கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உறை பனியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது சீனா.
சீனாவின் மத்திய, தெற்கு மாகாணங்களில் பனி படர்ந்த சாலைகளால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பனி மூட்டத்தால் விமானப் போக்குவரத்தும் நின்றுவிட்டது. இருக்கும் ஒரே வழி ரயில்வே மட்டுமே.
பெப். 07 ஆம் திகதி தொடங்கிய புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக இப்பகுதியில் இருந்து சென்ற இலட்சக்கணக்கான மக்கள் பரிதவித்துப் போயினர். 4 இலட்சம் பேருக்கு 3 ஆயிரம் ரயில்களே இயக்கப்பட்டன. மின் உற்பத்தி பாதிப்பால் பல நகரங்கள் இருளில் மூழ்கி உள்ளன.
ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இயற்கை விடுத்த சவாலை எதிர்கொண்டாக வேண்டிய நிலையில் சீன அரசு உள்ளது.
ஒருபுறம் தனது பொருளாதார வலிமை, உட்கட்டமைப்பு , பிரமாண்டம் ஆகியவற்றை உலக நாடுகளுக்குப் பறைசாற்றும் பொன்னான வாய்ப்பாக ஒலிம்பிக் போட்டியை சீனா கருதுகிறது. மறுபுறம் ஜனநாயக சக்திகள் சீன அரசின் அடக்குமுறையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டத் தயாராகி வருகின்றன. இன்னொரு புறம் அதிகரிக்கும் சுற்றுச்சூழல் மாசு அரசுக்குப் பெரும் சவாலாக உள்ளது.
ஒலிம்பிக் வீரர்கள் மாசடைந்த காற்றைச் சுவாசிப்பதால் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகலாம் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மாரத்தான் போன்ற ஒரு சில போட்டி அட்டவணை மாற்றப்படலாம் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. இதனால், காற்று மாசடைவதைத் தடுக்க சீன சுற்றுச்சூழல் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், போட்டியின் போது மழை வந்துவிடக்கூடாது என்பதற்காக அதைத் தடுக்க அரசும் , விஞ்ஞானிகள் குழுவும் தயாராகி வருகின்றன. இதைச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
கடும் உறை பனிக்கு `லா நினோ ' எனும் கடலடி குளிர் நீரோட்டமே காரணம் என்று அரசு கூறினாலும் இதற்குப் புவி வெம்மை அடைவதுதான் முதன்மைக் காரணம் எனலாம்.
உலகின் ஓரிடத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றம் மற்றோரிடத்தில் நிச்சயம் பேரழிவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இதைப் போன்ற காலநிலை மாறுபாடுகள் உதாரணம்.
உலகில் குறிப்பாக வளர்ந்த நாடுகளில் உள்ள தொழிற்சாலைகள் வெளியிடும் புகை, நிலக்கரி , பெற்றோல், டீசல் பயன்பாட்டால் எழும் புகை ஆகியவற்றால் வெளியேறும் கரியமில வாயு வளி மண்டலத்தில் தொன் கணக்கில் கலந்துள்ளது. இவை தான் புவி வெப்பம் அதிகரிக்க மூல காரணம் . இது கடலடி நீரோட்டத்தையும் பாதிப்பதால் நிலப்பகுதியில் இது போன்ற பருவநிலை மாறுபாடு ஏற்படுகிறது.
பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்க 1997 ஆம் ஆண்டு கியோட்டா ஒப்பந்தம் உலக நாடுகளால் கொண்டு வரப்பட்டது . அது 2012 ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது.
மரபுசாரா எரிசக்தியை அதிகரிப்பதன் மூலம் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேறுவதை 2008-12 ஆம் ஆண்டுக்குள் 5 சதவீத அளவுக்கு வளர்ந்த நாடுகள் குறைக்க வேண்டும் என்பது முக்கிய விதி.
இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டாலும் தொழிலதிபர்கள் நிர்ப்பந்தம், அரசியல் கரணங்களால் அந்நாட்டு பாராளுமன்றத்தில் இதுவரை ஒப்புதல் பெறப்படவில்லை. (கடந்த டிசம்பரில் செனட் சபை மட்டும் ஒப்புதல் அளித்துள்ளது) இதனால், அதை நிறைவேற்றும் நிர்ப்பந்தம் அரசுக்கு இல்லை. இதை நிறைவேற்றினால் தங்களது பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்று அமெரிக்கா கூறிவருகிறது.
உலக அளவில் இந்தியாவும் சீனாவும் 10 சதவீத வளர்ச்சியை நோக்கிச் சென்றாலும் உலக பசுமைக்குடில் வாயுவை 10 சதவீதமே வெளியேற்றுகின்றன. ஆனால், அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் 42 சதவீதம் வெளியிடுகின்றன.
வாயுக்கள் வெளியாவதைக் குறைப்பதற்காக தங்களது தொழில் வளர்ச்சிக்குத் தடையான கொள்கைகளை ஏற்க வளரும் நாடுகள் தயங்குகின்றன. வளர்ந்த நாடுகளும் ( குறிப்பாக அமெரிக்கா) தங்களது உரிமையை விட்டுக் கொடுக்க மறுக்கின்றன.
இதனால், 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு எத்தகைய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது என்பது குறித்து முடிவு செய்யாமல் டிசம்பர் மாதம் இந்தோனேசியாவில் நடந்த பருவநிலை மாறுபாட்டுக்கான மாநாடு முடிந்துள்ளது.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் , விவசாய மானியத்தைக் குறைக்கக் கோரும் உலக வர்த்தக ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்களை வற்புறுத்தி உலக நாடுகளைப் பணியவைக்கும் அமெரிக்கா உலகையே அச்சுறுத்தும் சுற்றுச்சூழல் உடன்பாட்டிற்கு பாராளுமன்ற ஒப்புதல் பெற மறுப்பது வேடிக்கையானது.
எல்லாவற்றிலும் தனது முன்னிலையை உறுதிப்படுத்திக் கொள்ளும் அமெரிக்கா, சுற்றுச்சூழல் ஒப்பந்தத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி உலகுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் புவி வெம்மையைக் குறைக்க முன்வர வேண்டும்.
உலக வெம்மை அதிகரிப்பால் புயல், பெரும் மழை வெள்ளம், கடும் வறட்சி , கடும் உறைபனி அதன் காரணமாக உணவு உற்பத்திப் பாதிப்பு, பஞ்சம் என்று பல்வேறு இன்னல்களை மனித குலம் சந்திக்க வேண்டிவரும். இவை முதலில் பாதிக்கப்போவது ஆபிரிக்க , ஆசியக் கண்டத்தில் உள்ள வளரும் நாடுகளைத்தான்.
பொருளாதார வளர்ச்சியை விட முக்கியமானது, நாம் வாழும் பூமி வாழ்வதற்கு ஏற்றதாக இருப்பது . இயற்கையை அழித்து பொருளாதார வளம் பெறும் சமுதாயம் நீண்ட காலம் நிலைக்காது. எனவே, இயற்கை வளத்தைப் பெருக்கி பசுமையைக் காப்பது மட்டுமே எதிர்கால உலக நலனுக்கு உகந்தது என்பதை வளரும் நாடுகள் மட்டுமல்ல. வளர்ந்த நாடுகளும் உணர வேண்டும்.
இல்லாவிடில் காதல் போயின்......காதல் போயின்....மட்டுமல்ல. பசுமை போயினும் சாதல் தான்!.
-தினமணி-
Wednesday, February 13, 2008
காதல் போயின்......காதல் போயின்.......மட்டுமல்ல பசுமை போயினும்......சாதல்தான்.......
Posted by tamil at 6:36 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment