Thursday, February 14, 2008

நோயின் மூலத்துக்கு சிகிச்சை அளிக்காமல் நோயின் உபாதைக்கு மருந்திடும் எத்தனம்

இலங்கையை ஆட்டிப்படைக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு அமைதிவழித் தீர்வு ஒன்றைக் காண்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் நெருக்கடிகள் குறித்தும், இவ்விடயத்தில் தென்னிலங்கையின் தவறான கையாள்கை பற்றியும் இப்பத்தியில் நாம் பல தடவைகள் பிரஸ்தாபித்தாயிற்று.

இனப்பிரச்சினை என்ற நோய்க்கு மூலகாரணத்தைக் கண்டுபிடித்து, அதற்கு வைத்தியம் செய்வதை விடுத்து, அந்த நோய் வெளிப்படுத்தும் உபாதைக்கு அல்லது அந்த நோயின் குணங்குறிக்கு மருந்துசெய்யத் துடிக்கிறது தென்னிலங்கை.
அதன் மூலம் நோயை முற்றாகக் குணப்படுத்தலாம் என்று தப்புக் கணக்கும் போடுகின்றது அது.

தமிழர்களுக்கு நியாயம் செய்யப்படாததால் தமிழின அழிப்பும், ஒடுக்குமுறையும், ஓரவஞ்சனையும், பாகுபாடும் தலைவிரித்தாடியமையால் சமத்துவமான, கௌரவ வாழ்வு மறுக்கப்பட்டதால் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து, பூதாகரமாகி, இன்று பெரும் உள்நாட்டுப் போராக வெடித்திருக்கின்றது.

இந்த இனப்பிரச்சினை என்ற நோயின் பூர்வாங்க வெளிப்பாடு அல்லது குணங்குறி அல்லது உபாதை தமிழர் தரப்பிலிருந்து அஹிம்சை வடிவிலான, அறவயப்பட்ட, காந்தியத் தத்துவத்தில் நெறிக்கப்பட்ட, சாத்வீகப் போராட்டமாகத்தான் முதலில் வெளித்தோற்றியது.
சுமார் முப்பது ஆண்டுகள் வெறும் குந்து மறியலிலும், சத்தியாக்கிரகத்திலும், சட்டமறுப்பிலும், பகிஷ்கரிப்புப் போராட்டத்திலும் தான் தமிழர்கள் ஈடுபட்டார்கள்.
அச்சமயத்தில் கூட அந்த நோயின் மூல காரணியான இனப்பிரச்சினைக்கு மருந்து செய்வதற்கு அதிகாரத்தில் மமதையோடு வீற்றிருந்த சிங்களத் தலைமைகள் முயலவில்லை; முன்வரவில்லை.

மாறாக அமைதி வழியில் முன்னெடுக்கப்பட்ட அந்தத் தமிழ்த் தேசிய எழுச்சிப் போராட்டங்கள் ஆயுத முனையில் அடக்கப்பட்டன. அரசின் ஒடுக்குமுறை இயந்திரம், அமைதிவழிப் போராளிகள் மீது இராணுவத்தை ஏவிவிட்டது. அவசரகாலச்சட்டம், ஊரடங்குச்சட்டம் என்பவற்றின் பெயரால் இராணுவப் பயங்கரவாதம் முதன்முதலில் தமிழர் தாயகம் எங்கும் கட்டவிழ்ந்தது.

ஒடுக்குமுறையாளரின் வன்முறை, ஒடுக்கப்பட்டவர்களின் சாத்வீகப் போராட்டத்தை அடக்கி ஒடுக்கியது. நீதி வேண்டிய தமிழரின் அஹிம்சைப் பாதையை சிங்களத்தின் ஆயுதபலம் அடக்கி, நொறுக்கி, நசுக்கியது.

மனித நேயப் பண்புகளினதும், நாகரிக நடைமுறைகளினதும் ஒழுக்க சீலங்கள் அனைத்தையும் நிராகரித்து, இனவெறிக் காழ்ப்புணர்வில் ஊறித் திளைத்திருக்கும் பேரினவாத ஆட்சியாளர்களின் கொடிய ஒடுக்குமுறை இராணுவ மேலாதிக்க அதிகாரத்தின் முன்னால் காந்திய நெறியின் சாத்வீக அணுகுமுறையுடனும் அதன் தார்மீகப் பலத்தோடும் எதிர்த்து நிற்க முடியாது என்ற உண்மை தமிழர்களுக்குப் புரிந்தபோதுதான் சுமார் மூன்று தசாப்தகால பயனற்ற அஹிம்சைப் போரின் பின்பே ஆயுதம் தூக்குவதைத் தவிர வேறு எந்த மார்க்கமுமே தமக்கு இல்லை என்ற கட்டாய நிலைமைக்குத் தமிழரின் தேசம் தள்ளப்பட்டது.
அதிகார ஆட்சிப்பீடத்தின் துப்பாக்கிப் பலத்தின் முன்னே சிறுபான்மையினரான தமிழர்களின் அரசியல் போராட்டத்தின் சாத்வீக அடித்தளம் பலமற்றது என்ற உண்மையை முழு அளவில் உணர்ந்து கொண்ட சிங்களத் தலைமை, அந்த மெய்நிலை கொடுத்த உற்சாகத்தால் மென்மேலும் இன அடக்குமுறையைத் தமிழர் தேசம் மீது கட்டவிழ்த்து விட்டது.
இந்தத் தொடர் கொடூரப் போக்கின் விளைவாகவே பேரினவாத அடக்குமுறைப் போக்கின் வரலாற்றுப் பெறுபேறாகவே தமிழர்களின் ஆயுதம் தரித்த எதிர்ப் போராட்டம் இங்கு பிறப்பெடுத்தது.

இப்போதும் கூட இந்த எதிர்ப்பு இயக்கத்தை அதே வன்முறைப்பாதையால் அடக்கி, ஒடுக்கி, தமிழரின் விடுதலை உணர்வை நசுக்கிவிடலாம் என்று திட்டமிடும் சிங்களம், அப்படிச் செய்வதன் மூலம் இலங்கைப் பிரச்சினை முற்றாகத் தீர்க்கப்பட்டுவிடும் என்றும் தவறாகக் கணக்குப் போடுகிறது கொழும்புத் தலைமை.

இச்சந்தர்ப்பத்திலும் இனப்பிரச்சினை என்ற நோயின் மூலத்துக்கு மருந்து செய்வதை விடுத்து அதன் உபாதையாக சித்திரிக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்துக்கு மருந்து செய்ய முற்படும் கொழும்பின் செயல்போக்கின் பின்னணி இதுதான்.

தனியாகப் புலிகளின் தலைவர் பிரபாகரனையோ, அவரின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையோ அழித்து விடுவதன் மூலம் இலங்கைத் தீவை ஆட்டிப் படைத்துவரும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டுவிடலாம் என்ற குறுகிய சிந்தனைப் போக்குக்குள் சிக்கி, அதனடிப்படையில் மனக்கோட்டை கட்டுகிறது கொழும்பு.
அதன் தொடராக கொழும்பில் அரங்கேறும் பெரும் பீரங்கிப் பிரசாரங்களையும், அளப்பரிய நம்பிக்கை வாக்குறுதிகளையும், தத்துவ சித்தாந்த விளக்கங்களையும் நாம் இன்று காண்கின்றோம்.

இனப்பிரச்சினை என்ற நோயின் மூலகாரணத்துக்குச் சிகிச்சை அளிக்காமல் பக்க விளைவுகளுக்கு சிகிச்சை அளித்துச் சமாளிக்க முயலும் கொழும்பின் போக்கு இலங்கைத்தீவை மீளமுடியாத சீக்காளியாக்கிவிடும் என்பது நிச்சயம்.

நன்றி - உதயன்

0 Comments: