02.11.2007
நாட்டின் நான்காவது காவலர்கள் என்று மதிக்கப்படுப வர்கள் ஊடகவியலாளர்கள்.
சட்டமியற்றும் துறை, நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை ஆகிய மூன்றுக்கும் அடுத்ததாக சமூகத்தையும் ஜனநாயக ஆட்சியையும் தாங்கும் நான்காவது தூண் ஊடகத்துறை தான்.
அந்த ஊடகத்துறையைக் கையாள்வதில் ஜனாதிபதி மஹிந்தவின் அரசு வெளிப்படுத்தும் போக்கு பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.
கடந்த திங்களன்று கொண்டுவரப்பட்டு, நேற்று ரத்துச் செய்யப்பட அல்லது வாபஸ் பெறப்பட இருந்ததாகக் கரு தப்படும் யுத்தச் செய்திகளுக்கான தணிக்கை முறை விவ காரம் கூட அரசின் குழப்பகரமான கையாள்கைக்கு நல்ல எடுத்துக்காட்டே.
இதுபோன்ற தணிக்கை விதிகளைக்கொண்டு ஊடகங் களின் குரல்வளையை நசுக்குவதற்கு அரசு தயாராகின்றது எனச் செய்திகள் கசிந்திருக்கின்றன என்று சுமார் ஆறு வாரங் களுக்கு முன்னரே சுதந்திர ஊடக இயக்கம் எச்சரிக்கை அறி விப்பை விடுத்திருந்தது.
ஆனால் அரசின் உயர் வட்டாரங்கள் அதை அடியோடு மறுத்து அப்படி ஏதும் திட்டம் அரசுக்குக் கிடையவே கிடை யாது என வழமைபோல மறுப்பறிக்கை விடுத்திருந்தன.
இந்தப் பின்னணியிலேயே இத்தணிக்கைமுறை கொண்டு வரப்பட்டிருக்கின்றது. அது வந்த விதமும், அதை வாபஸ் பெறுவது பற்றிய அரசுத் தரப்பின் நிலைப்பாடு வெளியான வேகமும் பல்வேறு சந்தேகங்களையும் ஐயங்களையும் கிளப்பியிருக்கின்றன.
இந்த நாட்டில் ஆட்சியிலிருந்த ஜனாதிபதிகளில் செய் தித் தணிக்கையைக் கொண்டு வராத ஒரே அரசுத் தலைவர் தாமே என்று தம்மைத் தாமே அடிக்கடி சிலாகித்துக் கூறிக் கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தவறுவதில்லை. அப்படிப்பட்ட ஜனாதிபதியின் உத்தரவின் பெயரில்தான் இந்தத் தணிக்கை முறைமை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டதாக வர்த்தமானி அறிவித்தல் கூறுகின்றது.
இலங்கையின் ஊடக சுதந்திரம் மோசமான அச்சுறுத்த லுக்கு உள்ளாகியிருப்பது பற்றிய விடயம் இன்று சர்வதேச கரிசனைக்கும் பார்வைக்கும் அவதானத்துக்கும் உரிய விவகார மாக அம்சமாக மாறிவிட்டது. இந்த அரசு ஆட்சிக்கு வந்தபின் னர் பதினொரு ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ள னர்; பலர் காயமடைந்துள்ளனர்; சொத்துகள் அழிக்கப்பட்டுள் ளன; பல ஊடகப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார் கள்; பலர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். பலருக்கு எதிராக வழக் குகள் சோடிக்கப்பட்டிருக்கின்றன. ஒலிபரப்பு உரிமங்கள் பிடுங்கப்பட்டிருக்கின்றன. இப்படி ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அத்துமீறல்கள் எல்லை கடந்துவருகின்றன.
இந்தச் சூழ்நிலையில் நாட்டில் யுத்தச் செய்திகளுக்கு அரசு தணிக்கை விதிப்பது பற்றிய அறிவிப்பு சத்தம், சந்தடி யில்லாமல் வந்த விதம் முறை பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியிருக்கின்றது.
தணிக்கை முறையைக் கொண்டுவரும் வர்த்தமானி அறி விப்பு முழு விவரங்களுடன் யுத்தச் செய்திகள் வெளியாவதைக் கட்டுப்படுத்த தகுதி வாய்ந்த அதிகாரியை அல் லது அதிகாரிகள் குழுவை ஜனாதிபதி நியமித்தல் மற்றும் அதை மீறினால் விதிக்கப்படும் தண்டனையின் கூடிய, குறைந்தபட்ச எல்லைகள் ஆகியவற்றுடன் கடந்த திங்கட் கிழமை திகதியிட்டு வர்த்தமானியில் பிரசுரமாகியிருக்கின் றது. வர்த்தமானி உடன் வெளிவராததால் அது மக்களுக்கோ, ஊடகங்களுக்கோ தெரியவரவில்லை.
ஆனால் யுத்த செய்திகளுக்குத் தணிக்கை விதிக்கும் அறிவிப்பு, வர்த்தமானி அச்சிடும் பிரிவுக்கு உரிய வழிகள் ஊடாகச் சென்றுள்ள போதிலும் அரசுத் தரப்பில் இருந்து அதுபற்றிய வேறு பகிரங்க அறிவித்தல் ஏதும் வெளியிடப்பட வேயில்லை.
29 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அத்த கைய தணிக்கை வருவது பற்றிய விடயம் ஊடக அமைச்சுக் குக்கூட, இரண்டு நாள் கழித்து 31 ஆம் திகதி காலைவரை தெரிந்தே இருக்கவில்லையாம்.
29 ஆம் திகதிமுதல் ஊடகத் தணிக்கை நடைமுறைக்கு வந்திருப்பதை 31 அம் திகதி காலையில் வெளியான அரசுப் பத்திரிகைகள் கூட ஒரு பந்தியில் தானும் செய்தியாக வெளியிடவேயில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. 31 ஆம் திகதி காலைவரை அவற்றுக்குக்கூட அதுபற்றி எதுவும் தெரியாது என்பதே உண்மை.
29 ஆம் திகதி வர்த்தமானி அச்சிடப்பட்ட சூழ்நிலை யில் அதன் பிரதிகளை 31 ஆம் திகதி காலையில் பார்வையிடக் கிடைத்த தனியார் ஊடக வட்டாரங்கள் மூலமாகவே முத லில் அதுபற்றிய தகவல் கசியத் தொடங்கியது. அதன்பின் னரே அரச உயர்வட்டாரங்களில் பல தரப்புகளுக்கும் செய் தித் தணிக்கை பற்றிய அறிவிப்பு விவகாரம் வர்த்தமானி யில் பிரசுரிக்கப்பட்டு விட்ட நிலைக்கு சென்றுவிட்டது என் பது தெரியவந்ததாம்.
இலங்கைபோன்ற ஒரு நாட்டில் செய்தித் தணிக்கை என்பது மிகப் பெரிய விவகாரம். நாட்டின் உயர் சட்டமான அரசமைப்பின் மூலம் நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ள கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்ற அல்லது பறிக்கின்ற ஒரு விவகாரம் இது.
அதனைக் காதும் காதும் வைத்தால் போலச் செய்ய முடியாது.
29 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்த யுத்த தணிக்கை குறித்து ஊடகங்களுக்குக்கூட 31 ஆம் திகதி முற்பகல் வரை தெரியாது என்றால் இந்த இரகசிய ஏற்பாட்டுக்குள் புதைந்து கிடக்கும் அர்த்தம் என்ன?
அது மட்டுமல்ல. 31 ஆம் திகதி காலையில் இப்படி ஒரு செய்தித் தணிக்கை நடைமுறைக்கு வந்துவிட்டது என்ற விவகாரம் அம்பலமான கையோடே அன்றுமாலைக்குள் அந்தத் தணிக்கை வாபஸ் பெறப்படுகின்றது என்ற அறி விப்பு அரசுப் பக்கத்தில் இருந்து வந்துவிட்டது.
இவற்றையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது சில விடயங்களை ஊகிக்க முடிகின்றது. அதிகாரத்தில் இருப் போரை மீறி நிழல் அதிகாரம் ஒன்று தன் கைவரிசையைக் காட்டுகின்றது என்ற ஊகிப்பே அது.
விடயம் மலியும் போது விவகாரங்கள் சந்தைக்கு வரும். அதுவரை பொறுத்திருப்போமே.....!
கிடைக்கப்பெற்றது - உதயன்.கொம்
Friday, November 2, 2007
தணிக்கைக் குழறுபடி
Posted by tamil at 7:51 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment