பொருத்தமற்ற பொருளாதாரக் கொள்கைகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் தற்போதைய அரசினால் நாட்டின் பணவீக்கம் எகிறுகின்றது.
கடந்த வருடம் சராசரிப் பணவீக்கம் 21.6 வீதமாகும். நவம்பரில் மாத்திரம் அது 26. 2 வீதத்தைத் தொட்டு நின்றதாக அதிர்ச்சித் தகவல்.
2008 இல் நாட்டின் பணவீக்கத்தை பத்து முதல் பதினொரு வீதத்துக்குள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் போவதாக மனக்கோட்டை கட்டிய இலங்கை மத்தியவங்கி அந்த நம்பிக்கையை வருடம் பிறந்து ஒன்றரை மாத காலம் முடிவதற்குள்ளேயே கோட்டை விட்டுவிட்டது.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் பணவீக்கம் 16 முதல் 20 வீதமாக இருக்கும் என்று இப்போதே ஒப்புக்கொள்ளும் அளவுக்கு அது வந்து விட்டது. ஆனால் உண்மையில் யதார்த்தத்தில் அந்தப் பெறுபேறு நிச்சயம் இருபது முதல் இருபத்தியைந்து வீதத்தைத் தாண்டும் என்று உறுதி கூறுகின்றன பொருளாதார நிபுணத்துவ வட்டாரங்கள்.
இந்தப் பிராந்தியத்தில் தெற்காசிய பிரதேசங்களில் ஆகக் கூடுதலான பண வீக்கத்தை வெளிப்படுத்தும் மோசமான பொருளாதார நிலையில் இருக்கும் தேசம் என்ற பெருமையை இலங்கையே தட்டிச் செல்கின்றது.
இத்துணை சனத்தொகையையும், பின்தங்கிய கிராமங்களையும் கொண்ட இந்தியா கூட தனது பணவீக்கத்தை 6 வீதத்துக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றது.
இப்பிரதேசத்தில் இலங்கைக்கு அடுத்து மோசமான பணவீக்க அதிகரிப்பைக் கொண்ட நாடாக பங்களாதேஷ் விளங்குகின்றது. அங்கு கூட பணவீக்கம் 11 வீதம்தான். ஆனால் அதன் இரட்டிப்பு மடங்கில் முன்னிலை வகிக்கின்றது இலங்கை.
ஒரு புறம் கண், மண் தெரியாமல் யுத்தத்துக்கு போர்வெறித் தீவிரத்துக்கு நாட்டின் பொருளாதார வளத்தைக் கபளீகரம் செய்யும் செயற்பாடுகள்.
மறுபுறம், எங்கும் ஊழல், எதிலும் மோசடி, எவற்றிலும் லஞ்சம் என்று அதிகாரத் துஷ்பிரயோகங்கள், குளறுபடித்தனங்கள்.
இன்னொரு புறம் தவறான பொருளாதாரக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுகின்ற அவலம். தனிநபர்களின் விருப்பு, வெறுப்புக்காக வகுக்கப்படும் பொருளாதாரக் கொள்கைகள் தீர்க்க தரிசனத்துடனும், யதார்த்தப் புறநிலைகளுக்கு அமைவாகவும் நடைமுறைப்படுத்தப் படுவதேயில்லை.
உதாரணத்துக்கு, தேவைப்படும் போதெல்லாம் கணக்கு வழக்கின்றி பணத்தை புது ரூபா நோட்டுக்களை கண் மண் தெரியாமல் அச்சிட்டுத்தள்ளி, அவற்றை சர்வசாதாரணமாகப் புழக்கத்துக்கு விடும் கோமாளித்தனத்தைக் குறிப்பிடலாம்.
இவையெல்லாம் சேர்ந்து நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையின் மைய நாணையே சிதறடிக்கச் செய்துவிட்டன.
வெளிநாட்டு முதலீடுகளை நட்புறவுடன் அரவணைக்கும் போக்கு இல்லாத காரணத்தாலும் அதற்கான அரசியல், களநிலை யதார்த்தங்கள் காணப்படாமையாலும் புதிய முதலீடுகள் இல்லாமற் போகின்றன. பழைய முதலீடுகளும் வாபஸ் பெறப்படும் அலங்கோல நிலைமை.
"செல்லும் செல்லாததற்கொல்லாம் செட்டியார் பொறுப்பு' என்பது போல உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பாலேயே இங்கு இந்த இக்கட்டு என்ற சாக்குப் போக்கு வேறு.
இதேபோன்ற சர்வதேச எரிபொருள் விலை அதிகரிப்பை எதிர்கொள்ளும் இந்தோனேஷியாவினாலும், தாய்லாந்தினாலும், பிலிப்பைன்ஸினாலும் கூட பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியுமானால், அதையே காரணம் காட்டி பணவீக்கத்தை தவிர்க்கமுடியாதது எனக் கொழும்பு அரசு நியாயப்படுத்துவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
நாட்டில் ஒரு பக்கத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு. மறுபக்கத்தில் மின் உற்பத்திக்கான மானியம் வெட்டப்பட்டதால் சராசரி 40 வீத மின் கட்டண அதிகரிப்பு இன்னும் மூன்று வார காலத்துக்குள் நடைமுறைக்கு வரப்போகின்றது. தவிரவும் அரிசி, மா, பால்மா போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் எக்கச்சக்கமாக உயர்ந்து விட்டன. போரினால் பொருளாதார அபிவிருத்தி செத்துவிட்டது.
இந்தப் பின்னணியில் வருடாந்தப் பணவீக்கம் 25 வீதத்தைத் தாண்டுவது நிச்சயமாகத் தவிர்க்க முடியாத நிதர்சனமாகப் போகின்றது.
இதேவேளை, தன்னுடைய போர்வெறிப் போக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காகத் தினசரி அறுபது கோடி ரூபாவை யுத்தத்தின் பெயரால் நாசமாக்குகின்றது அரசு. அதாவது ஒவ்வொரு நிமிடத்துக்குச் சராசரி 40 லட்சம் ரூபா வீணே செலவாகிக் கரைந்து கொண்டிருக்கின்றது.
ஆனால் இந்த நெருக்கடியெல்லாம் தற்காலிகமானவை, விரைவில் "வடபகுதிப் பயங்கரவாதிகளை' கூண்டோடு அழித்து, அமைதியை மீட்டு, சமாதானத்தை எட்டி, பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்தி விடுவோம் என்று சூளுரைத்துக் கொண்டிருக்கின்றார் நாட்டின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
கையில் கிடைத்த பொரிமாத்தோண்டியையும் கனவு கண்டு போட்டுடைத்த ஆண்டி மாதிரி, நாடும் அவரது இந்தக் கனவு நனவாகும் வரை காத்திருந்து ஏமாற வேண்டியதுதான்.
உதயன்
Monday, February 11, 2008
பொருளாதாரம் போகும் போக்கு
Posted by tamil at 8:36 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment