Saturday, February 9, 2008

ஒடுக்கப்படும் தமிழ் மக்களும் ஏமாற்றப்படும் சிங்கள மக்களும்

* வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்ட தமிழர்கள், முஸ்லிம்களின் பாரம்பரிய பிரதேசத்தில் சுயாட்சி அமைப்பொன்றை ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் நடைமுறைக்கு கொண்டுவந்து அதிகாரப் பகிர்வை வழங்குவதே அரசினால் பயங்கரவாதம் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள தேசிய இனப்பிரச்சினைக்குரிய தீர்வாக இருக்கமுடியும். ஆனால், ஜனாதிபதியின் சுதந்திர தின உரையானது ஒற்றையாட்சி, பதின்மூன்றாவது திருத்தப் பகுதிகள் என்பன பற்றியே மீள் உரைப்புச் செய்து கொண்டது. இதன்மூலம் பேரினவாத வேதாளம் மீண்டும் முருங்கையில் ஏறிக் கொண்ட கதையைத் தான் நினைக்க வேண்டியுள்ளது.
காலகண்டன்

கடந்த 4 ஆம் திகதி இலங்கைக்கு சுதந்திரம் என்பது வழங்கப்பட்டதன் 60 ஆவது ஆண்டுக் கொண்டாட்டம் அரசாங்கத்தினால் நடாத்தப்பட்டது. காலிமுகத்திடலில் வரிசையாக நட்டு வளர்க்கப்பட்ட பனைவடலிகளின் பக்கத்தில் அமைக்கப்பட்ட மேடையில் நின்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அத்துடன், படைவலுவை வெளிப்படுத்தும் ஆயுதப் படைகளின் அணிவகுப்புகளும் இடம்பெற்றன.

1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் இலங்கையின் நிலவுடைமை முதலாளித்துவ வழிவந்த சிங்கள தமிழ் முஸ்லிம் மேட்டுக் குடியினரின் கைகளில் சுதந்திரம் என்பதனை ஒப்படைத்துச் சென்றனர். தமக்கும் தம்மைப் போன்ற ஏகாதிபத்திய உலக மேலாதிக்க சக்திகளுக்கும் விசுவாசமான ஆட்சியாளர்களாக இருந்து கொள்வதை உறுதிப்படுத்திக் கொண்டதன் வாயிலாகவே மேற்படி சுதந்திரம் என்பதை வெள்ளை எசமானர்கள் கையளித்துச் சென்றனர். அத்தகைய சுதந்திரத்தின் கீழ் இலங்கை மக்கள் அனைவரும் கடந்த அறுபது ஆண்டுகளில் பெற்றுக்கொண்டவைகள் யாவை என்ற கேள்வி எழுப்புவது நியாயமான ஒன்றாகும்.

இந்த அறுபது ஆண்டுகாலச் சுதந்திரத்தின் கீழ் சொத்து சுகம் ஆடம்பர வாழ்வு அனைத்தையும் அனுபவித்தவர்களாக இருந்து வந்தவர்கள் நிலவுடைமை படைத்தவர்களும் முதலாளிகளும் பெரும் வர்த்தக வியாபாரப் புள்ளிகளுமாகவே காணப்படுகின்றனர். இவர்களின் ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளான அரசியல் தலைமைகளும் ஆட்சித் தலைவர்களும் அதிஉயர் அரசாங்க அதிகாரிகளும் சகல வளங்களையும் செல்வங்களையும் பெற்று வசதி வாய்ப்புகளைப் பெருக்கி வந்துள்ளனர். கடந்த அறுபது ஆண்டுகாலப் பகுதியில் மாறிமாறி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பிடித்து வந்த எவருமே பரந்துபட்ட ஏகப்பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கோ அல்லது நடுத்தர வர்க்க மக்களுக்கோ உரிய வாய்ப்பு வசதிகள் தேவைகளை நிறைவு செய்தார்கள் என்று கூறமுடியாது.

அதனால் தான் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் மக்கள் பிரிவினர் எவரையும் காணமுடியவில்லை. ஆளும் வர்க்கப் பிரதிநிதிகள் மட்டுமே அவர்களுக்குரிய கொழுகொழுப்புகளுடனும் மினுமினுப்புகளுடனும் காலிமுகத்திடலில் வீற்றிருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியினர் இச் சுதந்திர தினக் கொண்டாட்டங்களைப் பகிஷ்கரித்தமைக்குக் காரணம் மக்களுக்கு சுதந்திரத்தால் பயன் இல்லை என்பதால் அல்ல. அடுத்த ஆட்சி அதிகாரத்திற்கு வரும் அரசியல் பிரசார நோக்கிலேயேயாகும். பிரித்தானியரின் நம்பிக்கைக்குரிய அடிமை விசுவாசியாக இருந்து சுதந்திரப் பிரகடனக் கடதாசியை கையேற்று இலங்கையின் முதல் பிரதமரான டி.எஸ். சேனநாயக்கா தான் ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது தலைவராவார். அவருக்கே ஆளும் வர்க்கத்தினர் "தேசபிதா" என்றும் பட்டம் கட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அத்தகைய சுதந்திரத்தின் அறுபதாவது ஆண்டு நினைவு கூரப்படும் போது, இலங்கை மக்கள் அனுபவிக்கும் வாழ்க்கை நிலைபற்றிச் சிந்திக்க வேண்டிய தேவையும் அவசியமும் ஏற்படுகின்றது. நெல் உற்பத்திக்கு பெயர்பெற்ற இவ் இலங்கை நாட்டில் தான் இன்று ஒரு கிலோ அரிசி நூறு ரூபாவரை விற்கப்படுகிறது. ஒரு தேங்காய் நாற்பது ரூபாய்க்கு மேலும் பாண் நாற்பது ரூபாவாகவும் விற்கப்படுகிறது. பால்மாவினதும் எரிபொருட்களின் விலைகளும் மக்கள் எட்டித் தொட முடியாத உயரத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. வேலைவாய்ப்புகள் குறைவடைந்து வருவதுடன் சம்பள உயர்வு என்பது ஜனாதிபதி, அமைச்சர்கள் அதிஉயர் அரசாங்க அதிகாரிகளுக்கு மட்டும் உரியதாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவை தான் அறுபது ஆண்டுகாலச் சுதந்திரத்தின் பெறுபேறுகளாகும்.

இத்தகைய சுதந்திரத்தின் அறுபதாவது ஆண்டினைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது வடக்கு கிழக்கிலும் அதற்கு அப்பால் தெற்கிலும் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ் மக்கள் மட்டுமன்றி சிங்கள முஸ்லிம் மலையக மக்கள் அனைவருமே அச்சம் பீதியுடன் சுதந்திரம் என்ற ஒன்றைப் பற்றி நினைக்கக்கூட முடியாத அவல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு ஏகப் பெரும்பான்மையான இலங்கை மக்கள் எதிர்நோக்கி நிற்கும் பொருளாதார நெருக்கடிப் பிரச்சினைகளுக்கும் தமிழ்த் தேசிய இனமும் ஏனைய தேசிய இனங்களும் எதிர்நோக்கியுள்ள இனப்பிரச்சினைக்கும் உரிய தீர்வுகளையோ திட்டங்களையோ கொண்டிருக்காத மகிந்த சிந்தனை அரசாங்கம் தான் சுதந்திரத்தின் அறுபதாவது ஆண்டைக் கொண்டாடி சுயதிருப்தி கண்டு கொண்டது. இத்தினத்தில் உரையாற்றிய ஜனாதிபதி சுதந்திரத்தின் உண்மையான தன்மைகளை அர்த்தமுடையதாக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் உரையும் வேண்டுகோளும் புதியவை அல்ல. வருடா வருடம் இத்தினத்தில் உரையாற்றி வந்த ஒவ்வொரு அரசுத் தலைவரும் கூறிவந்த விடயங்களைத் தான் ஜனாதிபதியும் தனது மொழியில் கூறியுள்ளார். அறுபது வருடங்களாக மக்களுக்கு அர்த்தமுள்ளவைகளாகச் செய்து முடிக்க முடியாத காரியங்களை இனிமேல் தான் அர்த்தமுடன் செய்யப்போவதாகக் கூறுவது வெறும் பசப்பு வார்த்தைகளேயாகும்.

மேலும், ஜனாதிபதி தனது உரையில் நாட்டு வளங்கள் உற்பத்தி சுயசார்பு பற்றியெல்லாம் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், மேற்குறித்தவைகள் அனைத்தும் ஏற்கனவே ஏகாதிபத்திய உலகமயமாக்கலினால் நாசமாக்கப்பட்டு வந்துள்ளன என்பதை ஜனாதிபதி அறியாதவரல்ல. அப்படி அறிந்திருந்தும் அவரது மகிந்த சிந்தனையின் கீழ் கடந்த இரண்டு வருட ஆட்சியில் அவற்றைத் தடுத்து நிறுத்தவோ அல்லது மீட்டெடுக்கவோ எத்தகைய முன் முயற்சிகள் எடுக்கப்பட்டன என்பது மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும். அவர் சுட்டிக்காட்டிய நுரைச்சோலை அனல் மின் நிலையமும் மேல் கொத்மலை நீர்மின் வலுத்திட்டமும் அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணங்களும் உலகமயமாதலின் கீழான பல்தேசிய நிறுவனங்களுக்கும் அவர்களது சுரண்டல்களுக்கும் உரிய திட்டங்களே அன்றி மக்களுக்குரியவை அல்ல.

கடன்மேல் கடன் பட்டு வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு நெல் உற்பத்தி செய்பவர்கள் விவசாயிகள். அந்த விவசாயிகளிடமிருந்து மிகக் குறைந்த விலையில் நெல்லைக் கொள்வனவு செய்து அதிக விலைக்கு அரிசியை விற்கும் கொள்ளைக்கார முதலாளிகளை அரவணைத்து நிற்கும் அரசாங்கம் தான் விவசாயிகளுக்கு தேசப்பற்றுப் பற்றிப் போதனை செய்கிறது. சில பிரதான அமைச்சர்களும் அவர்களது குடும்பத்தினரும் தான் நெல் கொள்வனவில் விவசாயிகளை உறிஞ்சுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் அண்மைக் காலத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இவ்வாறு ஒருபுறத்தால் விவசாயிகளை கொள்ளையிடும் அதேவேளை, அரிசி இறக்குமதியால் பெரும் முதலாளிகள் நுகர்வோரைக் கொள்ளையடித்து வருகின்றனர் என்பதை தேசப்பற்று மிக்க ஜனாதிபதி அறியாமல் இருப்பது ஏன்?

மண்ணின் மைந்தன் என்றும் சாதாரண மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவர் என்றும் கூறப்பட்ட ஜனாதிபதி தனது சுதந்திர தின உரையில் பிரதானப்படுத்திக் கூறியுள்ள ஒரு விடயம் கவனத்திற்குரியதாகும். அதாவது, பயங்கரவாதம் தான் இன்று யாவற்றையும் விட முக்கியமானது என்றும் அதனை முறியடித்து வெற்றிகொள்ள தற்போதைய சகல கஷ்டங்களையும் தாங்கிக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்துள்ளார். இந்த அழைப்புக்குப் பின்னால் உள்ள செய்தி யாதெனில், இந்த நாட்டில் இனப்பிரச்சினை ஒன்று இல்லை. அப்படி ஏதாவது சிற்சில பிரச்சினைகள் தமிழர்களுக்கு இருக்குமாயின் அவற்றுக்கு ஒற்றையாட்சியின் கீழான மாகாண மட்டத்திலான அதிகாரப் பரவலாக்கம் செய்யப்படும். அதுவும் கிழக்கைப் போன்று வடக்கை மீட்டெடுத்த பின்னரேயாகும். அதற்கு யுத்தமே ஒரே வழியாகும். அந்த யுத்தத்தைப் பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் முன்னெடுப்பதாகும். இதற்கான காலஎல்லை ஆறு வருடம் அல்ல பன்னிரண்டு வருடங்கள் கூட ஆகலாம் என்பதாகும். அதாவது மகிந்த சிந்தனையின் இரண்டு தடவைகளிலான ஆட்சிக்காலத்தைக் கொண்டதாகும்.

இத்தகைய, அர்த்தத்தைக் கொண்ட ஜனாதிபதியின் சுதந்திர தின உரையானது நாட்டையும் மக்களையும் குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களையும் மென்மேலும் நாசகாரத்திற்குள் இட்டுச் செல்லத் தயாராகி வருவதையே குறியாகக் கொண்டுள்ளது.

இன்று இலங்கை இரண்டு பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி நிற்கின்றது. ஒன்று, கொடூர யுத்தமாக மாற்றப்பட்டுள்ள தேசிய இனப்பிரச்சினை. இரண்டாவது, ஏகப் பெரும்பான்மையான நாட்டு மக்கள் அனைவரையும் அமுக்கி வரும் மோசமான பொருளாதார நெருக்கடிப் பிரச்சினை. இவற்றுக்கு சமகால அரசியல் பொருளாதார சமூக யதார்த்தங்களின் அடிப்படையிலும் தூரநோக்குச் சிந்தனை வகையிலும் தீர்வு காணும் ஆற்றலோ துணிவோ செயற்பாடோ இன்றைய ஆளும் தலைமைகளுக்கு இல்லை. அதேபோன்று எதிர்த்தரப்பில் உள்ள ஆளும் வர்க்க தலைமைகளுக்கும் இல்லை என்பதும் திடமானதாகும்.

கடந்த அறுபது ஆண்டுகளில் தேசிய இனப்பிரச்சினையை பகை முரண்பாட்டு நிலைக்கும் ஒடுக்குமுறைச் செயற்பாடுகளுக்கும் பதவிக்கு வந்த ஒவ்வொரு பேரினவாத முதலாளித்துவ அரசாங்கமும் முன்னுரிமை வழங்கி செயற்படுத்தி வந்துள்ளன. ஆனால், வடக்கு கிழக்கு மக்களினதும் ஏனைய தேசிய இனங்களினதும் நியாயமான உரிமைகளை வழங்குவதில் தயக்கங்களும் மறுப்புகளுமே தொடர்ந்து வந்துள்ளன.அவற்றின் வளர்ச்சியாகவே தேசிய இனப்பிரச்சினைக்கு இன்று பயங்கரவாதம் என்று பட்டம் வழங்கப்பட்டுள்ளமையாகும். சமஷ்டி, பிரிவினை, நாட்டைத் துண்டாடல் போன்ற சொற்பதங்களைப் பூதாகரமாகச் சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரப்படுத்தி தமது ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்து வந்தவர்கள் பேரினவாதத் தலைமைகள். இதன் மூலம் தமிழ்த் தேசிய இனத்தின் நியாயமான அபிலாஷைகளையும் உரிமைகளையும் மறுத்து நிராகரிக்க முடிந்தது. அதனையே இன்று யுத்தத்தின் மத்தியில் பயங்கரவாதம் என வியாக்கியானம் கொடுத்து நிற்கிறார்கள். பயங்கரவாத நடவடிக்கைகளை பயங்கரவாத செயற்பாடுகளாக அடையாளம் காண்பது தவறு அல்ல. ஆனால், ஒரு ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் அடிப்படை வாழ்வுரிமைகளையும் அவர்களது அபிலாஷைகளையும் பயங்கரவாதமாகக் காண்பிப்பது தான் தவறின் மேல் தவறாகும். இதன் மூலம் தமிழ் மக்கள் மென்மேலும் ஒடுக்கப்படும் அதேவேளை, சிங்கள மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்பதே இன்றைய அரசியல் யதார்த்தமாக உள்ளது.

வடக்கு கிழக்கு இணைக்கப்பட்ட தமிழர்கள் முஸ்லிம்களின் பாரம்பரிய பிரதேசத்தில் சுயாட்சி அமைப்பொன்றை ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் நடைமுறைக்கு கொண்டுவந்து அதிகாரப் பகிர்வை வழங்குவதே பயங்கரவாதம் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள தேசிய இனப்பிரச்சினைக்குரிய தீர்வாக இருக்கமுடியும்.

ஆனால், ஜனாதிபதியின் சுதந்திர தின உரையானது ஒற்றையாட்சி பதின்மூன்றாவது திருத்தப் பகுதிகள் என்பன பற்றியே மீள் உரைப்புச் செய்து கொண்டது. இதன்மூலம் பேரினவாத வேதாளம் மீண்டும் முருங்கையில் ஏறிக் கொண்ட கதையைத் தான் நினைக்க வேண்டியுள்ளது.

நன்றி - தினக்குரல்

0 Comments: