விமானம் நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்டதாகும். அத்துடன் இரண்டு எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர்களும், எம்.ஐ&2 ரக ஹெலிகாப்டர்கள் இரண்டும், ஆளில்லாமல் பறக்கும் உளவு விமானங்கள் மூன்றும், கே&8 வகை ஜெட் விமானம் ஒன்றும் பி.டி&6 ரக பயிற்சி விமானங்கள் எட்டும் அந்தத் தாக்குதலில் அழிக்கப்பட்டதாக அந்த செய்தியாளர் கூறியுள்ளார்.

அனுராதபுரம் விமான தளத்தை கரும்புலிகள் தாக்கிக் கைப்பற்றிய பிறகு புலிகளின் விமானங்கள் இரண்டு அங்கு வந்து ராணுவ முகாம்கள் மீது குண்டுகளை வீசிவிட்டு பத்திரமாக திரும்பிச் சென்றன. ராணுவ ரீதியில் இந்தத் தாக்குதல் மிகப்பெரும் சாதனையாக பேசப்பட்டது. இதன் மூலம் யுத்தத் தின் போக்கை தங்களுக்கு சாதகமாக புலிகள் மாற்றி இருந்தனர். இது அவர்களுக்கு கொடுத்திருக்கும் தார்மீக வலிமையை குலைப்பதற்காகவே இப்போது இந்த கண்மூடித்தனமான படுகொலையை சிங்கள அரசு செய்திருக்கிறது. தமிழ்ச்செல்வனின் படுகொலை புலிகளின் ராணுவ வலிமையைக் குறைத்துவிடப்போவதில்லை. அங்கே ஏற்பட்டிருப்பது ராணுவ பின்னடைவு அல்ல, சமாதானத்தின் பின்னடைவு.

ராஜபக்சே அதிபராக பதவியேற்றதில் இருந்து இலங்கை இனப்பிரச்னையை ராணுவ ரீதியில் தீர்ப்பதற்கே முயன்று வருகிறார். அமைதிப் பேச்சுவார்த்தையை எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் முறித்துக்கொண்டு முழு மூச்சான யுத்தத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்தபோதும் அவற்றை ராஜபக்சே பொருட்படுத்தவில்லை. யுத்தத்தின் மூலம் புலிகளை பலவீனப்படுத்தி அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து வரப்போவதாக சிங்கள அரசு கூறினாலும் அவர்களது நோக்கம் அதுவல்ல. சமாதானப்பேச்சுவார்த்தையின் அடிப்படையாக இருந்த தமிழ்ச்செல்வனைக் கொன்றதன் மூலம் சிங்கள அரசு தனது நோக்கம் யுத்தம் ஒன்றுதான் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. இதை இந்தியா இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும்.

தெற்காசியாவில் உள்ள இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் உள்ளிட்ட சிறு நாடுகள் எதுவும் இந்தியாவை இப்போது ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள தடுமாற்றத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவை இந்தியாவை அலட்சியப்படுத்துவது மட்டுமின்றி அச்சுறுத்தவும் முற்பட்டுள்ளன. இலங்கை அதிபர் ராஜபக்சே சீனாவையும், பாகிஸ்தானையும் காட்டி இந்தியாவை மிரட்டி வருகிறார்.

‘தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசின் யுத்தத்தில் இந்தியா சிங்கள அரசுக்கு உதவாவிட்டால் அவர்கள் சீனாவிடமும், பாகிஸ்தானிடமும் உதவி கேட்டுப் போய்விடுவார்கள்’ என்பதுதான் இந்திய வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கும் ‘சாக்குப்போக்காக’ இதுவரை இருந்து வந்திருக்கிறது. ஆனால், இந்தியாவிடம் உதவி பெறும் அதேவேளை ராஜபக்சே சீனாவோடும் நெருங்கிய உறவு வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்.

இந்த ஆண்டு பிப்ரவரியில் சீனாவுக்கு சென்ற ராஜபக்சே அங்கு அந்த நாட்டுடன் எட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இலங்கையின் தென்பகுதியில் உள்ள ஹம்பன்தொட்டா துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்கு சீனாவில் உள்ள ‘எக்ஸிம்’ வங்கி 307 மில்லியன் டாலர் கடன் வழங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் ஒருவாரத்துக்கு முன்பு அக்டோபர் 31&ம் தேதி கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த உதவியை முன்வைத்து இலங்கையில் சீனா தனது நிலையை பலப்படுத்திக் கொள்ளப்போகிறது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு நல்லதல்ல. ஆனால், இதை இந்தியா இன்று வரையில் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

சர்வதேச அளவில் செயல்படும் ஆயுதப் போராட்ட இயக்கங்களிலிருந்து புலிகளை வேறுபடுத்துகிற அம்சம் அதன் ராணுவ வலிமைதான் என்று சொல்லப்படுவதுண்டு. அதைவிடவும் அதன் அரசியல் நிலைப்பாடே அதன் தனித்துவம் என்று கூறலாம். உலகெங்கும் உள்ள ஆயுதக் குழுக்கள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு அரசாங்கத்துக்கு சார்பாக செயல்பட்டு உதவியைப் பெறுபவையாக இருந்து வந்துள்ளன. கியூபாவும்கூட இதில் விதிவிலக்கல்ல. அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்காக ரஷ்யாவின் உதவியை கியூபா பெற்றது. அதனால்தான் சே குவாராவை கியூபா கைவிட நேர்ந்தது என்று சொல்லப்படுவதுண்டு.

விடுதலைப்புலிகள் எந்தவொரு வல்லரசின் பிடிக்குள்ளும் இதுவரை அகப்படவில்லை. அமெரிக்காவை சார்ந்திருந்தால் ஆப்கானிஸ்தானில் நடந்ததுபோல அவர்களுக்கு நவீன ஆயுதங்கள் கிடைத்திருக்கும். சீனாவைச் சார்ந்திருந்தாலும் அதேவிதமான அனுகூலம் அவர்களுக்கு வாய்த்திருக்கும். இந்தியாவின் கைப்பாவைகளாக இருந்திருந்தாலோ நிலைமை வேறுவிதமாக மாறியிருக்கும். அவர்கள் சுயச்சார்போடு நின்று தமது விடுதலைப் போரை நடத்துவதால்தான் இவ்வளவு உயிர் இழப்புகளை சந்திக்க வேண்டியுள்ளது. அவர்களின் சுயச் சார்பான நிலை உண்மையில் இந்தியாவின் பாதுகாப்புக்கு உதவியானதுதான். ஆனால், இந்திய அரசுதான் அதைப் புரிந்துகொள்ள மறுக்கிறது.

தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதும் இலங்கைப் பங்குச் சந்தை ஏற்றம் கண்டதாக செய்திகள் வந்தன. இது அவர்களது பொருளாதாரம் எந்த அளவுக்கு போரோடு பிணைந்துள்ளது என்பதையே சுட்டிக்காட்டுகிறது. தமிழ்ச்செல்வனின் கொலை அங்கே யுத்தம் மேலும் தீவிரமடையும் என்பதன் அறிகுறியாகும். அதைத்தான் சிங்களவர்கள் விரும்புகின்றனர். இதை உலக சமூகம் உன்னிப்பாக கவனிக்கவேண்டும்.

இனியும் சமாதான சகவாழ்வை போதித்துக் கொண்டி ருக்காமல் ஈழத்தமிழர்களுக்கு அவர்கள் விருப்பப்படி தனி நாடொன்றை ஏற்படுத்தித்தர உலக சமூகம் முன்வர வேண்டும். அதுதான் சிங்களவர்களுக்கும் நல்லது, தமிழர் களுக்கும் நல்லது. ‘‘தமிழர் வாழும் நிலமெல்லாம் அவர்தம் மனையெல்லாம் தன் புகழ் செதுக்கிய செல்வன்’’ எனத் தமிழக முதல்வர் கலைஞரால் கண்ணீர் கசியக் குறிப்பிடப்பட்ட தமிழ்ச்செல்வனின் மரணம்... தமிழ் ஈழத்தின் ஜனனமாக இருக்குமா என்பதை காலம்தான் சொல்லவேண்டும்.
ரவிக்குமார் எம்.எல்.ஏ.
நன்றி : ஜூனியர் விகடன்.

0 Comments: