Tuesday, February 19, 2008

மரணத்திற்குள் வாழும் மண்ணிலிருந்து...

'வன்னிப்பகுதியையும் விரைவில் மீட்டு ஏனைய பகுதிகளைப் போன்ற சுதந்திரமான வாழ்வை அந்த மக்களுக்கும் ஏற்படுத்துவோம்" இது சிறிலங்காவின் சனாதிபதி மகிந்த ராஜபக்ச அடிக்கடி கூறிவரும் கருத்து இதனையே இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தக் கூற்றை அடிப்படையாக வைத்து மகிந்த ராஜபக்ச பெற்றுத்தரத் துடிக்கின்ற வன்னி மக்களுக்கான சுதந்திர வாழ்வு குறித்து ஆராய்வதற்காக ஏற்கனவே மகிந்த ராஜபக்சவின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் ~சுதந்திர தமிழ் பூமி| பற்றி நோக்குவோம்.

'என்னால இஞ்ச இருக்க முடியாமல் இருக்கு உங்கு வருவம் எண்டா வன்னிக்கு ஏன் போறாய் எண்டு பிடிச்சுக்கொண்டு போடுவார்களோ எண்டு பயமா இருக்கு கொழும்புக்குப்போய் வெளிநாடு போக முயற்சிக்காலம் எண்டா அங்க இதைவி;ட மோசமாம் மாலை ஆறு மணிக்குப் பிறகு வவுனியா நகர் வெறிச்சோடிவிடுது. சனத்தின்ர முகத்தில சந்தோசம் இல்ல எப்ப என்ன செய்வானோ எண்டு பயமா இருக்;கு உங்க (வன்னிக்கு) ரெலிபோன் எடுத்தா சந்தேகக் கண்ணோடதான் பார்ப்பான் 'இது அண்மையில் வவுனியாவில் இருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட எனது உறவுக்கார இளைஞரின் மனக்குமுறல். இவ்வாறாகத்தான் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்கின்ற எமது தமிழ் உறவுகளின் துயர்நிலை இருக்கிறது. காரணம் இன்றிய கைதுகள், கடத்தல்கள், கப்பம் கேட்டு கொலை மிரட்டல்கள், புலி ஆதரவாளர்கள் எனச் சந்தேகிக்கின்றவர்களைக் கொன்றொழித்தல்.... எனத் தொடருகின்ற மகிந்தவின் சுதந்திர பூமியின் வாழ்வியக்கங்களில் தமிழினம் சின்னாபின்னமாகி வருகிறது.

சில நாட்களுக்கு முன் கொழும்புக்குப் பயணம் செய்து திரும்பிய வன்னிப் பாடசாலை அதிபர் ஒருவருடன் கதைத்துக்கொண்டிருக்கும் போது அவர் தன் அனுபவமாகவும் அங்கு பலருடன் கதைத்ததிலிருந்து பெற்றுக்கொண்டதுமான தகவல்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். (அவரது பாதுகாப்புக் கருதி பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது)

'ஓமந்தைச் சோதனைச் சாவடியிலிருந்தே எமக்கான கெடுபிடிகள் ஆரம்பிக்கின்றன. எந்தவித வேறுபாடும் இன்றி கால்கடுக்க காக்கவைத்து சோதனையிடுவார்கள் அதன் பின் அங்கே கழுகுப்பார்வையுடன் நிற்கும் இராணுவப் புலனாய்வுத்துறையினரிடம் இருந்து தப்பிச் செல்வது பெரும் சிரமமான காரியம்.

கொச்சைத் தமிழில் எம்மைத் திக்குமுக்காட வைத்து கேள்விகளால் குடைந்து தமக்கான தகவல்களை அவர்கள் பெற முயற்சிக்கின்றார்கள். இதில் நாங்கள் புத்திசாதுரியமாக எம் நிலத்தை காட்டிக்கொடுக்காமல் விடை அளிக்கவேண்டும் இவ்வாறாக அவர்களிடம் இருந்து தப்பிச் சென்றால் அடுத்தடுத்த பயணங்களும் இராணுவப் பதற்றம் நிறைந்ததாகவே இருக்கும்.

வவுனியா நகர் சென்றடைந்தால் அங்கு சட்டித்தொப்பித் தலைகளின் நடமாட்டமே எம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மக்கள் மகிழ்ச்சியாக, சுதந்திரமாக தமது செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாதுள்ளது. பெரும்பாலும் மக்களின் நடமாட்டம் நகர்ப்பகுதியில் குறைந்தே காணப்படுகிறது. வியாபாரிகள் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மிகுந்த பயத்துடனே உள்ளனர்.

எனக்குத் தெரிந்த சில வர்த்தகர்களை வவுனியா நகரில் சந்திக்க நேர்ந்தது. இராணுவக் கெடுபிடிகளால் அவர்களின் வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்பைச் சந்திக்கின்ற நிலையில் தேசவிரோத கும்பல்களின் நடவடிக்கைகள் அவர்களை வெகுவாகப் பாதிப்படையச் செய்துள்ளது.

புளொட் எனப்படுகின்ற தேசவிரோத அமைப்பினர் ஒவ்வொரு வர்த்தகர்களிடமும் ரூபா ஐந்து இலட்சம் முதல் பத்து இலட்சம் வரை கப்பமாகக் கோரியிருக்கின்றனர். அத்தொகையைக் கட்டாவிட்டால் அவர்கள் கொலை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. இதனால் பல வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடிவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

அண்மையில் வவுனியா வர்த்தக நிலையங்கள் மீது புளொட் தேசவிரேதக் கும்பல் மேற்கொண்ட நடவடிக்கை வர்த்தகர்களை ஆத்திரம் கொள்ளச் செய்துள்ளது.

அரச படைக் கெடுபிடிகளைக் கண்டித்து அவர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி எதிர்ப்பைக்காட்டிய போது அதனைக் கைவிட்டு வர்த்தக நிலையங்களைத் திறக்குமாறு தேசவிரோதக் கும்பல் மிரட்டியதுடன் அவ்வாறு செய்யாத வர்த்தக நிலையத்திற்குள் மனித மலத்தைக் கொண்டு சென்று கொட்டி அநாகரிகமான செயலை மேற்கொண்டுள்ளனர். இதனை அண்மையில் வெளிநாடொன்றிலிருந்து திரும்பிய புளொட்டின் பகுதி தலைவன் ஒருவனே முன்நின்று நடத்தியதாக அந்த வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

பொதுவாக வவுனியாவில் நான் சந்தித்த வர்த்தகர்களிடமும் அதிபர்களிடமும் பொது மக்களிடமும் தாம் எப்போது மீட்கப்படுவோம் என்ற ஏக்கமே மேலோங்கியிருந்ததைக் காணமுடிந்தது. பல பொதுமக்கள் தம் சொந்த நிலத்தை விட்டுப்போகக் கூடாது என்ற மனநிலையிலேயே இராணுவ, ஒட்டுக்குழுக்களின் கெடிபிடிகளுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரிடமும் தமது நிலம் சுதந்திரம் அடைய வேண்டும் என்ற ஆதங்கமே மேலோங்கியுள்ளது.

வவுனியாவிற்குள் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் எனது நண்பர்களான பாடசாலை அதிபர்களிடம் கதைக்கும் போது அவர்கள் இராணுவ முகாம்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தும் செய்திகளையே இந்த மக்கள் எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

இதற்;கு ஒரு சம்பவத்தைச் சொல்வதானால் கடந்த 12 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் மன்னார் தள்ளாடி படைத்தளம் மீது எறிகணைத் தாக்குதல் நடாத்தியபோது அச்சூழலில் நின்ற எனக்குத் தெரிந்த ஒருவர் அச்சம்பவத்தை மகிழ்ச்சியுடன் விபரித்தார்.

எறிகணைகள் வந்து விழ சுற்றுப்புற பாதுகாப்பில் நின்ற படையினர் தலை தெறிக்க ஓடியதை அவர் கண்டு தொலைபேசி மூலம் என்னுடன் பகிர்ந்து கொண்டார். அவர்களை ஓட ஓட விரட்டவேண்டும் எனும் தன் ஆதங்கத்தையும் தெரிவித்துக்கொண்டார். அத்தாக்குதல் சம்பவம் மன்னார்வ, வுனியா மக்களிடம் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. என்பதை நான் சந்தித்த பலர் மூலமாக அறிந்து கொண்டேன். சிங்கள ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து தாம் மீட்கப்பட வேண்டும் என்ற மன உணர்வு அந்த மக்களிடம் முன்னரைவிட இப்போது அதிகரித்துக் காணப்படுவதை என்னால் உணரமுடிந்தது" என வவுனியா நகர் பகுதியில் தான் தரித்து நின்ற அனுபங்களைப் பகிர்ந்து கொண்ட அதிபர் தொடர்ந்த தன் கொழும்புப் பயணம் பற்றி விபரித்தார். வவுனியாவிலிருந்து நான் சென்ற வாகனம் மதவாச்சியில் மிகப்பெரிய சோதனைச் சாவடியின் நடவடிக்கைகளுக்கு உட்பட்டது.

ஓமந்தை சோதனைச் சாவடியைப் போன்ற சோதனை நடவடிக்கைகளுடன் என்பதைவிட அதைவிட மோசமான சோதனைச் சாவடியாக அது காணப்பட்டது. இது அண்மையிலேயே அமைக்கப்பட்டிருந்தது. சிவில் உடை தரித்தவர்கள் அங்கு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். எங்கள் உடமைகளை ஒவ்வொன்றாக எடுத்து உதறி நீண்ட நேரமாக சோதனையிட்டார்கள். அதனைப் பார்க்கும் போது எனக்கு தமிழீழத்தின் எல்லையை இவர்களே தீர்மானித்துவிட்டார்கள் என்ற எண்ணந்தான் வந்தது.

அந்தச்சோதனை நடவடிக்கைகள் முடிய அடுத்ததாகப் பெரிய இடத்தில் ஒவ்வொரு இடத்திற்குமான பேருந்துகள் நிற்கும் அதில் ஏறிப்பயணத்தைத் தொடரலாம்.

இவ்வாறு கொழும்பு சென்று சேர்ந்தபோது அங்கும் பல இராணுவ, காவல்துறை கெடுபிடிகளுக்கு உட்பட வேண்டியிருந்தது. ஒரு அரச பாடசாலை ஒன்றின் அதிபரான எனக்கே இந்த நிலை எனின் சாதாரண தமிழ் மக்களின் பயணம் எப்படியிருக்கும்.

கொழும்பில் என் பணிசார் விடயமாக ஒரு விடுதி ஒன்றில் தங்கினேன். இரவு தூங்கிவிட்டு விடிய எழுந்து பார்த்தால் வீதி எங்கும் இராணுவம் குவிக்கப்பட்டிருந்தது. எங்கு பார்த்தாலும் அவர்களின் கண்கள் குடைந்து கொண்டிருந்தன இதுதான் அங்குள்ள நாளாந்த நிலைமை என்பதை பின்னர் புரிந்துகொண்டேன் மறுநாள் இருப்பிடத்தை மாற்றி வேறோர் பகுதியில் தங்கினேன் அங்கும் இதே நிலைமைதான் அங்கு வாழ்கின்ற தமிழர்களின் பொழுது நாளாந்தம் அச்சத்துடனே கழிகின்றது. திறந்த வெளிச்சிறை என்பதை நேரில் அனுபவிக்க முடிந்தது எனத் தன் நீண்ட அனுபவத்தில் சிறிய பகுதிகளை என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தார் அந்த அதிபர்.

ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழினம் அடிமைகளாக்கப்படுவதையும் கொன்றொழிக்கப்படுவதையும் மிரட்டிப்பணியவைத்து பணம் பறிக்கப்படுவதையும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து இயங்கும் சர்வதேச ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் வெளிக்கொண்டுவர முயலாதது ஏன் என்ற கேள்வியைக் கேட்க வேண்டியுள்ளது.

ஈழத்தமிழினத்தில் சாதியம் எவ்வாறு உள்ளது எனச் செய்திப் பெட்டகம் தயாரித்து வழங்கும் சர்வதேச ஊடகம் சனநாயக நாட்டின் உண்மைத்தன்மை குறித்துக் கேள்வி எழுப்பிபெட்டகம் தயாரிக்க முடியாதுள்ளது வேதனைக்குரியதே.

இன்று இலங்கைத்தீவில் ஊடகவியலாளர்களிற்கும் பாதுகாப்பு இல்லை என்பது வேதனைக்குரிய விடயமாக இருந்தாலும் தாம் ஏற்று நிற்கின்ற கடமைக்காக இயன்ற வரையாகிலும் இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதியில் உள்ள சர்வதேச ஊடகவியலாளர்கள் அப்பகுதி மக்களின் அவலநிலையினை வெளிக்கொண்டு வரவேண்டும்.

உண்மையில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடக்கின்ற அடக்குமுறைகள் பல வெளிவராமலே இருந்து விடுகின்றன. குறிப்பாக யாழ். குடா, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற இடங்கள் இரும்புத் திரையிடப்பட்ட படுகொலைக்களமாகவே உள்ளன. அங்கிருந்து உண்மைத்தகவல்கள் வெளிப்படுத்தப்படும் விகிதம் மிகக்குறைவானதாகவே உள்ளது.

பேய் அரசு ஆட்சி நடக்கும் அந்தப் பகுதிகளில் பிணம் தின்னி அமைச்சர்களாய் உள்ள ஒட்டுக்குழுக்களின் அட்டகாசம் மக்களை வெகுவாகப் பாதித்துள்ளன.

யாழ்;. குடா நாட்டிலிருந்து தொலைபேசியில் வன்னிப்பகுதிக்குக் கதைப்பதே பெரும் குற்றமாக அங்கு பார்க்கப்படுகிறதாம் தொலைபேசிகள் அனைத்தும் ஒட்டுக் கேட்கப்படுகின்றனவாம். இதனால் அந்த மக்கள் தமது மன ஆதங்கத்தை வெளிப்படுத்தக் கூட சுதந்திரம் அற்றவர்களாய் உள்ளார்கள் தாம் எப்போது மீட்கப்படுவோம் என்ற ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பு அவர்களிடம் அதிகரித்து வருவதாக அங்கிருந்து வரும் சிலர் மூலம் அறிய முடிகிறது.

மாலை ஆறு மணியுடன் வீட்டிற்குள் அடங்கி பகலில் பயத்துடன் நடமாடி வீதியில் போய்வரும் வெள்ளை வான்களுக்கெல்லாம் வெருண்டடித்து வாழும் வாழ்க்கையை யார்தான் ஏற்பர்? இது தான் மகிந்த தமிழர்களுக்காய் பெற்றுத்தர துடிக்கின்ற சுதந்திர வாழ்வு.

கிழக்கை முற்றுமுழுதாக மீட்டுவிட்டோம் அங்கே 'கிழக்கின் அபிவிருத்தி" என்ற திட்டத்தை மேற்கொள்கிறோம். என்ற கோசங்களால் சர்வதேசத்தை ஏமாற்ற முயலும் மகிந்தர் நடாத்தி வரும் அடாவடிகள் எண்ணில் அடங்காதவை.

ஒட்டுக்குழுக்களுக்கு உருவேற்றி, அரசியல் நாடகம் ஆடும் அவரின் கைங்கரியம் வெற்றி அளிக்கப் போவதில்லை. என்பதையே அங்கிருக்கும் மக்களின் மனங்கள் உணர்த்தி நிற்கின்றன.

ஒட்டுமொத்த தமிழினத்தின் விடுதலையையும் ஏற்படுத்தும் சிறப்புக்குரிய மண்ணாக இன்று வன்னி மண்ணே உள்ளது என்ற எதிர்பார்ப்பே, ஒவ்வொரு தமிழனின் மனதிலும் நிலைத்திருக்கிறது.

இவ்வாறான நிலையில் வன்னி மண்ணையும் ஆக்கிரமித்து மகுடம் தரிக்கும் கனவில் இருக்கும் மகிந்தவின் நப்பாசைக்கு இந்த மண் விரைவில் பதில் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை

நன்றி :- ப.துஸ்யந்தன்

0 Comments: