Wednesday, February 6, 2008

''தீவிரவாதத்தின் வலி எங்களுக்குத்தான் தெரியும்!''

கிருஷ்ணசாமி கொதிக்கிறார்.

''தமிழகத்தில் விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. எங்கள் மாபெரும் தலைவர் ராஜீவ்காந்தியைக் கொன்றவர்களை எந்த ரூபத்தில் யார் ஆதரித்தாலும் அவர்களை மன்னிக்க மாட்டோம். தமிழக அரசு அவர்கள் மீது முறையாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்...'' -கடந்த இரண்டாம் தேதி நாகர்கோவிலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இப்படி அதிரடியாகவும் ஆக்ரோஷமாகவும் பேசியிருக்கிறார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எம்.கிருஷ்ணசாமி.

அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரமும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும்கூட விடுதலைப் புலிகள் விஷயத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து மிகக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

அடுத்த நாளே தமிழக முதல்வர், ''விடுதலைப்புலிகளை நாங்கள் ஆதரிப்பதாக வீண்பழி சுமத்தி ஆட்சியை மாற்ற விரும்பினால், அந்த ஆட்சி மாற்றத்தைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்...'' என்று பதிலடி தந்தார். இதையடுத்து, 'தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்குள் கடும் கசப்பு உணர்வு ஏற்பட்டுவிட்டது. தமிழக அரசியலில் விரைவில் கூட்டணி மாற்றங்கள் நடக்கும்' என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவரான எம்.கிருஷ்ணசாமியை சென்னை மயிலாப்பூரில் இருக்கும் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.

''விடுதலைப்புலிகள் விஷயத்தை மையமாக வைத்து தி.மு.க. அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சிகள்தான் நெருக்கடி தருகின்றன என்றால், தோழமைக் கட்சியான காங்கிரஸயீம் அரசுக்கு எதிர்ப்பு நிலை எடுத்து செயல்படுவதுபோலத் தெரிகிறதே...''

''தமிழக முதல்வர் 'ஆட்சி மாற்றத்தை விரும்பினால் அதற்கு நாங்கள் தயார்' என்று

கூறியதை வைத்து நீங்கள் இப்படி கேட்கிறீர்கள். எங்கள் மாபெரும் தலைவர் ராஜீவ்காந்தியின் உயிரைப் பறித்த புலிகள் இயக்கத்தை எந்த ரூபத்திலும் நாங்கள் ஆதரிக்க முடியாது. ஒரு தீவிரவாத இயக்கம், எந்த ரூபத்திலும் இந்திய மண்ணுக்குள் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காகத்தான் அந்த இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது, அதை ஆதரித்து வெளிப்படையாகப் பேசுகிறார், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன். அவர் மீது நடவடிக்கை எடுப்பதில் இந்த அரசு தயக்கம் காட்டினால், விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களை ஊக்கப்படுத்திவிடுவது போல அமைந்துவிடாதா? அப்படியரு கவலை எங்களுக்கு ஏற்பட்டதன் விளைவுதான்... எங்கள் நாகர்கோவில் பேச்சு. அது தோழமைக் கட்சியின் கடமை என்கிற வகையில்தானே தவிர, அரசுக்கு தர்ம சங்கடத்தையோ நெருக்கடியையோ ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல!''

''காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சியில் இருந்துகொண்டு, அமைச்சரவையில் காங்கிரஸயீக்கு இடம் கொடுக்க தி.மு.க. மறுக்கிறது என்ற ஆதங்கத்திலேயே நீங்கள் விடுதலைப் புலிகள் விஷயத்தைக் கையில் எடுத்து தி.மு.க. அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாக சொல்கிறார்களே...''

''தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவோடுதான் தி.மு.க. ஆட்சி இருக்கிறது. அப்படியரு சூழ்நிலை இருப்பதால்தான் நாங்கள் ஆரம்பத்திலேயே மந்திரிசபையில் எங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். மற்றபடி மந்திரிசபையில் யார் இடம்பெற வேண்டும் என்பதெல்லாம்... அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அன்னை சோனியா காந்தியும் தமிழக முதல்வர் கலைஞரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. இதில் நாங்கள் தலையிட மாட்டோம். தமிழகத்தின் நலன் கருதியே, விடுதலைப்புலிகள் விஷயத்தில் அரசு எச்சரிக்கையாகவும் கவனத்தோடும் இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம்பெற வேண்டும் என்பதற்காகத்தான் இப்படியெல்லாம் பேசி தர்மசங்கடத்தை உருவாக்குகிறோம் என்று சொல்வது சரியல்ல. அப்படியரு சிந்தனை எங்கள் காங்கிரஸ் இயக்கத்துக்கு ஒருபோதும் இருக்காது!''

''ராஜீவ்காந்தி இறந்து விட்டார் என்பதற்காக 'காங்கிரஸ்காரர்கள் பதினேழு ஆண்டு களாகத்தூங்குவதில்லையா? பல் துலக்குவதில்லையா? குளிப் பதில்லையா?' என்று திருமாவளவன் கேட்டிருக்கிறாரே...''

''இப்படியெல்லாம் பேசும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன், தேர்தல் நேரத்தில் எங்கள் கூட்டணியிலேயே இல்லை. சொல்லப் போனால், தி.மு.க. ஆட்சி வந்துவிடக் கூடாது என்று தெருத்தெருவாகச் சென்று பிரசாரம் செய்து, அந்த முயற்சியில் தோற்றவர். அவர் எப்படித்தான் எங்கள் கூட்டணிக்குள் வந்தார் என்பதுதான் புரியவில்லை. அப்படியிருப்பவர், ராஜீவ்காந்தியை கொன்றவர்களுக்கு ஆதரவாகப் பேசித் தன்னை ஒரு தமிழ் ஆர்வலராகக் காட்டிக் கொள்ள முயல்கிறார். தட்டிக் கேட்டால், காங்கிரஸ்காரர்களை கேலி செய்து கேள்வி கேட்கிறார். இதெல்லாம் அரசியலில் நாகரிகமான விஷயமில்லை! மாபெரும் தலைவரை இழந்துவிட்டு நிற்கும் எங்களுக்குத்தான் தீவிரவாதத்தின் வலியும் வேதனையும் தெரியும்.''

''வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிவிடும் என்றும், விஜயகாந்த்- கம்யூனிஸ்ட் இயக்கங்களோடு புதிய அணி அமைக்கும் என்றும் தகவல்கள் வருகிறதே?'

''தமிழகத்தைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் இயக்கத்தின் செயல்பாடுகள்- தமிழகத்தின் நலன், பல்வேறு கட்சிகளின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்தெல்லாம் அன்றாடம் அன்னை சோனியா காந்திக்கு ரிப்போர்ட் அனுப்புவது என் பணி. அந்த வகையில் எல்லா கட்சிகளின் செயல்பாடுகள், நிகழ்வுகள் குறித்து நான் சோனியா காந்தியிடம் பகிர்ந்து கொள்வதுண்டு. அதில் விஜயகாந்த் கட்சியும் ஒன்று என்பதைத் தவிர, இப்போதைக்கு இந்த விஷயத்தில் நான் வேறு எதுவும் சொல்ல முடியாது. நான் மிகத் தெளிவாக ஒரு விஷயத்தைச் சொல்வேன்... எங்களுக்கும் தி.மு.க-வுக்கும் எந்த நெருடலும் இல்லை. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி தொடருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது. அதனால், எதிர்காலக் கூட்டணி குறித்தெல்லாம் பேசுவதற்கு இப்போது சரியான தருணம் அல்ல.''

''ஜெயலலிதாவும் காங்கிரஸோடு கூட்டணி அமைத்துக் கொள்ள ரொம்பவும் விருப்பமாக இருப்பதாகத் தெரிகிறதே...''

''அதுதான் சொல்லிவிட்டேனே... தேர்தலுக்கு இன்னும் நாட்கள் நிறைய இருக்கிறது. அதனால், இப்போதே அது பற்றியெல்லாம் எதுவும் சொல்ல முடியாது. கூட்டணி குறித்தெல்லாம் முடிவு செய்வது, எங்கள் தலைவி அன்னை சோனியாதான். எல்லாருக்கும் ஒன்றை மட்டும் நாங்கள் உறுதியாக சொல்லமுடியும். தமிழகத்தைப் பொறுத்த வரையில், காங்கிரஸ் தயவில்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது.''

''மதுரை நர்ஸ் கற்பகவள்ளி இறந்து போனது தொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்த எதிர்க்கட்சிகள், மு.க.அழகிரியை இதில் தொடர்புபடுத்திப் பேசியபோது, காங்கிரஸ் இயக்கமும் வலியுறுத்திப் பேசியிருக்கிறதே...''

''இந்த விஷயத்தில், எங்கள் கட்சியின் உறுப்பினர் ஞானசேகரன், முறையான விசாரணை வேண்டும் என்றுதான் கோரினாரே தவிர, அவர் இந்த விஷயத்தை மதுரை அழகிரியோடு தொடர்புபடுத்திப் பேசவில்லை. அழகிரியை குற்றம் சுமத்தி எதுவும் பேசவில்லை. மொத் தத்தில் ஆக்கப்பூர்வமான கூட்டணி கட்சியாகத்தான் சட்ட மன்றத்தில் காங்கிரஸ் செயல்படுகிறது.''

''தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எப்படியிருக்கிறது? உங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டதே?''

''சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற முதல்வர் பல்வேறு விதங் களிலும் முயன்று வருகிறார். அதில் குறையில்லைதான். நான் தாக்கப்பட்டது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்து, போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்களே...''


நன்றி - விகடன்

0 Comments: