Friday, February 22, 2008

தென்னிலங்கைக் கிளர்ச்சி வேறு தமிழர்களின் போராட்டம் வேறு

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் இராணுவத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் டென்னிஸ் பெரேரா,தேசியப் பிணக்குக்குத் தீர்வு காண்பது தொடர்பாக வார மத்தி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
""இந்தப் பிணக்குக்கு எவ்வாறு தீர்வு காணப்பட முடியும்?'' என்று அவரிடம் கேட்கப்பட்டது.
""போரினால் அல்ல. ஆனால் பேச்சுகள் மூலம்'' என்று பதிலளித்த முன்னாள் இராணுவத் தளபதி அதை ஒட்டிய சில பட்டறிவுப் பாடங்களையும் முன்வைத்திருக்கின்றார்.
""இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பின்னர் உலகில் ஏறத்தாழ இருநூற்றி நாற்பது கிளர்ச்சிகள் இடம்பெற்று வந்துள்ளன.
""அவற்றில் மூன்றே மூன்று கிளர்ச்சிகள் மட்டுமே யுத்தம் மூலம் எதிர்ப் போராட்டம் வாயிலாக வெற்றிகரமாக அடக்கப்பட்டிருக்கின்றன.
""முதலாவது மாலாயாவில். அங்கு அவர்கள் கம்யூனிஸப் பயங்கரவாதிகளை அழித்தொழித்து மக்களை மீளக்குடியமர்த்தினார்கள்.

""அடுத்தது குர்திஷ் கிளர்ச்சி. அது இராணுவ ரீதியில் அடக்கப்பட்டது.
""மூன்றாவது இலங்கையில் ஜே.வி.பி. கிளர்ச்சி. அதுவும் இரண்டு தடவைகள் வெற்றிகரமாக இராணுவ ரீதியில் அடக்கப்பட்டது.
""ஏனைய எல்லாக் கிளர்ச்சிகளிலும் பதிலடியாக ஆயுத வழிமுறை சம்பந்தப்பட்ட அரசுகளினால் நாடப்பட்டபோதிலும் அதைத் தொடர்ந்து பேச்சுக்களே முன்னெடுக்கப்பட்டன.
""எதுவென்றாலும் அது அரசியல் தீர்வாகவே இருக்க வேண்டும். இராணுவம் தேவையானால் கிளர்ச்சியாளர்களை அதிக அளவில் அழிக்கலாம். அப்படிச் செய்தாலும் அந்தப் பிணக்குக்கு பிரச்சினைக்கு ஒரு மூலவேர் அல்லது மூலகாரணம் தொடர்ந்து இருந்தே தீரும். அந்த மூலகாரணம் களையப்பட வேண்டும். எங்களது விடயத்தில் மொழி மற்றும் ஆட்சியில் பங்கு ஆகிய இரண்டு விடயங்களே பிரச்சினைக்கு அடிப்படையாக அமைந்த மூலகாரணங்கள்.'' இப்படி முன்னாள் படைத்தளபதி எடுத்துரைத்திருக்கின்றார்.
அவரது கருத்தின் அர்த்தத்தை இலங்கையர்கள் சில சமயம் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடும்.
உலகில் இடம்பெற்ற சுமார் இருநூற்றி நாற்பது கிளர்ச்சிகளில் மூன்று வெற்றிகரமாக ஆயுத முனையில் அடக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று ஏற்கனவே இலங்கையில் இடம்பெற்றிருக்கிறது. அதுவும் ஒரு தடவையல்ல, இரண்டு தடவைகள் அத்தகைய கிளர்ச்சி இலங்கையில் வெற்றிகரமாக அடக்கிக் காட்டப்பட்டிருக்கின்றது என்பதையும்
இலங்கையில் இதுவரை ஏற்பட்ட மூன்று கிளர்ச்சிகளில் இரண்டு வெற்றிகரமாக ஆயுத முனையில் இராணுவ நடவடிக்கை வாயிலாக அடக்கி, ஒடுக்கப்பட்டிருக்கின்றது என்பதையும்
கவனத்தில் கொள்ளும் தென்னிலங்கையர், ஆகவே இலங்கையில் மூன்றாவது கிளர்ச்சியும் ஈழத் தமிழரின் ஆயுதம் தரித்த விடுதலைப் போராட்டமும் வெற்றிகரமாக அடக்கப்படக்கூடியது என்று கருதவோ நம்பவோ எண்ணவோ கூடும்.
ஆனால், அவர்கள் அப்படி மனக்கோட்டை கட்டுவதில் அர்த்தமேயில்லை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

அதைப் புரிந்து உணர்ந்து கொள்வதற்கு இலங்கையில் வெற்றிகரமாகத் தோற்கடிக்கப்பட்ட ஜே.வி.பி. கிளர்ச்சிக்கும், தோற்கடிக்கப்பட முடியாமல் இருக்கும் ஈழத் தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்துக்கும் உள்ள பண்பியல்புகளை அவர்கள் புரிந்துகொள்வது அவசியமாகும்.

தமிழர்களின் விடுதலைப் போராட்டக் கிளர்ச்சி என்பது காலங்காலமாக அடக்கி, ஒடுக்கி, நசுக்கப்பட்ட, இனப்பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட ஓரின மக்களின் கௌரவ வாழ்வியலுக்கான உரிமையை வேண்டி நடத்தப்படும் ஒரு யாகம்.
ஆனால், ஜே.வி.பி. நடத்திய கிளர்ச்சி என்பது வேறு. அது அடக்கு முறைக்கு எதிரானதல்ல. ஆட்சி அதிகார ஆசை மீதான எழுச்சியின் விளைவாக இரத்தம் சிந்தும் களரியில் இறங்கிய கற்றுக்குட்டித்தனம் அது.

மார்க்ஸிஸ தீவிரவாத அமைப்பான ஜே.வி.பி. அந்தக் கிளர்ச்சியை முன்னெடுத்த சமயங்களில் அதனிடம் தெளிவான கொள்கையோ, தந்திரோபாயமோ இருக்கவில்லை. ஆயுதம் தரித்த புரட்சிகரப் போராட்டத்தை சரிவரப் புரிந்து கொள்ளாத ஜே.வி.பி., அதைச் செவ்வையாகத் திட்டமிடவுமில்லை. அதனிடம் அச்சமயம் ஓர் ஒழுங்குமுறையான ஆணைப் பீடத் தலைமையோ நெறிப்படுத்தும் நிர்வாகமோ அமைந்திருக்கவில்லை. குறைந்தபட்சம் நடைமுறைப் பட்டறிவு கூட அதற்குப் பொருந்தி வரவில்லை.
அந்தக் கிளர்ச்சியை முன்னெடுத்த ரோஹண விஜேவீர புரட்சிப் போராட்டத்தில் தேர்ச்சி பெற்றவரல்லர்.

மாவோவின் புரட்சிச் சிந்தனைகள், சேகுவேராவின் கெரில்லாப் போர்முறைக் குறிப்புகள் போன்றவற்றின் புத்தகப் படிப்பை வைத்துக்கொண்டு புரட்சி நடத்தும் அவரின் பேரவா அரைகுறையில் தோற்றுப்போய்விட்டது.
வேலைவாய்ப்பு இழந்து விரக்தியுற்றுக் கிடந்த இளைஞர்களுக்கு அதிகார ஆசை காட்டி கிளர்ச்சி வழியில் தூண்டுவது வேறு.

பேரினவாதிகளால் அடிமைப்படுத்தப்பட்டு, வாழ்வியல் உரிமைகளை இழந்து, பாரம்பரிய தாயகத்தைத் தொலைத்து, நீதி, நியாயம் மறுக்கப்பட்டு, அஹிம்சை வழியிலான கோரிக்கைகள் ஆயுதப் பலாத்காரத்தினாலும் வன்முறையினாலும் அடக்கி ஒடுக்கப்பட்ட நிலையில், விரக்தியின் விளிம்பில் வேறு மார்க்கமின்றி விடுதலைப் போராட்டப் பாதைக்குள் தள்ளப்பட்ட ஓரினத்தின் தேச விடுதலைப் புரட்சி என்பது வேறு.
இரண்டையும் ஒன்றாக நோக்கி, அதை அடக்கியமைபோல இதை அடக்கலாம் என்று மனப்பால் குடிப்பது அறிவிலித்தனம்.
முன்னாள் இராணுவத் தளபதி கூறுவது போல இப்பிரச்சினையை அமைதி வழியில்தான் தீர்க்கலாம். ஆயுத அடக்குமுறை மூலம் அல்ல.

நன்றி :-உதயன்

0 Comments: