* வன்னியை ஐந்து டிவிசன் படையணிகள் சுற்றிவளைத்து விட்டன.
* இந்தியா ஒரு தடவை தலையிட்டு எமது முயற்சியைத் தடுத்தது.
* தலைவர்களான ரணசிங்க பிரேமதாசவும், சந்திரிகா குமாரதுங்கவும் முயற்சிகள் எடுத்தனர். ஆனால் அரசியல் அழுத்தங்களால் இம்முயற்சிகளைக் கைவிட்டுவிட்டனர்.
* கிளிநொச்சியை நிச்சயம் கைப்பற்றுவோம்.
* கிளிநொச்சியைக் கைப்பற்றிவிட்டு கடந்த காலத்தைப் போல் விட்டு விலகமாட்டோம்.
இவை யாவும் சிறிலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா சிங்கள நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ள சில விடயங்களாகும். இதன் அடிப்படையில் பார்க்கையில், சிங்களவர்கள் அனைவரும், இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவைத் தமது வீரபுருசராகக் கருதுவதில்ஃ கொண்டாடுவதில் நியாயப்பாடு இருப்பது போன்றே தோன்றும்.
ஆனால் இராணுவத் தளபதி கூறியவை வரலாற்று ரீதியிலும், யதார்த்தத்திலும் எத்தகைய உண்மைத் தன்மையைக் கொண்டவை. நடைமுறையில் சாத்தியமானவை- இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தான்; ஒரு வெற்றிகரமான இராணுவத் தளபதி என்ற பெயருடன் செல்வதற்கு விரும்பலாம். இது சாதாரண மக்களுக்குக் கூட ஏற்படக்கூடிய அபிலாசையே. அதற்காக வரலாற்றைத் திரிபுபடுத்தியும், யதார்த்தத்தை வேறுபடுத்திக் காட்டவும் முற்படுதல் கூடாது. ஏனெனில் அவரது பேச்சு நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்க முடியாது.
இராணுவத்தளபதி சரத் பொன்சேகா குறிப்பிட்டது போன்று 53, 55, 57, 58, 59 டிவிசன் படையணிகள் வன்னிப் பிரதேசத்தைச் சூழ உள்ளன என்பது உண்மையே. ஆனால், இப்படையணிகளால் தாம் விரும்பியவாறு வன்னிப் பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டிலோ அன்றி மேலாதிக்கத்திலோ கொண்டுவர முடியுமா?
57 ஆவது டிவிசன் துருப்புக்கள் கடந்த ஆண்டில் களத்தில் இறக்கப்பட்டபோது அவை குறிப்பிட்ட சில தினங்களுக்குள் மடுப்பிரதேசத்தையும் அதைச் சூழவுள்ள பிரதேசத்தையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிடுமென இராணுவத் தரப்பால் தெரிவிக்கப்பட்டது. ஏனெனில் அப்படையணியில் விசேட பயிற்சி பெற்ற துருப்புக்களும், தேவையானளவிலான கனரக ஆயுத தளவாடங்களும் இணைக்கப்பட்டிருந்தன.
ஆனால், மடுவைக் கைப்பற்றுவதற்கான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டு பத்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் மடுவை இன்னமும் கைப்பற்ற முடியவில்லை. மாறாகப் பலநூறு படையினர் கொல்லப்பட்டும், பலநூறு படையினர் படுகாயமடைந்த நிலையே ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி படையணித் தளபதிகள் மட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டியதான நிலையுமே ஏற்பட்டிருந்தது.
இது ஒருபுறமிருக்க, விடுதலைப் புலிகள் இயக்கம், சிறிலங்கா இராணுவத்தின் பல படையணிகளுடன் ஒரே நேரத்தில், அதிலும் அதே வன்னிக் களத்தில் மோதியிருந்தது. அதிலும் குறிப்பாக சிறிலங்காப் படைத்தரப்பு இதைவிட வாய்ப்புக்கள் அதிகம் கொண்ட காலப்பகுதியில் இம்மோதல்கள் இடம்பெற்றன.
ஆனால் அம்மோதல்களில் சிறிலங்கா இராணுவத்தால் வெற்றிபெற முடியவில்லை. மாறாகச் சில படையணிகள் முற்றாகச் சிதைக்கப்படவும், சில படையணிகள் பெரும் சேதங்களுக்கு உள்ளாகும் நிலையே ஏற்பட்டது. எடுத்துக்காட்டாக 54 ஆவது படையணி சிதைக்கப்பட, 55, 56, 53 ஆவது படையணிகள் கடும் சேதத்திற்கு உள்ளாகியதோடு, புலிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாது களத்தில் இருந்து தப்பியோடியிருந்தன என்பதே வரலாறு.
இத்தகையதொரு நிலையில் படையணிகள் வன்னியைச் சுற்றிவளைத்துள்ளன என்பதும் விடுதலைப் புலிகள் விரைவில் தோற்கடிக்கப்படுவர் என்பது லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் கனவாக இருக்கலாம். நடைமுறையில் அது சாத்தியமாகப் போவதில்லை.
இரண்டாவதாக, இந்தியா ஒரு தடவை தலையிட்டு தமது முயற்சிகளைத் தடுத்ததாக சரத் பொன்சேகா குறிப்பிடுவது, ஒப்பரேசன் லிபரேசன் காலப்பகுதியைக் குறிப்பிடுவதாகவே கருதமுடியும். ஏனெனில் அதற்குப் பிற்பட்ட காலப்பகுதியிலேயே இந்தியா நேரடியான தலையீட்டைச் செய்திருந்தது. ஆனால் சரத் பொன்சேகா இத்தலையீட்டைக் காட்டி வரலாற்றிற்குப் புதுவிளக்கம் தரவிளைகிறார்.
ஒப்பரேசன் லிபரேசன் (1987) படை நடவடிக்கை மூலம் சிறிலங்கா இராணுவத்தினர் வடமராட்சிப் பிரதேசத்தை வன்கவர் செய்திருக்கலாம். ஆனால், அதன் பின்னர் நெல்லியடி மகாவித்தியாலத்தில் அமைந்திருந்த இராணுவ முகாம் மீது கரும்புலி கப்டன் மில்லர் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவம் பெரும் திகிலுக்கும், கலக்கத்திற்கும் உள்ளாகியிருந்ததென்பதே உண்மை. வடமராட்சி வன்கவர் நடவடிக்கை சரியானது தானா என்ற கேள்வி கூட இராணுவ வட்டத்தில் எழுந்திருந்தது.
இத்தகையதொரு நிலையில், விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ள இருந்த வாய்ப்பை இந்தியா தடுத்ததென்பது வரலாற்றிற்கு மாறானது. அத்தோடு அன்றும் கூட யாழ். குடாநாட்டை இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதினால் போராட்டம் முடிவிற்கு வந்துவிடும் எனக் கற்பனை செய்வதும் அர்த்தமற்றதொன்று.
ஆனால், அடிப்படையில் இந்தியாவின் நேரடி மற்றும் மறைமுகத்தலையீடுகளால், சிறிலங்காப் படைத்தரப்பு தன்னைக் காப்பாற்றிக்கொண்டுள்ளதேயொழ��
�ய இந்தியத் தலையீடுகள் புலிகளுக்கோ தமிழர்களுக்கோ சாதகமானதொன்றாக இருக்கவில்லை.
குறிப்பாக 1987 இல் இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிராக மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் சிறிலங்கா இராணுவத்திற்கும் பெரிதும் அனுகூலமானதாக இருந்தது. புலிகளுடனான மோதலில் இழப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய சிறிலங்கா இராணுவம் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்கையில், இந்திய இராணுவம் இழப்புக்களைச் சந்திக்க வேண்டியதாக இருந்தது.
இது சிறிலங்கா இராணுவத்திற்கு அனுகூலமானதா? அன்றி விடுதலைப் புலிகளுக்கு அனுகூலமானதா? இது ஒருபுறம் இருக்க, 2000 ஆம் ஆண்டில் யாழ். குடாநாடு விடுதலைப் புலிகளிடம் வீழ்ச்சி கண்டுவிடுமோ என்ற நிலை ஏற்பட்டபோது இந்தியாவிடம் ஓடிச் சென்று உதவி கோரியதும், தடுத்து நிறுத்த புலிகள் மீது அழுத்தம் பிரயோகிக்க முற்பட்டதும் யார்?
இதனை இரண்டாவது தடவையாக இந்தியா சிறிலங்கா அரசிற்கும், அதன் இராணுவத்திற்கும் புரிந்த பேருதவி என்றே கொள்ள வேண்டும். இவற்றைத் தவிர இன்று இந்தியாவிடம் இருந்து அனைத்து உதவிகளையும் பெறுவது யார்? இவற்றைவிட்டு விட்டு இந்தியா சிறிலங்கா இராணுவத்தைத் தடுத்து நிறுத்தியதாகவும், இதனால் புலிகளை வெற்றிகொள்ள முடியாது போய்விட்டது எனவும் கூறுவது அற்பத்தனமானதாகும். வரலாற்றைத் திரிபுபடுத்தும் முயற்சியாகும்.
மூன்றாவதாக, தலைவர்களாக ரணசிங்க பிரேமதாசவும், சந்திரிகா குமாரதுங்கவும் முயற்சிகள் எடுத்தார்கள். ஆயினும் அரசியல் அழுத்தங்களால் அவை கைவிடப்பட்ட தென்பதும் உண்மைக்கு மாறானதொன்றே. இராணுவத்தரப்பு தம்மைக் காத்துக்கொள்ளக் கூறும் சாட்டிதுவாகும்.
முன்னாள் சனாதிபதியான பிரேமதாசவும், சந்திரிகா குமாரதுங்கவும் இராணுவ ரீதியில் புலிகளைத் தோற்கடிக்க முயற்சித்ததென்பது உண்மைதான். ஆனால் அவர்கள் தமது முயற்சிகளை அரசியல் அழுத்தங்கள் எதனாலும் கைவிடவில்லை. சிறிலங்கா இராணுவத்தின் இயலாமையின் காரணமாகவே கைவிட்டனர்.
சனாதிபதி பிரேமதாச சிறிலங்காப் படைத்துறைக் கட்டுமானங்களில் அடிக்கடி மாற்றங்களை மேற்கொண்டதோடு படை நடவடிக்கைக்குப் பூரண ஒத்துழைப்பும் வழங்கினார். அவரது காலத்தில் சிறிலங்கா இராணுவத்தில் டாங்கிகளும், டோறாப் பீரங்கிக் கலங்களும், மிகை ஒலி தரை விமானங்களும் பயன்பாட்டிற்கு வந்தன.
ஆயினும், சிறிலங்கா ஆயுதப் படையினால் அவர் எதிர்பார்த்த வெற்றியைத் தேடிக் கொடுக்க இயலவில்லை.
இதேபோன்றே சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் நிலைமையும் இருந்தது. சிறிலங்கா அரச தலைவர்களில் இதுவரை பாரிய படை நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் அளித்த தலைவராக சந்திரிகா குமாரதுங்கவே இருந்தார். இவற்றை ரிவிரச, சத்ஜெய, ஜயசிக்குறு, ரணகோச, வோட்டர்ஜெட் என வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம். அத்தோடு சனாதிபதி சந்திரிகா இறுதி வெற்றிபற்றியும் கனவு கண்டுகொண்டிருந்தார்.
ஆனால், ஓயாத அலைகள்-01, 02, 03 எனச் சுழன்றடித்த அலைகளினால் அவரது கனவுகள் அடித்துச் செல்லப்பட்டன. இறுதியில் தீச்சுவாலையின் தோல்வியும், கட்டுநாயக்காவில் வீழ்ந்த அடியும், அவர் விரும்பியோ விரும்பாமலோ தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.
இத்தகையதொரு நிலையில் பிரேமதாசவும், சந்திரிகாவும் அழுத்தங்களால் யுத்தங்களைக் கைவிட்டார்கள் என அன்று படைத்துறை நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவரான இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கூறுவது, இராணுவத்தில் தோல்வியை மட்டுமல்ல தனது தோல்வியையும் அரசியல் போர்வைக்குள் மறைத்துக்கொள்வதற்கான முயற்சியே ஆகும்.
அடுத்ததாகக் கிளிநொச்சியைக் கைப்பற்றுவோம் என்ற பிரகடனமும்; கடந்த காலத்தைப் போன்று விலகமாட்டோம் என்பதுமாகும். இதில் தற்பொழுது எழும் முக்கிய கேள்வியானது, இது வரையில் ஓராண்டிற்குள் வன்னியைக் கைப்பற்றுவோம் எனக் கூறிவந்த சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா, தற்பொழுது கிளிநொச்சியைக் கைப்பற்றுவோம் எனக் கூறியிருப்பதேன் என்பதாகும்.
அதாவது வன்னிப்பிரதேசம் என்பது எப்பொழுது கிளிநொச்சி மட்டுமானது. கிளிநொச்சியைக் கைப்பற்றுவதன் மூலம் வன்னிப் பிரதேசத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகிவிடுமா?
கடந்த காலத்தில் கிளிநொச்சி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில், வன்னியை இராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருந்ததாக அர்த்தம் கொள்ளப்பட்டதா? நடைமுறையில் சாத்தியப்பாடானதாக இருந்ததா?
வெற்றிகரமான இராணுவத்தளபதியாக அடுத்த இராணுவத்தளபதிக்கு யுத்தத்தை விட்டுச் செல்ல விரும்பாத தளபதியாக இருக்க விரும்பும் சரத் பொன்சேகா கிளிநொச்சியுடன் யுத்தம் முடிவிற்கு வந்துவிட்டதாகக் கூற முற்படுவதன் மூலம் தனது எல்லைகளை விளங்கிக் கொண்டுவிட்டாரா? என்பதே தற்போது எழும் வினாவாகும்.
இது ஒருபுறம் இருக்க கிளிநொச்சியைக் கைப்பற்றிய பின்- கைப்பற்ற முடியுமா என்பது வேறு விடயம்- நாம் அங்கிருந்து விலகமாட்டோம் என்ற சரத் பொன்சேகாவின் பேச்சு ஒரு புறத்தில் வேடிக்கையானதும், இன்னொரு புறத்தில் சிறுபிள்ளைத்தனமானதுமாகும்.
ஏனெனில், தமிழர் தாயகப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் பிடியில் இருந்த பகுதிகள் விடுதலைப் புலிகளால் யுத்தத்தின் மூலம் மீட்கப்பட்டவையேயொழிய சிறிலங்கா இராணுவம் வெளியேறிச்சென்ற பகுதிகள் அல்ல. தெளிவாகக்கூறின் அடித்துவிரட்டப்பட்டார்கள் அன்றி அடிக்குப் பயந்து இடத்தைவிட்டு ஓட்டம் எடுத்தார்கள் என்பதே கடந்தகால வரலாறாகும்.
எடுத்துக்காட்டாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, பரந்தன், ஆனையிறவு மாங்குளம், புளியங்குளம், நெடுங்கேணி, மடு என ஆக்கிரமித்த பல இடங்களில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினர் விரட்டப்பட்டே இருந்தனர். ஆனால், சிறிலங்கா இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவோ, தாம் ஏதோ முன்னர் விலகிச் சென்றதாகக் கதைவிடுகிறார்.
சிறிலங்கா இராணுவத் தளபதிக்கும் மனிதருக்கு இருக்கும் பல அபிலாசைகள் இருக்கலாம். இது சாதாரண மனிதனில் இருந்து உயர் பதவிகள் வகிப்பவர்கள் வரையில் காணப்படுமொன்றே. அதற்காக வரலாற்றைத் திரிபுபடுத்துவதோ, யதார்த்தத்தை மறுதலிப்பதோ அபிலாசைகளை நிறைவு செய்ய உதவ மாட்டாது. வெற்றியையும் தேடித்தராது. இது சிறிலங்கா இராணுவத் தளபதிகளில் தன்னைப் புகழ் பூத்தவராக ஆக்கிக்கொள்ள விரும்பும் சிறிலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் பொருந்தும்.
நன்றி :-ஜெயராஜ்-
Tuesday, February 19, 2008
உண்மைக்குப் புறம்பாகப் பேசலாமா?
Posted by tamil at 7:31 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment