நீதிமன்றத்தின் தீர்ப்பு அல்லது உத்தரவு தனக்குச் சாத கமாக வராவிட்டால் நீதிமன்றத்தை அல்லது நீதிபதியைக் குறைகூறுவது சிலரின் பொதுவான பண்புதான்.
தானும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை அடிக்கடி நினைவூட்டி வருகின்றது தென்னிலங்கை அரசு.
மனித உரிமை மீறல்களுக்காக இலங்கை அரசையும் சேர்த்துக் கண்டனங்களை முன்வைத்திருக்கின்றன சர்வ தேச மன்னிப்புச் சபை உட்பட பல்வேறு பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்புகள்.
அதற்காக சர்வதேச மன்னிப்புச் சபையைப் பெரிதும் குறைகூறி, அதன் நடுநிலைத் தன்மை குறித்துக் கேள்வி எழுப்பி, கடுங்குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசின் சார்பில் முன்வைத்திருக்கின்றார் இலங்கையின் பாதுகாப்புத் துறைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல.
அக்கண்டனங்களுக்குச் சரியான பதிலடியைச் சாட்டை யாக வழங்கியிருக்கின்றது சர்வதேச மன்னிப்புச் சபை. தமது அமைப்பை பக்கச்சார்பாக நடந்துகொள்வதாகக் கூறிக் குறைசொல்வதை முழுமையாக மறுத்துள்ள அந்த அமைப்பின் தலைவியான இர்னி கான் அம்மையார், மனித உரிமைகள் பேணப்படுவதற்கு இலங்கை முன்னுரிமை கொடுக்குமானால் முதலில் அது, சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் இலங்கைக்குள் நேரடியாகப் பிர சன்னமாகியிருந்து, மனித உரிமைகள் நிலைவரத்தை நேரடியாக மதிப்பீடு செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று இலங்கைக்கு நேரடியாகவே ஒரு போடு போட்டிருக் கின்றார்.
ஆக இலங்கையில் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாகக் கொழும்பு அரசுக்கு சர்வதேசத்தின் ஒரு கருத் தியல் நிலைப்பாடு இப்போது திட்டவட்டமாகத் தெளிவு படுத்தப்பட்டிருக்கின்றது.
சர்வதேச மன்னிப்புச் சபை, ஐ.நாவின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு போன்றவற்றின் பிரதிநிதிகள் நாட்டுக்குள் பிரசன்னமாகி இருந்து, இங்குள்ள நிலைவரங் களை நேரடியாக அவதானித்து, உண்மை பொய்களைக் கண்டறிந்து நிலைமையைத் தெளிவுபடுத்த அனுமதிக்க வேண்டும். இல்லையேல் இலங்கையில் இடம்பெறும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச அமைப்புகள் வெளியிடும் அவதானிப்பு அறிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
சுயாதீன கண்காணிப்பாளர்களின் பிரசன்னத்துக்கு மறுத்துக்கொண்டு மறுபுறம் சர்வதேச அமைப்புகளின் அறிக்கைகளைக் குறைகூறுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது தெளிவு.
ஆனால், இலங்கை அரசைப் பொறுத்தவரை சர்வதேசக் கண்காணிப்பாளர்களை இலங்கைக்குள் அனுமதிப்பது என்பது மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திண்டாடும் ஓர் இக்கட்டைத் தரும் விவகாரமாகிவிட்டது.
வடக்கு கிழக்கில், குறிப்பாக அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்.குடாநாடு போன்ற பகுதிகளில், தினசரி ஆள்கடத்தல்கள், அச்சுறுத்தல்கள், சட்டவிரோதப் படுகொலைகள், கப்பம் கோரல்கள் என்று மோசமான மனித உரிமை மீறல்களும் அட்டகாசங்களும் தாராளமாக நடந்தேறி வருகின்றன. அரசுப் படைகளினாலும் அவற் றின் ஆதரவில் இயங்கும் புலனாய்வுக் குழுக்கள், ஒட்டுக் குழுக்கள் போன்றவற்றினாலும் புரியப்படும் அரச பயங்கரவாத மனித உரிமை மீறல்களாகவே பலதரப்பினாலும் இவை கருதப்படுகின்றன.
இந்தப் பின்னணியில் சர்வதேச அவதானிப்பாளர்களை இலங்கைக்குள் அனுமதிப்பது உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கிவிடும், அதனால் மோசம் ஏற்பட்டு விடும் என்று அஞ்சும் இலங்கை அரசு, அதன் காரணமாக சர்வதேச பார்வையாளர்களை இலங்கைக்குள் அனுமதிக்க மறுக் கின்றது. அப்படி அனுமதிப்பது இலங்கைத் தேசத்தின் இறை மைக்கு இழுக்கு என்று கதை வேறு விடுகின்றது அது.
அதேசமயம், அவர்களை அனுமதிக்க மறுத்து விட்டு, அந்த சர்வதேச அமைப்புகள் இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகத் தெரிவிக்கும் அவதா னிப்புகளைக் குறைகூறவும் முடியாதநிலை இலங்கைக்கு.
இப்படி இரண்டும் கெட்டான் நிலையில் அல்லாடும் இக்கட்டு இலங்கை அரசுக்கு.
ஐ.நா. பாதுகாப்புச் சபையின் மனித உரிமைகள் தொடர் பான செயலணிக் குழுவின் கூட்டமும், ஐ.நா.மனித உரி மைகள் கவுன்ஸிலின் ஜெனீவா அமர்வும் இலங்கை மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக ஆராயவிருக்கையில்
இலங்கை நிலைமை தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபை, எல்லையற்ற பத்திரிகையாளர் அமைப்பு, மனித உரி மைகள் கண்காணிப்பகம், ஆசிய மனித உரிமைகள் அமைப்பு போன்றவை தொடர்ந்து பகிரங்க அறிவித்தல் களையும் அவதானிப்பு அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றன.
இவை ஒருபுறம் மனித உரிமைகளைப் பேணுவது தொடர்பான விடயத்தில் கொழும்பின் பொறுப்பற்ற அசி ரத்தைப் போக்கை வன்மையாகக் கண்டிப்பனவாகவும், மறுபுறம் நடுநிலையான சர்வதேச கண்காணிப்பாளர் களின் பிரசன்னத்துக்கு இடமளிக்க மறுக்கும் கொழும்பின் போக்கைக் குறைகூறுவனவாகவும் அமைந்திருப்பது அவ தானிக்கத்தக்கதாகும்.
இலங்கைக்குள் சர்வதேசக் கண்காணிப்பாளர்களை அனுமதிக்கும்படியான கடும் அழுத்தம் ஐ.நா. மற்றும் மேற் குலகு உட்பட்ட சர்வதேச மட்டங்களில் இருந்து இலங் கைக்கு இனிமேல் வரும் என்பதும் எதிர்பார்க்கப்படுவது தான்.
அதை எப்படிச் சமாளிக்கப் போகிறது இலங்கை? கெஹலிய ரம்புக்வெல போன்றோரின் அடிப்படையற்ற உரைகளையும் பேச்சுக்களையும் மட்டும் நம்பி இந்த சர்வதேச அழுத்தத்தை இலங்கையால் சமாளிக்கக் கூடிய தாக இருக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
நன்றி உதயன்
Sunday, February 17, 2008
சர்வதேசக் கண்காணிப்பாளர்களை இங்கு அனுமதிக்கக் கோரும் அழுத்தம் தீவிரமாகும்
Posted by tamil at 6:11 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment