Thursday, February 21, 2008

மகிந்த அரசின் போர்- அதற்கான காலக்கெடுக்கள்: ஒரு பார்வை

'ஒரு போரின் பிரதான குறியிலக்கு வெற்றிதான். போர் நீண்டகாலத்திற்கு இழுத்தடிக்கப்படுமானால் போர் வீரர்களின் உற்சாகம் குறைந்துவிடும். திறைசேரி வற்றிவிடும். இவ்வாறு இழுத்தடிக்கப்பட்ட போரினால் நன்மைபெற்ற நாடெதுவும் ஒருபோதும் இருந்ததில்லை என்று வரலாறு எடுத்துக்காட்டியுள்ளது."- சீனப்போரியல் மேதை சன் சூ

சிறிலங்கா அரச தரப்பும் அதனது படைத்துறையும் தற்போது தம்மால் வெல்லமுடியாத, நீடித்துச் செல்கின்ற, அதிகளவு உயிரிழப்புக்களையும் சொத்தழிவுகளையும் ஏற்படுத்துகின்ற ஒரு முழுமையான போரிற்குள் சிக்குண்டு போயுள்ளதை உணரத்தொடங்கிவிட்டன. இந்தக் கருத்தினை அண்மைக்காலங்களில் பல்வேறு படைத்துறை ஆய்வாளர்களும் சிங்களப் படைத்தளபதிகளும் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் பல்வேறு ஊடகங்களின் வாயிலாக வெளிப்படுத்திவருகின்றார்கள��
�.

'தென்தமிழீழத்தின் போரரங்கிலே தாம் புலிகளுடனான போரில் வெற்றிபெற்று அந்தப்பிராந்தியத்தினை முற்றுமுழுதாக கைப்பற்றிவிட்டோம் என்றும் வடக்கிலே மிஞ்சியிருக்கின்ற புலிகளை மிகவிரைவில் முற்றாக அழித்துவிடுவோம்" என்றும் மகிந்த சகோதரர்களும் அவர்களது படைத்துறை தளபதிகளும் கடந்த காலங்களிலே பல்வேறு சந்தர்ப்பங்களிலே தெரிவித்தும் சில சமயங்களில் சூளுரைத்தும் வந்துள்ளனர்.
ஆனால் இப்பொழுதோ விடுதலைப் புலிகள் மரபுவழிப் போரிலே நீண்ட காலப்பட்டறிவும் திறமையும் கொண்டவர்கள் என்றும் அவர்களை இலகுவாக காலக்கெடுக்கள் கொடுத்து அழித்துவிட முடியாது என்றும் வேறு வழிகளின்றி புலிகளைச் சிலாகித்தும் பாராட்டியும் பகிரங்கமாகவே பத்திரிகைகளுக்கு இதே சிங்களத் தலைமைகள் செவ்விகளை வழங்கி வருகின்றார்கள். பல்வேறு சர்வதேச படைத்துறை ஆய்வாளர்கள் மற்றும் படைத்துறை உயர் அதிகாரிகள் ஆகியோரும் விடுதலைப் புலிகள் உலகிலேயே மிகவும் கட்டுக்கோப்பான உயர் போரிடும் ஆற்றல் கொண்ட ஒரு விடுதலை இயக்கம் என்றும் சிங்கள அரசினால் அவர்களை ஒருபோதும் போரில் வெற்றிகொள்ளமுடியாது என்றும் பல்வேறு சந்தர்ப்பங்களிலே தமது கருத்துக்களை வெளிப்படுத்;தி வந்திருக்கின்றார்கள்.

இதன்மூலம் தமிழீழப் போரியலின் பரிமாணங்களையும் அதற்;குத் தலைமை தாங்குகின்ற தேசியத் தலைவரின் போரியற் மூலோபாயங்கள் மற்றும் தந்திரோபாயங்கள் அத்துடன் இவை தொடர்பாக அவருக்கிருக்கின்ற நுட்பமான ஆற்றல்களையும் தகைமைகளையும் நாம் புரிந்துகொள்ளமுடியும்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரிலே கடந்த காலங்களிலும் புலிகளை முற்றாக அழிப்பது தொடர்பாக இவ்வாறான காலக்கெடுக்களை சிங்கள அரச மற்றும் படைத்தலைமைகள் தமக்குத்தாமே விதித்துக்கொண்டு அதனை சிங்கள மக்களுக்கும் பன்னாட்டு சமூகத்திற்கும் தெரிவித்துக்கொண்டும் வந்திருக்கின்றன. இவ்வாறான காலக்கெடுக்கள் வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள் அனைத்திலுமே சிங்கள அரசுகளும் அதன் படைத்தலைமைகளும் பலத்த அவமானங்களையும் தோல்விகளையுமே விடுதலைப் புலிகளிற்கு எதிரான போரிலே சந்தித்திருக்கின்றன என்பதை வரலாறு பதிவுசெய்து வைத்திருக்கின்றது.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரிலும் இதுதான் இடம்பெறுகின்றது. கடந்த இரண்டு வருடங்களாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரிலே தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து வருகின்றோம் என்று தம்பட்டம் அடித்துக்கொண்ட சிங்கள அரசும் அதன் படைத்தரப்பும் கடந்த 2007ம் ஆண்டு நடுப்பகுதியில் இருந்து எந்தவிதமான வெற்றிகளையும் புலிகளுக்கு எதிராக பெறமுடியாது போரங்கிலே திணறிக்கொண்டிருக்கின்றன.

கடந்தவருடம் செப்டெம்பர் 23 ஆம் நாள் சிறிலங்கா படைத்தரப்பின் மன்னார் முன்னணி நிலைகளில் இருந்து 16 கீலோமீற்றர் தூரம் தொலைவில் உள்ள விடத்தல் தீவினைக் கைப்பற்றுவதற்காக சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையானது நான்கு மாதங்களுக்கு மேலாகியும் இன்னமும் எவ்விதமான முன்னேற்றத்தினையும் காணமுடியாதுள்ளதாக பெயர் குறிப்பிடவிரும்பாத சிறிலங்கா படைத்துறை ஆய்வாளர் ஒருவர் சர்வதேச செய்தி ஊடகமொன்றிற்குத் தெரிவித்துள்ளார்.

அதாவது சிறிலங்கா படைத்துறையினர் புலிகளின் பாரிய எதிர்ப்புக் காரணமாக எட்டுக் கிலோமீற்றர் தூரம் மட்டுமே அதுவும் பாரிய உயிரிழப்புக்களை சந்தித்து முன்னேற முடிந்துள்ளது. இது அடைய வேண்டிய இலக்கின் வெளிவட்டத்திற்கு அப்பால் இருக்கின்ற பகுதியே ஆகும்.

சிங்களப்படைத்தரப்பு ஆள்பலம் மற்றும் சுடுகலங்கள் தொடர்பாக பாரிய விலைகளை இந்நடவடிக்கைக்காக செலுத்திய போதிலும் இன்னமும் புலிகளின் முன்னணி நிலைகளை உடைத்து அவர்களது உள்வட்டத்திற்குள் நுழைய முடியவில்லை என்று இந்த ஆய்வாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது சிறிலங்கா படைத்தரப்பினர் வன்னிப் பிராந்தியத்தின் வடபோரரங்கான யாழ். குடாநாட்டின் நாகர்கோவில்- கிளாலி-முகமாலைப் பகுதிகளிலும் வன்னிப்பிராந்தியத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் மன்னர்-வவுனியா நெடுஞ்சாலைக்கு அருகே அமைந்துள்ள முன்னரங்க நிலைகளில் இருந்தும் அத்துடன் இதேபோன்று வன்னியின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள மணலாறு பகுதியில் இருந்தும் பல்வேறு முன்னகர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஆனால் விடுதலைப் புலிகள் இந்த நடவடிக்கைகள் அனைத்தையுமே மிகவும் மூர்க்கத்தனமாக எதிர்த்து, படையினருக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றார்கள். சிறிலங்கா படையினரின் அனைத்து படை நடவடிக்கைகளையும் முறியடித்து அவர்களது மூலோபாய நோக்கங்களை அடையவிடாது தடுப்பதில் புலிகள் தொடர்ந்தும் வெற்றிபெற்று வருகின்றார்கள். மேற்கு நாட்டு இராஜதந்திரிகளிற்கு நம்பகரமாக கிடைத்த தகவல்களின்படி ஒரு நாளைக்கு குறைந்தது 25 என்ற விகிதாசாரப்படி சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டோ அல்லது காயமடைந்தோ களமுனைகளில் இருந்து அகற்றப்படுவதாக கூறப்படுகின்றது.

சிறிலங்காப் படையினர் விடுதலைப் புலிகளின் பொறிவெடிகள் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் என்பவற்றில் அதிகளவு சேதங்களை சந்திக்கின்ற அதேவேளை புலிகளின் குறிபார்;த்துச் சுடும் அணியினரும் சிங்களப்படையினரை பதம் பார்த்து வருகின்றார்கள்.

மறுபுறத்தில் சிங்களப் படையினரின் படை நடவடிக்கைகள் எந்தவிதமான முன்னேற்றங்களையும் அடையமுடியாமல் ஒரு இறுகிய நிலையை அடைந்துவிட்டன. உதாரணமாக குடாநாட்டிலே நிலைகொண்டிருக்கும் சிங்களப் படையினர், கிளிநொச்சிக்கு அல்லது ஆனையிறவிற்கு முன்னேறுவது என்பதைவிட தென்மராட்சி தமது முன்னரங்க நிலைகளை பாதுகாக்கவே கடுமையாக பாடுபட வேண்டியிருக்கின்றது. அத்துடன் விடுதலைப் புலிகள் இடையிடையே பாதுகாப்பு மற்றும் படைத்துறை உயர் அதிகாரிகளை இலக்கு வைத்து நீண்டவீச்சுக்கொண்ட ஆட்லறிகளை யாழ். குடாநாட்டின் பலாலி விமானப்படைத்தளம் மீது ஏவி வருகின்றார்கள். அவ்வாறே மன்னார்-வவுனியா மற்றும் மணலாறு பகுதியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகளும் இதேபோன்றே நோக்கங்களை அடையமுடியாமல் இடைநடுவே நிறுத்தப்படுகின்றன.

தென்னிலங்கையின் பதற்றம்

அண்மைக்காலங்களாக கொழும்பு நகரப்பகுதி, மொனராகல மாவட்டத்தின் புத்தள, யால சரணாலயம், மணலாறின் கெப்பிற்றிக்கொலாவ ஆகிய இடங்களிலே இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களும் சூட்டுச்சம்பவங்களும் தென்னிலங்கை மக்களையும் சிங்கள ஆட்சிபீடத்தினையும் அதிர்ச்சிக்கும் பயத்திற்கும் உள்ளாக்கிவிட்டது.

தென்னிலங்கையில் பாடசாலை மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் இருக்கும்போதோ அல்லது பயணிக்கும்போதோ ஏதாவது நடக்கலாம் என்பதால் சிங்களப்பெற்றோர்கள் தற்போது தமது பிள்ளைகளைப் பள்ளிக்கூடங்களிற்கு அனுப்புவதற்கு பெரிதும் அஞ்சுகின்றார்கள். இதேபோன்று தென்னிலங்கையிலே வாழுகின்ற அனைத்து மக்களும் ஏதாவதொரு காரணத்திற்காக பயப்பீதியுடனேயே வாழுகின்ற சூழ்நிலையை மகிந்த அரசின் போர் நடவடிக்கைகள் ஏற்படுத்தி விட்டன. இதுவரைகாலமும் தமிழீழத் தாயகப்பகுதியில் சிறிலங்கா அரசின் போர் நடவடிக்கைகள் காரணமாக அதன் நேரடி தாக்கங்களை தமிழ்மக்களே அனுபவித்து வந்திருக்கின்றார்கள். ஆனால் தற்பொழுதோ தென்னிலங்கையில் போரின் நேரடி மற்றும் மறைமுகத் தாக்கங்கள் தெளிவாகத் தென்படத்தொடங்கி விட்டன.

சிறிலங்கா அரச தலைவர்களும் அதன் படைத்துறை அதிகாரிகளும்; தாம் போரை விரைவில் முடிவிற்கு கொண்டுவந்துவிடப் போவதாகவும் வடக்கிலே இருக்கின்ற புலிகளை அழிப்பதற்கு சிறிது கால அவகாசம் தரும்படியும் கேட்டுக்கொண்டதை சிங்கள மக்களும் நம்பி இலவு காத்த கிளியாக ஏமாற்றப்பட்டு விட்டார்கள். தற்போதோ அன்றாட வாழ்கைச்செலவினை தாங்க முடியாதளவிற்கு பொருளாதாரச் சுமைகள் சிங்கள மக்களின் கழுத்தினை நெரிக்கத்தொடங்கிவிட்டன.

வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு எல்லாவற்றையுமே சிறிது காலம் தாங்கினால் போதும் என்று சிங்கள அரசின் பொய்பரப்புரைக்கு எடுபட்டு வயிற்றைக் கட்டிப்போட்டு காத்திருந்த தென்னிலங்கை மக்கள் தற்போது போரின் கொடூரத்தினையும் அதன் தாக்கங்களையும் நேரடியாகவே அனுபவிக்கத்தொடங்கிவிட்டார்��
�ள்.

அதாவது போரானது தென்னிலங்கை சிங்கள மக்களின் வாசற்கதவிற்கே வந்துவிட்டது. தற்போது வடக்கிலே போரில் புலிகளை வெல்வதை விட போரின் தாக்கங்களை தென்னிலங்கைக்கு கொண்டுவராமல் எவ்வாறு தம்மை மகிந்த அரசு பாதுகாக்கப் போகின்றது என்பதை அறிவதிலேயே சிங்கள மக்கள் ஆர்வமாக உள்ளார்கள்.

யாழ். குடாநாட்டிலே 35,000-40,000 வரையிலான படையினர் முடக்கப்பட்டுள்ளனர். கிழக்கிலே புதிதாகக் கைப்பற்றப்பட்ட 2,000 சதுரக் கிலோமீற்றர் பரப்பளவைப் பாதுகாப்பதற்கு 100,000 படையினர் தேவைப்படுவார்கள். அத்துடன் யால வனப்பகுதியினைப் பாதுகாப்பதற்கு குறைந்தது 4,000 பேர்கள் வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்ட நிலப்பிதேசங்களானது ஒட்டுமொத்த இலங்கைத்தீவின் அரைவாசி நிலப்பகுதியாகும். எனவே முழுத்தீவினையும் பாதுகாப்பதற்கு 250,000 படையினர் தேவைப்படுவார்கள். இது தவிர கொழும்பு மாநகரைக் காப்பாற்றுவதற்கு இன்னமும் 100,000 படையினர் மேலதிகமாக வேண்டும் என்று முன்னாள் விமானப்படைத் தளபதியாக இருந்த எயார் வைஸ் மாசல் ஹரி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

தற்போது எழுகின்ற கேள்வி என்னவென்றால் சிங்கள மக்கள் இன்னமும் எவ்வளவு காலத்திற்குத்தான் குண்டு வெடிப்புகளுக்கு மத்தியிலே பயமும் பதட்டமும் நிறைந்த சூழ்நிலையில் வாழுவதற்கு தயாராக இருக்கப்போகின்றார்கள் என்பதுதான். ஏற்கனவே மகிந்த அரசின் மீது தென்னிலங்கையின் பாதுகாப்புத் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று கடுமையான அழுத்தங்களையும் கண்டனங்களையும் சிங்கள மக்கள், அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் மற்றும் ஊடகங்கள் போடத்தொடங்கிவிட்டன. சிங்கள மாணவர்களை பாதுகாப்பதற்காக ஒரு கிழமை பாடசாலைகளை மூடும் மகிந்தவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சாதாரண பொதுமக்களே எள்ளி நகையாடுகின்ற நிலைமை தென்னிலங்கையிலே ஏற்பட்டுவிட்டது.

இந்தநிலை நீடிக்குமாயின் சிங்கள மக்களே மகிந்த அரசிற்கு எதிராக போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் மிக விரைவில் மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

தமிழ் மக்களின் விடுதலைப் போரிற்குத் தலைமை தாங்குகின்ற விடுதலைப் புலிகள் தமது நீண்டகால பட்டறிவின் அடிப்படையிலும் போரியல் தந்திரோபாயங்களின் அடிப்படையிலும், தூர நோக்குடன் கூடிய மூலோபாயாங்களுக்கு அமைய விடுதலைப் போரினை மிகவும் செம்மையாக நடத்திச்செல்கின்றார்கள்.

இனிவரும் காலங்களில் போரியல் அரங்கிலே இடம்பெறப்போகின்ற தீர்க்கமான சமர்களே போரின் தலைவிதியைத் தீர்மானிக்க வல்லவையாக விளங்கப்போகின்றன. தமிழீழ விடுதலைப் போரை விரைவுபடுத்துவதற்கு தமிழ் மக்கள் அனைவரும் தேசியத் தலைவரின் பின்னால் அணிதிரண்டு முழு அளவிலான பெரும்போருக்குத் தயாராகுவதே தற்போது அனைவரினதும் உடனடித் தேசியக் கடமையாக உள்ளது.


நன்றி :- -எரிமலை-

0 Comments: