Monday, February 25, 2008

தொடர்ந்து மூடி மறைக்கப்படும் அரச பயங்கரவாத அட்டூழியம்

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான பூநகரி, கிராஞ்சி மக்கள் குடியிருப்புகள் மீது கடந்த வெள்ளியன்று இலங்கை விமானப்படை விமானங்கள் குண்டுமாரி பொழிந்ததில் ஒரு தாய், அவரது இரண்டு குழந்தைகள், மற்றுமொரு குழந்தை, இரு ஆசிரியர் உட்பட எட்டுத் தமிழ்ப் பொதுமக்கள் பலியான கொடூரம் பற்றிய தகவல் தென்னிலங்கையில் இருட்டடிப்புச் செய்யப்பட்டு விட்டது. தமிழ்ப் பத்திரிகைகளைத் தவிர மற்றெல்லா ஊடகங்களும் இதனை அமுக்கி வாசித்துவிட்டன. தமிழர் தாயகம் மீதான அரச பயங்கரவாதத்தின் குரூர முகத்தை ஒளித்து மறைப்பதில் தமது இனவாதப் பண்பாட்டை அவை ஒன்றுபட்டு வெளிப்படுத்தி நிற்கின்றன.

போதாக்குறைக்கு விமானக்குண்டுவீச்சில் பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படவேயில்லை, ஏற்படவே மாட்டாது எனச் சாதிக்கின்றது அரசுப் படைத்தரப்பு.
விமானக்குண்டு வீச்சில் அங்கு யாரும் கொல்லப்பட்டிருந்தால் அவர்கள் நிச்சயம் விடுதலைப் புலிகளாகத்தான் இருப்பார்கள் என்றும் அடித்துக் கூறுகின்றார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார.

பூநகரியில் அரச பயங்கரவாதத்தின் கொடூரத்தை அப்படியே அம்பலப்படுத்துகின்ற புகைப்படங்களை தமிழ்ப் பத்திரிகைகள் மட்டுமே பிரசுரித்திருந்தன. அவை கூட புலிகளால் இட்டுக்கட்டித் தயாரிக்கப்பட்டவை என்று படைத்தரப்பால் கதை அவிழ்த்து விடப்படுகின்றது.
இலங்கையின் கள நிலைவரத்தை நேரில் கண்டறிவதற்காக ஐ.நாவின் உயரதிகாரியான ஐ.நாவின் அரசியல்விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதிச் செயலாளர் நாயகம் அங்கெலா கானே அம்மையார் கொழும்பில் வந்து நிற்கும் சமயத்தில் கூட, இத்தகைய அரச பயங்கரவாதம் சர்வ சாதாரணமாக அரங்கேறுவதும், அது பற்றிய தகவல் தென்னிலங்கைத் தரப்பால் திட்டமிட்டு மூடி மறைக்கப்படுவதும் இடம்பெறுகின்றன.

தன்னுடைய நாடு எனத் தான் உரிமை கோருகின்ற பிரதேசத்தின் மீது இத்தகைய அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்ட அராஜகத்துக்குப் பலனாகத்தான் கொசோவோவை இழக்கவேண்டிய துர்ப்பாக்கியம் சேர்பியாவுக்கு ஏற்பட்டது.

இவ்வகையான அரச பயங்கரவாதத்தை, சட்ட ரீதியான இறைமையுள்ள அரசு என்று தன்னைக் கூறிக்கொள்ளும் ஓர் நிர்வாகம் புரிவதை சர்வதேசம் சகித்துக் கொள்ளாது. மாறிவரும் சர்வதேச எண்ணப்போக்கு அதையே பிரதிபலித்து நிற்கின்றது.
கொசோவோ விடுதலை இராணுவத்தை முதலில் பயங்கரவாத அமைப்பாக சித்திரித்த மேற்குலகம், அந்தக் கொசோவோ மக்களுக்கு எதிராக ஆட்சியாளர்களின் அரச பயங்கரவாதம் தீவிரமடைந்து பெரும் அராஜகமாக விஸ்வரூபம் பெற்றபோது, அந்த விடுதலை இராணுவத்தையும் அதன் பிரிவினைப் போராட்டத்தையும் ஒரு தேசிய எழுச்சியாகவும்,தேசமாகவும் அங்கீகரித்து, தன்னைத் திருத்தி நெறிப்படுத்திக் கொண்டது.
இலங்கையிலும் அதனை ஒத்த நிலைமையே முற்றி வருவதை இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் ஐ.நாவின் உதவிச் செயலாளர் நாயகம் அங்கெலா கானே அம்மையார் உணரக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

பூநகரிக் கொடூரம் போன்ற விடயங்கள் சர்வதேச சமூகத்துக்கு ஒரு விவகாரத்தைத் தெளிவுபடுத்துகின்றன என்று நம்பலாம்.
வான் தாக்குதல் கொடூரத்தைக் கூட பேரழிவைக்கூட வெகு சாதாரணமாக, மிக "ஸிம்பிளாக', மூடி மறைக்கும் நிலையில்தான் கொழும்பு உள்ளது. எல்லா அரச பயங்கரவாதக் கொடூரங்களையும் புலிகளின் பொய்ப் பிரசாரம் அல்லது இட்டுக்கட்டிய வேலை என்று வகைப்படுத்திச் சமாளிக்கக் கொழும்பு முயல்கின்றது என்பதே அது.
எனவே, போரில் மோதும் தரப்புகளான புலிகளின் கருத்தையோ அல்லது அரசுத் தரப்பின் கயிறுகளையோ நம்புவதை விடுத்து, ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகம் தனது சுயாதீன அவதானிப்புகளை ஆய்ந்து அறிந்து பெறுவதற்கு முன்வரவேண்டும். அதன் மூலம் உண்மையை அம்பலப்படுத்துவதும் சிறுபான்மையினத்தவருக்கு எதிரான பேரினவாதக் கொடூரத்தை வெளிக்கொணர்வதும் சர்வதேசத்தின் பொறுப்பாகின்றது.
அப்படி உண்மைகளைக் கண்டறிவதற்கு முழு அதிகாரத்துடன் கூடிய கண்காணிப்புக்குழு இங்கு நிலைகொள்வது அவசியமாகும்.

ஆகவே, அத்தகைய ஐ.நா.கண்காணிப்புக் குழு இங்கு நிலைகொள்வதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று இலங்கை அரசு மறுத்துக்கொண்டிருக்கும்வரை
பூநகரிக் கொடூரங்கள் போன்ற அரச பயங்கரவாத அராஜகங்கள் தொடர்பான அரசுத் தரப்பின் ஏமாற்று மறுப்புக்களை சர்வதேசம் நம்பாது என்பதை தனது நிலைப்பாடாக சர்வதேச சமூகம் இலங்கைக்கு உணர்த்தவேண்டும்.

அப்படி உணர்த்துவதற்கு வாய்ப்பான சந்தர்ப்பமாக ஐ.நா. உதவிச் செயலாளர் நாயகத்தின் இலங்கைக்கான தற்போதைய விஜயம் அமைந்திருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தை அந்த வழியில் சரிவரப் பயன்படுத்துவாரா அவர்?

நன்றி :-உதயன்

0 Comments: