Tuesday, February 26, 2008

அரைநூற்றாண்டின் பின்னரான கியூபாவின் தலைமைத்துவ மாற்றம்

உலகளாவிய ரீதியில் சுமார் மூன்று தலைமுறைப் புரட்சியாளர்களுக்கு உந்துசக்தியாக விளங்கிய கியூபத் தலைவர் பிடல் காஸ்ட்ரோ ஜனாதிபதி பதவியிலிருந்து உத்தியோக பூர்வமாக வெளியேறியதையடுத்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அவரின் இளைய சகோதரரான ராவுல் காஸ்ட்ரோ கியூபாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.
ராவுல் காஸ்ட்ரோ தனது சகோதரர் பிடல் காஸ்ட்ரோவிலும் பார்க்க வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர். பொது இடங்களில் காணப்படும் போது எப்போதுமே அசௌகரியமான மனநிலையை வெளிக்காட்டுபவராகவே காணப்படுவார் என்று அவர் தொடர்பாக விமர்சிக்கப்படுவதுண்டு. அவருடைய கடுமையான போக்கும் செயற்றிறனும் அவரை `புரூசியாக்காரன்' என்று நண்பர்கள் அழைப்பதற்கு வழிவகுத்தது. பழைய ஜேர்மன் சாம்ராச்சியத்தின் அங்கமான வட - மத்திய ஐரோப்பிய நாடான புரூசியாவைச் சேர்ந்தவர்களின் குணாதிசயங்களை ஒத்ததன்மை ராவுலிடம் நிரம்ப இருப்பதாலேயே நண்பர்கள் அவரை இவ்வாறு அழைப்பதுண்டு. அதேசமயம் ராவுல் காஸ்ட்ரோவின் தலைமைத்துவம் வர்த்தகத் தன்மை வாய்ந்ததென்றும் வர்ணிக்கப்படுவதுண்டு.

கம்யூனிஸ்ட் ஆட்சியிலுள்ள தீவு நாடான கியூபாவின் தலைமைத்துவத்தை சுமார் அரை நூற்றாண்டு காலம் (49 வருடங்கள்) அலங்கரித்து வந்த பிடல் காஸ்ட்ரோவின் பகிரங்க அரசியல் வாழ்வு இப்போது முடிவுக்கு வந்துள்ளது.

2006 ஜூலை 31 இலேயே உத்தியோகப்பற்றற்ற முறையில் கியூபாவின் ஆட்சிப்பொறுப்பை ராவுல் காஸ்ட்ரோ பெற்றுக் கொண்டார். தமையனார் கடும் சுகவீனமுற்றதையடுத்து நிர்வாகப் பொறுப்பை ராவுல் ஏற்றுக் கொண்டபோது வல்லரசான அமெரிக்காவினதும் மற்றும் அதன் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைகளை இறுக்கமாகப் பின்பற்றி வரும் மேற்குலக செல்வந்த நாடுகளினதும் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளிலிருந்தும் நாட்டை எவ்வாறு பரிபாலிக்கப்போகிறார் என்ற சந்தேகங்கள் பரவலாக காணப்பட்டன. ஆனால் அந்தச் சந்தேகங்கள் யாவுமே துரிதமாக மறைந்துவிட்டன.

கடந்த 19 மாதங்களாக ராவுலின் நிர்வாகத்தில் கியூபா அமைதியாகவே இருந்தது. பாரிய மாற்றங்கள் எதுவும் அங்கு ஏற்படவில்லை.

சிறந்த பேச்சாற்றல், செயற்றிறன் என்பவற்றால் கியூப மக்கள் மனங்களை கொள்ளை கொண்டவர் பிடல் காஸ்ட்ரோ (81 வயது) அரசாங்கத்தின் சகல மட்டங்களிலும் மேலாதிக்கம் செலுத்திய அந்தத் தலைவர் தற்போது சடுதியாக ஆட்சிப் பீடத்திலிருந்தும் வெளியேறிவிட்டார். அவருடைய உடல் நிலையும் நோயுமே இதற்கான காரணமாகும்.

இப்போது உத்தியோக பூர்வமாக ஆட்சி மாற்றம் அங்கு ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் எந்தவொரு கலவரமோ அல்லது அகதிகள் வெளியேற்றமோ எதுவுமே இடம்பெறவில்லை.

கியூபாவின் கம்யூனிஸ்ட் ஆட்சி பிடல் காஸ்ட்ரோவின் பின்னர் நிலைகுலைந்துவிடும் என்று மனப்பால் குடித்துக்கொண்டு போலிப் பிரசாரங்களை கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டிருப்போருக்கு மிக அமைதியாக ஏற்பட்டிருக்கும் தலைமைத்துவமாற்றம் உண்மையிலேயே எரிச்சலூட்டும் விடயமென்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

`கடந்த 19 மாத காலம் தான் மேற்கொண்ட பணியையே புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் ராவுல் காஸ்ட்ரோ முன்னெடுக்க போகின்றார். கியூப மக்களுடன் இவர் கொண்டிருந்த உறவுகள் இப்போது முன்னேற்றம் கண்டுள்ளன. ஆதலால் பிடல் காஸ்ட்ரோவின் அடிச்சுவட்டையே அவர் இறுக்கமாகப் பின்பற்றுவார் என்று கியூப மக்கள் பெரும்பாலும் நம்புவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் பிடல் காஸ்ட்ரோ போன்று ராவுல் காஸ்ட்ரோ இருக்கப் போவதில்லையென்ற நிலைப்பாட்டையே அமெரிக்கா கொண்டிருப்பதாக தென்படுகிறது. அமெரிக்காவுடன் உறவுகளை விருத்தி செய்வதற்காக பேச்சுவார்த்தை மேற்கொள்ள விரும்புவதாக ராவுல் காஸ்ட்ரோ கூறியிருந்தார். ஆனால் பிடல் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பரான வெனிசூலா ஜனாதிபதி கியூகோ சாவெஸ், ராவுல் காஸ்ட்ரோ தனது சகோதரனின் கொள்கைக்கு மாறாக ஒரு போதும் செயற்படமாட்டார் என்ற உறுதியான நம்பிக்கையை வெளியிட்டிருக்கிறார். கியூபாவின் புதிய தலைவருக்கு வரவேற்பு தெரிவித்திருக்கும் சாவெஸ், ராவுல் எப்போதுமே அமைதியாகவும் விசுவாசமாகவும் வெளிப்பார்வைக்கு தென்படாமலும் இருந்து வந்தவரெனவும் அதேசமயம் புரட்சிக்கு அதிகளவில் பங்களிப்பினை நல்கியவரெனவும் புகழ்ந்திருக்கிறார்.

1959 இல் சர்வாதிகாரியான புல்ஜென்சியோ பாட்டிஸ்ராவை பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான புரட்சியாளர்கள் பதவி கவிழ்த்தபின் ராவுலே பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அத்துடன் கியூபாவின் 50 ஆயிரம் படையினரும் ராவுலுக்கு மிகுந்த விசுவாசம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

பிடல் காஸ்ட்ரோ கம்யூனிசத்தை அரவணைப்பதற்கு முன்னரே ராவுல் அதனை வரித்துக் கொண்டவராகும். ஆனால் சோவியத் ஒன்றியம் உடைந்த பின்னர் சிறிய அளவிலான திறந்த சந்தை மறுசீரமைப்புகளில் ஆயுதப்படையினர் முக்கியமான பங்களிப்பினை வழங்குவதற்கு ராவுல் காஸ்ட்ரோ வழிகாட்டுதலை வழங்கினார். உல்லாசப் பயணத்துறை, சில்லறை வர்த்தகம், ஏற்றுமதி கம்பனிகள், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போன்ற தொழிற்துறையில் தற்போது பாதுகாப்புத்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

திறந்த சந்தைப்பொருளாதாரத்தை சில துறைகளில் மேம்படுத்துவதற்கு ராவுல் முன்வராவிடில் அந்நாட்டில் எதிர்ப்புணர்வுகள் அதிகரித்துவிடுமென ஆய்வாளர்கள் எதிர்வு கூறுகின்றனர்.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின் கியூபாவின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுவிடுமென அச்சமயம் எதிர்வு கூறப்பட்டது. ஆனால் சீனா வழங்கிய கடன் தொகை, வெனிசூலாவின் எரிபொருள் மானியம், கியூபாவின் நிக்கல், செம்புக்கு சர்வதேச சந்தையில் ஏற்பட்ட அதிக கிராக்கி என்பன அந்நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சிகாண விடாமல் தாங்கிப் பிடித்ததுடன் வளர்ச்சியடையவும் வழிசமைத்துக் கொடுத்தன.

இதனடிப்படையில் பொருளாதார ரீதியாக பாரிய பின்னடைவு ஏற்படாதவரை சீர்திருத்த நடவடிக்கைகளில் ராவுல் காஸ்ட்ரோவின் அரசாங்கம் ஈடுபடப் போவதில்லை என்பதே தற்போதுள்ள யதார்த்த நிலையாகும்.

கியூபாவின் தலைமைத்துவ மாற்றத்தால் கொள்கை ரீதியாக மாற்றம் ஏற்பட்டுவிடுமென்றோ அல்லது மாற்றத்தை வலிந்து ஏற்படுத்த முடியும் என்றோ கருதி செயற்பாட்டில் இறங்கத் துடித்துக் கொண்டிருக்கும் சக்திகளின் எதிர்பார்ப்புகள் விரைவில் நிறைவேற்றப்போவதில்லை என்பதையே கியூபாவின் களநிலைவரம் சுட்டிக்காட்டுகின்றது.

புரட்சிக்கு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உதவும் போது ராவுல் காஸ்ட்ரோ ஒரு சீர்திருத்த வாதியாக விளங்குவார். சீர்திருத்தங்கள் அச்சுறுத்தலாக விளங்கினால் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்த விரும்பாதவராக அவர் காணப்படுவார். அதாவது புரட்சியின் வெற்றிக்கு சீர்திருத்தம் அச்சுறுத்தலென அவர் கருதுவாரென கனடாவின் றோயல் இராணுவ கல்லூரியை சேர்ந்த கியூப இராணுவ விடயங்கள் தொடர்பான நிபுணரான கால்கிளிபேர்க் என்பவர் கூறியிருப்பது மிகவும் பொருத்தமானதாக அமையுமென்பது எமது நம்பிக்கை.


நன்றி :- தினக்குரல்

0 Comments: