Thursday, February 28, 2008

சர்வதேச கருத்தியலை உள்வாங்கி தன்னை நெறிப்படுத்துமா கொழும்பு?

ஆபத்துக்குள்ளான மக்களின் நிலைமை குறித்து சர்வதேச ரீதியில் ஆய்வு நடத்திவரும் லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் சிறுபான்மையினருக்கான உரிமைக்குழு, ஆசியப் பிராந்தியத்தில் மனித உரிமைகள் மிக மோசமான கட்டத்தை அடைந்திருக்கும் நாடுகளில் இலங்கை முன்னிலை வகிக்கின்றது என்பதை அடையாளம் கண்டிருக்கின்றது.
ஆப்கானிஸ்தானிலும், பர்மாவிலும் நிலைமை மிகமிக மோசம் எனத் தெரிவித்திருக்கும் அந்த அமைப்பு, புதுவருடத்துடன் இலங்கையில் நிலைமை கிடுகிடுவென சீரழிந்து மிகமிக மோசமான கட்டத்தை அடைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
""பாகிஸ்தானிலும், இலங்கையிலுமே கள நிலைமைகள் குறிப்பிடத்தக்களவு சீர்கெட்டுள்ளன. 2007 உடன் ஒப்பிடுகையில் மிக வேகமாக சீரழிவை அடைந்த நாடுகளில் இவை இரண்டுமே முன்னிலை வகிக்கின்றன என்றும் அந்த அமைப்புத் தெரிவித்திருக்கின்றது.
""யுத்தம் மீள மூண்டதாலும், சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைந்ததாலும் இலங்கை 2007 இல் மிக மோசமான மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொண்டது. படுகொலைகள், காணாமற்போதல், சித்திரவதை போன்ற பெரும்பாலும் அனைத்து மனித உரிமை மீறல் துஷ்பிரயோகங்களின்போதும் தமிழர்கள் அல்லது முஸ்லிம்களே அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.'' என்று மேற்படி சிறுபான்மையினருக்கான மனித உரிமைக் குழுவின் நிறைவேற்று இயக்குநர் மார்க் லற்றிமர் தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமை அமைப்புகள், அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், லண்டனை மையமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, ஹொங்கொங்கைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவற்றின் வரிசையில், இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான வண்டவாளத்தை அம்பலப்படுத்துகின்ற பணியில் இப்போது சிறுபான்மையினருக்கான உரிமைகள் குழுவும் (minority rights group) இணைந்து கொண்டிருக்கின்றது.

பாதுகாப்பற்ற சிறுபான்மையினரான தமிழ் சமூகத்தின் மீது பெரும்பான்மையினரான பௌத்த, சிங்கள மேலாதிக்கப் போக்கு ஆட்சியாளர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன அழிப்பு வன்முறை, வரன்முறை தாண்டி கொடூரப் பேரழிவுப் போராகப் பரிணமித்திருக்கும் இந்தக் காலகட்டத்தில்
ஒருபுறம், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச அமைப்புகளின் பார்வையும், சிரத்தையும், அவதானமும் இலங்கையின் பக்கம் திரும்பியிருக்கின்றன. உண்மை நிலைமையை அவை அப்பட்டமாக அம்பலப்படுத்தி வருகின்றன.
மறுபுறம், இத்தகைய இன அழிப்பு வன்முறை குரூரமாகவும், கொடூரமாகவும் இடம்பெறும் பிராந்தியங்களில் சர்வதேசம் கண்ணை மூடிக்கொண்டு பார்த்திராது, சர்வதேச வழக்காறுகள் மற்றும் பண்பியல்புகளை மீறி அத்தகைய மனிதப் பேரவல விவகாரங்களில் மனித நேய அணுகுமுறையோடு அவை உறுதியாகத் தலையிடும் என்ற நிதரிசனம் கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தை ஊக்குவித்து, அங்கீகரித்த மேற்குலகின் தந்திரோபாயச் செயற்பாடுமூலம் பகிரங்கமாகக் கட்டவிழ்ந்திருக்கின்றது.
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் பின்புல ஆதரவோடும் ஊக்குவிப்போடும் முன்னெடுக்கப்படும் இன அழிப்புக் கொடூரத்தை, ஒரு நாட்டின் உள்விவகாரம் என்று கருதி ஒதுங்கி நிற்கும் கருத்து நிலைப்பாட்டை சர்வதேசம் துறந்து விட்டது என்ற யதார்த்தம் மெல்லப் புரியத் தொடங்கியதால் இப்போது பதறியடிக்கின்றது கொழும்பு.
தமிழர் தாயகம் மீது ஏவி விடப்பட்ட கொடூர யுத்தம் இப்போது மந்த கதிக்குத் திரும்பியிருப்பதும்
"பேசசு மூலமான தீர்வு', "அதிகாரப் பகிர்வு', "இராணுவ வழித் தீர்வு மார்க்கமல்ல' என்ற அறிவிப்புகள் கொழும்பின் பக்கத்திலிருந்து வெளியிடப்படுவதும்
இனப்பிரச்சினைக்கான அமைதித் தீர்வு குறித்துப் பேசி முடிவெடுப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவருக்கு அவசரமாக அழைப்பு விடுத்து அவரை ஜனாதிபதி சந்தித்துப் பேசுவதும்
சர்வதேசப் பின்புலத்தில் மாறிவரும் கருத்து நிலைப்பாட்டால் அரற்றப்பட்ட கொழும்பு, அதனால் வெளிப்படுத்தும் பிரதிபலிப்புகளே.

ஈவிரக்கமற்ற இனவாத அரசு ஒன்று, சில அந்நிய சக்திகளின் பின்புல ஆதரவுடன் தமிழர் தேசத்தின் மீது மிகக் கொடூர யுத்தம் ஒன்றைக் கட்டவிழ்த்துவிட்டு, இனப் பேரழிவு ஒன்றுக்குக் கங்கணம் கட்டி நிற்கையில், அதைத் தடுத்து நிறுத்தும் தார்மீக அறநெறிக் கடப்பாடு தனக்கு இருப்பதாகக் கருதி சர்வதேசம் அது குறித்து கருத்துகளை வெளியிட்டு வருகின்றது.

இந்திய அரசின் கொள்கை நிலைப்பாட்டை விளக்கும் வகையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அந்த நாட்டின் ஜனாதிபதி அண்மையில் நிகழ்த்திய உரை வரை, சர்வதேசத்தின் பல மட்டங்களில் இலங்கை குறித்துத் தெரிவிக்கப்படும் கருத்துகள் இலங்கை தொடர்பான சர்வதேசத்தின் இக்கரிசனையையே வெளிப்படுத்தி நிற்கின்றன.
சர்வதேசத்தின் இந்த உறுதியான நிலைப்பாடு கொழும்பை சரியான வழியில் செயற்பட வழிப்படுத்துமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நன்றி :- உதயன்

0 Comments: