இந்தியாவுக்கு எதிரான புதிய போராட்டம் ஒன்றை ஜே.வி.பி. ஆரம்பித்திருக்கிறது. இலங்கையில் அதிகரித்துவரும் இந்தியத் தலையீடு உருவாக்கியிருக்கும் ஆபத்தான நிலைமைகளையிட்டு மக்களுக்கு விளக்கமளிக்கும் நோக்கத்துடனேயே இந்தப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்திருக்கின்றது. அண்மைக் காலம் வரையில் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான நட்புறவைப் பேணிவந்த ஜே.வி.பி. திடீரென இந்தியாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கக் காரணம் என்ன என்பதும் இதன் மூலம் ஏற்படக்கூடிய அரசியல் மற்றும் பொருளாதாரத் தாக்கங்கள் எத்தகையவை என்பதும் இன்று கேள்விக்குரிய விடயங்களாக இருக்கின்றன.
இந்தியாவுக்கு எதிராக ஜே.வி.பி. திடீரென போர்க்கொடி தூக்கியிருப்பதற்கு இரண்டு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று 13 ஆவது திருத்தத்துக்கமைய இனநெருக்கடிக்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என இந்தியாவே கொழும்புக்கு அழுத்தம் கொடுத்திருப்பதாக ஜே.வி.பி. கருதுகின்றது. வடக்கு, கிழக்குக்கு மாகாண சபைகளை அமைத்துக்கொள்வது பிரிவினைக்கான முதலாவது படியென்றே ஜே.வி.பி. கருதுகின்றது. இரண்டாவதாக தற்போதைய சூழ்நிலைகளைப் பயன்படுத்தி இலங்கையில் இந்தியா மேற்கொண்டுவரும் பாரியளவிலான முதலீடுகள், வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியில் இந்தியாவின் ஆதிக்கத்தை மேலோங்கச் செய்வதாக அமைந்துவிடும் என ஜே.வி.பி. கருதுகின்றது. குறிப்பாக திருமலைப் பகுதியில் தனது கேந்திர நலன்களை நோக்கமாகக் கொண்டு இந்தியா முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் அந்த துறைமுக நகரில் இந்தியாவின் செல்வாக்கை மேலோங்கச் செய்திருக்கின்றது.
ஜே.வி.பி. இந்திய எதிர்ப்புக் கோஷத்தை திடீரென முன்வைத்திருப்பதற்கு இந்த இரண்டும்தான் காரணமாகக் கூறப்படுகின்றது. அநுராதபுரத்தில் தனது முதலாவது `இந்திய எதிர்ப்பு' பேரணியை நடத்திய ஜே.வி.பி. காலி, கண்டி என தனது போராட்டத்தை ஏனைய முக்கிய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கத் தீர்மானித்திருக்கின்றது. ஆக, ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில் இன்றைய காலகட்டத்தில் அவர்களுடைய அரசியல் இருப்பைப் பாதுகாப்பதற்கு ஏதோ ஒரு வகையில் இந்திய எதிர்ப்புவாதத்தை கைகளில் தூக்கவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் அதற்கு ஏற்பட்டிருக்கின்றது. இந்தப் போராட்டம் எந்தளவுக்கு தொடரும் என்பதும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் எவ்வாறானதாக இருக்கும் என்பதும்தான் இன்று ஆராயப்பட வேண்டிய விடயங்கள்!
அண்மைக் காலங்களில் இந்தியாவுடனான நட்புறவை ஜே.வி.பி. வலுப்படுத்திக் கொண்டிருந்த போதிலும் கூட, " இந்திய எதிர்ப்பு வாதம்" ஜே.வி.பி.யின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகவே இருந்துள்ளது. 1971 மற்றும் 1989 காலப் பகுதியில் நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரண்டு ஆயுதப் புரட்சிகளை ஜே.வி.பி. மேற்கொண்டிருந்தது. இந்த இரண்டு புரட்சிகளிலுமே ஜே.வி.பி. தோல்வியடைந்திருந்தாலும் இந்திய எதிர்ப்புவாதம் என்பது இந்தப் புரட்சிக்கான அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாக இருந்துள்ளது. இந்தப் புரட்சிகளுக்கான தயாரிப்புக்களில் ஈடுபட்ட ஜே.வி.பி., அதற்காக இளைஞர், யுவதிகளுக்கு இரகசிய வகுப்புக்களை நடத்தியது. இந்த இரகசிய வகுப்புகளில் ஐந்து பாடங்கள் போதிக்கப்பட்டன. இந்த ஐந்து பாடங்களில் ஒன்றாக `இந்திய விஸ்தரிப்பு வாதம்' என்ற தலைப்பில் விரிவுரைகள் நடத்தப்பட்டன.
இலங்கையை ஆக்கிரமிப்பதுதான் இந்திய வெளியுறவுக் கொள்கையின் பிரதான அம்சம் எனவும் அதனை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் தொடர்பாகவுமே இந்த விரிவுரைகளின்போது முக்கியமாக ஆராயப்பட்டது. இந்தியா தொடர்பிலான ஒரு அச்சத்தை சிங்களவர்கள் மத்தியில் வளர்ப்பதற்கு இது பயன்படுத்தப்பட்டது. 1987 இந்திய- இலங்கை உடன்படிக்கையைத் தொடர்ந்து இந்தியப்படை வடக்கு, கிழக்கு பகுதிகளில் நிலை கொண்டபோது, இந்தியா தொடர்பிலான அச்சத்தைப் பயன்படுத்தியே தமது போராட்டத்தை ஜே.வி.பி. துரிதப்படுத்தியிருந்தது.
விடுதலைப் புலிகள் தொடர்பிலான தமது அணுகுமுறையை 1990 களின் பிற்பகுதியில் இந்தியா மாற்றிக்கொண்டபோது ஜே.வி.பி.யும் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டைத் தளர்த்திக்கொண்டது. ஆக, இன நெருக்கடி தொடர்பிலான இந்தியாவின் அணுகுமுறைதான் இந்தியா தொடர்பிலான ஜே.வி.பி.யின் நிலைப்பாட்டைத் தீர்மானிக்கும் காரணியாக இருந்துள்ளது எனக்கூறலாம். இன நெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்கான மத்தியஸ்த முயற்சிகளில் நோர்வே இறங்கிய போது அதற்கெதிரான நிலைப்பாட்டை எடுத்த ஜே.வி.பி. இந்தியா மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு மத்தியஸ்தம் வகிப்பதற்குத் தகுதிவாய்ந்ததெனத் தெரிவித்திருந்தமை கவனிக்கத்தக்கது.
இந்தியா விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தமையால் அதன் மூலம் முன்வைக்கப்படும் தீர்வு எதுவும் சிங்கள கடும்போக்காளர்களைத் திருப்திப்படுத்துவதாகவே இருக்கும் என ஜே.வி.பி கருதியது இதற்கான காரணங்களிலொன்றாக இருக்கலாம். இருந்தபோதும் இப்போது 13 ஆவது திருத்தத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக ஜே.வி.பி கருதுவதுதான் அதன் போராட்டங்களுக்கு அடிப்படை. கேந்திர மற்றும் பொருளாதார நலன்கள் தொடர்பாக இந்தியா தனது நலன்களைப் பாதுகாப்பதற்காக மேற்கொண்டுள்ள முயற்சிகள் ஜே.வி.பி.யின் சீற்றத்துக்குக் காரணமல்ல என்பது உண்மை. அவ்வாறிருந்திருந்தால் திருமலை எண்ணெய்க் குதங்கள் இந்தியாவிடம் கையளிக்கப்பட்ட போதே ஜே.வி.பி. கொதித்தெழுந்திருக்க வேண்டும்.
ஆக, இதன் மூலம் ஜே.வி.பி. வெளிப்படுத்தும் செய்தி என்னவென்றால், புலிகளுக்கு எதிரான யுத்த முனைப்புகளுக்கு உதவிபுரியும் இந்தியா தன்னுடைய பணியை அத்துடன் நிறுத்திக் கொள்ளவேண்டும். தமிழர்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்கும் எந்தவித திட்டங்களுக்கும் அழுத்தம் கொடுக்கக்கூடாது. அதே வேளையில், யுத்த முனைப்புகளுக்கு இந்தியா தாராளமாக உதவும் நிலையில் இந்தப் போராட்டத்தை ஜே.வி.பி. ஒரு எல்லைக்கு மேல்கொண்டு செல்லாது எனவும் நம்பலாம்.
ஆனால், 13 ஆவது திருத்த யோசனையை கிடப்பில் போடுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு இந்தப் போராட்டம் உதவிபுரியலாம்!குறைந்த பட்ச அரசியல் தீர்வைக்ககூட தடைசெய்வதற்கான உபாயமாகவே இந்திய எதிர்ப்பு என்ற கோஷம் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் தவிர்க்க முடியாமல் எழுகின்றது.
நன்றி :- தினக்குரல்
Saturday, February 23, 2008
ஜே.வி.பி. முன்னெடுக்கும் இந்திய எதிர்ப்புப் போர்....
Posted by tamil at 6:51 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment