Tuesday, February 12, 2008

முதல் "அடி'யும் முதல் "காலடி'யும்

நாடு பற்றி எரியும்போது பிடில் வாத்தியம் வாசித்துக் கொண்டிருந்தானாம் நீரோ மன்னன்.
அதுபோலவே படுகின்றது இலங்கை தொடர்பான புதுடில்லியின் செயற்பாடும்.
இலங்கையில் யுத்தம் தீவிரமடைந்து, மக்களின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகி, பேரவல நிலை ஏற்பட்டிருக்கின்றது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகள் தமது பிரஜைகளை இலங்கையில் பயணிப்பதைத் தவிர்க்கும்படி பயண எச்சரிக்கையை விடுத்திருக்கின்றன. எங்கும், எந்நேரமும், எதுவும் நடக்கலாம் என்ற அச்ச சூழல் இலங்கையில் நிலவுகின்றது என்ற யதார்த்தப் புறச்சூழலை அந்தந்த நாடுகள் உணர்ந்து கொண்டதன் விளைவாகவே இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், அருகில் இருக்கும் நமது அயல் வல்லாதிக்க நாடான இந்தியா மட்டும் இது குறித்தெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் வழமைநிலை இங்கு நிலவுவதுபோல மிகத் தாராளமாக நடந்துகொள்கின்றது.

இலங்கையில் பயணிப்பது குறித்துக் கூட கவனமாக இருங்கள் என்று மேற்கு நாடுகள் தனது பிரஜைகளுக்கு எச்சரிக்க இந்தியாவோ இவற்றுக்கு மத்தியில் தனது வர்த்தக முதலீட்டாளர்களை இங்கு கூட்டிவந்து இங்கு முதலீடு செய்வது குறித்துத் தீவிரமாகச் சிந்திக்கின்றது.

நெருக்கடி நிலைமை முற்றி, இலங்கையில் முழு அளவில் போர் வெடித்து, அதன் தீவிரம் தென்பகுதியிலும் மோசமான அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய பேராபத்துச் சூழல் நெருங்கி வருகையில் இந்தியா, மேலும் இருநூறு கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடுகளை இலங்கையில் கொண்டுவந்து கொட்டுவது குறித்து சிந்திக்கின்றது.
இதுபற்றிய பேச்சுக்களை நடத்தத் தனது வர்த்தக அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை வேறு கொழும்புக்கு அனுப்பி வைத்திருக்கிறது பாரதம்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காணும் எண்ணத்தை முழுதாகத் துறந்து, இராணுவ வழித் தீர்வுக்காகப் போர்வெறிகொண்டு, யுத்தத் தீவிரத்தில் கொழும்பு செயற்படுகின்றது என்பது அப்பட்டமாக வெளிப்படையாக தோற்றுகின்றது.
அந்தப் போர்வெறித் தீவிரத்தை சர்வதேச கண்களுக்கு மறைப்பதற்காக அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் என்ற கயிறையும் கொழும்பு அரசு அவிழ்த்துவிட்டுள்ளது என்பதும் வெளிப்படை.

ஆனால், அந்தச் சூதுவாது ஏதும் புரியாமல், இலங்கை அரசின் அந்த நடவடிக்கையை விழுந்தடித்துக்கொண்டு "வரவேற்கத்தக்க முதல் காலடி' என்று பாராட்டியது இந்தியா.
ஆனால் அந்த மெச்சுதல் கிடைத்து சில தினங்களிலேயே அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது மட்டுமே அது மாத்திரமே இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தமது ஒரே நடவடிக்கை என்பதை நாட்டு மக்களுக்குத் தாம் ஆற்றிய சுதந்திரதின உரையில் தெளிவாகவும், உறுதியாகவும், பகிரங்கமாகவும் அறிவித்ததன் மூலம், அந்தச் செயற்பாடே தீர்வுக்கான தமது முதல் காலடியும், இறுதிக் காலடியும் கூட என்று தெளிவுபடுத்தினார் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ.

இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பிரதான தரப்பான தமிழர்களுடன் அவர்களின் உண்மைப் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தாமல் தென்னிலங்கையில் தமது அரசுக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளை மட்டும் தனது முடிவுக்கு தலையசைக்கச் செய்துவிட்டு இருபது வருடங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்டு, சட்டமாக்கப்பட்டும், நடைமுறைச் சாத்தியப்படாமல் கிடப்பில் தூக்கிப்போடப்பட்ட அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தைத் தூக்கிப் பிடித்து
அதுவே, இலங்கை இனப்பிரச்சினைக்கு உகந்த தீர்வு என்று "தத்துவம் பிளந்து' அதை நடைமுறைப்படுத்தப் போகின்றவர் போல நடிப்புக் காட்டுகிறார் அரசுத் தலைவர்.
அதைக்கூட முழு அளவில் நடைமுறைப்படுத்தும் திடசங்கற்பமும், உறுதியும், மன எண்ணமும் அவருக்குக் கிடையவே கிடையாது என்பதும் தெரிந்த சங்கதிதான்.
அந்த வகையில் பார்த்தால், உண்மையான இதயசுத்தியுடன் அணுகப்படுகின்ற அமைதி முயற்சிகளுக்கு விழுந்த "முதல் அடி' (First Blow), இந்த அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் என்ற எத்தன நாடகம். அதையே 'முதல் அடி' (first step) என்று புரியாமல் சிலாகித்திருக்கிறது இந்தியா.

இந்தப் புரியாத போக்கின் தொடர் செயற்பாடுதான், இலங்கை இக்கட்டில் சிக்கியிருக்கும் இந்த, இன்றைய நிலையில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சரியான பாதையில் கொழும்பை வழி நடத்துவதை விடுத்து, கொழும்பின் தவறான போக்கை ஏற்று, அங்கீகரித்து, ஊக்குவிப்பது போல இங்கு வர்த்தக முதலீட்டில் அதிக ஆர்வம் காட்டும் செயற்பாட்டை இச்சமயத்தில் இந்தச் சந்தர்ப்பத்தில் மேற்கொள்வதுமாகும்.

உதயன்

0 Comments: