Wednesday, February 20, 2008

தோற்றுப்போன தந்திரோபாயத்தை மீளப் பரீட்சித்துப் பார்க்கும் முயற்சி

இலங்கையை ஆட்டிப்படைத்துவரும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ அரசு வகுத்துள்ள தந்திரோபாயம் அப்பட்டமானது; வெளிப்படையானது; துலாம்பரமாகத் தோற்றுவது; வெளிவெளியாகப் புலப்படுவது.
"எல்லோரும் ஏறி விழுந்த நொண்டிக் குதிரையில் சக்கடத்தார் தானும் ஏறிவிழுந்தாராம்' என்ற மாதிரி, பல்வேறு தரப்புகளும் முயற்சித்துத் தோற்றுப்போன அதே உத்தியை "ராஜபக்ஷ அன்ட் பிறதர்ஸ் கம்பனி' தானும் தத்தெடுத்து ஒரு தடவை நம்பிக்கையோடு முயற்சித்துப் பார்க்கின்றது போலும்.

ஜே.ஆர். ஜயவர்த்தனா, ஆர். பிரேமதாஸா, சந்திரிகா குமாரதுங்க என்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள் வரிசையாக எத்தனித்துப் பட்டுத் தெளிந்த சாணக்கிய கௌடில்ய தத்துவத்தை ராஜபக்ஷ சகோதரர்கள் தாமும் தப்பாமல் ஒரு தடவை முயற்சித்துப் பார்க்கின்றார்கள்.

ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மூல மைய சக்தியாக விளங்கும் தமிழீழ விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாக ஓரம் கட்டி, ஒதுக்கி, இராணுவ ரீதியாக அவர்களைத் துவம்சம் செய்து, தனது அடிவருடிகளை அதிகாரத்தில் இருத்தி, அவர்களைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அடையாளப்படுத்துவதன் மூலம், அவர்கள் வாயிலாகத் தான் விரும்பும் தீர்வைத் திணித்து, அதனை நடைமுறைப்படுத்தவைத்து, தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டாயிற்று என்று காட்டுவதும், சமாளிப்பதுவுமே அந்த "இராஜதந்திர' திட்டமாகும்.

இதையே,"புலிப் பயங்கரவாதத்துக்கு இராணுவத் தீர்வு; இனப்பிரச்சினைக்கு சமரசத் தீர்வு' என்ற சாரப்பட வெளிப்படுத்தி பறைசாற்றி வருகின்றது மஹிந்த நிர்வாகம்.
ஆனால், ஈழத் தமிழ் மக்களின் அரசியல் நலன்களையும், அபிலாஷைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய விடுதலை இயக்கமாக எழுச்சிபெற்று, விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம். அதுவே யதார்த்தப் புறநிலையாகும். இதைப் புரியாமல் திட்டம் தீட்டுகின்றது கொழும்பு.

ஈழத் தமிழர்களின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் ஏகத் தகுதியிலிருந்து புலிகளை ஒதுக்கி, அவர்களைத் தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தும் கொழும்பின் பகற் கனவு சாத்தியப்படக்கூடியதா என்பதே கேள்வி.

கொழும்பு மாத்திரமல்ல முன்னைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள் மாத்திரமல்லர் புதுடில்லி கூட நேரடியாகத் தலையிட்டுத் தோற்றுப்போன "தந்திரோபாயம்' இது.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தைப் போட்டுக் குழப்பியடித்து, கையறு நிலைக்குக் கொண்டுசென்ற கிழட்டு இராஜதந்திரப் புலியான ஜே.என்.டிக்ஸிற்றே, இத்தகைய தந்திரோபாயத்தின் சறுக்கலை தோல்வியை காலம் கடந்த ஞானமாகப் பட்டறிந்து பின்னர் ஒப்புக்கொள்ள வேண்டியவரானார்.

இலங்கையில் இந்தியாவின் நேரடித் தலையீடு மற்றும் ஆக்கிரமிப்புக் காலத்தில் கொழும்புக்கான தூதுவராக இருந்த ஜே.என். டிக்ஸிற், அந்த இராஜதந்திர சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் "கொழும்பில் எனது பணி' என்ற தனது பட்டறிவுப் பகிர்வு நூலில் தாம் வகுத்த அந்தத் தந்திரோபாயத்தையும் அதன் தோல்வியையும் இப்படி ஒப்புக்கொள்கின்றார்.
""பேச்சுகள் வாயிலாகப் பெறக்கூடிய ஒரு தீர்வுத் திட்டத்தில் விடுதலைப் புலிகள் பங்கு கொள்ளப் போவதில்லை என நான் நம்பினேன். அதனால் விடுதலைப் புலிகளை ஒதுக்கி, ஓரம்கட்டிவிட்டு ஏனைய (தமிழ்க்) குழுக்களுடன் இந்தியா உறவை வைத்துக்கொள்ள வேண்டும் என நான் கருதினேன். இந்தியாவின் அரசியல் முயற்சிகளில் மற்றைய குழுக்கள் பங்குகொள்ளும் அதேவேளை, விடுதலைப் புலிகள் ஆரம்பக்கட்டத்தில் வெற்றிகரமாக ஒதுக்கப்படுவார்களாயின் அவர்கள் சமாதான வழிமுறையில் பங்கு கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என நான் கருதினேன். எனது இந்த மதிப்பீடு தவறானதாகும். இலங்கைத் தமிழர்களிடமிருந்து விடுதலைப் புலிகளை வெற்றிகரமாக ஓரம்கட்டி விடலாம் என்ற எனது எதிர்பார்ப்பும் தவறாக முடிந்தது. ஏனென்றால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுதி தளராத, நீடித்து நின்று போராடும் திறனாற்றலுக்குப் பக்கபலமாக இலங்கை இந்திய அரசியலில் எத்தகைய சக்திகளின் நீரோட்டங்களும் உள்நோக்கங்களும் செயற்பட்டிருக்கக்கூடும் என்பதை என்னால் எடைபோட முடியவில்லை.''
இப்படிக் கூறியிருக்கின்றார் ஜே. என். டிக்ஸிற்.
டிக்ஸிற்றின் இந்த அனுபவத்தைப் படிப்பவர்கள், இதே நிலையில் தான் புலிகளை இப்போது மஹிந்தரின் நிர்வாகமும் கையாள கட்டுப்படுத்த எத்தனிக்கின்றது என்பதை இலகுவாகப் புரிந்து கொள்வார்கள்.

எத்தனை துன்பங்கள், இடர்பாடுகள், இடையூறுகள் வந்தாலும் அவற்றுக்கு மத்தியில் தனது மக்களின் அரசியல் இலக்கை இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் அபாரமான துணிச்சலும், திடசங்கற்பமும், பற்றுறுதியும் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இயல்பாகவே கைவரப் பெற்றுள்ளன.

தணியாத விடுதலை வேட்கை, தீராத சுதந்திர வெறி, போர்த் தந்திரோபாய மதிநுட்பம், பேரிடர்களையும் தாங்கும் தளராத மனவுறுதி என்ற உன்னத உயரிய இயல்புகளோடு விடுதலைப் பாதையில் மிகத் தெளிவுடன் இருக்கும் அரசியல் தலைமையை ஒதுக்கி, ஓரம்கட்டிவிட்டுத் தீர்வு காண்பது என்ற கனவு "அலை ஓய்ந்த பின்னர் குளிக்கலாம் என்று காத்திருக்கும்' நிலைக்கு ஒப்பானதாகும். இரண்டுமே சாத்தியப்படப்போகும் புற யதார்த்தங்கள் அல்ல.

முன்னைய ஜனாதிபதிகளைப் போல டிக்ஸிற்றைப் போல "ராஜபக்ஷ அன்ட் பிறதர்ஸ் கம்பனி' யும் இந்தப் பட்டறிவுப் பாடத்தைப் படிப்பதற்கு அதிக காலம் பிடிக்காது என்று எதிர்பார்க்கலாம்.

நன்றி :-

0 Comments: