Friday, February 29, 2008

தமிழ்மக்களின் குருதி நனைந்த கைகளால் கொடுக்கப்படும் விருதுகளை தமிழர்கள் கையேந்தி வாங்குவதா?

எதிர்வரும் மார்ச்சு மாதம் 15 ஆம் நாள் Can Indo Lanka என்ற சஞ்சிகை ஸ்ரீலங்கா தூதரகத்தின் ஆதரவோடு 2008 ஊளுடு CSL Awards Gala என்ற நிகழ்ச்சியை DoubleTree International Hotel, Toronto, இல் நடத்த இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அர்ச்சுன இரணதுங்கா, நாடாளுமன்ற உறுப்பினர் அழைக்கப்பட்டுள்ளார்.
இதில் ஒரு வேடிக்கை கலந்த வேதனை என்னவென்றால் விருது பெறுவோர் பட்டியலில் பத்துக்கும் அதிகமான தமிழ்க் கனேடியர்களது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களில் பெரும்பாலோர் கனடிய தமிழ்க் குமுதாயத்துக்கு நன்கு அறிமுகமானவர்கள். தமிழீழ விடுதலைப் போராட்ட மேடைகளில் தோன்றி உரையாற்றியவர்கள்.

விடிய விடிய இராமாயணம் விடிந்த பின்னர் இராமனுக்கு சீதை என்ன முறை என்று கேட்டவன் கதையாக எமது தாயகத்தில் கடந்த அய்ம்பது ஆண்டுகளாக விடுதலைக்கான ஒரு வேள்வி நடந்து கொண்டிருக்கிறது. ஏறக்குறைய 75,000 தமிழ்மக்கள் சிங்களப் படையின் பயங்கரவாதத்துக்குப் பலியாகி உள்ளார்கள். மூன்று இலட்சத்துக்கும் மேலான தமிழர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் ஏதிலியாக்கப்பட்டு உண்ண உணவின்றி, உடுக்கத் துணியின்றி படுக்கப் பாயின்றி பள்ளிக்கூடங்களிலும் வீதி ஓரங்களிலும் மரநிழலிலும் தற்காலிக கூடாரங்களிலும் அல்லல்கள் அவலங்கள் மத்தியில் வாழ்கிறார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள அரசு தமிழர்கள் மீது ஒரு கொடிய இனவழிப்புப் போரைக் கட்டவுழ்த்து விட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வைக்குப் பின்னால் ஒரு இனப் படுகொலையை (genocide) மகிந்த இராசபக்சேயின் அரசு அரங்கேற்றி வருகிறது.

கடந்த கிழமை கிராஞ்சி என்ற ஊரில் ஸ்ரீலங்கா மிகையொலி வானூர்திகள் நடத்திய கோரமான குண்டுத்தாக்குதலில் ஆறுமாதக் குழந்தை ஒன்று, நான்கு வயதுப் பிள்ளை ஒன்று உட்பட 9 பேர் பலியாகினார்கள். பொதுமக்களை இலக்கு வைத்து குண்டுகளைப் போட்டுவிட்டு வி.புலிகளது முகாம்களைத் தாக்கி அழித்ததாக ஸ்ரீலங்கா அரசு வெட்கமோ துக்கமோ எதுவுமின்றிப் பொய் சொல்கிறது.

கடந்த சனவரி மாதம் 29 ஆம் நாள் பள்ளமடுவில் ஸ்ரீலங்காவின் ஆழ ஊடுருவும் அணி மேற்கொண்ட கோழைத்தனமான கண்ணிவெடித் தாக்குதலில் பேரூந்தில் பயணம் செய்த 20 பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்டார்கள். முப்பதற்கும் அதிகமானோர் காயப்பட்டார்கள்.

மகிந்த இராசபக்சே ஆட்சிக்கு வந்த பின்னர் அண்ணளவாக 5,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், கப்பம் கேட்டுக் கடத்தப்பட்டும் உள்ளார்கள். தென்னிலங்கையில் வகைதொகையின்றித் தமிழ்மக்கள் - அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக - ஸ்ரீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழ்மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்காப் படையின் உளவுப் பிரிவால் அல்லது அவர்களோடு இணைந்து இயங்கும் கூலிக் குழுக்களினால் கொல்லப்பட்டுள்ளார்கள். பத்துக்கும் மேற்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

மகிந்த இராசபக்சேயின் இளவலும் பாதுகாப்பு அமைச்சின் செயலருமான கோத்தபாய இராசபக்சே தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் கடைசி மாவீரர் உரை இதுதான் என்றும் அவரை அடுத்த பிறந்த நாள் விழாவுக்கு முன்னர் கொன்றுவிடப் போவதாகச் சூளுரைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வாழும் 3 இலட்சம் மக்கள் திறந்தவெளி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். நாளாந்தம் 5 பேராவது அங்கு கொலை செய்யப்படுகிறார்கள்.

தென்தமிழீழத்தின் மீது ஸ்ரீலங்கா படைகள் மேற்கொண்ட தொடர்ச்சியான படை நடவடிக்கையின் போது 300 கும் மேலான பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். சம்பூர் மற்றும் மூதூர் கிழக்கைச் சேர்ந்த 4,000 தமிழ்க் குடும்பங்கள் அவர்களது வாழ்விடங்களில் இருந்து விரட்டப்பட்டார்கள். அவர்கள் வாழ்ந்த ஊர்கள் அதியுயர் பாதுகாப்பு வலயமாக சிங்களப் படையினால் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா ஒட்டாவா தூதரகத்தின் ஆதரவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அர்ச்சுன இரணதுங்காவின் கையால் விருது வாங்க இருக்கும் தமிழர்களுக்கு இவையெல்லாம் தெரியாமல் இருக்க நியாயமில்லை. பின் எந்த முகத்தோடு தமிழ் மக்களின் குருதி நனைந்த இரணதுங்காவின் கைகளால் விருது வாங்கத் துடிக்கிறார்கள்?

அர்ச்சுனா இரணதுங்கா ஒரு கடைந்தெடுத்த சிங்களப் பேரினவாதி எனப் பெயர் எடுத்தவர். சிங்கள இனவாத சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு நிற்பவர். இப்போது இந்தச் செய்தியைப் படியுங்கள்.
"In various interviews with the newspapers and the BBC Arjuna Ranatunga said that hereafter he would keep on working for progress of the Deshapremi Janatha Viyaparaya, the mass organization that collected mass support of writers, poets, working class representatives , farmers , teachers and students for the anti-UNP protests that were launched with the help of the SLFP, JVP ............ "(http://www.lankaweb.com/news/items04/120404-7.html)

"பிபிசி மற்றும் செய்தித்தாள்களுக்குச் செவ்வி கொடுத்த அர்ச்சுனா இரணதுங்கா தொடர்ந்து தான் தேசப்பிரேமி ஜனதா அமைப்பின் வளர்ச்சிக்கு தொடர்ந்து உழைக்கப் போவதாகக் கூறினார். தேசப் பிரேமி அமைப்பு வெகுமக்கள் அமைப்பு. சுதந்திரக் கட்சி, ஜாதிக விமுக்தி பெரமுன போன்ற கட்சிகளின் உதவியுடன் அய்க்கிய தேசியக் கட்சிக்கு எதிராக நடவடிக்கைகளில் இறங்க எழுத்தாளர்கள், கவிஞர்கள், தொழிலாளர்கள் பிரதிநிதிகள், கமக்காரர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அணி திரட்டும் அமைப்பு......
(http://www.lankaweb.com/news/items04/120404-7.html)
இந்த தேசப் பிரேமி அமைப்பு சிங்கள இனவாத சக்திகளின் மொத்த உருவம். அந்தச் சக்திகள் சங்கமமாகும் சாக்கடை;!

இதன் பின்னரும் தன்மானம், இனமானம் படைத்த எந்தத் தமிழனாவது சிங்கள பேரினவாத அரசின் ஆதரவோடு நடத்தப்படும் விழாவில் கொடுக்கப்படும் விருது எதனையும் இரண்டு கைகளையும் நீட்டி வாங்க மாட்டான் என மனதார நம்புகிறோம்.

நன்றி :- ஸ்விஸ்முரசம்

வெறும் வாயை மெல்லுவோருக்கு கிடைத்த `ஒருபிடி அவல்'

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வழிவகுத்த அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்தும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றதைத் தொடர்ந்தும் இந்தியா மீது கண்டனக் கணைகளை ஜே.வி.பி. உக்கிரமாகத் தொடுக்க ஆரம்பித்துள்ளது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தமானது நாட்டைத் துண்டாடுவதற்கு வழிகோலிவிடும் என்றும் அதனை முழுமையாக அரசாங்கம் அமுல்படுத்த இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க முதற்கொண்டு அதன் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ச வரையில் உச்ச ஸ்தாயியில் முழக்கமிட ஆரம்பித்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை -இந்திய உடன்படிக்கையின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு தற்போது வயது 20 ஐத் தாண்டிவிட்டது. ஆரம்பத்தில் இந்தத் திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபை நிர்வாகத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த, அச்சமயம் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஜே.வி.பி. யும் பின்னர் மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட்டு மாகாண சபை நிர்வாகத்தில் பங்களிப்பினை வழங்கி வருவது புதிய விடயமல்ல.

ஏற்கனவே அரசியலமைப்புச் சட்டத்தில் இருப்பதை முழுமையாக நடைமுறைப்படுத்த விடுவதில்லை என்றே ஜே.வி.பி இப்போது வாதிட்டு வருகின்றது. இவ்வாறு அக்கட்சித் தலைவரும் முக்கிய உறுப்பினர்களும் கண்டனம் தெரிவிப்பதும் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இடமளிக்கப் போவதில்லை என சூளுரைப்பதும் நாட்டின் அரசியலமைப்பை மீறும் செயற்பாடெனவும் இது தண்டனைக்குரியதென்றும் அண்மையில் அமைச்சர்கள் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயும் டிலான் பெரேராவும் தெரிவித்திருந்ததையும் நாம் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

சுமார் இரண்டு தசாப்தத்துக்கும் மேலாக நாட்டின் சட்டவிதியாக இருப்பதை செவ்வனே அமுல்படுத்தப் போவதற்கு ஏனைய கட்சிகளுடன் கருத்தொருமைப்பாடு காண வேண்டும் என்று கூறுவதும் கூட உண்மையிலேயே விந்தையான விடயமாகும்.

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபைகள் வட கிழக்கை பாரம்பரிய தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவில்லை என அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவோரே நிராகரித்து விட்ட நிலையில், மாகாண நிர்வாக முறைமையிலும் பார்க்க அதிகளவு அதிகாரப் பகிர்வு முறைமையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் நோர்வேயின் அனுசரணையுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் கொள்கையளவிலான இணக்கப்பாடுகளும் ஏற்பட்ட நிலையில் இப்போது 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த அனுமதிக்கப் போவதில்லை எனக் கூறுவது வேடிக்கையானதும் மக்களைக் குறிப்பாக சிங்கள மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வாக்குவங்கிக் கையிருப்பை தக்க வைத்துக் கொள்ள முடியுமென்ற குறுகிய அரசியல் இலாபம் தேடும் சிந்தனையெனக் கருதுவதைத் தவிர என்னவென்று கூறுவது?

ஜனாதிபதியையும் எதிர்க்கட்சித் தலைவரையும் சந்திக்க வைத்து 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வைத்து பிரிவினையை மேற்கொள்ளும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளதென்ற தொனியில் ஜே.வி.பி. புதுடில்லியைச் சாட ஆரம்பித்திருக்கிறது.

நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான நடவடிக்கைகள் ஏகாதிபத்தியவாதிகளின் நிகழ்ச்சி நிரலென வர்ணித்து கடுமையாகப் பிரசாரம் செய்து வந்த ஜே.வி.பி. யுத்தநிறுத்த உடன்படிக்கை முறிவடைந்து மீண்டும் மோதல்கள் ஆரம்பித்துவிட்ட நிலையில், இப்போது `13 ஆவது திருத்தம்' என்ற விடயத்தைப் பற்றிப்பிடித்து அரசியல் நடத்த ஆரம்பித்திருக்கிறது.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டும் கருத்தரங்குகளை நடத்தப் போவதாக கூறியிருக்கும் ஜே.வி.பி. யின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ச தேவையேற்படின் வீதிப் போராட்டங்களை நடத்தப் போவதாகவும் கூறியிருக்கிறார்.

மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் யுத்தத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார ரீதியான சுமையைத் தாங்கமுடியாமல் மக்கள் வயிற்றை இறுக்கிக் கட்டிக் கொண்டு அவதிப்படும் நிலைமை அதிகரித்து வருகையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்றவற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதற்கு வேண்டுமானால் வீதிப் போராட்டங்களில் ஈடுபடுவது பொதுமக்களைக் கவர்ந்திழுப்பதற்கான நடவடிக்கையாகக் கொள்ளமுடியும்.

ஆனால், சிறுபான்மைச் சமூகமொன்றின் அடிப்படை உரிமைகளை வழங்குவதற்கு எடுக்கப்படும் மிகச் சிறியளவிலான நடவடிக்கைகளுக்குக் கூட அவற்றைப் பூதாகாரமாக பெருப்பித்து பூச்சாண்டி காட்டி ஆதாயம் தேட முயற்சிப்போரை நியாயபூர்வமாக சிந்திப்போர் முழுமையாக நிராகரித்து ஒதுக்கி விடுவார்களென்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தப்போவதான அறிவிப்பு வெறும் வாயை மெல்லும் சக்திகளுக்குக் கிடைத்த ஒரு பிடி அவல் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.


நன்றி :- தினக்குரல்

Thursday, February 28, 2008

கொசோவோ பிரச்சினை ஒரு பாடம்: மகிந்தவுக்கு அறிவுரை

கொசோவோ பிரச்சினையிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன என்பது குறித்து சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அந்நாட்டு ஆங்கில ஊடகமான டெய்லி மிரர் அறிவுறுத்தியுள்ளது

டெய்லி மிரர் நாளேட்டின் நேற்றைய பதிப்பில் இது தொடர்பில் ஜெகான் பெரேரா எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம்:

அனைத்துலக ரீதியில் சிறிலங்கா மீண்டும் பிரதான தலையங்கமாக மாறியுள்ளது. கொசோவோவின் ஒருதலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனம் குறித்தான சிறிலங்காவின் நிலைப்பாடே இதற்கு பிரதான காரணமாகும். இந்த நிலைமை அனைத்துலக உறவுகளில் ஒரு தவறான முன்னுதாரணத்தை விளக்கி நிற்பதாகவே சிறிலங்கா அரசாங்கம் கருதுகிறது. கொசோவோவின் சுதந்திரப் பிரகடனம் அனைத்துலக சமாதானத்திற்கும், பாதுகாப்பிற்கும் மிகப்பாரிய அச்சுறுத்தல் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரிவினைவாதப் போராட்டங்கள் நிலவி வரும் நாடுகள் கொசோவோ நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. ஒருதலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனத்தின் மூலம் பலம் வாய்ந்த நாடுகளது அதிகாரபூர்வ அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு கிட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையின் 1,244 ஆம் சரத்தின் அடிப்படையில் கொசோவோ, ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்கால நிர்வாக சபையின் கட்டுப்பாட்டின் கீழ் நிர்வகிக்கப்படும். நேட்டோப் படையினரின் தலைமையிலான கொசோவோப் படையினரினால் பாதுகாப்பு வழங்கப்படும். இதன் மூலம் பிராந்தியத்தில் சட்ட ரீதியாக சேர்பியாவின் இறைமை மீண்டும் நிலைநிறுத்தப்படும்.

கொசோவோவின் சுதந்திரப் பிரகடனம் தொடர்பான சிறிலங்காவின் கன்டணக்குரல் பல நாடுகளில் எதிரொலித்துள்ளது. ரஸ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இதன் தாக்கத்தை உணரக்கூடியதாக இருந்தது.

சிறிலங்கா அரசாங்கத்தின் யதார்த்த நிலைமை காரணமாகவே அதன் நிலைப்பாடு பல முக்கிய அனைத்தலக நாடுகளுடன் ஒப்பீடு செய்யப்படுகின்றது.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு கசப்பானதும், அனுபவபூர்வமானதுமான நீண்ட போராட்டம் மற்றும் அனைத்துலக தலையீடு என்பவற்றின் ஊடாக பெறப்பட்டதே அன்றி வெறும் ஏட்டுச் சுரக்காய் அல்ல என்பதே எனது வாதமாகும்.

ஒரு தலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திற்கு முன் அனுபவம் உள்ளது. 1992 ஆம் ஆண்டு வடக்கு - கிழக்கு மாகாண சபையின் முதல்வர் வரதராஜபெருமாள் ஒருதலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனம் செய்திருந்தார்.

ஆனாலும் இந்த சுதந்திரப் பிரகடனம் தொடர்பாக அனைத்துலகம் தனது பார்வையை செலுத்தவில்லை. இந்தக் கிளர்ச்சி நிர்வாகத்தை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக கலைத்தது.

மறுபுறத்தில் தமிழர் தாயகத்தின் இறைமையை மறுசீரமைப்பு செய்யுமாறு ஐக்கிய நாடுகளிடமும், அனைத்துலக சமூகத்திடமும் விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்தனர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அத்தகையதொரு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது சிறிலங்காவில் சுதந்திரப் பிரகடனம் தொடர்பான நிலைமை மிக மோசமான போக்கையே காட்டி நிற்கின்றது.

ரஸ்யா, சீனா, ஸ்பெய்ன் மற்றும் இந்தோனேசியா போன்ற பிரிவினைவாத கிளர்ச்சிகள் நிலவும் நாடுகளும் கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்தை மறுதலித்துள்ளன.

அடக்குமுறைத் தீர்வுகள்

சில நாடுகளில் கிளர்ச்சியாளர்களின் போராட்டங்கள் சிறிலங்காவை விட மிக மோசமான நிலையிலேயே காணப்படுகிறது. செச்சினியாவிற்கு எதிரான ரஸ்யாவின் பிரிவினைவாத கொள்கைகளின் காரணமாக பல்வேறு குழப்ப நிலைமைகள் தோன்றியுள்ளன.

சீனாவில் திபெத் இன முரண்பாடுகள் துரிதகதியில் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மேலும் உலகின் பிரிவினைவாதப் போராட்டங்களின் சின்னமாக தலாய்லாமா பிரச்சினை கருதப்படுகிறது.

இந்த இரண்டு நாடுகளினதும் மத்திய அரசாங்கங்கள், பிரிவினைவாத சிறுபான்மையினரிடம் எந்தவிதமான கருத்துக்களையும் கேட்டறியாமல், அவர்கள் மீது தமது தீர்வுத் திட்டங்களை வலுக்கட்டாயமாக சுமத்தின.

ரஷ்யா மற்றும் சீனா ஆகிய பாரிய நாடுகளுடன் ஒப்பிடும் போது சுதந்திரப் பிரகடனமொன்றின் மூலம் பிளவுபடக்கூடிய அதிக அச்சுறுத்தல் சிறிலங்கா அரசாங்கத்திற்கே இருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையின் குறிப்பிட்ட ஒரு பகுதியின் கட்டுப்பாட்டை தம் வசம் வைத்திருக்கிறது. பிரிவினைவாதிகளினால் இலங்கையின் இறைமைக்கு விடப்படும் சவால்களை எதிர்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் அரசாங்கத்திற்கு உள்ளது என்பதை மறுக்க முடியாது.

பாரிய இராணுவப் படைபலம் மற்றும் வலுவான பொருளாதார நிலையையுடைய ரஸ்ய, சீனா விவகாரங்களில் தலையீடு செய்ய அனைத்துலக நாடுகள் முன்வராது என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.

பொருளாதார மற்றும் இராணுவ ரீதியில் வலுவிழந்து காணப்படும் அரசாங்கமொன்றினால் அனைத்துலகத்தின் கவனத்தை தன்பால் முழுமையாக ஈர்க்க முடியாது என்பதையே சேர்பிய அரசாங்கத்தின் தற்போதைய நிலைமை தெளிவுபடுத்தி நிற்கின்றது. குறைந்த பட்சம் அனைத்துலகத்தின் நன்மதிப்பு இருந்தால் மட்டுமே நாடு பிளவுபடுவதனை தடுத்து நிறுத்த முடியும்.

தொடக்கத்தில் சேர்பியாதான் வலுவான நிலையிலேயே காணப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கொசோவோ தனிநாடாக பிளவுபடுவதனை அனுமதிக்கவில்லை.

உண்மையில் கொசோவோ விடுதலை இராணுவத்தினரை அமெரிக்க அரசாங்கம், ஒரு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவித்திருந்தது.

எனினும், சேர்பிய அரசாங்கம் இரண்டு பிரதான காரணிகளில் அவதானம் செலுத்தத் தவறியது.

யுகோஸ்லாவிய அதிபர் டிடோவினால் தூர நோக்குடன் கொசோவோவிற்கு வழங்கப்பட்டிருந்த சுயநிர்ணய உரிமைகளை சேர்பியா தொடர்ந்து பேணவில்லை.

1974 ஆம் ஆண்டு அரசியல் சாசன திருத்தங்களின் அடிப்படையில் கல்வி, சுகாதாரம், வீடமைப்பு, காவல்துறை, நீதிமன்றம் போன்ற அதிகாரங்கள் கொசோவோ சுயநிர்ணய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.

எனினும் சேர்பியாவின் அதிபர் மிலொசொவிக்கின் ஆட்சிக்காலத்தில் கொசோவோவின் அதிகாரங்களை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

குறிப்பாக சுயநிர்ணய அரசாங்கத்தை இரத்துச் செய்து, சேர்பியப் படையினரை கொசோவோவில் நிலை நிறுத்தினார்.

இரண்டாவது, கொசோவோவை தமது இறைமையின் கீழ் வைத்திருக்க முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போதும் ஏனைய சூழ்நிலைகளின் போதும் மனித உரிமைகள் தொடர்பாக உரிய அவதானம் செலுத்தப்பட்டது என்பதனை அனைத்துலக சமூகத்திடம் நிரூபிக்க சேர்பிய ஆட்சியாளர்கள் தவறினர்.

மாறாக, இந்த இன முரண்பாட்டு போராட்டங்களின் போது பாரிய மனித அவலங்களே அரங்கேற்றப்பட்டன.

சேர்பிய அரசாங்கத்தின் கொசோவோ விடுதலை இராணுவத்தினருக்கு எதிரான போராட்டப் பிரகடனம் குறிப்பிட்ட இனத்திற்கு எதிரான போர்ப்பிரகடனமாக காலப்போக்கில் மாறியது.

ஒத்திவைக்கப்பட்ட உதவிகள்

சிறிலங்கா அரசாங்கமானது தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் வெற்றிகொண்டு, கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை மீட்டு எடுப்பதிலேயே தமது முழுக் கவனத்தையும் செலுத்தியுள்ளது. இந்த முன்நகர்வு எதிர்பார்க்கப்பட்டதனை விட மிக குறைந்தளவு வேகத்திலேயே முன்னெடுக்கப்படுவதுடன், பாரிய மனித மற்றும் பொருளாதார இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்ச் சமூகத்தில் கடத்தல்கள் மற்றும் கொலைகள் பயங்கரவாத மயப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தமது இருப்பிடங்களை இழந்துள்ளனர்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பான மகிந்தவின் ஆணைக்குழுவில் அங்கம் வகித்த அனைத்துலகப் பிரதிநிதிகளின் துரித வெளியேற்றத்தின் காரணமாக அனைத்துலக தரத்திலான மனித உரிமை மீறல் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாத துரதிர்ஷ்டவசமான நிலைமை தோன்றியுள்ளது.

நில ரீதியான கட்டுப்பாட்டின் மூலம் நாட்டின் இறைமைக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதே சேர்பிய விவகாரத்தின் ஊடாக நாம் கற்றுக்கொள்ளக் கூடிய பாடமாகும். மிக வலுவான சேர்பிய இராணுவம் கொசோவோவின் கட்டுப்பாட்டை மீளப் பெற்றுக்கொண்டது.

எனினும், கொசோவோவில் நிகழ்த்தப்பட்ட மிக மோசமான மனித உரிமை அவலங்கள் காரணமாக மேற்குலக நாடுகள் தலையீடு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதுடன், இறுதியில் சேர்பிய இராணுவத்தினரின் செயற்பாடுகள் தடை செய்யப்பட்டன.

இறைமை உள்ளிட்ட அனைத்துலக சட்டங்களை புறந்தள்ளி விட்டு கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்திற்கு பல நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளன.

பிராந்தியத்தில் நிலைத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற யதார்த்த நிலைமையின் அடிப்படையிலேயே இந்த நாடுகள் அங்கீகாரமளித்துள்ளன.

இதனால்தான் சிறிலங்கா அரசாங்கம் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய இரண்டு அடிப்படை ஏதுக்களை மையமாக வைத்து தமது இறைமை தந்திரோபாயத்தை முன்னெடுக்க வேண்டும்.

ஒருதலைப்பட்சமான இறைமை கோட்பாடுகள் மூலமோ அல்லது முழுமையான இராணுவ முன்னகர்வின் மூலமோ இந்தப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படமுடியாது.

அனைத்துலக சமூகத்தின் ஒத்துழைப்புடனேயே இலங்கையின் ஒருமைப்பாட்டை பேண முடியும் என்பது யதார்த்த ரீதியாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி :- சங்கதி

சர்வதேச கருத்தியலை உள்வாங்கி தன்னை நெறிப்படுத்துமா கொழும்பு?

ஆபத்துக்குள்ளான மக்களின் நிலைமை குறித்து சர்வதேச ரீதியில் ஆய்வு நடத்திவரும் லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் சிறுபான்மையினருக்கான உரிமைக்குழு, ஆசியப் பிராந்தியத்தில் மனித உரிமைகள் மிக மோசமான கட்டத்தை அடைந்திருக்கும் நாடுகளில் இலங்கை முன்னிலை வகிக்கின்றது என்பதை அடையாளம் கண்டிருக்கின்றது.
ஆப்கானிஸ்தானிலும், பர்மாவிலும் நிலைமை மிகமிக மோசம் எனத் தெரிவித்திருக்கும் அந்த அமைப்பு, புதுவருடத்துடன் இலங்கையில் நிலைமை கிடுகிடுவென சீரழிந்து மிகமிக மோசமான கட்டத்தை அடைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
""பாகிஸ்தானிலும், இலங்கையிலுமே கள நிலைமைகள் குறிப்பிடத்தக்களவு சீர்கெட்டுள்ளன. 2007 உடன் ஒப்பிடுகையில் மிக வேகமாக சீரழிவை அடைந்த நாடுகளில் இவை இரண்டுமே முன்னிலை வகிக்கின்றன என்றும் அந்த அமைப்புத் தெரிவித்திருக்கின்றது.
""யுத்தம் மீள மூண்டதாலும், சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைந்ததாலும் இலங்கை 2007 இல் மிக மோசமான மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொண்டது. படுகொலைகள், காணாமற்போதல், சித்திரவதை போன்ற பெரும்பாலும் அனைத்து மனித உரிமை மீறல் துஷ்பிரயோகங்களின்போதும் தமிழர்கள் அல்லது முஸ்லிம்களே அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.'' என்று மேற்படி சிறுபான்மையினருக்கான மனித உரிமைக் குழுவின் நிறைவேற்று இயக்குநர் மார்க் லற்றிமர் தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமை அமைப்புகள், அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், லண்டனை மையமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, ஹொங்கொங்கைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவற்றின் வரிசையில், இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான வண்டவாளத்தை அம்பலப்படுத்துகின்ற பணியில் இப்போது சிறுபான்மையினருக்கான உரிமைகள் குழுவும் (minority rights group) இணைந்து கொண்டிருக்கின்றது.

பாதுகாப்பற்ற சிறுபான்மையினரான தமிழ் சமூகத்தின் மீது பெரும்பான்மையினரான பௌத்த, சிங்கள மேலாதிக்கப் போக்கு ஆட்சியாளர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன அழிப்பு வன்முறை, வரன்முறை தாண்டி கொடூரப் பேரழிவுப் போராகப் பரிணமித்திருக்கும் இந்தக் காலகட்டத்தில்
ஒருபுறம், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச அமைப்புகளின் பார்வையும், சிரத்தையும், அவதானமும் இலங்கையின் பக்கம் திரும்பியிருக்கின்றன. உண்மை நிலைமையை அவை அப்பட்டமாக அம்பலப்படுத்தி வருகின்றன.
மறுபுறம், இத்தகைய இன அழிப்பு வன்முறை குரூரமாகவும், கொடூரமாகவும் இடம்பெறும் பிராந்தியங்களில் சர்வதேசம் கண்ணை மூடிக்கொண்டு பார்த்திராது, சர்வதேச வழக்காறுகள் மற்றும் பண்பியல்புகளை மீறி அத்தகைய மனிதப் பேரவல விவகாரங்களில் மனித நேய அணுகுமுறையோடு அவை உறுதியாகத் தலையிடும் என்ற நிதரிசனம் கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தை ஊக்குவித்து, அங்கீகரித்த மேற்குலகின் தந்திரோபாயச் செயற்பாடுமூலம் பகிரங்கமாகக் கட்டவிழ்ந்திருக்கின்றது.
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் பின்புல ஆதரவோடும் ஊக்குவிப்போடும் முன்னெடுக்கப்படும் இன அழிப்புக் கொடூரத்தை, ஒரு நாட்டின் உள்விவகாரம் என்று கருதி ஒதுங்கி நிற்கும் கருத்து நிலைப்பாட்டை சர்வதேசம் துறந்து விட்டது என்ற யதார்த்தம் மெல்லப் புரியத் தொடங்கியதால் இப்போது பதறியடிக்கின்றது கொழும்பு.
தமிழர் தாயகம் மீது ஏவி விடப்பட்ட கொடூர யுத்தம் இப்போது மந்த கதிக்குத் திரும்பியிருப்பதும்
"பேசசு மூலமான தீர்வு', "அதிகாரப் பகிர்வு', "இராணுவ வழித் தீர்வு மார்க்கமல்ல' என்ற அறிவிப்புகள் கொழும்பின் பக்கத்திலிருந்து வெளியிடப்படுவதும்
இனப்பிரச்சினைக்கான அமைதித் தீர்வு குறித்துப் பேசி முடிவெடுப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவருக்கு அவசரமாக அழைப்பு விடுத்து அவரை ஜனாதிபதி சந்தித்துப் பேசுவதும்
சர்வதேசப் பின்புலத்தில் மாறிவரும் கருத்து நிலைப்பாட்டால் அரற்றப்பட்ட கொழும்பு, அதனால் வெளிப்படுத்தும் பிரதிபலிப்புகளே.

ஈவிரக்கமற்ற இனவாத அரசு ஒன்று, சில அந்நிய சக்திகளின் பின்புல ஆதரவுடன் தமிழர் தேசத்தின் மீது மிகக் கொடூர யுத்தம் ஒன்றைக் கட்டவிழ்த்துவிட்டு, இனப் பேரழிவு ஒன்றுக்குக் கங்கணம் கட்டி நிற்கையில், அதைத் தடுத்து நிறுத்தும் தார்மீக அறநெறிக் கடப்பாடு தனக்கு இருப்பதாகக் கருதி சர்வதேசம் அது குறித்து கருத்துகளை வெளியிட்டு வருகின்றது.

இந்திய அரசின் கொள்கை நிலைப்பாட்டை விளக்கும் வகையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அந்த நாட்டின் ஜனாதிபதி அண்மையில் நிகழ்த்திய உரை வரை, சர்வதேசத்தின் பல மட்டங்களில் இலங்கை குறித்துத் தெரிவிக்கப்படும் கருத்துகள் இலங்கை தொடர்பான சர்வதேசத்தின் இக்கரிசனையையே வெளிப்படுத்தி நிற்கின்றன.
சர்வதேசத்தின் இந்த உறுதியான நிலைப்பாடு கொழும்பை சரியான வழியில் செயற்பட வழிப்படுத்துமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நன்றி :- உதயன்

Wednesday, February 27, 2008

இலங்கை இனநெருக்கடி தொடர்பாக இந்தியாவின் வழமையான `வாய்ப்பாடு'

இலங்கையின் இனநெருக்கடிக்கு இராணுவ ரீதியில் தீர்வுகாண முடியாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம் என்றும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமூகத்தின் சகல பிரிவினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் இணக்கப்பாட்டை பேச்சுவார்த்தை மூலம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இந்தியப் பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
மன்மோகன் சிங் அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்ட அமர்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையில் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை பற்றி விபரிக்கையிலேயே இலங்கை தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மிகச் சுருக்கமாக குறிப்பிட்டுள்ள இந்திய ஜனாதிபதி, இலங்கையில் வன்முறைகள் அதிகரித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.

இலங்கையின் இனநெருக்கடி விவகாரத்தில் 1990 களிலிருந்து தூர விலகிநின்று அவதானிப்பவராகவே, வெளிஅரங்கில் புதுடில்லி தொடர்ந்தும் காண்பித்து வருவதும் இனநெருக்கடிக்கு ஒன்றுபட்ட நாடு என்ற கட்டமைப்புக்குள் இலங்கையர் சமூகத்தின் சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையே அவசியமென்று கூறிவருவதும் வாய்ப்பாடாகிவிட்டது.

1983 இனக் கலவரத்தை அடுத்து இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் தமிழகத்திற்கு அகதிகளாக சென்றதையடுத்து இலங்கை விவகாரத்தில் நேரடியாக தலையிட்ட இந்தியா, 1987 ஜூலையில் இலங்கை- இந்திய உடன்படிக்கையின் கீழ் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொண்டு மாகாணசபைகள் முறைமை ஏற்படவும் வடக்கு, கிழக்குப்பகுதிகள் தமிழ் மக்களின் பாரம்பரிய வதிவிடங்களென உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கவும் வழிசெய்து கொடுத்ததுடன் வட,கிழக்கு தற்காலிகமாக இணைக்கப்படவும் ஏற்பாடுகளை செய்து கொடுத்திருந்தது.

ஆயினும், நடைமுறையில் வட, கிழக்கை தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு மூலம் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த இரு மாகாணங்களும் பிரிக்கப்பட்டிருப்பதும் இனநெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சியை பூச்சிய நிலைக்கு கொண்டுசென்று விட்டது என்பதும் புதிய விடயமல்ல.

இந்தியாவின் ஆசீர்வாதத்துடன் மேற்கொள்ளப்பட்ட 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தப்போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் அறிவித்திருந்தார். இதனை இந்தியா உடனடியாகவே வரவேற்றிருந்தது. ஆனால், இந்தியாவின் மறைமுக அழுத்தமே ராஜபக்ஷ அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு காரணமென தென்னிலங்கையில் மூன்றாவது பலம்பொருந்திய அரசியல் சக்தியாக விளங்கும் ஜே.வி.பி. உரத்து கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இல்லையென்ற தொனியிலும் இங்கிருப்பது பயங்கரவாதப் பிரச்சினையே என்றும் வாதிடும் ஜே.வி.பி., இலங்கைக்கு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்தது இந்தியாவே என்றும் சாடியுள்ளது.

கடந்த மூன்று தசாப்தங்களாக தொடரும் மோதல்களால் வடக்கு, கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் அவலங்கள், துன்பங்கள் குறித்து சிறிதளவேனும் கவலையோ இரக்கமோ கொள்ளாமல் யாவற்றையும் அரசியல் இலாபம் தேடும் கண்ணோட்டத்திலேயே அணுகும் சக்திகள் தென்னிலங்கையில் மட்டுமன்றி, இந்தியாவிலும் இருப்பதையே வெளிப்படுத்தும் செயற்பாடுகள் அரங்கேறி வருகின்றன.

இலங்கை விவகாரத்தில் தூரவிலகி நிற்கும் போக்கை இந்தியா கடைப்பிடிக்க ஆரம்பித்ததையடுத்து மேற்குலகை கடுமையாக விமர்சித்தும் புதுடில்லி தொடர்பாக ஆரவாரப்படுத்தாமலும் செயற்பட்ட ஜே.வி.பி. போன்ற கடும்போக்கு கட்சிகள் தற்போது புதுடில்லியை மறைந்திருந்து செயற்படும் எதிரியாக வர்ணிக்கத் தலைப்பட்டுள்ளன.

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் இரட்டைத் தன்மையான நிலைப்பாடு குறித்து இரு தரப்பிலுமுள்ள அரசியல்வாதிகள் நன்கறிவார்கள். ஆயினும், `இந்தியா எமது சிறந்த நண்பன்' என்று இலங்கையிலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளும் கூறிவருவதையும் கேட்க முடிகின்றது.

இலங்கையின் இனநெருக்கடிக்கு யுத்தத்தின் மூலம் தீர்வு காணமுடியாது என்று இந்தியா எவ்வளவு தூரம் வலியுறுத்திக் கூறுகின்ற போதும் அதன் பூகோள அரசியல் நலன்களுக்கு அப்பால் அந்நாடு ஒருபோதுமே செல்லப்போவதில்லை என்பதே யதார்த்தமான விடயமாகும்.

இதற்கு வலுவூட்டும் பிந்திய உதாரணமாக இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் நேற்று முன்தினம் இந்தியப் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது, அரசின் வெளிநாட்டுக் கொள்கை பற்றி குறிப்பிட்டிருப்பதை கூறமுடியும்.

`பிராந்தியத்திலும் உலகிலும் சமாதானம், ஸ்திரத்தன்மையான சூழலை ஏற்படுத்த எனது அரசாங்கம் விரும்புகின்றது. எமது தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் பொருளாதார சமூக அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கும் அனுசரணையாகவே எமது வெளியுறவுக் கொள்கை அமைந்திருக்கின்றது" என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.

அயல் நாடுகளுடன் நட்புறவையும் ஒத்துழைப்பையும் வளர்த்தெடுப்பதற்கு இந்திய அரசாங்கம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகக் கூறினாலும் பூகோள, அரசியல் மற்றும் வர்த்தக நலன் சார்ந்த கொள்கைகளுக்கு அப்பால் சென்று இலங்கையின் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண வேண்டுமென்ற அழுத்தத்தை கொழும்புக்கு புதுடில்லி வழங்குமென எதிர்பார்க்க முடியாது.

அதிகரித்துவரும் மோதல்களினால் வட, கிழக்கிலிருந்து தமிழ் மக்கள் உடனடியாக வெளியேறி தஞ்சமடையக் கூடியதாக தமிழ் நாடே இருக்கின்றதென்பதையும் எண்ணிக்கை குறைவாக இருப்பினும் தற்போதும் படகுகளில் மக்கள் தமிழகத்திற்குச் சென்று கொண்டிருப்பதையும் தற்போது அங்கு 2 இலட்சம் இலங்கைத் தமிழ் அகதிகள் தங்கியிருப்பதையும் (யூ.என்.எச்.சி.ஆர். அறிக்கை) அதனால் இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்கும் தார்மீகப் பொறுப்பையும் எளிதில் உதாசீனம் செய்துவிட முடியாது.

ஆதலால், வன்செயல் அதிகரிப்பையிட்டு கவலை தெரிவிப்பதுடனும் இராணுவ ரீதியில் தீர்வு சாத்தியமற்றது என்னும் வாய்ப்பாட்டை தொடர்ந்தும் உச்சாடனம் செய்வதை விடுத்து இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடியதான தீர்வை துரிதமாக காண்பதற்குரிய பங்களிப்பினை இந்தியா இனிமேலும் காலந்தாழ்த்தாது மேற்கொள்ள வேண்டும் என்பதே பலரினதும் எதிர்பார்ப்பாகும். தொடரும் இனநெருக்கடியினால் மோசமாக பாதிக்கப்படுவோர் தமிழ் மக்களே என்பது அறியாத விடயமல்ல.

ஆகையால், அந்த மக்களின் துன்பங்களை கருத்தில்கொண்டு சொந்த நலன்களுக்கு அப்பால் இனநெருக்கடியை கவனத்திற்கெடுத்து "சமன்செய்து சீர்தூக்கும் கோலாக" செயற்பட வேண்டும் என்பதே வேண்டுகோளாகும்.


நன்றி:- தினக்குரல்

சேர்பிய வழியில் இலங்கை

"இராணுவத் தீர்வில் தங்கி நிற்பதில் உள்ள ஆபத்தையே கொசோவோ காட்டுகின்றது' என்ற தலைப்பில் அரசியல் விமர்சகரும் பார்வையாளருமான ஜெஹான் பெரேரா தமது கட்டுரை ஒன்றில் தெளிவாகவும் விளக்கமாகவும் சில விடயங்களைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
உலகின் ஏனைய நாடுகளை ஓர் அச்ச உணர்வுக்குள் ஆழ்த்தி, அதன் மூலம் அவற்றைத் தனது வழிப்படுத்தலுக்குள் கொண்டுவரக்கூடிய இராணுவ அல்லது பொருளாதார வலிமையைக் கொண்டிராத சேர்பியா, தனது பிரதேசம் இரண்டு நாடுகளாகத் துண்டாடப்படாமல் தவிர்ப்பதற்கு குறைந்த பட்சம் சர்வதேசத்தின் நல்லாதரவையாவது நன்மதிப்பையாவது பேணியிருக்க வேண்டும்.

கொசோவோ விடுதலை இராணுவத்தைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்து, அதைத் தடைசெய்து, கொசோவோ பிரிவினைக்கு எதிராக அமெரிக்கா உட்பட்ட சர்வதேச நாடுகள் நின்றபோது அந்த நல்லாதரவை சாதகமாகப் பயன்படுத்த சேர்பியா தவறிவிட்டது.
முக்கியமாக இரண்டு விடயங்களைத் தனது கவனத்தில் கொள்வதற்கு சேர்பிய அரசு தவறியமையே இன்று தனது இறைமையிலிருந்து கட்டுப்பாட்டிலிருந்து கொசோவோவை அது இழக்கும் நிலைமை ஏற்பட்டதற்குப் பிரதான காரணமாகும்.
ஒன்று கொசோவோப் பிராந்தியத்துக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து வழங்கி, சுயாட்சியை நிலைப்படுத்துவது குறித்து சேர்பியா சிந்திக்கவேயில்லை.

அடுத்தது கொசோவோவை இராணுவ ரீதியில் நசுக்கித் தனது இறையாண்மைக் கட்டுப்பாட்டுக்குள் அதனை அடக்கி வைத்திருக்கும் தனது எத்தனத்தின்போது மனித உரிமைகளைப் பேண அது முற்றிலும் தவறிவிட்டது. எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்த நிலைமையிலும் சிவில் யுத்தத்துக்கு மத்தியிலும் கூட மனித உரிமைகளைப் பேணுவதில் தனது அரசும் படைகளும் மிகச் சிரத்தையாக இருக்கின்றன என்ற நம்பிக்கையை சர்வதேசத்துக்கு ஏற்படுத்துவதற்கு சேர்பியா அடியோடு தவறிவிட்டது.
இந்த இரண்டு காரணங்களுமே சேர்பியாவிலிருந்து கொசோவோப் பிராந்தியம் பிரிந்து தனிநாடாவதற்கான ஆசீர்வாதத்தை சர்வதேச சமூகத்திடமிருந்து பெற்றுத்தருவதற்குப் பிரதான அம்சங்களாகின.

இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டும் ஜெஹான் பெரேரா, இந்த நிலைமையை இலங்கை விவகாரத்தோடு மேலோட்டமாக ஒப்பிடவும் தவறவில்லை.
விடுதலைப் புலிகளை வெற்றிகொள்வதற்குத் தனது முழு இராணுவப் பலத்தையும் இப்போது பிரயோகிக்கின்றது இலங்கை அரசு. ஆனால் விடுதலைப் புலிகளின் பிரதேசங்களைக் கைப்பற்றுவதற்கான இராணுவ முன்நகர்வு என்பது எதிர்பார்த்த வேகத்தில் அமையவில்லை. மிகவும் மந்தமாகவே அது உள்ளது. அந்த முன்நகர்வு பலத்த ஆள் சேதத்தையும் பொருளாதார இழப்பையும் கூட ஏற்படுத்துகின்றது. தமிழர் சமுதாயத்தை ஆட்கடத்தல்களும், கொலைகளும் பெரும் பயங்கரத்துக்குள் மூழ்கடித்துள்ளன. இராணுவ நடவடிக்கைகளினால் பெரும் எண்ணிக்கையான மனித இடப்பெயர்வுகளும் அதனால் மனிதாபிமானப் பேரவலங்களும் நெருக்கடிகளும் முற்றி வருகின்றன.
மனித உரிமைகளைப் பேணுகின்றமை தொடர்பான அரசின் பெறுபேற்றுப் பதிவு சீர்கெட்டுக்கிடக்கிறது.

அத்தோடு, நிலப்பிரதேசங்களைக் கைப்பற்றுவது, ஆக்கிரமிப்பது, கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போன்ற இராணுவ சாகச வெற்றிகள் இறைமையைக் காப்பதற்கான உறுதியாகவோ, வலுவாகவோ அமைந்துவிடா என்பதுதான் சேர்பிய அனுபவம் காட்டும் பாடமாகும் என்றும் ஜெஹான் பெரேரா சுட்டிக்காட்டுகின்றார்.
தமிழர்களுக்கு நியாயமான சுயாட்சி உரிமைகளை விட்டுக்கொடுப்போடு பகிர்ந்தளிக்க முன்வராது
பௌத்த, சிங்களப் பேரினவாத மேலாண்மைப் போக்கில் முறுகிக் கொண்டு
தமிழர் தேசம் மீது பெரும் யுத்தம் ஒன்றைத் தொடுத்து, மனிதப் பேரழிவுக்கும், பேரவலத்துக்கும் வழிகோலியபடி
மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு இடமளிக்கும் அரச பயங்கரவாதத்தைத் தொடர்ந்த வண்ணம்
இலங்கை அரசும், படைகளும் சந்நத உருக்கொண்டு செயற்படுகின்றன.
கொசோவோப் பிரிவினையை எதிர்த்த மேற்குலகு பின்னர் அந்த நிலைப்பாட்டிலிருந்து விலகி, அந்தப் பிரிவினையை அங்கீகரிக்கும் நிலைக்குத் தனது கருத்தியலை மாற்றிக் கொண்டமைக்கு சேர்பிய அரசின் எத்தகைய திமிர்த்தனப் போக்குகளும், செயற்பாடுகளும் காரணமாக அமைந்தனவோ அவற்றையே இலங்கை அரசுத் தலைமையும் தனது தந்திரோபாயமாகக் கையில் எடுத்திருக்கின்றது என்பதைச் சொல்லாமல் சொல்லிச் சுட்டிக்காட்டுகின்றனர் ஆய்வாளர்கள். இது அரசுத் தலைமைக்குப் புரியுமோ என்னவோ.......?
கொழும்பின் திமிர்த்தனப் போக்கு இப்படியே தொடருமானால் இலங்கையை சேர்பியாவாகவும், ஈழத்தைக் கொசோவோவாகவும் சர்வதேசம் கருதும் சூழல் விரைவாக உருவாகிவிடும். அத்தகைய நிலையைத் தவிர்ப்பதா, இல்லையா என்பதைக் கொழும்புதான் தனது சமயோசிதம் மூலம் முடிவு செய்யவேண்டும்.

நன்றி :- உதயன்

Tuesday, February 26, 2008

'ச(ா)தி"

இன்றைய காலகட்டத்தில் 'மதம்" என்கின்ற சொல் 'பிரச்சனைக்குரிய விடயங்களைச் சுட்டிக்காட்டுகின்ற" சொல்லாக அர்த்தம் பெற்று வருகின்றதோ என்கின்ற ஐயமும், அச்சமும் எமக்கு உண்டு. 'மதம்" என்பது வேறு, 'கடவுள் என்பது வேறு", 'மத நம்பிக்கை என்பது வேறு", 'கடவுள் நம்பிக்கை என்பது வேறு!" என்பது போலத்தான் இப்போது சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எதைப் பற்றியும் தர்க்கிக்கலாம், ஆனால் மதம் குறித்தோ, கடவுள் குறித்தோ தர்க்கிக்கக்கூடாது என்கின்ற எழுதப்படாத விதி ஒன்று இருப்பதைப் பற்றி நாம் அறிவோம். ஆனால் பௌத்தப் பேரினவாதம் குறித்து நாம் வன்மையாகக் கண்டித்துக் கட்டுரை எழுதுவதற்குக் கைதட்டல் கிடைப்பது போல், இந்துப் பேரினவாதம் குறித்து எழுதினால் 'எது கிடைக்குமோ" என்ற எதிர்பார்ப்பும் எமக்கு உண்டு. சிங்கள-பௌத்தப் பேரினவாதம் குறித்து கண்டித்துக் குரல் எழுப்புவதற்கு நான் ஒரு ஈழத் தமிழன் என்பதுவும் ஒரு தகுதியாக இருக்கின்றது. அதுபோல், இந்துப் பேரினவாதம் குறித்து எழுதுவதற்கு, பிறக்கும்போது சைவனாகவும் பின்னர் இந்துவாகவும் 'மதமாற்றம்!" செய்து கொண்ட எண்ணற்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் நானும் ஒருவன் என்ற தகுதியே(!) போதும் என்ற தைரியமும் எனக்கு உண்டு.

ஒரு விடயத்தை - மிக முக்கியமான ஒரு விடயத்தை - இக்கட்டுரையின்; ஆரம்பத்திலேயே வலியுறுத்திச் சொல்லிவிட விரும்புகின்றோம். எவர் மனத்தையும் புண்படுத்தும் நோக்கமோ அல்லது எவரது நம்பிக்கையையும் விமர்சிக்கும் நோக்கமோ எமக்குக் கிடையாது. எந்த மதத்தையோ, கடவுளையோ, உயர்த்தவோ, தாழ்த்தவோ நாம் முயலவில்லை. எமது எண்ணமும் அதுவல்ல! நடந்ததை, நடப்பதை நாம் உங்களுக்குச் சொல்ல வருகின்றோம். அவ்வளவுதான்! அதனை உங்கள் சிந்தனையில் நிறுத்தி இனிமேல் நடக்க வேண்டியது என்ன என்று நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். சிந்தனையில் சீர்திருத்த மாற்றம் வராமல், செயலில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்பதை நாமும் நம்புகின்றோம்.

இன்றைய தினம், குறிப்பாக இந்தியாவில், இந்துக்களின் பேரினவாதத்தை 'இந்துத்துவம்" என்று தாழ்த்தப்பட்டவர்கள் சொல்கிறார்கள். 'அப்படியில்லை! இந்து தர்மத்தின் உயரிய கோட்பாடுகளின் தொகுப்புத்தான் இந்துத்துவம்" - என்று இந்துமதத் தீவிர சிந்தனையுள்ளவர்கள் வாதிடுகின்றார்கள். இந்து மதத்திலுள்ள மிகப் பெரிய பிரச்சனையாக இன்று சாதிப் பாகுபாடு இருப்பதைக் காண்கின்றோம். இதற்குக் காரணம், இந்த வருண சாதி வேறுபாடுகளை இந்து மத வேதங்களே அறுதியிட்டுக் கூறுவதாகச் சொல்கின்றார்கள்.

நான்கு வருண உருவாக்கம் குறித்துப் பேசுகின்ற 'இருக்கு வேதத்தின்" புருஷ சூக்தத்தில், புருஷன் என்கின்ற உடலை நான்காக வகுத்து நான்கு வருணங்கள் தோற்றுவிக்கப்பட்டதாகக் கதையாடல் அமைக்கப்பட்டுள்ளது. படைப்புக் கடவுள் பிரம்மாவின் வாயிலிருந்து பிராமணனும், நெஞ்சில் இருந்து சத்திரியனும், தொடையிலிருந்து வைசியனும், பாதத்திலிருந்து இவர்கள் மூவருக்கும் சேவை செய்யும் அடிமையாக சூத்திரன் என்பவனும் உருவாக்கப்பட்டார்கள். இந்தச் சூத்திரச் சாதியை சேர்ந்தவர்கள்தான் திராவிடர்கள் என்பது பின்னால் விளக்கப்படுகின்றது.

இந்த நான்கு வருணத்தையும் (நான்கு சாதி அமைப்புக்களையும்) தாண்டியவர்கள் மிகக் கேவலமாக சண்டாளர்கள்- தீண்டத் தகாதவர்கள் ­ என அழைக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்படுகின்றார்கள். இவர்கள் 'தலித்துக்கள்' என்று இப்போது குறிக்கப்படுகின்றார்கள். 'தலித்' என்ற சொல் எப்படி வந்தது என்பதை முதலில் பார்ப்போம்.

பிரிட்டிஷ் அரசாங்கம் தீண்டத்தகாத சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க நினைத்து, ஒரு அட்டவணையைத் தயாரித்தது. அந்த அட்டவணையில் வந்த சாதியினரை (Scheduled Caste) (ஷெடியூல்ட் காஸ்ற்) அட்டவணைச் சாதியினர் என்று அழைத்தார்கள். பின்னர் மராட்டிய இலக்கியத்தில் அட்டவணைச் சாதியினரைக் குறிக்கப் பயன்படுத்திய சொல்லாகிய 'தலித்' என்ற வார்த்தை உபயோகிக்கப்பட்டது. 'தலித்' என்பது ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட, உழைக்கும் சாதி மக்களைக் குறிக்கின்ற மகாராஷ்டிர சொல் வழக்கிலிருந்து உருவாகியது.

மேற்கூறிய நான்கு வருணங்களிலிருந்தும் ஒதுக்கப்பட்ட தலித்துக்கள் 'புருஷன்' என்கின்ற உடலுக்கே அப்பாற்பட்டவர்களாகத் தள்ளி வைக்கப்பட்டனர். நடைமுறையில் ஊருக்கு வெளியே இவர்களுக்காகச் சேரிகள் உருவாக்கப்பட்டன. இவர்களைத் தொட்டாலும், பார்த்தாலும் தீட்டுக் கற்பிக்கப்பட்டது. மலம் அகற்றுதல், சவம் காவுதல், பறையடித்தல் முதலான தொழில்கள் இவர்களுக்கென ஒதுக்கப்பட்டன. கடும் உடலுழைப்பு இவர்களுக்கென்றானது. இவர்களின் கடும் உழைப்பிற்கு ஈடாக, உயிர் வாழ்வதற்குத் தேவையான மிகவும் குறைந்த பட்ச ஊதியமே இவர்களுக்கு மானியமாக வழங்கப்பட்டது. திருவிழா முதலிய சடங்குகளிலும் இவர்கள் மிகவும் கீழ் நிலையில் வைக்கப்பட்டு, கடும் உடல் உழைப்பைச் செய்யும் பணிகள்; அங்கும் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. மேலாடை அணியக்கூடாது, குடிசைகளுக்கு ஓடுவேயக் கூடாது, செருப்பு அணியக்கூடாது, சைக்கிளில் செல்லக் கூடாது, பொதுச்சாலைகள், பொதுச்சுடுகாடுகள், பொது இடங்கள் போன்றவற்றை இந்த மக்கள் பயன்படுத்தக்கூடாது என்ற விதிகள் பிறப்பிக்கப்பட்டன.

பிறவி அடிப்படையில் தொழில் என்பது எல்லாச் சமூகங்களிலும் ஏதோ ஒருவகையில் நடைமுறையில் இருந்ததுதான்! என்றாலும் தொழிலைப் பிறவி அடிப்படையில் ஒதுக்கி, அதற்கு சடங்கு ஆசார அடிப்படையில் நியாயம் வழங்குகின்ற கோட்பாட்டை உருவாக்கி, திருமண உறவுகளையும் சாதிக்குள்ளேயே முடக்கி அது மட்டுமல்லாமல் இவற்றை எந்த வகையிலும் மீறக்கூடாத விதமாக வழிகளையும் தடை செய்தது - எமது சமூகம்தான்! இதனை நியாயப்படுத்தும் வகையில் 'முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப இப் பிறவியில் சாதியும் வாழ்நிலையும் நிர்ணயிக்கப்படுகின்றன' என்கின்ற கர்மவினைக் கோட்பாடும் இங்கு உருவாக்கப்பட்டது.

தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்த மட்டில், சங்க காலத்தின்போது இப்போதுள்ளது போல இறுக்கமான சாதிப் பிரிவினைகளும், தீண்டாமையும் நிலவவில்லையென்றாலும், சங்ககாலத்திலேயே ஒரு சாரார் 'இழிசனர்' என்று ஒதுக்கப்பட்டதற்கும், அவர்களது பேச்சு வழமையை 'இழிசனர் மொழி' என்றும், தமிழ் இலக்கியத்திற்கு ஒவ்வாதது என்றும் தள்ளி வைக்கப்பட்டதற்கும் தக்கசான்றுகள் உண்டு. தமிழ்மொழி தரப்படுத்தப்பட்ட காலத்தில், செந்தமிழ், கொடுந்தமிழ் என்று பிரிக்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்களின் தமிழ் கொடுந்தமிழாக ஒதுக்கப்பட்டது.

கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ்ச்சமூகத்திலும் வருண சாதிக் கோட்பாடுகளும், தீண்டாமையும் வேர்கொள்ள ஆரம்பித்தன. கிறிஸ்துவுக்கு பின் ஆறாம், ஏழாம் நூற்றாண்டில் இத்தீண்டாமை இறுக்கமாக மேற்கொள்ளப்பட்டதற்குச் சான்றுகள் பல உண்டு. நந்தனார் கதையோடு, திருநாவுக்கரசரின் பதிகங்களையும் சான்றுகளாகக் காட்டலாம். என்றாலும் தமிழ்ச் சமூகத்தில் பிற இந்திய சமூகங்களைப் போல சத்திரிய வர்ணம் கிடையாது. சூத்திர வர்ணங்களில் ஒருவரான வேளாளர் இங்கே பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையிலான ஆதிக்க சக்திகளாக விளங்கினர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நிலவுடைமை ஆதிக்கம் இவ்விரு சாதியினிடமே குவிந்திருந்தன என்று (Burton Stein) பேர்ட்டன் ஸ்டெய்ன் போன்ற நவீன வரலாற்று ஆசிரியர்கள் நிறுவுகின்றார்கள்.

இலங்கையைப் பொறுத்த வரையில், தமிழரிடையே பார்ப்பனிய மேலாதிக்கம் இல்லாதிருந்த போதும், மேல் சாதியினரிடம் பார்ப்பனியக் கொள்கைகள் ஊறிப்போய் ஆதிக்கம் செலுத்தின என்பதே உண்மையாகும்.

பிரபல சிந்தனையாளரான பேராசிரியர் காஞ்சா அய்லய்யா தனது ஆய்வு நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார். இவர் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர். இராமன்-இராவணன் போர் குறித்து அவர் குறிப்பிடுகின்றார். அது சைவத் தமிழனுக்கும், ஆரிய இந்துவுக்கும் நடந்த போரைக் காட்டுகின்றது. அவரது கூற்றின்படி:

'ஆரிய இந்துத்துவ வர்ணாசிரம கோட்பாட்டின்படி, வட இந்தியாவில் எல்லாப் பிரிவினரும் நம்பிக்கையிழந்த நிலையில் அடிமைகள் ஆக்கப்பட்டார்கள். பார்ப்பனர்கள், திராவிடர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த தென்னிந்தியாவிலும், அதற்கு அப்பாலும் தங்களுடைய ஆதிக்கத்தைப் பரப்ப நினைத்தார்கள். தாடகை, சம்புகன், வாலி, இராவணன் ஆகியோர் தலித் பகுஜன்களின் தலைவர்களாக இருந்து வந்தார்கள். இப்போது சில பார்ப்பனர்கள் இராவணனும் ஒரு பார்ப்பனனே என்று சொல்ல முயல்கிறார்கள். இது முட்டாள்த்தனமானது. இராவணன் ஒரு பேராற்றல் மிக்க தலித் அரசன். அவன் ஒரு தீவிர சைவன். தீவிர சைவப் பற்றாளன். பார்ப்பனியத்திலிருந்து சைவத்தைப் பிரிக்கவும், தனித்துவமான தலித் சைவத்தை உருவாக்கவும், இராவணன் முயற்சித்தான். இலங்கையில் இராவணனின் ஆற்றல் மிக்க ஆட்சியைத் தோற்கடித்துப் பார்ப்பன ஆட்சியை உருவாக்க ஆரியர்கள் திட்டமிட்டார்கள். எனவே தென்னிந்தியா மீது படையெடுத்துத் தாக்குதல் நடத்த முனைந்தார்கள். இராமனுக்கு அந்த பொறுப்புக் கொடுக்கப்பட்டது.

தென்னிந்தியாவில் பார்ப்பனியத்தைப் பரப்புவதோடு பெண்களை அடிமையாக்குவதற்கும் இராமாயணக் கதை அடிப்படையாக உள்ளது. மேலும் தென்னிந்தியாவில் வாழ்ந்த தலித் சமூகத்தை பார்ப்பன ஆதிக்கத்தின் கீழ்கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் தொகுப்பே இராமாயணமாகும்.

இராவணன் வீழ்ச்சியுற்றதோடு தெற்குப் பகுதிகள் முழுமையான பார்ப்பன ஆரியர்களால் வெற்றி கொள்ளப்பட்டன. இராவணன் இறந்தபிறகு பல பார்ப்பன ரிஷிகள் வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவிற்குக் குடிபெயர்ந்தார்கள். சாதியற்ற சமூகமாக இருந்த தென்னிந்தியாவில் பார்ப்பனர்கள் நுழைந்து அதைச் சாதி அடிப்படையிலான சமூகமாக மாற்றி பார்ப்பனிய ஆணாதிக்கக் கருத்தியலைப் புகுத்தி, தங்களுடைய அதிகாரத்தை நிலை நிறுத்தினார்கள். திராவிடப் பகுதியில் தாய்வழிச் சமூகம் நிலை பெற்றிருந்ததை மாற்றி ஆணாதிக்கத் தந்தை வழிச் சமூகமாக அதனை ஆரியர்கள் மாற்றினார்கள்.

சைவசமயத் தேவாரப் பதிகங்கள் இராவணனை உயர்த்திப் பாடுவதை நாமும் அறிவோம். 'இராவணன் மேலது நீறு' என்று தொடங்கி எத்தனையோ தேவாரங்கள் இராவணன் குறித்தும், இலங்கை அரசு குறித்தும் பாடப்பட்டுள்ளன. திருமுறைகளில் காணப்படும் சில வசனங்களை வாசகர்களுக்கு இங்கு தருகின்றோம்.

'வியரிலங்கு வரையுந்திய தோள்களை வீரம் விளைவித்த உயரிலங்கை அரையன்'

'வானினொடு நீரும் இயங்குவோர்க்கு இறைவனான இராவணன்'

'கடற்படையுடைய அக்கடலிலங்கை மன்னன்'

'இருசுடர் மீதோடா இலங்கையர் கோன்'

'எண்ணின்றி முக்கோடி வாழ்நாளதுடையான்'

'பகலவன் மீதியங்காமைக் காத்த பதியோன்'

'சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும்

முனிவனாய் முடி பத்துடையான்|

இப்படியெல்லாம் பாடிப் புகழ்ந்தவர்கள் மேலும் சில விடயங்களை வலியுறுத்துகின்றார்கள்.

தமிழின் அவசியம் குறித்தும் தமிழின் மேன்மை குறித்தும் நாயன்மார்கள் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

'தமிழோடிசை பாடல் மறந்தறியேன்'

(ஆனால் இன்றோ இசைப்பாடல் என்றால் தெலுங்கில் இருப்பதே மரியாதை!)

'திருநெறிய தமிழ்' என்றும்,

'ஞானத்தமிழ்' என்றும்,

'பேசும் தமிழ்' என்றும்,

'உன்னைத் தமிழில் பாடுவதற்கென்றே என்னை நலம் செய்தாய்'

- என்றும் பாடிவிட்டுப் போனார்கள்.

(ஆனால் இன்று கோவில்களில் தமிழ் எங்கே?)

இன்றைய தினம் இந்தியாவைப் பொறுத்த வரையில் தாழ்த்தப்பட்ட தலித் மக்கள் படுகின்ற இன்னல்கள் வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவிற்குக் கொடூரமாக உள்ளன. அதைவிடக் கொடூரம் என்னவென்றால் இவர்களது துன்பங்களும், துயரங்களும் வெளி உலகிற்குத் தெரியாதவாறு மறைக்கப்பட்டு வருவதுதான்!

இந்தியாவில் 'கட்டாய மத மாற்றத் தடைச்சட்டம்' ஒரிஸா மாநிலம் உட்பட இரண்டு மாநிலங்களில் முன்னர் சட்டரீதியாக அமலாக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலும், கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைத் தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் கொண்டு வந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் அவரது கட்சி தோல்வியடைந்த பின்னர் இக்கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்தை செல்வி ஜெயலலிதா இரத்துச் செய்தார். தேர்தல் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக இந்தக் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்தை அவர் கருதியதனால்தான் மிகுந்த மனவருத்தத்துடன் இந்தச் சட்டத்தைச் செல்வி ஜெயலலிதா இரத்துச் செய்தார். பார்ப்பனியப் பெண்மணியும், இந்துத்துவ ஆதரவாளருமான செல்வி ஜெயலலிதா கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்தை அமலாக்க விரும்பியதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஆயினும் இதற்குரிய அடிப்படைக் காரணங்களைச் சற்றுத் தர்க்கிக்க விழைகின்றோம்.

இந்துத்துவத் தீவிரவாதம் காரணமாக, அன்று அயோத்தியில் பாபர் மசூதி உடைக்கப்பட்டுப் பின்னர் அங்கே இராமர் கோவில் ஒன்று கட்டப்பட வேண்டும் என்பதற்காக வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன. தொடர்ந்தும் இது ஒரு பாரிய பிரச்சனையாகவே இருந்து வருகின்றது. இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை நாம் எமது வாசகர்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். நீண்ட நெடுங்காலத்திற்கு பின்னர் மீண்டும் ஒரு முறை இராமன் ஒரு போர்த் தலைவனாகச் சித்தரிக்கப்படுகின்றான். அழிக்கும் கடவுளான சிவனை இந்த இந்துத்துவ வாதிகள் முன்னிறுத்தவில்லை. மாறாக, முன்னர் திராவிடர்களையும், சைவ மக்களையும் அழித்த இராமன் இப்போது முன்னிறுத்தப்படுகின்றான். மிக மோசமான மதவாதக் கோஷங்களும், வன்முறைகளும் முன்வைக்கப்பட்டன. இந்து-முஸ்லிம் ஒற்றுமை தொடர்ந்தும் சீர்குலைக்கப்பட்டு வருகின்றது. அத்தோடு கிறிஸ்துவ மதம் மீதும் கடுமையான எதிர்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த மூன்று மதங்களையும் சார்ந்தவர்களிடையே உள்ள முறுகல் நிலை அதிகரித்து வருகின்றது. இதைவிட இன்னுமொரு விடயமும் பூதாகரமாக உருவெடுத்து வருகின்றது.

அதுதான் தலித் மக்களின் மதமாற்றம்!

இத்தத்துவத்தின் கொடுமையால் மிகக் கொடூரமான அடக்குமுறையைத் தொடர்ந்தும் அனுபவித்து வருகின்ற கோடிக்கணக்கான தலித் மக்களில் கணிசமானோர் மதம் மாறத் தொடங்கியிருப்பதனை நாம் காணக்கூடியதாக உள்ளது. இவர்கள் இப்படி மதம் மாறுவதற்குரிய காரணம் என்ன? மற்ற மதங்களில், அதன் கோட்பாடுகளில், வழிகாட்டுதலில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையா? அல்லது தாம் இறந்த பின்னர் சொர்க்கத்தை அடைவதற்கு இஸ்லாமோ அல்லது கிறிஸ்தவமோ துணை செய்யும் என்பதா?

இல்லை! இல்லவே இல்லை!!

தாங்கள் வாழ்ந்து வருகின்ற இந்தத் தற்போதைய நரக வாழ்க்கையிலிருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய வேட்கை! செத்த பின்பு சொர்க்கத்திற்குப் போவது அல்ல! அவர்களால் சாதி மாற முடியவில்லை. அதனால் சமயம் மாறுகிறார்கள்!!

இந்த மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால் இந்துத்துவம் ஆட்டம் காணத் தொடங்கி விடும். இதன் காரணமாகத்தான் இந்தக் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டமும் இந்துத்துவ பேரினவாதக் கோஷங்களும்!

இந்தியாவில் வாழுகின்ற கோடிக்கணக்கான மக்களை வர்ணாசிரமத்தின் - சாதியின்- அடிப்படையின் கீழ் வைத்து ஒடுக்குகின்ற நிலைமை மாற வேண்டும். அதற்குப் பிரிந்து கிடக்கின்ற சகல தலித் பிரிவுகளும், தாழ்த்தப்பட்ட சாதி அமைப்புக்களும் ஒரு கொள்கையின் கீழ் ஒன்று சேரவேண்டும் என்பதே எமது அவா! சாதி என்பது பார்ப்பனியம் கொண்டு வந்த ஒரு சதியாகும். சாதிப் பிரிவுக்கும், சாதி அடக்கு முறைக்கும் எதிராக மக்கள் சக்தி ஒன்றிணைய வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, இனவாதத்திற்கு எதிராக நடைபெற்ற உலக மகாநாடு ஒன்றில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று 'இந்தச் சாதிப் பாகுபாடுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்குப் எடுத்துச் சொல்வது' என்பதாகும்!

'சாதியம் என்பது மனித குலத்திற்கு எதிரானது. அது அடிப்படை மனித உரிமை மீறலாகும்'- என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனை நாமும் முழுமையாக வரவேற்கின்றோம்.

அன்புக்குரிய வாசகர்களே!

இந்தியாவின் இந்துத்துவ வாதம் குறித்தும், சாதிவெறி குறித்தும் தர்க்கித்த நாம், தமிழீழம் கண்ட சாதிக் கொடுமைகளை, ஈழத் தமிழர்கள், ஈழத் தமிழர்களுக்கே இழைத்த அநாகரிகத் தீமைகளையும் மறந்து விடவில்லை! இன்னொரு இனத்தின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடுகின்ற மக்கள் தமது முன்னோர்கள், தம்மின மக்களுக்கே செய்திட்ட வரலாற்றுக் கொடுமைகளை மறக்கக் கூடாது! இவை குறித்த விரிவான ஆய்வினை எதிர்வரும் காலத்தில் வழங்குவதற்கு விரும்புகின்றோம்! இவை குறித்து இன்னும் ஆழமாக, பரவலாக ஆய்வினைச் செய்வதே எமது எண்ணமுமாகும். இன்றைய தினம் நாம் கூறியவற்றைக் 'கருத்துக்கள்' என்று சொல்வதைவிட நடந்த, நடக்கின்ற சம்பவங்கள் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். வழமைபோல் சீர்தூக்கிப் பார்க்கின்ற பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகின்றோம்.!!

இன்றைய இந்தக் கட்டுரையை எழுதப் பல ஆய்வு நூல்கள் உதவின. முக்கியமாக 'ஆட்சியல் இந்துத்துவம்', 'இந்துத்துவம்- ஒரு பன்முக ஆய்வு', 'நான் ஏன் இந்து அல்ல', 'உலகமயம் எதிர்ப்பு-அரசியல் தலித்துக்கள்',‘Making India Hindu’, ‘Indian Middle Class’, ‘Why go for convertion’ போன்ற நூல்களுடன் சில விவரண ஒளிநாடாக்களும் உதவியுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.

நன்றி :- சபேசன்

அரைநூற்றாண்டின் பின்னரான கியூபாவின் தலைமைத்துவ மாற்றம்

உலகளாவிய ரீதியில் சுமார் மூன்று தலைமுறைப் புரட்சியாளர்களுக்கு உந்துசக்தியாக விளங்கிய கியூபத் தலைவர் பிடல் காஸ்ட்ரோ ஜனாதிபதி பதவியிலிருந்து உத்தியோக பூர்வமாக வெளியேறியதையடுத்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அவரின் இளைய சகோதரரான ராவுல் காஸ்ட்ரோ கியூபாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.
ராவுல் காஸ்ட்ரோ தனது சகோதரர் பிடல் காஸ்ட்ரோவிலும் பார்க்க வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர். பொது இடங்களில் காணப்படும் போது எப்போதுமே அசௌகரியமான மனநிலையை வெளிக்காட்டுபவராகவே காணப்படுவார் என்று அவர் தொடர்பாக விமர்சிக்கப்படுவதுண்டு. அவருடைய கடுமையான போக்கும் செயற்றிறனும் அவரை `புரூசியாக்காரன்' என்று நண்பர்கள் அழைப்பதற்கு வழிவகுத்தது. பழைய ஜேர்மன் சாம்ராச்சியத்தின் அங்கமான வட - மத்திய ஐரோப்பிய நாடான புரூசியாவைச் சேர்ந்தவர்களின் குணாதிசயங்களை ஒத்ததன்மை ராவுலிடம் நிரம்ப இருப்பதாலேயே நண்பர்கள் அவரை இவ்வாறு அழைப்பதுண்டு. அதேசமயம் ராவுல் காஸ்ட்ரோவின் தலைமைத்துவம் வர்த்தகத் தன்மை வாய்ந்ததென்றும் வர்ணிக்கப்படுவதுண்டு.

கம்யூனிஸ்ட் ஆட்சியிலுள்ள தீவு நாடான கியூபாவின் தலைமைத்துவத்தை சுமார் அரை நூற்றாண்டு காலம் (49 வருடங்கள்) அலங்கரித்து வந்த பிடல் காஸ்ட்ரோவின் பகிரங்க அரசியல் வாழ்வு இப்போது முடிவுக்கு வந்துள்ளது.

2006 ஜூலை 31 இலேயே உத்தியோகப்பற்றற்ற முறையில் கியூபாவின் ஆட்சிப்பொறுப்பை ராவுல் காஸ்ட்ரோ பெற்றுக் கொண்டார். தமையனார் கடும் சுகவீனமுற்றதையடுத்து நிர்வாகப் பொறுப்பை ராவுல் ஏற்றுக் கொண்டபோது வல்லரசான அமெரிக்காவினதும் மற்றும் அதன் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைகளை இறுக்கமாகப் பின்பற்றி வரும் மேற்குலக செல்வந்த நாடுகளினதும் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளிலிருந்தும் நாட்டை எவ்வாறு பரிபாலிக்கப்போகிறார் என்ற சந்தேகங்கள் பரவலாக காணப்பட்டன. ஆனால் அந்தச் சந்தேகங்கள் யாவுமே துரிதமாக மறைந்துவிட்டன.

கடந்த 19 மாதங்களாக ராவுலின் நிர்வாகத்தில் கியூபா அமைதியாகவே இருந்தது. பாரிய மாற்றங்கள் எதுவும் அங்கு ஏற்படவில்லை.

சிறந்த பேச்சாற்றல், செயற்றிறன் என்பவற்றால் கியூப மக்கள் மனங்களை கொள்ளை கொண்டவர் பிடல் காஸ்ட்ரோ (81 வயது) அரசாங்கத்தின் சகல மட்டங்களிலும் மேலாதிக்கம் செலுத்திய அந்தத் தலைவர் தற்போது சடுதியாக ஆட்சிப் பீடத்திலிருந்தும் வெளியேறிவிட்டார். அவருடைய உடல் நிலையும் நோயுமே இதற்கான காரணமாகும்.

இப்போது உத்தியோக பூர்வமாக ஆட்சி மாற்றம் அங்கு ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் எந்தவொரு கலவரமோ அல்லது அகதிகள் வெளியேற்றமோ எதுவுமே இடம்பெறவில்லை.

கியூபாவின் கம்யூனிஸ்ட் ஆட்சி பிடல் காஸ்ட்ரோவின் பின்னர் நிலைகுலைந்துவிடும் என்று மனப்பால் குடித்துக்கொண்டு போலிப் பிரசாரங்களை கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டிருப்போருக்கு மிக அமைதியாக ஏற்பட்டிருக்கும் தலைமைத்துவமாற்றம் உண்மையிலேயே எரிச்சலூட்டும் விடயமென்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

`கடந்த 19 மாத காலம் தான் மேற்கொண்ட பணியையே புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் ராவுல் காஸ்ட்ரோ முன்னெடுக்க போகின்றார். கியூப மக்களுடன் இவர் கொண்டிருந்த உறவுகள் இப்போது முன்னேற்றம் கண்டுள்ளன. ஆதலால் பிடல் காஸ்ட்ரோவின் அடிச்சுவட்டையே அவர் இறுக்கமாகப் பின்பற்றுவார் என்று கியூப மக்கள் பெரும்பாலும் நம்புவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் பிடல் காஸ்ட்ரோ போன்று ராவுல் காஸ்ட்ரோ இருக்கப் போவதில்லையென்ற நிலைப்பாட்டையே அமெரிக்கா கொண்டிருப்பதாக தென்படுகிறது. அமெரிக்காவுடன் உறவுகளை விருத்தி செய்வதற்காக பேச்சுவார்த்தை மேற்கொள்ள விரும்புவதாக ராவுல் காஸ்ட்ரோ கூறியிருந்தார். ஆனால் பிடல் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பரான வெனிசூலா ஜனாதிபதி கியூகோ சாவெஸ், ராவுல் காஸ்ட்ரோ தனது சகோதரனின் கொள்கைக்கு மாறாக ஒரு போதும் செயற்படமாட்டார் என்ற உறுதியான நம்பிக்கையை வெளியிட்டிருக்கிறார். கியூபாவின் புதிய தலைவருக்கு வரவேற்பு தெரிவித்திருக்கும் சாவெஸ், ராவுல் எப்போதுமே அமைதியாகவும் விசுவாசமாகவும் வெளிப்பார்வைக்கு தென்படாமலும் இருந்து வந்தவரெனவும் அதேசமயம் புரட்சிக்கு அதிகளவில் பங்களிப்பினை நல்கியவரெனவும் புகழ்ந்திருக்கிறார்.

1959 இல் சர்வாதிகாரியான புல்ஜென்சியோ பாட்டிஸ்ராவை பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான புரட்சியாளர்கள் பதவி கவிழ்த்தபின் ராவுலே பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அத்துடன் கியூபாவின் 50 ஆயிரம் படையினரும் ராவுலுக்கு மிகுந்த விசுவாசம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

பிடல் காஸ்ட்ரோ கம்யூனிசத்தை அரவணைப்பதற்கு முன்னரே ராவுல் அதனை வரித்துக் கொண்டவராகும். ஆனால் சோவியத் ஒன்றியம் உடைந்த பின்னர் சிறிய அளவிலான திறந்த சந்தை மறுசீரமைப்புகளில் ஆயுதப்படையினர் முக்கியமான பங்களிப்பினை வழங்குவதற்கு ராவுல் காஸ்ட்ரோ வழிகாட்டுதலை வழங்கினார். உல்லாசப் பயணத்துறை, சில்லறை வர்த்தகம், ஏற்றுமதி கம்பனிகள், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போன்ற தொழிற்துறையில் தற்போது பாதுகாப்புத்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

திறந்த சந்தைப்பொருளாதாரத்தை சில துறைகளில் மேம்படுத்துவதற்கு ராவுல் முன்வராவிடில் அந்நாட்டில் எதிர்ப்புணர்வுகள் அதிகரித்துவிடுமென ஆய்வாளர்கள் எதிர்வு கூறுகின்றனர்.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின் கியூபாவின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுவிடுமென அச்சமயம் எதிர்வு கூறப்பட்டது. ஆனால் சீனா வழங்கிய கடன் தொகை, வெனிசூலாவின் எரிபொருள் மானியம், கியூபாவின் நிக்கல், செம்புக்கு சர்வதேச சந்தையில் ஏற்பட்ட அதிக கிராக்கி என்பன அந்நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சிகாண விடாமல் தாங்கிப் பிடித்ததுடன் வளர்ச்சியடையவும் வழிசமைத்துக் கொடுத்தன.

இதனடிப்படையில் பொருளாதார ரீதியாக பாரிய பின்னடைவு ஏற்படாதவரை சீர்திருத்த நடவடிக்கைகளில் ராவுல் காஸ்ட்ரோவின் அரசாங்கம் ஈடுபடப் போவதில்லை என்பதே தற்போதுள்ள யதார்த்த நிலையாகும்.

கியூபாவின் தலைமைத்துவ மாற்றத்தால் கொள்கை ரீதியாக மாற்றம் ஏற்பட்டுவிடுமென்றோ அல்லது மாற்றத்தை வலிந்து ஏற்படுத்த முடியும் என்றோ கருதி செயற்பாட்டில் இறங்கத் துடித்துக் கொண்டிருக்கும் சக்திகளின் எதிர்பார்ப்புகள் விரைவில் நிறைவேற்றப்போவதில்லை என்பதையே கியூபாவின் களநிலைவரம் சுட்டிக்காட்டுகின்றது.

புரட்சிக்கு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உதவும் போது ராவுல் காஸ்ட்ரோ ஒரு சீர்திருத்த வாதியாக விளங்குவார். சீர்திருத்தங்கள் அச்சுறுத்தலாக விளங்கினால் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்த விரும்பாதவராக அவர் காணப்படுவார். அதாவது புரட்சியின் வெற்றிக்கு சீர்திருத்தம் அச்சுறுத்தலென அவர் கருதுவாரென கனடாவின் றோயல் இராணுவ கல்லூரியை சேர்ந்த கியூப இராணுவ விடயங்கள் தொடர்பான நிபுணரான கால்கிளிபேர்க் என்பவர் கூறியிருப்பது மிகவும் பொருத்தமானதாக அமையுமென்பது எமது நம்பிக்கை.


நன்றி :- தினக்குரல்

Monday, February 25, 2008

தொடர்ந்து மூடி மறைக்கப்படும் அரச பயங்கரவாத அட்டூழியம்

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான பூநகரி, கிராஞ்சி மக்கள் குடியிருப்புகள் மீது கடந்த வெள்ளியன்று இலங்கை விமானப்படை விமானங்கள் குண்டுமாரி பொழிந்ததில் ஒரு தாய், அவரது இரண்டு குழந்தைகள், மற்றுமொரு குழந்தை, இரு ஆசிரியர் உட்பட எட்டுத் தமிழ்ப் பொதுமக்கள் பலியான கொடூரம் பற்றிய தகவல் தென்னிலங்கையில் இருட்டடிப்புச் செய்யப்பட்டு விட்டது. தமிழ்ப் பத்திரிகைகளைத் தவிர மற்றெல்லா ஊடகங்களும் இதனை அமுக்கி வாசித்துவிட்டன. தமிழர் தாயகம் மீதான அரச பயங்கரவாதத்தின் குரூர முகத்தை ஒளித்து மறைப்பதில் தமது இனவாதப் பண்பாட்டை அவை ஒன்றுபட்டு வெளிப்படுத்தி நிற்கின்றன.

போதாக்குறைக்கு விமானக்குண்டுவீச்சில் பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படவேயில்லை, ஏற்படவே மாட்டாது எனச் சாதிக்கின்றது அரசுப் படைத்தரப்பு.
விமானக்குண்டு வீச்சில் அங்கு யாரும் கொல்லப்பட்டிருந்தால் அவர்கள் நிச்சயம் விடுதலைப் புலிகளாகத்தான் இருப்பார்கள் என்றும் அடித்துக் கூறுகின்றார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார.

பூநகரியில் அரச பயங்கரவாதத்தின் கொடூரத்தை அப்படியே அம்பலப்படுத்துகின்ற புகைப்படங்களை தமிழ்ப் பத்திரிகைகள் மட்டுமே பிரசுரித்திருந்தன. அவை கூட புலிகளால் இட்டுக்கட்டித் தயாரிக்கப்பட்டவை என்று படைத்தரப்பால் கதை அவிழ்த்து விடப்படுகின்றது.
இலங்கையின் கள நிலைவரத்தை நேரில் கண்டறிவதற்காக ஐ.நாவின் உயரதிகாரியான ஐ.நாவின் அரசியல்விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதிச் செயலாளர் நாயகம் அங்கெலா கானே அம்மையார் கொழும்பில் வந்து நிற்கும் சமயத்தில் கூட, இத்தகைய அரச பயங்கரவாதம் சர்வ சாதாரணமாக அரங்கேறுவதும், அது பற்றிய தகவல் தென்னிலங்கைத் தரப்பால் திட்டமிட்டு மூடி மறைக்கப்படுவதும் இடம்பெறுகின்றன.

தன்னுடைய நாடு எனத் தான் உரிமை கோருகின்ற பிரதேசத்தின் மீது இத்தகைய அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்ட அராஜகத்துக்குப் பலனாகத்தான் கொசோவோவை இழக்கவேண்டிய துர்ப்பாக்கியம் சேர்பியாவுக்கு ஏற்பட்டது.

இவ்வகையான அரச பயங்கரவாதத்தை, சட்ட ரீதியான இறைமையுள்ள அரசு என்று தன்னைக் கூறிக்கொள்ளும் ஓர் நிர்வாகம் புரிவதை சர்வதேசம் சகித்துக் கொள்ளாது. மாறிவரும் சர்வதேச எண்ணப்போக்கு அதையே பிரதிபலித்து நிற்கின்றது.
கொசோவோ விடுதலை இராணுவத்தை முதலில் பயங்கரவாத அமைப்பாக சித்திரித்த மேற்குலகம், அந்தக் கொசோவோ மக்களுக்கு எதிராக ஆட்சியாளர்களின் அரச பயங்கரவாதம் தீவிரமடைந்து பெரும் அராஜகமாக விஸ்வரூபம் பெற்றபோது, அந்த விடுதலை இராணுவத்தையும் அதன் பிரிவினைப் போராட்டத்தையும் ஒரு தேசிய எழுச்சியாகவும்,தேசமாகவும் அங்கீகரித்து, தன்னைத் திருத்தி நெறிப்படுத்திக் கொண்டது.
இலங்கையிலும் அதனை ஒத்த நிலைமையே முற்றி வருவதை இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் ஐ.நாவின் உதவிச் செயலாளர் நாயகம் அங்கெலா கானே அம்மையார் உணரக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

பூநகரிக் கொடூரம் போன்ற விடயங்கள் சர்வதேச சமூகத்துக்கு ஒரு விவகாரத்தைத் தெளிவுபடுத்துகின்றன என்று நம்பலாம்.
வான் தாக்குதல் கொடூரத்தைக் கூட பேரழிவைக்கூட வெகு சாதாரணமாக, மிக "ஸிம்பிளாக', மூடி மறைக்கும் நிலையில்தான் கொழும்பு உள்ளது. எல்லா அரச பயங்கரவாதக் கொடூரங்களையும் புலிகளின் பொய்ப் பிரசாரம் அல்லது இட்டுக்கட்டிய வேலை என்று வகைப்படுத்திச் சமாளிக்கக் கொழும்பு முயல்கின்றது என்பதே அது.
எனவே, போரில் மோதும் தரப்புகளான புலிகளின் கருத்தையோ அல்லது அரசுத் தரப்பின் கயிறுகளையோ நம்புவதை விடுத்து, ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகம் தனது சுயாதீன அவதானிப்புகளை ஆய்ந்து அறிந்து பெறுவதற்கு முன்வரவேண்டும். அதன் மூலம் உண்மையை அம்பலப்படுத்துவதும் சிறுபான்மையினத்தவருக்கு எதிரான பேரினவாதக் கொடூரத்தை வெளிக்கொணர்வதும் சர்வதேசத்தின் பொறுப்பாகின்றது.
அப்படி உண்மைகளைக் கண்டறிவதற்கு முழு அதிகாரத்துடன் கூடிய கண்காணிப்புக்குழு இங்கு நிலைகொள்வது அவசியமாகும்.

ஆகவே, அத்தகைய ஐ.நா.கண்காணிப்புக் குழு இங்கு நிலைகொள்வதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று இலங்கை அரசு மறுத்துக்கொண்டிருக்கும்வரை
பூநகரிக் கொடூரங்கள் போன்ற அரச பயங்கரவாத அராஜகங்கள் தொடர்பான அரசுத் தரப்பின் ஏமாற்று மறுப்புக்களை சர்வதேசம் நம்பாது என்பதை தனது நிலைப்பாடாக சர்வதேச சமூகம் இலங்கைக்கு உணர்த்தவேண்டும்.

அப்படி உணர்த்துவதற்கு வாய்ப்பான சந்தர்ப்பமாக ஐ.நா. உதவிச் செயலாளர் நாயகத்தின் இலங்கைக்கான தற்போதைய விஜயம் அமைந்திருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தை அந்த வழியில் சரிவரப் பயன்படுத்துவாரா அவர்?

நன்றி :-உதயன்

Sunday, February 24, 2008

"கொசோவாவின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த புதிய உலகக்கோட்பாடு"

"துப்பாக்கிச் சன்னங்கள் எம்மை அச்சுறுத்த முடியாது. நீதியான யுத்தம் எம்மை வலுப்படுத்தும்'' சுதந்திரதேச பிரகடனம் வெளியிடப்பட்ட தினமன்று கொசோவா நகர வீதிகளில் எதிரொலித்த கோஷங்கள் இவை.

யார் இந்த கொசோவா மக்கள்? தனியரசை உருவாக்க, அவர்களை உந்திச் சென்ற வரலாற்றுப் பின்னணி என்ன? விரிவாகப் பார்க்கலாம்.

சோவியத் காலத்தில், அதன் ஆதரவு நாடாக விளங்கிய யூகோஸ்லாவியாவின் மிகச் சிறிய பிரதேசமாக இருந்தது இந்த கொசோவா மாகாணம்.

பல துண்டுகளாக யூகோஸ்லாவியா சிதறிய போது, இப்பிரதேச மக்களின் சுயநிர்ணயம் பற்றிய அரசியல் வெளிப்பாடுகள் முக்கியத்துவம் பெறவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் உலக மகா யுத்த காலத்திலிருந்து சோசலிச சமஷ்டிக் குடியரசாகவிருந்த யூகோஸ்லாவியாவின் தலைவராகத் திகழ்ந்த டிட்டோ, 1980ஆம் ஆண்டு இறக்கும்வரை இந்நாடு சோவியத்தின் பிராந்திய ஆளுமைக்குள் சிறைப்பட்டிருந்தது.

மூன்றாம் உலக நாடுகளை இணைத்து உருவாக்கப்பட்ட, அணி சேரா நாடுகளின் கூட்டமைப்புத் தலைவர்களில் ஒருவராகவிருந்த வரே இந்த டிட்டோ என்றழைக்கப்படும் ஜோசிப் புரொஸ் டிட்டோ.

1980 ஆம் ஆண்டு டிட்டோவின் மறைவிற்குப்பின்னர், சேர்பியத் தேசிய வாதமானது அன்றைய கம்யூனிஸ்ட் தலைவர் சுலோப்டான் மிலோசவிச்சினால் எழுச்சியுற்ற வேளையில், யூகோஸ்லாவியாவின் ஆறு குடியரசுகளும் அதிகளவு சுதந்திரத்தினை வலியுறுத்த ஆரம்பித்தன.

1990 ஆம் ஆண்டு சோவியத்தின் வீழ்ச்சியினால், அரசியல் மாற்றங்கள் அங்கு ஏற்படத் தொடங்கின.

அக்குடியரசுகளில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல்களில், குரோசியா, ஸ்லோவினியாவில் சுதந்திர தனியரசிற்கு ஆதரவான சக்திகளும் சேர்பியா, மொன்ரிநீக்ரோவில் ஒன்றிணைந்த யூகோஸ்லாவியாவிற்கு ஆதரவான சக்திகளும் தெரிவு செய்யப்பட்டன.

1991 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் திகதி ஸ்லோவினியாவும் குரோசியாவும் தனிநாடுகளாகத் தம்மை பிரகடனம் செய்தன.

மட்டுப்படுத்தப்பட்ட யுத்தத்தை மேற்கொண்ட சேர்பிய யூகோஸ்லாவிய இராணுவம் ஸ்லோவினியாவில் இருந்து தாமாக விலகிக்கொண்டது.

ஆயினும் குரோசியாவில் வசித்த சேர்பியர்களுக்கும், சேர்வியா இராணுவத்திற்குமிடையே பெரும்போர் வெடித்தது.

அதேவேளை, செப்டெம்பர் 1991இல், மசிடோனியாவின் சுதந்திரப் பிரகடனத்தை சேர்பியா எதிர்க்கவில்லை.

யூகோஸ்லாவியாவின் நில அமைப்பினை நோக்கினால் தற்போதைய சேர்பியாவின் எல்லையோடு நான்கு குடியரசுகளின் மசிடோனியா, மொன்ரிநிக்ரோ, பொஸ்னியா, குரோசியா என்பன அமைந்துள்ளன.

ஸ்லோவினியக் குடியரசானது சேர்பியாவின் எல்லையோடு அமையாமல், குரோசியாவின் வடபகுதியில் ஆஸ்திரியா, ஹங்கேரி நாட்டு எல்லைகளால் சூழப்பட்டதொரு தேசமாகும்.

இத்தகைய புவியியல் அமைப்பு சாதகமாக இல்லாத நிலையினை கருத்திற்கொண்டே ஸ்லோவினியாவிலிருந்து சேர்பிய இராணுவம் வெளியேறியதாக கூறப்படுகின்றது.

நவம்பர் 91இல் பொஸ்னியாவிலுள்ள சேர்பிய இன மக்கள், யூகோஸ்லாவியாவுடன் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுமென வாக்களித்தனர். அதேவேளை, நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் தனியரசுக் கோரிக்கை முன் வைக்கப்பட்டு, பெரும்பான்மையினர் அதற்கு ஆதரவளித்தனர். இருதரப்பினரும் வாக்களிப்புப் பெறுபேற்றினை சட்டவிரோதமானதொன்றாகப் பிரகடனம் செய்தார்கள்.

இந்த முரண்நிலையின் விளைவாக 1992 ஏப்ரல் 5 ஆம் திகதியன்று பொஸ்னியா தனியரசுப் பிரகடனத்தை வெளிப்படுத்தியபொழுது, ஏட்டிக்குப் போட்டியாக சேர்பியர்களும் சிறிப்ஸ்கா என்கிற தமது தேசத்தை பிரகடனம் செய்தனர். உடனடியாக பாரிய யுத்தம் வெடித்தது.

அகண்ட சேர்பியா என்கிற பேரினவாதச் சிந்தனை, இருதரப்புக்களுக்குமிடையே பாரிய மோதலை உருவாக்கி பேரழிவுகளை ஏற்படுத்தியது.

பொஸ்னியாவிலுள்ள சரஜேவாவில் 12000 மக்கள் கொல்லப்பட்டு, சிரபெரனிகா (குணூஞுஞணூஞுணடிஞிச்) வில் 8000 முஸ்லிம் மக்களின் படுகொலையூடாக இந்த அழிவுகளின் உச்ச வடிவம் நிகழ்த்தப்பட்டது.

இனச் சுத்திகரிப்பினூடாக தமது பிரதேச இறையாண்மையை நிலைநிறுத்த பெல்கிரேட் ஆட்சியாளர்கள் நடத்திய படுகொலைகள் சர்வதேச கண்டனங்களுக்குள்ளாகின.

விரிவடையும் இவ்வன்முறைகளை தணியச் செய்ய, ஐரோப்பிய யூனியனின் முயற்சியினால் மாநாடொன்று பிரான்சில் கூட்டப்பட்டபோது, ""ஐரோப்பிய யூனியன் நேட்டோ'' உடன்படிக்கை என்கிற சொற்பிரயோகத்தை ஏற்க மறுத்தனர் சேர்பியர்கள்.

இதேவேளை சேர்பிய அரசின் தென் மாநிலமாகவிருக்கும் கொசோவாவிலுள்ள அல்பேனியர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்தது சேர்பிய இராணுவம்.

இதன் எதிர்விளைவாக, பரந்துபட்ட வகையில், இன அழிப்பிற்கெதிரான தமது யுத்தத்தினை கொசோவா விடுதலை இராணுவம் ஆரம்பித்தது.

கொசோவாத் தலைநகரான பிரிஸ்ரினாவின் தென் பகுதியிலுள்ள ரகாக்கில் சேர்பிய துணை இராணுவக் குழுக்களால் 45 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த மிலேச்சத்தனமான கொலை நிகழ்வு மேற்குலகின் நேரடித் தலையீட்டிற்கான காரணியாகக் கூறப்படுகின்றது.

78 நாட்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நேட்டோப் படைகளின் விமானத் தாக்குதலையடுத்து, 1999 ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் தமது ஆக்கிரமிப்புப் படைகளை கொசோவாவிலிருந்து மீளப் பெற்றார் சேர்பிய அதிபர் சுலபோடன் மிலோசெவிச்.

அதேவேளை, 98 99 ஈராண்டு யுத்தத்திற்கு முன்பாக சேர்பிய பெருந்தேசிய இனவாத அழுத்தத்திற்கு ஈடுகொடுத்தவாறே மிதவாத அல்பேனிய இயக்கங்கள் தமது போராட்டத்தை தொடர்ந்தன.

ஆயினும் இன ஒதுக்கலும், அழிப்புகளும் விரிவடைய, வன்முறைப் போராட்டப் பாதையில் தேர்ந்தெடுத்த கொசோவா விடுதலை இராணுவம் (ஓஃஅ) தோற்றம் பெற்றது.

சேர்பிய காவல்துறை, இராணுவ நிலைகள் மீது தாக்குதல்களை ஆரம்பித்தனர்.

இந்த ஆயுத போராட்ட விடுதலை இயக்கத்தை முன்னின்று வழிநடத்தியவரே, கொசோவா நாடாளுமன்றில் தனியரசுப் பிரகடனம் செய்த பிரதமர் ஹாசிம் தாச்சி (ஏச்ண்டடிட் கூடச்ஞிடி) ஆவார்.

1999ஆம் ஆண்டு சேர்பிய ஆக்கிரமிப்பு இராணுவம், கொசோவாவிலிருந்து வெளியேற்றப்பட்டவுடன் நடைபெற்ற தேர்தலில் மிதவாத தலைவரான இப்ராகிம் ருகோவா விடம் தோல்வியுற்றார் ஹாசிம் தாச்சி.

2001 ஆம் ஆண்டுத் தேர்தலில் மறுபடியும் தோல்வியடைந்த ஹாசிம், கடந்த நவம்பரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தனது கொசோவõ ஜனநாயகக் கட்சியை ஆட்சியிலிருத்தி பிரதமரானார்.

மேற்குலக அனுசரணையில் பிரான்ஸில் நடந்த சமாதான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட ஹாசிம் தாச்சி, சுதந்திர கொசோவா தேசம் என்கிற கோட்பாட்டிற்கு மாற்றீடான எந்தவித சமரச உடன்பாட்டிற்கும் இணங்க மறுத்துவிட்டார்.

ஆயினும் பெல்கிரேட் ஆட்சியாளர்கள் தமது சேர்பிய இராணுவத்தை கொசோவாவிலிருந்து அகற்ற மறுத்த நிகழ்வே இப்பேச்சுவார்த்தை முறிவிற்கு அடிப்படைக் காரணியாக அமைந்தது.

அதேவேளை, 78 நாள் விமானத் தாக்குதல்களால் சேர்பியப் படைகள் வெளியேற ஐ.நா.சபை நிர்வாகமும், நேட்டோ அமைதிப்படைகளும், கொசோவாவில் நிலை நிறுத்தப்பட்டன.

அத்தோடு 2001 ஆம் ஆண்டு கொசோவாவின் முமுமையான நிர்வாக பரிபாலனத்தை ஐ.நா. சபை பொறுப்பேற்றுக்கொண்டது.

சர்வதேச நாடுகளின் நிர்வாகப் பிரசன்னமும் நேட்டோ படைகளின் பாதுகாப்பும் இருந்த வேளையில் 2004 மார்ச்சில் நடைபெற்ற இனக்கலவரம் கொசோவா நிலைமைøய மேலும் சிக்கலாக்கியது.

இதனிடையே சேர்பியா சார்பாக ரஷ்யாவும், கொசோவாவின் பக்கமாக மேற்குலகும் இணைந்து முன்னெடுத்த சமாதான பேச்சுவார்த்தையில் எதுவித இணக்கப்பாடுகளும் எட்டாத நிலையில், ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இது குறித்து விவாதிக்க ரஷ்யா முற்பட்டது.

சேர்பிய அரசின் சுயாட்சித் தீர்வினை முற்றாக நிராகரித்த கொசோவாத் தலைமை பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டினை வலியுறுத்தியது.

ஆனாலும், நவம்பர் 28, 2007 இல் செய்யவிருந்த தனியரசுப் பிரகடனத்தை, மேற்குலகின் அழுத்தத்தினால் இந்த வருட பெப்ரவரிக்கு ஒத்திவைத்தது கொசோவா அரசாங்கம்.

அதேவேளை அடுத்துவரும் ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்ட அமர்வில், இதுகுறித்து விவாதம் முன்னெடுக்கப்படுமெனவும், அதுவரை தனியரசுப் பிரகடனத்தை தவிர்க்குமாறு மேற்குலகால் ஆலோசனையும் வழங்கப்பட்டது.

அக்கூட்டத்தில், தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, பிரச்சினையை இழுத்தடிக்கும் போக்கினை இரஷ்யா முன்னெடுக்கலாமெனக் கருதியது கொசோவா.

இந்த விதமான சிக்கல்களிலிருந்து வெளியேற, பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு முன்பாகவே தமது கொசோவோ நாடாளுமன்றத்தினைக் கூட்டி பெப்ரவரி 17ஆம் திகதியன்று தனியரசுப் பிரகடனத்தை கொசோவோ வெளியிட்டது.

மேற்குலக நாடுகளின் ஒருமித்த ஆதரவினைத் திரட்டுவதற்கு முன்பாக வெளிவந்த தனியரசுப் பிரகடனம், பிளவுகளையும், அதிருப்தியையும் ஐரோப்பிய நாடுகளிடையே உருவாக்கியுள்ளதென மேற்குலகின் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஐ.நா. சபையின் சட்டதிட்டங்களிற்கு முரண்படும் வகையில் செய்யப்பட்ட ஒரு தலைப்பட்சமான தனியரசுப் பிரகடனம் இதுவெனத் தெரிவித்ததோடு அதனை அங்கீகரிக்க முடியாதெனக் கூறுகிறது ஸ்பானிய அரசு.

இதுபோன்று சைப்பிரஸ், ருமேனியா, ஸ்லோவாக்கியா, கிறீஸ் போன்ற நாடுகளில் தனியரசை அங்கீகரிக்க மறுக்கின்றன.

பாஸ்க் இன மக்களின் தனிநாட்டுப் போராட்டத்தினை முகங்கொள்ளும் ஸ்பானிய தேசத்தின் இந்நிலைப்பாடு குறித்து, ஆச்சரியமடைய கூடிய காரணிகள் எதுவும் கிடையாது.

இலங்கை இப்பிரகடனத்தை கண்டிப்பதாக வெளியுறவு அமைச்சர் றோஹித போகொல்லாகம கூறுகிறார். அவர் கூறிய விளக்கவுரை மிகவும் விசித்திரமானது.

அதாவது அந்நாட்டின் பெரும்பான்மை இன மக்கள் ஏற்றுக்கொள்ளாத விடயத்தை சர்வதேசம் அங்கீகரிக்கக் கூடாதென்பதே அவ்விளக்கவுரையின் பொழிப்புரையாகும். இவை எல்லாவற்றையும் சுயபாதுகாப்பு நலன் அடிப்படையில் எழும் அச்சத்தின் வெளிப்பாடுகளாகக் கருதலாம்.

இங்கு வெளிக்கிளம்பும் தனியரசுப் பிரகடன எதிர்வலைகளில் ஒரு விடயத்தை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

அதாவது சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை நசுக்க முனையும் அரசுகளே, கொசோவோ தனியரசுப் பிரகடனத்தை வன்மையாகக் கண்டிக்கின்றன என்கிற விடயத்தை புரிந்து கொள்வது அவசியமானதாகும்.

20 இலட்சம் மக்கள் வாழும் 10,800 சதுரகிலோ மீற்றர் பரப்பினை கொண்ட கொசோவோ நாட்டில், 3000 மக்கள் 98,99 இரு வருடப் போரில் கொல்லப்பட்டனர்.

25 வருட கால இலங்கை உள்நாட்டுப் போரில் 80,000 க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் அழிக்கப்பட்டுள்ளனர்.

45 பொதுமக்கள் கொசோவாவில் கொல்லப்பட்டபோது பெல்கிரேட் மீது விமõனத் தாக்குதல் தொடுத்த மேற்குலக நேட்டோ நாடுகள், வல்லிபுனத்தில் 62 சிறார்கள் கொல்லப்பட்டபோது மௌனித்திருந்தார்கள்.

ஆயினும் கொசோவோ தேசத்தின் புவியியல் கேந்திர முக்கியத்துவத்தோடு ஒப்பிடுகையில் இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசம் ஆசியப் பிராந்திய உணர்திறன் கூடிய மையம் பலம் வாய்ந்ததொன்றாகும்.

ஆசியாவின் கடல் வழித் தலைவாசலில் அமைந்துள்ள இம்மையப்புள்ளி சந்தைப்போட்டியின் விநியோகப் பாதையில் இருப்புக் கொள்வது வல்லாதிக்க நலன்களில் பிரிக்க முடியாத சமரசமற்ற போக்கினை உள்ளடக்கியுள்ளது.

சமாதான ஒப்பந்தத்தோடு சர்வதேசத் தளத்தில் கொண்டு செல்லப்பட்ட விடுதலைப் போராட்டம், ஒப்பந்த முறிவோடு இந்திய தலையீட்டு வட்டத்தினுள் சுழல ஆரம்பித்துள்ளது.

ஜே.வி.பி.யின் அனுசரணையில் இந்தியத் தளம் அகற்றப்படக்கூடிய சõத்தியப்பாடுகள் தென்படுவதால், அடுத்துவரும் புதிய பரிமாணத் தளமே இறுதி நிகழ்விற்குரிய பாதையை உருவாக்கும்.

அவ்வாறான புதிய அரசியல் களமானது எவ்வாறு செயற்பாடுமென்பதை இனி நடைபெறப்போகும் நிகழ்வுகளே தீர்மானிக்கும்.

நன்றி
வீரகேசரி

மன்னாரில் மையம் கொள்ளும் யுத்தம்

வன்னியில் மோதல்கள் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளன. விடுதலைப் புலிகளின் பகுதிகளினுள் நுழைந்துவிட படையினர் கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். சகல வளங்களுடனும் புலிகளுக்கெதிரான போரைத் தீவிரப்படுத்தினாலும் விடுதலைப் புலிகளின் பலத்த எதிர்ப்பால் படையினரின் வெற்றி சாத்தியப்படவில்லை. பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டிய நிலையில் படையினர் உள்ளனர்.

வன்னிக் களமுனையில் ஏதாவது பகுதியை கைப்பற்றிவிட வேண்டுமென்ற நோக்கில் கடந்த சில வாரமாக இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. தினமும் பாரிய தாக்குதல்கள் நடைபெறுகின்றன. புலிகள் தங்கள் நிலைகளிலிருந்து பின் வாங்குகிறார்கள், தினமும் ஐம்பதிற்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்படுகிறார் களென படையினர் கூறிவந்தாலும் களமுனையில் சிறுசிறு மாற்றங்களே ஏற்படுகின்றன.

வன்னியில் வவுனியா, மன்னார் மற்றும் மணலாறு களமுனைகளில் இந்த மோதல்கள் நடைபெறுகின்றன. வவுனியா மற்றும் மணலாறு அடர்ந்த காட்டுப் பகுதிகளைக் கொண்ட களமுனைகள். இவை, மன்னார் கள முனையிலிருந்து மாறுபட்டவை. சிறுசிறு பற்றைக்காடுகளும் பெரும்பாலும் பொட்டல் வெளிகளையும் கொண்டது மன்னார் களமுனை. இது விடுதலைப் புலிகளை விட படையினருக்கு சாதகமாயிருந்தாலும் மன்னாருக்கு வடக்கே கடற்கரையோரப் பிரதேசம், பெரும் யுத்தத்திற்கு சாதகமற்றதொரு பகுதியாகும்.

வவுனியாவிலும் மணலாறிலும் பலமுறை முன்நகர்வு முயற்சிகளை மேற்கொண்டும் அது சாத்தியப்படாது போனதால் தற்போது படையினர் மன்னார் களமுனையில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்தக் களமுனையில்தான், இராணுவத்தின் மிகப் பலம் வாய்ந்த 58 ஆவது படையணி நிலைகொண்டு பாரிய முன் நகர்வு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

யுத்தத்திற்கே சாதகமற்றதொரு களமுனையில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பெரும் போர் நடைபெறுகிறது. இலங்கைத் தீவை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆக்கிரமித்த போது கூட அவர்கள் மன்னார் தீவை தங்கள் வசம் வைத்திருந்ததுடன் மன்னார் பெரு நிலப் பரப்பின் வாசல்வரை (மாந்தை) வந்து நின்றார்களே தவிர அதற்கப்பால் வடக்கே கரையோரப் பகுதிகளுக்குச் செல்லவில்லை.

யாழ்.குடாநாட்டுக்கான தரை வழிப் பாதையை மூடியுள்ள அரசு அதற்கு மாற்றாக மன்னார் - பூநகரிப் பாதையை திறக்க முயல்கிறது. மன்னார் தீவைத் தாண்டி வடபகுதி நோக்கி கரையோரமாகச் செல்லும் இந்தப் பாதையை கைப்பற்றி விட அரசு தீவிர அக்கறை காட்டுகிறது. அதேநேரம், மன்னார் - பூநகரிப் பாதையை கைப்பற்றி விட்டால், தமிழகத்திற்கும் வன்னிக்குமிடையிலான போக்குவரத்துக்களை தடுத்து விடமுடியுமெனவும் அரசு கருதுகிறது.

மன்னாரிலிருந்து விடத்தல்தீவு வரையான கரையோப் பகுதி பொட்டல் வெளிகளிலும் நின்று கொண்டதுடன் சதுப்பு நிலப் பிரதேசமானது. பெரும்பாலும் பற்றைக் காடுகளைக் கொண்டது. குடி நீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவும் பிரதேசம். டாங்கிகள், கவச வாகனங்கள் போன்றவற்றுடன் இந்தக் களமுனையில் புலிகளுக்கெதிரான போரில் வெற்றிகொண்டு விடலாமென படைத் தரப்பு கருதுகிறது. ஆனால், படையினர் ஒருவேளை இந்தப் பகுதிகளைக் கைப்பற்றிவிட்டால் அங்கு நிலைகொள்வதில் படையினர் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இவ்வாறானதொரு நிலைமை இருக்கின்ற போதும் தற்போதைய நிலையில் அது புலிகளை விட படையினருக்கே சாதகமானது. பற்றை காடுகளுக்குள்ளும் பொட்டல் வெளிகளுக்குள் நின்றும் முறியடிப்புச் சமரை மேற்கொள்வது சாதகமற்றது. எனினும் இந்தச் சாதகமான நிலையை பயன்படுத்தி மன்னார் கரையோரப் பகுதியில் படையினரால் முன்னேற முடியவில்லையென்றால், யுத்தத்திற்கும் தங்களுக்கும் சாதகமற்றதொரு களமுனையில் புலிகள் எந்தளவிற்கு பதில் தாக்குதலை மேற்கொள்கிறார்களென்பதனை இங்கு கவனிக்க வேண்டும்.

1990 களின் பிற்பகுதியில் மன்னாரில் படையினர் மேற்கொண்ட `ரணகோஷ' 1 முதல் 5 வரையான படை நடவடிக்கை மூலம் இராணுவத்தினர் மன்னாருக்கு வடக்கே பூநகரி வீதியில் பள்ளமடுவரை முன்னேறியிருந்தனர். இந்தப் படை நடவடிக்கைகளுக்கு விடுதலைப் புலிகள் கடும் எதிர்தாக்குதலை நடத்தவில்லை. ஆனாலும் பள்ளமடுவரை வந்த படையினரால் அந்தப் பகுதிகளில் நிலைகொள்ள முடியவில்லை. சாதகமற்றதொரு களமுனையிலிருந்து படையினர் விலகும் நிலையேற்பட்டது.

மன்னாரிலிருந்து வடக்கு நோக்கிய இந்தக் கரையோரப் பகுதிகளை படையினர் கைப்பற்றினாலும் அவர்களால் அங்கு தொடர்ந்தும் நிலைகொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பின்தளங்கள், வளங்கள், விநியோகமின்றி சாதகமற்றதொரு களமுனையில் படையினர் பெரும் போரை நடத்த வேண்டியுள்ளது.

யுத்தத்திற்கு சாதகமற்ற இந்தக் கரையோரப் பகுதியை படையினர் கைப்பற்றினால் அது பின்னர் புலிகளுக்கு சாதகமாகிவிடும். கரையோரப் பகுதிகளில் படையினர் நிலைகொள்ள ஏனைய பகுதிகளில் பெரும் பின்தளமிருப்பதால் புலிகளால் படையினர் மீது பாரிய ஊடறுப்புத் தாக்குதல்களை மேற்கொள்ள முடியும். அத்துடன் இந்தக் கரையோரப் பகுதியை மீண்டும் அவர்களால் கைப்பற்றக் கூடிய வாய்ப்பும் உருவாகும். இந்த நிலைமையை படையினரும் நன்கறிவர். இதனால்தான் ஒரேநேரத்தில் வவுனியாவிலும் மன்னாரிலும் பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொண்டு இரு பிரதேசங்களையும் கைப்பற்றிச் செல்லும் போது கரையோரத்தை அண்டிய பெரும் பிரதேசங்களும் தங்கள் வசமாகிவிட்டால் மன்னாருக்கும் விடத்தல் தீவுக்குமிடையே கரையோரப் பகுதியை தக்கவைக்க முடியுமென படையினர் கருதுகின்றனர்.

ஆனாலும் வவுனியா களமுனை படையினருக்கு சாதகமற்றதொன்றாகவேயுள்ளது. அங்கு படையினர் பல முன்நகர்வு முயற்சிகளை மேற்கொண்ட போதும் அதனை புலிகள் முறியடித்துள்ளனர். படையினர் இங்கு தங்கள் உத்திகளையும் தந்திரோபாயங்களையும் மாற்றி மாற்றி முன்நகர்வு முயற்சிகளை பல தடவைகள் மேற்கொண்டபோதும் இதுவரை எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

சிறுசிறு அணிகளாக தங்கள் முன்னரங்க நிலைகளிலிருந்து புறப்படும் படையினர் அடர்ந்த காடுகளினுள் புலிகளின் முன்னரங்கப் பகுதிகளினுள் ஊடுருவி புலிகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு புலிகளுக்கு பலத்த உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி அதன் மூலம் அவர்கள் பின் நகர வேண்டிய கட்டாய நிலையேற்படும் போது, கடும் மோதல்கள் எதுவுமின்றி முன்னேறி வந்து புலிகளின் முன்னரங்க நிலைகளைக் கைப்பற்றுவதே படையினரின் உத்தியாகவும் தந்திரமாகவுமிருந்தது.

ஆரம்பத்தில் படையினரின் இந்த உத்தி அவர்களுக்கு சாதகமாயிருந்த போதும் பின்னர் படையினரின் உத்தியை அறிந்த புலிகள் அதற்கேற்ப தங்கள் தாக்குதல் தந்திரத்தை மாற்றியமைக்கவே படையினரின் தந்திரம் பெரிதும் பலிக்காமல்போனது. எனினும் தங்களுக்குச் சாதகமற்ற வவுனியா களமுனையில் தொடர்ந்தும் இவ்வாறான உத்திகளைப் படையினர் பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் தாங்கள் பெருவெற்றிகளைப் பெற்று வருவதாகவும் புலிகள் பெரும் பின்னடைவுகளைச் சந்தித்து வருவதாகவும் படையினர் கூறுகின்றனர்.

ஆனாலும் வவுனியா கள முனையில் புலிகளின் கண்ணிவெடிகள், மிதிவெடிகள், பொறி வெடிகள் படையினருக்கு தினமும் பலத்த சேதங்களை ஏற்படுத்துகின்றன. பாரிய படைநகர்வில் ஈடுபடாது சிறுசிறு படையணிகளாக புலிகளின் பகுதிகளுக்குள் ஊடுருவும் படையணிகளே இவற்றில் அதிகம் சிக்கி பலத்த இழப்புக்களைச் சந்திக்கின்றன. இதைவிட இந்தக் களமுனையில் புலிகளின் `சினைப்பர் அணி'யைச் சேர்ந்த பலரும் களமிறங்கியுள்ளதால் அவர்களாலும் படையினர் பலத்த இழப்புக்களை சந்தித்துள்ளனர்.

வவுனியா களமுனை இவ்வாறிருக்கையில் மன்னாரில் படையினர் தினமும் பாரிய முன்நகர்வுகளை மேற்கொண்டு பெருமளவு நிலப்பிரதேசங்களைக் கைப்பற்றி வருவதாக படையினர் கூறுகின்றனர். ஆனால், வடக்கில் போர் தொடங்கி ஒரு வருடமாகும் நிலையில் படையினரால் சுமார் ஆறு மைல் தூரம் வரையே செல்ல முடிந்துள்ளது. மன்னாரில் போர் தொடங்கிய போது படையினர் இருந்த இடமும் தற்போது அவர்கள் இருக்குமிடத்திற்கும் இடையிலான தூரம் வெறும் ஆறு மைல்தான்.

இதற்காக அவர்கள் சந்தித்த இழப்புகள் மிக மிக அதிகம். கொல்லப்பட்ட படையினரை விட புலிகளின் தாக்குதல் உத்திகளால் படுகாயமடைந்து அவயவங்களை இழந்து மீண்டும் களமுனைக்கு திரும்ப முடியாது சென்ற படையினரின் எண்ணிக்கை மிக அதிகம். மிகப்பெருந்தொகை நிதியையும் செலவிட்டுள்ளனர்.

புலிகளுக்கு போரியல் சாதகமற்றதொரு பகுதியில் மிகப்பெரும் படை பலத்துடன் களமிறங்கிய படையினர் இந்தக் காலப்பகுதியில் பல மைல் தூரம் முன் நகர்ந்து புலிகள் வசமிருக்கும் பல பகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும். ஆனால் அது அவர்களால் முடியவில்லையென்றால், வன்னிக் களமுனை அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு மாறாகவேயுள்ளது தெளிவாகிறது.

மன்னார் களமுனையிலேயே கடந்த இரு மாதங்களாக கடும் சமர் நடைபெறுகிறது. கடந்த ஜனவரி மாதம் இங்கு 840 புலிகளும் இந்த மாதத்தில் முதல் மூன்று வாரத்தில் 675 புலிகளும் கொல்லப்பட்டுள்ளதாக படைத்தரப்பு கூறுகின்றது. இராணுவத்தினர் வெளியிடும் இந்தத் தகவல் அப்பட்டமான பொய்யென்பதை பல இராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். இராணுவத்தினரின் இந்த எண்ணிக்கை உண்மையானதென்றால், இன்று இலங்கையில் தமிழ் மக்கள் எவருமே இருந்திருக்க முடியாதெனக் கூறும் ஆய்வாளர்களும் உள்ளனர்.

களமுனையை பார்த்தால் படையினர் கூறுவதில் எதுவித உண்மையுமில்லையென்பது தெரியவரும். கெரில்லா பாணியில் பதில் தாக்குதலை நடத்தும் அமைப்பொன்றுக்கு எதிராக மரபு வழிப் படையொன்று தாக்குதலை நடத்தி வருகிறது. பாரிய முன்நகர்வுகளற்ற போது முன்னரங்க நிலைகளில் மிகக் குறைந்தளவு எண்ணிக்கையான புலிகளே நிலை கொண்டிருப்பர். படையினர் தினமும் மேற்கொள்ளும் சிறுசிறு தாக்குதல்களின் போது புலிகளுக்கு இழப்புக்கள் ஏற்பட்டால் அதில் ஒரு சிலரே கொல்லப்படுவர். இராணுவத்தினர் முன்னரங்க நிலைகளில் மோதல்களில் ஈடுபடுவது போல் கெரில்லா அணிகள் நூற்றுக் கணக்கில் ஆட்களை நிறுத்தி போரிடுவதில்லை.

பாரிய மோதல்கள், படையினரின் பாரிய முன்நகர்வுகள் நடைபெறும் போதே புலிகளும் தங்கள் படையணிகளை முன்னரங்க நிலைகளில் அதிகளவில் நிறுத்துவர். இதன் போது புலிகள் இழப்புக்களை சந்திக்கலாம். ஆனால் பாரிய மோதல்கள் நடைபெறாத நாட்களில் இடம்பெறும் சிறு சிறு மோதல்களில் தினமும் நாற்பது, ஐம்பது புலிகள் கொல்லப்படுவதாகக் கூறப்படுவது மிகப்பெரும் மிகைப்படுத்தலென்பதுடன் புலிகள் இந்தளவு தொகையில் கொல்லப்படுகிறார்களென்பதை படையினர் எவ்வாறு கண்டறிகின்றனரென்பதும் பெரும் கேள்விகளை எழுப்புகிறது.

வவுனியா, மன்னாரை விட மணலாறு மற்றும் யாழ்.குடாபகுதியிலும் படையினர் தினமும் பலத்த தாக்குதல்களையும் முன்நகர்வு முயற்சிகளையும் மேற்கொள்கின்றார்கள். எனினும் அந்த முயற்சிகளில் கூட எதுவித பலனும் கிடைப்பதாகத் தெரியவில்லை. அங்கு படையினரால் முன்நகர முடியாதிருப்பதுடன் இழப்புக்களையும் சந்தித்து வருகின்றனர். இவ்விரு களமுனைகளிலும் புலிகளின் பதில் தாக்குதல்கள் மிகக் கடுமையாகவேயுள்ளன.

மன்னாரிலேயே படையினர் தற்போது தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இங்கு 58 ஆவது படையணியே முன் நகர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இராணுவத்தைப் பொறுத்தவரை 58 ஆவது படையணியே பெரும்பாலான படைநடவடிக்கைகளில் முன்நகர்வு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதுடன், ஈடுபட்டும் வருகிறது. விசேட பயிற்சிகளைப் பெற்ற கமாண்டோக்கள் 58 ஆவது படையணியிலேயே உள்ளனர். இவர்களே வன்னியிலும் புலிகளின் பகுதிகளுக்குள் நுழையும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

58 ஆவது படையணி தற்போது மன்னார் - பூநகரி வீதியில், வடக்கேயுள்ள விடத்தல்தீவை நோக்கி முன்நகரும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதற்காக தொடர்ந்தும் பாரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் படையணி விடத்தல்தீவை நோக்கி முன்நகரும் போது, மன்னாருக்கு வடக்கேயிருந்து மடுத் தேவாலயப் பகுதியை கைப்பற்றும் நோக்கில் நகரும் 57 ஆவது படையணியுடன் இணைவதே இவர்களது நோக்கமாகும். இதற்காக 57 ஆவது படையணியும் மடுப் பகுதியில் தொடர்ந்தும் முன்ேனற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு வன்னிக்கள முனையில் நாளுக்கு நாள் மோதல்கள் தீவிரமடைகின்றன. வன்னியை முழுமையாக ஆயிரக்கணக்கான படையினர் இரு புறங்களிலும் சுற்றிவளைத்தவாறு உள்நுழைய முயல்கின்றனர். வன்னியின் ஏனைய இரு புறங்களிலும் கடல் சூழ்ந்துள்ளது. யாழ். குடாவிலிருந்தும் வவுனியா மற்றும் மன்னாரிலிருந்துமே தங்கள் முன்நகர்வு முயற்சியில் படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

புலிகளை இந்த வருடத்திற்குள் முழுமையாக அழித்துவிடப்போவதாகவும் வன்னியை முழுமையாக மீட்டுவிடப் போவதாகவும் சூளுரைத்தவாறு அரசும் படைத்தரப்பும் இந்தப் பெரும் போரை நடத்துகின்றன. எனினும் புலிகளும் இந்தப் பெரும் போரை தொடர்ந்து சந்தித்தே வருகின்றனர். கடந்த பல வருடங்களாக இல்லாதளவிற்கு அரசு இந்தப் போரையும் பிரசாரப் போரையும் முன்னெடுக்க முயல்கிறது. இதற்காக தனது அனைத்து வளங்களையும் அரசு செலவிட்டும் வருகிறது.

விமானத் தாக்குதல், ஷெல் தாக்குதல், பல்குழல் ரொக்கட் தாக்குதல், மோட்டார் தாக்குதலெனத் தினமும் பலலட்சம் ரூபா பணத்தை செலவிட்டு இந்தப் போரை நடத்துகின்ற போதும் அரசுக்கு எந்தளவுக்கு பலன் கிடைக்கிறதென்பது கேள்விக்குறியாகவேயுள்ளது. புலிகள் வசம் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிருப்பதை எப்படியாவது இல்லாது செய்வதன் மூலம் இந்தப் போராட்டத்திற்கு முடிவு கட்டிவிட அரசு முனைகிறது.

நன்றி:- -விதுரன்-

ஊடகப் போக்கிரித்தனம்

"விமானத் தாக்குதலில் யாராவது கொல்லப்பட்டிருந்தால், அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந் தவர்கள்தான்.
""திட்டவட்டமாக விடுதலைப் புலிகளின் இலக்கு களைத்தான் தாக்குகிறோம். உறுதியான தகவல்களின் அடிப்படையில்தான் அவை மேற்கொள்ளப்படுகின்றன.
""எவ்வித ஆதாரமும் இல்லாமல் சில போலியான மாற் றப்பட்டபுகைப்படங்களை வெளியிட்டு விமானத் தாக் குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று காட்ட முனைகிறது விடுதலைப் புலிகள் இயக்கம்.''
இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இவ்வாறு கூறியிருக்கின்றார்.
பூநகரியில் மூன்று சிறுவர்கள் உட்பட எட்டு அப்பாவிப் பொதுமக்கள் இலங்கை விமானப் படையின் கண்மூடித் தனமான குண்டு வீச்சில் கொல்லப்பட்டமை தொடர்பாக லண்டனிலிருந்து சிங்கள பி.பி.ஸி கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியிருக்கின்றார்.
நேற்றுமுன்தினம் பூநகரியில் விமானப் படை மேற் கொண்ட கொடூரத்தில் எட்டு அப்பாவிகள் பலியாகி பத்துப் பொதுமக்கள் காயமடைந்தமை பற்றிய தகவல்கள் கொழும் பிலிருந்து வெளியாகும் ஊடகங்களில் தமிழ்ப் பத்திரிகை களில் மட்டுமே இடம்பெற்றிருந்தன.
"தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனுக்கு விமானக் குண்டு வீச்சில் காலில் காயம்', "பிரபாவின் நிலைமை மோசம்', "பிரபாவின் மனைவி வன் னியிலிருந்து புறப்பட்டு தமிழ் நாட்டில் தஞ்சம்' என் றெல் லாம் தகவல்களை எடுத்து செய்தி வெளியிடும் கொழும்பு ஊடகங்களுக்கு
"நோய் வாய்ப்பட்டு சாவின் விளிம்பில் பிரபாகரன்' என்று தொடங்கி, பிரபாவின் குருதி அழுத்த அளவு இது, குருதியில் வெல்லத்தின் வீதம் இவ்வளவு அவருக்கு இரத்தக் கொதிப்பு, கண்பார்வை மங்கல் என்பது உட்பட நெருங்க முடியாத பிரபாவின் மருத்துவ அறிக்கைகளை ஏதோ பக்கத் தில் தமது மருத்துவரை வைத்து, பரிசோதித்து அறிந்து கொண்ட மாதிரித் தகவல்களை வெளியிடும் கொழும்புப் பத்திரிகைகளுக்கு
பிரபாகரனின் படுக்கை அறை எங்கிருக்கின்றது, மல சல கூடம், குளியல் அறை, சாப்பாட்டு அறை என்பன எங்கி ருக்கின்றன என்பதுவரை சகலதையும் அத்துப்படியாக அறிந் தவை போல வரைபடங்களோடு பாதுகாப்பு இல்லத்தின் விவரங்களை அம்பலப்படுத்துகின்ற மோப்ப சக்தியுள்ள கொழும்பு இதழ்களுக்கு
பூநகரிக் கொடூரம் தெரியவரவில்லை அல்லது அதனை உறுதிப்படுத்தி, தகவல் பெறமுடியவில்லை.
அப்பாவிகளுக்கு எதிரான இத்தகைய கொடூரங்கள் பற் றிய தகவல்கள் தன்னும் தென்னிலங்கை மக்களுக்கு சென் றடைவதைத் திட்டமிட்டே தடுக்கும் தமது நாசகாரப் பணி மூலம் தென்னிலங்கை அரசை மட்டுமல்ல, தென்னிலங்கை மக்களையே இனப்பாகுபாட்டுக் கொடூரத்துக்கு நெட்டித் தள்ளித் தூண்டுகின்றன கொழும்பு ஊடகங்கள்.
அரச கெடுபிடிகளுக்குப் பயந்து அல்லது தென்னி லங்கை இனவாதத்தைத் தாமும் வரித்துக் கொண்ட கார ணத்தால் தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதத்தை மூடி மறைத்து, ஒழிப்பதற்கு துணை போகும் பெரும் வர லாற்றுக் குற்றத்தைத் தென்னிலங்கை ஊடகங்கள் இழைத்து வருகின்றன.
ஆனால் அத்தகைய ஊடகங்களும் அவற்றை வழி நடத்து வோரும் நினைப்பது போல அல்லது நம்புவது போல மூடி மறைத்து சப்புக்கட்டுக் கட்டக்கூடிய விடயங்கள் அல்ல இவை.
இராணுவப் பேச்சாளர் வேண்டுமென்றால் அரசிடம் தாம் வாங்கும் சம்பளத்துக்காக முழுப் பூசணிக்காயை சோற்றுக் குள் மூடி மறைக்க முயலலாம். ஆனால் நவீன தொழில் நுட்ப வசதிகளும் நுணுக்கமான தொடர்பாடல் முறைமை களும் விருத்தி அடைந்துள்ள இக்காலகட்டத்தில் இத் தகைய கொடூரங்களை வாய் ஜாலம் மூலமாகவோ, ஊடக மறைப்பு மூலமோ ஒளித்து விட முயல்வது சூரியனை சாக் குப் போட்டு மூடிமறைத்து ஒளித்துவிட எத்தனிப்பதற்கு ஒப்பானதாகும்.
தென்னிலங்கை ஊடகங்களின் இத்தகைய பக்கச் சார் புப் போக்கு மூலம் அரச பயங்கரவாதம் பற்றிய உண்மை கள் தென்னிலங்கை அப்பாவிச் சிங்களவர்களின் மனதை எட்டாமல் தடுக்கலாம்.
ஆனால், சர்வதேச மட்டத்தில் இத்தகைய விடயங் களைச் சிந்தித்துப் பார்த்து, மதிப்பிட்டு, முடிவுகளைத் தீர் மானிக்கும் தரப்புக்களை இத்தகவல்களும் உண்மைகளும் எட்டாமல் தடுத்து விடவே முடியாது.
எனவே, இவ்விடயங்களைஒட்டி தெற்கு மக்கள் ஏதோ ஓர் உலகில் கற்பனை எண்ணத்தில் சஞ்சரித்துக் கொண் டிருக்க உலகம் இவ்விடயம் குறித்துப் புரிந்து கொள்ளும் யதார்த்தமும், கள நிலைமைகளும் வேறாக இருக்கப் போகின்றன.
அதன் விளைவு தென்னிலங்கைக்குத்தான் இறுதியில் பாதகமாக அமையும்.
ஆகவே, விமானக் குண்டுவீச்சுக் கொடூரம் போன்ற மோசமான அரச பயங்கரவாதத்தை மூடி மறைக்கும் முயற்சி மூலம் முழு உலகுக்குமே காதில் பூச்சுற்றலாம் என்று தென் னிலங்கை ஊடகங்கள் கருதினாலும் கூட, உண்மையில் தமது தெற்கு மக்களைத் தவறாக வழி நடத்தி அவர்களின் காதில் பூச்சுற்றும் கைங்காரியத்தையே அவை மேற்கொள் கின்றன.
இத்தகைய அரச பயங்கரவாதச் செயல்களின் ஒட்டு மொத்த விளைவு, கொசோவோ பூகம்பம் போல வெடிக்கும் நிலையை ஒரு நாள் எட்டும்போதுதான், இந்த ஒளிப்பு மறைப்புகளின் பெறுபேறையும் ஊடகப் போக்கிரித்தனத் தின் விளைவையும் தென்னிலங்கை புரிந்துகொள்ளும் நிலைமை ஏற்படும்.
ஆனால் அவ்வேளையில் தென்னிலங்கை தனது கடைசி பஸ்ஸையும் தவற விட்டுவிட்டு விழி பிதுங்கி நிற்கும். அது தான் நடக்கப் போகின்றது.

நன்றி:-உதயன்

Saturday, February 23, 2008

ஜே.வி.பி. முன்னெடுக்கும் இந்திய எதிர்ப்புப் போர்....

இந்தியாவுக்கு எதிரான புதிய போராட்டம் ஒன்றை ஜே.வி.பி. ஆரம்பித்திருக்கிறது. இலங்கையில் அதிகரித்துவரும் இந்தியத் தலையீடு உருவாக்கியிருக்கும் ஆபத்தான நிலைமைகளையிட்டு மக்களுக்கு விளக்கமளிக்கும் நோக்கத்துடனேயே இந்தப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்திருக்கின்றது. அண்மைக் காலம் வரையில் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான நட்புறவைப் பேணிவந்த ஜே.வி.பி. திடீரென இந்தியாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கக் காரணம் என்ன என்பதும் இதன் மூலம் ஏற்படக்கூடிய அரசியல் மற்றும் பொருளாதாரத் தாக்கங்கள் எத்தகையவை என்பதும் இன்று கேள்விக்குரிய விடயங்களாக இருக்கின்றன.
இந்தியாவுக்கு எதிராக ஜே.வி.பி. திடீரென போர்க்கொடி தூக்கியிருப்பதற்கு இரண்டு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று 13 ஆவது திருத்தத்துக்கமைய இனநெருக்கடிக்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என இந்தியாவே கொழும்புக்கு அழுத்தம் கொடுத்திருப்பதாக ஜே.வி.பி. கருதுகின்றது. வடக்கு, கிழக்குக்கு மாகாண சபைகளை அமைத்துக்கொள்வது பிரிவினைக்கான முதலாவது படியென்றே ஜே.வி.பி. கருதுகின்றது. இரண்டாவதாக தற்போதைய சூழ்நிலைகளைப் பயன்படுத்தி இலங்கையில் இந்தியா மேற்கொண்டுவரும் பாரியளவிலான முதலீடுகள், வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியில் இந்தியாவின் ஆதிக்கத்தை மேலோங்கச் செய்வதாக அமைந்துவிடும் என ஜே.வி.பி. கருதுகின்றது. குறிப்பாக திருமலைப் பகுதியில் தனது கேந்திர நலன்களை நோக்கமாகக் கொண்டு இந்தியா முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் அந்த துறைமுக நகரில் இந்தியாவின் செல்வாக்கை மேலோங்கச் செய்திருக்கின்றது.

ஜே.வி.பி. இந்திய எதிர்ப்புக் கோஷத்தை திடீரென முன்வைத்திருப்பதற்கு இந்த இரண்டும்தான் காரணமாகக் கூறப்படுகின்றது. அநுராதபுரத்தில் தனது முதலாவது `இந்திய எதிர்ப்பு' பேரணியை நடத்திய ஜே.வி.பி. காலி, கண்டி என தனது போராட்டத்தை ஏனைய முக்கிய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கத் தீர்மானித்திருக்கின்றது. ஆக, ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில் இன்றைய காலகட்டத்தில் அவர்களுடைய அரசியல் இருப்பைப் பாதுகாப்பதற்கு ஏதோ ஒரு வகையில் இந்திய எதிர்ப்புவாதத்தை கைகளில் தூக்கவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் அதற்கு ஏற்பட்டிருக்கின்றது. இந்தப் போராட்டம் எந்தளவுக்கு தொடரும் என்பதும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் எவ்வாறானதாக இருக்கும் என்பதும்தான் இன்று ஆராயப்பட வேண்டிய விடயங்கள்!

அண்மைக் காலங்களில் இந்தியாவுடனான நட்புறவை ஜே.வி.பி. வலுப்படுத்திக் கொண்டிருந்த போதிலும் கூட, " இந்திய எதிர்ப்பு வாதம்" ஜே.வி.பி.யின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகவே இருந்துள்ளது. 1971 மற்றும் 1989 காலப் பகுதியில் நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரண்டு ஆயுதப் புரட்சிகளை ஜே.வி.பி. மேற்கொண்டிருந்தது. இந்த இரண்டு புரட்சிகளிலுமே ஜே.வி.பி. தோல்வியடைந்திருந்தாலும் இந்திய எதிர்ப்புவாதம் என்பது இந்தப் புரட்சிக்கான அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாக இருந்துள்ளது. இந்தப் புரட்சிகளுக்கான தயாரிப்புக்களில் ஈடுபட்ட ஜே.வி.பி., அதற்காக இளைஞர், யுவதிகளுக்கு இரகசிய வகுப்புக்களை நடத்தியது. இந்த இரகசிய வகுப்புகளில் ஐந்து பாடங்கள் போதிக்கப்பட்டன. இந்த ஐந்து பாடங்களில் ஒன்றாக `இந்திய விஸ்தரிப்பு வாதம்' என்ற தலைப்பில் விரிவுரைகள் நடத்தப்பட்டன.

இலங்கையை ஆக்கிரமிப்பதுதான் இந்திய வெளியுறவுக் கொள்கையின் பிரதான அம்சம் எனவும் அதனை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் தொடர்பாகவுமே இந்த விரிவுரைகளின்போது முக்கியமாக ஆராயப்பட்டது. இந்தியா தொடர்பிலான ஒரு அச்சத்தை சிங்களவர்கள் மத்தியில் வளர்ப்பதற்கு இது பயன்படுத்தப்பட்டது. 1987 இந்திய- இலங்கை உடன்படிக்கையைத் தொடர்ந்து இந்தியப்படை வடக்கு, கிழக்கு பகுதிகளில் நிலை கொண்டபோது, இந்தியா தொடர்பிலான அச்சத்தைப் பயன்படுத்தியே தமது போராட்டத்தை ஜே.வி.பி. துரிதப்படுத்தியிருந்தது.

விடுதலைப் புலிகள் தொடர்பிலான தமது அணுகுமுறையை 1990 களின் பிற்பகுதியில் இந்தியா மாற்றிக்கொண்டபோது ஜே.வி.பி.யும் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டைத் தளர்த்திக்கொண்டது. ஆக, இன நெருக்கடி தொடர்பிலான இந்தியாவின் அணுகுமுறைதான் இந்தியா தொடர்பிலான ஜே.வி.பி.யின் நிலைப்பாட்டைத் தீர்மானிக்கும் காரணியாக இருந்துள்ளது எனக்கூறலாம். இன நெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்கான மத்தியஸ்த முயற்சிகளில் நோர்வே இறங்கிய போது அதற்கெதிரான நிலைப்பாட்டை எடுத்த ஜே.வி.பி. இந்தியா மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு மத்தியஸ்தம் வகிப்பதற்குத் தகுதிவாய்ந்ததெனத் தெரிவித்திருந்தமை கவனிக்கத்தக்கது.

இந்தியா விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தமையால் அதன் மூலம் முன்வைக்கப்படும் தீர்வு எதுவும் சிங்கள கடும்போக்காளர்களைத் திருப்திப்படுத்துவதாகவே இருக்கும் என ஜே.வி.பி கருதியது இதற்கான காரணங்களிலொன்றாக இருக்கலாம். இருந்தபோதும் இப்போது 13 ஆவது திருத்தத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக ஜே.வி.பி கருதுவதுதான் அதன் போராட்டங்களுக்கு அடிப்படை. கேந்திர மற்றும் பொருளாதார நலன்கள் தொடர்பாக இந்தியா தனது நலன்களைப் பாதுகாப்பதற்காக மேற்கொண்டுள்ள முயற்சிகள் ஜே.வி.பி.யின் சீற்றத்துக்குக் காரணமல்ல என்பது உண்மை. அவ்வாறிருந்திருந்தால் திருமலை எண்ணெய்க் குதங்கள் இந்தியாவிடம் கையளிக்கப்பட்ட போதே ஜே.வி.பி. கொதித்தெழுந்திருக்க வேண்டும்.

ஆக, இதன் மூலம் ஜே.வி.பி. வெளிப்படுத்தும் செய்தி என்னவென்றால், புலிகளுக்கு எதிரான யுத்த முனைப்புகளுக்கு உதவிபுரியும் இந்தியா தன்னுடைய பணியை அத்துடன் நிறுத்திக் கொள்ளவேண்டும். தமிழர்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்கும் எந்தவித திட்டங்களுக்கும் அழுத்தம் கொடுக்கக்கூடாது. அதே வேளையில், யுத்த முனைப்புகளுக்கு இந்தியா தாராளமாக உதவும் நிலையில் இந்தப் போராட்டத்தை ஜே.வி.பி. ஒரு எல்லைக்கு மேல்கொண்டு செல்லாது எனவும் நம்பலாம்.

ஆனால், 13 ஆவது திருத்த யோசனையை கிடப்பில் போடுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு இந்தப் போராட்டம் உதவிபுரியலாம்!குறைந்த பட்ச அரசியல் தீர்வைக்ககூட தடைசெய்வதற்கான உபாயமாகவே இந்திய எதிர்ப்பு என்ற கோஷம் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் தவிர்க்க முடியாமல் எழுகின்றது.


நன்றி :- தினக்குரல்

தொடர்ந்தும் பந்தாடப்படும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு

"எந்தவொரு பிரச்சினையையும் முகங்கொடாது, தட்டிக்கழிக்க விரும்பினால் ஒரு விசாரணைக் கமிஷனையோ ஒரு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவையோ அமைத்து, சர்வகட்சி மாநாட்டையோ, ஒரு வட்டமேசை மாநாட்டையோ நடத்தி, அதனை முடிவில்லாமல் இழுத்தடிப்பது சிங்கள ஆட்சியாளர்களின் அரசியல் பாரம்பரியம். இதனைத்தான் மஹிந்தவும் செய்கின்றார்.''
இந்தக் கருத்தைக் கூறியவர் வேறு யாருமல்லர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன்தான். அதுவும் இற்றைக்கு ஒன்றேகால் வருடத்துக்கு முன்னரே 2006 நவம்பரில் தாம் ஆற்றிய மாவீரர் தின உரையிலேயே இதைத் தெளிவுபடுத்தி விட்டார் அவர்.
ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனா என்ன செய்தாரோ ஜனாதிபதி பிரேமதாஸவும், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் என்ன செய்தார்களோ அதைத்தான் இப்போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அதேவழியில் செய்கிறார்.
அதனையே புலிகளின் தலைவரும் நேரத்துடன் சுட்டிக்காட்டியிருந்தார். அதுவே இப்போது நடந்தேறுகின்றது.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு என்ற மாயமானைக்காட்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடத்தும் அரசியல் சித்து விளையாட்டின் தாற்பரியம் உள்ளாந்தம் இப்போது மெல்ல மெல்ல அம்பலமாகத் தொடங்கிவிட்டது.
தாம் ஆட்சிக்கு வந்தால் மூன்றுமாத காலத்துக்குள் இனப்பிரச்சினைத்தீர்வுக்கான தென்னிலங்கையின் இணக்கப்பாட்டை உருவாக்குவார் என்று தமது "மஹிந்த சிந்தனை' மூலம் தேர்தல் வாக்குறுதி வழங்கியே அவர் ஆட்சிப்பீடம் ஏறினார்.
ஆட்சிக்குவந்து ஏழு மாதங்கள் கடந்த பின்னரே இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சிபார்சுகளைச் செய்வதற்கு என்ற பெயரில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவை அவர் கூட்டினார். அது தென்னிலங்கையின் கருத்து இணக்கப்பாட்டை உருவாக்கித்தரும் பொறுப்பை ஏற்றிருப்பதால் வடக்கு, கிழக்குத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ, அதில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கோ அந்தச் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இடமில்லை என்றார்.(அப்படியென்றால் அதில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஈ. பி. டி. பிக்கு ஏன் இடமளித்தார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்)
அந்தச் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவும் நீண்ட ஒன்றரை வருடகாலம் அறுபதுக்கும் அதிக அமர்வுகளை பலநூறு மணித்தியாலங்கள் நடத்திக் கூடிக்கலைந்து, ஆராய்ந்து, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சிபார்சுஒன்றை நெருங்கிய சமயம் அதற்கும் ஒரேயடியாக முட்டுக்கட்டை போட்டார் அரசுத் தலைவர்.
"இந்தத் தீர்வு யோசனையைக் கிடப்பில் போட்டுவிட்டு, இருபது வருடங்களுக்கு முந்திய, அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அப்படியே நடைமுறைப்படுத்தக் கோரும் யோசனை ஒன்றை என்முன்னே சமர்ப்பியுங்கள்!' என்று தான் அமைத்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவைப் பணித்தார் அவர்.
அரசுக் கூட்டமைப்பில் பங்குவகித்து, அரசுத் தலைவரின் ஏவலராகச் செயற்படும் கட்சிகள் மட்டுமே சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் எஞ்சியிருந்ததால் எஞ்சியிருப்பதால் அவரின் வழிகாட்டுதலை சிரசில் தூக்கி வைத்துக் கூத்தடித்து நடந்துகொண்டது கொள்கிறது சர்வகட்சிக் குழு.
அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கோருமாறு ஜனாதிபதி விடுத்த வழிகாட்டலை சிரசின்மேல் வைத்துக்கொண்டு, இடைக்கால ஏற்பாடு என்ற சமாளிப்புடன், அதையே தனது யோசனையாகச் சமர்ப்பித்த சர்வகட்சிக் குழு, இப்போது தன்மீது நிரந்தரப் பழி குற்றச்சாட்டு வந்துவிடக் கூடாது என்பதற்காக, அதைச் சமாளிப்பதற்காக, நிரந்தரத் தீர்வுக்கான யோசனையைத் தேடும் இருட்டறையில் கறுப்புப்பூனையைத் தேடும் குருடனின் பணிபோல தன்னுடைய வேலையை முன்னெடுக்க முயல்கிறது.
அதற்கும் முட்டுக்கட்டை போட்டு முடக்கும் எத்தனங்கள் ஆரம்பமாகி விட்டன.
பிள்ளையான் குழுவின் பெயரால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் உள்நோக்கம் இதுதான்.
பிள்ளையானின் கடிதத்தை வைத்தே சர்வகட்சிக் குழுவின் செயற்பாட்டுக்கு ஓர் இடக்கு முடக்கு முட்டுக்கட்டை போட்டு விடுவார் ஜனாதிபதி.
கிழக்குத் தமிழ் மக்களின் "உண்மையான' பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் பங்களிப்பும் சர்வகட்சி மாநாட்டுக்குள் சேர்க்கப்படும் வரை அதன் பணிகள் முழுமைபெறா என்ற ஒரு கயிறைக் காட்டி எல்லா விடயங்களையும் முடக்கிவிட அவரால் முடியும்.
அத்தகைய சதித் தந்திரோபாயத் திட்டத்தின் ஓர் அங்கமாகவே பிள்ளையான் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தைக் கொள்ள வேண்டியிருக்கின்றது.
தமிழ் மக்கள் தங்களுடைய ஏக பிரதிநிதிகள் யார் என்பதைக் கடந்த பொதுத் தேர்தலில் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் வெளிப்படுத்திய பின்னரும், இப்போது தமிழர் தாயகத்தை ஆயுத வன்முறை மூலம் ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறித்து சர்ச்சையைக் கிளப்புவது அரசியல் நரித்தனமேயன்றி வேறில்லை.

நன்றி உதயன்.

Friday, February 22, 2008

இறந்துபோன சமாதானத்தின் பிறந்த நாள்

இறந்துபோன குழந்தை ஒன்றிற்கு இன்று (22-02-08) பிறந்த நாள். மகிழ்வோடு கொண்டாட வேண்டிய இத்தினத்தை கவலையோடு நினைத்துப் பார்க்கிறோம்.

22-02-2002 அன்று சிறிலங்கா அரசுடன் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டு பிறப்பே அந்தக் குழந்தை.

நீண்ட போர் முழக்கத்திற்குள் சிக்கித் தத்தளித்த இலங்கைத்தீவை சமாதான பூமியாக்குவோம் எனும் நல்ல நோக்கத்தோடு நகர்ந்த சர்வதேசத்தின் முயற்சிக்கும் சிங்கள தேசத்தின் இராணுவ வீழ்ச்சிக்கும் சாட்சியாக உதித்த அந்த சமாதான உடன்படிக்கைக்கு பிறப்பிலிருந்தே இனவாதம் எனும் கொடிய புற்றுநோய் பீடித்து இருந்தது.

அந்தக் குழந்தையின் கவர்ச்சியால் அந்த நோய் குறித்துப் பலர் அறிந்திருக்காவிட்டாலும் அந்த நோய் விஸ்பரூபம் எடுத்து கைமீறிய நிலைக்குச் சென்றபோதே பலரும் அச்சமடைந்தனர். கவலை கொண்டனர்.

1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சந்திரிகா அரசால் தீவிரப்படுத்தப்பட்ட இன அழிப்பு யுத்தம் எம் தாயக நிலத்தை பெருமளவில் ஆக்கிரமிக்கத் தொடங்கியது. சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை மூலம் பல இலட்சம் தமிழ் மக்களின் வாழிடங்களை வெறுமையாக்கி அவர்களை அகதிகளாக்கிய சந்திரிகா அரசு வன்னி மண்ணிலும் தனது இராணுவச் செயற்பாட்டை தீவிரப்படுத்தியது. 1997 மே 13 ஆம் திகதி தொடங்கப்பட்ட ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை மூலம் வன்னி மண்ணையும் கூறுபோட்டு தன் மேலாதிக்கத்தைக் காட்ட முயன்றது.

கிளிநொச்சி பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் மாங்குளத்தை அண்மித்து நின்ற ஆக்கிரமிப்புப் படைகள் தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளையும் ஆக்கிரமித்து நிலை கொண்டிருந்தது.

இப்படிப்பட்ட இராணுவ நெருக்கடிக்கு முகம் கொடுத்த நிலையிலேயே எமது தேசியத் தலைவர் வகுத்த இராணுவ யுக்தி 1999 ஆம் ஆண்டு பிற்பகுதியில் ஓயாத அலைகள் மூன்றாய் பிறப்பெடுத்து வன்னி மண்ணை ஒவ்வொரு பகுதியாக மீட்கத் தொடங்கியது.

விடுதலைப் புலிகளின் மிகத் தீவிர தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத சிங்களப் படைகள் இறந்தோர் போக உயிர் தப்பினால் போதும் என்ற நிலையில் தப்பியோடத் தொடங்கினர். ஒட்டுசுட்டான், நெடுங்கேணி, கரிப்பட்டமுறிப்பு, மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம் என அடுத்தடுத்து விடுதலைப் புலிகளினால் தமிழர் தாயகப் பகுதிகள் மீட்கப்பட்ட செய்தி தமிழர்களை உற்சாகம் கொள்ளச் செய்தது. இராணுவ முனைப்புப் பெற்றிருந்த சிங்கள தேசத்தை அச்சமடையச் செய்தது.

இவ்வாறாக ரணகோச நடவடிக்கையில் இராணுவம் ஆக்கிரமித்த மன்னாரின் பகுதிகளும் புலிகளிடம் வீழ்ச்சி கண்ட நிலையில் வடக்கு நோக்கிய புலிகளின் ஓயாத அலைகள் மூன்று படையணிகள், வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, பரந்தன் படைத்தளங்கள் உட்பட பல பிரதேசங்களை மீட்ட நிலையில் யாழ். குடாவில் நிலை கொண்ட பெரும் தொகையான படையினருக்கு சவால்களைக் கொடுத்து முன்னேறத் தொடங்கினர்.

இதில் முக்கிய அம்சமாக குடாரப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மதிநுட்பமான தரையிறக்கத்தின் மூலம் சிங்களப் படை வாசலின் உயிர்நாடியாய் இருந்த ஆனையிறவு பெரும் தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றிக் கொண்டதான செய்தி சர்வதேசத்தையும் வியப்பில் ஆழ்த்தியது.

வன்னியில் எங்கோ ஓர் மூலைக்குள் முடக்கப்பட்டதாக அரசு கூறிய புலிகளா இச்சாதனையை செய்கிறார்கள்? எனச் சிங்கள தேசம் பயத்தில் உறைந்தது. பளையைத் தாண்டி முகமாலை, கிளாலி, நாகர்கோவில் வரையுமான பகுதிகள் வரை முன்னேறி நிலைகொண்ட புலிகளின் போர் வெற்றியால் சிங்களத்தின் இராணுவ மமதை சின்னாபின்னமாக்கப்பட்டது எனலாம். இப்படிப்பட்ட இராணுவ மேலாதிக்க நிலையில் இருந்து கொண்டே தமிழீழ விடுதலைப் புலிகள் அப்போது ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தை அறிவித்து, சமாதானத்திற்கான கதவுகளை அகலத் திறந்திருந்தனர்.

சர்வதேசத்தின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து விடுதலைப் புலிகள் மேற்கொண்ட ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தை மதிக்காத சிங்கள அரசு, விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாய் அச்சந்தர்ப்பத்தில் கிடைத்த இராணுவ உதவிகளைப் பயன்படுத்தி இழந்த பிரதேசங்களை ஆக்கிரமிக்க முயன்றது.

அதன் உச்சகட்டமாக ஆனையிறவுப் படைத்தளத்தை மீட்பதற்காக படைத் தரப்பு மேற்கொண்ட தீச்சுவாலை நடவடிக்கை மிகமோசமான படைத்துறைத் தோல்வியை சிங்களப் படைகளுக்கு ஏற்படுத்தியது எனலாம்.

துரத்தித் தாக்கி வந்த புலிகளின் படையணிகள் எதிர்பார்த்திருந்து பகையை உள்வரவிட்டு வியூகம் அமைத்து மேற்கொண்ட அந்த எதிர்ச்சமரில் சிங்களப் படை மிகமோசமான இழப்புக்களைச் சந்தித்து தப்பியோடியது.

இதன் சமகாலத்தில் சிங்களத்தின் தேசத்தில் அமைந்துள்ள கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீதான சிறப்பு அணியினரின் தாக்குதல்களும் இராணுவ வழியில் தலை எடுக்க முடியாத பரிதாப நிலைக்கு அரசைக் கொண்டு சென்றது.

இந்த நிலை நீடித்தால் தமிழீழப் பகுதியைப் புலிகள் மீட்டெடுத்து விடுவார்கள் என்றஞ்சிய சிங்களத் தலைமை சர்வதேசத்தின் சமாதான முயற்சிகளுக்கு உடன்பட்டாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. அப்போது எழுந்த அரசியல் மாற்றமும் அதனையே உணர்த்தி நின்றது.

ஒரு முறை (சந்திரிகாவின் இரண்டாவது ஆட்சிக் காலம்) போருக்காகவே சந்திரிகாவை சனாதிபதியாக்கிய சிங்கள மக்கள் இம்முறை சமாதானத்திற்காக ரணிலை பிரதமாரக்கினார்கள். பிரதமர் பதவியை ஐ.தே.க.வினரும் சனாதிபதி பதவியை எதிர்க்கட்சியான பொதுசன ஐக்கிய முன்னணியின் தலைவி சந்திரிகாவும் வைத்திருந்த நிலையில் உருவாக்கப்பட்ட சமாதான உடன்படிக்கை நோர்வே அரசின் நடுநிலைமை கண்காணிப்புடன் கைச்சாத்தானது.

யுத்த நிறுத்த உடன்படிக்கையின் கவர்ச்சியான விடயங்களாலும் மாற்றங்களாலும் கூடவே வந்த இனவாத முனைப்புக்கள் இரண்டாம் பட்சமாகி பலரால் கவனிக்கப்படாமல் போனது என்பதும் உண்மை.

பொருளாதாரத் தடை நீக்கம், கண்டி வீதி திறப்பு, கிழக்கு மாகாணத்தில் பல வீதிகள் திறப்பு, யுத்த சத்தங்கள் இல்லை என்ற நிலையில் அந்த அமைதியான சூழல் அனைவரையும் கவர்ந்தது.

குறிப்பாக, சிங்கள மக்களின் மனநிலை அப்போது அமைதிச் சூழலை விரும்பியமையால் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு ஆதரவான மனநிலையில் இருந்தார்கள். இது அவர்களின் அமைதியான வாழ்க்கைக்கும் வழிவகுத்தது எனலாம்.

இச்சூழலில் எங்கோ ஓர் மூலையில் முடங்கிப்போய் இருந்த சிங்கள இனவாதம் எனும் புற்றுநோய்க் கிருமிகள் மெல்ல மெல்ல யுத்த நிறுத்த குழந்தையை பீடிக்கத் தொடங்கியிருந்தது.

யுத்த நிறுத்தம் கைச்சாத்தாகி மறுநாள் ஜே.வி.பி., இதற்கு எதிரான குரலை பாராளுமன்றத்தில் மிகத் தீவிரமாக முன்வைத்தது.

யுத்த நிறுத்த உடன்படிக்கையில் உள்ள சரத்துக்கள் குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தது. இந்த நிலைப்பாட்டிலேயே சிகல உறுமய கட்சியும் தமது கருத்து நிலைப்பாடுகளைத் தீவிரப்படுத்தியது.

இவ்வணியினருக்கு ஆதரவாக பொ.ஜ. முன்னணியினரும் சேர்ந்து செயற்படத் தொடங்கினர். இவர்களின் நடவடிக்கைகளை அப்போது சமாதானத்திற்கிருந்த பெரும்பான்மைக் குரல்கள் வெளிக்கொணராது தடுத்தாலும் அந்த இனவாத நோய் தன் வேகத்தை அதிகரித்து பீடிக்கத் தொடங்கியது எனலாம்.

காலப் போக்கில் சமாதானத்தின் ருசி சிங்கள தேசத்திற்கு கடந்த காலங்களின் கசப்புகளை மறக்க வைத்தது. இனவாத குரல்களின் வீச்சுகளால் தமிழர்களுக்கான உரிமைகள் குறித்த கருத்துக்கள் இரண்டாம் பட்சமாக்கப்பட்டது. சந்தர்ப்பம் பார்த்து ரணில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுக்களை சர்வ வல்லமை கொண்ட சந்திரிகா அம்மையார் பறித்தெடுத்து இனவாதிகளுக்கு ஊக்கமளித்தார்.

நரித்திட்டத்தில் காய்களை நகர்த்தி தமிழர்களின் தலைமைத்துவத்தை சிதைக்க எண்ணியிருந்த ரணில் அரசாங்கம் ஓய்வு நிலைக்குச் சென்றது. போரின் வலி சிங்களத்திற்கு மறக்கத் தொடங்க சமாதானத்திற்காக வாக்களித்தவர்கள் இனவாத கூச்சல்களுக்கு கூத்தாடத் தொடங்கினர். அடுத்தடுத்து இடம்பெற்ற தேர்தல்கள் ஜே.வி.பி., சிகல உறுமய போன்ற இனவாதிகளின் வளர்ச்சிப் படிகளாய் அமைந்ததிலிருந்தது சிங்களவர்களின் மனமாற்றத்தை அறியலாம்.

யுத்த நிறுத்த உடன்பாட்டு விதிமுறைகளை மதிக்காது செயற்பட்டார்கள். மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட சுனாமிக் கட்டமைப்பை கிழித்து குப்பைக் கூடைக்குள் போட்டார்கள்.

சர்வதேசத்தை தம் வியூகத்திற்குள் சிக்கவைத்து உதவிகளைப் பெற்றார்கள் எனத் தொடங்கிய இனவாதப் புற்றுநோயின் வீரியம் சமாதானக் குழந்தையை கோமா நிலைக்குக் கொண்டு சென்றது.

இனவாதமே அரசியல் ஆகிவிட்ட நிலையில் உச்ச இனவாதியாக றுகுனு சண்டியனாக தன்னை உருவகித்து வந்த மகிந்தர் 2005 ஆம் ஆண்டு சனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் சமாதானக் குழந்தைக்கான சாவு மணி அடிக்கப்பட்டது.

உடன்படிக்கை அமுலில் இருந்தபோதே ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கினர். இறைமை உள்ள நாடெனக் கூறி சர்வதேச தலையீட்டை வெட்டி விட்டனர். இலட்சக்கணக்கான கிழக்கு மாகாண தமிழ் மக்களை அகதிகளாக்கி ஆக்கிரமிப்பின் வெற்றிகளைக் கொண்டாடினர். போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் அறிக்கைகள் விடுவதற்கு மட்டும் உரித்துடையவர்கள் ஆக்கப்பட்டனர்.

விமானக் குண்டு வீச்சு, எறிகணை வீச்சு, கிளைமோர்த் தாக்குதல்கள் என பல்வகையிலும் தமிழ் மக்களைக் கொன்றொழித்தனர்.

பாதைகள் மூடப்பட்டன. மரண வாசல்கள் திறக்கப்பட்டன. போர் நிறுத்த உடன்படிக்கையின் சமாதானக் குழந்தை இறுதிக் கணத்தை நெருங்கத் தொடங்கியது.

பன்நாட்டு மருத்துவர்களும் வந்து வைத்தியம் பார்த்து காப்பாற்ற முயன்றனர். பலர் இனவாதப் புற்றுநோயை இனம் காணாதவர்களாய் சமாதானக் குழந்தையைக் காப்பாற்றி விடலாம் என நம்பிக்கை வெளியிட்டனர். இன்னும் சிலர் நோயை விட்டுவிட்டு நோய் அற்ற பகுதிகளுக்கு வைத்தியம் பார்க்கத் தொடங்கினர்.

சமாதானக் குழந்தையைக் காப்பாற்ற அவர்கள் (சர்வதேசம்) கொடுத்த மருந்துகள் எல்லாம் நோயை அதிகரிக்கச் செய்யவே உதவியது. 2002 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சமாதானத்துக்கு ஆதரவாக 80 வீதமான சிங்கள மக்கள் ஆதரவு வழங்கியிருந்த நிலையில் கடந்த ஆண்டு அதேவீதமான சிங்களவர்கள் போருக்கு ஆதரவான கருத்து நிலையில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்தன.

இந்நிலையில் சென்ற மாதம் 16 ஆம் திகதி சமாதானக் குழந்தை இறந்துவிடும் என சென்ற மாதம் இரண்டாம் திகதி சிங்கள அரசு அறிவித்தது. அதன் படியே அனுசரணையாளர்களும் விடயத்தை உணர்ந்து கொண்டார்கள். நோய் பீடித்தவர் இறந்துவிடும் திகதி மருத்துவர்களுக்குத் தெரியுமோ இல்லையோ ஆனால், அதனைத் தீர்மானிக்கும் சக்தி நோய் காரணிக்கே உண்டு. அந்த வகையில் சமாதானக் குழந்தையை முற்றுமுழுதாகக் கொன்றொழித்தது சிங்களம்.

நம்பிக்கையோடு காத்திருந்த மருத்துவர்கள் (கண்காணிப்பாளர்கள்) மூட்டை கட்டிப் புறப்பட்டனர். குழந்தை இறந்தப் பின்பே நோயின் தாக்கம் குறித்து புரிந்து கொண்டனர். இன்னும் சிலர் சமாதானக் குழந்தை இறந்ததற்கு காரணம் தெரியாமலே உள்ளனர்.

தமிழர் தரப்பின் இராணுவ பல மேலாதிக்கத்தில் பிறந்த சமாதானம், சிங்கள இனவாதத்தின் வளர்ச்சியில் இன்று மரணித்திருக்கிறது.

விரும்பியோ விரும்பாமலோ யுத்தம் செய்து மீளெழ வேண்டிய கட்டாயத் தெரிவிற்குள் தமிழர் தேசம் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் இக்காலம் தீர்மானிக்கும் சக்தியாக எம்மையே விட்டுவைத்திருக்கிறது என்ற நிலையில் இனவாதத்துடன் மோதி எம் நிலத்தை மீட்டெடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

2002 சமாதான உடன்படிக்கையாகிலும் சரி அதற்கு முற்பட்ட 1994 சந்திரிகா கால சமாதான உடன்படிக்கை 1990 ஆம் ஆண்டு கால பிரேமதாச ஆட்சிக் கால சமாதானப் பேச்சுவார்த்தை மற்றும் அதற்கு முந்தைய பேச்சுவார்த்தைகள் எல்லாமே தமிழர் தரப்பின் பலத்தாலே பிறந்து சிங்கள தேசத்தின் இனவாத முன்னெடுப்புக்களால் மரணித்தவை என்பதே வரலாறு. இந்த வகையில் இலங்கைத்தீவின் நிரந்தர சமாதானம் தமிழர்கள் அமைக்கப்போகின்ற தனிநாட்டிலேயே உள்ளது என்பதுதான் உண்மை நிலைப்பாடு

நன்றி -ப.துஸ்யந்தன்-

தென்னிலங்கைக் கிளர்ச்சி வேறு தமிழர்களின் போராட்டம் வேறு

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் இராணுவத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் டென்னிஸ் பெரேரா,தேசியப் பிணக்குக்குத் தீர்வு காண்பது தொடர்பாக வார மத்தி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
""இந்தப் பிணக்குக்கு எவ்வாறு தீர்வு காணப்பட முடியும்?'' என்று அவரிடம் கேட்கப்பட்டது.
""போரினால் அல்ல. ஆனால் பேச்சுகள் மூலம்'' என்று பதிலளித்த முன்னாள் இராணுவத் தளபதி அதை ஒட்டிய சில பட்டறிவுப் பாடங்களையும் முன்வைத்திருக்கின்றார்.
""இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பின்னர் உலகில் ஏறத்தாழ இருநூற்றி நாற்பது கிளர்ச்சிகள் இடம்பெற்று வந்துள்ளன.
""அவற்றில் மூன்றே மூன்று கிளர்ச்சிகள் மட்டுமே யுத்தம் மூலம் எதிர்ப் போராட்டம் வாயிலாக வெற்றிகரமாக அடக்கப்பட்டிருக்கின்றன.
""முதலாவது மாலாயாவில். அங்கு அவர்கள் கம்யூனிஸப் பயங்கரவாதிகளை அழித்தொழித்து மக்களை மீளக்குடியமர்த்தினார்கள்.

""அடுத்தது குர்திஷ் கிளர்ச்சி. அது இராணுவ ரீதியில் அடக்கப்பட்டது.
""மூன்றாவது இலங்கையில் ஜே.வி.பி. கிளர்ச்சி. அதுவும் இரண்டு தடவைகள் வெற்றிகரமாக இராணுவ ரீதியில் அடக்கப்பட்டது.
""ஏனைய எல்லாக் கிளர்ச்சிகளிலும் பதிலடியாக ஆயுத வழிமுறை சம்பந்தப்பட்ட அரசுகளினால் நாடப்பட்டபோதிலும் அதைத் தொடர்ந்து பேச்சுக்களே முன்னெடுக்கப்பட்டன.
""எதுவென்றாலும் அது அரசியல் தீர்வாகவே இருக்க வேண்டும். இராணுவம் தேவையானால் கிளர்ச்சியாளர்களை அதிக அளவில் அழிக்கலாம். அப்படிச் செய்தாலும் அந்தப் பிணக்குக்கு பிரச்சினைக்கு ஒரு மூலவேர் அல்லது மூலகாரணம் தொடர்ந்து இருந்தே தீரும். அந்த மூலகாரணம் களையப்பட வேண்டும். எங்களது விடயத்தில் மொழி மற்றும் ஆட்சியில் பங்கு ஆகிய இரண்டு விடயங்களே பிரச்சினைக்கு அடிப்படையாக அமைந்த மூலகாரணங்கள்.'' இப்படி முன்னாள் படைத்தளபதி எடுத்துரைத்திருக்கின்றார்.
அவரது கருத்தின் அர்த்தத்தை இலங்கையர்கள் சில சமயம் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடும்.
உலகில் இடம்பெற்ற சுமார் இருநூற்றி நாற்பது கிளர்ச்சிகளில் மூன்று வெற்றிகரமாக ஆயுத முனையில் அடக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று ஏற்கனவே இலங்கையில் இடம்பெற்றிருக்கிறது. அதுவும் ஒரு தடவையல்ல, இரண்டு தடவைகள் அத்தகைய கிளர்ச்சி இலங்கையில் வெற்றிகரமாக அடக்கிக் காட்டப்பட்டிருக்கின்றது என்பதையும்
இலங்கையில் இதுவரை ஏற்பட்ட மூன்று கிளர்ச்சிகளில் இரண்டு வெற்றிகரமாக ஆயுத முனையில் இராணுவ நடவடிக்கை வாயிலாக அடக்கி, ஒடுக்கப்பட்டிருக்கின்றது என்பதையும்
கவனத்தில் கொள்ளும் தென்னிலங்கையர், ஆகவே இலங்கையில் மூன்றாவது கிளர்ச்சியும் ஈழத் தமிழரின் ஆயுதம் தரித்த விடுதலைப் போராட்டமும் வெற்றிகரமாக அடக்கப்படக்கூடியது என்று கருதவோ நம்பவோ எண்ணவோ கூடும்.
ஆனால், அவர்கள் அப்படி மனக்கோட்டை கட்டுவதில் அர்த்தமேயில்லை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

அதைப் புரிந்து உணர்ந்து கொள்வதற்கு இலங்கையில் வெற்றிகரமாகத் தோற்கடிக்கப்பட்ட ஜே.வி.பி. கிளர்ச்சிக்கும், தோற்கடிக்கப்பட முடியாமல் இருக்கும் ஈழத் தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்துக்கும் உள்ள பண்பியல்புகளை அவர்கள் புரிந்துகொள்வது அவசியமாகும்.

தமிழர்களின் விடுதலைப் போராட்டக் கிளர்ச்சி என்பது காலங்காலமாக அடக்கி, ஒடுக்கி, நசுக்கப்பட்ட, இனப்பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட ஓரின மக்களின் கௌரவ வாழ்வியலுக்கான உரிமையை வேண்டி நடத்தப்படும் ஒரு யாகம்.
ஆனால், ஜே.வி.பி. நடத்திய கிளர்ச்சி என்பது வேறு. அது அடக்கு முறைக்கு எதிரானதல்ல. ஆட்சி அதிகார ஆசை மீதான எழுச்சியின் விளைவாக இரத்தம் சிந்தும் களரியில் இறங்கிய கற்றுக்குட்டித்தனம் அது.

மார்க்ஸிஸ தீவிரவாத அமைப்பான ஜே.வி.பி. அந்தக் கிளர்ச்சியை முன்னெடுத்த சமயங்களில் அதனிடம் தெளிவான கொள்கையோ, தந்திரோபாயமோ இருக்கவில்லை. ஆயுதம் தரித்த புரட்சிகரப் போராட்டத்தை சரிவரப் புரிந்து கொள்ளாத ஜே.வி.பி., அதைச் செவ்வையாகத் திட்டமிடவுமில்லை. அதனிடம் அச்சமயம் ஓர் ஒழுங்குமுறையான ஆணைப் பீடத் தலைமையோ நெறிப்படுத்தும் நிர்வாகமோ அமைந்திருக்கவில்லை. குறைந்தபட்சம் நடைமுறைப் பட்டறிவு கூட அதற்குப் பொருந்தி வரவில்லை.
அந்தக் கிளர்ச்சியை முன்னெடுத்த ரோஹண விஜேவீர புரட்சிப் போராட்டத்தில் தேர்ச்சி பெற்றவரல்லர்.

மாவோவின் புரட்சிச் சிந்தனைகள், சேகுவேராவின் கெரில்லாப் போர்முறைக் குறிப்புகள் போன்றவற்றின் புத்தகப் படிப்பை வைத்துக்கொண்டு புரட்சி நடத்தும் அவரின் பேரவா அரைகுறையில் தோற்றுப்போய்விட்டது.
வேலைவாய்ப்பு இழந்து விரக்தியுற்றுக் கிடந்த இளைஞர்களுக்கு அதிகார ஆசை காட்டி கிளர்ச்சி வழியில் தூண்டுவது வேறு.

பேரினவாதிகளால் அடிமைப்படுத்தப்பட்டு, வாழ்வியல் உரிமைகளை இழந்து, பாரம்பரிய தாயகத்தைத் தொலைத்து, நீதி, நியாயம் மறுக்கப்பட்டு, அஹிம்சை வழியிலான கோரிக்கைகள் ஆயுதப் பலாத்காரத்தினாலும் வன்முறையினாலும் அடக்கி ஒடுக்கப்பட்ட நிலையில், விரக்தியின் விளிம்பில் வேறு மார்க்கமின்றி விடுதலைப் போராட்டப் பாதைக்குள் தள்ளப்பட்ட ஓரினத்தின் தேச விடுதலைப் புரட்சி என்பது வேறு.
இரண்டையும் ஒன்றாக நோக்கி, அதை அடக்கியமைபோல இதை அடக்கலாம் என்று மனப்பால் குடிப்பது அறிவிலித்தனம்.
முன்னாள் இராணுவத் தளபதி கூறுவது போல இப்பிரச்சினையை அமைதி வழியில்தான் தீர்க்கலாம். ஆயுத அடக்குமுறை மூலம் அல்ல.

நன்றி :-உதயன்