Friday, February 8, 2008

புதிய சிங்கள ஆளும் வர்க்கத்தின் தீர்வு முயற்சியும் கற்பனாவாதமும்

அரசியலை சுவார்ஷ்மாகவும் எள்ளல் பாணியுடனும் எழுத வேண்டுமென்று எண்ணுபவர்களுக்கு சிறிலங்கா ஒரு மிகச் சிறப்பான தேசமாகும். உலகில் வேறு எங்கும் இவ்வாறான சிறப்பான தன்மைகளை நாம் கானமுடியாது.

அரசியலை இந்தளவிற்கு கோமாளித்தனமாக கையாளும் அரசியல் வாதிகள் வேறு எந்த நாட்டிலும் இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

அரசியல்வாதிகள்தான் தங்களது அரசியல் ஏகபோக நலன்களுக்காக கோமாளிக் கூத்தாடுகின்றார்கள் என்றால், இவ்வாறான ஒரு அரசை சகித்துக் கொண்டு சிங்கள மக்களால் எவ்வாறு இருக்க முடிகின்றது?

இதுவும் சிறிலங்காவைப் பொருத்த வரையில் இன்னொரு பெரிய வேடிக்கையான விடயமாகும். இதனை சிங்கள மக்களின் அறியாமை என்பதா அல்லது பெரும்பாலான தமிழர்கள் நம்புவது போன்று தமிழர்கள் மீதான சிஙகளவர்களின் வெறுப்பென்பதா?

வரலாற்றில் காலத்திற்கு காலம் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதாகச் சொல்லி சிங்களம் பல தீர்வுகளை பொதி (packing) செய்ததும் அவ்வாறான தீர்வுதிட்டங்கள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளின் அருகில் கூட செல்ல முடியாதவைகளாக இருந்ததையும், ஓரளவிலாவது ஞாபக சக்தி உள்ளவர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

இப்பொழுது மீண்டும் மகிந்த தலைமையிலான சிங்கள ஆளும் வர்க்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு உயிர் கொடுக்கப்போவதாக உளறி வருகிறது. இப்பொழுதும் சிங்களத்தின் பாடல்களுக்கு சுருதி விளங்காமல் பக்கவாத்தியம் போடும் ஒரு கூட்டம் அதற்கு 'ஓ", ஆகா, அற்புதம் என்றெல்லாம் தமது வழமையான பக்கவாத்தியங்களை போட்டு வருகின்றனர்.

திடிரென்று அரசு, சிங்கள அரசியல்வாதிகள் கூட மறந்துவிட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்;திற்கு ஏன் தூசி தட்ட முற்படுகின்றது? இந்த இடத்தில் நாம் மகிந்த அணியினரின் நவடிக்கைகள் குறித்து சிறிது பார்க்கலாம்.

தமிழர்களின் பிரச்சனைக்கு நியாயமான தீர்வினை முன்வைக்க முடியாத சிங்களம் எப்போதுமே தமிழர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்துவதன் மூலம் பிரச்சனைகளை தீர்த்துவிட முடியுமென்று நம்பும் ஒரு வகையான (சிங்கள சண்டியா) துணிச்சல்வாத அரசியலையே தொடர்ந்திருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த வரலாறுதான்.

ஆரம்பத்தில் தமிழர் எழுச்சியை பலவீனப்படுத்துவதாக இருந்த தென்னிலங்கையின் சிங்கள பெருந்தேசியவாத அரசியல் பின்னர் விடுதலைப் புலிகளை அழித்தொழித்தல் என்ற நிலைக்கு தாவியது. இவ்வாறு சிங்களம் மாறியதற்கு, விடுதலைப் புலிகள் தமிழ்மக்களின் விடுதலைக்கான தேசிய தலைமையாக பரிணமித்ததும் இராணுவ நகர்வுகளில் சிறிலங்கா இராணுவத்திற்கு சமநிலையிலும் சம தரத்திலும் தம்மை உறுதிப்படுத்திக் கொண்டதும் முக்கிய காரணமாகும். காலத்திற்கு காலம் தெற்கில் மாற்றமுறும் சிங்கள அரசு தனது அரசியல் சாதகத் தன்மைக்கு ஏற்ப புலிகளை அணுக முற்படுவதுண்டு.

இவ்வாறே ரணில் பேச்சுவார்த்தை, சுமூக நிலைமையை உருவாக்குதல் என்ற வார்த்தைகளுடாக புலிகளை அழித்தொழிப்பதற்கான வலை ஒன்றை விரித்துப் பார்த்தார். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. இடையில் நடந்த அரசியல் காய்நகர்த்தல்களை நீங்கள் அறவீர்கள்.

இதில் உள்ள வேடிக்கை என்வென்றால் தற்போதைய மகிந்த அணியினரோ, யுத்தத்தை தவிர எந்தவிதமான நேரடியான மாற்றுவழிகளும் அற்ற அரசியல் கையறு நிலைக்கு ஆளாகியிருக்கின்றனர்.

~சிங்கள சண்டியா| அரசியல் நடத்தி இவ்வாறானதொரு இக்கட்டான நிலைமையை உருவாக்கியதும் மகிந்த அணியினர்தான். தற்போது தாம் உருவாக்கிய பொறியில் தாமே அகப்பட்டுக் கொள்ளும் கையறு நிலைக்கு தற்போதைய தெற்கின் சிங்கள ஆளும் வர்க்கம் ஆளாகியிருக்கின்றது.

இந்த நிலைமையிருந்து மீண்டெழுவதற்கு மகிந்த அணியினர் காட்டும் பூச்சாண்டிதான் 13 ஆவது திருத்ததிற்கு உயிர் கொடுப்பதாக சொல்லிவருகின்ற கதை.

ஒருபுறம் நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் தடுமாறும் அரசு, மறுபுறம் அதிலிருந்து மீண்டெழுவதற்காக தொடர்ச்சியாக விலைகளை அதிகரித்து வருகிறது. இது தெற்கின் சிங்கள மக்களுக்கும் அரசுக்கும் இடையில் இருக்கும் இடைவெளிகளை அதிகரிக்க காரணமாகியிருக்கிறது. இது மகிந்த அணியினர் எதிர்கொண்டிருக்கும் இன்னொரு நெருக்கடி.

விலைவாசி உயர்வால் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டுவரும் அதிருப்திகளையும், கோபங்களையும் அரசியலாக்கி தக்க சந்தர்ப்பத்தில் அரசிற்கு நெருக்கடிகளை ஏற்படுத்த யு.என்.பி மேற்கொண்டு வரும் முயற்சிகள்.

இதனை சமாளிக்க மகிந்தவிற்கு, யுத்தத்தில் வெற்றி பெறுவதான பிரச்சாரங்கள் தேவைப்படுகின்றன ஆனாலும் யுத்தம் சிங்கள சண்டியா பாணியில் அவ்வளவு இலகுவானதாக இல்லை. இனித்தான் உண்மையான களநிலைமைகளே ஆரம்பிக்கப் போகிறது என்பதால் அரசிற்கு மேலும் நெருக்கடிகள் அதிகரித்திருக்கின்றது.

இப்படி ஒன்று இரண்டல்ல பிரச்சனை, மகிந்த தலைமையிலான சிங்கள ஆளும் வர்க்கமோ திக்கித் திணருகிறது. தனது நெருக்கடிகள் வெளியில் தெரியாத வண்ணம் இருப்பதற்காக தற்போது அரசு சொல்லும் கதைதான் இந்த தீர்வு முயற்சி.

இதன் மூலம் புதிதாக உருவாகியிருக்கும் மகிந்த தலைமையிலான ஆளும் வர்க்கம் இரண்டு விடயங்களை சாதிக்க முயல்கிறது.

ஒன்று, சர்வதேச ரீதியாக வரும் நெக்கடிகளை சமாளிப்பதற்கு இதனை ஒரு உபாயமாகக் கைக் கொள்வது அதாவது தாம் அரசியல் ரீதியாக புலிகளுக்கு எதிர்நிலையில் இருக்கும் தமிழ் தரப்பினரது ஆதரவுடன் ஒரு அரைகுறை தீர்வை முன்வைப்பது இதற்கு, ஏற்கனவே மகிந்த தலைமையிலான இராணுவ ஆளும் பிரிவால் உருவாக்கியிருக்கும் தமிழ் சிவில் சமூகத்தின் அச்சத்தையும் பதட்டத்தையும் பயன்படுத்திக் கொள்வது.

இரண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தத்தை முன்னெடுக்கும் சந்தர்ப்பத்தில் அரசியல் ரீதியில் விடுதலைப் புலிகளை உணர்வு ரீதியாக தமிழ் மக்கள் மத்தியில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான ஒரு உபாயமாக இந்த சலுகை அடிப்படையிலான தீர்வை பயன்படுத்துவது. இது ஏற்கனவே இந்தியாவின் தலைமையில் பயன்படுத்தப்பட்ட ஒரு உக்தி என்பது பலருக்கும் நினைவிருக்கலாம்.

தற்போதும் இவ்வறான அரசின் அணுகுமுறைக்கு பின்னால் இந்திய தரப்பினரின் ஆலோசனைகள் இருப்பதாகவும்; சொல்லப்படுகின்றது.

மொத்தத்தில் ஏற்கனவே பயன்படுத்தி படுதோல்வியடைந்த ஒரு நாறிப்போன வழிமுறையை மீண்டும் சிங்களம் கையில் எடுத்திருக்கிறது.

கடந்த மூன்று தசாப்தங்களாக இராணுவ ரீதியில் வெற்றி கொள்ள முடியாத விடுதலைப் புலிகளை இவ்வறான துரப்பிடித்த பழைய தீர்முறை ஆயுதத்தால் அழிக்க முடியுமென மகிந்த தலைமையிலான சிங்கள ஆளும் வர்க்கம் கனவு கான்கின்றது. பேச்சுவார்த்தையின் அடித்தளமாக சர்வதேசம் ஏற்றுக் கொண்ட இராணுவ வலுச்சமநிலை தற்போது மாறியிருக்கிறது.

எனவே அதனை சமப்படுத்த வேண்டிய தேவை விடுதலைப் புலிகளுக்குண்டு. அதனை நோக்கி புலிகளின் எதிர்கால நகர்வுகள் அமையலாம் அப்போது சிங்களத்தின் கனவுகளும் கலையலாம். அதுவரை கதையின மீது ஆர்வம் குன்றாமல் காத்திருப்போம்.

-தாரகா-

0 Comments: