Wednesday, November 28, 2007

மேலாண்மைச் சிந்தனையில் வெளிப்பாடாகும் அறிவிப்புகள்

Posted on : 2007-11-28

"விடுதலைப் புலிகளையும் அந்த இயக்கத்தின் தலை வர் பிரபாகரனையும் கொன்றொழிக்கப்போகின்றோம். அதன் பின்னர் அரசியல் தீர்வு காண்போம்.'' என்று சூளுரைத்திருக்கின்றார் இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளரும், இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அடுத்து பாதுகாப்புத்துறையில் அதிக அதிகாரமும் செல்வாக்கும் கொண்டவரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோத்த பாய ராஜபக்ஷ.
""விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதே எங் கள் இலக்கு. நாங்கள் எப்படியும் இராணுவ ரீதியாக அவர் களைத் தோற்கடித்தாகவேண்டும். வன்னியை எமது கட் டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டும். அது சாத்திய மானதே. இனி, அவர்களை நசுக்குவதுதான் பாக்கி. அதன் பின்னர் அரசியல் தீர்வு சாத்தியமாகும்.'' என்று முழங்கி யிருக்கின்றார் அவர்.
ஆக, வாழ்வுரிமைக்காகவும், நீதியான வாழ்வுக்காகவும் போராடும் ஈழத்தமிழர்களுக்கு, அவர்களின் போராட்ட வடிவத்தை அழித்தொழித்த பின்னர் தாம் நீதி செய்யப்போகிறார் அரசியல் தீர்வு வழங்கப் போகின்றார் என்று சபதம் செய்திருக்கிறார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்.

""பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்த பின்னரே அரசி யல் தீர்வு'' என்ற தென்னிலங்கையின் பம்மாத்து, "அலை ஓய்ந்த பின்னர் குளிக்கலாம் என்று கடற்கரையில் காத்தி ருப்பதற்கு' ஒப்பானது.

ஈழத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்க மறுத்து அவர்களுக்கு நீதி செய்வதை நிராகரித்து அந்தப் பூர்வீகத் தேசிய இனத்தை அடிமைப்படுத்தி, அடக்கி, ஒடுக்குவதில் தென்னிலங்கைப் பேரினவாதச் சிங்களம் காட்டிய தீவிரமே இன்னும் சரியாகச் சொல்லப்போனால் பேரினவாத வெறியே இலங்கைத் தீவில் ஆயுத வன் முறைக் கலாசாரத்துடன் கூடிய போராட்டத்துக்கு ஊற்றுக் கண்ணாக அமைந்தது.

அந்த ஊற்றுக்கண்ணை அடைக்காமல், "பயங்கர வாதம்' என்று தென்னிலங்கை இன்று அடையாளப்படுத் திச் சித்திரிக்கும் ஆயுதப் போராட்டப் புரட்சியை அடைப் பது என்பது பகல் கனவு. அத்தகைய முயற்சி, இப்பத்தியில் நாம் முன்னர் சுட்டிக்காட்டியபடி நோயின் மூலத்துக்கு நோயின் காரணத்துக்கு வைத்தியம் செய்யாமல், நோயின் விளைவான வெளிப்பாட்டுக்கு குணங்குறிக்கு மருத்து வம் செய்வதற்கு ஒப்பானதாகும்.

ஈழத் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் ஐம் பதுகளிலும், அறுபதுகளிலும், எழுபதுகளின் ஆரம்பத்தி லும் ஜனநாயக வழி தழுவிய வெகுஜனப் போராட்ட வடிவ மாகவே முன்னெடுக்கப்பட்டது. அந்தப் போராட்டத்தின் மையப் பொருளாகப் புதைந்து கிடந்த நியாயத்தை நீதியை கவனத்தில் கொள்ள மறுத்த தென்னிலங்கைப் பேரின வாதம், ஆயுத முனையில் வன்முறை வாயிலாக பலாத் கார நடவடிக்கைகள் மூலம் அந்தப் போராட்டத்தை அடக்கி, ஒடுக்க முற்பட்டது. அந்தக் காரணத்தினால் அந்தத் தேசிய விடுதலை முயற்சி பின்னடைவுகளைக் கண்டது. சமாதான வழியில் தமிழர் தேசத்தை ஒன்றுபடுத்திய அந்த விடுதலை முயற்சி அதற்கு அப்பால் அந்தப் போராட்டத்தை முன்னெ டுக்க முடியாமல் வன்முறை வாயிலாக ஒடுக்கப்பட்டது. அதன் காரணமாகவே ஆயுதம் தரித்த எதிர்ப்புப் போராட் டம் தமிழர் மத்தியில் வரலாற்றுப் பிறப்பை எடுத்தது.

எனவே, ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டமானது, தாங்கொணா அரச ஒடுக்குமுறையின் வரலாற்றுக் குழந்தை யாகவே தோற்றம் பெற்றது. புரட்சிகர ஆயுதப் போராட்டத் தைத் தமிழர்கள் முன்னெடுக்க அவர்களைக் கட்டாயப் படுத்தி, நெட்டித் தள்ளி, பலவந்தப்படுத்தியதே தென்னி லங்கைத் தேசம்தான்.

ஆகவே, இன்று தமிழர் தரப்பில் முன்னெடுக்கப்படும் ஆயுதம் தாங்கிய உரிமைப் போராட்டமானது, அதற்கு முன் னர் ஈழத் தமிழர்கள் முன்னெடுத்த அரசியல் போராட்டங் களின் தொடர்ச்சியாகவும், நீட்சியாகவும், முன்னெடுப்பாக வுமே கருதப்பட வேண்டும்.
இந்தப் போராட்டத்தின் யதார்த்தப் புறநிலைகளையும், வரலாற்றுப் பின்னணிகளையும் சரிவர எடைபோட்டால், ஈழத் தமிழர்களை இராணுவ ரீதியாக அடக்கி, ஒடுக்கிவிடுவதன் மூலம், தமிழரின் தேசிய விடுதலை உணர்வை மழுங்கடித்து அவர்களை நிரந்தர அடிமைகளாக்கி விடலாம் என்ற திட்டம் என்றுமே சித்திக்காது என்பது சம்பந்தப்பட்டோருக்குப் புரிய வரும்
ஈழத் தமிழரின் தேசிய இனப்பிரச்சினையை நாகரிக மான அமைதி வழியில் தீர்க்கும் திடசங்கற்பம் தென்னிலங் கைக்குக் கிஞ்சித்தும் கிடையாது. வன்முறை வழியிலான போரைத் தீவிரப்படுத்தி, தமிழர் தேசத்தின் மீது பெரும் படை யெடுப்பையே மேற்கொண்டு, தமிழரின் ஆயுத வலி மையை நொறுக்கி, அவர்களை இராணுவப் பலம் மூலம் அடிமைப்படுத்தி மண்டியிட வைத்து, அதன் பின்னர் தான் முன்வைக்கும் உருப்படியற்ற ஒரு திட்டத்தை அரசியல் தீர்வு யோசனையாகத் தமிழர் மீது திணித்து, அதற்கு அவர் களைப் பலவந்தமாக இணங்கச் செய்வதே தென்னிலங்கையின் உள்ளார்ந்த திட்டமாகும். அதையே பாதுகாப்புச் செயலாளரின் இந்த ஒப்புதல் வாக்குமூலமும் உறுதிப் படுத்துகின்றது.

தமிழர்களை இந்தத் தீவின் பூர்வீகத் தேசிய இனமாக ஏற்று, சமபங்காளி உறவோடு அவர்களைக் கருதி, அவர்களு டன் அமைதி வழிப் பேச்சு மூலம் நல்லிணக்கத்துக்கு வரும் தாரா ளப் பாங்கு தென்னிலங்கையிடம் இல்லை. பேரினவாத மேலாதிக்கத் திமிரும், மேலாண்மை மமதையும், மொழிச் செருக்கும் சேர்ந்து அந்த உயர் பண்பைச் சிதைத்துச் சீரழித்து விட்டன. அதன் காரணமாக அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத் தும் அதிகாரத் தொனியோடு அறிவிப்புகள் வெளிவருகின் றன. அதுவே இன்றைய துன்பியல் நிலைமை.

uthayan.com

0 Comments: