"பிற தாயக பூமிகளை ஆக்கிரமிப்பதும் கைப்பற்றுவதும் சுலபம். ஆனால் அந்த ஆக்கிரமிப்பின் மூலம் அடிமைப்படுத்தப்பட்ட அந்தத் தேசத்தின் புத்திரர்களின் மனங்களை வெல்வதோ அவர்களின் அபிலாஷைகளை நிறைவு செய்வதோ மிகக் கஷ்டமான காரியம்.''
அமெரிக்கா தலைமையிலான நேட்டோப் படைகள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி, அங்கு தமது பொம்மை அரசு ஒன்றை நிறுவி, ஆட்சியைக் கொண்டிழுக்க வழி செய்துள்ள போதிலும், ஆப்கான் தேசத்தின் புதல்வர்களை அவர்களின் மனங்களை அந்த பொம்மை அரசினாலோ அல்லது அந்த அரசை ஆட்டுவிக்கும் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தைய எஜமானர்களினாலோ வெல்லமுடியவில்லை. அவ்விடயம் பற்றிய இன்றைய நிலைமை குறித்து ஆராய்ந்த நிபுணர் ஒருவர் மேற்கண்டவாறு தமது அவதானிப்பை வெளியிட்டார்.
ஆப்கானிஸ்தானையும் சரி, அதற்குப் பின்னர் ஈராக்கையும் சரி, ஆக்கிரமிப்பதற்கு முன்னர் அமெரிக்க ஏகாதிபத்தியம் உரைத்த சூளுரைகளை இப்போது மீட்டுப் பார்க்கும் போதும் அவை பெரு வேடிக்கையான விடயங்களாக நமக்குப் படும்.
ஏதோ வெட்டி வீழ்த்தப் போவதுபோல சூளுரைத்துப் பிரகடனங்களை வெளியிட்டு, ஆரவாரமாகப் பாய்ந்த கூட்டுப் படைகள் இப்போது அந்த நாடுகளில் "மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் துடிப்பதுபோல', ஆக்கிரமித்த பிரதேசங்களைத் தக்க வைத்திருப்பதற்காக அங்கு தங்கவும் முடியாமல், ஆக்கிரமிப்பைக் கைவிட்டு வெளியேறவும் முடியாமல் அந்தரிக்கின்றன; ஆப்பிழுத்த குரங்காய் அல்லற்படுகின்றன.
ஆக்கிரமிப்பு சமயம் அமெரிக்காவுக்கு ஒத்து ஊதிய நேட்டோவின் கூட்டுப் படைகளில் இடம்பெறுகின்ற ஏனைய நாடுகள் கூட இப்போது அமெரிக்காவை மெல்லக் கைவிட்டு "பிச்சை வேண்டாம்; நாயைப் பிடி' என்ற பாணியில் மெல்ல கழர நழுவ முயற்சிக்கின்றன.
"உலக பொலிஸ்காரத்தனம்' என்ற சண்டித்தனத்தைக் காட்டிய குற்றத்துக்காக ஆரவார எடுப்புக் காட்டிய தவறுக்காக இப்போதும் ஆக்கிரமிப்புப் பிரதேசங்களை விட்டு வெளியேறவும் முடியாமல் அங்கு நிலைகொண்டு இருக்கவும் முடியாமல் அவதிப்படுகின்றது அமெரிக்கா.
அந்நிய மக்கள் கூட்டத்தின் மீது ஆக்கிரமிப்புகளைத் தொடுக்க முயலும் ஆதிக்க சக்திகளுக்கு ஆப்கானும், ஈராக்கும் இன்று நல்ல அனுபவப் பாடங்கள்.
பிரதேசங்களை பிற தேசங்களை ஆக்கிரமிப்பது என்பது வேறு. அந்தத் தேசங்களின் மக்களின் மனதை வெல்வது என்பது வேறு.
ஈராக்கையும், ஆப்கானிஸ்தானையும் ஆயுத முனையில் வெ(ற்)றி கொள்ள முடிந்த மேற்கு நாடுகளால் அந்தத் தேசங்களில் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை. அந்த மக்களின் அபிலாஷைகளை நிறைவு செய்ய முடியவில்லை.
தமது ஆக்கிரமிப்பு மூலம் கவிழ்க்கப்பட்ட ஆட்சிகளை வாய் வீச்சால் தூஷிக்க மட்டுமே அவற்றால் முடிந்தது. அப்போது அவை அவிழ்த்து விட்ட பொய், புளுகுகளை இன்றும் கூட இன்னும் கூட உலகம் நம்பத் தயாராக இல்லை.
இந்தப் பாடம் பட்டறிவு ஈராக்குக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் மட்டுமே உரிய விடயங்கள் அல்ல.
இலங்கைக்கும் கூட இது பொருந்தக் கூடியதே.
ஆக்கிரமிப்பு வெறியில் சூளுரைப்பது இலகு. ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகளை பெறுபேறுகளை எதிர்கொள்வது கஷ்டம். அவை விபரீதமானவையாக இருக்கும்.
அமெரிக்காவின் புஷ் அரசு சர்வதேச ஆக்கிரமிப்பு நோக்குடன் ஏற்படுத்திய குளறுபடித்தனம் காரணமாக ஆப்கானிலும், ஈராக்கிலும் சிக்குண்டு, தமது தரப்பிலும் கணிசமானோரை இழந்து, ஆக்கிரமித்த தேசங்களின் புதல்வர்களையும் கொன்றொழித்து, நாசம் பண்ணி வரும் அமெரிக்கப் படைகளை அங்கிருந்து அதிலிருந்து மீட்பதற்கு அமெரிக்க ஆட்சித் தலைமையில் ஏற்படும் மாற்றத்துக்காக அமெரிக்காவும், உலகமும் இன்று காத்திருக்க வேண்டியிருக்கின்றது.
இலங்கையும் தனது உள்நாட்டு யுத்தத்தில், இவ்வாறு ஆழம் தெரியாமல் காலை விடுவதுபோல ஆக்கிரமிப்பு நகர்வுகள் குறித்து சூளுரைத்தபடி இருக்கின்றது. அறிவிப்புகளையும் பிரகடனங்களையும் அதிகாரவர்க்கம் வெளியிடும் பாணி அப்படித்தான் நமக்குத் தோற்றுகின்றன.
அவலப்பட்டு, அல்லல்பட்ட மக்களின் தேசங்களை ஆக்கிரமிப்பதை விடுத்து, அவர்களின் உள்ளங்களை ஆக்கிரமிக்க வேண்டும். பிரதேசங்களை வெல்வதை விடுத்து, மக்களின் மனங்களை வெல்லவேண்டும்.
மக்கள் எழுச்சியை கிளர்ச்சியை வெல்வது ஆயுதமுனையில் அல்ல. அந்த எழுச்சிக்குக் காரணமான மூலங்களைக் கண்டறிந்து அவற்றிற்கு மருந்து செய்வதன் மூலம்தான்.
உலக வல்லரசான அமெரிக்காவே இதனைத் தனது பட்டறிவுப் பாடமாக இன்று படிக்க வேண்டியதாயிற்று.
இதைப் புரிந்துகொள்ள இயலாமல் இருப்பது அசட்டுத்தனமன்றி வேறில்லை.
உலகப் பொலிஸ்காரத்தனத்துக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கு உள்நாட்டுப் பொலிஸ்காரத்தனமும் பட்டறிய விரும்பினால் அதை யார் தடுக்க முடியும்? பட்டறியட்டும்.
நன்றி - உதயன்
Saturday, February 9, 2008
பிரதேசங்களை ஆக்கிரமிப்பது சுலபம் மக்கள் மனங்களை வெல்வது கஷ்டம்
Posted by tamil at 5:25 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment