Tuesday, February 5, 2008

தெற்குப் போடும் பிச்சைதான் நடைமுறைச் சாத்தியமான தீர்வா?

பெரும்பான்மை இனத்தவரான பௌத்த, சிங்களவரின் விருப்பமும், முடிவும், தீர்மானமும் ஒருதலைப்பட்சமாக சிறுபான்மையினரான தமிழர்கள் மீது திணிக்கப்பட்டமையே இலங்கை இனப்பிரச்சினை இவ்வளவு தூரம் விஸ்வரூபம் எடுத்து, மோசமான உள்நாட்டுப் போராக உருக்கொண்டு, பேரழிவுகளை ஏற்படுத்தி வருவதற்குக் காரணம் என்பது வெளிப்படையாகத் தெரியும் அம்சம்.

அமைதி வழியிலோ, இராணுவப் பலாத்காரம் மூலமோ இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முயல்பவர்கள் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்பவர்களாக இல்லை. மீண்டும் ஒரு திணிப்பு மூலம், நிரந்தர நீடித்து நிற்கின்ற அமைதி நிலையை அல்லது சமாதானச் சூழலை ஏற்படுத்தி விடலாம் என அவர்கள் கனவு காண்கின்றார்கள். அத்தகைய எத்தனம் அசாத்தியமானது என்பதுதான் நிஜம்; மெய்மை நிலைமை.

இலங்கைத் தீவின் நாடாளுமன்றத்தினால் யாக்கப்பட்ட பெரும்பாலான சட்டங்கள் யாவும் சிறுபான்மையினரைப் புறமொதுக்கி அவர்கள் மீதான அடக்குமுறை விதிகளாகவே திணிக்கப்பட்டன.

சுதந்திர இலங்கையில் 1972 இலும், பின்னர் 1978 இலும் அடுத்தடுத்து வரிசையாகக் கொண்டுவரப்பட்ட அரசமைப்புகள் கூடத் தமிழரின் பங்குபற்றுதலின்றி அவர்களின் சம்மதமின்றி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டு, பெரும்பான்மை பௌத்த, சிங்களவர்களினால் சிறுபான்மை மக்கள் மீது வல்வந்தமாகத் திணிக்கப்பட்டவையே. அந்த அடிப்படைச் சட்டங்களின் கீழ்தான் தமிழர்கள், நிரந்தர அடிமைகளாக்கப்பட்டிருக்கின்றனர் என்ற எண்ணம் தமிழர்கள் மனதில் உறுதியாகப் பதிந்துள்ளது.

பௌத்தத்தையும், சிங்களத்தையும் போற்றிப் பேணிப் பாதுகாப்பதையே தனது பிரதான நோக்காகக் கொண்ட இந்த அரசமைப்புகள் இறுக்கமானவை, நெகிழ்வற்றவை. இரும்புச்சட்டச் சுவர் போல தமக்குத் தாமே இறுக்கமான சிறையைக் கட்டியுள்ள இந்த அரசமைப்புகள் ஊடாக ஈழத் தமிழர்களின் நீதி, நியாயமான அபிலாஷைகளை நிறைவு செய்வதற்கான தீர்வு ஒன்றை எட்டுவது என்பது சாத்தியப்படப் போவதேயில்லை.
ஆனால், இலங்கை இனப்பிரச்சினைக்கான தமது தீர்வுத்திட்டம் குறித்து நேற்று முன்தினம் தமது நாட்டின் சுதந்திர தின உரையில் பிரஸ்தாபித்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போதைய அரசமைப்புக்குள்ளேயே தாம் தீர்வு ஒன்றைக் காண விழைகின்றார் என்பதைத் தெளிவாகக் கோடிகாட்டி விட்டார்
அதுவும், தமிழர் தரப்புடன் பேசாமலேயே தீர்வுக்கான அடிப்படை இன்னதுதான் மாகாண நிர்வாக முறைமை என்பதுதான் என்றும் அவர் முடிவெடுத்துத் தெளிவுபடுத்தி, அறிவித்தும் விட்டார்.
ஆக
சிறுபான்மையினரான தமிழர்கள் மீது, அவர்களின் விருப்பின்றியே பெரும்பான்மையினரால் திணிக்கப்பட்ட தற்போதைய அரசமைப்பின் கீழ் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற பெயரில் மற்றொரு திட்டமும் அவர்களது சம்மதமின்றியே பேரினவாத ஆட்சியாளர்களால் திணிக்கப்படப் போகின்றது என்பதையே ஜனாதிபதியின் உரை தெளிவுபடுத்தியிருக்கின்றது.

சிங்கள ஆட்சியாளர்கள் எதைச் செய்தாலும், அதற்கு நன்றியுடன் வாலாட்டி, சம்மதம் தெரிவித்து, எலும்புத் துண்டு போன்ற சில சலுகைகளையும் பதவிகளையும் எதிர்பார்த்து விசுவாசம் காட்டும் சில தமிழ்த் தலைமைகள் வேண்டுமானால், திணிக்கப்படும் இத்தகைய திட்டங்களைத் தீர்வாக ஏற்றுக்கொள்ளக்கூடும். ஆனால் தமிழர் சமூகம் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டாது.

வல்வந்தமாகத் திணிக்கப்படும்திட்டத்தை "நடைமுறைச்சாத்தியமான தீர்வு' என்று இலங்கையின் அரசுத் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிவதில்தான் அந்த அர்த்தத்தில்தான் குழப்பம் எல்லாம் பொதிந்து கிடக்கின்றது.

"நடைமுறைச் சாத்தியமான தீர்வு' என்று கருதப்படுவது பெரும்பான்மைச் சிங்களவர்களால் அதிகபட்ச விட்டுக் கொடுப்பாக வங்கப்படக்கூடிய அவர்கள் தமிழர்களுக்கு பிச்சையாக இரப்பதற்கு இணங்கும் ஒரு திட்டம் என்று கருதி விடக்கூடாது.
அதேபோல பெரும்பான்மைச் சிங்களவர்களிடமிருந்து சிறுபான்மைத் தமிழர்கள் "பிடுங்கி' எடுக்கக்கூடிய அதிக உச்ச அதிகாரப் பகிர்வும் அல்ல அது.

இலங்கையில் தனித்துவமான வரலாற்று இனமாகத் திகழும் தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில், சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த தமது பாரம்பரிய மண்ணில், அந்நிய சக்திகளின் ஆதிக்கம், தலையீடு, அடக்குமுறை இன்றி, சுதந்திரமாக, கௌரவமாக வாழவும், தமது மொழியை வளர்த்து, தமது பண்பாட்டைப் பேணி, தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, தமது இன அடையாளத்தைப் பாதுகாத்துச் சிறப்பெய்துதற்கும் வழி செய்யும் நியாயமான தீர்வுத் திட்டமே நீதியான ஒன்று.
அத்தகைய நீதியான தீர்வுத் திட்டமே நடைமுறைச் சாத்தியமான தீர்வுத்திட்டமாகவும் கருதப்பட வேண்டும்.

அதைவிடுத்து, பெரும்பான்மைச் சிங்களவர் பிச்சையாகத் தூக்கிப் போடுவதைப் பற்றிப் பிடித்துக் கொள்வதுதான் "நடைமுறைச் சாத்தியமான தீர்வுத் திட்டம்' என்று யாரும் கருதுவார்களேயானால் அது அநியாயமான தீர்வுத்திட்டம் என்றுதான் அர்த்தப்படுத்தப்பட வேண்டியதாக இருக்கும்.
"நடைமுறைச் சாத்தியமான தீர்வு' குறித்து அதிகம் பேசும் இலங்கை ஜனாதிபதி கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியஅம்சம் இது.

நன்றி - உதயன்

0 Comments: